Pages

Thursday, 8 June 2023

கே.கே. நிறுவனத்திற்கு நன்றி!

 

என்ன தான் சொல்லுங்கள். இப்போது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் நாட்டின் ஒவ்வொரு துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அதனை  நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நமது கவலையெல்லாம் உள்நாட்டில் வாழும் நமது இனத்தவர் பற்றி தான். இப்போது நமது தாமான்களில் கொஞ்ச நோட்டம் விட்டால் தெரிந்து கொள்ளலாம்.

தாமான்களில் உள்ள சுப்பர் மார்க்கெட், பேரங்காடி என்று எதனை எடுத்துக் கொண்டாலும் அவர்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர் என்பது துயரமான செய்தி.` இதற்கு முன்னர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விடுமுறை நாள்களில் இந்தப் பேரங்காடிகளில்  ஒரு சில வேலைகளைச் செய்து வருவர். ஏதோ அவர்களால் முடிந்ததைச் சம்பாதித்து கல்லூரி செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர்..  வெளியே அவர்கள் போக வேண்டிய அவசியம் இல்லை.  இன்னும் சில பெண்கள்  வீட்டுக்கு அருகிலேயே இந்தப் பேரங்காடிகள் இருப்பதால் அதுவே அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இப்படி ஓரளவுக்கு தாமானகளில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அது உதவியாக இருக்கும். உள்நாட்டுத் தொழிலாளர்களின் நலனைக் கவனிக்காமல் இங்கேயும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதால் அந்த மக்கள் எங்குப் போவார்கள் என்பதை மனிதவள அமைச்சு கவனிக்க வேண்டும்.

இந்தத் தவற்றினையெல்லாம் யார் செய்கிறார்கள்? நிச்சயமாக அந்தப்பழி என்பது மனிதவள அமைச்சையே சாரும்.  வெளிநாட்டினர் வேலை செய்கின்ற வாய்ப்பு ஒரு சில துறைகளில் இருப்பது நமக்குத் தெரியும். அதுவும் குறிப்பாக  தோட்டத்துறை, கட்டுமானத்துறை. இத்துறைகளில்  ஆட்பற்றாக்குறை என்பது தெரிந்தது தான். ஆனால் நிலைமை என்ன?  இப்போது எல்லாத் துறைகளிலும் ஆட்பற்றாக்குறை  என்று எல்லா முதலாளிமார்களும் கூற ஆரம்பித்துவிட்டனர்!

முதலாளிமார்கள்  இப்படிக் கூறுவதற்கு அடிப்படைக்காரணம்  வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைவான சம்பளம் அல்லது சம்பளமே இல்லை!  அவர்களை இருபத்து நான்கு மணி நேரமும் வேலை வாங்கலாம்!  கேட்க ஆளில்லை என்பது முதலாளிகளுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்கள்  இங்கு வந்த பின்னர் அவர்கள் முற்றிலுமாக முதலாளிகளின் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு நிறுவனம் - கே.கே.நிறுவனம் - தனது நிறுவனங்களில் உள்நாட்டினருக்கே நாங்கள் வேலை கொடுப்போம் என்று கூறினால் நாம் அவர்களைக் கை எடுத்து கும்பிட வேண்டும். வேறு யாருக்கும் அந்தத் துணிச்சல் வரவில்லையே!

சுமார் 680 கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனத்தில் எண்பத்தைந்து விழுக்காட்டினர் மலேசியர்கள்.  ஒரு சிறிய கணக்கு.  ஒரு கிளை அளவில் சுமார் ஐந்து பேர் வேலை செய்தால் கூட அந்நிறுவனத்தில் மலேசியர்கள் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மூவாயிரம் குடும்பங்கள் பிழைக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

மனிதவள  அமைச்சு  எல்லாத்துறைகளிலும்  இது போன்று வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்துவது அது உள்நாட்டவரைப் பாதிக்கும். அதனால் இது போன்ற செயல்களை அமைச்சு கண்காணிக்க வேண்டும்.

மற்ற பேரங்காடிகளும் இவர்களைப் பின்பற்ற வேண்டும்  என்பதே நமது ஆசை!

No comments:

Post a Comment