Sunday 21 January 2018

பிளவுபடாத ஆதரவு!


சமீபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ம.இ.கா. தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் பேசுகையில் வரப்போகிற பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களுக்கு இந்திய சமூகம் பிளவுபடாத முழுமையான ஆதரவைத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  அப்படி ம.இ.கா. வேட்பாளர்கள்  வெற்றி பெற்றால் தான் அவர்களால் முழுமையான சேவையை இந்திய சமுதாயத்திற்கு வழங்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்த-இருக்கின்ற  இப்போதைய நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களின் சேவைக் குறித்து அமைச்சர் திருப்தி அடைகிறாரா என்பது முக்கியமான கேள்வி. இவர்களிடமிருந்து முழுமையான சேவை மக்களைப் போய் அடையவில்லை என்னும் குற்றச்சாட்டு இப்போதும் நிலவுகிறது!

கல்வி,  பொருளாதாரம் என்று வரும் போது ம.இ.கா.வினால் எந்த ஒரு மாற்றத்தையும் இந்தியர்களிடையே  ஏற்படுத்த முடியவில்லை! இந்திய அரசியல்வாதிகளின் முன்னேற்றம் என்பது இந்தியர்களின் முன்னேற்றம் அல்ல.  சிறிய வியாபாரிகள் இன்னும் புறக்கணிக்கப் படுகின்றனர். கல்வியில் தமிழ்க்கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இரு மொழிக்கொள்கை என்பது தமிழ் மொழிக்குக் கேடு விளைவிக்கும் என்று பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள்  எச்சரிக்கின்றனர்.  ஆனால் ம.இ.கா. வோ, துணைக்கல்வி அமைச்சர் கமலநாதனோ இது வரை வாய்த் திறக்கவில்லை.    தமிழ்க்கல்வி பற்றி அக்கறைப் படுவதாகவும் தெரியவில்லை.   இப்படி மூன்றாவது பெரிய இனத்தின் தாய்க் கட்சியாக விளங்கும் ம.இ.கா. இன்னொரு பெரிய கட்சியான அம்னோவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத்  நமக்குத் தோன்றுவதில் வியப்பில்லை.  அம்னோ,  தமிழ்க்கல்விக்கு எதிராக உள்ள ஒரு கட்சி. முடிந்தவரை தமிழை அழிக்கும் வேலையில் அம்னோ இறங்கியிருக்கிறது. ஆனால் ம.இ.கா.வினர் தங்களின் பதவியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாயே திறப்பதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு விட்டனர். தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் நடக்கின்ற அநியாயங்கள் ஏன் சீனப்பள்ளிகளுக்கு நடக்கவில்லை? 

இந்த நிலையில் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்தியர்கள் ம.இ.கா.விற்கு பிளவுபடாத ஆதரவு தாருங்கள் என்கிறார்! இப்போது இந்தியர்களை நீங்கள் தான் பிரதிநிதிக்கிறீர்கள். ஆனாலும் எதுவும் உங்களால் செய்ய முடியவில்லை. நீங்கள் இல்லை என்றாலும் அது தான் நடக்கும்!  வேறு என்ன தான் நடந்து விடப் போகிறது?

நாங்கள்  உங்களை ஆதரிப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். நீங்கள் வாழ வேண்டும் என்பதற்காக எங்கள் பிழைப்பில் மண்ணை வாரி இறைக்கிறீர்கள். இறைத்த பிறகும் உங்கள் பிழைப்பு  நன்றாக நடக்க  வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்!     

ஆசை வேண்டும்! பேராசை வேண்டாம்!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

No comments:

Post a Comment