Monday 1 August 2016

கபாலி.......மகிழ்ச்சி......டா...!



கபாலி திரைப்படத்தைப் பற்றி  என்ன  சொல்லுவது?

அது வழக்கமான ரஜினி படம் இல்லை!  வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் சுப்பர் ஸ்டார் படமில்லை! நீங்கள் பட அரங்கத்திற்குள் புகுமுன்னே அந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் கழட்டி வைத்துவிட்டுப் போங்கள்!

அது ரஜினியின் வயதுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஒரு படம்.  வயதான கதாபாத்திரம். அசத்தியிருக்கிறார் ரஜினி. தனக்கும் நடிக்க வரும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

உடல்நிலைக் காரணமாக ஒரு சோர்வு அவரிடம் காணப்படுகிறது. அதனையும் கூட - அது 25 ஆண்டு கால சிறைவாசம், குடும்பத்தினரின் பிரிவு தான் காரணம் - என சாமர்த்தியமாகப் பயன் படுத்தியிருக்கிறார் இயக்குனர்! நடிப்பில் ஓர் அமைதி. நடப்பதில் கூட ஒரு மென்மை. குறைவாகப் பேசுவது. தனது மனைவியையும், மகளையும் நினைத்து அடிக்கடிக்  கண் கலங்குவது. ஆனால் சண்டை என வரும்போது அந்தத் துள்ளல் துள்ளி விளையாடுகிறது! அது தான் ரஜினி!

இந்தத் திரைப்படம் நமது மண்ணின் மைந்தர்களின் கதை. குண்டர் கும்பல்களின் கலாச்சாரம் எந்த அளவுக்கு நமது இளைஞர்களிடம் பின்னிப் பிணைந்திருக்கிறது  என்பதான் கதை.

நாம் அறிந்த கதை தான். ஆனால் அதற்கான தீர்வு தான் என்ன என்பது நம்மிடம் இல்லை!  இந்தக்  குண்டர் கும்பல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள் தங்களின் வளர்ச்சிக்காக! காவல்துறையினரும் கண்டு கொள்ளுவதில்ல! "உங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு சாகுங்கடா..!" என்று இவர்களும் அவர்களை  ஊக்குவிக்கிறார்கள்!

ஒரு தீர்வும் இல்லாத ஒரு நிலையில் "கபாலி" மூலம் சில செய்திகளைச் சொல்ல வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அந்தச் செய்தி சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் நமக்கும் மகிழ்ச்சியே! சேரும் எனவும் நம்புவோம்!

கபாலி இயக்குனர்  பா.ரஞ்சித் பல வழிகளில் தாக்கப்படுகிறார்! நான் அவரைத் தற்காக்கிறேன்! ரஜினி கோட் சூட் போடுவது, கால்மேல் கால் போட்டு உட்காருவது என்பது நமக்குள்ள  செய்தி அல்ல! இதனைத் தவறு என்று சொன்னால் சொன்னவன் தான் உதை வாங்க வேண்டும்! அது நமது கலாச்சாரம். உச்சக்கட்ட காட்சிகளில் பேசப்படும் வசனங்கள் நமக்கானதல்ல!  ஆனாலும் இயக்குனரைப் பாராட்டுகிறேன். இதே வசனங்களை வேறு படங்களிலும் பேசலாம். ஆனால் ரஜினி பேசும் போது அதற்கான வலு அதிகம்; பலம் அதிகம்! ரஜினி ஓர் அரசியல்வாதியாய் ஆகியிருந்தால் கூட இப்படிப் பேசியிருக்க முடியாது! வலிந்து ஆனால் ரஜினி அறிந்து அந்த வசனங்களைப் பேச வைத்திருப்பது என்பது ரஜினிக்கும் ஒரு சமூகக் கடமை உண்டு என்பதை அறிந்தும் புரிந்தும் ரஜினி பேசியிருக்கிறார்!  அவருக்கு நமது வாழ்த்துகள்!

படம் ஷங்கர் போன்று பிரமாண்டம் இல்லை என்றாலும்  கேமராமேன் தனது ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்டமாக காட்சிகளை நம் கண் முன்  கொண்டு வந்திருக்கிறார். படம் முழுவதுமே ஒரு பிரமாண்டம் தெரிகிறது. வாழ்த்துகள் நண்பரே!  இசையமைப்பு மிக அற்புதம்! நெருப்புடா...!  நான் சொல்ல ஒன்றுமில்லை, பின்னணி இசை இனிமையோ இனிமை! மென்மை, பயங்கரம் அனைத்தையும் நன்கு வெளிப்படுத்யிருக்கிறார், சந்தோஷ் நாராயணன்! வாழ்த்துகள்!

கபாலி! மகிழ்ச்சி!......மகிழ்ச்சிடா...!


No comments:

Post a Comment