Pages
▼
Thursday, 12 September 2019
நீ தான் தெய்வம்!
மழையோ, வெய்யிலோ, காற்றோ, புயலோ - எதற்கும் அஞ்சாதவர் இந்த ஆசிரியை. இந்தியா, ஓடிஷா மாநிலத்தின், தென்கனல் மாவட்டத்தின் ரதிபாலா ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பாடம் சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியை, பினோதினி சமல். பள்ளியில் சுமார் 53 மாணவர்கள் படிக்கின்றனர்.
பினோதினி ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இப்போது அவருக்கு வயது 49. கடந்த பதினோரு ஆண்டுகளாக அவர் இப்படித்தான் பள்ளிக்குச் செல்லுகிறார். மழை என்றால் கழுத்து அளவு தண்ணிரைக் கடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஒரு கையில் தனது கைப்பையைத் தண்ணீரில் படாமல் தூக்கிக் கொண்டும் ஒரு கையில் தனது சேலையைப் பிடித்துக் கொண்டு நடப்பதும் அவரது தினசரி பயணமாக அமைந்துவிட்டது! துணிகளை மாற்றிக் கொள்ள போதுமான மாற்று உடைகளை பள்ளியிலேயே வைத்திருக்கிறார்.
ஆனாலும் அவரது வேலையில் அவருக்குச் சலிப்பில்லை. மழைக் காலத்தில் பிள்ளைகள் பள்ளிக்கு வராமல் இருக்கலாம், ஏன்?, தலைமையாசிரியர் கூட வேலைக்கு வராமல் போகலாம் ஆனால் பினோதினி டீச்சருக்கு விடுமுறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை! உடல் நலம் சரியில்லை என்றால் கூட அவர் பள்ளிக்கு வராமல் இருந்ததில்லை!
அந்த மாவட்ட இளைஞர் தலைவர் ஒருவர் சொல்லுகிறார்: "ஆண்கள் செய்ய முடியாததைக் கூட அந்த டீச்சர் துணிச்சலாக செய்கிறார். மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கலாம் ஆனால் அந்த டீச்சர் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. அவரது தொழிலில் அந்த அளவு பற்றும் பிள்ளைகள் மேல் பாசமும் கொண்டவர்" என்கிறார்.
ஆனால் அவருக்கு ஒரு குறை உண்டு. எட்டு ஆண்டுகள் பணி புரிந்த பின்னரும் தான் இன்னும் தற்காலிக ஆசிரியராகவே பணியில் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது என்கிறார். தற்காலிகம் என்பதால் அவருடைய சம்பளம் 7,000 ரூபாய்க்கு மேல் ஏறவில்லை. பணியில் உறுதி படுத்தியிருந்தால் இந்நேரம் அவரது சம்பளம் 27,000 ரூபாயாக ஆகியிருக்கும்.
இவரைப் பற்றியான செய்திகள் முகநூலில் வெளியான பின்னரே மாவட்ட ஆட்சியாளரின் காதுகளுக்கு இவரது பிரச்சனை எட்டியிருக்கிறது! நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
இப்படியெல்லாம் ஆசிரியர்களை நாம் எதிர்பார்க்க முடியுமா?
அவர் ஆசிரியர் மட்டும் அல்ல "அம்மா! நீ தெய்வம்!"
No comments:
Post a Comment