Pages
▼
Friday, 15 November 2019
தியான் சுவா வாய் திறக்க வேண்டும்...!
பத்து நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தியான் சுவாக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நடப்பு உறுப்பினர் பிரபாகாரனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும்.
தியான் சுவா இனி பொது தேர்தல்களில் போட்டியிடலாம் என்பதாக நீதிமன்றம் அறிவித்து விட்டது. அதனால் தியான் சுவாவுக்கு தேர்தலில் போட்டியிட எந்தத் தடையுமில்லை.
தியான் சுவாவைப் பற்றி நமக்குத் தெரியும். அவர் தகுதியைப் பற்றி நமக்குத் தெரியும். அவர் ஒரு போராளி என்பது நமக்குத் தெரியும். பிரச்சனைகள் என்றால் முதல் குரல் அவருடையதாகத்தான் இருக்கும்.
ஆனால் இந்த பிரபாகரன் பிரச்சனையில் அவர் அமைதியாக இருப்பதை நம்மால் வரவேற்க முடியவில்லை. ஒரு வேளை அது தலைமைத்துவம் தீர்மானிக்க வேண்டிய ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
ஒரு சிலர் அதனை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியோடு ஒப்பிடுகிறார்கள். அது சரியல்ல. அங்கு வருங்கால பிரதமர் என்னும் உரிமையோடு அன்வார் இவ்ராஹிம் போட்டியிட்டார். அங்கு ஏற்கனவே நடப்பில் இருந்தவர் ஓர் இந்தியர். அத்தொகுதியும் காலங்காலமாக இந்தியர்களின் தொகுதியாக இருந்தது. ஆனால் அது வருங்கால பிரதமரின் தொகுதியாக இருந்ததால் நாம் ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் பத்து நாடாளுமன்ற தொகுதி என்பது வேறு. அது சீனர்களின் தொகுதி. அங்கு ஓர் இந்தியர் வெற்றி பெற வேண்டுமென்றால் முழுமையான சீனர்களின் ஆதரவு வேண்டும். பிரபாகரன் வெற்றி பெற்றதே ஓர் விபத்து. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினால் தியான் சுவா அங்கு போட்டியிட முடியவில்லை. அதனால் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபாகரனை தியான் சுவா ஆதரித்தார்; பி.கே.அர். கட்சியும் அவரை ஆதரித்தது. பிரபாகரன் வெற்றி பெற்றார்! இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் அவர் வைப்புத்தொகையையும் இழந்திருப்பார்! இதெல்லாம் நாம் அறிந்தது தான்.
பிரபகாரனைப் பற்றி நாம் பெரிதாக ஒன்று சொல்ல வரவில்லை. அவர் இந்த தவணையை முடிக்கட்டும் என்று தான் சொல்ல வருகிறோம். அவருடைய தொகுதியில் அவரின் நடவடிக்கைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை நாம் அறியோம். அரசு சாரா அமைப்புக்களுக்கு ஏதேனும் நோக்கங்கள் இருக்கலாம். உண்மையைச் சொன்னால் இந்த அமைப்புக்கள் பாரிசான் கட்சியின் ஆதரவு அமைப்புக்கள்.
இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதனை விடுத்து பிரபாகரனை பயமுறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் காரில் முட்டைகளை வீசி அடிப்பது என்பதெல்லாம் கோழைகளின் செயல்.
தியான், நீங்கள் வாய் திறக்க வேண்டும்!
No comments:
Post a Comment