இனி குப்பைகளைப் பார்த்துக் கொட்டுங்கள்! வருங்காலம், சென்றகாலம் போல் இருக்கப்போவதில்லை.
எங்கே வேண்டுமானாலும் குப்பைகளைக் கொட்டலாம், கேட்பார் யாருமில்லை, நான் செய்வதைச் செய்வேன், எவன் கேட்பது?, போன்ற திமிரான பேச்சுக்களைப் பேசாமல், திமிராக நடந்து கொள்ளாமல், காரில் போகும் போது குப்பைகளைச் சும்மா தூக்கி எறிந்துவிட்டுச் செல்வேன் என்கிற நினைப்பையெல்லாம் ஒரு பக்கம் மூட்டைக்கட்டி வையுங்கள்.
வரப்போகிறது சட்டம். நமக்கு அது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. என்றாலும் வருவதற்கு முன் இப்போதே உங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து எதனையும் சாதித்து விடலாம் என்கிற எண்ணத்தை இப்போதே கைவிடுங்கள். காரணம் இந்த முறை இது கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும்.
காரில் போகும் போது எதையோ தின்றுவிட்டு, பாதி சாப்பிட்டும் பாதி சாப்பிடாமலும் அதனை அப்படியே சாலைகளில் தூக்கி எறிவதும், சாலைகளை ஏதோ குப்பைத் தொட்டிகளைப் போல பயன்படுத்துவதும் அதை எப்படி பார்த்துக் கொண்டே இருப்பது? மேல்நாடுகளில் இப்படி, அப்படி என்று கதை அளப்பவர்கள் இங்கே வந்த பிறகு ஏன் அதனை இங்கே செயல்படுத்த முடிவதில்லை?
நாம் எல்லாவற்றிலும் அலட்சியம் காட்டுகிறோம். குப்பைகளை அதற்கானத் தொட்டிகளில் கூடவா போட அலட்சியம்? வீடுகளில் குப்பை வேண்டாம் என்று நினைத்து, கடைப்பிடிப்பது நல்ல செயல் அதே போல வீட்டுக்கு வெளியேயும் கடைப்பிடிப்பதும் கட்டாயம். அது பொது மக்களின் நலனுக்காக. நாய், பூனை,பறவைகள் நலனுக்காக. எல்லாமே ஒன்றுக்கொன்று சேர்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது.
எப்படியோ சட்டம் வரப்போகிறது. தண்டனை என்பது சமூக சேவை என்கிறார்கள். அது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சட்டம் நடைமுறைக்கு வரும் போது தான் தெரியவரும். அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு எதுவும் சலுகைகள் இருக்கின்றனவா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குப்பைகள் இல்லா சாலைகளை இனி பார்க்கலாம். நம்புங்கள்.
No comments:
Post a Comment