Thursday 23 August 2018

அன்பளிப்புக்கள் வேண்டாமே...!

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சரியான காரியம் செய்தார்.

ஒரு நிகழ்வில் தனக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதாக ஒரு செய்தி.

நல்ல உதாரணம். பக்காத்தான் அரசாங்கம் அமைந்த பின்னர் நூறு நாள்களுக்குள் யாரேனும் அன்பளிப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ என்னும் செய்தி வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் நானும் சில கருத்துக்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நமது இந்திய அமைச்சர்கள் - பிற இனத்தவராக இருந்தாலும் ம் சரி - நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற போது நாம் மாலை மரியாதைகளோடு வரவேற்கிறோம். அதில் ஏது தவறு இருப்பதாகத் தெரியவில்லை.  ஒரு சில நிகழ்ச்சிகளில் "அடேங்கப்பா!" என்று சொல்லுகிற மாதிரி ஆள் உயர மாலை, சுமக்க முடியாத அளவுக்கு கனத்து, பெருத்த மாலை! இன்னும் வித விதமான மாலை!   வெவ்வேறு ஊர்களிலிருந்து மாலை! வெளி நாடுகளிலிருந்து மாலை!  குறிப்பாக சென்னை மாநகரிலிருந்தும் மாலை!  இந்த சாதனைகள் எல்லாம் தானைத்தலைவரின் காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை! 

இங்கு நான் சொல்ல வருவதெல்லாம் மாலைகள் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. நமது ஊர்களிலேயே மாலைகள் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் சொல்லி மாலைகள் செய்யலாம்.  ஒரு தலைவருக்கு ஏற்ற ஒரு மாலை. அவ்வளவு தான்.  அது ஒரு மரியாதை. அதற்கு மேல் நாம் போனால் நாம் அடிமைகள்! நினவில் கொள்ளுங்கள்.

தலைவர்கள் தான் நமக்கு ஊழியர்கள். நாம் அவர்களுக்கு ஊழியர்கள் அல்ல. அமைச்சர்கள் நமக்கு ஊழியம் செய்ய வந்தவர்கள். அவர்களுக்கு ஊழியம் செய்வது நமது வேலை அல்ல. அதனால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுங்கள். அவர்களிடமிருந்து நமக்கு மரியாதை இல்லை என்றால் அவர்களைத் தூக்கி எறியுங்கள்! அவர்களை நம்பி நாம் வாழவில்லை!

மேலே அமைச்சர் அந்தோனி லோக் என்ன செய்தார்?  அவருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோனை வாங்கிக் கொள்ள மறுத்தார். அது தான் சரி. வாங்கினால் அது லஞ்சம் வாங்குவதற்குச் சமம். இன்று லஞ்சம் வாங்கினால் நாளை லஞ்சம் கொடுத்தவன் ஏதோ ஒரு காரியத்திற்காக வாசலில் நிற்பான்!

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். அரசாங்க அலுவலகங்கள் லஞ்ச மயமாகி விட்டன. இப்போது நேர்மையான அரசாங்கமே நமக்குத் தேவை.

அமைச்சர் அந்தோனி லோக் சரியாகச் செய்தார்!  வாழ்த்துகள்!

No comments:

Post a Comment