Pages

Saturday, 6 February 2021

டோமியின் புத்தகத்திற்குத் தடையா!

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் எழுதிய "My Story: Justice in the Wilderness"  என்னும் புத்தகம் தடை செய்யப்படும் என வதந்திகள் உலவுகின்றன!


ஆனால் எதுவும் நிச்சயமில்லை.  சராசரி மனிதர்களைப் பொறுத்தவரை அதன் ஆசிரியர் டோமி தாமஸ் அப்படி என்ன ஒன்றும் தெரியாத மனிதரா, அப்படி என்ன எழுதியிருக்கப் போகிறார் என்று தான் நினைப்பார்கள்!

நம்மிடையே ஒரு சாரார் தங்களைப் பற்றி ஒன்றுமே எழுதக் கூடாது, எழுதுவதே ஏதோ நாட்டுக்கு எதிராக  பேசுவது என்பது போல வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்! ஜனநாயக நாட்டில் இப்படிப் பேசுவது, எழுதுவது என்பதெல்லாம் இயல்பு தான்!

டோமி தாமஸ் தனது வாழ்நாளையெல்லாம் தனியார் துறையிலேயே கழித்தவர்.  தனியார் துறையில் இருக்கின்ற ஒழுங்குமுறை வேறு. ஆனால் அவர் அரசாங்கத்தில் பணியாற்றிய போது அந்த ஒழுங்கு முறையெல்லாம் காற்றில் பறந்திருக்கும்! அந்த சூழலில் அவர்களோடு பெயர் போடுவதே ஒரு பெரிய சர்க்கஸ் வேலை!

அவர் சட்டத்துறைத் தலைவராக பணியாற்றியதே இரண்டு ஆண்டுகள் தான். அவர் முழுமையாக ஐந்து ஆண்டுகளை முடித்திருந்தால் அவரைப் பற்றியும் நமக்குக் குறை நிறைகள் தெரியவரும்! எல்லாமே மேலிடத்து  தலையசைப்புக்கு ஏற்றவாறு தான் செயல்பட முடியும் என்பது அவருக்கும் புரியும்!

இந்த புத்தகம் தடை செய்யப்பட்டால் என்ன ஆகிவிடும் என்பது நமக்கு ஒன்றும் புரியவில்லை.  டோமி யால் குறை சொல்லப்பட்ட அனைவரும் அவர் மீது காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்கள். ஒரு சிலர் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார்கள். 

சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த அளவு உரிமைகள் இருக்கும் போது புத்தகத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்று கேட்பதும் நியாயந்தானே! அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். புத்தகத்தை தடை செய்ய வேண்டுமென்றால் அவர் மீதுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்குகள் முக்கியம் என்றால் புத்தகத்தைப் படிக்க அனைத்து மலேசியர்களுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

இந்த புத்தகத்தில் யாரையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல. நீதி எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அவரது நோக்கமாக இருக்கும் என கருதுகிறேன்.

அரசாங்க இரகசியம் என்றால் என்ன? அது சோம்பேறிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு சொல். அவ்வளவு தான்! பெரிதாக ஒன்றுமில்லை!

இடையே ம.நவீன் எழுதிய   "பேய்ச்சி" என்னும் தமிழ் நாவலை தடை செய்தார்கள்! இதன் மூலம் இவர்கள் சாதித்தது என்ன?  தடை செய்தால் மட்டும் அந்த நாவல் கிடைக்காமலா போகும்!

        


தடை செய்யப்பட்ட எந்த புத்தகமாக இருந்தாலும் அதைப் படிக்க வேண்டும் என்பது புத்தகப்பிரியர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்! அது தான் இப்போது நடக்கிறது!

பொறுத்திருந்து பார்ப்போம்! தடையா! மடை'யா என்று!

No comments:

Post a Comment