Pages
▼
Monday, 16 December 2019
என்ன தான் சொல்ல...!
துன் சாமிவேலுவிற்கு "துன்" பட்டம் கொடுத்தது எதனால்?
பல காரணங்கள் இருக்கும். ஆனால் வெளியே பேசப்படுகின்ற காரணங்கள் துன் பட்டம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டால் அந்த நபர் மீது எந்த வழக்கும் போட முடியாது என்பது தான். அது எந்த அளவுக்கு உண்மை என்கிற ஆராய்ச்சியில் நான் ஈடுபடவில்லை. எனக்குத் தெரிந்தது எல்லாம் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதுதான்.
இப்போது அவர் மீது ஒரு வழக்கு. அவர், இன்றைய நிலையில், சிந்திக்க திறனற்றவர் என்பதாக அவரது மகன் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.
நான் நினைத்துப் பார்ப்பதெல்லாம் அவருடைய அன்றைய ம.இ.கா. காலக்கட்டத்தில் நடந்தவைகளைப் பற்றி.
மைக்கா ஹோல்டிங்ஸ் என்றால் அது சாமிவேலூ தான். அவர் தான் ம.இ.கா. அவர் தான் மைக்கா! அதில் ஏதும் கருத்து வேறுபாடிலை.
அந்த காலக் கட்டத்தில் அவருடைய குரலுக்கு எதிர் குரலில்லை. இருக்க முடியாது என்பது தான் உண்மை! அவர் பேசுவதை நாம் தான் கேட்க வேண்டுமே தவிர, நாம் பேசுவதை அவர் கேட்க மாட்டார்!
இந்திய சமுதாயத்திற்காக அவர் தான் சிந்தித்தார்; செயல்பட்டார். அவருடைய செயல்பாடுகள் இந்திய சமுதாயத்திற்குப் போய்ச் சேரவில்லை! போய்ச் சேராமல் அவரே தடையாக இருந்தார்!
இந்திய சமுதாயம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது கைக்குள் இருந்தது! அவர் வைத்தது தான் சட்டம் என்கிற நிலைமை. அந்த காலக் கட்டத்தில்.
அப்போது தான் அவருடைய இரண்டாவது "திருமணம்" நடைப்பெற்றிருக்கிறது! அவர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தான் திருமணம், மைக்கா ஹோல்டிங்ஸ், டெலிகம்ஸ் பங்குகள், டேப், ஏம்ஸ் என்று வரிசையாக வருகின்றன. ஆனால் அத்தனையும் சரிந்து போய் விட்டன! காரணம் என்னவாக இருக்கும்?
நினைத்துப் பார்த்தால் அவருடைய சிந்தனை ஆற்றல் அப்போதே சரிந்து போய் விட்டன என்று தான் சொல்ல வேண்டும்! அதற்கு அந்த திருமணமே சாட்சி! சிந்திக்க திறனற்ற ஒரு மனிதரைத் தான் நாம் பல ஆண்டுகள் தலைவராக வைத்திருந்தோம்! அதன் பலனைத்தான் நாம் இன்னும் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!
இந்த நேரத்தில் நமக்கும் ஒரு கேள்வி உண்டு. உச்சத்தில் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் அவரது குறைந்த சிந்தனை ஆற்றல் என்பது இந்திய சமுதாயத்தை பலவித இழப்புக்கு இழுத்துச் சென்றிருக்கிறது! ஆனால் அதே சமயத்தில் அவரது குடும்பத்திற்கு இலாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது!
நாம் சொல்ல வருவதெல்லாம் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் இந்திய சமுதாயத்திற்கு சென்று சேர வேண்டும் என்பது தான். சிந்திக்க திறனற்ற ஒருவரின் சொத்து அவருடையது அல்ல! அது சமுதாயத்தின் சொத்து.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சரியாக செயல்பட வேண்டிய ஒருவர் தன்னுடைய சிந்திக்கும் திறன் குறைபாட்டால் இந்திய சமுதாயம் இழந்தது ஏராளம்!
அந்த சொத்துக்கள் சமுதாயத்திற்குச் சென்று சேர வேண்டும்!
No comments:
Post a Comment