Friday 31 August 2018

210 கோடியா...? அடேங்கப்பா...!

விமான விபத்தில் இறந்த போன முன்னாள் அமைச்சரும் பின்னர் அமெரிக்க  தூதுவராக இருந்தவருமான  ஜமாலுடின் ஜர்ஜிஸ் ஸின் சொத்து விபரம் இப்போது தெரியவந்திருக்கிறது. அவரது 85 வயது தாயார், தெரிந்தோ தெரியாமலோ,  தனது மகனின் அருமை பெருமைகளை வெளியுலகிற்குக் கொண்டு வந்துவிட்டார்!  

அவரது தாயார், இந்த 85 வயதில், மகனின் சொத்தில் பங்குக் கேட்கிறார்! யாரோ பின்னால் இருந்து அவரை இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது!

ஜமாலுடின்,  டாக்டர் மகாதிர் காலத்தில் அமைச்சரானவர். அதன் பின்னர் பல பதவிகள் வகித்தவர். ஆனாலும் அவர் எல்லாக் காலங்களிலும் வேலை செய்து பிழைத்தவர். அவர் தொழில் அதிபர் அல்ல. அவர் சராசரியான ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.

ஒரு சிறிய கணக்கு. அமைச்சருக்கான சம்பளம் சுமார் RM20,000/- வெள்ளிக்குக் கீழே.  அவருடைய சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். அவர் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு காசு கூட செலவு செய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். அவர் குடும்பத்துக்குக்  கூட செலவு செய்யவில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். இப்படி அவர் ஆயுள் முழுக்க சம்பாதித்த அவருடைய சம்பாத்தியத்திலிருந்து ஒரு காசு கூட செலவு செய்திராவிட்டாலும் கூட இந்த அளவுக்கு அவரால் சொத்து சேர்த்திருக்க முடியுமா என்பது தான் இப்போது அனைவராலும் கேட்கப்படுகின்ற கேள்வி!

இது ஒர் எடுத்துக்காட்டு.  அவ்வளவு தான். இப்போது நமது முன்னாள் அம்னோ அமைச்சர்கள், ம.இ.கா., ம.சீ.ச. அமைச்சர்கள்  அனைவரும்  அவர்களின் சொத்துக் கணக்குகளை அறிவித்தால் எப்படி இருக்கும்? அதுவும் நமது தானைத் தலைவரின் சொத்துக்கள் .....? இந்தியர்களின் சொத்துக்களையே கபளீகரம் செய்தவர்! எப்படி இவர்களால் நாளிதழ்களை நடத்த முடிகிறதென்றால் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அவர்களிடம் இருப்பதால் தானே!

இத்தனை ஆண்டுகள் எப்படியெல்லாம் இவர்கள் நாட்டை வழி நடத்தியிருக்கிறார்கள்! திருடர்கள் நாட்டை வழி நடத்தி, திருடர்களை உருவாக்கி,  கடைசியில்  திருடுவதற்கு ஏதும் இல்லாமல் சீன நாட்டுக்கே நாட்டை எழுதி வைத்திருக்கிறார்களே!

ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். முன்னாள் அமைச்சர்கள் குறைந்தபட்சம் 200 கோடிவெள்ளி சொத்துக்களைத் தங்களது வாரிசுகளுக்கு விட்டுச் செல்வார்கள் என நம்பலாம்! அது நமது இந்திய அமைச்சர்கள் உட்பட! அடேங்கப்பா....!

No comments:

Post a Comment