Monday 22 April 2024

2500 இடங்களை ஒதுக்குங்கள்!

 

கோலகுபு பாரு இடைத்தேர்தல் நெருங்குகிறது.   இரண்டு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

முக்கியமாக  ஒரு செய்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.   வெற்றிபெற  நமது வாக்குகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.  அதனால் தான் புதிதாக  பல தலைவர்கள் தோன்றி  நம்மிடம் கதை அளந்து கொண்டிருக்கின்றனர். நாமும் சிவனே என்று  அவர்கள் சொல்லுகின்றவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் என்றாலே ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகின்றனர்.  சொன்ன சொல்லை எந்த ஒர் அரசியல்வாதியும்  காப்பாற்றுவதில்லை.   அதுவும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும்  வாக்குறுதிகள் அனைத்தும் காற்றிலேயே அடித்துக்கொண்டு போய்விடுகின்றன!

அதனால் நமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:  இனி அடுத்த மாதம், அடுத்த வருடம், அடுத்த ஐந்து ஆண்டுக்குள்,  ஆய்வு செய்வோம்,  ஆய் செய்வோம்   - இப்படியெல்லா அரசியல்வாதிகள்  பேசினால் அவர்களை விரட்டி அடியுங்கள்!  இனி நமக்கு அடுத்த, அடுத்த, அடுத்த, அடுத்த எதுவும் வேண்டாம்.   இப்போது உங்களால் என்ன முடியும்?  அதைச்  சொல்லுங்கள் என்று கேளுங்கள்.

அரசியல்வாதிகள்  பிரமாண்ட  வாழ்க்கை வாழ வேண்டுமானால் வாழட்டும்.  ஆனால் அவர்களின் பிரமாண்டத்துக்காக நாம் உழைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  நம்மிடையே  இத்தனை பிரச்சனைகள்.  சரி, இப்போது எந்தப் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியும்?   என்று கொக்கி போடுங்கள்.

உணவு பொட்டலங்கள் கொடுத்தால் அதனை அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். அதனைக் கொண்டு போய் சீனர்களிடமும், மலாய்க்காரர்களிடம்  கொடுக்கலாமே.  ஏன் நம்மேல் மட்டும் இவ்வளவு அக்கறை?

இப்போது இதோ ஓர் இடைத்தேர்தல்.  இந்த ஆண்டு மெட் ரிகுலேஷன்  கல்வியில் நமது நிலை என்ன?  நமக்கு ஓர் உறுதியான இடஒதுக்கீடு தேவை.  எல்லாகாலங்களிலும் இதற்காக நாம் போராடிக் கொண்டிருக்க முடியாது.  பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்க முடியாது. மகஜர் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. நமது கோரிக்கை 2500 மாணவர்கள். அதற்கான உறுதிமொழி தேவை. அதற்காக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் இன்றைய அவசரம்.

சரியான பதில் வரவில்லை என்றால்  யாருக்கு வாக்களிப்பது என்பது  உங்களின் தேர்வு.

Sunday 21 April 2024

இது சரியான முடிவுதானா?

 

"அரசியலில் நிரந்தர எதிரியும் இலலை,  நிரந்தர நண்பனும் இல்லை" என்பார்கள். 

ஆனால் ம.இ.கா. வைப் பற்றி   மக்கள் என்ன நினைக்கிறார்கள்?  நிச்சயமாக நிரந்தர இந்தியர்களின் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள்.  அந்த எண்ணம் மாற வாய்ப்பிருக்கிறதா?  நிச்சயமாக இப்போது இல்லை!

ஆளுங்கட்சியில் ஓர் அங்கம் என்பதால் ம.இ.கா.வை கோலகுபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு  அழைப்பது  இயல்பு தான்.  ஆனால் ம.இ.கா. பிரச்சாரத்திற்கு வருவதால்  வரவேற்பு எப்படி இருக்கும்?  நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கப் போவதில்லை!   மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட  ஒரு கட்சி இப்போது 'இந்தியர் நலனுக்காக'  வந்து பிரச்சாரம் செய்தால் அது எடுபடுமா?  ம.இ.கா. வந்தாலே  மக்கள் எட்டிப் போவார்கள் என்பது தான் உண்மை.

பிரதமர் பதவி ஏற்கும் வரை டத்தோஸ்ரீ அன்வார்,  ம.இ.கா.வைப் பற்றிய அவரது நிலைப்பாடு என்ன என்பது  அவருக்கும் தெரியும்; நமக்கும் தெரியும்.   இப்போதும் இந்தியர்களின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை.  இந்த நிலையில் இவர்களின் பிரச்சாரத்தை  இந்தியர்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள்?  வரவேற்பு கிடைக்குமா? வெறுப்பேற்பு  கிடைக்குமா?

இவர்கள் பிரச்சாரம் செய்வதால்  அது ம.இ.கா.வுக்கு நல்லதாக இருக்கலாம்.  காரணம் அவர்கள் இந்தியர்களை நெருங்குவதற்கு அது ஒரு காரணமாக அமையும்.  ஆனால் இந்திய மக்களின் மனநிலை என்ன?  அந்த அறுபது ஆண்டு கால அவலத்தை   மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். அவ்வளவு எளிதில் ம.இ.கா.வின்  கடந்தகாலத்  துரோகங்களை மறந்துவிட முடியுமா?

ம.இ.கா.வைப் பிரச்சாரத்திற்கு அழைப்பது  பி.கே.ஆர். கட்சிக்கு  எப்படிப் பார்த்தாலும் நன்மை பயக்காது.  அது பக்காத்தான் கூட்டணிக்கு  அவப்பெயரைத்தான்  ஏற்படுத்துமே தவிர  நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை.

பிரதமரின் கூட்டணி இப்போது இந்தியரிடையே  சரியான அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் ம.இ.கா. வை அழைப்பது அது இன்னும் அடி வாங்கும்   நிலைக்குத்தான் போகும்!

என்ன செய்வது? இது தான் அரசியல்!  இதனைத் தான் அரசியல் சாணக்கியம் என்கிறார்கள்!  இதற்குச் சாணி அள்ளப்போகலாம்!

Saturday 20 April 2024

இன்னும் பிரச்சனை தீரவில்லை!

நமக்கு இன்னும் பிரச்சனை முடியவில்லை. அப்படித்தான்  நமது செயல்கள் மெய்ப்பிக்கின்றன.

ஏதோ ஒரு பிரச்சனைக்காக கூக்குரலிட  அது பெரிய பிரச்சனையாகி  இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது!  எங்கோ அது  புகைந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது!

இந்த எதிர்ப்பைத் தொடர வேண்டாம் என்று  பலர் அறிவுறுத்திவிட்டனர்.  ஆனால் எதுவும் எடுபடவில்லை. நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

எதிர்ப்பாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசாங்கம் சரியான  பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.  அவர்கள் இஸ்ரேல் மீதான் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டனர்.  அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனைச் சரியாகத்தான் செய்கின்றனர்.  அதுவே போதுமானது.  எத்தனையோ  இஸ்லாமிய நாடுகள்  வாய் திறக்கவே பயப்படுகின்ற போது   ஒரு சிறிய நாடான மலேசியா  தனது கருத்துகளை வெளிப்படையாகவே  தெரிவிக்கின்றனர்.  பாலஸ்தீனிய மாணவர்களுக்கும் கூட கல்வி பயில் வாய்ப்பும் அளித்திருக்கின்றனர். அந்நாட்டைச் சேர்ந்த  இளைஞர்கள் கூட  இங்கு வேலையும் செய்கின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் மலேசியா, பாலஸ்தீனத்திற்கு  என்ன செய்ய முடியுமோ  அதனைச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.  ஒரு சிறிய நாடு அதற்குமேல் செய்ய ஒன்றுமில்லை.

இந்த நேரத்தில் இப்படி தேவையற்ற முறையில் அவர்களின் துரித உணவகங்களின் மீது கையெறி குண்டுகளை வீசுவதும், அவர்களின் கட்டடங்களைச் சேதப்படுத்துவதும்   ஏற்புடையதல்ல  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அது தான் கெடா, சுங்கை பட்டாணியில்  சமீபத்தில் நடந்த சம்பவம். துரித உணவகமான மெக்டோனால்  விளம்பரப் பலகை  மீதான தாக்குதல்.  பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் வளரவிட முடியாது.  கண்டிப்பது மட்டும் அல்ல தண்டிக்கப்பட வேண்டியதும் கூட.  அது மட்டும் அல்ல. உணவகங்களுக்குப் போகும்  வாடிக்கையாளர்களைப்  பயமுறுத்துவதும் தண்டனைக்கு உட்பட்டது தான்.

நமது காவல்துறை மீது நமக்கு நம்பிக்கையுண்டு. நல்லது நடக்கும் என நம்புவோம்.