Pages

Friday, 3 February 2023

இது விழிப்புணர்வா?

 


இன்று தமிழ்ப்பள்ளிகள் பற்றி பலரும்  பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்திதான். பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில்  சேருங்கள் என்கிறார்கள். பொருளாதார ரீதியில் உதவுங்கள் என்கிறார்கள். சிரமத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்கிறார்கள்.  பள்ளி பஸ்களுக்குக் கட்டணம் கட்ட முடியாத குடும்பங்களுக்குப் பஸ் கட்டணத்தைக் கொடுத்து உதவி செய்யுங்கள் என்கிறார்கள். எல்லாவகை உதவிகளையும் இந்த சமுதாயம் வரவேற்கிறது.

சீனப்  பள்ளிகளுக்கும்  இதே நிலைமை தான் இல்லையென்று சொல்லிவிட முடியாது.  ஆனால் அவர்களின் சமுதாயத்தில் பணம் படைத்த சீன முதலாளிகள் அதனைப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் நமக்கு எந்த செய்தியும் வெளியே கிடைப்பதில்லை. நமது சமுதாயத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை.   அதனால் வெளிப்படையாகவே அறிக்கைகளை விட்டு பள்ளியின் மேம்பாட்டுக்காக,  பணத்தை திரட்டுகிறார்கள்.  நமது சமுதாயத்திலும் ஓர் இஸ்லாமிய வர்த்தகர் இப்படி பல தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி  செய்து வந்தார். இன்னும் பலர் இருக்கலாம். வாழ்த்துகிறோம்!

தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று பார்த்தால் அதன் காரணம் நமக்குப் புரியும். நான் வசிக்கும் இடத்தை எடுத்துக் கொண்டால்  மாணவர்கள் நடந்து போகும் தூரத்திலேயே  தேசியப் பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று ஆரம்பப்பள்ளி இன்னொன்று இடைநிலைப்பள்ளி. இது பெற்றோர்களுக்கு வசதியாக இருக்கிறது. அவர்கள் இங்கு தானே  பிள்ளைகளை அனுப்புவார்கள்! செலவு குறைவு என்பது தான் அவர்கள் கண்களுக்குத் தெரியும்.  ஏழ்மையில் இருப்பவர்களிடம் "பற்று" பற்றியெல்லாம்   பேச முடியுமா?

ஆனாலும் என்னதான் இக்கட்டான சூழலில் இருந்தாலும்  தமிழர்கள் அவர்களின் மொழியை நேசிக்கிறார்கள். அதில் ஏதும் குறையில்லை. ஆனால் தமிழுக்காக வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறீர்களா?  அந்தக்காலத்தில் சாமிவேலு தொடங்கி அப்படியே பார்த்து வந்தீர்களானால் அவர்கள் பிள்ளைகள் யாரும் தமிழ் பள்ளிகளுக்குப் போகவில்லை! 

ஆனால் இப்போதைய நிலையில் கட்டடங்கள் தரமாக இருக்க வேண்டும் என்று படித்த பெற்றோர்கள் நினைக்கின்றனர். அது தவறில்லை. அதனால் தான் தரமான கட்டடங்கள் கொண்ட பள்ளிகள்  இப்போது தமிழ் மாணவர்களால் நிரம்பி வழிகின்றன! அத்தோடு பல பெற்றோரிடையே நாம் தமிழர்கள் என்கிற உணர்வும் மேலோங்கி நிற்கின்றன.

அதனால் நம் பெற்றோரிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சமுதாய நோக்கம் உள்ள பல நல்ல உள்ளங்கள் "தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு"  என்று தொடர்ந்தாற் போல விதைகளைத் தூவிக் கொண்டு வருகின்றனர். நல்ல முயற்சி! பாராட்டுவோம்!

No comments:

Post a Comment