ஓரு நல்ல காரியம் நடக்கும்போது அதை கெடுக்க ஒரு நாலு பேர் அவசியம் வருவார்கள்!
நமது சமுதாயத்தில் இது சகஜம் தான். ஆனால் அந்த சமுதாயம் என்பது தமிழர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் அறம் சார்ந்து வாழ்பவர்கள். ஒருவனைக் கெடுக்க நமக்கு மனம் வராது. ஆனால் இந்தியர்கள் என்னும் போது தமிழர்கள் மட்டும் அல்லவே! அதனால் அது யாராக இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எஸ்.பி.எம். தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருவர் தங்களின் நேரத்தை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர்கள் ஒருவர் மருத்துவர் மற்றவர் முனைவர். தங்களின் சொந்தப் பணிகளுக்கிடையே இந்த வழிகாட்டுதலையும் நமது மாணவர்களின் நலன் கருதி நல்லதொரு பணியாகச் செய்து வருகிறார்கள்.
அவர்கள் செய்து வரும் பணியை இடைபுகுந்து ஒரு கும்பல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அறியும் போது நமக்குக் கோபம் வரத்தான் செய்யும். நமது இந்திய மாணவர்களுக்கு மெட் ரிகுலேஷன் கல்வியில் தடையாக இருப்பதும் இந்தக் கும்பல் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
யார் யாரோ கல்லூரிகள் நடத்துகிறார்கள். அதில் இந்தியக் கல்வியாளர்களும் அடங்குவர். அதில் நமக்குப் பெருமை தான். ஆனால் அவர்கள் போலி கல்வியாளர்களாக இருக்கக் கூடாது என்பது தான் நாம் விரும்புவது. அவர்கள் பெரும்பாலும் சீன, இந்திய மாணவர்களைத்தான் குறி வைக்கிறார்கள். சீன மாணவர்கள் விரும்புவது கல்வித்தரம் மட்டும் தான். நமது மாணவர்களுக்கு ஏதோ ஒரு பட்டம் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். இந்தியர்களால் நடத்தப்படும் உயர்கல்விக்கூடங்கள் இந்திய மாணவர்களை வைத்து பிழைப்பை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் தான் சில உள்குத்து வேலைகளை அவர்கள் கையாள்கிறார்கள்!. மெட் ரிகுலேஷன் கல்வி நமக்கு எதிராகத்தான் ஆரம்பகால முதலே செயல்பட்டு வருகிறது. நமது அரசியல்வாதிகளும் தனியார் கல்லூரிகளும் கைகோர்த்துச் செயல்படுகின்றனரோ என்கிற ஐயம் நமக்கு உண்டு! நம்முடைய அரசியல்வாதிகளைப் பற்றி நாம் அறியாததா!
நம் மாணவர்களுக்கு நம்முடைய அறிவுரை எல்லாம் உங்களுடைய மேற்கல்விக்கு உண்மையான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுங்கள் என்பது தான். அரசாங்க கல்விக் கூடங்களிலேயே உங்களது கல்வியைத் தொடருங்கள். தனியார் கல்லூரிகள் 'உங்களுக்கு லோன் ஏற்பாடு செய்கிறோம்' என்று சொல்லி உங்களைக் கடன்காரர்களாக ஆக்குவது தான் அவர்களின் பெரும் பணி! தயவு செய்து அவ்வளவு எளிதில் அவர்களின் ஏமாற்றுவேலைகளுக்குப் பணிந்து விடாதீர்கள்.
மாணவர்களே ,உங்களது குறிக்கோள் அரசாங்க கல்லூரிகளாக இருக்கட்டும். பணம் பிடுங்கும் ஆசாமிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள்.
மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் அந்த இரு டாக்டர்களுக்கும் இறைவனின் ஆசி என்றென்றும் இருப்பதாக!
No comments:
Post a Comment