Saturday, 8 February 2025

பிரபா சொல்வது சரிதான்!

 

13-வது மலேசியத் திட்டம் என்பது அதாவது இந்தியர் சம்பந்தப்பட்ட  திட்டங்கள் வெறும்  வாயளவில் தான் இருக்கின்றனவா அல்லது உண்மையில் செயல்படுகின்றனவா என்பது இந்தியர்களுக்குத் தெரியத்தான் வேண்டும்.

அது சரியாகத்தான் செயல்படுகின்றனவா என்பதை தெரிந்துகொள்ள மித்ரா கண்காணிக்க விரும்புவது சரியான முடிவு தான்.  என்ன தான் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.  பிரதமரோ  திடீரென்று ஒரு நாள் நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம்  என்று தான் சொல்லுகிறாரே தவிர,  நமக்கு ஒன்றும் தெரியவில்லை!

இன்றைய நிலையில் டத்தோ ரமணன் மட்டும் தான் தனது அமைச்சு என்ன செய்கிறது என்பதை அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அது எந்த அளவு உண்மை என்று நமக்குத் தெரியாவிட்டாலும்  ஏதோ நடக்கிறது என்கிற உணர்வையாவது  நமக்குத் தருகிறது என்பது மட்டும்  உண்மை.

இப்போது மித்ராவே நாங்கள் அதனைக் கண்காணிக்கிறோம். எங்களுக்கு அந்த அனுமதியைக் கொடுங்கள் என்று கேட்பது நமக்கும் சரி என்று தான் படுகிறது.  இந்தியர்களுக்கான திட்டங்கள் நிறையவே உண்டு.  ஆனால் அது எந்த அளவில் நிறைவேற்றப்படுகிறது என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.

இந்த அனுமதியைக் கொடுக்க வேண்டியது  பொருளாதார அமைச்சு  அவர்களுக்கு அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை என்று தான்  நமக்குத் தோன்றுகிறது. இந்தியர்களின் மீது அக்கறை உள்ள அரசாங்கம் தான் ஒற்றுமை அரசாங்கம்.   ஏமாற்று வேலை ஒன்றுமில்லை என்றால்  அவர்கள்  தயங்குவதற்கு ஒன்றுமில்லை.

மித்ராவின் கண்காணிப்பில்  இருக்க வேண்டும்  என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.  ஆனால் மித்ராவின் தலைவர் பிரபாகரனுக்கு  நமது ஆலோசனை என்னவெனில்:   ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒற்றுமை அரசாங்கம்  இந்தியர்களுக்குச் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும். ஏதாவது  ஒரு காரியம்  செய்து தானே இருப்பார்கள்?  அப்படி வெற்றிகரமாகச் செய்த சாதனைகளைப் பட்டியிலிட்டுக் காண்பிக்க வேண்டும்., அப்படி ஒன்றுமே இல்லையென்றால் "ஒன்றுமில்லை" என்றாவது  இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

கண்காணிப்புக்குழு என்று ஒன்று இல்லாத நிலையில்  மித்ரா அதனை ஏற்றுக்கொள்வதை  நாம் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். யாராவது முன்வர வேண்டும் அல்லவா?  மித்ரா முன் வருகிறது. வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment