Pages
▼
Thursday, 1 March 2018
ஆடம்பரம் வேண்டாம்!
ஆடம்பரத்தால் அழிந்தவர் பலர். இப்போது அழிந்து கொண்டிருப்பவர்களும் பலர். இனி மேலும் அழிவார்கள் - இது தொடரும்!
காரணம் நமது ஆசை! அளவுக்கு மீறிய ஆசை! எல்லாருக்கும் ஆசைகள் உண்டு. மனிதன் என்றால் அவனுக்கு ஆசை இருக்கத்தான் செய்யும். இருக்கத்தான் வேண்டும். முற்றும் துறந்த முனிவர் கூட அந்தப் பரம்பொருளோடு இணைவது தான் அவரது ஆசையாக இருக்கும்.
ஆசைப்படுவதில் தவறு இல்லை. மலேசியாவின் முதல் நிலை பணக்காரரான ராபர்ட் குவோக் போன்று, உச்சத்தைத் தொட வேண்டும் என்பதில் தவறில்லை. அல்லது ஏர் ஏசியா, டோனி ஃபெர்ணாண்டஸ் போல் பதினேழாவது நிலை பணக்காரர் ஆக வேண்டும் என்பதிலும் தவறில்லை. இவைகளெல்லாம் நம்மாலும் அடையக்கூடியது சாத்தியமே. அதற்கு உழைப்பு, பல்வேறுத் திறன்கள் அந்த உச்சத்திற்குக் கொண்டு போகும்.
ஆனால் கையில் ஒரு கோடியை வைத்துக்கொண்டு 'நான் ராபர்ட் குவோக் போன்று வாழ வேண்டும், டோனி ஃபெர்னாண்டஸ் போல வாழ வேண்டும்' என்று வாழ நினைப்பது சாதாரண ஆசை அல்ல; பேராசையை விட இன்னும் பல படிகள் மேல்! இருப்பதைக் கொண்டு தான் வாழ வேண்டும். இன்னும் உச்சத்தைத் தொட முயற்சிகளைத் தொடரலாம். ஆனால், இடைப்பட்டக் காலத்தில், அவர்களைப் போன்று வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது!
நமது இனத்தினர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. லட்சாதிபதிகளாக ஆக வேண்டும், கோடீஸ்வரர்களாக ஆக வேண்டும். பெரும் பெரும் தொழில்களைச் செய்ய வேண்டும். பெரும் கல்வியாளர்களாக ஆக வேண்டும் என்பதெல்லாம் நம்முடைய இலட்சியங்களாக மாற வேண்டும்.
நாம் பணம் படைத்தவர்களாக மாறுவோம். தவறான வழிகளில் அல்ல. நேர்மையான வழிகளில் நாம் கவனத்தைச் செலுத்துவோம். நமது சமுதாயத்திற்குப் பெருமைகள் சேர்ப்போம்.
ஆடம்பரத்தை வெறுப்போம்! முன்னேற்றத்தை வரவேற்போம்!
No comments:
Post a Comment