Thursday, 6 March 2025

கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்! (16)


தமிழிலே இப்படி ஒரு அனுபவமொழி  உண்டு. கண் கண்டதைப் படிப்பவன்  பண்டிதன் ஆவான்  என்று சொல்லுவார்கள்.

அப்படி என்றால் புரிந்து கொள்ளுங்கள். எனது நாட்டம் துப்பறியும் கதைகள், சினிமா இதழ்கள், தமிழ் நேசன், தமிழ் முரசு, தமிழ் மலர்,  புதிது புதிதாக  வரும் மாத இதழ்கள், ஆனந்த விகடன், குமுதம்,கல்கண்டு என்று அனைத்தையும் படிப்பேன். தமிழ் முரசு நாளிதழில் வெளியான  இராதா மணாளனின்  "பாண்டியன் திருமேனி" தொடர், குமுதம் வார இதழிலில் வெளியான சாண்டியனின் "கடல் புறா:",  இந்தியன் மூவிஸ் நியுஸ் மாத இதழில் வெளியான, தமிழ்வாணனின் "மணிமொழி என்னை மறந்துவிடு"  -உள்ளூர் வார மாத இதழ்கள். இப்படி பரவலான வாசிப்பு ஏற்பட்டுவிட்டது.

இப்படி நான் படித்த பத்திரிக்கைகளில்  நானே காசு போட்டு வாங்கிய பத்திரிக்கை என்றால் அது தமிழ்வாணனின் வார இதழான கல்கண்டு மட்டுமே! அதன் விலை அப்போது 15 காசு என்று நினைக்கிறேன். எனது பட்ஜெட்டில் அதற்குமேல்  இடமில்லை! சினிமா இதழ்களை  இதுவரை நான் காசு போட்டு வாங்கியதில்லை. அது போலத்தான் துப்பறியும் கதைகளும்! 

தமிழ் நேசன் நாளிதழை பத்து வயதில்  படிக்க ஆரம்பித்து சுமார் ஐம்பது வருடங்கள் மேல் படித்திருக்கிறேன்.  தமிழ் வாணனின் "கல்கண்டு" வார இதழை பதினாறு வயதில் படிக்க ஆரம்பித்து சுமார் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

இப்படியெல்லாம் நான் படித்தாலும் பள்ளி பாடங்களை நான் மறக்கவில்லை. அப்போது அஞ்சலில் படிக்கும் வசதிகள் இருந்தன. அப்போது சிங்கப்பூரில் இருந்த Stamford College  மிகவும் பிரபலம். அங்கிருந்து நான்  பல  பாடங்களை எடுத்திருக்கிறேன். என்ன பயன்? ஓர் ஆசிரியரின் துணை இல்லாமல் படிப்பது அனைத்தும் வீண்! ஆங்கிலம் எனக்கு முக்கியத் தேவையாக இருந்ததால்  அதன் தொடர்பில் நிறைய அஞ்சல் வழி மூலம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு வெளிநாடுகளில் பேனா நண்பர்கள் அதிகம். நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஒரே காரணம் தான். ஆங்கிலத்தை தவறவிடக் கூடாது என்பது தான்.


அறிவோம்:   அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நேரம். அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அண்ணா நூல் ஒன்றினைப் படித்துக் கொண்டிருந்தார். அண்ணா மருத்தவரை அழைத்து  தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர்,  அறுவை சிகிச்சையை ஒத்திப்போடச் சொன்னாராம்.  அதன் பின்னர் தான் அறுவை சிகிச்சை நடந்ததாம்.


No comments:

Post a Comment