Pages
▼
Saturday, 28 July 2018
வேலையற்ற வீணர்கள்.....!
பாஸ் கட்சியும் அம்னோவும் சேர்ந்து இப்போது பினாங்கு துணை அமைச்சர் பேராசிரியர் இராமசாமிக்கு நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
பேராசிரியர், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற இந்திய இஸ்லாமியப் போதகர் ஸாகிர் நாயக் வெளியேற்றப்பட வேண்டும் என்று சொன்னார். அவர் நாட்டிற்கு அவர் திருப்பி அனுப்பப்பட வேண்டும். காரணம் பண மோசடி மற்றும் அவரின் தீவிரவாதப் போக்கு என்பது தான் இந்திய அரசாங்கத்தின் அவரின் மேல் உள்ள குற்றச்சாட்டு.
அவர் இன்னும் அங்கு அனுப்பப்படவில்லை என்றாலும் இங்கும் அவர் தேவைப்படாதவர் என்பது தான் நம்முடைய குற்றச்சாட்டு. யாருக்கும் மற்றவர்களின் மதங்களைப் பற்றி விமர்சிக்க உரிமையில்லை.
அது ஸாகிர் நாயக்கிற்கும் பொருந்தும். அவர் இஸ்லாமியத் துறையில் பட்டம் பெற்றவராக இருக்கலாம். அது எந்த வகையிலும் மற்ற மதங்களின் மீதான கருத்துக்களைச் சொல்ல அவருக்கு அதிகாரம் கொடுக்கவில்லை! அவருக்கு அந்த அதிகாரம் இருந்தால் மற்ற மதத்தினரும் அதே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!
ஆனால் இதற்குப் பதில் சொல்ல முடியாத அந்த வேலையற்ற பாஸ், அம்னோ கூட்டம் பேராசிரியர் இராமசாமியின் மீது தாக்குதல்களை மேற் கொண்டிருக்கிறார்கள். அவரைத் தீவிரவாதி என பிரச்சனையைத் திசைத் திருப்புகிறார்கள்! தமிழீழம் என்பது உலகத் தமிழர் பிரச்சனை. அதற்கான ஆதரவு என்பது ஒவ்வொரு தமிழனிடமும் உண்டு. விடுதலைப் புலிகளுடன் கை கோர்க்கிறோம் என்றால் ஈழத்தில் சமாதானம், அமைதி நிலவ வேண்டும் என்கின்ற ஒரே காரணம் தான். அதுவும் பேராசிரியர் போன்றவர்கள் சமாதானத் தூதுவராகத் தான் உலக ரீதியில் கூட்டங்களில் கலந்து கொள்ளுகிறாரே தவிர - ஸாகிரைப் போல - தீவிரவாதத்தைத் தூண்டிவிட அவர் எங்கும் செல்லுவதில்லை!
தமிழ் ஈழம் என்பது ஒரே ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது அல்ல. அது இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் சம்பந்தப்பட்டது தான் தமிழ் இனம். தமிழர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் புலிகளை ஆதரிக்கத்தான் செய்வார்கள். "நாங்கள் முஸ்லிம்கள் அதனால் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம்" என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் நாங்கள் சொல்ல மாட்டோம். காரணம் மனிதம் என்பது மதம் அல்ல, மனித இனம்!
வேலையற்ற வீணர்களுக்கு இது ஒரு விளையாட்டு!
No comments:
Post a Comment