Sunday 5 August 2018

குழந்தை திருமணங்கள்...

பால்ய  திருமணங்களுக்கான காரணங்கள் பல. பெரும்பாலும் அவை பொருளாதாரச் சம்பந்தப்பட்டவை.  

நமது நாட்டிலும் இந்தத் திருமணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று அறியும் போது கேட்பதற்கு வேதனையைத் தருகிறது.

சமீபத்தில்  வெளி உலகிற்கு தெரிய வந்த திருமணம் என்றால் - 11 வயது சிறுமி  41 வயது ஆடவர்  -செய்த  ஒரு திருமணம். இதனைத் திருமணம் என்று சொல்லலாமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இது சில்மிஷம் அல்லவா?

இந்தியர்களிடையே  இது போன்ற திருமணங்கள் நடைபெறுவதில்லை. ஆனாலும் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவைகள் பெற்றோர்களால் பார்த்துச் செய்யப்படுகின்ற திருமணங்கள் அல்ல. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே "ஓடிப்போய்" நடக்கின்ற திருமணங்கள்!

இப்போது,  இது போன்ற பால்ய திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதாக ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியிருக்கின்றன.  ஆனாலும் பக்காத்தான் அரசாங்கம் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது! 

இதில் தடுமாற என்ன இருக்கிறது? பதினோரு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளுவது என்பது ஒரு பாலியல் கொடுமை. அது தொடர வேண்டுமா என்பது தான் கேள்வி.  அந்தச் சிறுமி படிக்க வேண்டிய வயதில் இருப்பவள்.  ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டிய வயது. சிரித்து, மகிழ்ந்து சிறுவர், சிறுமியரோடு விளையாடும் வயதினள். இந்த வயதில்  "திருமணம்" என்று சொல்லி அவளைக் கட்டிப் போடுவது மிகவும் கொடுமை.

அரசாங்கம் மௌனம் சாதிப்பதை விட்டுவிட்டு உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். சட்டம் இயற்ற வேண்டும்.  இது போன்ற திருமணங்களைத் தடை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மத சாயம் பூசுவது மிகத் தவறு.

எந்த நாட்டிலும் இல்லாத அதிசயங்கள் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. 

குழந்தை திருமணங்கள் வேண்டாம்! தடை செய்க!

No comments:

Post a Comment