தொழில் பயிற்சிக்கென பல அரசாங்க கல்லூரிகள் இயங்குகின்றன. அங்கும் சான்றிதழ், டிப்ளோமா என்று வழங்கப்படுகின்றன. அங்கு உங்களது திறமைகளைக் காட்டினால் அங்கிருந்தும் மேற்கல்விக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். வாய்ப்பே இல்லை என்று சொல்வதற்கில்லை. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத்தான் தவறி விடுகிறோம். குற்றம் நம்முடையது தான்.
நம் மாணவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. அரசாங்கம் பல்வேறு பயிற்சிகள் கொடுத்தும் நமது மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. நம் மாணவர்கள் பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்கிற தேடல் அவர்களிடம் இல்லை. நமது பெற்றோகளிடமும் இல்லை. பெற்றோர்கள் "வேலைக்குப் போ!" என்று சொல்லுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆமாம், தோல்வி அடைந்தால் அடுத்த கட்டம் அது தானே? அது தான் அவர்களின் புரிதல்!
பெற்றோர்களும் சரி, மாணவர்களும் சரி ஒன்றை உணர வேண்டும். அது சம்பள இடைவெளி தான். குறைந்தபட்சம் நீங்கள் நாற்பது ஆண்டுகள் வேலை செய்யப் போகின்றீர்கள். நீங்கள் தேர்ச்சி பெற்ற வேலையாள் என்றால் உங்கள் சம்பளம் என்பது உயர்ந்த நிலையில் இருக்கும். நீங்கள் B40 என்னும் பட்டியலில் வரமாட்டீர்கள். M40, T20 பட்டியல் வரை உங்கள் வளர்ச்சி இருக்கும். நீங்கள் எந்தவொரு தேர்ச்சி பெறாதவராக இருந்தால் நீங்கள் என்றென்றும் B40 அல்லது அதற்கும் கீழே தான் இருப்பீர்கள். நீங்கள் அனைவராலும் அலட்சியப்படுத்தப்படூவீர்கள். நீங்கள் காலாகாலமும் உங்களை அடிமையாக்கி விடுவார்கள்.
நாம் சொல்ல வருவதெல்லாம் வாய்ப்புக்கள் இருக்கும் போது அதனை ஏன் தவறவிட வேண்டும் என்பது தான். பெரும்பாலான தொழிற்பயிற்சிகள் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், முன்று ஆண்டுகள் வரை போகலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சிகள் உங்களை வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
தோல்வி அடைந்தாலும் வெற்றி தான் உங்கள் இலக்கு என்பதை மறந்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment