Friday 10 August 2018

"தகுதி சான்றிதழ்" இல்லையா...?

பினாங்கு சட்டமன்றத்தில் கல்விக்கூடங்கள் பற்றியான ஒரு விவாதத்தில் ஓர் அதிர்ச்சியான  செய்தி வெளியாகியிருக்கிறது! பாரிசான் ஆட்சியில் இந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுவார்கள் என்று நாம் யாரும் எதிர்ப்பார்க்க முடியாது.

பினாங்கில் 2002 ஆண்டிலிருந்து  கடைசியாக 2011 -ம் ஆண்டு வரைக் கட்டபட்ட சுமார் 31 பள்ளிகளுக்கு இது நாள் வரை அந்தப் பள்ளிகளைப் பயன்படுத்துவதற்கான :"தகுதி சான்றிதழ்" (Certificate of Fitness) கொடுக்கப்படவில்லை என்னும் அதிர்ச்சி செய்தி தான் அது!

இந்தப் பள்ளிகளில் இடைநிலைப்பள்ளிகள் 17-ம் ஆரம்பப் பள்ளிகள் 14 - ம் அடங்கும். ஏன் தகுதி சான்றிதழ் கொடுக்கப்பட வில்லை என்றால் கல்வி என்பது மத்திய அரசாங்கத்தின் கையில் என்பதால் பினாங்கு மாநிலம் எதனையும் செய்ய இயலாது! மத்திய அரசாங்கத்தை மாநில அரசாங்கம் கேள்வி எழுப்ப முடியாது! அவ்வளவு தான்!

மத்திய பாரிசான் அரசாங்கம் ஏன் தகுதி சான்றிதழ் வழங்கவில்லை?  நமக்கு மேம்போக்காக தெரிந்ததெல்லாம்  அந்தக் கட்டடங்கள் பயன்படுத்துவதற்கு எற்றதாக இல்லை. பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்றால் அதனை மீண்டும் கட்ட வேண்டும். இந்தக் கட்டடங்களைக் கட்டும் குத்தகையாளர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களை மீண்டும் கட்டுங்கள் என்று சொல்ல முடியாது. காரணம் அரசியல்வாதிகளும், கல்வி அதிகாரிகளும் -அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்திருக்கும்! அதனால் அவர்களும் வாய் திறக்க முடியாது! அதனால் யாரும் வாயையும் திறக்க வேண்டாம்! தகுதி சான்றிதழும் கொடுக்க வேண்டாம்! யார் கேள்வி கேட்க முடியும்?

இப்போது வெளியாகி இருக்கும் இந்த செய்தி பினாங்கு மாநிலத்தில் மட்டும் தான். அப்படி என்றால் மற்ற மாநிலத்துப்  பள்ளிகள் எந்த நிலையில் இருக்கின்றன? அங்கும் இப்படித்தான் இருக்க வேண்டும். காரணம் ஊழல், ஊழல். ஊழல்! ஒருவன் ஊழல் செய்தால் கண்டும் காணாமல் இருந்து விடலாம். அனைவருமே ஊழல் செய்தால் ....? அதுவும் கல்வி கற்கும் இடங்களிலா? பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடும் இடங்களிலா! ஜீரணிக்க முடியவில்லை!

இதற்கெல்லாம்  இப்போது பக்காத்தான் அரசு முடிவு காண வேண்டும். பாதுகாப்பற்ற கட்டடங்களில் பிள்ளைகள் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும். கட்டடங்களில் உள்ள பிரச்சனைகளைச் சீர் செய்ய வேண்டும்.

இப்போது தான் நமக்குப் புரிகிறது ஏன் பாரிசான் அரசாங்கத்தை மக்கள் வெறுத்தார்கள் என்று!

No comments:

Post a Comment