Friday 10 August 2018

நஜிப் அம்னோவுக்கு "சுமை" ஆகிறார்!

நஜிப் அம்னோவுக்கு "சுமை"  ஆகிறார் என்பது இப்போது வெளிப்படையாகவெ தெரிய ஆரம்பித்திருக்கிறது!

இப்போது அம்னோ தலைவர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள். நஜிப் ஒரு சுமை,  அவரை நாம் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க முடியாது என்பதாக! 

உண்மையில் நஜிப் அம்னோவுக்குச் சிறிய சுமை அல்ல அவர் ஒரு பெரிய சுமை! இப்போது நஜிப்பை குறை சொல்லுபவர்கள் ஒன்றும் உத்தமபுத்திரர்கள் அல்ல. ஆராய்ந்து பார்த்தால் எல்லாருமே ஏதோ ஒரு வகையில்"புறங்கையை நக்கியவர்கள்" தான்! ஆனால் நஜிப் மட்டும் தேன் கூட்டையை நக்கியவர்! அது தான் பெரிய வித்தியாசம்!

பாருங்கள்! நஜிப் பதவியை இழந்து நூறு நாள்கள் ஆகவில்லை.  ஆரம்பத்தில் பக்காத்தான் அரசாங்கம் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அம்னோவில் உள்ள ஒரு சிறிய கூட்டம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டே இருந்தது. ஆர்ப்பாட்டம் அது, இது என்று சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.. சமீபத்தில் நடைப்பெற்ற  இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு இருந்தும்,  அம்னோ தோல்வியைத் தழுவியதும் நிலைமைகள் மாறிவிட்டன! காரணம் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். நஜிப் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரங்களில் "நான் நிரபராதி!" என்று பேச ஆரம்பித்தது பெரிய தவறு என்பதை இப்போது தான்  அம்னோ தரப்பு புரிந்து கொண்டிருக்கிறது! 

தேன் எடுப்பவன் புறங்கையை நக்கினால் "போனால் போகட்டும்" என்று மக்கள் விட்டு விடுவார்கள். தேன் கூட்டையை கபளீகரம் பண்ணினால் அது என்ன அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக் கூடியதா? அம்னோவுக்கு இப்போது தான் உண்மை புரிகிறது.  இனி வரும் இடைத் தேர்தல்களில் நஜிப் வாய் திறந்தால் "இருப்பதும் போச்சுடா நொல்லக் கண்ணா! என்கிற நிலைமை தான் உருவாகும் என்று அம்னோவுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது! புரிந்து கொண்டால் சரி!

இப்போது அம்னோ தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச ஆரம்பித்து விட்டார்கள். "நஜிப் தனது சுமையைத் தானே சுமக்கட்டும் அம்னோ அதில் தலையிட வேண்டாம்"  என்கிற வாதம் சரியானது தான்!. 

நஜிப் சுமப்பது என்பது அசாதாரணமான சுமை! . நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இப்போது பாதி நாட்டை சீனா ஆக்கிரமித்திருக்கும்! அது தான் உண்மை. 

நஜிப் எந்த நாட்டுப்பற்றும் இல்லாத மனிதர்! நாட்டுப்பற்று, இனப்பற்று என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காத விஷயங்கள்! அவர் இருக்க வேண்டிய இடம் ...?  உள்ளே! அவரின் சுமையை அவர் தான் சுமக்க வேண்டும்! வேறு யாரும் பங்குப் போடப் போவதில்லை!

No comments:

Post a Comment