ஆறு மாதத்திற்கு ஒரு முறை கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் வருவர். அதில் ஒருவர் வள்ளிபுரம் - யாழ்ப்பாணத் தமிழர். இன்னொருவர் ஹென்ரி - இந்தியத் தமிழர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் என்பார்கள். வள்ளிபுரம் மிகவும் வன்மமாகவே இருப்பார். ஹென்ரி சாந்த சொரூபி. இருவரும் மாறி மாறி வருவர். மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பவர்களோ என்னவோ தெரியவில்லை.
நான் படித்த அந்தப் பள்ளிக்கூடம் இப்போது இல்லை. தோட்ட அலுவலகத்தை பள்ளியாக மாற்றிவிட்டார்கள். இப்போது அது சீன மொழிப்பள்ளியாக மாறிவிட்டது. முன்பு பணிபுரிந்த iஇந்தியத் தொழிலாளர்கள் எல்லாம் தோட்டத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்கள். சீனக் குழந்தைகள் வெளியிலிருந்து வந்து படிக்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் யாரேனும் தோட்டங்களில் வேலை செய்திருக்கிறார்களா? செய்திருக்கிறார்கள். ஆனால் தோட்ட வீடுகளில் வசிப்பதில்லை. அவர்கள் தோட்டத்திற்கு வெளியே காட்டுப்புறங்களில் சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொண்டு தனியாகத்தான் வாழ்வார்கள்.
அப்போது கம்யூனிஸ்ட் பயங்கரவாதம் நாட்டில் தீவிரமாக இருந்த நேரம். ஆனால் நாங்கள் வசித்த தோட்டத்தில் வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை என்றாலும் ஏதோ அரசல்புரசலாக சில செய்திகள் வரும். ஆனால் பயப்படும்படியாக ஒன்றும் தெரியவில்லை.
ஒருநாள் பயப்படும்படியான செய்தி வெளியாகிவிட்டது. தோட்டத்தில் வாட்ச்மேன் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் பெயர் இரத்தினம். அவரை 'எஸஸி' என்பார்கள். நான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது (Home Guard) அதுவே எச்.ஜி. ஆகி பின்னர் எஸ்ஸி ஆக மருவிவிட்டது. அவருடைய வேலையே பயங்கரவாதிகள் தோட்டத்திற்குள் ஊடுருவிடக் கூடாது என்பது தான்.
அவர் வேலை செய்யும் மக்களோடு மக்களாக தோட்டத்தையே வலம் வந்து கொண்டிருப்பார். அப்போது ஒரு நாள் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் அவரைப் போட்டுத்தள்ளி விட்டனர். செய்தி தோட்டத்தில் தீயாய் பரவிவிட்டது. எல்லாரும் அடித்துப்பிடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினோம். அருகே சென்று பார்க்க பயம். சுட்டுத்தள்ளியவர்கள் அவரின் பாதி உடலை தண்ணிரிலும் தலைப்பகுதியை ஓடையின் மேற்புறத்திலும் கிடத்திவிட்டுப் போய்விட்டனர்.
கொடூரமான கொலை தான். அதன் பின்னர் இது போன்ற சம்பவத்தை நான் பார்த்ததில்லை. இப்படி எத்தனை தமிழர்கள் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தனரோ?
சீனர்களைப்பற்றி பேசும் போது அப்போது அங்கு வாழ்ந்த சீனப் பெண்களைப்பற்றி பேசித்தான் ஆக வேண்டும். அவர்களில் சிலர் நடக்கும் போது வேகமாக நடப்பதோ அல்லது ஓடவோ முடியாத நிலையில் இருந்தனர். அவர்கள் பாதங்கள் பாதியாக குறுக்கப்பட்டிருந்தன. அதாவது செயற்கையாகப் பாதத்தை இறுகக்கட்டி அதனை வளரமுடியாதபடி செய்திருந்தனர். காரணம் தெரியவில்லை. பின்னர் நான் தெரிந்து கொண்டது: அதாவது பெண்கள் யாருடனும் ஓடிவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் இப்படி செய்து வைத்திருக்கின்றனராம்! உண்மை என்ன என்பது தெரியவில்லை. அதே மாதிரி ஒரு சில பெண்களை சிரம்பான் பட்டணத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது அந்தப் பழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment