Pages

Sunday, 27 April 2025

உத்தாம் சிங் பஸ், கணேசன் பஸ் (30)


 பேரூந்தில் எனது முதல் பயணம் என்றால் அது "உத்தாம் சிங்"  பேரூந்து தான்.  

இந்தப் பேருந்து  மட்டும் தான்  சிரம்பான் - போர்ட்டிகக்சன்  பாதையில் அந்தக் காலத்தில் ஓடிய  ஒரே பேருந்து  நிறுவனம். நான் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில  படிக்கின்ற போது  நான் முதன் முதலாக ஏறிய பஸ்  இந்த உத்தாம்சிங் பஸ் தான்.
 
இந்த நிறுவனத்தின் அலுவலகம் சிரம்பான் பட்டணத்தில் இருந்தது. ஒவ்வொரு மாதமும் அங்கு போய் தான் அதற்கான பாஸ் எடுக்க வேண்டும். அந்த  நேரத்தில் அவர்களிடம் எத்தனை  பேருந்துகள் இருந்தன என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் ஒரே ஒரு பேருந்தில் தான் நாங்கள் பயணம் செய்வோம். அந்த பஞ்சாபி ஓட்டுநர்  கூடவே வேலை செய்யும்  ஊழியரை "டேய்! நாரதமுனி!" என்று தான் கூப்பிடுவார்! நாரதமுனி என்றால் அப்போது தெரியவில்லை  பிறகு தான் அது நாரதர் என்று புரிந்தது! சரி, நாரதர் தான் எல்லா காலங்களிலும் இருக்கின்றனரே, என்ன செய்ய?

அப்போது இன்னொரு நிறுவனமும் ரந்தாவ்-சிரம்பான் வழியில் ஓடிக் கொண்டிருந்தது. அது "கணேசன்" பேருந்து நிறுவனம். இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்  அந்தக் காலத்திலேயே பேருந்து நிறுவனங்களை  நாம்  நடத்தியிருக்கிறோம் என்கிற பெருமை நமக்கு உண்டு.  இப்போதும் இந்த நிறுவனங்கள் நடப்பதாகவே நான் நினைக்கிறேன். அப்படியென்றால் நாடு முழுவதும் நமது நிறுவனங்கள்  இருந்திருக்கத் தானே வேண்டும்?


அறிவோம்:  புதிய முயற்சிகள் எப்போதுமே நம்மிடம் உண்டு. ஆனால் அதனை அடுத்த உயரத்திற்குக் கொண்டுபோகத்தான்  நம்மிடம் சரியான   வாரிசுகளை உருவாக்கவில்லை.  இந்த குறைபாடு இப்போதும் நம்மிடம் உண்டு.  ஒரே காரணம்: நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம்  என்கிற உயரிய நோக்கம் தான் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறது!



No comments:

Post a Comment