Pages

Wednesday, 24 May 2023

விற்பனை குறைந்தது!

 

பழங்களின் அரசன் என்றால் அது டுரியான் பழமாகத்தான் இருக்க வேண்டும். அதன் சுவையைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அதனை அறியாதவர்கள் நாற்றமடிக்கிறது என்பார்கள்! நம்மைப் போன்ற உள்ளுர் வாசிகள் அந்த மணத்தை ஏந்தக் காலத்திலும் மறப்பதில்லை. 

பழங்களின் அரசனுக்கு இப்போது நம்மைப் போலவே சளிகாய்ச்சல் வந்து  விட்டது!  ஆமாம்,  நாம் தான் மழை வெய்யில் என்று  படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம்.  அடித்தால் ஒரே மழை! அடித்தால் ஒரு வெள்ளம்! அடித்தால் ஒரே வெய்யில்! அது நம்மைப் போன்ற மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை.  பழவகைகளையும் பாதிக்கின்றன.

பழவகைகள் என்னன்ன பாதிப்புகளை அனுபவிக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. உற்பத்தியாளர்களுக்குத் தான்  தெரியும்.  இப்போதைக்கு நமக்குத் தெரிந்தது டுரியான் பழம். அவர்கள் தான் வெளியே வந்து தங்களது குமுறல்களைக் கொட்டியிருக்கின்றனர். 

வெய்யிலின் தாக்கம் எந்த அளவுக்கு நம்மைப் பாதித்திருக்கிறதோ அதே அளவு டுரியான் பழங்களையும் பாதித்திருக்கிறது. ஏற்கனவே டுரியான் பழம் என்றாலே "ரொம்ப உஷ்ணம்" என்று நாம் சொல்லுவதுண்டு. வெய்யிலின் பாதிப்பு என்பது ஏற்கனவே நமக்குண்டு.  இதுவும் உஷ்ணம் அதுவும் உஷ்ணம் என்றால்  எப்படி சாப்பிடுவது?

உண்மையில் இது வெய்யில் காலம் என்பதால் மக்கள் டுரியான் பழங்களைச் சாப்பிடுவது  நல்லதல்ல என்கிற ஓர் அளவுகோளை நாம் வைத்திருக்கிறோம். அதனை மீறியும் நம்மால் சாப்பிடவும் முடியாது. டுரியான் என்பது உஷ்ணம் தானா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் சாப்பிட்டபின்னர் உடல் உஷ்ணமாக இருப்பது தெரியும்.  என்னைப்போன்றவர்கள் டுரியான் சாப்பிட்ட பிறகு சோறு சாப்பிட்டு விடுவோம். அதனால் உஷ்ணம் தெரிவதில்லை. அது தான் எனக்குத் தெரிந்த வழி! இல்லாவிட்டால் தூக்கமே வரமால்  போய்விடும்!

இந்த ஆண்டு வெய்யிலின் தாக்கத்தால் டுரியான் பழங்களின்  விளைச்சலும் குறைந்துவிட்டதாகவும் தெரிகிறது.  குறைவான விளைச்சல் என்றால் பழங்களின் விலை ஏற்றமாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அதிகமான உஷ்ணத்தால்  வாங்குபவர்களும் குறைந்துவிட்டனர். இது தற்போதைய நிலை. அவ்வளவு தான்.

ஆனால் எதனையும் முடிந்த முடிபாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.  பழங்கள் இப்போது தான் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது ஆரம்ப கட்டம் தான்.  போகப் போக சூடு பிடிக்கும். மலேசியர்கள் அப்படியெல்லாம் டுரியான் பழங்களைக் கைவிட்டுவிட மாட்டார்கள்!

வெகு விரைவில் விற்பனை அதிகரிக்கும் என நம்பலாம்!

No comments:

Post a Comment