Pages
▼
Saturday, 13 May 2017
நீங்கள் கோழி பிரியரா...?
இப்போது நம்மைச் சுற்றிச்சுற்றி வருகிற வியாதிகள் அனைத்துக்கும் நமது உணவு பழக்கங்களே காரணம். உணவுகள் தான் காரணம் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். ஆனால் என்ன செய்வது? இருக்கின்ற உணவுகளைத் தானே, கிடைக்கின்ற உணவுகளைத் தானே நாம் சாப்பிட முடியும்? வேறு வழி இல்லையே!
"இருக்கின்ற, கிடைக்கின்ற" என்பதெல்லாம் பொறுப்பற்ற பதிலாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டுமே தவிர பொறுப்பற்ற முறையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது. . இது நமது உடல் நலம் சம்பந்தப்பட்டது.
வியாதிகள் நம்மைக் கேட்டு வருவதில்லை. எப்போது வரும், நமது உடம்பில் எத்தனை ஆண்டுகளாக ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தீடீரென்று மருத்துவர்கள் ஏதாவது வியாதியைப் பற்றிச் சொல்லும் போது நாம் அதிர்ச்சி அடைகிறோம். அதிர்ந்து போகிறோம். ஒடிந்து போகிறோம்.
மிகவும் சுறுசுறுப்பான ஒரு மலாய் நண்பரை எனக்குத் தெரியும். வயது ஐம்பத்தைந்துக்குள் இருக்கலாம். எப்போது சிரித்துப் பேசுபவர் சமிபத்தில் மிகவும் சோர்ந்த நிலையில் அவரப் பார்த்தேன். நான் அப்படி அவரைப் பார்த்ததில்லை. தாடி கொஞ்சம் வளர்ந்திருந்தது. "உன்னைப் போலவே எனக்கும் தாடி" என்று சுவாரஸ்யமில்லாமல் என்னைப் பார்த்துப் பேசினார். என்ன காரணம் என்று விசாரித்தேன். "எனக்குப் 'பை பாஸ்' நடக்கப் போகிறது" என்று கொஞ்சம் வருத்ததோடு சொன்னார். நான் அவரைப் பயப்பட வேண்டாம். இந்த மாதிரி இருதய சிகிச்சை எல்லாம் இப்போது சர்வ சாதாரணம்; நவீன சிகிச்சை முறையில் இதுவும் சாதாரணமாகிவிட்டது என்று ஆறுதல் கூறினேன்.
இருந்தாலும் பயம் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் போகக் கூடிய ஒன்றா? அதுவும் இருதய சிகிச்சை!
ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லுவேன். கோழி சாப்பிடுவதில் நமது மலேசியர்கள் போல உலகத்தில் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள். நமது வீடுகளில் வளர்க்கும் கோழிகளை (கம்பத்துக் கோழி) நீங்கள் சாப்பிட்டால் நீங்கள் விதிவிலக்கு! ஆனால் சந்து பொந்துகள், பக்கத்துக் கடைகள், மினி மார்கெட், சுப்பர் மார்கெட் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் விற்கிறார்களே - இறைச்சி கோழி என்கிறார்களே - அந்தக்கோழிப் பிரியர் என்றால் - அதனை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அதனைக் குறைத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் முக்கால்வாசி வியாதிகளுக்கு இந்தக் கோழிகள் தான் முக்கிய காரணம் என்பதை நான் அடித்துச் சொல்லுவேன். இறைச்சிக்காக என்று சொல்லி சராசரியாக வளர வேண்டிய கோழிகளை ஊசிகளைப் போட்டு அவைகளைப் பெருக்க வைப்பதும், மிகவும் அபாயகரமான தீவனங்களைப் போட்டு வளர வைப்பதும் - மிக மிகக் கொடுமையான ஒரு விஷயம். அவைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற உணவுகளாகட்டும், போடுகின்ற ஊசிகளாகட்டும் அனைத்தும் விஷத் தனமை உள்ளவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோழிகள் அனைத்தும் இயற்கையாக வளரவில்லை; நடக்கக் கூட முடியாத ஊனமுற்ற கோழிகள்! சாதாரணமாக வளரும் அந்தக் கோழிக் குஞ்சுகளை, ஊசிகள் போட்டு, உணவுகளைத் திணித்து அவைகளை நடக்க முடியாமல் செய்து, ஊனமாக்கி நாம் சாப்பிட சந்தைகளுக்கு அனுப்புகிறார்களே - கொடுமையிலும் கொடுமை! இந்தக் கோழிகள் சாப்பிடுகின்ற உணவுகள், ஊசிகள் அனைத்தும் நமது உடம்புக்கும் செல்லுகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்!
நாம் இறைச்சிக் கோழி என்கின்ற (பிரைலெர் கோழி) சாப்பிடுகின்ற ஒவ்வொரு கணமும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோழிகளின் மீது என்னன்ன விஷம் திணிக்கப்படுகிறதோ அந்த விஷம் நமது உடலிலும் செலுத்தப்படுகிறது என்பதை மறவாதீர்கள்!
நீங்கள் கோழி பிரியர் என்றால் முடிந்தவரை நாட்டுக் கோழி பக்கம் போங்கள்! முடிந்தவரை உங்கள் வியாதியைக் குறைத்துக் கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment