Saturday 25 August 2018

லஞ்சத்தை ஒழிப்போம்...!

லஞ்சம், ஊழல், கையூட்டு என்று எப்படி சொன்னாலும் லஞ்சம் லஞ்சமாகத்தான் இருக்கும்! இது நாள் வரை நம்மால் லஞ்சத்தை மாற்ற முடியவில்லை! கொஞ்சம் நாம் ஏமந்தோம், அது நீக்கமற நிறைந்துவிட்டது.

நமது நாட்டில எப்போது லஞ்சம் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது? மேல் மட்டத்தில் உள்ள நம் தலைவர்கள் எப்போது ஊழல் புரிய ஆரம்பித்தார்களோ அன்றே லஞ்சத்தின் தொடக்க விழா ஆரம்பித்துவிட்டது! அதுவும் முன்னாள் பிரதமர் நஜிப் அவர் காலத்தில் செய்த பல தில்லுமுல்லுகள், மோசடிகள்  மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக போய்விட்டது என்பது தான் உண்மை!  அவருக்குக் கீழ் பணிபுரிந்த அரசாங்க அதிகாரிகள் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை -  லஞ்சம் என்பதே புண்ணியம் என்கிற ரீதியில்  தாராளாமாகப்  புழங்க ஆரம்பித்துவிட்டார்கள்!  அதுவும் லஞ்சம் வாங்குவதைப்  பெருமையாகவும்  நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்!  எல்லா மதங்களும் புண்ணியத்தைப் போதித்தாலும் லஞ்சம் வாங்குபவன்  மட்டும் "எங்களுக்குப் புண்ணியம் வேண்டாம் லஞ்சம் தான் வேண்டும்!"  என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்! பணத்தின் முன்னால் புண்ணியமாவது, புண்ணாக்காவது! புண்ணியம் உனக்கு, பணம் எனக்கு! அவ்வளவு தான்!

ஆமாம், வாங்குபவன் தரப்பிலிருந்து இவ்வளவு பேசி விட்டோம். கொடுப்பவன் தரப்பிலிருந்து கொஞ்சம் பார்ப்போம்.  நம் நாட்டில் இந்த "கொடுக்கும்" வேலையை ஆரம்பித்தவன் யாராக இருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது சீனராகத் தான் இருக்க முடியும்.  அவர்கள் தான் எல்லாவற்றிலும் அவசரம் காட்டுபவர்கள்.  எந்த வேலையாக இருந்தாலும் உடனே முடிய வேண்டும். காத்திருக்க நேரமில்லை. அதனால் கொஞ்சம் பணத்தைத் தள்ளினால் போதும், வேலை முடியும் என்கிற சித்தாந்தத்திற்குக் காரணமானவர்கள் சீனர்கள் தான்! லஞ்சமே வேண்டாம் என்பவனைக் கூட லஞ்சத்தை வாங்க வைக்கும் திறன் அவர்களிடம் உண்டு! அவர்களிடம் எல்லாமே அவசரம்! அவசரம்! அவசரம்! ஒரு தவறை செய்துவிட்டு அதனை மூடி மறைக்க அதற்கு லஞ்சம் கொடுப்பது என்பது அவர்களுக்குச் சர்வ சாதாரணம்! 

ஆனால் இன்றைய நிலையில் இந்தக் "கொடுக்கின்ற" பழக்கம் எல்லா இனத்தாரிடையேயும் ஒட்டிக் கொண்டுவிட்டது!  கொடுத்தால் தான் வேலை  நடக்கும் என்கிற நிலை நாட்டில் ஏற்பட்டுவிட்டது தான் காரணம்! அதுவும் வியாபாரம் செய்பவர்கள் நிலை இன்னும்  மோசம். 

இப்போது நமது புதிய அரசாங்கத்தில் "வாங்குபவர்கள்" கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்! "கொடுப்பவர்கள்" மாட்டிக் கொள்ளுவுமோ என்று சட்டைப் பாக்கெட்டை காலியாக வைத்திருக்கிறார்கள்! 

இது தொடர வேண்டும் என்பது தான் நமது ஆசை! ஒழிப்போம்! ஒழிப்போம்! லஞ்சத்தை ஒழிப்போம்!



No comments:

Post a Comment