ஆரம்பகால அடையாளக்கார்டுகள் எப்படி இருந்திருக்கும்? மேலே உள்ள படத்தில் உள்ளது போல் இருந்திருக்குமோ? என்னால் உறுதிபடுத்த முடியவில்லை. இது சரியாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். காரணம் ஒரு புகைப்படம் மற்றும் நமது விபரங்கள். அடங்கிய ஓர் அட்டை. அவ்வளவுதான். சரியாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய அடையாளக்கார்டும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அதை நான் நான்காக மடித்து வைத்திருந்ததால் கொஞம் தடுமாற்றம்.
நான் முன்பே குறிப்பிட்டது போல பதிவு இலாக்காவில் வேலை செய்து கொண்டிருந்த அந்தோணி என்கிற அண்ணன் அவரே எனக்கு அடையாளக்கார்டு எடுத்துக் கொடுத்தவர். அவரும் அந்தத் தோட்டத்தில் பெற்றோர்களுடன் தங்கியிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குப் போனதில்லை. போகாமலே அனைத்தும் நடந்தது!
இதைவிட வேறொரு அதிசயத்தையும் சொல்ல வேண்டும். குடியுரிமையைப்பற்றி நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒன்று உண்டு என்கிற விஷயம் கூட தெரியாது. அப்போது பரிட்சை முடிந்த நேரம். வகுப்பில் வெறும் அரட்டையைத் தவிர வேறொன்றுமில்லை.
என்னுடைய நண்பர் இராமன் என்னைவிட ஓரிருவயது மூத்தவர். கொஞ்சம் விபரமானவர். இன்னொரு நண்பர் குணசேகரன். அப்போது இராமன் "வாங்கடா!போய் பிரஜாவுரிமை எடுப்போம்" என்று எங்களைக் கூப்பிட்டார். பிரஜாவுரிமை என்றால் என்னவென்று தெரியாது! சரி என்ன தான் நடக்கும் பார்ப்போமே என்று நாங்கள் முன்று பேருமே அந்த அலுவலகத்திற்குப் போனோம். அங்கு ஒரு சட்டைக்காரர் உட்கார்த்திருந்தார். பெயர் Especkerman. அந்தப் பெயர் இன்னும் ஞாபகத்தில் உள்ளது! மூன்று பேர்களுக்கும் மூன்று பேப்பர்களைக் கொடுத்தார். வலது கையைத் தூக்கிக் கொண்டு படிக்கச் சொன்னார். மூன்று பேரும் சேர்ந்து படித்தோம். மலாய் மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது சத்தியபிரமாணம் என்று நினைக்கிறேன். அங்குள்ள ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார். ஒரு பத்து நிமிடம் கழித்துக் கூப்பிட்டார். எங்கள் மூன்று பேர் கையிலும் பிராஜாவுரிமை! அவ்வளவுதான். முடிந்தது! அதன் மகிமை அப்போது தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது!
என் தந்தையார் ஒரு நெகிரி செம்பிலான் பிரஜை. அவரும் பிரஜாவுரிமைக்காக எங்கும் அலையவில்லை. முன்னாள் ம.இ.கா தலைவர் துன் சம்பந்தன் அவர்களின் ஏற்பாட்டில் எல்லாத் தோட்டங்களிலும் தோட்ட அலுவலகத்திலேயே பிரஜாவுரிமை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார். எங்கள் குடும்பத்தில் யாரும் பிரஜாவுரிமைக்காக எந்த சிரமத்தையும் அனுபவிக்கவில்லை.
அறிவோம்: இப்போதெல்லாம் புத்தகங்கள் படிப்பவர் குறைவு. விபரம் தெரிந்தவர்கள் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்கள். வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த்திக் கொள்வார்கள். புத்தகங்களில் கிடைக்கப்பெறுகின்ற சிந்தனைகள், அறிவுரைகள் அனைத்தும் அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டுகின்றன. நமது நாட்டில், அதுவும் குறிப்பாக பெண்கள் வாசிக்கின்ற பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment