வானொலியில் நான் கேட்ட முதல் சினிமா பாடல் என்றால் அது தான் "ஓரிடந்தனிலே... நிலையில்லா உலகினிலே.....!" என்கிற வேலைக்காரி படத்தில் பி.லீலா மற்றும் ஜானகி பாடிய பாடல். உடுமலை நாராயணகவி வரிகள். (படம் 1949-ல் வெளியானது) நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை.
அப்போதெல்லாம் வீடுகளில் வானொலி பெட்டிகள் இல்லாத காலம். அந்த காலகட்டத்தில் தான் தோட்ட மக்களின் 'நலனுக்காக' அவர்கள் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, எல்லாரும் பயனடைய வேண்டும் என்பதற்காக, பொதுவான இடத்தில், ஒலிபெருக்கி வசதியுடன் வானொலி ஒன்றை நிர்வாகம் அமைத்துக் கொடுத்தது.
அப்போது நான் கேட்ட முதல் பாடல் தான் மேலே குறிப்பிட்ட பாடல். அப்படியென்றால் நான் பார்த்த முதல் சினிமா படம் எதுவாக இருக்கும்? அதையும் சொல்லிவிடுகிறேன். போர்ட் டிக்சனில் ஏதோ ஒரு தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் 'அபூர்வ சகோதரர்கள்'. எம்.கே.ராதா (இரட்டை வேடம்), பி. பானுமதி நடித்திருந்தனர். படம் ஞாபகத்தில் இல்லை. பானுமதி பாடிய 'லட்டு லட்டு மிட்டாய் வேணுமா?' என்கிற பாடல் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. (1949-ல் வெளியான படம்) மீண்டும் அந்தப் படத்தை நான் பார்த்ததும் இல்லை.
இந்தக் காலகட்டத்தில் எனது பெற்றோர்கள் வசித்த தோட்டம் என்றால் அது சிலியோவ், போர்ட்டிக்சன் அருகே உள்ள சென்டாயான் தோட்டம். நான் பிறந்தது சிரம்பான் மருத்துவமனையில் (1941) மற்றபடி தமிழ்க்கல்வி அதே தோட்டம் அதன் பின்னர் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில்.
தோட்டப்பள்ளியில் மூன்றாம் வகுப்புக்கு மேல் இல்லை. நான் ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்து ஏழு வயதில் மூன்றாம் வகுப்பை முடித்து விட்டேன்! பள்ளியில் ஒரே ஆசிரியர் மட்டும் தான். அவர் பெயர் அனுகிரகம். பள்ளியில் மாணவர்கள் சுமார் பத்து பேர் இருப்பார்கள். நாங்கள் தான் முதலாம் ஆண்டு மாணவர்கள். மூன்றாம் ஆண்டை முடித்த முதல் மாணவர்கள்! எனக்குத் தெரிந்த முகங்களாக யாருமில்லை. என் வீட்டிலருகிலேயே பள்ளிக்கூடம். பெருசா நடக்க வேண்டிய அவசியமில்லை.
அப்போதைய பாடப்புத்தகங்கள் எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து வருபவை. அதில் வரும் பாடல் ஒன்றின் ஒரு சில வரிகள் "கீச்சு கீச்சு தம்பளம், கியாங் கியாங் தம்பளம்...!" இப்படித்தான் அந்தப் பாடல் போகும். எனக்கு மனனம் என்பது வராது. இப்போதும் கூட ஒரு சினிமா பாடல் கூட எனக்கு முழுமையாகத் தெரியாது! வாசிப்பது எனது பலம் . சொல்வதெழுதல் எனது பலம். கணக்கு எனது பலவீனம்! இந்த மூன்று பாடங்கள் தான் அப்போது சொல்லிக் கொடுத்தார்கள் என நினைக்கிறேன்.
No comments:
Post a Comment