Wednesday 29 August 2018

கலைஞரை மிஞ்சுவாரா..!

ஒரு திருமண நிகழ்வுக்குப்  போன போது அப்படியே மணமகனின் தாத்தாவையும் பார்த்து வைப்போமே என்று திட்டம் வைந்திருந்தேன்.  அவரைப் பார்த்து சுமார் நாற்பது ஆண்டுகள்  இருக்கும் அவருக்கும் வயதாகி விட்டது.  இன்னும் இருக்கிறாரா, இல்லையா என்று கூட முதலில் தெரியவில்லை. பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

இனி பார்ப்போமா, மாட்டோமா என்கிற எண்ணம் மனதில் ஏற்பட்டதும் "சரி! பார்ப்போம்!" என்று நினைத்து அவரைப் பார்க்கப் போனேன். திருமணத்திற்கு அவரால் வர முடியவில்லை. வரக் கூடிய நிலையில் அவர் இல்லை. அதனால் வீட்டிலேயே முடங்கி விட்டார்.  முதுமை எய்தி விட்டால் இதெல்லாம் சகஜம். நமக்குத் தெரிந்த செய்தி தான். வருத்தப்பட ஒன்றுமில்லை.

அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. எனக்கும் அவருக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கமில்லை. அவரது வீட்டாரப் பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. நான் தோட்டத்து  அலுவலகத்தில் பணிபுரிந்த காலம் அது.  அவர் அப்போது தோட்ட தொழிற்சங்கத்தில்  காரியதரிசி. அதனால் அவர் அவ்வப்போது ஏதாவது பேசுவதற்கு அலுவலகம் வருவார். அப்படித்தான் அவர் எனக்குப் பழக்கம்.

ஒரு முறை நான் தமிழ் நாட்டுக்குப் போக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன். அப்போது  தீடீரென ஒரு நாள்,  அவரது மகன் தமிழ் நாட்டில் போய் படிக்க விரும்புவதாகக் கூறினார், சரி படிக்கட்டும் என்றேன்.  அதனால் நீங்கள் அவனைக் கொண்டு போய் தமிழ் நாட்டில் சேர்த்து விடுங்கள் என்றார்.  அதனாலென்ன சேர்த்து விடுகிறேன் என்றேன். அப்படித்தான் அவருடனான எனது பழக்கம்.

இப்போது அவருக்கு வயதாகிவிட்டது, அந்தப் பழைய நினைவுகளச் சொல்லியும் அவரால் என்னை  அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லை. எனது பெயரைச் சொல்லி "அந்தக் கிராணி, இந்தக் கிராணி" என்றார்கள். ஊகும்! தெரியவில்லை! நான் சொன்னேன் "ஆபீஸ் கிராணி!" என்று சொல்லுங்கள் அவருக்குப் புரியும் என்றேன். அப்படி சொன்னதும் தான் அவருக்குப் புரிந்தது! பெரியதாகத் தலையை ஆட்டினார்!

கடந்த சில நாள்கள் வரை நன்றாகத்தான் இருந்தாராம். வெளியே போய் நடந்தெல்லாம் வருவாராம். தமிழ் நாட்டில் கலைஞர் இறந்து போனதைக் கேள்விப்பட்டதும் படுக்கையிலேயே முடங்கிப் போனாராம். அடாடா! கலைஞருடைய செல்வாக்கு எங்கெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது பாருங்கள்!

ஆமாம்! இவருடைய வயதை இன்னும் நான் சொல்லவில்லையே! இப்போது அவருடைய வயது தொண்ணுற்று மூன்று (93)! இப்போதும்  பத்திரிக்கைகள் படிக்கிறார்! .நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளுகிறார். இன்னும் தெளிவாகத்தான் இருக்கிறார்.

கலைஞரை மிஞ்சுவாரா பார்ப்போம். வாழ்க பல்லாண்டு! 


No comments:

Post a Comment