Pages

Sunday, 4 August 2019

கோவில்கள் என்ன மோதுகின்ற இடமா..?

கோவில் திருவிழாக்களில்  குண்டர் கும்பல்கள் மோதிக் கொள்ளுவது என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தியல்ல!~

குண்டர் கும்பல்கள் மோதிக் கொள்ளுவதற்கு ஏன் கோவில் திருவிழாக்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்?  மிகவும் சிக்கலான கேள்வி!

இன்று நேற்று அல்ல! எத்தனையோ  ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.  ஓர் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இரு தோட்டங்களுக்கிடையே நடந்த மோதலை நான் அறிவேன். அதுவும் கோவில் திருவிழா அன்று, இப்போது இரு தோட்டங்களுமே இல்லை! ஒரு வித்தியாசம். தோட்டப்புறத்திலிருந்து போன வாரிசுகள் தட்டாமல் தவறாமல்  அதனை நகர்ப்புறங்களுக்கு நகர்த்தி சென்றுவிட்டனர்! இப்போது அது நகர்ப்புற கலாச்சாரமாகி விட்டது!

கோவில்களில் பெரியவர்கள் அடித்துக் கொள்ளுகிறார்கள்! நீயா நானா பலப்பரிட்சை அவர்களிடையே நடக்கிறது!  அதுவும் கோவில் சொத்துகள் அதிகமிருந்தால் அது நீதிமன்றம் வரை செல்லுகிறது!  பேராசைக்கு அளவே இல்லை! 

ஆனால் இந்த இளைஞர் கூட்டத்திற்கு என்ன கேடு வந்தது?  இவர்கள் ஏன் இப்படி அடித்துக் கொள்ளுகிறார்கள்?  பணம் நோக்கமா? அப்படி சொல்லுவதற்கு இல்லை. இவர்கள் பிரச்சனையே வேறு. அற்ப காரியங்களுக்காக அடித்துக் கொள்ளுகிறவர்கள் இவர்கள்.  அதை விட்டால் அரசியல்வாதி  எவனாவது இவர்களைத் தூண்டி விட்டிருப்பான்! ஒரு காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளின்  தூண்டுதல்களினால் இவர்கள் கொழுத்து கும்மாளம் போட்டனர்! அவர்களே பின்னர் அரசியல்வாதிகளாக மாறினர்! இப்போதும் அரசியல்வாதிகளின் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் இவர்கள் ஆட்டம் போடுகின்றனர்!

ஆனாலும் ஏதோ ஓரிடத்தில் நாம் சரியாக இல்லை. அரசாங்கம் இளைஞர்களுக்கு தொழில்கல்வி கொடுக்கின்றது. அதை விடுங்கள். ஒவ்வொரு கோவில்களிலும் சமய வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. தேவாரம், திருவாசகம் கற்பிக்கப்படுகின்றன. இங்கும் நம்மிடையெ ஒரு பிரச்சனை உண்டு.  பெற்றோர்களின் ஆதரவு சரியாக இல்லை. இவர்களுக்கு யாரையோ பிடிக்கவில்லை என்றால் பிள்ளைகளைக் கோவிலுக்கு அனுப்பமாட்டார்கள். எல்லாம் தொட்டாச்சிணுங்கி வகைகள்! பிள்ளைகளின் நலன் இவர்களுக்கு  முக்கியமானதாகத் தெரியவில்லை.

நம்மிடையே உள்ள பெரிய குறை.  பிள்ளைகளுக்குச் சமய அறிவை நாம் சரியாக ஊட்டவில்லை என்பது தான். ஒன்று கோவிலைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வீட்டில் சொல்லித் தரப்பட வேண்டும்.

சமய அறிவு இல்லாதவரை கோவில்கள் இளைஞர்களின் மோதுகின்ற இடமாகத்தான் இருக்கும். அதுவரை சிறைகள் தான் அவர்களுக்குச் சமா அறிவை ஊட்ட வேண்டும்!

No comments:

Post a Comment