Pages
▼
Thursday, 18 June 2020
அமெரிக்க இனவெறி!
அமெரிக்க கோடிசுவரரான டெல் கணேசனைப் பற்றியான ஒரு கட்டுரையை பிபிசி தமிழில் படிக்க நேர்ந்தது.
அமெரிக்காவில் அவருடைய அனுபவங்கள் நம்முடைய அனுபவங்களுடன் ஒத்துப் போவதால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
கணேசன் தமிழ் நாட்டில் திருச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கல்வி பயில அமெரிக்கா சென்றவர். கல்வியை முடித்த பின்னர், கார்களின் மீது உள்ள அபிமானத்தால், கார்களின் தலைநகரான டெட்ராயிட் நகரில் கிறிஸ்லர் கார் நிறுவனத்தில் தனது பணியினைத் தொடங்கினார். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் வெள்ளையர்களுக்குத் தான் பணி உயர்வு கொடுக்கப்பட்டதே தவிர, எவ்வளவு கடுமையாக உழைத்தும், அவருக்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை! தகுதி இல்லாத, அனுபவம் இல்லாத வெள்ளையர்கள் மேலே, மேலே போனார்கள்! ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை. பொறுத்தது போதும் என்று அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
பதினைந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த அனுபவம் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. மெக்சிகன் மாகாணத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். போதுமான பொருளாதார பலமில்லை. வங்கி வங்கியாக ஏறி இறங்கினார். அனைத்தும் ஏமாற்றத்தில் முடிந்தது. அதுவே ஓர் அமெரிக்க வெள்ளையராக இருந்திருந்தால் வங்கியினர் தங்கத் தாம்பாளத்தோடு வரவேற்பு கொடுத்திருப்பர் எனக் கூறுகிறார் கணேசன்.
ஆனாலும் சோர்ந்துவிடவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற வெறி இன்னும் அதிகரித்தது. தனதுவீட்டை அடமானம் வைத்தார். தன்னிடமிருந்த கடன் அட்டைகளை வைத்து எல்லாப் பணத்தையும் எடுத்து பணத்தைத் திரட்டினார். அப்போது, அந்தக் காலக் கட்டத்தில், அவரது நிறுவனம் தயாரித்த மென்பொருளுக்கு ஏகப்பட்ட கிராக்கி உள்ளது என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அங்கும் பெரும் ஏமாற்றம். அவர் அமெரிக்காவைப் பூர்விகமாக கொண்டவர் அல்லர் என்கிற காரணத்தை வைத்து எந்த நிறுவனமும் அவரோடு தொழில் செய்ய விரும்பவில்லை!
இப்படிப் பல ஏமாற்றங்கள்! ஆனாலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்னும் வெறி மட்டும் மனதில் இன்னும் அதிகமாக அவருக்கு ஏற்பட்டது. அடுத்து என்ன செய்வது? இப்போது இன்னும் துல்லியமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அதுவே அவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்தது.
தனது நிறுவனத்தை உள்ளூர் நிறுவனத்துடன் கையகப்படுத்தியதன் மூலம் எல்லா எல்லைகளும் தகர்ந்தன! இனவெறியும் தளர்ந்தது! தொழிலின் விரிவாக்கம் சரியான பாதையில் சென்றது.
அமெரிக்க நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியதன் விளைவால் இப்போது தன்னைப் பற்றியான அமெரிக்கர்களின் பார்வை அடியோடு மாறத் தொடங்கியது! தொழிலும் மாபெரும் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்தது!
இப்போது கணேசன் ஒன்றைக் குறிப்பிடுகிறார்: ஆரம்ப காலத்தில் இனவெறி காரணமாக யார் எனக்குப் பதவி உயர்வு கொடுக்க மறுத்தாரோ, யார் எனக்குச் சம்பள உயர்வு கொடுக்க மறுத்தாரோ அந்த நிறுவனத்தின் மேலாளர் இப்போது என்னிடம் இந்நாள் வரை வேலை செய்து வருகிறார்! இருபது ஆண்டு காலம் என்னைத் துரத்தித் துரத்தி அடித்த இனவெறியும், இனப் பாகுபாடும், பொருளாதார வெற்றியும், புகழும் வந்த பிறகு பெரும்பாலும் மறைந்து விட்டன! வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் பழக்கமே வெற்றிக்கான அறிகுறி! வேறு வழி இல்லை!
எல்லாம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த போது மீண்டும் உலகளாவிய நிலையில் ஏற்பட்ட (2008-2009) பொருளாதார பெருமந்தம் நிறுவனத்தை முடக்கியது. அதனையும் பல்வேறு துறைகளில், நாடுகளில் தொழிலை விரிவுபடுத்தியதன் மூலம் வெற்றிகரமாக சமாளித்தார்! 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன் வசம் இருந்த மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து கைபா (KYYBA) என்கிற பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
இன்று இந்த நிறுவனம் அமெரிக்கா தவிர்த்து கனடா, ரஷ்யா, பெலாரஸ், இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு கிளைகளுடன் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அத்தோடு ஹாலிவூட் சினிமாத் தளத்திலும் களம் இறங்கியிருக்கிறார் கணேசன். இதுவரை நான்கு ஹாலிவூட் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.
இனவெறி தொடருமா என்கிற கேள்விக்கு: அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எப்போது கல்வியும். வேலை வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுகிறதோ அப்போது தான் இது ஒரு முடிவுக்கு வரும்.
"ஒரு காலத்தில் இனவெறியோடு ஸீரோவாக பார்க்கப்பட்ட நான் பொருளாதாரத்தில் வலுவான நிலையை அடைந்த பின்னர் இப்போது ஹீரோவாகப் பார்க்கப்படுகிறேன்!" என்கிறார் கணேசன்.
மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க அவரை வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment