Wednesday 29 August 2018

இது நமது தவறோ...?

 இப்போது அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தில் நாம் ஏதோ தவறுகள் செய்திருக்கிறோம்.

இன்றைய மலேசியாவில் நம்முடைய மிகப் பெரிய பலவீனம் என்பது நாடற்றவர்கள் பிரச்சனையும், தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலையும் தான்.  இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே  நமக்குத் தனியே ஒரு பிரிவையே அமைத்திருக்க வேண்டும். அல்லது தனியே இந்தியர் பிரச்சனைகள் தீர ஓர்  அமைச்சு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு சிலர் சொல்லுவது போல நாம் அனைவரும் மலேசியர் அதனால் தனித் தனியே இன ரீதியில் எதுவும் தேவை இல்லை என்று சொல்லப்படும் கருத்து சரிதான் என்றாலும் அந்தக் கருத்து என்பது  இந்தியர்களும் சரிசமமாக  மற்ற இனத்தவரோடு போட்டி போடும்  நிலை வரும் போது மட்டுமே "நாம் அனைவரும் மலேசியர்" என்று சொல்ல முடியும். இப்போதைக்கு  இந்த வாதம் சரியானது அல்ல.

நமது பிரச்சனைகள் தீர என்ன தேவையோ அதனை நாம் கோட்டை விட்டு விட்டோம் என்பது உண்மை தான்.  ஆனால் அது நமது தவறல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியர் பிரச்சனைகள் வரும் போது  ம.இ.கா. வை நோக்கிக் கண்டனக் குரல் எழுப்புவோம். ஆனால் அது ஒரு சோத்து, சொத்துகளின்  கட்சி; எதனையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்!    இப்போது கண்டனக் குரல் யாரிடம் எழுப்பவது என்பது யாருக்கும் தெரியவில்லை! எல்லாருமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்! அதனால் நமது "நாடற்றவர்கள். தமிழ்ப்பள்ளிகள்" பிரச்சனைகளைப் பற்றிப் பேச ஒருவரையும் காணோம்!

அதனால்  நாடற்றவர்கள், தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகள் தீர நிச்சயம் நமக்கு ஒர் அமைச்சர் தேவை. அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு துணை அமைச்சர் தேவை.  கல்வி அமைச்சர் ஒரு மலாய்க்காரர் என்பதால் நமது கல்வியாளர்களை அவர் பார்க்கக் கூட விரும்பமாட்டார்.  அதனால் தான் சீனர்கள் அவர்களுக்கு ஒரு துணை அமைச்சரை ஏற்படுத்திக் கொண்டார்கள்.   அமைச்சரானதும் அடுத்த நாளே ஒரு முக்கிய வேலையை சொல்லாமல் கொள்ளாமல் ஆரம்பித்து விட்டார்.  UEC என்னும் சீனப் பள்ளிகளின் சான்றிதழை பலகலைக்கழகங்களின் ஏற்றுக்கொள்ளும்படியான வேலைகளை செய்து முடித்துவிட்டார்! அதற்கு எதிர்ப்பு இருக்கும் என்பதனால் அது அவசர, முதல் வேலையாக அதனைப் பார்த்துக் கொண்டார்! இப்போது திரை மறைவில் பல வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்! நாமோ இன்னும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது, எங்கே போவது என்று வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்!

தமிழ்ப்பள்ளிகளில் நமது வேலைகள்  எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை! நாடற்றவர்கள் பிரச்சனைத் தீரவில்லை! நூறு நாள்களில் கூட எதுவும் பெரிதாக நடந்து விடவில்லை! 

நாம் எங்கே தவறு செய்தோம்? புரியாத புதிர்! நமக்கென்று தலைவர் இல்லாதது குறையோ!                                                  

No comments:

Post a Comment