Sunday 20 May 2018

பெயரில்லா தமிழ்ப் பள்ளிகள்...!

 தமிழ் மலர் நாளிதழில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அக்கட்டுரையை எழுதியவர் எழுத்தாளர் 'இலக்கியக்குரிசில்' இராமையா மாணிக்கம் அவர்கள். மூவாரில்  உள்ள  தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு முன்னாள் ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ க. பாசமாணிக்கம் பெயரை வைக்க வேண்டும் என்பதாக செய்தி. அவரின்  பெயரை வைக்கக் கூடாது என்பதாக அவர் எழுதியிருந்தார். பாசமாணிக்கம் அவர்களால் சமுதாயம் எந்தப் பயனும் அடையவில்லை. அதனால் அவரின் பெயர் வைப்பது சரியானது அல்ல என்பது தான் அவர் சொல்ல வந்த செய்தி. நானும் அதனை வரவேற்கிறேன்.

 தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா. தலைவர்கள் பெயர் வைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும். அந்தத் தலைவர்கள் இந்தச் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகள்  என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.  அப்படித் தலைவர்கள் சரியான சேவைகள் செய்திருந்தால் இந்தச் சமுதாயத்தின் நிலை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக போக வழியில்லை.  யாருக்கும் புண்ணியமில்லாத - அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்ய வந்தவர்களின் பெயர்களை - தமிழ்ப்பள்ளிகளுக்குச் சூட்டுவது  படிக்கும் மாணவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.

இன்னும் பல தோட்டப்புற பள்ளிகள் பழைய தோட்டப் பெயருடனேயே குறிப்பிடப்படுகின்றன. அவைகள் மாற்றப்பட வேண்டும். தோட்டங்களே காணாமல் போய்விட்டன. பள்ளிகளுக்கு மட்டும் ஏன் அந்தப் பெயர்? சான்றுக்கு:        லாடாங் பகாவ் தமிழ்ப்பள்ளி, லாடாங் செனவாங் தமிழ்ப்பள்ளி, லாடாங் சிரம்பான் தமிழ்ப்பள்ளி - இப்படியே சொல்லிக் கொண்டு  போகலாம். தோட்டங்களே இல்லாத போது அந்த  லாடாங் ஏன் ஒட்டிக் கொண்டிருக்கிறது?  ஒரு சில தலைமையாசிரியர்கள் ஒரு சில முயற்சிகள் எடுத்தும்  அந்த  "லாடாங்கை" மாற்ற முடியவில்லை.  தமிழ்ப்பள்ளிகளைக் கேவலமாகவே வைத்திருக்க வேண்டும் என்னும் மனப்போக்கு கல்வி அதிகாரிகளிடமிருந்தது.   போனது போகட்டும்.  இப்போது அதனை மாற்ற முடியும்.  இப்போது நமது நேரம். இப்போதே என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்  என்று நினைக்கிறீர்களோ அதனைச் செய்ய முயற்சி செய்யுங்கள். சும்மா முயற்சியே செய்யாமல் பின்னர் குறை சொல்லுவதில் பயனில்லை.

புதிய பக்காத்தான்அரசாங்கத்தில் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறும் என நம்பலாம். ஆகவே  சூட்டோடு சூடாக  மாற்றங்கள்  நிகழ வேண்டும்.  இனி தமிழ்ப்பள்ளிகளின்  பெயர்  மாற்றங்கள்  கட்டாயம் நடைபெற  வேண்டும். பள்ளிகளின் பெயர்கள் ஒன்று:  தமிழ் வளர்த்த பெரியவர்களின் பெயர்களாக இருக்க வேண்டும். அல்லது தமிழோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களாக இருக்க வேண்டும்.

இனி 'இலக்கியக்குரிசில்' குறிப்பிட்டது  போல பெயரில்லா தமிழ்ப்பள்ளிகள் இனி நமக்கு வேண்டாம்!


No comments:

Post a Comment