Wednesday 1 November 2017

உணவகங்கள் என்றால் அலட்சியமா..!


இன்றைய நிலையில் நமது இந்திய உணவகங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் நமக்குத் தெரியாமல் இல்லை. குறிப்பாக உணவகங்கள் ஆள் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. உள்ளூர் மக்கள் உணவுகங்களில் வேலை செய்வதை  விரும்புவதில்லை. விரும்பக் கூடாது என்று நினைத்தே பல உணவகங்கள் செயல் படுகின்றன! தமிழ் நாட்டுக்காரன் இளிச்சவாயன் - சம்பளம் ஏதும் கொடுக்காமலேயே - வேலை வாங்கலாம் என்று இன்று பல உணவக "முதாலாளிகள்" நினைக்கின்றனர்! உண்மையில் அவர்கள்  உணவகத்  தொழிலைச்  சேர்ந்தவர்கள்  அல்ல. பணம் பறிக்கும் பறக்கும் கும்பல்கள்!

வேலைச் செய்யும் தொழிலாளர்களுக்கும் போதுமான சம்பளம் கொடுப்பதில்லை. முக்கிக்கொண்டும், முனகிக்கொண்டும் வேலை செய்பவனிடம் தரமான வேலை வாங்க முடியாது.  இப்படித்தான் பல உணவகங்கள் செயல்படுகின்றன. இது போன்று செயல்படுகின்ற உணவகங்கள் தான் சுகாதார இலாக்கவினால் அடிக்கடி தொந்திரவுக்கு உள்ளாகின்றன. இரண்டு வாரம் மூன்று வாரங்கள்  சுத்தமில்லை என்று இழுத்து மூடப்படுகின்றன. உணவகங்கள் மூடப்பட்டால் நமக்கும் வருத்தமே. காரணம் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின்  வருமானம் பாதிக்கப்படுகின்றது.  ஆனால் உணவகங்கள் சுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. பணத்தையும் கொடுத்து, நோயையும் வாங்கிக்கொள்ள  யாரும் தயாராக இல்லை. 

ஏன் இவ்வளவு பீடிகை? சமீபத்தில் ஓர் இந்திய உணவகம், சுகாதார அதிகாரிகளால் மூன்று வாரங்களுக்கு இழுத்து மூடப்பட்டது. எத்தனையோ ஆண்டுகளாக நடைபெறும் ஓர் உணவகம் அது. இத்தனைக்கும் சுகாதார அதிகாரிகளும் சாப்பிடுகின்ற உணவகம்! அதனாலோ என்னவோ முதாலாளியார் ரொம்பவும் நம்பிக்கையுடன் இருந்துவிட்டார்! ஆனால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஒருவர் வாட்ஸ்ஸப்பில் படங்களைப் போட்டு நாறடித்து விட்டார்! காப்பியில் பூச்சி ஒன்று கிடந்ததை படம் பிடித்து அத்தோடு சமயலறை அசிங்கங்களையும் வெளியுலக்குக் கொண்டு வந்து விட்டார்! வாட்ஸ்ஸப்பில் வந்த பிறகு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்! அதனால் தான் உணவகத்திற்கு மூன்று வார விடுமுறை!

சமீபத்தில் நான் குளுவாங் நகர் சென்றிருந்த போது அங்கிருந்த ஒர் உணவகத்தைப் பார்த்த போது - இதெல்லாம் நமது தரத்திற்கு ஏற்றதல்ல - என்னும் எண்ணம் தான் வந்தது. சுத்தம் என்பது சாப்பிடுகின்ற இடம் மட்டும் அல்ல. சமயலறை, கழிவறை அனைத்தும் சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். இதிலெல்லாம் நாம் எந்த இணக்கப்போக்கையும் கொண்டிருக்க முடியாது.

"எங்களுக்கு ஆள் பற்றாக்குறை, எங்களையெல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள சொல்வது சரியல்ல" என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது! ஆள் பற்றாக்குறை என்பதெல்லாம் சும்மா மக்களை ஏமாற்றும் வேலை! சம்பளம் ஒழுங்காகக் கொடுத்தால் உள்நாட்டுக்காரன் கூட வேலை செய்வான். 

நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ உணவகத்திற்குச் சுத்தமே முதலிடம். சுத்தமில்லாத உண்வகங்கள் நிரந்தரமாக இழுத்து மூடப்பட வேண்டும் என்பதே நமது அவா!







No comments:

Post a Comment