ஜப்பான் காலம் என்றாலே அந்தக் காலத்து மனிதர்களுக்கு நடுக்கும் வரத்தான் செய்யும்.
எனது பெற்றோர்கள் ஏதும் கஷ்டம் அனுபவித்தார்களா என்பது தெரியவில்லை. நான் கேள்விப்பட்டதெல்லாம் எனது சித்தப்பா சயாம் ரயில்பாதை போடப்போனவர் திரும்பவில்லை.
மற்றபடி எனது காலம் முற்றிலுமாக வெள்ளைக்காரன் காலம் தான். எங்கள் வீட்டில் புதிய ஜப்பானிய பண நோட்டுகள் இருந்தன. அதனையெல்லாம் "இனி தேவை இல்லை" என்று அவைகளைப் போட்டு எரித்த சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறது.
எனது குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. நான் பட்டினி இருந்ததில்லை. அப்போது அரிசி உணவு, மரவெள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு இவைகள் தான் முக்கிய உணவுகள். அரிசித் தட்டுப்பாடு இருந்ததா என்பது தெரியவில்லை. என் தாயார் அரிசியில் , ஒவ்வொருநாளும் கற்களைப் பொறுக்கிக் கொண்டிருப்பார். அது தெரியும்.
காலையில் எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டி வியாபாரத்திற்காகப் பசியாறப் போடுவார். புட்டு, தேங்காப்பால் அப்பம், தோசை - அதனால் காலைப் பசியாறல் தினசரி உண்டு. அது போக காலைப் பத்து மணிக்குப் பக்கத்து தோட்டத்திலிருந்து பாய் ஒருவர் (உத்திரபிரதேசத்துக்காரர்) வங்காளி ரொட்டி, இஞ்சித்தண்ணி விற்க வருவார். பள்ளி விடுமுறை நாள்களில் அவருக்காகக் காத்திருப்பேன். அவர் சம்பள நாட்களில் எங்கள் வீட்டில் பணம் வசூலித்து விடுவார்.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் அந்த நேரத்தில் பலருக்குக் கஷ்டம் என்னைப் போன்ற ஒரு சிலர் நோகாமல் வளர்ந்தோம் என்பதற்காகத்தான். எல்லாகாலத்திலும் இது உண்டு. இன்னொன்று தொழில் முயற்சிகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களை வளர்த்துவிடத்தான் ஆளில்லை.
No comments:
Post a Comment