Friday 3 November 2017

மக்கள் சக்தி கட்சியினருக்கு, நன்றி!

 
மக்கள் சக்தி கட்சியினருக்கு ஒரு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

பினாங்கு, பட்டர்வொர்த் நகரத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தை அந்தக் கட்சியினர் தத்து எடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். வெறும் மேகி மீ சாப்பிட்டே காலத்தைக் கழித்தவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழி வகுத்திருக்கிறார்கள்.

ஏழு மாதத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஒரு விபத்தில், 42 வயதான அந்தக் குடும்பத்தின் தலைவர், உடல் செயல் இழந்து படுத்த படுக்கையானார். அவருடைய மகள்கள் இருவர். ஒருவர் 4-ம் படிவத்திலும், மற்றொருவர் 3-ம் படிவத்திலும் படிக்கின்றனர். வீட்டில் மின்சாரம், தண்ணீர் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. வீட்டில் வறுமை.  அந்தக் குடும்பத்தின் தலைவியால் தனது குடும்பத்திற்கு உணவாகக் கொடுக்க  முடிந்ததெல்லாம் வெறும் மேகி மீ மட்டும் தான். தீபாவளித் திருநாளும் வெறும் மேகி மீயோடு கழிந்து போனது.

இந்தக் குடும்பச் சூழல்,  மக்கள் சக்தி கட்சியினரின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் தலைவர் டத்தோஸ்ரீ  தனேந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அக்குடும்பத்திற்கு முதலில் ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களும் ரொக்கமாக 500 வெள்ளியும் கொடுக்கப்பட்டது. இனி ஒவ்வொரு மாதமும் 200 வெள்ளிப் பெருமான உணவு பொருட்கள் தொடர்ந்து  ஓர் ஆண்டுக்குக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கின்றது.  கல்வி கற்கும் இரு பிள்ளைகளுக்கும் அடுத்த ஆண்டுக்கான கல்விச் செலவுகளை கட்சி ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருகின்றது. அதே சமயத்தில்  அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு அரசாங்கத்தின் பி.பி.ஆர்.டி. வீடு ஒன்று கிடைக்கவும் முயற்சிகள்  மேற்கொள்ளப்படும் எனவும் டத்தோஸ்ரீ  தனேந்திரன் அறிவித்தார். 

ஓர் ஏழைத்தாய் என்னதான்  உழைத்தாலும்  அவ்வளவு  பெரிய  குடும்பச் சுமையை சுமப்பது  என்பது சாதாரணமான காரியம்  அல்ல. தக்க நேரத்தில் செய்கின்ற உதவி  கடவுளுக்குச்  சமம். ஒரு குடும்பத்திற்கு என்ன  தேவையோ அத்தனையும்  அக்கட்சியினர்  செய்கின்றனர். 

இது  ஒரு  நல்ல  எடுத்துக்காட்டு. இன்னும்  நாடு பூராவும்  இப்படிப்  பல பேர்  ஏழ்மையில்  வாழ்ந்து  கொண்டு    இருக்கின்றனர். நம்மிடையே  அரசியல்கட்சியில்  ஏராளம்.  மன்றங்கள்,  இயக்கங்கள்  என்று  நிறையவே  இருக்கின்றன. கொஞ்சம்  சுயநலன்களை  மறந்து  இப்படி  வறுமையில்  சுழல்வோருக்கு  உதவ  முன்  வரவேண்டும். இதுவே  நமது  வேண்டுகோள்.   மக்கள் சக்தி  கட்சியினருக்கு நமது  வாழ்த்துகள்!

நன்றி: மக்கள் ஓசை

No comments:

Post a Comment