Pages

Monday, 25 December 2023

இனி பணக்காரர் உணவா?

 

மலேசியர்களின் பிரபல காலை உணவான  ரொட்டி சானாய் இப்போது பணக்காரர்களின் உணவாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது அதன் விலை.

சமீபகாலம் வரை அதன் விலை ரி.ம. 1,50 காசு தான். சில இடங்களில் அதன் விலை ஒரு வெள்ளியாகத்தான் இருந்து வந்தது.  ஏன் நீண்ட காலமாக அதன் விலை ஒரு வெள்ளி தான்.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.  அதன் விலை ஒரு நிலையில் இல்லை.  அவரவர் விருப்பதிற்கு ஏற்ப அதன் விலையை ஏற்றுகின்றனர்  குறைக்கவும் செய்கின்றனர். 

ஒரு மலிவான உணவு என்கிற நிலை மாறி  இப்போது  அதுவும்  விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்ட ரொட்டி சானாய் ஒன்றுக்கு  9.00 (ஒன்பது) வெள்ளி கொடுத்திருக்கிறார்!  அது மட்டுமா?  முட்டை ரொட்டிக்கு  11.00 வெள்ளியும், நாசி லெமாக்கின் விலை 10.00 வெள்ளியுமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு வேளை இந்த உணவு பட்டியல்  விமான நிலையங்களிலோ அல்லது பெரும்  ஹோட்டல்களிலோ என்றால்  நாம் புரிந்து கொள்ளலாம்.  சாதாரண  உணவகங்களில் இந்த விலை என்றால் அதனை ஏற்றுக்கொள்வது  கடினமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போது சாதாராண உணவகங்களும் இப்படித்தான் செய்கின்றன என்பதும் நடைமுறையில் உள்ளன. 

போகிற போக்கைப் பார்த்தால் இதற்கும் கூட அரசாங்கம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்  என்கிற நிலை வரலாம்.  ரொட்டி சானாய், நாசி லெமாக் போன்றவை மிக எளிமையான உணவுகள்.  மிகச் சாதாரண மனிதர்களே அதன் வாடிக்கையாளர்கள்.  அதன் விலையை விருப்பத்திற்கு ஏற்றுவார்களானால்  யார் என்ன செய்ய முடியும்?

எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் உண்டு. விலையேற்றம் என்றால் விருப்பத்திற்கு விலையை ஏற்றுவது அல்ல.

ஒன்று மட்டும் தெரிகிறது. இன்றைய நிலையில் 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்'   என்கிற நிலைமையில் தான் உணவகங்கள் செயல்படுகின்றன.   யார் என்ன சொல்வது என்கிற நிலையில் தான் செயல்படுகின்றன.

ரொட்டி சானாய், நாசிலெமாக் போன்ற காலை உணவுகள்  இனி பணக்காரர் பட்டியலில் சேருமோ!

No comments:

Post a Comment