Thursday 29 June 2017

இதுவும் பயங்கரவாதம் தானே!

செபராங் பிறை, போலிடெக்னிக்கில்  உள்ள உணவகம் மூடப்பட்டதற்கு இனவாதம் காரணம் அல்ல என்று கல்வி  துணை அமைச்சர் ப.கமலாநாதன் சமீபத்தில் கூறி இருந்தார். அதனால் அவர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருந்தார். இப்போது பிரச்சனை "அதுவல்ல இது வேறு" என்பது தெரியவந்திருக்கிறது. இப்போது துணை அமைச்சர் நடவடிக்கையில் இறங்குவார் என நம்பலாம்.

என்ன தான் நடந்தது? உணவகத்தின் உரிமையாளர் கோபி கிருஷ்ணன் கோபால்,  பினாங்கில் நடந்த  செய்தியாளர் சந்திப்பில் தனது வேதனையைக் கொட்டியிருக்கிறார். தானும் தனது மனைவியும் கல்லூரியின் நிர்வாகத்தினால்   இஸ்லாத்திற்கு மாறும்படி பணிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்; அதாவது வற்புறுத்ப்பட்டிருக்கிறார்.

நமது கேள்வி இது தான்: ஒரு கல்லூரி நிர்வாகம், தனது கட்டுப்பாட்டில்  இருக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளரையும் அவரது மனவியையும் அத்தோடு அவரது குடும்பத்தையும் "மதம் மாறுங்கள்" என்று கூறூவதற்கு அதிகாரம் உண்டா? என்பதே நமக்கு எழும் ஐயம். மதம் மாற்றுகின்ற வேலையைச் செய்ய வேறு வெவ்வேறு நிறுவனங்கள் அரசாங்கத்தில் இயங்குகின்றன. அதன் முழு வேலையே பிற சமயத்தினரை மதம் மாற்றுவது மட்டுமே. ஆனால் கல்வி நிலையங்களுக்கும் மதம் மாறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நமக்குப் புரியவில்லை! இது துணை அமைச்சர் கமலநாதனின்  எல்லைக்குள் வருவதால் அவர் தான் அதற்கானப் பதிலைச் சொல்ல வேண்டும்.

இந்தச் சம்பவத்திற்கும்   பயங்கரவாதத் தன்மைக்கும் ஏதேனும் தொடர்புகள்  இருக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.  இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ன சொல்லுகிறார்கள்? "மதம் மாறு இல்லாவிட்டால் சுட்டு விடுவோம்"  என்கிறார்கள்.  நமது கல்வியாளர்களும் அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக "மதம் மாறு இல்லாவிட்டால் உணவகமே நடத்த விட மாட்டோம்" என்கிறார்கள்! தொனி ஏறக்குறைய ஒன்று தான்! அந்த அதிகாரம் தான்!

இது போன்ற தொனிகள், இது போன்ற அதிகாரங்கள் சமீபகாலமாக கொஞ்சம் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஸாகிர் நாயக் போன்றவர்கள் நாட்டில் தங்குதடையின்றி நடமாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் சரியானதாக நமக்குத் தோன்றவில்லை.

எப்படி இருப்பினும் நாட்டில் பயங்கரவாதம் துளிர்விடும் முன்பே அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவும் கல்வி நிலையங்களில் அது ஒடுக்கப்பட வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம், நல்லதே நடக்கட்டும்!

Wednesday 28 June 2017

கல்லூரிகளிலும் பிரச்சனையா?


இந்திய உணவகங்களுக்கு எங்கிருந்தாலும்  பிரச்சனைகள் ஓய்வதில்லை! வெளியே - நகர்ப்புறங்களில் உணவகங்கள் வைத்தால் - அதை கெடுப்பதற்கு அதிகாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது! சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்று சொல்லி ஒரு மாசத்துக்கு இழுத்து மூடுங்கள் என்று உத்திரவிடுகிறது. அப்படி இல்லையென்றால் ஷரியா சட்டத்தை மீறிவிட்டாய் என்று இன்னொரு குரல்!  உணவகங்களுக்குக் கூட ஷாரியா சட்டமா?  ஒன்றுமே புரியவில்லை! எது தான் ஷாரியா சட்டம்?

சரி, இந்தத் தொல்லைகளையெல்லாம் சமாளித்து வெளியாகும் போது வெளி நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதாகக் கெடுபிடி. அட!  இங்கு உள்ள உணவகங்கள்,   வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் இயங்க முடியாது என்பதைக் கூடவா நமது அதிகாரிகளுக்குத் தெரியாது? 

இப்படி அராஜகம் வெளியே தலைவிரித்தாடும் போது கல்லூரிகளுக்கு உள்ளே அங்கும் கசமுசா, கசமுசா!  கல்லுரிகளில் உணவகங்கள் நடத்துவது என்பது சாதாராண விஷயம் அல்ல. அங்கும் பாவம்,  காலைப் பிடித்து, கையைப்பிடித்து, பணத்தைக் கொடுத்து பல்லிளித்து உணவகங்களை நடத்தும் போது தீடிரென்று நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, கடவுள்பற்று அனைத்தும் தலைமையாசிரியர்களுக்கு வந்து விடுகிறது!

சமீபத்தில் செபராங் பிறை, தொழில்நுட்பக் கல்லூரியில் உணவகம் நடத்தி வந்த இந்தியர் ஒருவரின் கடை இழுத்து மூடப்பட்டது! ஒரே காரணம் அவர் முஸ்லிம் அல்ல என்பது தானாம்! இப்படியும் ஒரு காரணமா என்று நாம் தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடியும். அந்த உணவகம் நடத்தியவர் ஷாரியா விதிமுறைகளின் படி நடத்தவில்லையாம்!  அங்குப் படிக்கின்ற மாணவர்களில் சுமார் 300 பேருக்கு மேல்  இந்தியர்கள். அந்த மாணவர்களுக்கு அந்த ஒரே உணவகம் தான் அவர்களுக்கு ஏற்ற உணவை வழங்கக் கூடியது. காரணம் மற்ற உணவகங்களில் மாட்டிறைச்சி பயன்படுத்துவர். அங்கு அது பயன்படுத்துவதில்லை. இதற்காக ஷாரியா விதிமுறைகள் என்று சொல்லி பயமுறுத்துவது ஒரு கல்விகழகத்துக்கு ஏற்றதல்ல.

ஆனாலும் இதற்கு யார் பொறுப்பு?  யாரும் எவரும் கவலைப்படப் போவதில்லை. யார் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அந்த இந்திய மாணவர்கள்  தாங்கள் இருக்கின்ற காலத்தில் முடிந்தால் சைவ உணவுக்கு மாறிக்கொள்ள வேண்டும். அதுவும் மலாய் சைவ உணவு!

Monday 26 June 2017

முடியும், முடியாது!


ஆமாம்! உங்களால் முடியுமா, முடியாதா? முடியும் என்றாலும் சரிதான். முடியாது என்றாலும் சரிதான். காரணம் அது நீங்கள் எடுக்கின்ற முடிவு. நீங்கள்  முடியாது என்று நினைத்தால் அது முடியாது. நீங்கள் முடியும் என்று நினைத்தால் அது முடியும்.  அவ்வளவு தான்! இதில் ஒன்றும் தலைபோகிற மாதிரி ஒன்றுமில்லை!

ஆனால் ஒன்று.  எல்லாச் செயல்களிலும், எதனைச் செய்தாலும், என்னால் முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்களால் எதனையுமே செய்ய முடியாது. நீங்கள் ஒரு பயங்கர தோல்வியாளர். எல்லாக் காரியங்களிலும்  நீங்கள் மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அது மட்டும் அல்ல இப்படி மற்றவர்களை நம்பி இருப்பதிலேயே ஒரு சுகம் காண்கிறீர்கள்!  ஏதாவது ஒரு தோல்வி ஏற்பட்டால் உடனே உங்கள் சுட்டு விரலை மற்றவர்களைப் பார்த்து  சுட்டுகிறீர்கள்!  உங்கள் கடமைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதில் தோல்வி ஏற்படும் போது மற்றவர்களைக் குற்றம் சொல்லுவது  உங்களுக்கு எளிதாகப் போய்விடுகிறது! அதனால் எந்தப் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. உங்கள் காரியங்களைச் செய்ய யார் அகப்படுவார் என்று ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதென்ன வாழ்க்கை?  அப்படி ஒரு முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் குறைந்தபட்சம் நீங்கள் வழிபடும் இறைவனையாவது நம்புங்கள். இறைவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு "வெற்றியோ தோல்வியோ அது நீர் காட்டிய  வழிகாட்டல் அதனை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்" என்று இறைவன் காட்டிய வழியில் செயல்படுங்கள்.

முடியும் என்று நினைப்பவர்கள் அப்படியென்ன எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெற்று விடுகிறார்களா, அப்படி ஒன்றுமில்லை. குறைந்த பட்சம் முடியும் என்கின்ற மனநிலையோடு செயல்படும் போது அவர்கள் செய்கின்ற பல காரியங்களில் அவர்களுக்கு வெற்றி கிடைத்து விடுகின்றது. அது தான் முடியும் என்பதற்கான வலிமை. முடியும் என்று செயல்படும் போது பிறர் நம்மிடம் வந்து நாம் வெற்றி பெற நம்மோடு ஒத்துழைக்கிறார்கள்.  வெற்றி பெறுவோம், நம்மால் முடியும் என்னும் மனநிலை மற்றவர்களை நம்மிடம் இழுத்து வந்து விடுகிறது; அப்படி ஒரு சூழலை உருவாக்கி விடுகிறது. முடியும் என்னும் ஒரு வலிமையான எண்ணம் மற்ற வலிமையான மற்றவர்களின் எண்ணம் நம்மோடு சேர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

எல்லாமே நமது கையில் தான். முடியும் என்னும் நமது வலிமையான எண்ணம் நமது காரியங்களை முடித்துக் கொடுக்கிறது. முடியாது என்னும் நமது பலவீனமான எண்ணம் மற்ற பலவீனர்களோடு சேர்ந்து  முடியாமல் செய்து விடுகிறது.

முடியும் என்று செயல்படுங்கள்.  முடியாது என்னும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள்! அதனால் முடியும்! முடியும்! முடியும்!

தயவு செய்து இழுத்தடிக்க வேண்டாம்!


ம.இ.கா. வுக்கு ஒரு வேண்டுகோள்  அதிலும் குறிப்பாக ம.இ.க. இளைஞர் பகுதிக்கு இந்த வேண்டுகோள் போய்ச் சேர வேண்டும் என்பது  எனது விருப்பம்.

ம.இ.கா.  இளைஞர் பகுதியினர்  அவர்களது முதியோர் பகுதியினரைப் போலவே  பிரச்சனைகளை இழுத்தடிப்பவர்களாகவே இருக்கின்றனர். பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவருபவர்களாக இல்லை என்பது நமக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு பெரும் திட்டத்தைப் போட்டு இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?  இப்போதைக்கு ஒன்றுமில்லை என்பது தானே பொருள்!

இந்த இளைஞர்களோ இன்னும் ஒரு படி மேல்.  ஜனயாகச் செயல்  கட்சியிடம் போய்  பிறப்புப் பத்திரம் இல்லாத, குடியுரிமை இல்லாத - அந்த 300,000 பேரின் முகவரியைக் காட்டுங்கள்; நாம் இருவரும் சேர்ந்து ஒரு முடிவைக் காண்போம் என்கிறார்கள்!  இது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரும் செயல்பாடு அல்ல.

ஏற்கனவே ம.இ.கா. இளைஞர்களிடம் குடியுரிமைக்கு மனு செய்தவர்கள் 3,000 பேர் இருக்க, அவர்களுக்கு இவர்கள் இதுவரை எந்த முடிவையும் காணாத நிலையில் இந்த 300,000 பேரின் முகவரிவை வைத்துக் கொண்டு என்னப் செய்யப் போகிறார்கள்?  3,000 பேருக்கே ஒரு முடிவைக் காண முடியாதவர்கள் 300,000 பேருக்கா முடிவைக் கண்டு விட முடியும்.

இப்போது இந்த இளைஞர் பகுதி செய்வதெல்லாம் சும்மா விதண்டாவாதம் தானே தவிர யாருக்கும் எவருக்கும் பயன் இல்லாத வேலை. சும்மா தேர்தல் வரும் வரை இழுத்தடிக்கும் வேலை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. நேற்று வந்த வங்காளதேசிகளெல்லாம், பாக்கிஸ்தானியர் எல்லாம் சகல உரிமைகளோடு தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். இங்கு பிறந்த இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல், அடையாளக்கார்டு இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு 3,000 பேருக்கு - அதுவும் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகும் - அவர்களுக்கு ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் சாதாராண  ஊழியன் அவர்களின் குடியுரிமையைக் கொடுக்க  மறுக்கிறான் என்றால் அப்புறம் என்ன இளஞர் பகுதி என்றும் கிழவன் பகுதி என்றும் சொல்லிக் கொண்டு பதவியில் இருக்கிறீர்கள்?

உங்களால் முடியாது என்றால் கௌரவமாக விலகிக் கொள்ளுங்கள். அமைச்சர் பதவிக்காகவும், செனட்டர் பதவிக்காகவும் பதவியில் இருப்பது இந்தச் சமுதாயத்தை ஏமாற்றுவதாகும்.

Sunday 25 June 2017

கேள்வி - பதில் (48)


கேள்வி 

ரஜினியின் வயது அரசியலுக்கு ஒரு தடையா?

பதில்

பொதுவாக உலக அளவில் பார்த்தாலும் அல்லது இந்திய அளவில் பார்த்தாலும் அல்லது தமிழக அளவில் பார்த்தாலும் 60 வயதுக்கு  மேல் உள்ளவர்களே அரசியலில் முன்னணியில் இருக்கிறார்கள். அவருக்கு இப்போது 66 வயது என்பது அப்படி ஒன்றும் பெரியதாகச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. அரசியலில் இதெல்லாம் ஏற்றுக் கொள்ளுக்கூடிய வயது தான். ஆனால் பிரச்சனை அதுவல்ல.  ஏற்கனவே அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னவர் பல காரணங்களினால் பின்வாங்கி விட்டார். அப்போது அவர் மோதுவதற்குப் பலமான அரசியல்வாதிகள் இருந்தார்கள்.  அவர்களோடு மோதியிருந்தால் அவருடைய பலம் நமக்குத் தெரிந்திருக்கும். அவர் உண்மையான ஹீரோ தான் என்று நாமும் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒரு பலவீனமான அரசியல் நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. இந்தப் பலவீனத்தை அவர் பயன்படுத்த நினைப்பது சரியில்லை என்பது தான் பொதுவான மக்களின் கருத்து.  இப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி என்றாலும் அது பா.ஜ.க. ஆட்சி என்பதாகத்தான் மக்கள் நினைக்கிறர்கள். இந்த நிலையில் பா.ஜ.க. ரஜினியை வைத்து தமிழகத்தைக் கைபற்ற நினைக்கிறது என்பது பொதுவான அபிப்பிராயம் நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் நிலவுகிற பல பிரச்சனைகள் பா.ஜ.க. வால் உருவாக்கப்பட்டவை. பல அநீதிகள் தமிழகத்திற்கு பா.ஜ.க.வால் இழைக்கப்படுகின்றது. இதற்கு ரஜினியும் பா.ஜ.க.விற்குத் துணை போவார் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.

தன்னை வாழ வைத்த தமிழகத்திற்கு அவர் துரோகம் செய்வது என்பது நம்மால்  நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அவர் நல்லவர் தான் என்றாலும் பா.ஜ.க. அவரை நல்லவராக இருக்க விடாது. காரணம் இந்தியப் பிரதமர் மோடி நல்லவர் தான் என்பது பலரின் கருத்து. ஆனால் நாட்டில் நடப்பதெல்லாம் நல்லதாக இல்லை. அவர் மட்டும் நல்லவராக இருந்து என்ன பயன்? அவரின் குரல் எடுபட வில்லையே!

எப்படிப் பார்த்தாலும் ரஜினியின் வயது அரசியலுக்குத் தடையில்லை. ஆனால் அவர் பா.ஜ.க. வோடு கூட்டு சேர்வார் என்பதினால் அவரின் வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதே எனது தாழ்மையான எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday 23 June 2017

ம.இ.கா. செய்யுமா?


ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர், சிவராஜ் சந்திரனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.  நாடெங்கிலும் மெகா மைடாஃப்தார் நிகழ்ச்சிகள் மூலம் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்களுக்கு இப்போது மீண்டும் பதிவுகளை செய்ய ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. ஏற்கனவே செய்யப்பட்டவைகள் என்ன ஆயின என்பது பற்றிப் பேசிப் பயனில்லை! எதிர்கட்சியினர் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்கள், அடையாளக்கார்டுகள் இல்லாதவர்கள் 3,00,000 பேர் என்கின்றனர். நீங்களோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உங்கள் கணக்கின்படி சுமார் 3,000 பேர் என்கிறீர்கள். 

உங்களின், ம.இ.கா.வின் சேவைக்கும், எதிர்கட்சியினர் செய்கின்ற சேவைக்கும் வித்தியாசம் உண்டு.  உங்களை நாடி வருபவர்களை விட எதிர்கட்சியினரை நாடுபவர்கள் அதிகம் என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது! அது மக்களின் குற்றம் அல்ல. ம.இ.கா. என்றோ மக்களிடமிருந்து வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டது. இருந்தாலும் உங்களின் சேவை இன்னும் இந்நாட்டு இந்தியர்களுக்குத் தேவை என்பது தான் உண்மை. அது உங்களுக்குத் தெரியாவிட்டாலும் எங்களுக்குத் தெரிகிறது.

சமீபத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையில் ஒர் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்: உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2,575 குடியுரிமை பிரச்சனையை" தீர்த்து வைக்கும்படி ம.இ.கா. வைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இவைகளெல்லாம், பிறப்புப் பத்திரம், அடையாளக்கார்டு,குடியுரிமை, எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய பிரச்சனைகள் தான். நீங்கள் பதிவு, பதிவு என்று சொல்லிக் கொண்டு பதிவு செய்வதும் பிறகு மக்கள் பதில், பதில் என்று அலைந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது! ஏற்கனவே உள்ள பிரச்சனைகளைக் கலையாமல் இன்னும் புதிது புதிதாக பதிவு செய்தே கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏதோ தற்காலிகக்  குஷி கிடைக்கலாம்!  மற்றபடி மக்களுக்கு என்ன பயன்?

நீங்கள் செய்வதெல்லாம் ஏதோ தற்காலிக தேர்தல் யுக்தி என்பதத் தவிர மக்களுக்கு இதனால் பயனில்லை! அதனால் இப்போது உங்கள் கண்முன்னே இருக்கின்ற இந்த 2575 குடியுரிமைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள்.  உடனடியானத் தீர்வு தான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. அதற்குத் தீர்வு கண்டு அவர்களும் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யுங்கள். இதன் மூலம் தான் உங்களின் நேர்மை, உண்மை, துணிவு அனைத்தும் எங்களுக்குத் தெரியவரும்.

சும்மா வெற்றறிக்கையால் யாருக்கும் பயனில்லை. எதிர்கட்சியினரிடம் ஆதாரத்தைக் காட்டுங்கள் என்பதெல்லாம் பிரச்சனையை இழுத்துக் கொண்டு போவதே தவிர பிரச்சனைக்கு முடிவு காண்பதல்ல! மைடாஃப்தார் ஒரு பக்கம் நடக்கட்டும். குடியுரிமைக்கும் முடிவு காணட்டும். 

இதுவே நமது வேண்டுகோள்.  கேட்கின்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். செய்கின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். சாக்குப்போக்குகள் இல்லாமல் செய்யுங்கள். இந்தச் சமுதாயம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும்.

"செய் அல்லது செத்து மடி" இது சமுதாயத்தின் குரல்!

ம.இ.கா செய்யும் என எதிர்பார்க்கிறோம்.


Thursday 22 June 2017

நாடற்றவர் 3,00,000 லட்சமா?


நாடற்றவர்கள் என்று சொல்லப்படவில்லையே தவிர அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளவர்களாக 3,00,000 இந்தியர்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.  இல்லை! இல்லை! அது தவறு. சுமார் 2,000 பேருக்கு மேல் இருக்கலாம் என்பதாக நாட்டின் ஆளுங்கட்சியின் ஓர் அங்கமான ம.இ.கா.  கூறுகிறது!

இவர்கள் அனைவரும் இங்கு, இந்நாட்டில் பிறந்தவர்கள் தான். அதில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் பிறப்புப் பத்திரம் இல்லை. அதனால் அடையாளக்கார்டும் இல்லை. இந்தப் பிரச்சனைகளினால் வேலை கிடைப்பதில்லை. குழந்தைகள் பள்ளி செல்ல முடிவதில்லை. பிழைப்புக்கான வழி இல்லை.

முதலில் இந்தப் பிரச்சனைகளுக்கானக் காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஆரம்ப காலங்களில் பிறப்புப் பத்திரம் எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையிலேயே பிறப்புப் பத்திரங்களை எடுத்து விட முடியும். இந்த நடைமுறையை சம்பந்தப்பட்ட  பதிவிலாகா மாற்றி  அமைத்தது. இந்த மாற்றத்தினால் பல குளறுபடிகள். ஏறக்குறைய இந்தியர்களுக்கு எதிரான நடைமுறை இது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் அதிகமான பேர் தோட்டப்புறங்களில் வேலை செய்கிறவர்கள்.  இந்த நடைமுறையினால் ஒரு  நாளில் முடிக்க வேண்டிய பிரச்சனையை குறைந்தபட்சம் பத்து நாள்களுக்கு இழுத்துக் கொண்டுப் போகும் பிரச்சனையாக மாற்றி விட்டார்கள். தோட்டங்களில் ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம். ஆனால் நீண்ட நாள் விடுமுறை என்றால் அவர்களுக்கு அங்கு பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப் பல தொல்லைகள் இந்தியர்களுக்குச் சுமையாக மாறி விட்டன. விபரம் தெரிந்தவர்கள் விடாப்பிடியாக பிறப்புப்பத்திரங்களை எடுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் ஒருவித சலிப்பினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  இப்போது நம் முன் உள்ள பிரச்சனைகள் எல்லாம் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்"  என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பிரச்சனைகள் தான்!

இன்றைய ம.இ.கா. அப்போதும் இருந்தது. இன்றைக்கு உள்ளது போல அன்றைக்கும் பதவி! பதவி! பதவி! அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றுமில்லை!  கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திருந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கு அன்றே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ம.இ.கா. எந்தக் காலத்திலும் காது கொடுத்துக் கேட்பதில்லை! அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை!

இப்போது கூட தேர்தல் கூடிய  சீக்கிரம் வரலாம் என்னும் நோக்குடன் தான் ம.இ.கா. இந்த "மெகா மைடாஃப்தார்"  பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது! இவர்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசாங்கம் செய்வதையே செய்து கொண்டிருக்கும்! அதாவது முடிந்தவரை அவர்கள் சாகப்போகும் காலத்தில் ஒரு எழுபது வயதுக்கு மேல் அடையாளக்கார்டு கொடுப்பார்கள்! இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் மனு  செய்தால் ஒருவருக்குத்தான் அடையாளக்கார்டு கிடைக்கும். அதற்கும் ஒரு பத்து, இருபது வருடங்கள் காத்துக் கிடக்க வேண்டும்.

எந்தப் பக்கமும் ஒரு நியாயம் இல்லை; உண்மையும் இல்லை. ம.இ.கா. சீறி எழுந்தால் தவிர இதற்கு எந்த முடிவும் கிடைக்கப் போவதில்லை! அப்படியெல்லாம் நடக்கும் என்பதற்கான அறிகுறியும் இல்லை!




வாழ்த்துகள் சூரியா!

அகரம் அறக்கட்டளை 2006-ம் ஆண்டு நடிகர் சிவகுமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று அவருடைய மகன்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ஓர் அற நிறுவனமாகும்.


இந்த அறக்கட்டளை 2006 ல் ஆரம்பிக்கப்பட்ட போது நடிகர் சிவகுமார் ஒரு பெரிய நடிகர் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றவரல்ல. ஒரு சிறிய வருமானம் தான். அந்தச் சிறிய வருமானத்திலும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற உந்துதல் அவருக்கு இருந்தது. அப்போது பிறந்தது தான் ஏழைகளுக்கு உதவும் இந்தத் திட்டம். அது சிறிய அளவில் தான் இருந்தது என்றாலும் அது பெரிய அளவில் வளர மற்றவர்களும் உதவினர். 


இப்போது சிவகுமார் தனது அறக்கட்டளையை அவரது மகன்களிடம் ஒப்படைத்துவிட்டார்.  நடிகர் சூரியா அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அதன் வளர்ச்சி இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டு இப்போது இமாலய வளர்ச்சி பெற்றிருக்கின்றது.

ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பலர் இன்று தங்களுக்குப் பிடித்த துறையிலேயே கல்வி கற்று பட்டதாரிகளாகியுள்ளனர். மிகவும் ஏழைகளின் வீட்டுப் பிள்ளைகள். கல்லூரி போக கனவு கண்டவர்கள். ஆனால் பொருளாதாரக் காரணங்களால் தங்கள் கனவுகள் நிறைவேறாது என்று நினைத்தவர்கள். இன்று பட்டதாரிகளாகி தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.

இது வரை அகரம் அறக்கட்டளை சுமார் 9000 (ஒன்பதினாயிரம்) பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. மிகவும் போற்றத்தக்க ஒரு பணி. சமீபத்தில் வெளியான ஒரு செய்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.  பல்கலைக்கழகங்களில் இப்போது 500  (ஐநூறு) மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கற்பதாக சூரியா கூறியிருக்கிறார். மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்தி. பொறியியல் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது அனைவரும் அறிந்ததே. அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது அகரம் அறக்கட்டளை.

இந்நேரத்தில் அகரம் அறக்கட்டளையை வாழ்த்துகிறோம். அதன் தோற்றுநர் நடிகர் சிவகுமாரையும் வாழ்த்துகிறோம். இப்போது சூரிய தலைமையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் அகரம் அறக்கட்டளை வெகு விரைவில் ஒரு லட்சம் மாணவர்களைக் கொண்டு பீடுநடை போட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்! 


Wednesday 21 June 2017

நடிகர் வடிவேலு தேறுவாரா..?


என்ன தான் சொல்லுங்கள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை அடித்துக் கொள்ள இன்னும் யாரும், எந்த நடிகரும், வரவில்லை என்பது உண்மையிலும் உண்மை! அவரின் எடத்தை நிரப்புவதற்கு இன்னும் எந்த நடிகரும் தயாராக இல்லை.

அவருக்குப் பின்னர் பலர் வந்திருக்கின்றனர். குறிப்பாக சந்தானம் இன்னும் பலர். ஆனால் இவர்கள் பாணி நகைச்சுவை என்பது வேறு. வடிவேலுவின் நகைச்சுவை என்பது வேறு. மதுரைத் தமிழ் மட்டும் அல்ல; கிராமத்துத் தமிழ் என்பதும் வடிவேலுக்கு கொஞ்சம் கூடுதல் பலம்! அவர் ஒல்லியாக இருந்த போது அவருடைய உடல் அசைவுகள் மிக அபாரம்.  அவர் கொஞ்சம் கூடுதல் எடைப் போட்டிருந்தாலும் இன்னும் அவரின் நகைச்சுவைக்கு ஈடு இணையில்லை!

ஆனாலும் என்ன தான் அவருக்குத் திறமை இருந்தாலும்,  ஜெயலலிதாவின் அரசியல் வன்மம், திரைத்துறையில் அவருக்கு   நீண்ட ஈடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

இப்போது அவரின் திரையுலக மறுபிரவேசம் என்பது எளிதாக இல்லை என்பது தான் உண்மை. சமீப காலமாக அவர் நடித்து வெளி வந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்புப் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இளைய தளபதி விஜய், வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றி நல்லதொரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஒரு வேளை தனது நடிப்பில் இனி வரும் படங்களில் விஜய் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் அவர் நடித்தால் ஒரு வேளை அவர் படங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம்.

இதுவும் கூட பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் தான். எத்தனை தயாரிப்பாளர்கள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் யோசிக்க வேண்டி உள்ளது. அவர் "நல்லா" இருந்த காலத்தில் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும்  எப்படி நடந்து கொண்டார் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. "கழுத்து வரை காசு இருந்தால்" கழுதை கூட முறைத்துப் பார்க்கும் உலகமிது! அவரை எதிரியாக நினைப்பவர்கள் எவரும் அவர் பக்கம் நெருங்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்!

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிப்பைக் கொடுப்பவர். அதில் எந்தச் சந்தேகமுமில்லை. இன்னும் சில படங்கள் வெளியானால் தான் அவர் தேறுவாரா, தேறமாட்டாரா என்று சொல்ல முடியும்.
தேறவில்லை என்றால் அவருடைய பழைய படங்களைப் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டியது தான்!


Monday 19 June 2017

நவீனின் மரணம் ஒரு பாடம்


சமீபத்திய நவினின் மரணம் பெற்றோர்களுக்கு நல்லதொரு பாடம்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கவனிப்பதில்லை; அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது தெரிவதில்லை; அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதில் அக்கறைக் காட்டுவதில்லை.

எந்நேரமும் வேலை, வேலை, வேலை! என்ன செய்வது பிழைப்பு நடக்க வேண்டும். கார் தவணைக் கட்ட வேண்டு. வீட்டு வாடகைக் கட்ட வேண்டும் அல்லது மாதத் தவணைக் கட்ட வேண்டும். பிள்ளைகளின் கல்விக்குச் செலவழிக்க வேண்டும். இன்னும் பல கடன் சுமைகள்.

இவைகள் எல்லாம் சராசரியாக எல்லாருக்குமே உள்ள கடன் சுமைகள் தான். இப்படித்தான் மலேசிய இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே தான் அவர்கள் வேலைக்குப் போக வேண்டும்; பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவைகள் எல்லாம் எல்லாப் பெற்றோர்களுக்கும் உள்ள பிரச்சனைகள் தான். 

ஆனால் இந்தச் சூழலலிருந்து தான் பல பிள்ளைகள் பள்ளி போகிறார்கள்; படிக்கிறார்கள்; பட்டதாரியாகிறார்கள். சாதனைகள் புரிகிறார்கள். வீட்டுக்கும்  நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறார்கள்.   அதே சமயத்தில் ஒருசில குடும்பங்களிலிருந்து குண்டர் கும்பல்கள், ரௌடிகள், குடிகாரர்கள் - இப்படியும் உருவாகிறார்கள்!  அப்படி என்ன தான் நடக்கிறது? ஒரு பக்கம் கல்விக்கு முக்கியத்துவம். தங்களை விட தங்கள் பிள்ளைகள் இன்னும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்னும் பெற்றோர்களின் வைராக்கியம். இன்னொரு பக்கம் தினசரி சினிமா! சினிமா! சினிமா! தொலைக்காட்சி பெட்டிக்கு  ஒய்வே இல்லை! குடிக்கின்ற அப்பன்! எந்நேரமும் அடி, உதை, குத்து, வெட்டு - இது போன்ற பேச்சுக்கள்! சிறு குழந்தையிலேயே வீரத்தை ஊட்டி ஊட்டி வளர்க்கின்றார்களாம்! கடைசியில் அடி உதையைச் சொல்லிக்கொடுத்த அப்பனையே அடித்து உதைத்து விட்டு சிறைக்குப் போகிறார்கள் பிள்ளைகள்! இது வீட்டிலும் நடக்கலாம், வெளியேயும் நடக்கலாம்; எங்கும் நடக்கலாம்.

பெற்றோர்களே! அனைவரும் சேர்ந்து உழைக்கிறீர்கள். கேட்டால் பிள்ளைகளுக்காகத்தானே என்கிறீர்கள். நீங்கள் உழைக்கும் பயன் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும். அது எந்த வகையிலும் வழக்குகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் போய்ச் சேரக் கூடாது! நமது பிள்ளைகளுக்கு நல்ல தரமானக் கல்வியைக் கொடுப்பது நமது கடமை. கல்விக்காக அரசாங்கம் எவ்வளவோ செலவழிக்கிறது. நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தோல்விகளுக்கு அரசாங்கத்தைக் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நவீனின் மரணம் பெற்றோர்களுக்கு ஒரு பாடம்.  நாம் இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு  நாம் வழிகாட்டாவிட்டால் அவர்கள் நம்மை வழக்குகளுக்கு வழி காட்டுவார்கள்!

Sunday 18 June 2017

சசிகலாவுக்கு இன்னும் மாளிகை வாசம் தான்!


பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னம்மா சசிகலாவுக்குச்  சிறையில்,  தான் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணராதவாறு அவருக்குச் சிறை அதிகாரிகள் எல்லா வகையிலும்  சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார்களாம்!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது தான் சின்னம்மாவிடம் இருக்கும் பணம் எப்படியெல்லாம் - பாதாளம் மேலாளம், சட்டமன்றம் நாடாளுமன்றம், மத்திய காவல்துறை உள்ளூர் காவல்துறை, உள்ளூர் சிறை வெளியூர் சிறை  - என்று  எதனையும் விட்டு வைக்காமல் எங்கும் பணம் பாயும் என்பதை இப்போது  தான் சின்னம்மா மூலம் நமக்கும் தெரிய வருகிறது! பரம்பரை பணக்காரர்கள் செய்யத் துணியாத அளவுக்கு சின்னம்மா செயல்படுவதைப் பார்க்கும் போது தமிழக ஆட்சி அவர் கையில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் விடைபெறும் என்று சொல்ல முடியவில்லை!

ஏதோ ஒரு கோடி, இரண்டு கோடி என்றால் நமக்குப் பெரியாதாகத் தோன்றாது. இவர்கள் பேசுவதெல்லாம் இருபது கோடி, ஐம்பது கோடி, நூறு கோடி - இப்படியே பேசி நம்மை மிரள வைக்கிறார்கள்! எங்கெல்லாம், எப்படியெல்லாம் பணம் என்னும் பயங்கர ஆயுதத்தை பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் சின்னம்மா பயன்படுத்தி நமக்கு மயக்கம் வரச் செய்கிறார்! அவரிடம் இலஞ்சம் வாங்காத அதிகாரிகள் இல்லை என்னும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!

தமிழ் நாட்டில் மெரினா போராட்டத்திற்குப் பின்னர் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை சின்னம்மாவின் கட்டளையின் பேரில் தான் நடத்தியாக செய்திகள் வெளியாயின. இப்போதும் கூட முதலமைச்சர் எடப்பாடியை விட சின்னம்மாவின் குரலுக்குத்தான் காவல்துறை தயாராக இருக்கிறது! சிறையில் இருந்தாலும் சின்னம்மாவின் குரல் தான் ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது!

இந்தச் சூழலில் பெங்களூரு சிறை மட்டும் என்ன விதி விலக்கா? அவர்களும் தங்களைப் புனிதர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளவில்லையே! இப்போது சின்னம்மாவிற்கு மற்ற கைதிகள் போல் அல்லாது மிகவும் விஷேசமாகக் கவனிக்கப் படுகிறார். சிறையாக இருந்தாலும் சின்னம்மாவிற்கு அங்கும் மாளிகை வாசம் தான்!

போகிற போக்கில் பிரதமர் மோடியையும் தன் வசம் இழுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. ஆக மிச்சம் மீதம் உள்ள நான்காண்டுகள் சசிகலாவின் வசமே இருக்கும் என நம்பலாம். அத்தோடு தமிழ் நாட்டில் உள்ள மிச்சம் மீதம் உள்ள அத்தனை வளமும் சசிகலாவின் காலடியில்!


வாதாடத்தான் வேண்டுமா?


பெற்றோர்களே, கொஞ்சம் யோசியுங்கள். அவர்கள் உங்கள்  வீட்டுப் பிள்ளைகள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்குச் செல்லப் பிள்ளைகள் தான். அப்படியே மற்றவர்களுக்கும் செல்லப் பிள்ளைகளாக அவர்கள்  இருந்தால் இந்த உலகம் உங்களைப் பாராட்டும்; போற்றும். ஆனால் வீட்டிற்குள் செல்லம் வீட்டிற்கு  வெளியே குழி தோண்டும் குண்டர் கும்பல் என்றால் யார் என்ன தான் செய்ய முடியும்?

ஒரு மாணவனை ஈவு இரக்கமின்றி, கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். அந்த மாணவன், தி.நவீன், அந்த நிமிடம் - அந்த கணம்- அந்த ஐந்து மாணவர்களால் எந்த அளவுக்குத் துன்பத்தை அனுபவித்திருப்பான் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அவன் மூளை சாவு அடையும் அளவுக்கு அவனை வெறித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள்.  அவன் என்ன தவறு செய்திருப்பான்? அவனுக்கு மூளை இருந்தது;  அதனால் அவன் இசை படிக்க ஆவல் கொண்டிருந்தான். அவ்வளவு தானே. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? இவர்களுக்கு மூளை இல்லை. அதனால் மூலை, முச்சந்திகளில் நின்று கொண்டு போவோர் வருவோர் மீது தாக்குதல் நடத்துவது - இவர்களது வேலையாக இவர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்டார்கள். 

ஆனால் உங்கள் பிள்ளைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாகவா இது நாள் வரை நீங்கள் இருந்தீர்கள்? அவர்கள் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதைத் தெரியாமலா சோறு போட்டு வளர்த்தீர்கள்?  குழந்தைகள் ஏன் தாய் ஊட்டிய உணவை மறக்க முடிவதில்லை? அதில் அன்பும், பண்பும், பாசமும் கலந்திருப்பதால் தானே.  இவர்களும் இப்படித் தானே வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் இல்லையே, தாயே!

உங்கள் பிள்ளைகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிந்ததும்  ஓடோடி வழக்கறிஞர்களைப் பார்க்கீறீர்களே அப்படி என்ன பாசம் இப்போது பொங்கி வழிகிறது? இது நாள் வரை இந்தப் பாசமும், பரிவும் எங்கே போயிற்று? அவர்கள் வெளியே வந்தாலும் மற்றவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! அவர்கள் வெளியே வரத்தான் வேண்டுமா? அவர்களுக்காக வாதாடி என்னவாகப் போகிறது? கொலைக் குற்றவாளி என்பதாகத்தான் உலகம் பார்க்கும்? 

எல்லாருமே பதின்ம வயதினர். நமக்கும் மனம் பதறத்தான் செய்கிறது.  அறியாமல் செய்த தவறு தான். ஆனால் ஒரு பயங்கரவாதச் செயல் போல் அல்லவா இருக்கிறது! 

சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்! செய்ய விடுங்கள்! நடப்பது நடக்கட்டும்! வேறு என்ன சொல்ல?


Saturday 17 June 2017

இளைஞர்களே, திருந்துங்கள்


இளைஞர்களே! உங்களுக்கு என்ன தான் வேண்டும்? உங்களைப் புரிந்து கொள்ளுவதற்கு யாருமே இல்லையா? பெற்றோர்களும் புரிந்து கொள்ள முடியவில்லை; உற்றாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.நண்பர்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் வெளியே அல்ல உள்ளே! காவல்துறை மட்டும் தான் உங்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும்.

பள்ளி மாணவன் நவீனனின் இறப்பு ஒரு சாதாரண விஷயம் அல்ல.  இசைத் துறையில் சாதனைப் படைக்க நினைத்த ஒரு சாதனையாளனை சாகடித்து விட்டார்கள் அவனோடு படித்து சக மாணவர்கள். அவனது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

பள்ளியில் படிக்கின்ற போது மிகவும் சாதுவாக ஒரு மாணவன் இருந்தால் அவனைக் கேலி செய்வதும், பகுடி பண்ணுவதும் மாணவரிடையே இயல்பு தான். ஆனால் நவீனோடு படித்த மாணவர்கள் பள்ளியோடு அதனை நிறுத்திக் கொள்ளாமல் அதனைப் பள்ளிக்கு வெளியேயும்  கொண்டு சென்றிருக்கின்றனர்.

இது ஏதோ பினாங்கில் நடந்து ஒரு சம்பவம் தானே என்று எடுத்துக் கொள்ள முடியாது. எல்லா மாநிலங்களிலும் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பள்ளியின் முன் மோட்டார் சைக்களில் ஊர்வலம் வந்த மாணவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருக்கின்றனர். 

நமது மாணவர்கள் பல சாதனைகள் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்னொரு பக்கம் அராஜகம் செய்வதிலும் நம்மை நடுங்க வைக்கின்றனர். இப்படி ஒரு தூண்டுதல் எங்கிருந்து இவர்களுக்கு  வருகிறது?  நமது எல்லாப் பழக்க வழக்கங்களும் வீட்டிலிருந்து தான் வருகின்றன என்பது தான் உண்மை. இவர்கள் எந்தப் பின்னணியில் வளருகிறார்கள்? குற்றப் பின்னணி என்றால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.   அவர்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் சிறை தான். வேறு வழியில்லை. ஒரு சக மாணவனை கொடூரமாக கொலைச் செய்தவர்களை யாரால் மன்னிக்க முடியும்? இனி இவர்கள் வெளியே வந்தாலும் வெளியே உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்பது தானே உண்மையாயிருக்கும்.

அந்த நவீனுக்காக மனம் அழுகிறது.

Friday 16 June 2017

தமிழக ஆட்சி கவிழுமா...?


தமிழ் நாட்டில் விரைவில் ஆட்சி கவிழும் என்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் எந்த அளவுக்கு இது உண்மை? கவிழுமா? கவிழாதா? அ.தி.மு.க. வினர் வேண்டுமானால் அடித்துக் கொள்ளலாம்; கடித்துக் கொள்ளலாம். பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கலாம். ஆனால் நடப்பது அவர்களது ஆட்சி இல்லையே! அ.தி.மு.க. வினர் இன்னும் மீதம் உள்ள நான்கு ஆண்டு காலத்தை எப்படியாவது நகர்த்திக் கொண்டு போவதையே விரும்புவார்கள்.  மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்னும் நோக்கம் என்பதெல்லாம் அவர்களுக்குக்  கிடையாது. இந்த நான்கு ஆண்டு காலத்தில் இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது தான் அவர்களது நோக்கம்.

அடுத்த ஆட்சி அ.தி.மு.க. அமைக்கும் என்பது இனி மேல் நிறைவேறப் போவதில்லை. அதனை அவர்களே அறிவார்கள். இது தான் அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு.  தமிழ் நாட்டில் இன்று உள்ள பிரச்சைனைகளை எதனையும்  அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதே போதும் அவர்கள் தமிழ் நாட்டில் இனி தலை துக்க முடியாது என்பது!

நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக்கடைகளை மூட வேண்டும் என்னும் உத்தரவு வந்ததும் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? கிராமங்களில், சிறு சிறு பட்டணங்களிள் - ஏற்கனவே அங்கு சாராயக்கடைகள் உள்ளன என்று தெரிந்தும் - இவர்கள் ஆங்காங்கே திறக்க ஆரம்பித்தனர்.  சாராயக்கடைகளைத் திறக்க ஏன் இவ்வளவு வேகம்? அவர்கள் வேகத்தை வேறு எதிலும் காட்டவில்லையே?  காரணம் இந்தச் சாராயக்கடைகளை நடத்துபவர்களே இந்த அரசியவாதிகள் தான்! யார் இந்த அரசியவாதிகள்? சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள் -எல்லாருக்குமே இதில் பங்கு உண்டு. இவர்களுக்குப் பணம் தான் முக்கிய நோக்கம். ஆட்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்னும் நோக்கம் இல்லாதவர்கள்.

இதனையே நடுவண் அரசான பா.ஜ.க. வும் விரும்புகிறது. தொடர்ந்து இவர்களையே பதவியில் வைத்துக்கொண்டு இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய வேண்டும். இது வரை முன்னாள் முதலமைச்சர்களலால் ஏற்றுக்கொள்ளப் படாத சில சட்டத்திருத்தங்களை இந்தக் கோமாளிகளை வைத்தே நடுவண் அரசு சாதித்துக் கொண்டது. இனி மேலும் தமிழகத்துக்குப் பாதகமான அத்தனையும் அவர்கள் சாதித்துக் கொள்ள ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடரத்தான் செய்யும். எப்படியோ, தேர்தல் என்று ஒன்று வைத்தால் பா.ஜ.க. வெற்றிப் பெற போவதில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். அதனால் இந்தக் கோமாளிகளின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் இன்னும் தமிழ் நாட்டுக்குப் பாதகமான என்ன என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்ய நடுவண் அரசுக்கு இந்தக் கோமாளிகளின் ஆட்சி அவர்களுக்குத் தேவைப் படுகிறது!

இந்தக் கோணத்தில் பார்க்கும் போது தமிழ் நாட்டில் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்களால் நடுவண் அரசுக்கு ஒரு நிம்மதி. மீனவர் பிரச்சனையோ, விவசாயிகளின் பிரச்சனையோ எதனையும் அவர்கள் கண்டு கொள்ளப் போவதில்லை! இவர்களும் எதனையும் கேட்கப் போவதில்லை! அதனைத் தான் நடுவண் அரசும் விரும்புகிறது.

அதனால் தமிழ் நாட்டில் அரசு கவிழும் என்று எதிர்பார்ப்பதற்க்கில்லை!

Saturday 10 June 2017

நாயர், மேனன், ஐயர்......!


தமிழரிடையே ஜாதியை ஒழிக்க முடியுமா என்பது இன்னும் புரியாத புதிர்.  என்ன தான் அடித்து துவைத்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அது போய் விடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் குறைந்து வருகிறது என்பது நம்பிக்கை தரும் செய்தி.

தங்களின் பெயரின் முன்னே இப்போதெல்லாம் யாரும் தங்களுடைய ஜாதியை இணைத்துக் கொள்ளுவதில்லை. அப்படி இணைத்துக் கொள்ளும் போது அதனைக் கேவலமாகப் பார்க்கின்ற ஒரு நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். அதுவே தமிழரிடையே ஒரு பெரிய வெற்றி என்று பெருமைப் படலாம்.

ஆனாலும் இப்போது கேரளா பக்கம் இருந்து வருபவர்கள் - அதுவும் குறிப்பாக பணம் சம்பாதிக்க தமிழ்ச் சினிமா  பக்கம்  வருபவர்கள் - மீண்டும் ஜாதியை தமிழ் நாட்டு மக்களிடையே திணிக்கப் பார்க்கிறார்களோ என்று ஐயுற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒரு நடிகை பார்வதி நாயர் என்னும் பெயரோடு தமிழ்ச் சினிமா உலகை வலம் வருகிறார். இன்னும் லட்சுமி மேனன், கௌதம் மேனன், நித்தியா மேனன் - இப்படிப் பல மேனன்கள்.  இப்போது ஐயர்களும் தமிழ்ச் சினிமா உலகை ஆள ஆரம்பித்து விட்டார்கள்! ஜனனி ஐயர் என்று ஒரு நடிகை அதே போல ஒரு பின்னணி பாடகி மகாலட்சுமி ஐயர்!

இது நாள் வரை தமிழ்ச் சினிமா உலகில் இந்த நாயர், மேனன், ஐயர், ஐயங்கார் எல்லாம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இப்படியெல்லாம் ஜாதியைப் பயன்படுத்தாமலேயே அவர்களின் ஆதிக்கத்தில் தான் இந்த சினிமா உலகம் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இப்போது ஏன் இவர்கள் ஜாதியைப் போட்டுத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்? அல்லது தமிழ் நாட்டிற்குள் ஜாதியை மீண்டும் புதுப்பிக்கிறார்களா?

எப்படிப் பார்த்தாலும் இது வரவேற்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல. ஜாதி ஒழிய வேண்டும் என்று இன்னும் கரடியாய் கத்திக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.  இது போன்ற செய்கைகள் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

என்ன செய்யலாம்? ஒன்று இவர்களைப் புறக்கணியுங்கள். இவர்களின் படங்களைப் புறக்கணியுங்கள். இவர்களைச் சினிமா உலகில் இருந்தே அப்புறப்படுத்துங்கள்.  இவர்களின் படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பல வழிகள் உள்ளன. எது சிறந்த வழி என்பதை  நாம் தான் தேர்ந்தேடுக்க வேண்டும்.

அனைத்தும் தமிழர்கள் கையில் தான்! ஜாதி வேண்டாம்! அதனை ஒழிப்போம்!

யார் தீவிரவாதி? ஸாக்கிரா, வைகோவா?


நமது அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! 



ஸாகிர் நாயக் ஓர் இஸ்லாமிய அறிஞர். அதில் நாம் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. அறிஞர் என்றால் அறிஞர் தான்.  மலேசிய இஸ்லாமிய அறிஞர்கள் அவரை அறிஞராக ஏற்றுக் கொண்டார்கள்.

வைகோ தமிழ் நாட்டில் ஒரு பிரபல அரசியல்வாதி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்கட்சித் தலைவர். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் ஒரு போராளி.  தமிழக அரசால் இதன் தொடர்பில் ஒருசில முறைகள் கைது செய்யப்பட்டவர்.

ஸாகிர் நாயக் ஓர் இந்தியர். இன்றைய நிலையில் அவர் இந்திய அரசாங்கத்தால் "தேடப்படும்" ஒரு நபர். காரணம் அவர் இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் போதித்தவர். அவரது பேச்சின் மூலம் தீவிரவாதிகளை உருவாக்கியவர். பயங்கரவாத அணுகுமுறையுடைவர். மேலும் நிதி மோசடியிலும் ஈடுபட்டவர் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதே சமயத்தில் வங்காள தேசமும் ஸாகிர் நாயக்கை இப்போது தேடிக் கொண்டிருக்கிறது.  டாக்காவில் உணவகமொன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்  ஈடுபட்ட தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தின் படி ஸாகிர் நாயக் வங்காள தேசத்தினாலும்  தேடப்படுகிறார். இந்த இரு நாடுகளினாலும் தேடப்படும் ஒரு பயங்கரவாதி ஸாகிர் நாயக்.  ஆனால் மலேசியாவில் அவர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்படும் ஓர் இஸ்லாமிய அறிஞராக நாட்டை வலம் வருகிறார். முடிந்த வரை மற்ற சமயங்களை இழிவுப்படுத்துவது அவரது தொழில். அதனைச் செம்மையாக அவர் செய்து வருகிறார்.

ஆனால் வைகோ, அவரும் ஒரு இந்திய நாட்டவர்,ஆனால் எந்தப் பயங்கரவாதப் பட்டியலிலும்  இல்லாதவர்.  அவர் செய்து வருவதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக உலகளவில் குரல் கொடுப்பது தான். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர். தமிழின அழிப்பைத் தட்டிக்கேட்கும் ஒரு போராளி.  தமிழ் மக்களுக்காகப் போராட்டம் நடத்துபவர். மற்றபடி அவர் ஒரு பயங்கரவாதி அல்ல. அவரால் எந்தப் பயங்கரவாத நிகழ்வுகளும் நடந்தது இல்லை. மலேசியாவுக்கு அவர் ஒரு மிரட்டலும் அல்ல.  மலேசிய அரசாங்கம் அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.  அவர் மலேசியா வந்ததோ ஒரு திருமண நிகழ்வுக்காக. குறைந்தபட்சம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவரை அவரது நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கலாம். இவ்வளவு கெடுபிடிகள் தேவையற்றது.

இதனை நாம் வேறு ஒரு கோணத்திலும்  பார்க்க வேண்டியுள்ளது. "நீங்கள் ஸாக்கிருக்கு என்ன செய்தீர்களோ அதனையே இப்போது நாங்கள் வைகோவுக்குச் செய்கிறோம்" என்று இந்தியாவைக் கேட்பது போல் உள்ளது!

வலிமையான சமுதாயமாக மாறுவோம்


தமிழர்கள் வலிமையான சமுதாயமாக மாற வேண்டிய காலக்கட்டம் இது.

நாம் எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்;  எந்த ஊரில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெள்ளையர்களுடன் வாழலாம்; கறுப்பர்களுடன் வாழலாம். தமிழர்கள் நாம், உலகின் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கு வாழ்ந்தாலும் நாம் ஒர் யூதனைப் போல வாழ வேண்டும். பொருளாதாரா வலிமை என்றால் அது உலகளவில் யூதனைச் சார்ந்து தான் இருக்கிறது. அந்தப் பொருளாதார வலிமை என்று ஒன்று இல்லாததால் தான் நாம் தாழ்ந்தவர்களாகவும், தலைகுனிந்தவர்களாகவும் ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று மலேசியாவில் நடைபெறுவது என்ன?  ஏன் நாம் வீழ்ந்து கிடக்கிறோம்? நாம் பொருளாதார வலிமையைப் பெற தவறி விட்டோம். ஏன்? வாய்ப்பில்லையா? எல்லாம் உண்டு. ஆனால் நம்மிடம் நேர்மை இல்லை.  சீக்கிரமாக ஏமாற்றி, சிக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் வீழ்ச்சி அடைகிறோம்.

பொருளாதாரம் என்பது மந்திரத்தால் மாங்காய் விழும் கதை அல்ல.  நேர்மை வேண்டும், உழைப்பு வேண்டும், உறுதி வேண்டும். நமக்குச் சரியான எடுத்துக்காட்டு என்றால் அது நம்மைச் சுற்றி இருக்கும் சீனர்கள் தான். அவர்களை நாம் குறைச் சொல்லித் தான் பழகி இருக்கிறோமே தவிர அவர்களின் கடும் உழைப்பை நாம் மறந்து விடுகிறோம். அவர்களின் தொழிலில் அவர்கள் காட்டும் அக்கறையைச் சாதரணமாக  எடுத்துக்கொள்ள முடியாது.  அது போல நம்மைச் சுற்றி இருக்கும் குஜாராத்தி வியாபாரிகளைப் பாருங்கள்.  அவர்களிடம் தோல்வி என்பது இல்லையே.  அவர்களால் எப்படி முடிகிறது? 

அவர்களும் நம்மைப் போல வங்கிகளில் கடன் வாங்கித்தான் தங்களது தொழிகளை வளப்படுத்துகிறார்கள்.  ஆனால் அவர்கள் வங்கியில் கடன் வாங்கினால் அதனைக் கட்ட வேண்டும் என்னும் தொழில் நாணயம் இருக்கிறது. அதனால் சீனர்களுக்கோ அல்லது குஜாராத்தியருக்கோ வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குவதில்லை. ஆனால் நாம் ஏன் வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லை என்பதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை வைத்திருக்கிறோம். தொழில் தொடங்கும் முன்னரே யார் கடன் கொடுப்பார்கள் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்!

நண்பர்களே! நமது சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பொருளாதார வலிமை என்பது மிக முக்கியம். அல்லது கல்வியில் வெற்றி பெற வேண்டும்.தனி மனிதனாக நமது வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சமூகம் என்று வரும் போது நாம் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கிறோம். அதனை நாம் சரி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவுகின்ற மனப்பான்மையை வளத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வெற்றி பெறுவோம்! நமது வலிமையை உலகிற்குக் காட்டுவோம்! வாழ்த்துகள்!                                                                                                    

Thursday 8 June 2017

ரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா?


ரஜினி பதவிக்கு வந்தால் அது முடியுமா, இது முடியுமா என்று இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன! நல்லது தான்.  இந்தக் கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் கேட்க முடியாது. அவரால் முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ரஜினியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கும் போதே அவரால் முடியும் என்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ரஜினியால் ஊழலை ஒழிக்க முடியுமா என்பதாக ஒரு கேள்வி. அதுவும் தமிழ் நாட்டில் இது நடக்கக் கூடிய காரியமா என்பதெல்லாம் நியாயமான ஒரு கேள்வி தான். காரணம் அந்த அளவுக்கு ஊழல் என்பது தமிழகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

தமிழ் நாட்டில் ஊழல் என்பது  ஐம்பது ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்டது.   முதல் ஊழல் குற்றச்சாட்டு கலைஞர் கருணாநிதி மேல் தான் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அவர் பதவியை வைத்து அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன! தமிழ் நாட்டில் ஊழலில்  முன்னோடி என்றால் கலைஞர் தான்!  இப்போது ஊழல் என்பது தமிழகத்தையே ஆட்டிப் படைக்கின்றது. ஒன்றுமே செய்ய முடியாதா என்னும் குரல் இப்போது ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றுமே செய்ய முடியாதா? முடியும்,  என்பது தான் எனது பதிலாக இருக்கும். அதுவும் ரஜினி போன்ற ஆளுமைகளால் நிச்சயம் முடியும். அவர் பலரைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். அதானாலென்ன? அது தெரிந்து தானே அவர் அரசியலுக்கு வருகிறார்! சினிமாவில் அவர் தனியாக எதிரிகளைத் துவம்சம் பண்ணிணார். நிஜ வாழ்க்கையில் காவல்துறை அவர் கையில் தானே!  சட்டதிட்டங்கள் கடுமையான முறையில் அமலாக்கம் செய்யப் பட்டால் யார் ஊழல் செய்வார்? இப்போது சட்டதிட்டங்கள் எல்லாம் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறதே தவிர அமலாக்கத்தில் அசட்டையாக இருக்கிறதே! அது தானே இன்றைய நிலை? அமலாக்கம் இல்லை என்பது தான் இன்றைய நிலைக்குக் காரணம்.!

ஒரு முதல்வர் என்பவர் அந்த மாநிலத்தின் முதன்மையானவர். அந்த மாநிலத்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர். அவரே நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தால் பொது மக்களின் நிலை என்ன? எடுத்துக்காட்டுக்கள் சரியாக இல்லாததே இன்றைய நிலைக்குக் காரணம். ரஜினி போன்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல. நாட்டைக் கொள்ளையடிக்கும் அளவுக்கு அவருக்குப் பணம் பற்றாக்குறை இல்லை. ஆனால் அந்தப் பணப்பற்றாக்குறை  கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருந்தது! தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு இவர்கள் தான் காரணம்!

மேல் மட்டத்தில் அனைத்தும் சரியாக இயங்கும் போது கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள்! இப்போது மேல் மட்டத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது!  அதன் எதிரொலி தான் கீழ் மட்டத்திலும் எதிரொலிக்கிறது. ஊழலை ஒழிக்க முடியாது என்பதாக ஒன்றும் இல்லை.  "ஊழல் ஒழிக!" என்று சொல்லுகின்ற திராணி இப்போதுள்ள எந்தத் தலைவருக்கும் இல்லை! ஊழலிலேயே வளர்ந்து விட்டவர்கள் ஊழலை ஒழிக்க முடியாது! அதனைச் சொல்லுவதற்கு ஓரிரெண்டு தலைவர்களால் தான் முடியும்.  அதற்காக ஊழலை ஒழிக்கவே முடியாது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்!

ரஜினி தன்னுடைய முதல் அறிவிப்பிலேயே "என்னை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னோடு வர வேண்டாம்!" என்று முதலிலேயே ஓர் அறிவிப்பைச் செய்து விட்டார்!  அதனால் ஊழல்வாதிகளை அவர் அண்ட விடமாட்டார் என்று நம்பலாம்.

ஊழலை ஒழிக்க முடியும். அது தமிழகத்தை ஆளப் போகும் அரசியல்வாதிகளைப் பொறுத்தது! கடுமையான நடவடிக்கைகளே அதற்கானத் தீர்வு.

ஊழலை ஒழிக்க ரஜினியால் முடியும்!




Wednesday 7 June 2017

"ஆலோங்" கை ஓங்குகிறதா?


தமிழ் நாட்டில் கந்து வட்டிக்காரர்களை எப்படி அழைப்பார்கள் என்று எனக்குத்  தெரியவில்லை. நமது நாட்டில் "ஆலோங்" என்று சொன்னாலே நமக்கு யார் என்று புரிந்துவிடும்.  அந்த அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் படித்து வருகிறோம்.

கடைசியாக இந்த வட்டி முதலைகளிடம் அகப்பட்ட ஒரு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல். இது நடந்தது புக்கிட் மெர்தாஜம்,  பாயு முத்தியாரா அடுக்குமாடி குடியிருப்பில்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இந்தக் காதலர்கள் ஒன்றாகவே கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். வட்டி முதலைகளிடம் வாங்கிய பணத்தைக் கட்ட  முடியாத ஒரு சூழலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தங்களது படுக்கை அறையில் கரிமூட்டி அந்தப் புகையில் மூச்சுத்திணறி இவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மிகவும் வேதனையான ஒரு செய்தி.  இந்தக் கந்து வட்டிக்காரர்களால் நமது நாட்டில் ஏகப்பட்ட  பிரச்சனைகள் என்பது நமக்குப் புரிகிறது. காவல் துறையினரின் நடவடிக்கை போதவில்லையோ என்று நாம் ஐயுற்றாலும் காவல் துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இவர்கள் காவல் துறைக்கே கடன் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். என்ன செய்வது?

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உண்டு. இதில் வட்டி முதலைகள் என்றால் பெரும்பாலும் சீனர்கள். ஏதோ ஒன்றிரண்டு இந்தியர்கள் இருக்கலாம். ஆனால் இந்த வட்டி முதலைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்ற்னர். இதில் பாதிக்கப்படுகின்றவர்கள் பெரும்பாலும் இந்திய இளைஞர்களாக இருக்கின்றனர்!  ஏன்?  இந்த இந்திய இளைஞர்கள் மூலம் தான் பணம்  கை மாறுகிறது.  குறித்த காலத்தில் பணம் வட்டியோடு திரும்ப வரவில்லை என்றால் இந்த இளைஞர்கள் வன்முறைக்குத் தயாராகி விடுகின்றனர். இவர்கள் தங்களது கார்களில் கத்திகள், கட்டைகள் என்று தயார் நிலையில் இருக்கின்றனர்.

வட்டி முதலைகள் யார் என்று கடைசி வரை தெரிவதில்லை! கத்தி, கட்டைகளைத் தூக்கி வன்முறையில் ஈடுபடும் இந்த இந்திய இளைஞர்கள் தான் சட்டத்திற்கு முன் தலை குனிந்து  நிற்கின்றனர். பின்னர் இவர்களே குண்டர்களாக வகைப்படுத்த படுகின்றனர். இந்திய இளைஞர்களை எப்படியெல்லாம் தீய சக்திகள் பயன் படுத்துகின்றனர் என்பதை நினைக்கும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.

இந்தக் கந்து வட்டிக்காரர்கள் விரைவில் ஒடுக்கப்படுவார்கள் என நம்புவோம். அது வரை பொறுமை காப்போம்!

Tuesday 6 June 2017

ரஜினி அரசியலுக்கு வருவார்....!


ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்னும் கேள்விக்கு இனி இடமில்லை. வருவார் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாகவே தோன்றுகின்றன. அவர் வாயால் அதனை  உறுதிப்படுத்தாவிட்டலும் அவருடைய நெருக்கங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப் படுகிறது.

ஒரு தமிழர் தமிழகத்திற்கு முதலைமைச்சராக வருவதைத் தான் நான் விரும்புகிறேன். ஆனாலும் அது உடனடியாக நடக்கும் என்பதற்கான் அறிகுறி எதுவும் தென்படவில்லை. தமிழனின் சினிமா மோகம் குறைந்திருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் ரஜினியை ஆதரிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் நினப்பதெல்லாம் தி.மு.க., அ.தி.மு.க. இனி தமிழ் நாட்டில் தலை தூக்கக் கூடாது. அதுமட்டும் அல்ல இனி எந்தத் திராவிடக் கட்சிகளும்  தமிழ் நாட்டில் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

அப்படி ரஜினி அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று முதலைமைச்சர் ஆனால் அவர் செய்ய வேண்டிய முதல் வேலையாக நான் நினைப்பது:

1) அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரவில்லை என்பதால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் நிலையில் இருக்கிறார். அப்படி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது "திராவிடம்" என்னும் சொல் பயன்படுத்தக்கூடாது. அதாவது "தமிழர் கட்சி" அல்லது "தமிழர் முன்னேற்றம் கழகம்" போன்று இருப்பது அவசியம்.

2. ரஜினி முதலமைச்சர் என்றால் உடனே ஒரு துணை முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.  வருங்காலங்களில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு  வர இது வழி வகுக்கும்.

3. தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டின் பிரச்சனைகள் பல. அது ரஜினிக்கும் தெரியும் என்பதால் அந்தப் பிரச்சனைகளைக் களைய அவருக்குத் தெரியும். தன்னைத் தமிழன் என்று அவர் கூறுவதால் கவேரிப் பிரச்சனையை அவரால் தீர்க்க முடியும் என்று நம்மால் தீர்க்கமாகக் கூற முடியும்.

பிற மாநிலத்தவர் தமிழ் மாநிலத்தை ஆளுவது ரஜினியோடு முற்றுப் பெற வேண்டும்.  ரஜினியே முன்னுதாரணமாக இருந்து தகுந்த தமிழ் நாட்டவரை முதல்வர் பதவிக்குத் தயார் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

வாழ்க தமிழகம்!

Sunday 4 June 2017

தியாகி சங்கரலிங்கனார்


நமது முன்னோர்கள் ஒரு சிலரையாவது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பலர் இருப்பினும் நாம் மறக்க முடியாத பெயர் சங்கரலிங்கனார். தமிழ் நாட்டிற்கு "தமிழ் நாடு" என்று பெயர் வைக்கப் போராடி 76 நாட்கள்  உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர்  பெரியவர் சங்கரலிங்கம். விருதுநகர் மாவட்டத்தில் 1895 - ல் பிறந்தவர். தந்தையாரின் பெயர் கருப்புசாமி; தாயார் பெயர் வள்ளியம்மை. பெருந்தலைவர் காமராசர் படித்த அதே பள்ளியில் சங்கரலிங்கமும் எட்டாம் வகுப்பு வரைப் படித்தவர்.

சென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழ் நாட்டை "தமிழ் நாடு" என பெயர் வைக்கக் கோரி அவர் 27 ஜூலை 1956 அன்று தனது உண்ணவிரதத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தாலும்  அவரின் வேண்டுகோளை அன்றைய காங்கிரஸ் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பெயர் மாற்றம் என்பது உணர்ச்சியைத் தூண்டும் சமாச்சாரம் என்பதாகக் கூறி  காமராசர் தலைமையிலான அரசாங்கம் அதனைப் புறக்கணித்துவிட்டது.  சங்கரலிங்கனாரின் கனவு நிறைவேறாமலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் 1956 அக்டோபர் 10-ம் தேதி அவர் மரணமடைந்தார்.                                                                                                                                                                                                                                                                                                                                                      
சங்கரலிங்கனார் எந்த எதிர்கட்சியையும் சார்ந்தவர் அல்ல. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சர்ந்தவர். காந்தியுடன் தண்டியாத்திரையில் கலந்து கொண்டவர். பழுத்த காங்கிரஸ்வாதி. அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பள்ளி ஒன்றுக்கு எழுதி வைத்துவிட்டார்.

தியாகி சங்கரலிங்கனார் இறந்த பிறகு அவருடைய "தமிழ் நாடு"  கோரிக்கைக்கு தொடர்ந்து பலர் குரல் கொடுத்தனர். 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இந்திய  நாடாளுமன்றத்தில் தமிழ் நாடு என பெயர் மாற்றம் சட்டம் நிறைவேறியது.

அதன் பின்னர் தமிழ் நாடு பெயர் மாற்றம் என்பது தி.மு.க. வின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. தியாகி சங்கரலிங்கரனார் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டார்.  ஒரு தமிழனின் தியாகம் நினைவு கூறப்படவில்லை. சமீபகாலத்தில் தான் அவருக்கு ஒரு மணிமண்டபம் விருதுநகரில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அவர்களால் அமைக்கப்பட்டு காணொளியின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

Saturday 3 June 2017

ஆதரவு கரம் நீட்டுங்கள்...!

 இப்போது நம் இனத்தவர் பலர் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயத்தில் அவர்கள் அதனைத் தொடர்வதும் தொடராததும் நமது கையிலும் உண்டு. சிறு வியாபாரிகளை ஒதுக்கும் மனப்போக்கு நம்மிடம் உண்டு. இத்தகைய மனப்போக்கு நமது சிறு வியாபாரிகளைப் பாதிக்கும்.

இன்றைய பெரும் பெரும் நிறுவனங்கள் ஒரு காலத்தில் சிறு சிறு  வியாபாரங்களாகத் தொடங்கப்பட்டவைகள் தான். அப்படித்தான் வளர வேண்டும். அது தான் வளர்ச்சி.

சிறு வியாபாரங்கள் என்னும் போது ஐஸ் வியாபாரம், நாளிதழ் விற்பனை,நாசி லெமாக், கரிபாப், வடை வகைகள், இளநீர் விற்பனை,  செண்டோல் வியாபாரம் .....பட்டியல் இப்படி நீண்டு கொண்டே போகும்.

வெறும் வடை,உருண்டை பக்கோடா, அதிரசம் என்று சந்தையில் வியாபாரம் செய்யும் ஒரு நண்பரைத் தெரியும். கணவனும், மனைவியும் சேர்ந்து செய்கின்றனர்.  அது ஒரு சிறு வியாபாரம் தான்.  அவர்களுக்கு இது முழு நேர வேலை. சிறு வியாபாரமாகச் செய்வதால் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. சொந்த வீடு, கார்,  பிள்ளைகளுக்குத் தரமானக் கல்வி அனைத்தும் கொடுத்து விட்டனர். விலைவாசி ஏற்றம், இறக்கம் அனைத்தும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை விடுவதாக இல்லை. அது அவர்களின் பிழைப்பு. வியாபாரத்தில் மேடு பள்ளங்கள் உண்டு. அனைத்தையும் எதிர்க்கொள்ளத் தான் வேண்டும். அதனை அவர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள்.

நண்பர்களே! நீங்கள் பார்க்கின்ற சிறு வியாபாரிகளுக்கு உங்களின் ஆதரவு கரத்தை நீட்டுங்கள். அவர்களிடம் பொருட்களை வாங்குங்கள். உங்களின் ஆதரவைக் காட்டுங்கள். அவர்களைக் கொளரவியுங்கள். தமிழராய் இருந்தால் "முதலாளி" என்று சொல்லிப் பெருமைப் படுத்துங்கள். இது போன்ற செயல்கள் அவர்களை ஊக்கப்படுத்தும். அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்! முதலாளி என்று அவர்களை நீங்கள்  அழைக்கும் போது அது அவர்களை முதலாளி என்னும் உயர் நிலைக்கு அவர்களை உயர்த்தும்.

இதோ எனக்கு அருகில்,  ஒரு வங்கிக்கு வெளியே, ஒரு வயதானப்  பெண்மணி பலவிதமான பலகாரங்களை நெகிழிப்பைகளில் வைத்து  வியாபாரம் செய்கிறார்.  வங்கி திறந்திருக்கும் நாள்களில் அவர் அங்கு உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்கிறார். அந்த வியாபாரமும் அவருக்கு ஏதோ ஒரு வழியில் அவர் குடும்பத்திற்கு உதவியாகத்தான் இருக்கின்றது.

எனது பள்ளி நாட்களில் ஒர் இஸ்லாமிய நண்பர் ஏதோ ஒரு சில தமிழக வார, மாத இதழ்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அவரை முதலாளி என்று தான் அழைப்பேன். பெரிதாகச் சொல்லுவதற்கு அவர் ஒன்றும் பெரிய வியாபாரி அல்ல. ஆனால் சில வருடங்களில் உணவகத் தொழிலுக்கு அவர் மாறினார். அடுத்து சில வருடங்களில் ஓர் உணவகம் இரண்டாக மாறியது.

இன்னொரு நண்பர் கடை ஐந்தடியில் துணியை விரித்து பேனா, பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி என்று வியாபாரம் செய்து வந்தார். அடுத்து ஓரிரு வருடங்களில் அருகில் கிடைத்த ஒரு டீ, காப்பி ஸ்டால் ஒன்றை வாடகைக்கு வந்தது. துணிந்து எடுத்தார். பின்னர் அவருக்கு ஏறுமுகம் தான்!

சிறு சிறு வியாபாரங்கள் செய்வதில் கேவலம் எதுவும் இல்லை. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அந்தத் தொழிலில் கிடைக்கும் தன்னம்பிக்கை. ஒரு தொழில் செய்யும் போது அதில் கிடைக்கும் துணிவு, நம்பிக்கை.

இன்று நம்முடைய பிரச்சனைகள்  எல்லாம் நமக்கு நம் மேல் நம்பிக்கை இல்லை. தொழில் செய்ய வேண்டும் என்னும் துணிவு இல்லை.  அப்படியே செய்கிறவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்து விடுகிறோம்.  எவன் தோல்வி அடைந்தானோ அவனைச் சுட்டிக் காட்டுகிறோம். வெற்றி பெற்றவனை மறந்து விடுகிறோம்.

கடைசியாக, நம் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவோம். நமது சமூகம் வியாபாரம் ஒன்றின் மூலமே வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்துக் காட்டுவோம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!




Friday 2 June 2017

வயோதிகர்கள் வன்முறை..


தங்களது இளமைக் காலத்தில் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தில் அவர்கள் பிள்ளைகளாலேயே அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு மிகவும் மனம் உடைந்த நிலையில் வீதிக்கு விரட்டப்படுகின்றனர்.

சமீபத்தில் வெளிச்சத்திற்கு  வந்தவர் பழம்பெரும் பாலிவூட் நடிகை கீதா கப்பூர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன், ஒரு மகள். மகனோடு தான் வசித்து வருகிறார். அவருடைய மகன் அவரை துன்புறுத்தியதோடு, சாப்பாடும் போடாமல் ஓர் அறையில் அடைத்தும் வைத்திருக்கிறார்.  சமீபத்தில் ஓரு மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டு அவர் நடையைக்கட்டி விட்டார்! அதே சமயத்தில் தனது வீட்டையும் காலி செய்து விட்டு தனது குடும்பத்தோடு தலைமறைவானார்! அதனால் மருத்துமனையினர்  அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மகளும் தொடர்பில் இல்லை.  ஆனாலும் பாலிவூட்டைச் சேர்ந்த சில  நல்ல உள்ளங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இப்போது அவரை வசதியான ஆஸ்ரமம் ஒன்றில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் திரை உலகினர்.


பாலிவுட் மட்டும் அல்ல கோலிவுட்டிலும் இது போன்ற சம்பவங்களை நாம்  படித்திருக்கிறோம். ஒரு சில வ்ருடங்களுக்கு முன்னர் ஒரு நகைச்சுவை நடிகர் தனது மகன் தனக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை என்று கவல்துறையில் புகார் செய்த சம்பவத்தையும் நாம் படித்திருக்கிறோம். அவ்வளவு ஏன்? நம்மைச் சுற்றிக் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெற்றோர்களை இப்படிக் கொடுமைப்படுத்தும் பிள்ளைகள் யார்?  பெரும்பாலும் அவர்களது மகன்களும் மருமகள்களும் தான் இப்படிக் கொடுமைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். மகன்கள் விரும்பாமல் செய்கிறார்கள்; மருமகள்கள் விரும்பிச் செய்கிறார்கள்! ஆனாலும் இதற்கு ஒரு முடிவில்லை!  இதற்கான காரணங்கள் தான் என்ன?  பணம் இருந்தால் எல்லாச் சொந்தப் பந்தங்களும் வந்து சேரும். ஆனால் பணம் இல்லாவிட்டால் கடைசிக்காலத்தில் .....? பெற்றோர்கள் வீதியில் அல்லது ஏதாவது ஓர் ஆஸ்ரமத்தில்! இதில் மிகவும் கேவலம்: பெற்றோர்களின் பணத்தை வயதானக் காலத்தில் அவர்களிடமிருந்து பிடிங்கிக் கொண்டு அவர்கள் விரட்டியடிப்பது.

ஆனால் பெரும்பாலானக் குடும்பங்களில்  வயோதிகர்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாவது மருமகள்களின் தூண்டுதலால் தான்!கணவர்களை எவிவிட்டு அவர்கள் நல்லபிள்ளைகளாக நடந்து கொள்ளுவது தான்! இதற்கு ஒரு முடிவில்லையா? இல்லை! இது ஒரு தொடர் கதை!  இன்றைய மருமகள் நாளைய வயதானத் தாய்! அப்போதும் அது தொடரும்! தொடர்ந்து கொண்டே இருக்கும்!