அந்தக் காலகட்டத்தில் ஐந்தடி ஜோசியர்கள் அதிகம். அடிக்கடி தோட்டப்புறங்களுக்குப் படையெடுப்பார்கள். காரணம் ஏமாறும் தமிழர் கூட்டம் தோட்டங்களில் தான் இருந்தார்கள்!
எங்கள் வீட்டில் ஜோசியம் பார்க்கும் பழக்கம் இல்லை. எப்படியோ ஒரு முறை ஜோசியர் ஒருவர் என் கையைப் பிடித்து அவரே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வேறு வழியில்லை. ஆரம்பிக்கும் போதே தூண்டிலை வலிமையாக போட்டுவிட்டார்! "இவனுக்கு ராஜ யோகம்! இங்கிலாந்து அரசர் பிறந்த நேரத்தில் தான் இவனும் பிறந்திருக்கிறான்! வருங்காலத்தில் பெரிய ஆளாக ஆகா! ஓகோ! என்று வருவான்! என்று பொளந்து தள்ளிவிட்டார்! அவருக்குக் கூலி கிடைத்துவிட்டது! அது தானே அவருக்கு வேண்டும்?
இது எப்போது நடந்தது என்பது எனக்குத் தெரியாது. பிற்காலத்தில் ஏதையோ பற்றி பேசும்போது என் தாயார் இது பற்றி சொன்னார். அப்போது கூட எனக்கு ஏழு எட்டு வயது இருக்கும், அவ்வளவு தான். ஆனாலும் ஏதோ ஒன்று அது என்னுள்ளே அப்படியே தங்கிவிட்டது! அதனால் தான் ஒருவன் ஜோசியனாக இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் அது அப்படியே மனதில் படிந்துவிடுகிறது! அந்த ஜோசியர் அப்படி ஒன்றும் உண்மையைச் சொல்லிவிடவில்லை. ஆனால் கேட்க சந்தோஷமாகத் தானே இருந்தது? அதனால் தானே மறக்க முடியவில்லை? அதனால் தான் ஜாதகம் சொல்லும் போது சாதகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
அறிவோம்: ஜாதகம், ஜோதிடம், ஜோசியம், நாடி ஜோசியம்,மரத்தடி ஜோசியம், ஐந்தடி ஜோசியம், கிளி ஜோசியம், மூச்சு ஜோசியம், தாயக்காய், பகடைகாய் - என்று ஜாதகத்தையே கேலிக்குரியதாக ஆக்கிவிட்டார்கள்! இது ஓர் உன்னதமான கலை. அது தமிழர்களின் கலை தான். இந்த உயரிய கலையை நாம் கேலி செய்துவிட்டு அந்தப்பக்கம் போய் சீனர்களின் ஃபெங் சூய் (Feng Shui) பார்க்கிறோம்! சீனர்களின் பல கலைகள் நம்மிடமிருந்து போனவைகள் தான்! நம்முடைய மூலத்தை நாம் மறந்து விட்டோம்! நம்முடைய கலைகளையே பிறரிடமிருந்து நாம் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறோம்!
No comments:
Post a Comment