Thursday 11 August 2016

ரஞ்சித் மீது ஏன் இந்த 'தலித்' தாக்குதல்?


 சில சமயங்களில் சில பிரச்சனைகளை நம்மால் புரிந்த கொள்ள முடியவில்லை!  அதுவும் தமிழ் நாட்டில், தங்களைப் படித்தவர்கள் என்று சொல்லிக்கொண்டும், ஊடகங்களில் பணிபுரிபவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களும்  தேவை இல்லாதப் பிரச்சனைகளைக் கிளப்பிகொண்டிடிருப்பதும் உண்மையாகவே புரிந்து கொள்ள முடியவில்லை!

முதலில் கபாலி ஒரு தலித் படம் என்று முத்திரைக் குத்தினார்கள்! ரஜினிக்குத் தெரிந்து தான் இந்தப்படத்தை எடுத்தார்களா என்பது ஒரு கேள்வி!  ரஜினியைத் தாக்கிப் பேச முடியாது என்று தெரிந்ததும் அந்தக் கோபத்தை கபாலி இயக்குனர் ரஞ்சித் மேல் கொட்ட ஆரம்பித்துவிட்டனர்!

ஒரு திரைப்படத்தை திரைப்படமாகத்தான் பார்க்க வேண்டும். அதனை விட்டுவிட்டு வேறு எதை எதையோ கொண்டு வந்து திணிக்கின்றனர்!  எத்தனையோ படங்கள் - பிராமாணக் குடும்பங்களைப் பற்றி, கவுண்டர்களைப்பற்றி, தேவர்களைப்பற்றி, உடையார்களைப்பற்றி, இன்னும் ஆழ்ந்து போனால் நிறையவே இருக்கும் -  இந்தப் படங்கள் எல்லாம் திரைப்படம் வெளிவருமுன்னே இந்தச் சாதிப்படம் என்று முத்திரைக்குத்திக் கொண்டு வெளிவரவில்லை! அப்படித்தான் கபாலியும்!  அந்த அவசியம் இல்லை என்று தான் இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது!

ரஞ்சித் தனது முதல் படமான அட்டக்கத்தி அதன் பின்னர் மெட்ராஸ்  ஆகிய இரண்டு படங்களையுமே தான் வாழுகின்ற வாழ்க்கைப் பின்னணியை வைத்துத்தான்  இயக்கி இருந்தார்.  இப்போது குறை சொல்லுபவர்களுக்கு அப்படி ஒரு வாழ்க்கை இருப்பது கூட தெரியாமல் இருந்தது! அதனை அவர் வெளிக்கொணர்ந்தார். கபாலி திரைப்படம் மலேசிய சூழலில் எடுக்கப்பட்ட ஒரு படம். குண்டர் கும்பல்களைப் பற்றியான ஒரு படம். யாரும் எடுக்கத் துணியாத ஒரு கதையை  ரஜினியை வைத்து அவர் படமாக்கி இருந்தார். அவ்வளவு தான்! இதில் என்ன பிரச்சனை? ரஜினிக்கு முன்னேரே தெரியுமா....என்றால்? என்ன கேள்வி?  அவர் பேசிய வசனங்கள் என்ன என்பது அவருக்குத் தெரியாதா?

கபாலி வெளியான ஒரு சில தினங்களிலேயே ரஞ்சித் மீதான தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டனர் இந்தச் சாதி வெறியர்கள்! எந்த அளவுக்குத் தாக்குதல்கள் நடத்த முடியுமோ அந்த அளவுக்குத் தாக்குதல்கள் தொடர்கின்றன! நமக்குத் தெரிவதெல்லாம் இது ஒரு பொறாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது!  மிக உயர்ந்த நிலையில் இருக்கும் நாம் - நம்மால் முடியாததை - நேற்று வந்த இவன் - தாழ்ந்த நிலையில் இருக்கும் இவன் -  எப்படி ரஜினியை வைத்து இப்படி ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை கொடுக்க முடியும் என்பதை நினைத்து நினைத்து பொறாமையால் வெந்து சாகின்றனர் இந்தச் சாதி வெறியர்கள்! அதனால் தான் கடந்த சில தினங்களாகவே ரஞ்சித் மீதான தலித் என்று சொல்லித் தாக்குதல்களை ஊடகங்கள் மூலமாக  வெகு வேகமாக பரப்பி வருகின்றனர்!

நாம் அனைவர்களும் தமிழர்கள். உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ நாம் அனைவரும் தமிழர்கள். உள்நாடோ, வெளிநாடோ நாம் அனைவரும் தமிழர்கள். வெளிநாடுகளில் பார்க்கும் போது நாம் தமிழர்கள் என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறோம். தமிழ் நாட்டுக்கு நாங்கள் வரும் போது நீங்கள் தமிழர்கள் என்று தான் நினைத்துப் பேசுகிறோம். இங்கிலாந்தில் ஒரு தமிழரைப் பார்க்கும் போது "நீங்கள் தமிழரா?" என்று தான் ஆச்சரியப்படுகிறோம். ஏன்? வேறு மாதிரி எதுவும் உண்டா? தமிழனை தமிழனாகத்தானே பார்க்க வேண்டும்? வேறு மாதிரி எப்படிப் பார்ப்பது? கோத்திரம் குலம் எல்லாம் பார்த்துவிட்டுத்தான் பேசுவீர்களா?

 இந்தப் பிரச்சனையையும் தீர்த்து விட முடியும். சுப்பர் ஸ்டார், ரஜினி வாயைத் திறந்தால் போதும் அவன் அவன் கப்சிப் என்று அடங்கி விடுவான்! அது தான் நடக்கும்! அது வரை "சும்மா! வேலை வெட்டி இல்லாதப் பசங்க!" என்று இந்த வெட்டிகளை எல்லாம் வெட்டிவிட்டு நமது வேலைகளைப் பார்க்க வேண்டியது தான்!

தமிழர்களைத் தமிழர்களாகப் பாருங்ககள். தமிழன் அல்லதவன் தமிழ் நாட்டை ஆளுகின்றான்! அது உங்களுக்கு வெட்கமாக இல்லை! ஆனால் ஒரு தமிழன் வெற்றிகரமாக ஒரு திரைப்படம் எடுத்தால் ஆயிரம் கேள்விக்கணைகள்! தமிழினம் வெற்றி பெறும்!

தமிழன் தலை நிமிர்வான்! வெற்றி பெறுவான்!


No comments:

Post a Comment