Sunday 26 August 2018

நம்மை பலவீனம் ஆக்கும்..!

நமது பிரதமர் ஒரு கருத்தைச் சொன்னார். "மக்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தால் அது அவர்களைப் பலவீனப்படுத்தும்."  முன்னாள் பிரதமர் நஜிப் 'பிரிம்' என்று ஒன்றை ஆரம்பித்து வைத்துவிட்டுப் போனார். அதற்கு அவர் சொல்லுகின்ற காரணம்: "பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு உதவினேன்" என்பதாக! இப்படிப் பறித்து அவர் ஏழைகளுக்கு உதவியதன் மூலம் சுமார் 72 இலட்சம் பேரை ஏழையாக்கி இருக்கிறார் முன்னாள் பிரதமர். ஆம், அந்த உதவி நிதி சுமார் 72 லட்சம் பேரைச் சென்று அடைந்திருக்கிறது!

72 லட்சம் பேர் என்பது  ஒரு பெரிய எண்ணிக்கை. ஏழைகளுக்கோ, முடியாதவர்களுக்கோ உதவுவது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அனைவரும் ஏழைகள் அல்ல. இதில் பலர் இளம் வயதினர். வேலை செய்யக் கூடிய நிலையில் உள்ளவர்கள். இன்னும் வசதியாக வாழ்பவர்கள். ஒரு சிலர் "பிரிம்" பணம் கிடைத்தவுடன் கொஞ்சம் நாளைக்கு வேலைக்குப் போவதையே நிறுத்தி விடுகின்றனர்!   அதுவும் நமது சமுதாயத்தினரைப்  பற்றி சொல்லவே வேண்டாம். குடித்து அழித்து விட்டுத்தான் வேலைக்கே செல்லுவார்கள்! 

நான் பார்த்தவரை நான் அறிந்தவரை இந்தப் பணம் கிடைக்கின்ற பலர் நல்ல நிலையில் உள்ளவர்கள்! அவர்களைக் கேட்டால் "இதென்னா அவன் அப்பன் வீட்டுப் பணமா? நம்மப் பணத்தைத்தானே திருப்பிக் கொடுக்குறான்!" என்று பலர் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்! 'பிரிம்'  உதவிக்குத் தகுதியானவர்கள் சிலர் மட்டுமே, பலர் அல்ல! இது வீண் விரயமே!

சீனப் பழமொழி ஒன்றைச் சொல்லுவார்கள்.  ஒருவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அந்தத் திறனை அவன் வாழ்நாள் முழுவதும் பயன் படுத்துவான். மீன் சாப்பிடக் கற்றுக் கொடுத்தால் முடிந்த கையோடு இன்னொரு இடத்தை நாடி ஓடுவான்! டாக்டர் மகாதிர் வாழ்வதற்கு உங்கள்  திறமையையும், திறனையும் பயன்படுத்துங்கள் என்கிறார். நஜிப், நான் திருடி உங்களை வாழ வைக்கிறேன் கவலை வேண்டாம் என்கிறார்!

பிறருடைய உழைப்பை நம்பி நாம் வாழ வேண்டாம். நம் கையே நமக்கு உதவி. நம் கைகளைத்தான் நாம் நம்ப வேண்டும். உதவிகள் நம்மைப் பலவீனமாக்கி விடும்.  பலவீனனாக நாம் வாழ வேண்டாம்!

நமது பிரதமர் இப்படி ஒரு வார்த்தைச் சொல்லி  நம்மை ஆக்ககரமாகச் சிந்திக்க வைக்கிறார். ஆனால் இரு பெரும் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் தமிழகத்தில் இப்படி சொல்ல ஒரு தலைவன் இல்லை! அதனால் பிச்சை  எடுக்கும் நிலை!

பலவீனம் நமது இனத்தில் அடையாளம் அல்ல!

No comments:

Post a Comment