Sunday 31 March 2019

இவர்கள் திருந்த மாட்டார்களா...?

நமக்கே சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. கோடிக்கணக்கில்  பணத்தைச் சுரண்டி, பொருளாதார ரீதியில் நாட்டைச் சீரழித்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாழாக்கிய ஒரு மனிதருக்காக, அவரின் மனைவிக்காக,  இன்று நினைத்த இடத்திலெல்லாம் போராட நினைக்கும் அம்னோவினரையும் நஜிப்பின் ஆதராவாளர்களையும் பற்றி என்னவென்று சொல்லுவது?

ஓர் இடைத் தேர்தல் வந்தால் அங்கு சமயத்தைப் பற்றி பேசி அரசியலாக்குவதும், மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பேசி அரசியலாக்குவதும் - எத்தனை நாளைக்கு இதனை அரசாங்கம் சகித்துக் கொள்ளப் போகிறது? 

இவர்களின் உரிமைகளைப் பற்றி யார் கேளவிகள் எழுப்பியது? இவர்களின் சமயத்தைப் பற்றி யார் கேள்விகள் எழுப்பியது? இவர்களே கேள்விகளை எழுப்புவதும் இவர்களே பதிலைச் சொல்லுவதும் அதனை அரசியலாக்குவதும் இதையே ஒரு பொழுது போக்காக செய்வதும்  - இன்னும் எத்தனை ஆண்டுகள் இதனை அரசாங்கம் அனுமதிக்கப் போகிறது?

நாட்டின் விலைவாசி ஏற்றத்தை அரசாங்கத்தால் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கம் சரியான முறையில் இயங்காதவாறு  அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவதே நஜிப்பின் ஆதரவாளர்கள் தான்! 

நஜிப்பை ஆதரிப்பவர்கள் யார்?  நஜிப் பதவியில் இருந்த போது அவர் மட்டும் ஊழல் செய்யவில்லை. அவர் மனைவி மட்டும் ஊழல் செய்யவில்லை.  அரசாங்கத்தில் இருந்த அனைவருமே ஊழல் செய்தார்கள்!  அப்படி ஊழல் செய்தவர்களை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.  இப்படி ஊழலில் திளைத்து பணத்தை இலட்சக் கணக்கிலும், கோடிக்கணக்கிலும் கொள்ளையடித்தவர்கள் தான் இன்று நஜிப்புக்குக் கொடி பிடிக்கிறார்கள்!  இப்போது புதிய அரசாங்கத்தின் கெடுபிடியால் ஒன்று செய்ய இயலாமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் தான் இன்றைய அரசாங்கத்திற்கு  முதல் எதிரியாகத் திகழ்கிறார்கள்.

அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதில்லை. முந்தைய அரசாங்கத்தில் என்ன செய்தார்களோ அதையே செய்கிறார்கள். அதனால் மக்கல் நலன் பாதிக்கப்படுகிறது. 

அரசாங்கம் இவர்களை களையெடுக்காத வரை இவர்களின் அட்டகாசம் அடங்கப் போவதில்லை. இவர்களுடைய கோபமெல்லாம் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இலஞ்சப் பணம் இப்படி வீணாகைப் போனதே என்கிற ஆத்திரத்தில் அடாவடித் தனம் செய்கிறார்கள்!

நல்லவர்கள் யாரும் நஜிப்பின் தலைப்பக்கம் கால் வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். ஆனால் நஜிப் எந்தக் காலத்திலும்  நல்லவர்களைத் தன் பக்கம்  வைத்துக் கொள்ளவும் இல்லை, சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை!  நல்லவர்கள் அவருக்குப் பகைவர்கள்!

இவர்கள் திருந்துவதற்குக் காலம் பிடிக்கும்!

Saturday 30 March 2019

வறுமை! வறுமை!

நம் இந்திய சமூகத்தில் என்னன்னவோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறோம்.  அதிலே ஒன்று வறுமை! வறுமை! வறுமை! 

நாட்டில் மூன்றாவது பெரிய சமூகம். ஆனால் வறுமை என்று வரும் போது  நாம் தான் முதல் நிலையில் நிற்கிறோம்! பத்திரிக்கைகளைப்  படிக்கின்ற போது பல பல குறைபாடுகள்! என்னென்று சொல்லுவது. எதனை முன் நிறுத்துவது?

அப்பா இல்லாத குடும்பம், அம்மா இல்லாத குடும்பம்,  பாட்டியிடம் வளரும் குழந்தைகள், அப்பா அம்மாவுக்கு இனிப்பு நீர், பள்ளிக்குச் செல்ல முடியாத குழைந்தைகள்  - இப்படி ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம் பட்டினியால் வாடுகிறது என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தவுடன் அரசியல் கட்சிகள் அல்லது அரசு சாரா இயக்கங்கள் பல ஓடிச் சென்று அவர்களுக்கு உதவுகின்றன.  இதிலும் ஒரு அதிசயம்.  ம.இ.கா. வினர் கூட நாங்களும் உதவி செய்கிறோம் என்று பத்திரிக்கைகளில் படத்தைப் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்!

 உதவி செய்கிறவர்கள் யாராக இருந்தாலும்அவர்களை நாம் ஒதுக்க வேண்டாம்.   வரவேற்போம்! ஆனால் இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ஒரு நாள் சாப்பாட்டுக்கு உதவி, ஒரு மாத சாப்பாட்டுக்கு உதவி என்கிற ரீதியில் இந்த உதவிகள் அமையக் கூடாது என்பது தான். இவர்களுக்கெல்லாம் ஓரு நிரந்தரத் தீர்வு தேவை. அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும். அவர்களுக்குக் குடியிருக்க ஒர் இடம் வேண்டும். அவர்களுக்கொரு வேலை வேண்டும். தினசரி சாப்பாட்டுக்கு  வழி காட்ட வேண்டும்.

அவர்களுடைய தேவைகள் எல்லாம்  அரைகுறையாக அமையக் கூடாது. ஒரு நிரந்தரத் தீர்வு.  அவர்களும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. எங்கோ ஒரு தப்பு நடந்திருக்கிறது. அதனால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது அவர்களுடைய தேவைகள் எல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வு, அதன் மூலம் அந்தக் குடும்பங்கள் தலை நிமிர வேண்டும்.

இது ஒரு நாள் பிரச்சனையல்ல. நீண்ட நாள் பிரச்சனை.  அவர்கள் வாழ்வதற்கு வழி காட்டினால் போதும். அவர்களும் மற்றவர்களைப் போல வாழ வேண்டும். 

நாம் பிச்சை எடுக்கும் சமூகம் அல்ல. சொம்பேறி சமூகம் அல்ல. உழைக்கும் வர்க்கும். யாரோ செய்கின்ற தவறுகளினால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடுகிறது.

கொடிது கொடிது வறுமை கொடிது! அதனிலும் கொடிது குழைந்தைகளின் வறுமை! வறுமை ஒழிப்போம்!  வற்றாத ஜீவ நதியென வாழ்வோம்!

கேள்வி - பதில் (95)

கேள்வி 

வருகின்ற தேர்தலில்  ஆட்சியைப் பிடிப்பவர்கள் யாராக இருக்கும்?

பதில்

இது பா.ஜ..க.வுக்கும்  காங்கிரஸ் கட்சிக்குமான போட்டி என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேறு கட்சிகளும் இந்த முறை வலுவான போட்டியை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

அதனால் காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணிகளைத் தவிர்த்து  வேறு  கூட்டணி  ஆட்சி அமைக்குமா - அமைக்கலாம் என்றும் சொல்லப்ப்டுகின்றது.  இப்போது மக்களுக்கு இந்த இரண்டு கட்சிகளின் மேலும் யாருக்கும் நல்ல எண்ணம் இல்லை!

என்ன தான் காட்டுக் கத்தலாக கத்தினாலும் இந்தக் கட்சிகளால் இலஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை!  இலஞ்சம் வாங்குபவர்களே இவர்கள் தான் அப்புறம் எங்கே இலஞ்சத்தை  ஒழிக்க முடியும்,

இலஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு காரியமும் அடைபெறாது என்னும் நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது. இதை விட பெண்களுக்குப் பாதுகாப்பற்ற  நாடு இந்தியா என்கிற பெயரையும் அதற்கு இப்போது ஏற்பட்டுவிட்டது.

பா.ஜ.க. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வன்முறைகள் அதிகம்.  திறைமையான பத்திரிக்கையாளர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.  குற்றவாளிகள் இன்னும் வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர்!   சிறுமிகள் பலர் வன்முறைக்கு ஆளாகி இருக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள்  மேல் எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை! மாட்டுக்கறி சாப்பிடுவது குற்றம்.  மாடுகளை வைத்திருப்பதே குற்றம் என்னும் பாணியில் இந்திய அரசியல் பா.ஜ.க வின் . கீழ் போய்க் கொண்டிருக்கிறது!

தமிழ் நாட்டிற்கு இந்த இரு கட்சிகளினால் எந்தப் பயனுமில்லை. முன்னேற்றம் என்னும் பெயரில் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. பணக்காரர்களுக்கு ஏற்றபடி ஆமாஞ்சாமி போடுகின்ற கூட்டமாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்.. 

இந்தியாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள். நாடு முன்னேறுகிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். இப்போதைக்கு வெறும் விளம்பரத்தை வைத்துக் கொண்டு நாடு முன்னேறுகிறது என்று பாவ்லா காட்டுகின்றனர்!

என்னைக் கேட்டால்  இந்த இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் சொல்லுவேன்.

நாட்டிற்கு நல்லது வர நல்ல கூட்டணி அமைய வேண்டும்! அது தான் நமது பிரார்த்தனை!

Friday 29 March 2019

இது அரசியல் பழிவாங்கள்..!

பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு இந்தியர்களைப் பழிவாங்க நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது. அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்! 

அது தான் கேமரன் மலை விவசாயிகளின் பிரச்சனை.  அறுபது குடும்பங்கள் அங்கு விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். அதுவும் இன்று நேற்றல்ல> அறுபது ஆண்டுகளாக அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த விவசாயக் குடும்பங்கள் தாங்கள் விவசாயம் செய்ய  அந்த நிலங்களுக்கு நிரந்தர பட்டா தரும்படி பல ஆண்டுகளாக போராடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் கிடைத்த பாடில்லை. ஒரே காரணம் அந்த விவசாயிகள் அனைவரும் இந்தியர்கள் என்பது தான்! 

நிச்சயமாக இந்தச் சூழலில் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பார்கள்  என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?  இத்தனை ஆண்டுகள் அவர்கள் அனைவருமே ம.இ.கா.வில் இருந்தவர்கள். ம.இ.கா. வால் வழக்கம் போல அவர்களுக்கு எந்தப் புண்ணியமும் ஏற்படவில்லை. தேசிய முன்னணி அரசாங்கள் அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்து விடுத்து நொந்து போனவர்கள்!  வேறு என்ன செய்வார்கள்? 

சமீபத்திய இடைத் தேர்தலில் அவர்கள் தேசிய முன்னணியை ஆதரிக்கவில்லை.  எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்து விட்டனர். அதே சமயத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.  கேமரன் மலை என்பது பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு மலை.

இந்தத் இடைத் தேர்தலில் இந்தியர்கள் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக இருந்தனர் என்பதால் தான் இப்போது தேசிய முன்னணி அரசாங்கம் ஆதரவற்ற விவசாயிகளின் மேல் நடவடிக்கை எடுத்துள்ளது! இந்த விவசாய மக்கள் பல ஆண்டுகளாக நிரந்தர பட்டாவுக்காக போராட்டம், கோரிக்கை என்று அரசாங்கத்திற்கு விடுத்திருந்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.  இப்போது அவர்கள் எதிர்க்கட்சியினர் பக்கம் என்று அறிந்து கொண்டதும் உடனே இதனை நல்லதொரு சந்தர்ப்பமாகக் கருதி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். 

முட்டாள்கள் அரசாங்கத்தை வழி நடத்தினால் இது தான் நடக்கும் என்பதை  உறுதிபடுத்தி விட்டார்கள்.  அறுபது குடுமபங்களைப் பற்றி  அவர்களுக்குக்  கவலையில்லை.  இதுவே  மலாய்க்கரார்களாக  இருந்தால்  இப்படி  ஒரு  நடவடிக்கையை  எடுக்கத்  துணிய  மாட்டார்கள். இப்போதெல்லாம் விவசாயம் செய்ய  மலாய்க்காரர்கள் தயராக இல்லை. ஆனால் விவசாயம்  செய்யும்  இந்தியர்களையும் அரசியல்வாதிகள் அடாவடித்தனம் செய்கிறார்கள்!

கடந்த  அறுபது  ஆண்டுகளாக  இந்தியர்கள்  அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். இப்போது  தான்  அதன் பலனை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்!   இத்தனை ஆண்டுகள் கேமரன்மலை ம.இ.கா.வின் கோடடையாகத்தான் இருந்து  வந்திருக்கிறது.  ஆனால்  இன்றை நிலைக்கு  அந்த விவசாயிகளை  ஆளாக்கிய  ம.இ.கா.  இப்போது  வாய் திறக்கவில்லை!  அந்த விவசாயிகளை வைத்து  பணம் சம்பாதித்தவர்கள்  ம.இ.கா.வினர்! ஆனால் இப்போது  பாராமுகமாய்  இருக்கின்றனர்! இதே போதும் ம.இ.கா.வினர் நன்றி கெட்டவர்கள் என்று!

இது அரசியல் பழிவாங்கள் என்பது நமக்குப் புரிகிறது.  பொறுமை காப்போம்!  

Wednesday 27 March 2019

ஏன் இந்த புலம்பல்...?


சமீப காலமாக அன்வாரின் மகள் நூருல்  இசாவின் குரல் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பிரதமர் டாக்டர் மகாதிரைப் பற்றியான அவரின் விமர்சனங்களைத் தினசரி பத்திரிக்கைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்லுவதில் தவறு ஏதும் இல்லை தான்.

ஏற்கனவே டாகடர் மகாதிரைப் பற்றியான இந்தியர்களின் விமர்சனமும் அப்படித்தான் அமைந்தன.  அது மட்டும் அல்லாமல் கடந்த காலங்களில் அவர் சர்வாதிகார மனப்பான்மையோடு தான் நடந்து வந்திருக்கிறார். அவருக்குச் சாதகமாக இல்லையென்றால் எந்தத் தடையையும் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார். அவை நியாயமாக இருக்க வேண்டுமென்கிற  அவசியமில்லை! அது அவருக்குச் சாதகமாக இருக்க வேண்டும் அல்லது அவரது சமூகத்திற்கு  ஆதரவாக இருக்க வேண்டும்.  இப்படித் தான் அவரின் கடந்த கால செயல்பாடுகள் அமைந்திருந்தன.

எது எப்படி இருப்பினும்அவர் காலத்தில் தான் நாடு வளம் மிக்க  நாடாக  முன்னேறிக் கொண்டிருந்தது. வேலை வாய்ப்புக்கள்  அதிக அளவில் பெருகி வந்தன. ஆள் பற்றாக்குறையால்  வெளி நாட்டுத்  தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர் செய்த பல தவறுகள்  இந்த முன்னேற்றத்தின்  மூலம் மறக்கப்பட்டன என்பது தான் உண்மை.

மக்கள் தங்கள்  பிழைப்புக்குத் தான் முன்னுரிமை  கொடுக்கின்றனர்.  தங்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்.   பிள்ளைகளுக்குக் கல்வியைக்  கொடுக்க வேண்டும்.   இப்படித் தான் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் அவனை வழி நடுத்துகிறது.

இன்றும் டாக்டர் மகாதிர் மக்கள் மனதிலே உயர்ந்து நிற்கிறார் என்றால் அவர் காலத்தில்  தான் மக்கள்  நலமுடன் வாழ வழி கிடைத்தது.

ஆனால் நஜிப் காலத்தில் என்ன நடந்தது?  வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் பறி போயின. அந்நிய தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. விலைவாசிகள் எகிறின.  அரசாங்கத்தால் எதனையும் கட்டுப்படுத்த இயலவில்லை. 

அதனால் தான் தேர்தல் மூலம் புரட்சி ஏற்பட்டது! அறுபது கால அரசியல் ஒரு முடிவுக்கு வந்தது. புதிய அரசாங்கம் அமைந்தது. அதுவும் டாக்டர் மகாதிர் தலைமைத்துவத்தில்! மகாதிர் அரசியல் நெளிவு சுளிவுகளை அறிந்தவர். தில்லுமுல்லுகளைத் தெரிந்தவர். அதனால் தான் அவரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

நூருல் இசா ஒன்றும் அறியாதவர் அல்ல. அன்று டாக்டர் மகாதிர் இல்லை என்றால் ஒரு புதிய மாற்றம் நாட்டில் ஏற்பட்டிருக்காது  நஜிப் ஆட்சியாளர்களைத் தனது கையில் கொண்டு வந்திருப்பார்! மீண்டும் அரசாங்கம்  நஜிப் கையில் வந்திருக்கும்.

டாக்டர் மகாதிரிடம் சில கொள்கைகள் உண்டு.   எளிதில் அவர் மயங்கி விட மாட்டார். மிகவும் உறுதியான மனிதர். அவருடைய செயல்கள் சில சமயங்களில் நமக்கு வலிக்கும்.

டாக்டர் மகாதிர் நாட்டிற்கு வளப்பத்தைக் கொண்டு வந்தவர்.  அதனால் அவருக்கு இன்னும் பேரும் புகழும் உண்டு. இப்போதும் மக்கள் அவரை நம்புகிறார்கள்.

அவரின் நடவடிக்கைகள் நமக்கு வேதனையைக் கொடுக்கலாம். பொறுத்துத் தான் ஆக வேண்டும்!

Tuesday 26 March 2019

நாம் தமிழர்...!

இப்போதெல்லாம்  நாம் தமிழர்  என்று சொன்னாலே சிலர் விரும்புவதில்லை.  இது ஏன்  என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

அவனவன் தன் இனத்தைப் பற்றி பெருமைப்படுகிறான்.  தவறில்லையே! என் இனத்தைப் பற்றி  நான் பெருமைப்படாமல்  வேறு ஒரு இனத்தவனா பெருமைப்படுவான்!

தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கம் இங்கும் எதிரொலிக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது தேவையற்றது என்று சொல்லிவிட முடியாது. தேவை தான்.  நமது இனத்தின் பெருமையை நாம் அறியாததால் தான் இன்று வீழ்ந்து கிடக்கிறோம்.  இன்னும் எழுந்த பாடில்லை.  காரணம் நம்மை அறியாமலேயே நாம் வீழ்த்தப்பட்டிருக்கிறோம்..  அதன் காரணங்களையெல்லாம் நாம் புரிந்து கொள்ளவில்லை! புரிந்து கொள்ள மறுக்கிறோம்! அந்த அளவுக்கு நாம் அவர்களை நம்புகிறோம்! 

ஒரு முறை நண்பர் ஒருவர் ஒரு வேலையாக என்னிடம் வந்தார். பேச்சு வாக்கில் தன்னை மலையாளி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  நான் மலயாளி இல்லை, தமிழன் என்று சொன்னேன். அவ்வளவு தான். நான் அதனை ஒரு பிரச்சனையாகக் கருதவில்லை.அவரும்அது பற்றி ஒன்றும் பேசவில்லை.  

இன்னொரு முறையும் அது நடந்தது.   எங்களிடம் தொழில் பயிற்சி பெறும் ஒரு  மாணவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன்  தீடீரென்று  "நான்  மலையாளி" என்று  அவனே  சொன்னான்!  நான்  அவனிடம்  கேட்கவில்லை. ஆனாலும் அவனே அதனைச் சொன்னான்!

யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுடைய பெயரை வைத்தே நாம் அவகளைக் கணித்துவிடலாம். 

ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லுவது ஏன்?  காரணங்கள் பல. நான் சொல்ல வருவதெல்லாம் நமக்கும்  அந்தப்  பெருமைகள்   வேண்டும்  என சொல்ல வருவது தான். நிச்சய மாக  நமக்கும்  பெருமைகள்  பல உண்டு. நமது  பெருமைகளை  நாம்  வெளிக் கொணர வேண்டும்.  ஒருவன் மலையாளி என்று சொல்லுவதில் பெருமை கொள்ளுகிறான். ஒருவன் தன்னைத் தெலுங்கர் என்று சொல்லுவதில்  பெருமை கொள்ளுகிறான்.  ஆனால்  நாம் மட்டும் தமிழன் என்று சொல்லக் கூடாது இந்தியன் என்று சொல்ல வேண்டுமென்றால் எப்படி? 

இப்போது நானும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  பேசுகின்ற போதே  நான்  தமிழன்  என்று  முன் கூட்டியே  சொல்லி விடுவதுண்டு! அதனால் நாம் பயந்து பயந்து பேச வேண்டியதில்லை! 

நாம் தமிழர்  என்பதிலே பெருமைப்பட  வேண்டும். பெருமைப்பட வாழ வேண்டும். மற்றவர் மதிக்க வாழ வேண்டும்.  

இந்தியர்களில் நாமே அதிக எண்ணிக்கையில் உள்ளோம்.  முன்பெல்லாம்  நம்மை வழி நடத்த நிறைய  தமிழர் இயக்கங்கள் இப்போது அவைகள் எல்லாம் மாற்றப்பட்டு நிறைய இந்திய  இயக்கங்கள். அனைத்தும் தமிழர்களை அதிகமாக கொண்ட இயக்கங்கள். ஆனால் தலைவர்கள் மட்டும் தமிழர் அல்லாதவர்கள்! 

இதற்கும் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.  இனி நாம்  தமிழர்  தமிழர் என்று தான் சொல்ல வேண்டும். பொறுப்புக்களையும்  நாம் ஏற்க வேண்டும். நாம் விட்டுக்கொடுத்தால்  இனி அரசியலில் கூட நாம் இருக்க மாட்டோம்! இப்போதே  நாம் அதனைப்  பார்த்துக்  கொண்டு  தான் இருக்கிறோம். தமிழ் நாட்டு  நிலைமை நமக்கு இங்கு வேண்டாம்.

நாம் தமிழர்! நாமே தமிழர்!

Sunday 24 March 2019

அம்னோவின் அநாகரீகம்...!

நாட்டை, சுததிந்திரம் கிடைத்திலிருந்து கடந்த ஆண்டு வரை நாட்டின் நிர்வாகத்தை தன்னிடமே வைத்திருந்த ஒரு கட்சி. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்ட ஒரு கட்சி.  மலாய் இனத்தவரிடையே ஈடு இணயில்லாத ஒரு கட்சி என்றால்  அது அம்னோ என்பதில் எந்தக் கருத்து வேறுபாடில்லை. 

கடைசியாக அம்னோ தலைவரா, பிரதமராக இருந்த நஜிப் செய்த தவறினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் நஜிப் மட்டுமே!

அவர் செய்த தவறுகளை மறைத்து தனது ஆதரவாளர்களைத்  தூண்டி  விட்டு  நாட்டில் குழப்பத்தை  ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் நஜிப்!  இந்நேரம் அவர் சிறைக்குள்ளே  தள்ளப்பட்டிருந்தால் இந்த வேண்டத் தகாத வேலைகள் எல்லாம் இல்லாமல் போயிருக்கும் என்று ஒரு சாரார் சொல்லுவது உண்மை தான்  என்று  நாமும்  நினைக்கத்  தான்  வேண்டியிருக்கிறது.  

அவரைக் கைது செய்வதில் ஏன் தாமதம் என்பதில் நம்மால்  எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. அது  நீதிமன்றத்தின் கடமை.  எது சரி, எது தவறு என்பதை நீதிமன்றத்தின் கையில்.

நாட்டிற்குக் கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்திவிட்டு "நான் தவறே செய்யாத ஒரு தலைவன்!" என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரே தலைவன் என்றால் அது நஜிப்பாகத் தான்  இருக்க முடியும்!

சமீபத்தில் நஜிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய  ஆர்ப்பாட்டதில் அந்த மாணவர்களை நஜிப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் கண்டிக்கத் தக்கது. மாணவர்களை மட்டும் அவர்கள்  இழிவுபடுத்தவில்லை.  அவர்கள் இனத் துவேஷத்தையும் தூண்டிவிட்டிருக்கின்றனர்.

அப்படி இருந்தும் அவர்களில் யாரும் கைது செய்யப்படவிலை. அதனை   அவர்களின் பலமாக  அவர்கள்  பார்க்கிறார்கள்!   யார் நஜிப்பின் ஆதரவாளர்கள்?  உன்னிப்பாகப் பார்த்தால் எல்லாம் அவரிடம் பொறுக்கித் தின்றவரகள்!  இலஞ்சப் பிரபலங்கள்! அவர் பதவியில் இருந்த போது பணத்தில் மிதந்தவர்கள்! அத்தனை பேரும் தேச நிந்தனை சட்டதில் கைது செய்யப்பட  வேண்டியவர்கள்!

ஆனாலும் அரசாங்கம் பொறுமை காக்கிறது! அவர்களை இன்னும் வெளியே விட்டு வைத்திருக்கிறது!

அறுபது ஆண்டுகாலம் அரசாங்கத்தை வழி நடத்திய ஒரு கட்சி இப்போது அராஜகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது!  

வருத்தமே!

Saturday 23 March 2019

மருத்துவமனையில் ஓர் அரை நாள்..!

சமீபத்தில் மருத்துவமனை ஒன்றிற்குச் செல்ல - நோயாளிக்குத் துணையாக - ஓரு வாய்ப்புக் கிடைத்தது.

ஓர் அரை நாள் என்று சொல்லலாம்.  காலை எட்டு மணியிலிருந்து பன்னிரெண்டு மணி வரை எனது நேரம். சரியான கூட்டம். எல்லா மருத்துவமனைகளிலும் இதே நிலை தானே!  ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

நான் பெரும்பாலும் அங்கு வேலை செய்யும் மருத்துவர்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பேன்! அது பிடிக்கும் என்பதல்ல.  அவர்கள் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத் தான்! வேலை பளு அல்லவா!

அப்போது ஏதோ ஒரு அதட்டல் குரல். அப்போது ஒரு மலாய்ப் பெண்மனி - டாக்டர் தான் -  ஒரு சீன இளைஞனைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.  அந்த சீன இளைஞன் படித்தவன் போலத் தெரியவில்லை. அந்த இளைஞன் ஒரு சீன டாக்டர் இருந்த அறையை ஒட்டி நின்று கொண்டிருந்தான்.  ஒரு வேளை அந்த சீன டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று அவருக்காக காத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்த மலாய் டாக்டர் அவனை பார்த்து "Chan, Come Here! Your Doctor Is Me!" என்று கத்தினார்!  எனக்கு அந்த டாக்டரின் ஆங்கிலம் புரிந்தது! ஆனால் புதிதாக இருந்தது! இது மலேசிய ஆங்கிலம், அவ்வளவு தான்!

அந்த சீன இளைஞன் போய்விட்டான். அந்த ஆங்கிலம் அவனுக்கும் புரிந்தது.

எனக்கு இரண்டு நாற்காலிகள் தள்ளி முன் வரிசையில் ஒரு நடுத்தர வயதுடைய  மலாய்க்காரரும் அவரது மனைவியும் உட்கார்ந்திருந்தனர். அந்த மலாய் நண்பர் அவருடைய மனைவியிடம்  "என்னா, இந்த டாக்டர் English பேசுறா!  Broken English! I Am Your Doctor!  என்றல்லவா சொல்ல வேண்டும்!  Broken English! என்று மனைவிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்!

அதனால் என்ன? இதெல்லாம் பெரிய விஷயமா?  ஆனாலும் மனதை நெருடிய ஒரு விஷயம் உண்டு. மருத்துவ படிப்புக்காக மாஞ்சி மாஞ்சி ஒரு ஐந்து ஆறு வருடங்கள் படித்து   மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்று டாக்டராக வருபவர்கள் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆங்கிலம்  கூட தெரியவில்லையென்றால்  இவர்கள் மருத்துவர்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!  என்ன செய்வது? வங்காள தேசத்துக்காரனுடன் ஆங்கிலம் பேசி பேசி நமது டாக்டர்களுக்கும் அது பரவி விட்டதோ!

இருந்தாலும் இது பெரிய விஷயம் அல்ல.  நில்லுங்கள்! நான் சென்ற மருத்துவமனை எது என்று சொல்லவில்லையே. அந்தக் காலத்தில் அதனை Sakit Jiwa என்றார்கள். இப்போது Psychiatric Hospital  என்கிறார்கள்.  தமிழில் மனநல மருத்துவமனை என்று சொல்லலாம். அநாகரீகமாக  பைத்தியக்கார ஆஸ்பத்திரி எனவும் சொல்லலாம்!

அங்கு பேசுவது அவர்களுக்குத் தான் புரியுமே! அப்புறம் என்ன?

Friday 22 March 2019

அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகரிப்பு..!

எம்.ஆர்.எஸ்.எம். எனப்படும் மாரா அறிவியல் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என அறியும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிரது.

இது ஆரம்பம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான  மாணவர்கள் சேர்வார்கள் என நம்பலாம்.  பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால்  அதன் பின்னர் சேர்க்கை என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது.

இது நாள் வரை நமது மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.  கல்லூரிகளில் இடம் இருந்தும்  இந்திய மாணவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்பதை ஒரு கொள்கையாகவே பல தலைமை ஆசிரியர்கள் வைத்திருந்தார்கள் என்பதும் உண்மை. 

ஒரு தலைமை ஆசிரியரை நான் அறிவேன். அவரது கல்லூரியில் இடம் இருந்தும் இந்திய மாணவர்களுக்கு அங்கு இடம் கொடுப்பதில்லை. அது 'மேலிடத்து' உத்தரவாக இருக்கலாம். முந்தைய ஆட்சியில் 'நாங்கள் வைத்தது தான் சட்டம்!' என்னும் நிலை தான் கல்லுரிகளில் நிலவி வந்தது! கேட்க ஆளில்லை! 

இப்போதைய அரசாங்கம் அதனை மாற்றியிருக்கிறது.  புறநகர் மேம்பாட்டுத்துறை  துணை அமைச்சர் ஆர். சிவராசா அவர்களைப் பாராட்டுகிறோம்.   காரணம் வெறும் பதவி மட்டும் போதாது.  அதனைப் பயன்படுத்த வேண்டும். அவரின் பதவியை வைத்து அவர் பல முயற்சிகளை எடுத்து  இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்.  வாழ்த்துகிறோம். 

கல்லுரிகளில் சேர்ந்து இடை இடையே 'விட்டு ஓடும்!' ' மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மாணவர்களின் இடங்களையும் இந்திய மாணவர்களைக் கொண்டே பூர்த்தி செய்யப்பட வேண்டும்  என்பதையும் கேட்டுக் கொள்ளுகிறோம். 

இடம் கிடைத்தும்  ஏற்க மறுக்கும் மாணவர்களுக்காக நாம் வருந்துகிறோம்.  இத்னை நாம் எதிர்ப்பார்த்தது தான்.  காரணங்கள் பல.  முதலாவது உணவும் ஒரு காரணம்.  சமயமும் ஒரு காரணம். மலாய் மாணவர்களோடு எப்படி ஒத்துப் போவது என்பன போன்ற பல காரணங்களினால் நமது மாணவர்களை விட பெற்றோர்களே அதிகம் கவலைப் படுகின்றனர்!

ஆனால் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் காலப் போக்கில் காணாமல் போய்விடும்!  பக்கத்து வீட்டு மாணவன் போனான்! எதிர் வீட்டு மாணவன் போனான்! பெரியப்பா  மகன் போனான்! அப்புறம் நம்ம வீட்டுப் பையனும் போவான்!  அது வரையில் கொஞ்சம் காலம் எடுக்கும். 

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நமது மாணவர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை!

தேசிய விமானத்தின் நிலை என்ன?

நமது தேசிய விமானமான 'மாஸ்" என்ன நிலையில் உள்ளது? 

கடந்த சில வாரங்களாக பல விதமான செய்திகள். விற்று விடலாம் அல்லது இழுத்து மூடி விடலாம் என்பதாக செய்திகள் வருகின்றன. நஷ்டத்தைத் தாங்கும் அளவுக்கு அரசாங்கத்தில் பணம் இல்லை என்றும் கூறிவிட்டார்கள்.

ஆமாம்! எவ்வளவு தான் பணத்தைக் கொட்டுவது?  விடியலே இல்லையா என்று சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்! எதுவுமே நடக்கவில்லை! உள்நாட்டு, வெளிநாட்டு ஜாம்பவான்கள் எல்லாம் தலைமையேற்றுப் பார்த்துவிட்டார்கள்.  ஊகும்...! கடன் தான் எகிறிக் கொண்டே போகிறதே தவிர எந்த ஒரு தீர்வையும் காண முடியவில்லை!

நிதியமைச்சர் லிம்  குவான் எங் மாஸ் விமான சேவை நிறுத்தப்படாது என்று உறுதி அளித்திருக்கிறார். அதன் அர்த்தம்  சேவை தொடரும் அதே சமயத்தில் கடனும் தொடரும் என்று எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால் ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  இந்தப் பிரச்சனையை நிதி அமைச்சரிடமே விட்டு விட்டால் நல்லது என்றே  நான் நினைக்கிறேன். பெரிய பெரிய சவால்களை எல்லாம் சமாளித்தவர் அவர்.  இது  மட்டும் முடியாதா என்ன? 

விமான சேவை என்பது ஒரு பெரிய வியாபாரம். மற்ற வியாபாரங்களைப் போல அதுவும் ஒரு வியாபாரம். அவ்வளவு தான். அதனை வியாபாரமாகத் தான் கருத வேண்டும். அங்கே புனிதம் என்பதாக ஒன்றுமில்லை! அது வழிபாட்டுத் தலமும் இல்லை! அது வியாபாரம். அதற்கு உள்ள மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்.

மாஸ் விமானத்தின் பலவீனம் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.  அதன் ஊழியர்கள் தான் அதன் பலவீனம் என்றால் அதனைக் களைய வேண்டும். ஏற்கனவே ஓர் இந்தியத் தம்பதியினரால் நடத்தப்பட்ட ஒரு விமான நிறுவனத்தையே  இழுத்து மூடிய பெருமை நம் நாட்டு ஊழியர்களுக்கு உண்டு.  விமான நிறுவனத்தின் நலனை விட ஊழியர்களின் நலனில் - அவர்களின் கட்டுப்பாட்டில் - அனைத்தும் இயங்க வேண்டும் என்று நினைக்கும் ஊழியர்களால் தான் அதிக நட்டத்தை மலேசிய விமான நிறுவனங்கள் எதிர் நோக்குகின்றன எனச் சொல்லலாம்!  மாஸ் விமானத்தின் பலவீனமே அதன் ஊழியர்கள் தான்!

இன்றைய நிலையில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தான் அதனைச் சரிபடுத்த சரியான ஆள்.

தேசிய விமான நிறுவனம் தனது சேவையைத் தொடர நிதி அமைச்சரிடமே விட்டு விடுங்கள்!

அவரே வெற்றியைக் கொண்டு வர முடியும்!

Thursday 21 March 2019

அரசாங்க கல்லுரிகளே சிறந்தது..!

பரிட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்  இந்நேரம் பலர் கல்லுரிகளுக்கும் பல்கலைக்கழகங்களும் விண்ணப்பங்கள் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

வசதியான மாணவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி நாட்டுக் கல்லூரிகளுக்கோ விண்ணப்பங்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள்.  ஆனால் பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த இந்திய சமூகம் உள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரத்தான் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அப்படி இடம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே உள் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்ககில் சேர முயற்சி  செய்வார்கள். 

 பொதுவாக  தனியார் கல்வி நிலையங்களின் கட்டணங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.  ஏழைகளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கல்வி கட்டணங்கள்!  என்னசெய்வது?  பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதால் தங்களது வீட்டுமனைகளை விற்று , சேமநிதி, உற்றார் உறவினருடன் கடன்  என்று பல்வேறு தரப்பிலிருந்து  கடன் பட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைக்க தங்களால் இயன்றதைச்  செய்கிறார்கள்.

நான் தனியார் கால்லூரிகளின் மேல்  நல்ல  எண்ணம் இல்லாதவன். அவர்களின் பள்ளிக் கட்டணங்களை  ஏற்றுக் கொள்ளாதவன்.  என்ன தான் புகழ் பெற்றக் கல்லுரிகளில் படித்தாலும்  அரசாங்க  வேலை என்னும் போது  அந்தக் கல்லுரிகளின் பட்டங்களை  அரசாங்கம்   பொருட்படுத்துவதில்லை.  அரசாங்க கல்லூரிகளின்  பட்டங்களைத்  தான்  அவர்கள்  ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

இந்த நிலையில்  தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள் படிக்கட்டும்.  சீனர் நிறுவனங்கள் தனியார் கல்லுரிகளில் படிப்பவர்களைத் தான் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.  அது  தரமான கல்வி, ஆங்கிலம் பேச முடியும் என்பது தான் அவர்களின் அளவுகோள். இந்திய பட்டதாரிகளைச் சீன நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்பதாகப் பரவலாக பேசப்படுகிறது. அதற்காக சீன மொழித் தேவை  என்பதாக தங்களது விளம்பரங்களில் ஒன்றைச் சேர்த்துக்  கொள்ளுகிறார்கள்.  அதனால்  நமது  மாணவர்கள்  பல வழிகளில்  அடிபடுகிறார்கள்.  அரசாங்கம் என்றால் மலாய் இனத்தவர், தனியார் துறை என்றால் சீன இனத்தவர்.  இந்த நிலையில் அரசாங்க கல்லூரிகளில் படித்தால் ஏதோ ஒரு சில இடங்களாவது வேலை செய்ய நமக்கு வாய்ப்புண்டு.

பணம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் முடிந்த வரை அரசாங்க கல்லூரிகளையே நாடுங்கள். அதுவே சிறந்தது.  இடம் கிடைக்கவில்லை என்று ஏமாந்து விடாதீர்கள்.  முன்பை விட கூடுதலான இடங்கள் இப்போது கிடைக்கும் என நாம் நம்பலாம்.

இனி உங்களுடைய தேர்வு அரசாங்க கல்லூரிகளாக இருக்கட்டும். நாம் அறிவுள்ள சமுதாயாம் அதனை மறந்து விடாதீர்கள்.

Monday 18 March 2019

சமயத்தை இழிவுபடுத்தினால்...?

சமயத்தை  இழிவு படுத்தினால் என்ன நடக்கும்? 

இஸ்லாமிய சமயத்தை இழிவு படுத்தினால் என்ன நடக்கும் என்பதை ஓரளவு நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மற்ற மதங்களை இழிவு படுத்தினால் ....? இன்னும் சரியான பதில் ... யாரிடமும் இல்லை. அதாவது எதுவும் நடக்கப் போவதில்லை என்பதே பாலரது எண்ணம். அதுவும் இந்து சமயத்தை இழிவு படுத்தினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதாகவே கடந்த காலங்களில் நமது எண்ணமாகவே இருந்தது!

சமீபத்தில் ஓரு முன்னாள் புகைப்படக்காரர் இந்து மதத்தை இழிவுபடுத்தி தனது முகநூலில் எழுதியதற்காக அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

முதலில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் பின்னர் அவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.   குற்றத்தை ஒப்புக் கொண்டு,  பின்னர் 'நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை!' என்றால் என்ன அர்த்தம்?

நாமும் கொஞ்சம் ஊகித்துப் பார்க்கலாம். முதலில் அவர் ஒப்புக் கொண்டது அவரின் சொந்த முடிவு.   பின்னர் அவர் ஒப்புக் கொள்ளாதது வேறு யாரோ செய்த முடிவை  அவர் ஒப்புவிக்கிறார்! அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது.

இதில் ஏதோ அரசியல் ஊடுருவல் இருப்பதாகாவே நாம் எண்ண வேண்டியுள்ளது. காரணம் அரசாங்கம் எதனைச் செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்பதாக ஒரு தரப்பு வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதை சமீப காலமாக  நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அவர்கள் நோக்கம் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும்.  ஆர்பாட்டங்களை ஏற்படுத்தி நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டும்./  இது தான் அவர்களது நோக்கம். 

இஸ்லாத்தை அவமதிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்து சமயத்தை அவமதித்தால், இழிவு படுத்தினால் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் என்ன நடக்கிறது பார்ப்போமே என்கிற ஒரு நிலையை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைச் செய்ய நினைக்கிறார்கள். 

நீதிமன்றத்தின் நிலைப்பாடு நமக்குத் தெரியாது. ஆனால் சமயத்தை இழிவுப் படுத்துபவர்கள் மீது  கடுமையான  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடுமில்லை.

சமயம் என்பது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்.  சமயத்தின் மூலம் நாட்டில் அமைதியின்மையைக் குலைப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயம்.  இந்த ஆபத்தை விளைவிப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பது நமக்குத் தெரியும். பதவிகளுக்காக அவர்கள் எதனையும் செய்வார்கள்.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். சமயத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் ஆபத்தானவர்கள்.  இந்த ஆபத்தானவர்களை நாம் எளிதில் விட்டு விட முடியாது. ஏதோ ஒப்புக்காக தண்டனைகளைக் கொடுக்க முடியாது. நீண்ட கால சிறைத் தண்டனை மட்டும் அல்ல  அவர்கள் எல்லாத் தண்டனைகளுக்கும் உரியவர்கள். 

அரசாங்கம் சமயத்தை இழிவு படுத்தும் நபர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

சமயத்தை இழிவு படுத்துபவர்கள் இழி நிலையினர்! இந்த இழிப்பிறவிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்>

பெற்றோர்களே! நீங்களே பொறுப்பு!

பரிட்சை முடிவுகள் வெளியாகி விட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்.   வெற்றி பெற்ற மாணவர்கள் இனி பல்கலைக்கழகங்கள், கல்லுரிகள் என மேற் கல்வியை நோக்கிப் படையெடுப்பார்கள்.  

எல்லாருக்குமே நமது வாழ்த்துகள். மேற் படிப்பு படிக்க ஒரு சிலரால் முடியும்.  பலரால் முடியாது. கலிவிக்கடன் ஒரு சிலருக்குக் கிடைக்கும்; பலருக்குக் கிடைக்காது! இதையெல்லாம் மீறித் தான் நமது மாணவர்கள் மேற் கல்வியைத் தொடர்கிறார்கள்.

ஆனாலும் அவர்களைப் பற்றி நாம் பேசப் போவதில்லை.  நமக்குக் கவலையளிக்கும் பிரச்சனை என்பது எஸ்.பி.எம்> பரிட்சையில் தோல்வி அடைந்தவர்களைப் பற்றி தான்.

தோல்வியடைந்தவர்களில் ஒரு சிலர் மட்டும் தான் தொழிற் பயிற்சிகள் பெற விண்ணப்பம் செய்கிறார்கள்.   இது நம்மிடையே உள்ள அறியாமை தான் காரணம். மலாய் இன மாணவர்களில் 95 விழுக்காடு மாணவர்கள் தொழிற் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் இல்லை. 

நமது இன மாணவர்களில் மலாய் மாணவர்களைப் போல தொழிற் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் நமது முன்னேற்றம் யாரும் எதிர்ப்பாராத அளவுக்கு எங்கோ போயிருக்கும்.  

அரசாங்கம் இலவச பயிற்சிகள் கொடுக்கின்றது. . ஆறு மாதங்கள், ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், குறுகிய காலப் பயிற்சி, நீண்ட காலப்பயிற்சி என்று பலப்பல பயிற்சிகள் கொடுப்பதை நாம் பார்க்கிறோம்; கேட்கிறோம்.   இன்னும் ஒரு சில பயிற்சிகளுக்கு அரசாங்கம் மாதாமாதம் குறிபிட்ட ஒரு தொகையை மாணவர்களின் செலவுகளுக்காக கொடுக்கிறார்கள்.

ஆனால் இவைகளையெல்லாம் நாம் ஒதுக்கி விடுகிறோம்.  நமக்கு என்ன தான் வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை! பெற்றோர்களோ தங்களது பிள்ளைகளின் மேல் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பரிட்சையில் தோல்வி அடைந்தால்  அருகில் உள்ள  ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் ஆயிரம் வெள்ளியாவது சம்பளம் கிடைக்குமே என்று நினைக்கிறார்கள்.  கடைசியில் எல்லாவற்றிலுமே அவன் தோல்வி அடைகிறோன். அந்தப் பணம் அவன் குடும்பத்திற்கும் உதவில்லை.  கடைசியில் எதுவும்  கற்காத, கல்வி அறிவு பெறாத-மனிதனாகிவிடுகிறான்!

மாணவர்களின் தோல்விகளில் பெற்றோர்களின் பங்குதான் அதிகம். உங்களுக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் பிள்ளை கல்வி கற்றவனாக இருப்பது  தான் முக்கியம்.

நாம் கல்வி கற்ற சமுதாயமாக, தொழிற் திறன் பெற்ற சமுதாயமாக இருந்தால் மட்டுமே நாம் மரியாதையும் மதிப்பும் பெறுவோம்!

Saturday 16 March 2019

கையெழுத்திலும் ஒரு சாதனை...!

பொதுவாக நம்முடைய கையெழுத்தின்  மேல் நமக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதில்லை! நமது கையெழுத்து நன்றாக அமைய வேண்டுமென்று நாம் அக்கறை எடுப்பதில்லை! என்னவோ எழுத வேண்டும், எழுதித் தோலைவோம் என்று நினைப்பது தவிர வேறு எதுவும் நமது கவனத்திற்கு வருவதில்லை!

ஆனால் நேப்பாளத்தைச் சேர்ந்த ப்ராகிரிட்டி மல்லா என்னும் பெயருடைய, எட்டாம் வகுப்பு படிக்கும் பதினான்கு வயது பள்ளி மாணவி தனது கையெழுத்திலும் ஒரு சாதனையைச் செய்திருக்கிறார். அழகான, முத்து முத்தான கையெழுத்தின் மூலம் பலரின் கவனத்திற்கு வந்திருக்கிறார்.  அந்த கையெழுத்து கையால் எழுதப்பட்டதா அல்லது  தட்டச்சு செய்யப்பட்டதா என்று கணிக்க முடியாத அளவுக்கு அவரின் கையெழுத்து அமைந்திருக்கிறது.

சிறப்பான கையெழுத்து மூலம் பல பரிசுகளும்வென்றிருக்கிறார். நேப்பாள அரசாங்கமே அவருக்குப் பரிசுகள் கொடுத்து அவரைக் கௌரவித்திருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் நமது பள்ளிகளிலும் கையெழுத்துச் சிறப்பாக அமைய  ஒரு தனிப் பாடமே எடுக்கப்பட்டது.   என்னைப் போன்றவர்கள் அதிலும் கூட தேர்ச்சி பெற முடியாமல் தடுமாறினோம்!

சிறப்பான கையெழுத்து மூலம் இப்போது ப்ராகிரிட்டி உலக அளவில் புகழ் பெற்று விட்டார்! வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி விட்டார்! உலகிலேயே சிறந்த கையெழுத்தைக் கொண்டவர் என்னும் பெயரையும் தட்டிக் கொண்டார்! அவருடைய கையெழுத்தைப் பார்த்தால் வருங்காலத்தில் நல்ல வெற்றிகரமான மாணவியாக வருவார் என நம்பலாம். 

இவருடைய தலையெழுத்தே  அவருடைய கையெழுத்துத்  தான்!


Friday 15 March 2019

மீண்டும் ஓர் இடைத் தேர்தல்...!

ஆம்! மீண்டும் ஓர் இடைத் தேர்தல் வந்துவிட்டது.

நெகிரி செம்பிலான், ரந்தோ சட்டமன்ற இடைத் தேர்தல் களை கட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தத் தொகுதி தொடர்ந்தாற் போல பாரிசான் வெற்றி பெற்று வந்த தொகுதி. அதுவும் ம.இ.கா. வினர் பலர் இங்கிருந்து சட்டமன்றத்திற்கு வந்தவர்கள்.

சென்றமுறை தொகுதி சீரமைப்பு நடந்த போது முன்னாள் மந்திரி பெசார், முகமது ஹாசான் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.  முன்னாள் மந்திரி பெசார்,  இன்றைய அம்னோ இடைக்காலத் தலைவர், தேசிய முன்னணியின் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் முகமது ஹாசான். 

பொதுவாகவே ரந்தோ சட்டமன்ற தொகுதி என்பது இந்தியர்களின் தொகுதியாகவே எல்லாக் காலங்களிலும் கருதப்பட்டு வந்தது.  அதிகமான இந்தியர்கள் உள்ள ஒரு தொகுதி.  இன்றைய நிலையில் இந்தியர்களின் வாக்கு வங்கி  27 விழுக்காடும்,   மலாய்க்காரர்கள் 53 விழுக்காடும்,  சீனர்கள் 20 விழுக்காடும்  உள்ளனர்.

இதே தொகுதியில் சென்ற பொதுத் தேர்தலில் பக்காத்தானின் டாக்டர் ஸ்ரீராம் போட்டியிட்டிருந்தால் அவரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியிருப்பார். அப்போது இந்திய வாக்களார்கள் வாழ்வா, சாவா என்னும் மன நிலையில் இருந்தனர். இன்று..?   பக்காத்தான் ஆட்சியைப் பற்றியான விமர்சனங்கள் திருப்திகரமானதாக இல்லை என முணுமுணுக்கப்படுகின்ற வேலையில் இந்தத் தேர்தல் நடபெறுகின்றது. இருந்தாலும் ஒரு வருடமே ஆன நிலையில் பக்காத்தான் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதாகவே இந்தியர்கள் நினைக்கின்றனர்.

அம்னோவின் முகமது ஹாசான் இந்தத் தொகுதியின்  மண்ணின் மைந்தர். ஓரளவு செல்வாக்கோடு திகழ்பவர். நஜிப் செய்த நாச வேலைகளினால் மலாய்க்காரர்களும் பிரிந்து கிடக்கின்றனர். ஆனால் இப்போது அவர்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. 

,முகமது ஹாசான் அம்னோவின் தேசியத் தலைவர் என்று  பார்க்கும்  போது  அம்னோ தரப்பு எப்பாடு பட்டாவது  ரந்தோ தொகுதியை  தக்க  வைத்துக்  கொள்ள  வேண்டும் என நினைப்பது இயல்பு. நிச்சயமாக  அவர்களின்  பெரிய  பெரிய  தலைவர்கள் எல்லாம்   இங்கு வந்து கும்மி  அடிப்பார்கள்!  இனப் பிரச்சனைகளை எழுப்புவார்கள்.  சட்டத்துறை தலைவர் டாமி தோமஸ் ஏன் குர்ரான் மேல் சத்திய பிரமாணம் செய்யவில்லை என்று கேள்விகளைத் தொடுப்பார்கள்!  அம்னோ வெற்றி பெறுவதற்கு  வேறு  வழிகள்  ஏதும்  இருப்பதாகத்  தெரியவில்லை!  இப்போது நடப்பது கிறிஸ்துவர்களின் ஆட்சி என்று சொன்னால் தான் அவர்களுக்கு வாக்குகள் விழும்!

இந்த இடைத் தேர்தலில் டாக்டர் ஸ்ரீராம் கடுமையான போட்டியை எதிர் நோக்குகிறார் என்பது திண்ணம். வெற்றி பெற வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை! யார் வெற்றி பெற்றாலும் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவர் என்பது நிச்சயம்!

Thursday 14 March 2019

எதிர்க்கட்சி என நினைப்போ..?

பிரதமர் டாக்டர் மகாதிர் சரியானதொரு கருத்தைச் சொன்னார்.

"காலம் பூராவும் எதிர்கட்சியிலிருந்து கொண்டு எதிர்ப்பு அரசியலையே பேசிப் பேசி இப்போது தாங்கள்அரசாங்கத்தின் ஒரு பகுதியினர்   என்பதை  மறந்து  போய்  இங்கேயும் எதிர்க்கட்சியினரைப் போல நடந்து கொள்ளுகின்றனர்!"  என்பதாக அவர் கூறியிருந்தார்.

உண்மை தான். சமீபத்தில் பேரா ஆட்சி மன்ற உறுப்பினர் அ.சிவநேசன் பேசிய பேச்சு அப்படித்தான் நம்மை நினைக்க வைக்கிறது! அவர் பேசியது தவறு என்று நாம் சொல்லவில்லை.  ஆனால் இந்த ஹீரோ வேஷம் எல்லாம் வேண்டாம் என்பது தான்.

அவர் பிரதமர் துறை துணையமைச்சர் வேதமூர்த்தியைக் குறை சொல்லுவதாக  அமைந்திருந்தது அவரது உரை. அவர் கூறினார்: அரசாங்கத்தில் இந்தியர்களின் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க வேதமூர்த்தி என்ன செய்திருக்கிறார், என்ன செய்கிறார்? என்பது தான்.

இதைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.  ஆனால் வேதமூர்த்தியைப் பார்த்து இப்படிக் கேள்வி கேட்பதால் என்ன ஆகப் போகிறது? என்னைக் கேட்டால் இந்தக் கேள்விக்கு வேதமூர்த்தி மட்டும் பொறுப்பல்ல! அனைத்து இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பானவர்கள் தாம்.

சிவநேசன் இப்படி பேசுவது பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகிறது. முந்தைய அமைச்சரவையில் வேதமூர்த்தி  அமைச்சராக இருந்த போது ம.இ.கா.வினர்  முற்றிலுமாக அவரை  உதாசீனப்படுத்தினர். எந்த ஒத்துழைப்பையும் அவர்கள் கொடுக்கவில்லை. அது நமக்குப் புரிகிறது.  ம.இ.கா.வினருக்கு இந்தியர்  நலன்  என்று  ஒன்று  இருப்பதாக அவர்களுக்கே தெரியாது! அப்படித் தான் அவர்கள் வளர்க்கப் பட்டவர்கள்! ஆனால் சிவநேசனோ, வேதமூர்த்தியோ அப்படி அல்ல. இவர்களுக்குச் சுத்த இந்திய ரத்தம், தமிழர் ரத்தம் ஓடுகிறது. அதனால் இவர்களை அந்தக் கும்பலோடு ஒப்பிடக் கூடாது.

சிவநேசன் கேட்ட கேள்வி சரி தான். ஆனால்  என்ன செய்ய வேண்டும்? நம்மைப் பொறுத்தவரை கட்சியை மறந்து விட்டு அனைத்துத் தரப்பினரும் - நாடாளுமன்ற, சட்டமன்ற - உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நமது பிரச்சனைகளுக்குக்   தீர்வு  காண  முயல  வேண்டும். குறிப்பாக அரசாங்க வேலை, குடியுரிமை மற்ற அனைத்தும் பற்றிப் பேசி  அலசி ஆராய வேண்டும். அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு  காண முயல வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் மற்றவர் மேல் கை நீட்டிப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இப்போது நம் முன்னே உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணக் கூடிய பிரச்சனைகள்  தாம்.  ஆனால் அது வேதமூர்த்தியை மட்டும் சார்ந்தது அல்ல. நீங்கள் அனைவரும் சேர்ந்து தீர்க்கக் கூடிய  பிரச்சனைகள் தான். பழைய ம.இ.கா. பாணி அரசியல் வேண்டாம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! அது நமது அரசியல்வாதிகளுக்கும் சேர்த்துத்தான்.

நாம் எதிர்க்கட்சி அல்ல!  ஆளுங்கட்சி!

Tuesday 12 March 2019

சமய அவமதிப்பு...!

இஸ்லாம் அல்லாத பிற சமய அவமதிப்புக்கள் என்பது  நம் நாட்டில் சர்வ  சாதாரணமான விஷயம் என்பது நமக்குத் தெரியாமலில்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது!

அவமதிப்புக்களின் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உண்டு, காவல்துறைக்கு அதிகாரங்கள் உண்டு.ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை! அதே ஒன்றே போதும் அவமதிப்புக்கள் தொடருவதற்கு!

குறிப்பாக காலணிகளில், செருப்புக்களில் இந்து தெய்வங்களின் படங்களை அச்சிட்டு அதனை விநியோகம் செய்திருக்கின்றனர். அதுவும் ஒரு முறை இருமுறை அல்ல, பல முறை! இதனைத் தடுப்பதற்கு சட்டங்கள் பயன்படவில்லை!  காவல்துறை செயல் படவில்லை!

அதனால் இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி அதறகு ஏற்றவாறு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அதற்கென்று தனிப்பிரிவு அமைத்து செயல்பட வேண்டும். ஆக்ககரமான சட்டத்தின் மூலம் அனைத்து அவமதிப்புக்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இது பல்லின மக்கள்,  சமயங்களைச் சார்ந்த ஒரு நாடு. பொதுவாக சமயங்கள் என்றாலே ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளைத் தூண்டுகிற ஒரு விஷயம். சமயங்களில் சிறியது, பெரியது என்றெல்லாம் கிடையாது. ஒவ்வொன்றும் அந்த அந்த சம்யத்தினரின் வழிபாட்டுக்கும், வணக்கத்துக்கும் உரியது தான். அதனால் தான் அத்தனை சமயங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம்மிடையே தொடர்ந்து நம்மோடு பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

நாம் சொல்ல வருவது ஒன்று தான்.  எல்லா சமயங்களுக்கும் அதனதன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும். இந்நாடு சர்வ சமயங்களையும் சார்ந்த ஒரு நாடு. இஸ்லாம் அதிகார்ப்பூர்வ சமயம் என்றாலும் எந்த ஒரு சமயமும் இந்நாட்டிலிருந்து ஒதுக்கப்படவில்லை. அனைத்து சமயங்களும் அரசாங்கத்தின் அரவணைப்போடு வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன!

நமக்குத் தேவை எல்லாம் அதற்கு சரியான ஒரு பாதுகாப்பு. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆகி விட முடியாது! நமக்கு யாரும் சட்டாம் பிள்ளைகள் வேண்டாம்!  நமது சமயத்தை வழி நடத்த மற்ற சமயத்தினர் வேண்டாம். 

எந்த ஒரு சமயமும் அவமதிக்கப்பட்டால் அதற்கான தண்டனை மிக அவசியம். அது சட்டத்தின் மூலம் வர வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.

சமய அவமதிப்பு  கண்காணிக்கப்பட வேண்டும்! வேரறுக்கப்பட வேண்டும்!

Monday 11 March 2019

ஆசிரியர் பற்றாக்குறை தான் காரணமா...?

தேசியப் பள்ளிகளில் பெரும்பாலான பெற்றோர்கள்  கணக்குப் பாடமும் விஞ்ஞானமும்  ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதாகப் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் ஒரு சிலர் அதனை எதிர்க்கவும் செய்கிறார்கள் என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதனால் அந்த இரண்டு பாடங்களையும் இரு மொழிகளில் அதாவது தேசிய மொழியிலும் ஆங்கிலத்திலும் படித்துக் கொடுக்க வேண்டியது அமைச்சின் கடமையாகிவிட்டது.

நமக்கும் அவர்களின் பிரச்சனைப் புரிகிறது. பொதுவாக  பெற்றோர்கள் கணிதம், விஞ்ஞானம்  போன்ற  பாடங்களை ஆங்கிலத்தில்  கற்றுக்  கொடுப்பதையே  விரும்புவார்கள். பல காரணங்கள் உண்டு.  குறிப்பாக  உலக அளவில் போட்டியிடும் போது  விஞ்ஞான  இதழ்கள்  அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருகின்றன. அதற்கு நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும்.  அதனைப் பள்ளிகளில் இளம் வயதிலேயே கற்கும்  போது அவர்கள் எந்தவித சிரமத்தையும் எதிர் நோக்க மாட்டார்கள். 

அந்தக் கால காலனிய ஆட்சியில்  அரசாங்க  வேலைக்குத்  தேவைப்பட்ட வேலையாள்களைப்  பள்ளிகள் உருவாக்கின. அதுவும் ஆங்கில வழி கல்வியின் மூலம். அது அந்த நேரத்தில் தேவையாக இருந்தது. பின்னர் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. 

ஆங்கிலம் நமக்குப் புதிய மொழி அல்ல. பின்னர் வந்த கல்வித் துறை மாற்றங்களில் ஆங்கிலம் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டது.  காரணம் மலாய் மாணவர்களின் திறமையைக் கேள்விக் குறியாக ஆக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர்கள் ஆங்கில மொழியைக் கற்க இயலாதவர்கள் என்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.

அதன் பலன் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலத்தில் படித்துக் கொடுக்க  இன்று மலாய் ஆசிரியர்கள் இல்லை! ஆங்கில மொழி சம்பந்தப்பட்ட அனைத்தும் மலாய் ஆசிரியர்களே படித்துக் கொடுக்க வேண்டும் என்பது கல்வி அமைச்சின் கொள்கை என்பதால் இன்று தேர்ச்சிப் பெற்ற மலாய் ஆசிரியர்கள் யாரும் இல்லை!  இன்று பல மலாய் ஆசிரியர்கள் ஆங்கில மொழியை மலாய் மொழியில் தான் படித்துக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மை!

இன்றும் ஆசிரியர் கல்லூரிகளில் ஆங்கில மொழியைக் கற்க மலாய் மாணவர்கள் தயாராக இல்லை! அதனால் பள்ளிகளில் ஆங்கிலம் படித்துக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை! 

ஆக,  இந்த ஆசிரியர் பற்றாக்குறை என்பது கல்வி அமைச்சால்  செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தான் உண்மை! எங்கோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அது வரை ஆங்கிலத்தைத் தள்ளி வைக்க வேண்டியது தான்!

Friday 8 March 2019

......குல நாசம்!

பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவர், டான்ஸ்ரீ நடராஜாவைப் பற்றியான சமீபத்திய செய்திகள் கவலையைத் தருகின்றன.

நீண்ட காலமாக அந்த ஆலயத்தை வழி நடத்தி வருபவர். இதற்கு முன்னர் அவரைப் பற்றி பல குறைபாடுகள் நம் முன்னே எழுந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம்  எந்த வித ஆதாரமும் இல்லை  என்பதாகச் சட்டம்  அவருக்குத் துணையாக இருந்தது. ஆனால் அதே சட்டம் அவருக்கு இப்போது எதிராக நிற்கிறது! இதைத்தான்  காலத்தின் கோலம் என்பதோ!

ஆனாலும் ஒரு சில விஷயங்களில் நான் இன்னும் தெளிவு பெறாதவனாகவே இருக்கிறேன். "கோவில் சொத்து குல நாசம்" என சொல்லுவதுண்டு. இதனை அறியாமலா இத்தனை ஆண்டுகள்  அவர்  இந்துக்களின் முதல் நிலை கோயிலான பத்துமலையை வழி நடத்தி வந்திருக்கிறார் என்னும் கேள்வி  எழத்தான் செய்கிறது.

ஒரு நிகழ்ச்சி இன்னும் எனது நினைவில் அப்படியே நிற்கிறது. ஒரு சிறிய கோவிலுக்குத்  தலைவராக இருந்த மனிதர் ஒருவர் பணம் கையாடுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  குற்றம் முணு முணுக்கப்பட்டதே தவிர  அவரை எதிர்த்துப் பேச  யாருக்கும் தைரியம் இல்லை. அவர் இருக்கும் வரை அவர் தான் தலைவர். பின்னர் கால மாற்றத்தில் அவரும் ஓய்வு பெற்றார். மக்களும் அவரை மறந்து போனார்கள்.  

ஒரு சில ஆண்டுகளுக்குப்  பின்னர்  நான் அவரை  சந்தித்த போது  அவர் போவோர் வருவோரிடம்  பிச்சை எடுத்துக்  கொண்டிருந்தார். அப்போது நான் பள்ளி மாணவன். என்னை அவர் அறியவில்லை.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை என்னால் இன்னும்   மறக்க முடியவில்லை.   வேலையில்  இருந்த போது ஓரு கம்பீரமான மனிதராக வலம் வந்தவர். கடைசி காலத்தில் அவர் அந்த நிலைமைக்கு ஆளானார். இதில் இன்னொரு வருத்தமான செய்தி.   அவரது மகனும் அதே பிச்சை எடுக்கும் நிலைமைக்குப் பின்னர் ஆளானார் என்பது தான்.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை தெய்வம் நின்று தான் கொல்லுமோ?  கோவில் சொத்தை அனுபவிப்பவன் தலை நிமிர்ந்து நடக்கிறான்!  கேட்பாரில்லை! நாலு அரசியல்வாதிகளைக் கையில்  போட்டுக் கொள்ளுகிறான்.  இனி தனக்கு அழிவில்லை! பாதுகாப்பு கொடுக்க ஆள் இருக்கிறார்கள்  என்று மம்மதையோடு  நடந்து கொள்ளுகிறான்! பட்டம், பதவிக்கெல்லாம் சிபாரிசு செய்ய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்!   இது  தான்  நம்  கண் முன்னே நடக்கின்ற அன்றாட நிகழ்வுகள்!

டான்ஸ்ரீ நடராஜா ஒன்றுமே அறியாதவர் அல்லர். கோவில் சொத்து குல நாசம் என்பதை அறியாதவர் அல்லர். மலேசிய நாட்டின் இந்துக்களின் தலையாய கோவிலை நிர்வாகம் செய்பவர். 

இருந்தாலும்  நம்மால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. சட்டம்  தனது  கடமையைச்  செய்யட்டும்.  தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான்  ஆக வேண்டும். இதில் பெரியவன் சிறியவன் என்று யாருமில்லை. சட்டத்தின் முன்னே யாவரும் சமம்.

ஆனாலும் இன்னும் சொல்லுகிறேன்: கோவில் சொத்து குல நாசம்!

Tuesday 5 March 2019

பாரிசான் வெற்றி...!

செமினி இடைத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றது! இது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா? 

இந்த இடைத் தேர்தலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் பக்காத்தான் வெற்றி பெறலாம்  என நான் நினைத்தேன்.  காரணம் அம்னோவும், பாஸ் கட்சியின் கூட்டும் பலமானவை என்பது தெரியும்.  அவர்கள் வெற்றி பெற்றார்கள், வாழ்த்துகள்! 

பாரிசான் அறுபது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி. பாஸ் ஏறக்குறைய மாநிலக் கட்சி என சொல்லலாம். ஆனால் பாஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை அமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லாத ஒரு கட்சி. மற்ற கட்சிகளுடன்  கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டாலும் அது எந்தக் காலத்திலும் நடக்கவில்லை!

பாஸ் இதறகு முன்பும் பல தடவை  அம்னோவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டாலும்  அது நடக்கவில்லை! காரணம் அம்னோ பாஸ் கட்சியை பல தடவை முதுகில் குத்தியக் கட்சி என்பது அதன் முன்னாள் தலைவர்களுக்குத்  தெரியும்!

இரு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் உண்டு. பாஸ் இஸ்லாம், மலாய் உரிமைகள் என்பதைத் தவிர வேறு எதனையும் அதன் கவனத்தில் கொள்ளுவதில்லை. அவர்கள் அடிக்கடி அதனைத் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பவர்கள்! அம்னோவின் போக்கு வேறு. அவர்களுக்கு ஊழல் தான் முதலிடம்! ஊழல் மேல் கைவைத்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! ஊழலிலேயே ஊறியவர்கள்!

சமீப காலங்களில் பாஸ் கட்சியையும் அம்னோ தங்கள் வசம் இழுத்துக் கொண்டது.  அதன் எதிரொலி தான் சமீபத்தில் பாஸ் கட்சியின் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள்!

இப்போது அம்னோ எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது! அதனால் இது நாள் வரை பாஸ் என்ன பேசி வந்ததோ அதையே அம்னோவும் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது! அது தான் செமினி இடைத் தேர்தலில் ஏற்பட்டது.

ஆம்! முன்னாள் அம்னோ அமைச்சர் பேசிய பேச்சு. உண்மையில் அது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் வர வேண்டியது. சட்டத்துறை தலைவர் குர்ரானில் சத்தியம் செய்யவில்ல என்றால் அவர் எப்படி நேர்மையளராக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்! சட்டம் தெரிந்த ஓர் அமைச்சர் இப்படி பேசியிருப்பதை நம்மால் நம்ப முடியவில்லை தான்! ஆனால் என்ன செய்வது? இப்படிப் பேசினால் தான் தன்னை மக்கள் ஆதரிப்பார்கள் என்னும் நிலைக்கு அம்னோ தள்ளப்பட்டு விட்டது! 

இனி இவர்கள் இப்படித் தான் பேசி பிழப்பை நடத்த வேண்டும்! தேர்தல் ஆணையம் கண்காணிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Saturday 2 March 2019

நம்ம மைக்கா தான்..!

சந்தேகமே இல்லை, நம்ம மைக்கா ஹோல்டிங்ஸ் தான்! 

ஆகா,  நம்ம மைக்காவைப் பற்றி பேசும் போதெல்லாம் என்ன சந்தோஷம்! என்ன மகிழ்ச்சி! நம்ம வீராதி வீரர்கள் எல்லாம் இதோ நம் கண் முன்னே நிற்கிறார்களே!

வேறு எது பற்றிப் பேசினாலும் கிடைக்காத 'கிக்' இந்த மைக்கா பற்றி பேசும் போது மட்டும் அந்த 'கிக்' கிடைத்து விடுகிறதே! அட! யார் யாரோ நம் கண் முன் வந்து விடுகிறார்கள்!

இன்னும் எத்தனை  ஆண்டுகள் போனாலும் இந்த மைக்காவுக்கு முடிவு காலமே இராது போல அல்லவா தோன்றுகிறது!  மைக்காவிற்கு என்றும் பதினாறு தானோ! 

இப்போது இந்தப் பிரச்சனையை "சரவா ரிப்போட்" இணயத்தளம் கையில் எடுத்திருக்கிறது! இத்தனை ஆண்டு காலம் நமக்குக் கிடைக்காத தகவல்கள் எல்லாம் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன!  இன்னும் நிறைய வரும் என எதிர்பார்க்கலாம்!

நான் மேலே சொன்னது போல மைக்கா என்றாலே நிறைய சந்தோஷம், நிறைய தமாஷ்கள் எல்லாம் வரும் என்று சொன்னேன், அதில் பெரிய தமாஷ்! மைக்காவின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான எஸ் வேள்பாரி தனது  செல்லப்பிள்ளையான மைக்காவைப் பற்றி குறிப்பிடும் போது "அந்த நிறுவனம்  நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்த  போது அந்த நிறுவனத்திற்கு நான் தான் பணம் கொடுத்து உதவினேன்" என்கிற அதிர்ச்சித் தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்! இதுவே நமக்குப் புதிய தகவல் தானே!  இத்தனை ஆண்டுகள் வராத தகவல் இப்போது வெளியாகியிருக்கிறதே!  இருந்தாலும் அவரது கடமையுணர்ச்சியைப் பாராட்டுவோம்!

மைக்கா ஹோல்டிங்ஸ் என்பது முடிந்து போன ஒரு பிரச்சனை என்பதாக வேள்பாரி சமீபகாலமாக கூறி வந்திருக்கிறார்,  அது எப்படி? என்னைப் போன்றவர்கள் எல்லாம் அப்படியே தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்! கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் நாங்கள் ஏன்  இது பற்றி பேசிக் கொண்டிருக்கப்  போகிறோம்!

நான் இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன். கிடைக்குமா, கிடைக்காதா என்று. கிடைத்தால் மகிழ்ச்சி! கிடைக்காவிட்டால் அதைவிட மகிழ்ச்சி! காரணம் ஒரு சராசிரியிடம் ஒரு கோடிசுவரன் கடன் வைத்திருந்தால் அது எனக்குக் கேவலம் அல்ல!

இது இப்போது முடிவடையாது என்று தெரிகிறது! பின்ன சும்மாவா! பணம் அல்லவா!