Pages

Saturday, 2 October 2021

இது அம்னோவின் முடிவு தானா?

அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் முன்னணி கட்சியான அம்னோ தனது கூட்டணியில் ம.இ.கா.வைச் சேர்த்துக் கொள்ளாது என்று பேச்சு அடிபடுவதால் அம்னோ வேறு எந்த இந்திய கட்சியைக் கூட்டணியில்  சேர்த்துக் கொள்ளும் என்கிற கேள்வி எழுகிறது.

அதற்கான போட்டியும் இப்போது ஆரம்பித்துவிட்டது! பல சிறு சிறு இந்திய கட்சிகள் பல இருந்தாலும் நம் கண்ணுக்கு வெகு நாள்களாக தெரியும் கட்சி என்றால் அது ஐ.பி.எப். கட்சி தான். அவர்கள் பல வருடங்களாகவே அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். அவர்களுக்கு எந்த ஆதரவும் அரசாங்க தரப்பிலிருந்து கிடைக்காவிட்டாலும் அவர்கள் தொடர்ந்து வலியச் சென்று ஆதரவு கொடுத்தவர்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவர்களுக்கு ஒரு சில அங்கீகாரங்கள் கிடைத்தன.

அன்று ம.இ.கா. பாரிசானில் ஐ.பி.எப். இணைவதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கொடுத்து வந்ததால் அவர்களால் பாரிசானில இணைய முடியவில்லை. முன்னாள் ம.இ.கா.தலைவர் சாமிவேலு காலத்திலிருந்தே தொடர்ந்த அந்த எதிர்ப்பு இன்று வரை தொடர்கிறது. இன்றும்  ம.இ.கா. தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

இப்படி சொல்லும் போது ம.இ.கா. அளவுக்கு ஐ.பி.எப். கட்சிக்கு இந்தியரிடையே ஆதரவு இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது! ம.இ.கா. வே தள்ளாடும் போது ஐ.பி.எப்.  மட்டும் துள்ளாட்டமா போடும்?  ஒரு மண்ணும் இல்லை! 

அடுத்து பேசப்படுவது யாருக்கும் அறிமுகமாகாத ஒரு கட்சி என்றால் அது மக்கள் சக்தி கட்சி.  கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன். இவர் ஓரளவு மக்களிடையே அறிமுகமானவர். அதற்குக் காரணம் அவருடைய முன்னாள் பிரதமருடனான நெருக்கம். அந்த நெருக்கத்தை வைத்துக் கொண்டு தனது நெருங்கிய நண்பர்களுக்கு செடிக் மூலம்  ஓரளவு உதவியுள்ளார்.

பொதுவாக தனேந்திரனின் ஆரம்பமே சரியாக இல்லை! அவர் இனத் துரோகி என்று கருதப்பட்டவர். ஹின்ராப் இயக்கத்தின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தவர். தீடீரென அரசாங்க ஆதரவாளராக மாறி இந்தியர்களின் முதுகில் குத்தியவர்.  இந்தியர்களின் முதுகில் குத்தியவரை ஓர் இந்தியக் கட்சியின் தலைவராக எப்படி ஏற்றுக்கொள்வது? ஆனால் தன்னை தலைவராகக் காட்டிக் கொள்வதற்கு  அவர் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறார்! மேலும் தனது கட்சியில் வேறு யாரையும் வளரவிடவில்லை. அப்படியே வளரவிட்டாலும் அவன் தமிழனாக இருக்க மாட்டான்! எப்படியோ இந்துக்களின் முதுகில் குத்தியவர். அது தான் அவரது  அடையாளம்!

அவருடைய கட்சியின் இன்றைய நிலை என்பது வெறும் பூஜ்யம் தான். வெறும் பூஜ்யத்தை வைத்துக் கொண்டு "எனக்கு நான்கு நாடாளுமன்றம், ஏழு சட்டமன்றம் வேண்டும் என்கிறார்!" அப்படியே தோற்றுப் போனாலும் அதன் பின்னர் வேறு வழிகளில் பதவிகள் பிடித்துக் கொள்ள அவருக்கு எல்லாத் திறமைகளும் உண்டு! சொந்த இனத்தையே காட்டிக் கொடுப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை!

இந்த இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் வாய்ப்பு அளிப்போம் என்று சொல்லுபவர் அம்னோ தலைவரா அல்லது அம்னோ கட்சியா? அம்னோ தலைவரே தேர்தலில் போட்டி இட முடியுமா என்கிற சந்தேகம் உண்டு! 

இந்த நிலையில் அவரால் எப்படி இந்த இரண்டு கட்சிகளையும் தூக்கிப் பிடிக்க முடியும்? பார்ப்போம்!

No comments:

Post a Comment