Friday 24 August 2018

குவந்தானின் "சீனப் பெருஞ்சுவர்"..!

சீனாவின்  பெருஞ்சுவர் பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது படித்திருப்போம்  அல்லது அந்த சுவரையாவது படங்களில் பார்த்திருப்போம். அது உலக அதிசயங்களில் ஒன்று என்பதால் நமது கவனத்தை ஈர்த்த ஒன்று.

ஆனால் இது நாள் வரை நாம் கேள்விப்படாத ஒன்று. நமது நாட்டிலும் சீனா ஒரு பெருஞ்சவரை எழுப்பியிருக்கிறது. அதுவும்  நமது முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் சொந்த மாநிலத்தில்,  அவரது கண்முன்னே!  நமது பத்திரிக்கைகளால் இந்தச் செய்திகளைக் கொடுக்கத் தடை என்பதால் அப்படி ஒரு செய்தியை நாம் கேள்விப்படவில்லை! இப்போது தான் பிரதமர் மகாதிரின் ஆட்சி காலத்தில் அந்த செய்தி  வெளியே வந்திருக்கிறது!

வெளி மாநிலத்தவருக்கு அந்தச் செய்தி புதிதாக இருந்தாலும்  குவாந்தான் வாசிகளுக்கு அது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அவர்கள் தினசரி பார்த்து அனுபவிக்கும் செய்தி தான்.


ஏதோ ஒரு சீன நிறுவனம் பெரியதொரு  தொழில் பேட்டையை அமைத்துக் கொண்டிருக்கிறது என்பதோடு சரி. மற்றபடி அது என்ன தொழில், என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது யாரும் அறியா ரகசியம். "மலேசிய - சீன  குவந்தான் தொழில் பேட்டை" என்னும் பெயர் கொண்ட அந்த நிறுவனம்  என்ன நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.  அந்தத் தொழில் பேட்டையில் இன்னும் பல சீன நாட்டு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அங்கு இயங்குகின்ற அந்த நிறுவனங்கள் யார் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன  என்பது கூடத் தெரியவில்லை! சீனாவின் கட்டுப்பாட்டிலா அல்லது மலேசியாவின் கட்டுப்பாட்டில என்பது கூட ரகசியம் தான்!  காரணம் மலேசியர் யாரும் உள்ளே நுழைய முடியாத கோட்டை அந்த சீனாவின் தொழில் பேட்டை! இங்குள்ள அதிகாரிகளுக்கும் உள்ளே நுழைய  அனுமதியில்லை!   வேலை செய்பவர்கள் கூட பெரும்பாலும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சம்பளம் எல்லாம் சீனாவில் தான் கொடுக்கப்படுகின்றது! உள்ளூர் வாசிகள் ஏதோ பெயருக்குச் சிலர் வேலை செய்கின்றனர்.  வெளியே காவலுக்கு நிற்கும் காவலர் கூட சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டவர். உள்ளூர் காவலர் ஓரிருவர் மொழிப் பிரச்சனைக்காக!

அதனால் தான் உள்ளூர் வாசிகள் இதனைச்  "சீனப் பெருஞ்சுவர்" என்கின்றனர்! இந்த பெருஞ்சுவர் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்றது. அதனுள்ளே ஆயிரம் ஏக்கருக்கு  மேல் உள்ள நிலத்தை இந்த சுவர் ஆக்கிரமித்துக்  கொண்டிருக்கிறது! 

சீனாவுக்கு எப்படி,  இப்படி ஒரு பெருஞ்சுவரை எழுப்பி அதனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது? இப்போது தான் வருகிறார் நமது முன்னாள் பிரதமர் நஜிப்!  ஏதோ தீர்க்கதரிசனத்தோடு செயலாற்றியதாக அவர் நினைக்கிறார்! 

இப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம்  குவந்தான் மட்டும் தான். மற்ற இடங்களிலும் இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை. பாரிசான் ஆட்சியில் இந்தச் செய்திகளுக்கெல்லாம் பெரிய தடை! அதனால் அனைத்தும் ரகசியம்!

இப்போது சீனா சென்று வந்த  பிரதமர் டாக்டர் மகாதிர் இந்த சீனப் பெருஞ்சுவர் இடிக்கப்படும் என்பதாகக் கூறியிருக்கிறார். நல்ல செய்தி. மலேசியா சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது. நமது நிலங்கள் நமது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.

இடிக்கப்படும் நாளை எதிர்பார்க்கிறோம்!

No comments:

Post a Comment