Pages

Sunday, 5 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (6)

ஆயிரம் முறை சிந்தியுங்கள்!

சந்தேக  மனத்தோடு அல்லது அரைகுறை மனத்தோடு தொழில் செய்ய வராதீர்கள். 

அது தான் சொன்னேன்.  ஆயிரம் முறை சிந்தியுங்கள். உங்களுடைய சுற்றம், உற்றார், சொந்தம், நட்பு என அனைவருடனும் ஆலோசனைக் கெளுங்கள்.  ஒன்று, தோல்வியாளரிடம் எந்த ஓர் ஆலோசனையும் கேட்காதீர்கள்.  அவர்கள் நச்சுக் கிருமிகள். 

ஆயிரம் பேரிடம் ஆலோசனைக் கேட்கலாம் ஆனால் முடிவு உங்களுடையது தான். முடிவு எடுத்த பின்னர் 'அவன் சொன்னான். இவன் சொன்னான்' என்கிற குற்றச்சாட்டுகள் வரக்கூடாது! அது உங்கள் முடிவு. எது நடந்தாலும் அது உங்களுடைய முடிவு.  வெற்றி பெற்றாலும் அது உங்கள் முடிவு. தோல்வி அடைந்தாலும் அது உங்கள் முடிவு. 

ஆனால் தோல்வி அடைவதற்காக யாரும் தொழில் செய்ய வருவதில்லை. வெற்றி தான் குறிக்கோள்.  தொழில் செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே உங்களை வெற்றிகரமான 'தொழிலதிபர்' என்பதாக நினைத்துச் செயல்படுங்கள்!  அதனால் யாரும் கெட்டுப்போகப் போவதில்லை! யாருக்கும் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை! அதெல்லாம் ஒரு வெற்றி மனப்பான்மை. அவ்வளவு தான். நாம் எப்போதுமே நமக்குள்ளே ஒர் உயர்வு மனப்பான்மையை   வைத்துக் கொள்வது நல்லது தானே!

உங்கள் மனம் வெற்றியை நோக்கியே சிந்திக்கட்டும். உங்கள் மனத்தை  வெற்றியாகவே வைத்திருங்கள். 

தொழில் என்றாலே நெருக்கடிகள் வரலாம். சில  நெஞ்சை அடைக்கலாம்.   சிரமத்தை ஏற்படுத்தலாம். சில்லறைத் தனமாக நடந்து கொள்ளலாம்.  அவமானங்கள் நேரலாம். எல்லாமே இருக்கும். அதனை எல்லாம் முறியடித்துத் தான் முன்னேற்றத்தைக் காண வேண்டும்.

நமக்கு வரும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அது நமக்குத் தான் புதிது.  மற்றபடி தொழில் செய்பவர்களுக்கு அது புதிதல்ல. 

உலகெங்கிலும் இலட்சக்கணக்கான பேர் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் எல்லாருமே நம்முடைய ஆரம்ப கால அனுபவங்களை அவர்களும் அனுபவித்திருக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி தான் அவர்கள் இன்று பொருளாதார உலகில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்!   அவர்கள் அம்பானிகளாக இருந்தாலும் சரி ஆனந்த கிருஷ்ணன்களாக இருந்தாலும் சரி நம்முடைய அனுபவங்கள் தான் அவர்களுடைய அனுபவங்களும்!

அதனால் ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஆனால் முடிவு எடுத்துவிட்டால் அது உங்களுடைய முடிவு. முடிவு எடுத்த பின்னர் முன்னோக்கி நகருங்கள்! முன் வைத்த காலை ...முன்னோக்கியே இருக்க வேண்டும்! முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டும்!

முடிவு எடுத்த பின்னர் 'அவன் சொன்னான், இவன் சொன்னான்' என்கிற குற்றச்சாட்டுகள் வேண்டாம்! அது  உங்களுடைய முடிவு. உங்களுடையது மட்டுமே!

No comments:

Post a Comment