Sunday 30 April 2023

நண்டு கதைகள் வேண்டாம்!

 

நண்டு கதைகளைச் சொல்லிச்சொல்லி தமிழர்களைக்  கொச்சைப் படுத்தாதீர்கள்.. இனி குதிரைக் கதைகளைச் சொல்லி நமது பாதைகளை மாற்றிக் கொள்வோம். முன்னோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

குதிரைகளைப் பார்த்திருக்கீறீர்கள். அவைகளுக்கு வெற்றி ஒன்று தான் இலக்கு.  வேறு இலக்குகளுக்காக அவை பயன்படுத்தப்படுவதில்லை. அந்த அளவுக்கு நாம் வெற்றியாளர்களாகவே உலகம் முழுவதும் வலம் வந்திருக்கிறோம். இப்போதும் நாம் இம்மி அளவும் குறைந்து போய்விடவில்லை! அதே ஆற்றல், அதே வலிமை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பார்கள். அப்படித்தான் தமிழர்களும்.  மிரண்டுவிட்டால், எனக்கு  நிகர் நான் தான், என்று காட்டிவிடுவார்கள்!

நாம் அறியாமலே பொது இடங்களில் சில வார்த்தைகளைக் கொட்டி விடுகிறோம். அதே வார்த்தைகளைப் பிற இனத்தவரிடம் காட்டுவதில்லை. வம்பு வேண்டாம்! அவ்வளவு தான்! தமிழன் என்றால்: வம்பு வேண்டும்! என்று வம்படிக்கிறோம்!

 கஸ்தூரி நண்டு  என்ன செய்தார். கொட்டுவதையெல்லாம் மக்கள் சிரிக்கும்படியாகக் கொட்டிவிட்டார். இப்போது நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்கிறார்.  தேள் கொட்டியது கொட்டியது தானே! சொல்லம்பு பட்ட புண் மாறாது, சகோதரி!

நண்பர் ஒருவர் சொன்னார்: கடையில் எண்ணைய் தீர்ந்துவிட்டது. இருப்பு இல்லை. சரக்கு கிடைக்கவில்லை. இதைத்தான் அவர் வாடிக்கையாளரிடம் சொன்னார். அதற்கு அந்த வாடிக்கையாளர் சொன்னார்: இதற்குத்தான் நான் தமிழன் கடைக்கே வருவதில்லை! 

நமது மக்கள், வியாபாரிகள் தமிழர்கள் என்றாலே கொஞ்சம்  அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்! அவ்வளவு தான்! பொருள்களை ஒளித்து வைத்து விற்பவர்களைப் பார்த்து பேசப் பயப்படுவார்கள்!

யார் என்ன சொன்னாலும் சில அடிப்படை குணங்கள் நம்மிடமுண்டு. நாம் அடிப்படையில் நல்லவர்கள். நாம் நல்லவர்களாக இருப்பதால் தான் தமிழர்கள் வியாபாரங்களில் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.  இல்லை என்று சொல்லிவிட முடியாது. சமீப காலங்களில் நம்முடைய தொழில் வளர்ந்து வருகிறது. வருங்காலங்களில் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.

இனியும் நண்டு கதைகளைச் சொல்லி தமிழர்களைச் சிறுமைப்படுத்த வேண்டாம். கஸ்தூரி நண்டுகள் இருக்கத்தான் செய்யும்.  அவைகள் அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்யும்! இனி குதிரைக் கதைகளைச் சொல்லி "வெற்றியே வாழ்க்கை" என்பதில் முனைப்புக் காட்டுவோம்!

Saturday 29 April 2023

மறப்போம்! மன்னிப்போம்!

 

"அக்கா நாசிலெமாக் கடை" யைப் பற்றி  நாம் அதிகமாகவே தெரிந்து கொண்டோம். அது போதும் என்றே நான் நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் அதனைப்பற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம். நடந்து போனதைப் பற்றி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை.  நல்லதைக் காட்டினால் அது அவர்களுக்கு நல்ல விளம்பரம்.  கெடுதலைக் காட்டினால்  எதிரணிக்கு அது கொண்டாட்டம்! அவர்கள் அதனை என்றென்றும் வரவேற்பார்கள்!  

இப்போது நான் பார்க்கிறேன்.  அந்தப் பழைய சண்டையையே மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். அந்த வம்பாடிக்கு அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. காரணம் அவர் எதற்கும் தயார் நிலையில் இருக்கிறார்! நல்லதோ கெட்டதோ தனக்கு நல்ல விளம்பரம் கிடைப்பதாக நினைக்கிறார்!  ஆனால் வியாபாரம் செய்யும் அந்த அக்காளுக்கு அதனை மீண்டும் மீண்டும் காட்டுவதால் அது அவரது மனதைப் புண்படுத்தும். 

தயவு செய்து அன்பர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்லதைச் செய்கிறேன் என்று அந்த அக்காளுக்கு நீங்கள் கெடுதலைச் செய்கிறீர்கள். நிச்சயமாக அந்த நினைவுகளை அந்த அக்காள் மறக்க நினைக்கிறார்.நீங்கள் விடாப்பிடியாக  அவருக்குப் போட்டுக் காட்டி அவரைச் சிறுமைப் படுத்துகிறீர்கள்!  நல்லவைகளை திரும்பிப்பார்த்து மகிழ்ச்சி அடையளாம். இது அப்படியா?

நண்பர்களே! அந்த அக்காள் பாட்டுக்கு அவர் தொழிலைச் செய்யட்டும். தொழிலுக்கு அவர் ஒன்றும் புதியவரல்ல. பதின்மூன்று ஆண்டுகளாக தொழில் செய்து கொண்டுவரும் அவருக்குப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பதை நாம் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இல்லை. அவருக்கு அது தெரியும்.

அவருக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதனை வைத்து அவரின் முன்னேற்றத்திற்கு  அவர் வழிவகுத்துக் கொள்வார்.  வழக்கம் போல நாம் அவருக்கு ஆதரவு கொடுப்போம்.  ஆதரவு தான் தேவை.

சமீபத்தில் பார்த்த அந்த இடையூறுகளை அவர் ஏற்கனவே பார்த்திருப்பார்.  நமகுள்ளேயே மட்டம்தட்டி மண்ணைப் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். அதே சமயத்தில் நல்லவர்கள் பலர் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வளவு கெட்டவர்கள் இருந்தாலும் நல்லவர்களுக்காக மழை பெய்யத்தான் செய்யும். நல்லவர்கள் மழையாகப் பெய்யக் காத்திருக்கிறார்கள்.

நண்பர்களே! நான் சொல்ல வருவதெல்லாம்  இனி நீங்கள் எந்த விடியோவும் போட வேண்டாம்.  இதுவரைப் போடப்பட்டவையே போதுமானது. அந்த அக்காளும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தனது தொழிலையும் சீரமைத்துக் கொள்வார். எல்லாமே நல்லதே நடக்கும்.

நடந்தவைகளை மறப்போம்! மன்னிப்போம்! நல்லதே நடக்க வாழ்த்துவோம்!

Friday 28 April 2023

நண்டு கதை!

 

நண்டு கதை என்பது குறிப்பாக தமிழர் சம்பந்தமான ஒரு கதையாகவே ஆகிவிட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத்  தெரியவில்லை.  உலகில் உள்ள ஜீவராசிகளில் தமிழனுக்கு மட்டும் தானா அப்படி ஒரு நண்டு குணம்? 

 இத்தனை ஆண்டுகளில் சமீபத்தில் தான்  ஒரு நண்டு கதையை நான் தெரிந்து கொண்டேன்.

"அக்கா நாசிலெமாக்" கதையை நாம் அறிந்தது தான். பதின்மூன்று ஆண்டுகள் உழைத்து, நிலைத்து  அதே வியாபாரத்தில் நிற்பவர். அதனை ஒரு நல்ல நோக்கத்தோடு ஒருவர் விடியோவாக எடுத்து  வெளியிட்டார். அதன் பின்னர் அந்த அக்காவுக்கு வியாபாரம் சூடு பிடித்தது. 

எல்லாம் நல்ல விஷயம் தான். ஏதோ கண் திருஷ்டிபட்டது என்பார்களே, அது போல ஒரு சில கூச்சல்களும் குழப்பங்களும்  இடையிடையே ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் சிகரம்  வைத்தாற் போல கஸ்தூரி என்கிற பெண்மணி  கொஞ்சம் அதிகமாகவே அந்த அக்காவை அர்ச்சனை செய்து விட்டுப் போனார்!

இந்த கஸ்தூரி அக்காவைத் தான்  நான் பார்த்த முதல் நண்டு என்று சொல்வேன்! நண்டு கதைக்குரிய அத்தனை அம்சங்களும் அவரிடம் இருக்கின்றன.  தொழில் செய்கின்ற இடத்தில் மானாவாரியாகக் கத்துவது, வம்புக்கு இழுப்பது, சண்டைக்கு இழுப்பது, கைகொட்டி சிரிப்பது,  மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்து சத்தம் போடுவது, தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொள்வது   - இப்படி என்ன செய்யக்கூடாதோ அத்தனையும் மக்கள் நடமாடும் இடத்தில்  நின்று  கொண்டு, தொழில் செய்கின்ற இடத்தில் நின்றுகொண்டு,  அத்தனை  ரகளையும் செய்துவிட்டு  தன் மீது குற்றம் இல்லை என்பது போல பேசுகிறார்!

அதில் மிகவும் சுவாரஸ்யமானது  என்னவெனில் "ஒன்றுமில்லை! அவர் என் சொந்தக்காரர் தான்!"  என்றும் பேசுகிறார்!  இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றால்  நமது சொந்தக்காரர்கள் தான் என்பதை இந்த ஒரு நிகழ்வை வைத்தே நாம்  முடிவு செய்து கொள்ளலாம்.

எனது வாழ்க்கையில் இப்போது தான் முதன் முதலாக ஒரு நண்டை தெரிந்து கொண்டேன். அது தான் இந்த கஸ்தூரி நண்டு! இதிலிருந்து ஒரு பாடம் நாம் கற்றுக் கொண்டோம். ஆமாம் நண்டு என்பதெல்லாம் எங்கிருந்தோ  வரவில்லை.  எல்லாம் நமது உறவுகளிலிருந்தே  தான் உற்பத்தியாகின்றன!

இதற்கு முன்பு எத்தனையோ நண்டு கதைகள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த கஸ்தூரி நண்டு தான்  அனைவராலும் நேரடியாக விடியோவில் பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் விமர்சிக்கப்பட்ட ஒரு கதை!

Thursday 27 April 2023

பொறுமை காக்க!

 

வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் பொறுமை காப்பது மிக மிக அவசியம். 

சொல்லடிகள், கல்லடிகள், அவமானங்கள், அலட்சயிங்கள் இப்படி எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம். வரத்தான் செய்யும்.

"அக்கா நாசிலெமாக்" கடையில் ஏற்பட்ட தகராறைத் தான் சொல்லுகிறேன். அதனைத் தவிர்த்திருக்கலாம்.   ஆனால் ஏதோ ஒரு திட்டம் போட்டுத்தான் அதனைச் செய்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

சண்டையை ஏற்படுத்திவிட்டு  அந்த அக்காளைக் குறி வைத்தே விடியோவை எடுப்பதும், அந்த இன்னொரு பெண்மணியின் முகத்தைக் காட்டாததும் எல்லாம் திட்டமிட்ட செயல் என்றே தோன்றுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த அவரின்  கணவரை தூரமே காட்டுவதும் ஏதோ ஒரு  பிரச்சனையைக் கிளப்பவே அவர்கள் வந்திருக்கின்றனர் என்பதும் புரிகிறது. அதே சமயத்தில் அந்தப் பெண்மணி குறுக்கே நின்றுகொண்டு அக்காவை வேலை செய்யாமல் தடுப்பதும் திட்டமிட்ட செயல் தான்.இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அந்தப் பெண்மணி ஆங்கிலத்திலேயே பேசியதும் கூட அவர் தமிழர் அல்ல என்பதும் புரிகிறது. இதனை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் "நண்டு கதையை" அடிக்கடி சொல்லி தமிழர்களைக் கேவலப்படுத்தூவதும்  நிகழ்வதுண்டு.  இந்த நண்டு என்பது தமிழர் அல்ல, தமிழர் என்று சொல்லும் பிறரைக் குறிப்பிடுகிறது.

எது எப்படி இருந்தாலும் அந்த நாசிலேமாக் அக்காள் மிகவும் பொறுமையைக்  கடைப்பிடித்தார் என்பதும் பாராட்டுக்குரியது. ஒரு வியாபாரிக்குத் தேவையான பொறுமை குணம் அவரிடம் உண்டு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததாகவே  நாம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் யாருக்கும் இலாபமில்லை. நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது பிறரின் கேலிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தச் சண்டையில் யார் சரி, யார் தவறு, யாரால் எவரால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பது நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் வியாபாரம் செய்யும் இடத்தில் தகராறோ, சண்டையோ வேண்டாம்  அதை மட்டும் தான் நாம் வலியுறுத்துகிறோம்.

ஒருவர் கெட்டுப்போவதால் யாருக்கு என்ன பயன் என்பதை நமது சமுதாயம் சிந்திக்க வேண்டும்.  சமுதாயம் நல்ல நிலையில் இருந்தால் நம்மால் பிறருக்கு நல்லதைச் செய்ய முடியும். ஏற்கனவே நாம் குடிகாரச் சமுதாயம், குண்டர் கும்பல் சமுதாயம், ரௌடி சமுதாயம் என்று பெயர் எடுத்திருக்கிறோம்.

அது போன்ற எண்ணங்கள் நீக்கப்பட்டு நாம் வியாபாரம் செய்யும் சமுதாயம் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதில் தான் நாம் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். 

தயவு செய்து வியாபாரம் செய்பவர்களைக் கீழறுப்பு செய்யாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்.

Wednesday 26 April 2023

தொழிலாளர் பற்றாக்குறை!

 

நம் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை என்பதாகத் தொடர்ந்து முதலாளிகள்  சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால் பற்றாக்குறை என்று சொல்லி எல்லாத் துறைகளிலும் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது சரியானதாக நமக்குத் தோன்றவில்லை.

ஒரு சில துறைகளில் பற்றாக்குறை என்றால் அது உண்மை தான். குறிப்பாக கட்டுமானம், தோட்டத்துறை இப்படி சில  துறைகளில் பற்றாக்குறை என்பது யாரும் சொல்லாமலே நமக்குத் தெரியும். 

இந்தியர்களைப் பொறுத்தவரை உணவகத்துறையில் நீண்டகாலம் பற்றாக்குறை உள்ளது என்பது இந்திய உணவகங்களுக்குப் போகிறவர்களுக்குத் தெரியும்.   ஒரு சிறிய விலகல். இங்கு பற்றாக்குறை என்கிறார்கள் ஆனால் இங்கு பயிற்சி கொடுத்து சிங்கப்பூருக்கு அதே உணவகத் துறைக்கு  இளைஞர்களை அனுப்புகிறார்கள்! அங்கு வேலைக்குப் போகத் தயாராக இருக்கும் இளைஞர்கள் ஏன் இங்கே வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆக, வெளிநாட்டில் எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்  தயார் என்பது தான் இளைஞர்களின் மனநிலை! 

மனிதவள அமைச்சு எல்லாத் துறைகளிலும் வெளிநாட்டவர்களை அமர்த்துவதற்கு  அனுமதி கொடுப்பது சரியாகத் தோன்றவில்லை. அது உள்நாட்டவர்களின் பிழைப்பில் மண்போடுவது ஆகாதா?  முதலாளிகள் சொன்னால்  உடனே அரசாங்கம் அனுமதி அளிப்பது சரியானதாகத் தோன்றவில்லை.

சான்றுக்கு நாட்டில் உள்ள பேரங்காடிகளில் நூறு விழுக்காடு வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது உள்நாட்டவர்களைப்  புறக்கணிப்பதற்குச் சமம். இன்றைய நிலையில் எந்த ஒரு வீடமைப்புப் பகுதிகளை எடுத்துக் கொண்டாலும்  அங்கெல்லாம்  பேரங்காடிகள் தங்களது கிளைகளை வைத்திருக்கின்றன. அதை நாம் வரவேற்கிறோம். ஆனால் அங்கு வேலை செய்பவர்களைப் பார்த்தால் ஒருவர் கூட உள்நாட்டவர் இல்லை. குறைந்தபட்சம் ஓர் இருபது, முப்பது விழுக்காடு உள்நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது முதலாளிகளின் கடமை. இது போன்று புறக்கணிப்புகளைச் செய்தால்  அவர்கள் எங்கே வேலைக்குப் போவார்கள்? 

அரசாங்கம் உள்நாட்டவர்களின் மீது கொஞ்சமாவது அக்கறைக் காட்ட வேண்டும்.  உள்நாட்டவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு  வெளிநாட்டவர்களை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இன்று இந்தியர்களில் பலருக்குச் சிங்கப்பூர் தான் வேலை வாய்ப்புகளைக் கொடுக்கிறது.

தொழிலாளர் பற்றாக்குறை என்பது எல்லாத் துறைகளிலும் இல்லை. எங்கு பற்றாக்குறை இருக்கிறதோ அங்கு மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தினால் போதும். இல்லாவிட்டால் உள்நாட்டவர் நிலைமை பரிதாபத்திற்குரியதாக ஆகிவிடும்!

Tuesday 25 April 2023

வைரல் விடியோ!

 


இப்போது தீடீரென  அனைவரின் கவனமும் விடியோக்கள் பக்கம் திரும்பிவிட்டன!

அக்கா நாசிலெமாக் கடையின் தாக்கம் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அக்கா கடையின் வெற்றி என்பது தீடீர் வெற்றி அல்ல.  சுமார் பதின்மூன்று  ஆண்டு  கால உழைப்பு அதன் பின்னால் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. எத்தனை கூட்டம் கூடினாலும் அதனைச் சமாளிக்கும் திறமையும் அவருக்கு உண்டு. அது அவருடைய அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம்.

நாசிலெமாக் என்பது திடீரென முளைத்து வந்த புதிய உணவு அல்ல. அது காலங்கலாய் நம் நாட்டில் உள்ள உணவு. அதன் சுவை பற்றி நாம் அறிந்ததுதான்  அக்கா கடையில் மட்டும் அது என்ன புதிதாய் இருக்கப் போகிறது?  ஆனாலும் ஏதோ ஒன்று, ஒரு திறமை, ஒரு சுவை, மக்களைக் கவரும் தன்மை - இவை எல்லாம் சேர்த்துத்தான் "அக்கா நாசிலெமாக்"  என்பது.

ஏதோ விடியோவைப் போட்டுவிட்டால் வெற்றி வந்து விடாது. உழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது. கனிவான பேச்சு இல்லாமல் வியாபாரம் இல்லை. திடீர் பணக்காரன் ஆவதற்கு எந்த ஒரு வழியும் இல்லை. அது ஒரு நீண்டகால பயணம். கடினமான பயணம்.  ஏச்சு பேச்சுகள் உள்ள பயணம். இவைகளை எல்லாம் மீறி தான் வெற்றியைப் பார்க்க முடியும். 

விடியோக்கள்  மூலம், டிக்டோக் மூலம் வெற்றி வந்து விடாது. ஆனால் அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைக்கும். அதனை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டால்  உங்களது வெற்றி நிச்சயம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது உழைப்பு மட்டுமே. நூறு விழுக்காடு கவனம் தொழிலில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன். தொழில் ஆரம்பித்து கொஞ்சம் வெற்றி தெரிய ஆரம்பிக்கும். உடனே அரசியல் பக்கம் கவனத்தை திருப்புவார்கள்! அவர்கள் வீழ்ச்சிக்கு அவர்களே குழி தோண்டுவார்கள். அதன் பிறகு வீழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை.

இப்போது உள்ள இளைய சமுதாயத்தினர் தெளிவாக இருக்கிறார்கள். தொழில் செய்தால் தான் பிழைக்க முடியும் என்கிற நிலைமையில் இருக்கிறார்கள். வேலை செய்வதால் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை என்பது அவர்களுக்குத் தெரிகிறது.

விடியோ, டிக்டோக் எதுவாக இருந்தாலும்  சரி நமது முன்னேற்றத்திற்கு எந்த அளவில் உதவும் என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குத் தெரிந்து தான் இருக்கிறது. அவைகளைப் பயன்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இளைஞர்களே! நவீன உத்திகளைப் பயன்படுத்தி முன்னேறும் வழிகளைப் பாருங்கள்!  வாழ்த்துகள்!

Monday 24 April 2023

விடுமுறையில் போகத் தேவையில்லை!

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து சொல்லிவரும் செய்தி இது தான். "நீதிமன்றம் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்லும்வரை அவர் நிரபராதி தான்."

ஆரம்பத்திலிருந்தே அவ்ர் இதைதான் சொல்லி வருகிறார். நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லாதவரை அவர்கள் மீது தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது தான்.

இப்போது நாம் மனிதவள அமைச்சர் சிவகுமாரைப் பற்றி தான் பேசுகிறோம். ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை அவர் குற்றவாளி என்று சொல்லவில்லை. அவருடைய உதவியாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.  எல்லாமே சந்தேகத்தின் பேரில் நடந்தவை தான்.

பொதுவாக மக்களிடம் பரவலான  ஒர் அபிப்பிராயம் உண்டு. அரசியல்வாதிகளால் எதனையும் மறைக்க முடியும். உள்ளதை இல்லையென்று சொல்ல முடியும். இல்லாததை உள்ளது என்று சொல்ல முடியும். இந்த ஆற்றல் எல்லா அரசியல்வாதிகளிடமும் உண்டு. அதுவும் நமது நடப்பு அரசாங்கம்  ஒற்றுமை அரசாங்கம் என்னும் பெயரில் ஏதோ பெயர் போட்டுக் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு அது வலிமையான  அரசாங்கமாக இருக்கிறது என்று வெளியே தெரியவில்லை. இதுவரை எந்த அம்னோ பெருந்தலைகள் எதுவும் மாட்டவில்லை. மாட்டினால் தான் அன்வார் வலிமையாக இருக்கிறாரா என்பது தெரிய வரும்.

பிரதமர் அன்வார் நேர்மையானவர் என்பதில் ஐயமில்லை. ஊழல் இல்லா ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதில் அவருக்கு அக்கறை உண்டு. அதனை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவருடைய அமைச்சரவையில் உள்ளவர்களின்  நேர்மை சந்தேகத்திற்கு  உரியதுதான்!

மனிதவள அமைச்சர் சிவகுமாரைப் பற்றி நாம் அதிகம் அறியவில்லை.  அவர் சார்ந்த மாநில மக்கள் அவரை அறிந்திருக்கலாம். நாம் அறிந்திருக்கவில்லை.  ஆனாலும்  அவருடைய கடந்த கால அரசியலைப் பற்றி  நாம் பொருட்படுத்தவில்லை. அவர் மனிதவள அமைச்சரான பின்னர் அவருடைய பதவிக்கு அவர் பெருமை சேர்க்க வேண்டும். மலேசிய மக்கள் அனைவருக்கும் அவர் அமைச்சர். அமைச்சரவையில் இந்தியர் அவர் ஒருவரே. இந்தியர்  என்னும் பெருமையை அவர் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே  ஓர் ஏமாற்றுக் கூட்டம் இந்தியர்களை ஆட்சி செய்து வந்தது. அவர்களைக் குறை கூறி வந்தோம். இனி மேல் அது போன்ற குற்றங்குறைகள் காதுகளில் விழக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

போனது போகட்டும்.  இனி பாதை நேராக இருக்கட்டும். நேர்வழி முடியாது என்றால் பதவியைக் காலி செய்துவிட வேண்டும். நல்லவர்கள் வரட்டும் 

குற்றவாளி என்று நிருபிக்காத வரை எந்த விடுமுறையும் அவருக்குத் தேவையில்லை!

Sunday 23 April 2023

ஏன் நம்மால் முடியவில்லை?

 


நாம் பொதுவாக  அழைக்கும் மேகி மீ மீண்டும் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறது.

இது மேகி மீ அல்ல என்பதை  தெளிவு படுத்துகிறேன். வேறு இரண்டு வகையான மீ வகைகள்.  ஒன்று மலேசியா இன்னொன்று இந்தோனேசியா. இரண்டு வகைகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த இரண்டு வகையான மீ வகைகள் இதோ:  1) Ah Lai White Curry Noodles  from Malaysia 2)   Indomie: Special Chicken Flavour from Indonesia. இந்த இரண்டு  மீகளும் இங்கு விற்பனையில் உள்ளன.

இந்த இரண்டு மீ வகைகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயன கலப்பு இருப்பதாக  தைவான், தைப்பே சுகாதார அமைச்சு கண்டு பிடித்துள்ளதாகத் தெரிகிறது.  அதனால் தைவான் உடனடியாக அந்த இரண்டு மீ வகைகளின் விற்பனையைத் தடைசெய்திருக்கின்றது.

நமக்குள்ள வியப்பு எல்லாம் அதெப்படி இன்னொரு நாட்டில் அந்த இரசாயன கலப்பைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் நம் நாட்டில் அது கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இப்போது செய்திகள் வந்த பின்னர் தான், இனி மேல் தான், இவர்கள் ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறார்களாம்! இருக்கட்டும்.  அப்படியென்றால் இத்தனை மாதங்களாக, ஆண்டுகளாக  இந்த இரண்டு மீகளையும் சாப்பிட்டு வந்தோமே அதற்கு யார் பொறுப்பு? ஏன் நம் நாட்டில் இதனைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லையோ?

மற்ற நாடுகள் சொல்லித்தான்  நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்  நமது சுகாதார அமைச்சு தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பது தான் பொருள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே பிரச்சனைத் தலைதூக்கியது. அப்போதும் வேறொரு நாடு அது பற்றி கேள்வி எழுப்பியது.

இப்போது நமது பிரச்சனை எல்லாம் யாராவது இது போன்ற விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியாதவரை நாம் வழக்கம் போல புற்றுநோய்க்கான எல்லா ஏற்பாடுகளையும் நமது உடலில் செலுத்திக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. மற்ற அரசாங்கங்கள் தான் செய்து கொண்டிருக்கின்றன என்பது தான் நமக்குத் தெரியவருகிறது!

தைவான் அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம். அவர்கள் தான் அந்த எச்சரிக்கையை நமக்குக் கொடுத்தவர்கள். நன்றி மறக்கக் கூடாது அல்லவா!

Saturday 22 April 2023

தூக்குத் தண்டனை!

 


சிங்கப்பூரில் இன்னொரு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நேரம் காலம் வந்துவிட்டது.

தூக்குத் தண்டனை  என்பது மிகவும் கடுமையான  ஒன்று என்பதில்  சந்தேகமில்லை. பல நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன.  ஆனால் சிங்கப்பூர் இன்னும் அதனை அமலில் வைத்திருக்கிறது.

அதற்காக சிங்கப்பூர்  அந்தத் தண்டனையை அடாவடித்தனமாக  இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லுவதில்  அர்த்தமில்லை. அவர்களுடைய நாட்டுக்கு எது நல்லது, எது கெட்டது என்பது அவர்களுக்குத் தெரியும்.

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. அங்கு கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தாவிட்டால்  கஞ்சாவை வைத்தே சிங்கப்பூரை அழித்து விடலாம். சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 54 இலட்சம். அதனைப் புரிந்து கொண்டு தான் சிங்கப்பூர்  இந்த கஞ்சா விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக  இருக்க வேண்டி உள்ளது.

சிங்கப்பூருக்குக் கஞ்சா கடத்தினால்  என்ன தண்டனை என்று தெரிந்தும் கஞ்சாவைக் கடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இது தான் ஆச்சரியம்.  கடத்துபவர்கள் எதற்கும் அஞ்சுபவர்களாகவும் தெரியவில்லை. ஆனால் சமயங்களில் அப்பாவிகளும் மாட்டிக் கொள்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இந்த வியாபாரத்தில்  பெரிய மீன்கள் மட்டும் மாட்டுவதில்லை.  சில்லறைகளை வைத்துக் கொண்டு  அவர்கள் பணம் பார்க்கிறார்கள்! பணம் உள்ளவன் எந்தக் காலத்திலும்  சிக்குவதில்லை.   அப்பாவிகள் தான்  தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இதோ, இப்போது தூக்குக்குப் போக சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் தயார் நிலையில் இருக்கிறார்.  நாற்பத்தாறு வயதான தங்கராஜூ சுப்பையா  குற்றவாளி என்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. கடைசி நிமிட வேலைகளும் அவரது குடும்பத்தினர் செய்து கொண்டு இருக்கின்றனர்.

பொது மக்களாகிய நம்மால் எதுவும் செய்ய இயலாது. கருணைக் காட்டுங்கள் என்று  சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு, அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து,  நாமும்  கோரிக்கை விடுக்கலாம்.

அவருக்கு நல்லது நடக்க  இறைவனை வேண்டுகிறோம்.

Friday 21 April 2023

கோபம் நம் சத்ரு!

 

கோபம் பற்றி பேச வேண்டுமானால்  ஒரே வார்த்தையில்  "கோபம் நம் சத்ரு!" என்று சொல்லலாம். என்ன வார்த்தையில் நாம் சொன்னாலும் அது சத்ரு தான். நம் எதிரி தான்.

சமீப காலங்களில் கோபத்தினால் வரும் விளைவுகளைப் பார்க்கிறோம். காணொளிகளில் எல்லாமும் பகிரப்படுகின்றன. நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை ஒதுக்கி விடுவோம்.

கோபத்தினால் குடும்பமே அழிகின்றன.  இது நமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். ஆனால் நாம் இங்கே பேசுவது குடும்பங்களைப் பற்றி அல்ல  தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நமது வியாபாரிகளைப் பற்றி. தான் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சமீபத்தில் ஓர் உணவகத்தில் தகராறு. வெளியிலிருந்து வந்த இரண்டு பேர் உணவகப் பணியாளர் ஒருவரை தாக்குகிறார்கள். ஏதோ வாய்த் தகராறு  என்று சொல்லவும் முடியவில்லை. அந்த இரண்டு நபர்களும் அந்த அளவுக்குக் கோபப்பட வேண்டிய அவசியமுமில்லை. உணவகத்திற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். எல்லாவற்ரையும் விட பெரிய பாதிப்பு என்றால்  உணவகத்தில் சண்டைகள் ஏற்பட்டால் அஙுகு மக்கள் போவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பணியாளர்கள் கொஞ்சம் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துத் தான்  போக வேண்டிய சூழல். 

இன்னொரு பக்கம் பணியாளரிடையே சண்டை சச்சரவுகள். அது ஒரு மாமாக் உணவகம். ஒரு பாகிஸ்தானியர் ஓர் இந்தியப் பணியாளரை அடித்து விட்டார். அவர்களுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை? ஒன்றுமே இல்லை! அந்தப் பாக்கிஸ்தானியர் அந்த இந்திய பணியாளரை விரும்பவில்லை.  நாட்டுப் பிரச்சனையை வைத்து வெளி நாடுகளில் அடித்துக் கொள்வதை என்னவென்று சொல்வது? எதற்கு இந்த கோபம்? நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கோபம் என்பது தொழில் நிறுவனக்களில் வரவே கூடாது. எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டால் நம் நிறுவனங்கள் தான் பாதிக்கப்படும். அதுவும் உணவகங்களில் எப்போதுமே பிரச்சனைகள் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு எல்லாமே அவசரம் தான். கேட்டதும் கொடுத்துவிட வேண்டும். பணியாளர்களுக்கு அதைக் கேட்டு கேட்டு அலுத்துப் போய்விடும். அப்போது இவர்களும் தங்களது புத்தியைக் காட்டுவார்கள்! எங்கே போய் முட்டிக் கொள்வது? இருந்தாலும் பணியாளர்கள் தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வேறு வழியில்லை!

கோபம் எல்லாவற்றையும் அழித்துவிடும். வளரவிடாமல் செய்துவிடும். அமரிக்காவில் எத்தனை துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்? பெரியவர்கள் மட்டுமா? பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் யாரையும் இந்தக் கோபம் விட்டுவைப்பதில்லை. ஆசிரியரைச் சுடுகிறார்கள்! மாணவர்களைச் சுடுகிறார்கள்!  யார் என்ன தான் செய்ய முடியும்?  கேட்டால் "கோபம்! காலியாக்கி விட்டேன்!" என்று  பதில் வருகிறது!

கோபம் வேண்டாம் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்வதற்கில்லை. கோபம் மாபெரும் சத்ரு!

Thursday 20 April 2023

இதுவல்ல வியாபாரம்!

 

இது மலாக்காவில்  கடந்த வெள்ளிகிழமை (21-4-2023)  நடந்த ஓர் அசம்பாவிதம்.

ஓரு வியாபாரி என்ன செய்யக் கூடாதோ  அதைச் செய்திருக்கிறார் ஓர் "லெமாங்"  வியாபாரி.  லெமாங் என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்தது தான். அதுவும் ஹரிராயா காலங்களில் மலாய்க்காரர்கள் சாலை ஓரங்களில் மூங்கில்களில்  வைத்து   விற்பனை செய்வார்கள்.

எல்லாம் சரிதான். அந்த லெமாங் சரியாக வேகவில்லை என்பது தான் குறைபாடு. அதனால் அதனை வாங்கிய வாடிக்கையாளர்  அதை மாற்றிக் கொடுக்குமாறு  அந்த வியாபாரியிடம் கேட்டிருக்கிறார். அப்போது தான் பிரச்சனை வந்தது.

அந்த வியாபாரி மாற்றிக் கொடுப்பதற்குப் பதிலாக  தன்னிடம் இருந்த மூங்கில் கம்பினால் அந்த வாடிக்கையாளரைத் தாக்கியிருக்கிறார்.   சுமார் 61 வயதான அந்த வாடிக்கையாளர் ஒரு  முன்னாள் இராணுவ வீரர். அந்தத் தாக்குதலினால் அந்த முன்னாள் இராணுவ வீரருக்குக் காதுகளிலும் கைகளிலும் காயத்திற்கு உள்ளானார்.

என்ன நடந்தது என்பதை அந்த வியாபாரி கூறும்போது அந்த வாடிக்கையாளர் தான் கொண்டு வந்த லெமாங்கைத் தூக்கி  தன் மீது வீசியதாக அவர் புகார் கூறுகிறார். அத்தோடு இந்த நிகழ்வை  விடியோவில் பதிவேற்றம் செய்து அந்தக் கடைக்கு யாரும் வரமுடியாதபடி செய்து விடுவேன் என்று பயமுறுத்தியதாகவும் கூறுகிறார்.

இது போன்ற அசம்பாவிதங்கள் ஒன்றும் புதிதல்ல.  அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும் முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தவறே செய்தாலும்  வியாபாரிகள் பொறுத்துத்தான் போக வேண்டும்.  அந்த வியாபாரி  ஒரு லெமாங்கை மாற்றி கொடுத்திருந்தால் அந்தப் பிரச்சனை அத்தோடு முடிந்து போயிருக்கும்.  அந்த வாடிக்கையாளர் தொடர்ந்து அந்த வியாபாரிக்குத் தனது ஆதரவைக் கொடுத்திருப்பார். இப்போது ஜென்மைப்பகையாக மாறிவிட்டது!

ஆனால் என்ன செய்வது?  விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இல்லாத போது கடைசியில் காவல்துறை தான் தலையிட வேண்டும்.

வியாபார சமுகத்திற்கு நாம் சொல்ல வேண்டியது:  கோபப்படாதீர்கள். அதுவும் உங்களது வாடிக்கையாளர் மீது கோபம் வேண்டாம்.  "வாடிக்கையாளர் தவறே செய்ய மாட்டார்"  என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். அந்த மனப்போக்கு தான் வியாபாரிகளைக் காப்பாற்றும்.

சண்டை போடுவது வியாபாரிகளுக்கு அழகல்ல!

Wednesday 19 April 2023

அக்கா வாழ்த்துகள்!

 


"அக்கா நாசிலெமாக்"  கடை சமீபகாலமாக வைரலாகி  அக்காவை மலேசியர் அனைவரும் தெரியும் அளவுக்குப் பிரபலமாக்கி விட்டது.

ஆனாலும் அவர் ஏதோ பெரிய உணவகத்தை நடத்தி வருகிறார் என்று எண்ண வேண்டாம். இன்று வானோங்கி வளர்ந்து நிற்கும் பெரும் நிறுவனங்களின்  ஆரம்பம் எதுவோ அதுவே தான் இன்று அக்கா கடையிலும் நடந்து கொண்டிருக்கிறது. வருங்காலங்களில் அவர் வளர்ச்சியடைவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன.

தனது வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதை அக்கா  விரும்புகிறார். அது இயல்பு தான். சில நூறுகளைப் பார்த்தவருக்கு சில ஆயிரங்கள் கிடைக்கும் போது அதனை வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவதில்லை.

அக்கா முக்கியமான ஒரு சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது தான் நமது  ஆலோசனை. முதலில் எந்த வகையிலும் தனது உடன்நலனைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. இப்போது அவர்  தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறார் என்பது தெரிகிறது. தூக்கம் முக்கியம்.  தனக்கு உதவியாக, ஒரு சில வேலைகளுக்கு, தனது வீட்டில் உள்ளோரைப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.  இப்போது உள்ள பரபரப்பு தொடருமா என்பது இப்போதைக்கு நமக்குத் தெரியாது. ஆனால் கூட்டத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம் தான். அதற்கு ஏற்றவாறு சில மாற்றங்களை  அவர் செய்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.

அக்காவைப் பொறுத்தவரை இப்போது செய்யும் அவரது தொழிலை கடந்த  பதிமூன்று ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பதாக  நாம் அறிகிறோம். நிச்சயமாக அவர் தனது வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்தவர். தொழிலுக்குப் புதியவர் அல்ல. நல்லது கெட்டது தெரிந்தவர். அதனால் நாம் அதிகமாக எதுவும் சொல்லத் தேவையில்லை. 

ஒன்றை மட்டும் நாம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.  பணத்தை மட்டும் இறுக்கிப் பிடித்து வையுங்கள்  ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம். பணத்துக்காகத்தான் கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள்.  அந்தப் பணம் சும்மா வரவில்லை. கடினமான உழைப்பைப் போடுகிறீர்கள். தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.  எத்தனையோ தியாகங்கள் செய்து தான் அந்தப் பணம் வருகிரது. அதனால் பணம் மீது அலட்சியம் வர வேண்டாம். போனால் வராது. வரும் போது போகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அக்கா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இந்த சமுதாயம் உங்களை வாழ்த்துகிறது. நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும். உணவகங்கள் திறந்து மேலும் சிறப்பாக வாழ வேண்டும். எப்போதுமே எந்தத் தொழிலும் சீராகப் போக வழியில்லை. தடங்கள்கள் வரத்தான் செய்யும்.  அப்போது உங்கள் பணம் தான் உங்களுக்கு உதவும்.

நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!

Tuesday 18 April 2023

மலேசியர் விரும்பும் நாசிலெமாக்!

 


மலேசியர்களின் காலை உணவு என்றால் இரண்டு உணவுகள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று நாசிலெமாக் இன்னொன்று பரோட்டா என்று சொல்லப்படும் ரொட்டி செனாய்.

நாசிலெமாக்  மலாய் மக்களின் பாரம்பரிய உணவு. அப்படித்தான் நான் நினைக்கிறேன். காரணம் நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே  மலாய் மக்கள் தான் அந்த உணவை விற்று வருகின்றனர். நம் பாட்டிமார்களோ, தாய்மார்களோ விற்று வந்ததாக  எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது. இந்திய உணவகங்கள் கூட நாசிலெமாக் விற்பனைச் செய்கின்றன.    ஏன்? நமது வீடுகளில் கூட நாசிலெமாக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் எனக்கென்னவோ மலாய் மக்களின் நாசிலெமாக்குவுக்குத் தான் முதலிடம் கொடுப்பதுண்டு. அவர்களில் கூட இன்றைய தலைமுறையினர் அந்த பாட்டிகளின் சுவையைக் கொண்டு வரமுடியவில்லை!  காரணம் இப்போது எல்லாருமே உணவின் சுவைக்கு முதலிடம் கொடுப்பதில்லை. பணத்திற்குத்தான் முதலிடம்.  அதனால் 'ஏனோ தானோ' என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது!  போகிற போக்கைப் பார்த்தால் அதன் சுவையே மாறிவிடும் போலத்  தோன்றுகிறது!

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.  நாசிலெமாக் அல்லது ரொட்டிசனாய் - இவைகளைக்  காலை உணவாகப் பயன்படுத்துவது  உடல் நலனுக்கு  ஏற்றதல்ல என்பதே பொதுவான கருத்து.  என்ன செய்வது? ஒரு சில பழக்கங்களை வழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டால்  அதனை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதானதல்ல.  நாமும் அந்தப் பழக்கத்தை  விடப்போவதுமில்லை! வியாதிகளும் வெளியேறப் போவதுமில்லை!

ஒரு சிலரின் உணவு பழக்க வழக்கங்கள் நம்மை அதிர வைக்கின்றன. காலை நேரத்தில் நாசிலெமாக், முட்டை, கோழி இறைச்சி  - இப்படி  தினசரி சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும்?  என்ன தான் ஆகாது என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது! ஒரு சிலரோ இருக்கும் போது நன்றாகச் சாப்பிட்டு போகும் போது நன்றாய்ப் போய்ச் சேர வேண்டும் என்கிறார்கள். எங்கே நன்றாய்ப் போய்ச் சேருவது?  மருத்துவமனையில்  அல்லல்பட்டு, அவதிப்பட்டு, அசிங்கப்பட்டு அல்லவா போய்ச் சேர வேண்டியிருக்கிறது!

நாசிலெமக் அல்லது  ரொட்டிசானாய்  எதுவாக இருந்தாலும் சரி அளவோடு சாப்பிடுங்கள்.   அதிலும் என்ன பயன் கிடைக்கும் என்பதைப் பார்த்துச் சாப்பிடுங்கள். எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதையும் கவனத்தில் வையுங்கள். காரணம் நம்மைத்  தாங்கும் இந்த உடல் இன்னும் கொஞ்ச நாள்  தாங்க வேண்டுமானால் நமது சாப்பாட்டைக் கவனிக்க வேண்டும்.

Monday 17 April 2023

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

 

                                                                  Datuk R.Ramanan 

மித்ரா என்பது இந்தியர் உருமாற்றுத் திட்டம் என்பது நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம்.

மைக்கா ஹோல்டிங்ஸ் எப்படி  மானங்கெட்ட காரியத்திற்காக மலேசிய இந்தியரிடையே பெயர் வாங்கியதோ அதற்கு ஈடாக செடிக் அல்லது மித்ரா பெயர் வாங்கியிருக்கிறது என்பதும் உண்மை தான். இரண்டுமே ம.இ.கா.வால் நிர்வகிக்கப்பட்டவை. இரண்டுமே ஊழலுக்காக மட்டுமே பேசப்பட்டவை. அது இன்றுவரை பேசப்படுகிறது.ம.இ.கா. வேண்டுமானால் எங்களுக்கும் மித்ராவுக்கும்  சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம்! நாமும் "கெக்கக்கே! கெக்கக்கே!" என்று சிரித்துவிட்டு போய்விடலாம்!

சமீபத்தில் பிரதமர் அன்வார், சுங்கை  பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் அவர்களை மித்ரா அமைப்புக்குத் தலைவராக நியமித்திருக்கிறார். அத்தோடு இந்தக் குழுவில் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ்,  ம.இ.கா.வின் செனட்டர் சிவராஜ் சந்திரன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

மேலே அனைவருமே அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர்! கொஞ்சம் குமட்டலாகத் தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் எப்படி என்பதை நாம் பார்த்துவிட்டோம்.  ஆனாலும் நாம் இங்கே பார்ப்பது மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்தர் நாயர் அவர்களைத் தான். அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர்.   மித்ராவில் எது நடந்தாலும் அனைத்துக்கும் பொறுப்பானவர் ரவீந்திர நாயர் தான். அவர், தன் பெயர் கெட்டுப்போகும் படியாக எதனையும் செய்ய  அனுமதிக்க மாட்டார் என நம்பலாம். அவர் தான் பிரதமருக்குப் பதில் சொல்ல வேண்டியவர் என நினைக்கிறேன்.

மித்ரா என்றாலே நமது அரசியல்வாதிகள் காரித்துப்பும்படியாக அனைத்தையும் செய்துவிட்டார்கள். யாரையும் நம்ப முடியவில்லை. உதவி என்று போகுபவர்களும்  போலியாக இருக்கிறார்கள்!   மித்ராவில் ஒரு சிலரைத் தெரிந்து வைத்துக் கொண்டு தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். அது தான் இது நாள் வரை நடந்து வந்தது. இனி மேலும் அப்படியெல்லாம் நடக்காது என்று எந்த உறுதி மொழியும் இல்லை. இப்போதைக்கு ஊழல் தடுப்பு ஆணையத்துக்குப் பயப்படுவது போல் நடிக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். இனி நல்ல காலம் பிறக்கும் எனவும் நம்புவோம். ஆனாலும் அனைத்தும் நம் கையில் தான்.  நமது ஏற்றமும் தாழ்வும் நமது கையில் மட்டுமே!  யாரை நம்பியும் நாம் வாழவில்லை!

Sunday 16 April 2023

நினைத்தது நடக்கிறது!

 

நாம் என்ன நினைத்தோமோ அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நாம் அதனை விரும்பவில்லை தான் என்றாலும்  என்ன செய்வது? இது எப்போதும் நடப்பது தான்! 

தமிழர் சமுதாயத்தில் ஒருவர் யாரேனும் கொஞ்சம் முன்னுக்கு வந்துவிட்டால் அடுத்து அவரைக் கவிழ்ப்பது எப்படி  என்கிற வேலை ஆரம்பமாகி விடும்!

பாவம்!  அந்த அக்கா சுமார் பதின்மூன்று ஆண்டுகளாக அவர் ஸ்ரீ கம்பாங்கான் பகுதியில் ஒரு ஸ்டால் வைத்துக்கொண்டு அந்த நாசிலெமாக் வியாபாரத்தைச் செய்து வருகிறார். அவரின் பிழைப்பு நன்றாகவே நடக்கிறது. 

ஏதோ ஒரு நல்ல நோக்கத்தோடு ஒருவர் விடியோ எடுத்துப் போடுகிறார். அதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதன் பின்னர் ஒரு சில அநாகரிகக் கூட்டம் இன்னும் பல விடியோக்களை எடுத்து அதனை வைரலாக்கி  அனைத்தையும் நாசமாக்கி விட்டார்கள்!  இப்போது அந்த அக்காளின் வியாபாராத்திற்கே ஆப்பு அடிக்கவும் தயாராகிவிட்டார்கள்.

தம்பிகளா! நீங்கள் நல்ல எண்ணத்தோடு தான் செய்கிறீர்கள்.  ஆனால் பாருங்கள்! எதுவும் புரியாமல் செய்கிறீர்கள். அது எப்போது சண்டையில் போய் முடியும் என்று தான் இப்போது நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஐந்தாறு பேர் சத்தம் போட்டு அந்த இடத்தில் நின்று கொண்டு கத்தினால் போதும்  இனி மக்கள் அந்தப் பக்கம் கூட போக மாட்டார்கள்! எங்கெல்லாம் நியாய-அநியாயம் பேசுகிறார்கள் பார்த்தீர்களா? கேட்க வேண்டிய இடத்தில் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பார்கள்!

இன்று கிடைக்கவில்லையென்றால் நாளை போங்கள். அல்லது இன்னொரு நாள் போங்கள். இல்லாவிட்டால் அந்தப் பகுதியில் வேறொருவர் நாசிலெமாக் விற்பார். அவரிடம் வாங்கிச் சாப்பிடுங்கள்.  இத்தனை ஆண்டுகள் அக்காவிடம் மட்டும்  தான் வாங்கிச் சாப்பிட்டீர்களா? ஏம்பா இப்படிச் செய்கிறீர்கள? ஒருவரின் பிழைப்பில் மண்ணை வாரிப் போடுகிறீர்களே. அதில் உங்களுக்கு என்ன இலாபம்? நீங்கள் ஒரு குடும்பத்தையே அழித்துக் கொண்டிருக்கிறீகள். அவர்களின் வாழ்வாதாரத்தையே தகர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். புரிந்து கொள்ளுங்கள். 

ஏற்கனவே சுகு-பவித்ரா தம்பதியர் என்ன ஆனார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். திடீரென நாம் அனைவருமே தூக்கு தூக்கு என்று தூக்கி கடைசியில் தொப்பென்று கீழே போட்டு மிதித்துவிட்டோம். இப்போது அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அதைத்தான் இப்போது ஒன்றும் புரியாத இந்தக் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது. காணாததைக் கண்டுவிட்டது போல பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது! 

முடிந்தால் ஆதரவு கரம் நீட்டுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். அக்காள் அவரது  தொழிலில் முன்னேற வேண்டும் என்பதாக இறைவனிடம் வேண்டுங்கள்.

அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் நல்லதே நடக்க: இறைவா! அவர்களை ஆசீர்வதியும்!

Saturday 15 April 2023

ஏமாற வேண்டாம்!


 இன்று நாட்டில் பலவகையான ஏமாற்று வேலைகள் கொடிகட்டிப் பறக்கின்றன என்று சொல்லலாம்.

உண்மையைச் சொன்னால்  காவல்துறையினரால் இந்த ஏமாற்று வேலைகளைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.   இந்த ஏமாற்று வேலைகளின் மூலம் கோடிக்கணக்கான வெள்ளிகளை  மலேசியர்கள்  இழந்திருக்கின்றனர்; இழந்தும் வருகின்றனர்.

இந்த ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது  இப்போது புதுவிதமான முறையில் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்திருப்பதாக  பெண்மணி ஒருவர் கூறியிருக்கின்றார். ஆமாம், ஏமாற்றுவதற்கு என்னன்னவோ வழிகளைப் பயன்படுத்தியவர்கள் இப்போது "பாஸாக்கடை" வரை வந்து விட்டார்கள்.

அவர்களது அழைப்பில் "நீங்கள் பாஸாக் கடைக்குப் பணம் கொடுக்க வேண்டும்"  என்று கூறிவிட்டு "உங்களது அடையாளக்கார்டு எண் கொடுங்கள்" என்று ஒரு சில தகவல்களைக் கொடுக்கும்படி கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண்மணி அதற்குள் சுதாகரித்துக் கொண்டார். அவர்கள் கேட்ட தகவல்களைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் வங்கியில் இருந்த அவரது பணத்தைக் காலி பண்ணியிருப்பார்கள்!

ஆமாம் நண்பர்களே! மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்லுவது இதுதான். நமக்குத் தெரியாதவர்கள் இது போன்று அடையாளக்கார்டு எண், வங்கி கணக்கின் எண் - இப்படி எதையாவது கேட்டு, கொடுங்கள் என்றால் கொடுத்துவிடாதீர்கள்.  கொடுத்துவிட்டால் அத்தோடு வங்கியில் உள்ள உங்கள் பணம் மொத்தமாகக் காலியாகிவிடும்! அதுவும் ஒரு சில நிமிடங்களில் அனைத்தும் காலி!

ஒவ்வொரு நாளும் செய்திகள் வருகின்றன. படித்தவர்கள் தான் அதிகமாகப் பணத்தை இழக்கின்றனர். பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் படித்தால் இந்த நிலை அவர்களுக்கு வராது. பலர் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை   ஒரு சில நிமிடங்களில் இழந்து விடுகின்றனர்.

நானும் ஒவ்வொரு மாதமும் இவர்களிடமிருந்து அழைப்புகளைச் சந்திக்கிறேன்.  நான் அவர்களைச் சீண்டுவதில்லை. அழைப்பைத் துண்டித்து விடுவேன். ஆனால் அவர்கள் தங்களது முயற்சிகளைக் கைவிடுவதில்லை.   அழைப்பு என்னவோ வந்து கொண்டே தான் இருக்கின்றது.

மீண்டும் சொல்லுகிறேன் உங்களிடம் உள்ள முக்கியமான தகவல்களை யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். ஒரு வேலைக்கு  விண்ணப்பம் செய்தால் கூட  மிகவும் கவனமாக இருங்கள்.  ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவர்கள் தான் உங்களது முக்கியமான எண்களைக் கேட்பார்கள். அதுவும் வங்கியில் பணம் இருந்தால் கவனம்! கவனம்! கவனம்!

Friday 14 April 2023

வாழ்த்துகிறோம் அக்கா!

 

நாசிலெமாக்  செய்வதில் நம்மில் ஒரு சிலர் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

நான் முன்பு ஒரு காலத்தில் குளுவாங் பகுதியில் வேலையில் இருந்த போது  தமிழர் ஒருவர் ஒரு சாதாரண சிறிய கடையில் நாசிலெமக், பரோட்டா ரொட்டி விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.  அவர் விற்பனை செய்த வந்த  நாசிலெமாக் - உண்மையைச் சொன்னால் - ஈடு இணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில்  குவிகின்ற சீனர்கள் கூட்டம் சொல்லி மாளாது. இப்போது அந்த உணவகம் தொடர்கிறதா என்பது தெரியவில்லை.

 சமீபத்தில் அதே போன்ற ஒரு கூட்டத்தைப் பார்த்து வியந்து போனேன். டிக் டாக்கில் தான் என்னால் பார்க்க முடிந்தது. தொடர்ந்தாற் போல  சில நாள்களாக அந்த செய்தியினைப் படிக்கவும்   நேர்ந்தது.

அதிலே தான் ஒரு சிக்கல். அந்த அக்காளுடைய வியாபாரம் சிறப்பாக நடப்பதில் நமக்கு மகிழ்ச்சியே! நம் இனத்தவர் ஒருவர் வெற்றிகரமாக ஒரு வியாபாரத்தைச் செய்கிறார் என்றால் அது நல்ல செய்தியாகத்தான்  நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  நம் மக்களும் அவருக்கு நல்ல ஆதரவைத் தரத்தான் செய்கிறார்கள்.

உண்மையில் நாம் எதிர்பார்ப்பது  இந்த ஆதரவைத்தான். நம் மக்கள்  ஆதரவு தர வேண்டும் என்பதைத்தான்  காலங்காலமாக  நாம் சொல்லி வருகிறோம். இந்தியர்கள் செய்கின்ற வியாபாரங்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்கள் செய்கின்ற வியாபாரங்களுக்கு நம் மக்களின் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.

ஆனால் அந்த அக்காள் செய்கின்ற அந்த சிறிய வியாபாரத்திற்கு  ஏன் இந்த அளவுக்கு அந்த செய்தியை பெரிதாகப் பரப்பி விளம்பரப்படுத்துகிறார்கள் என்பது தான் புரியவில்லை. அவர் வியாபாரம் நன்றாக நடக்கிறது. அதுவே போதும். பெரிய கூட்டம் வரிசைப்பிடித்து நிற்கிறது. இன்னும் விளம்பரப்படுத்துவதனால் இன்னும் கூட்டம் அதிகம் ஆகும். அந்த அக்காவால் அதனைச் சமாளிக்க முடியுமா? 

அவரையே சிந்திக்க விடுங்கள். அதுவே அவருக்குப் பயன் தரும். நாம் அனைவரும் சேர்ந்து அவருக்குப் புத்தி சொல்ல வேண்டாம். நாம் தேவையற்ற விளம்பரம் கொடுப்பதால் ........நம் மக்களில் ஒரு சிலருக்கு நல்லது நடப்பதைப்  பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.  நமக்குள்ளே அடித்துக் கொள்வது என்பது எப்போதும் நடப்பது தான். காட்டிக்கொடுப்பது, துரோகம் செய்வது - ஒரு சிலருக்குக் கைவந்த கலை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அவர் வெற்றி பெற வேண்டும். யாரும் தடையாக இருக்கக் கூடாது. நல்லது செய்கிறோம் என்று அவருக்குத் தீவினை செய்துவிடக் கூடாது 

அக்கா! உங்களை வாழ்த்துகிறோம்! நீங்கள் வெற்றி பெற வேண்டும். யாரை நம்ப வேண்டுமோ  அவர்களை மட்டும்  நம்புங்கள். நீங்கள் வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறோம்!

Thursday 13 April 2023

என்று தணியும் இந்த வெப்பம்?

"என்று தணியும் இந்த வெப்பம்?" என்று கேட்க வேண்டும் போல் தோன்றினாலும்  அட!  யாரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்பது என்று இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டியுள்ளது!

அட! பாவிகளா! இருந்த  மரங்களை எல்லாம் காலிபண்ணிவிட்டு இப்போது "குத்துதே! குடையுதே!"  என்று நம்மோடு சேர்ந்து காலிபண்ணியவர்களும்  புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் மக்கள் கூட திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்!

மரங்கள் இருந்தால் "உடனே வெட்டுங்கள்!" என்கிற உத்தரவு வந்துவடும். வெட்டிய பிறகு அவர்களுக்குச் சந்தோஷம். மக்களுக்கு  எரிச்சல்! என்ன செய்வது? அதிகாரம் தானே வெல்லும்!  அப்படித்தான் நாட்டில் இன்றைய நிலைமை!

நமது வீடுகளின் முன்னால் இப்போதெல்லாம் மரங்களை வைப்பதைக் கூட மக்கள் தவிர்க்கின்றனர்!  பூச்செடிகளை வைப்பதில் தவறு ஒன்றுமில்லை. முடிந்தவரை சிறியவகை மரங்களை ஒன்றிரண்டாவது வைக்கலாம். எங்கள் வீட்டின்  முன்னாலே ஒரு முருங்கை மரமும் ஒரு கருவேப்பிலை மரமும் நன்றாக நிழல் கொடுத்தன. . ஒரு சில காரணங்களால் அதனை வெட்டிவிட்டோம். இப்போது மீண்டும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. வளரும் வரை இன்றைய வெப்பத்தைக் தாங்க வேண்டும்!

இன்று நாம் வாழும் தாமான்களில் ஏதாவது குளிர்ச்சி தெரிகிறதா?  மரங்களே இல்லாத இடங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மரங்களே வேண்டாம் என்கிற காலகட்டத்தில் நாம்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் ஒரு சிலர்  மரத்தைப் பார்த்தாலே  அவர்களுக்கு என்ன கோபமோ! உடனே வெட்டிவிடத் துடிக்கிறார்கள்!

தனி நிலமாக இருந்தால் நாம் பெரும் பெரும் மரங்களை வளர்க்கலாம். தாமான்களில் அப்படியெல்லாம் வளர்க்க வாய்ப்பில்லை.  அதனால் நடுத்தர, சிறிய மரங்களை வளர்ப்பதால் எதுவும் கெட்டுப்போகாது. அதன் மூலம் நமக்கு நல்ல காற்றும்  கிடைக்கும்.

எப்படியோ மரங்களே இல்லாத இடங்களில் தான் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மிடையே ஏகப்பட்ட புலம்பல்கள்.  என்ன செய்வது? உஷ்ணம் தாங்காமல் என்னன்னவோ புலம்பிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது! தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள் என்கிறது சுகாதார அமைச்சு. இப்போதே சளி, காய்ச்சல் என்று பரவ ஆரம்பித்துவிட்டது.

அதனால் வெளியே சுற்ற வேண்டாம் என்பதே நமது ஆலோசனையும் கூட!

Wednesday 12 April 2023

நிதானமாக......!

 


பெருநாள் விடுமுறை ஆரம்பம்.

ஆமாம்! மலேசியாவில் ஹரிராயா ஆட்டம். மக்கள் தங்களது ஊருக்குத் திரும்புகின்றனர். ரோடுகளில் கார்களின் எண்ணிக்கை அமர்க்களப்படுகிறது.

சுமார் இருபது இலட்சம் கார்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று கணக்கிடப்படுகின்றது. அதுவும் இந்த ஆண்டு சில சலுகைகளையும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.  நான்கு நாள்களுக்கு வழக்கமான சாலைவரிகள் இல்லை.அதோடு நான்கு நாள்களுக்கு அரசாங்க விடுமுறை.

இரண்டு, மூன்று ஆண்டுகள் கொரோனாவின் பாதிப்பினால் கிராமங்களுக்குச் செல்வது அல்லது தங்கள்  சொந்த ஊரூக்குப் போவது  என்பதெல்லாம் தடங்களுக்கு உள்ளாகிவிட்டன.  விடுமுறைகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்குத் தான் இந்த ஆண்டு எல்லாவற்றுக்கும் பழிவாங்கும் ஆண்டாக மாறிவிட்டது!  சென்ற ஆண்டுகளில் சாக்குப்போக்குச் சொல்லலாம். இந்த ஆண்டு அது தான் இல்லை.

இந்த ஆண்டும் ஒரே ஒரு கட்டுப்பாடு உண்டு. கூட்டம் சேரும் போது முகக்கவசம் அணியுங்கள் என்று சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது. அதனை இப்போது யாரும் கடைப்பிடிப்பது இல்லை. முகக்கவசம் மீது யாரும் அக்கறைக் காட்டுவதுமில்லை. ஆனால் "பட்டுச்சினா?"  பட்டதுதான்!  அப்போது "நான்!" "நீ!" என்று சுட்டுவிரலைச் சுட்டுவது யாருக்கும் பயன் இல்லை!  ஆனாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக  இருங்கள் என்று மட்டும் தான் நம்மால் சொல்ல முடியும்.

ஹரிராயாவுக்கு என முக்கியமான செய்தி ஒன்று உண்டு. மகிழ்ச்சியாக,  குடும்பத்தோடு உங்கள் ஊரூக்குப் போகின்றீர்கள். அந்தப் பயணம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும். அது முக்கியம். பல நாள் சந்திக்க முடியாதவர்களை, இதோ! இப்போது சந்திக்கப் போகிறீர்கள்.  உறவுகளைப் புதுப்பிக்கப் போகிறீர்கள்.  சந்தோஷம்! மகிழ்ச்சி! அனைத்தும் தான்!

அந்த மகிழ்ச்சி நல்ல முறையில் அமைய வேண்டும். உங்கள் வாகனங்களை முறையாகப் பயன்படுத்துங்கள்.  அதிவேகம் வேண்டாம். வேகம் முக்கியமல்ல.  விவேகம் தான் முக்கியம். குடும்பம் தான் முக்கியம். காரிலுள்ள உங்கள் குடும்பம் முக்கியம். அதே போல உங்களுக்காக காத்துக் கிடக்கும் உங்கள் உறவுகளும் முக்கியம். யாரையும் நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.

காரில் போகும் போது நாம் போகும் வேகம் கூட நமக்குத் தெரிவதில்லை. எல்லாமே சாதாரணமாகத் தான் தெரியும். பார்த்து, நிதானமாக உங்கள் வாகனங்களைப்  பயன்படுத்துங்கள். 

நிதானம்! நிதானம்! நிதானம்! என்பது தான் நமது செய்தி!

Tuesday 11 April 2023

ஏன் இந்த தடுமாற்றம்?

 

                                   பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகாரன்

சமீபத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் பேசிய பேச்சினைக் கேட்டேன்.

அப்போது தான் ஒரு சந்தேகம். பொதுவாக எடுத்துக் கொண்டால் பிரபாகரனைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. இருக்கிறாரா, இல்லையா என்பது கூட தெரிவதில்லை!

மலேசிய அளவில் நமக்குத் தெரியவில்லையே  தவிர, ஒரு வேளை,  அவரது தொகுதி அளவில் அவர் பிரபலமாக இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை என்பதால் அவரை நம்மால் குறை சொல்ல முடியாது.

மன்னியுங்கள். பாதை மாறுகிறேன்! நான்  கேட்ட  அந்தப் பேச்சு டிக் டாக்கில் வெளியானது. அந்தப் பேச்சில் அவர் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருந்தார். அதாவது  அடையாளக்கார்டு, குடியுரிமை, பிறப்பு சான்றிதழ் போன்ற எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தன்னை அணுகலாம் என்று இந்தியர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்திருந்தார்.

பிரபா,  தனது தொகுதி மக்களுக்கு அந்த செய்தியினை விடுத்திருந்தால்  நாம் அதனைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அது அவரது கடமை என்று விட்டிருக்கலாம்.  ஆனால் பிரச்சனை என்பது அதுவல்ல. அவர் மலேசிய வாழ் இந்தியர்கள் அனவருக்குமே அந்த செய்தியைக் கொடுத்திருந்தார்!  அது தான் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது!

இந்தியர் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்பதற்காக பலவேறு அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.  குறிப்பாக நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழு அமைத்து, இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைய,  செயல்படப் போவதாக அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. செயல்படத் துவங்கவில்லை என்றாலும்  அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.

அதனால் தான் பிரபகாரனைப் பற்றி நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. அவர் மட்டும்  ஏன் தனித்து இயங்கப் பார்க்கிறார்  என்கிற சந்தேகம் தான். இந்த நாடாளுமன்ற குழுக்களில் அவர் சேர்ந்து கொள்ளாமல்  அவர் கழட்டி விடப்படுகிறாரா, புறக்கணிக்கப்படுகிறாரா என்பது நமக்குத் தெரியவில்லை.  அப்படி அவர் புறக்கணிக்கப்பட்டால் நமக்கு அதில் வருத்தம் தான். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து, ஒரு குழு அமைத்து செயல்பட்டால், நமது குரல்  இன்னும் பலமாக ஒலிக்கும்.

அப்படி அவர் புறக்கணிக்கப்பட்டால் அவர் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.  அவருடைய தொகுதியில்  அவரின் தொண்டு நிச்சயம் இன்னும் தேவைப்படும். அது பல்லினத் தொகுதி.  அடுத்த ஐந்து ஆண்டுகள் அங்கு அவர் தேவைப்படலாம்.  மற்றவர்கள் பொதுவாக இந்தியர் பிரச்சனையை அணுகலாம்.

எப்படியோ எது நடந்தாலும் சரி அவரவர் தொகுதியை அவரவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் குழுக்கள் அமைத்து இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இப்போது யார் தடுமாறுகிறார் என்பது தெரியவில்லை!  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!                         

Monday 10 April 2023

சம்பளக் குறைப்பு - பாராட்டுவோம்!

 

                                                     மலேசிய நாடாளுமன்றம்

சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள்.  நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 20 விழுக்காடு  தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.  பிரதமர் தனது சம்பளத்தை வாங்குவதில்லை.  இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பன்னிரெண்டு  இலட்சம் வெள்ளி சேமிக்கப்படுவதாக  பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி  கூறியிருக்கிறார்.

அரசாங்கத்திற்கு பன்னிரெண்டு இலட்சம் என்பதெல்லாம் மிகச் சாதாரண தொகை தான். செலவுகளோ கோடிக்கணக்கில். இலட்சங்கள் என்ன பெரிசா? இருந்தாலும் பரவாயில்லை. சிறிய துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா. அதனால் இந்த பன்னிரெண்டு இலட்சம் என்பது கூட ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நம்பலாம்.

அதே நேரத்தில் வேறொன்றையும் கவனிக்க வேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு நாட்டு நடப்பு தெரிவதில்லை. அதனால் தான்  இன்றும் நம்மிடையே தங்களது குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பவர்கள் இருக்கிறார்கள்!   இன்னும் பலர் தாங்கள் ஷோப்பிங் செய்வதே வெளிநாடுகளில் தான்! அந்த அளவுக்கு அவர்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்கள் என்றால் குறை சொல்ல ஒன்றுமில்லை.  ஆனால் இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள்! இவர்களிடம் தான் பணம் கொட்டிக்கிடப்பதாக  மக்கள் நம்புகிறார்கள்! 

அதனால் அரசியல்வாதிகள் ஒரு சிறிய தொகையை தங்களது சம்பளத்திலிருந்து  கொடுப்பதனால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை.  அவர்களும் இந்த நாட்டில் நல்லது கெட்டதுகளில் பங்கு எடுப்பதில்  தவறில்லை!

ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும்.   இன்றை விலைவாசிகள் நம்மைப் விழி பிதுங்க வைக்கின்றன. அரசாங்கம் விலைகளைக் குறைக்க  பல முயற்சிகள் எடுக்கின்றது. நாமும் அவர்களோடு சேர்ந்து அரசாங்கத்திற்கு ஒத்துழப்பை நல்க வேண்டும்.  தேவை என்றால் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். வாங்கிக் குவிப்பது,  இருப்பை அதிகரிப்பது - இவைகளெல்லாம்  தேவையற்ற வேலை.   இப்படி  பொது மக்கள் செய்தால்  வியாபாரிகள் பொருள்களைப் பதுக்குவார்கள்.  அதன் விலைகளை ஏற்றுவார்கள!   

வியாபாரிகள் விலைகளை ஏற்றுவதற்கு  மக்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். 

இந்த கஷ்ட காலத்திலும் நாமும் இருக்கிற பணத்தை வாரி  கொட்டாமல்  அதிலும் கொஞ்சம் இருப்பை சேர்த்து வைக்க வேண்டும். கஷ்டம் சரி, விலையேற்றம் சரி அதற்காக இருக்கிற பணத்தை எல்லாம் செலவழிக்க வேண்டும் என்பதில்லை.  அதிலும் கொஞ்சம் மிச்சம் பிடிக்க வேண்டும்.  அதுதான் சரியான வாழ்க்கை!   20 விழுக்காடு  நாமும் சேமிக்கலாம். அரசியல்வாதிகள் செய்வது நாட்டுக்காக! நாம் சேமிப்பது நமது நலனுக்காக!

Sunday 9 April 2023

தலைசுற்றுகிறதே தலைவா!

 


தலை சுற்றுகிறதே தலைவா! இப்படி ஒரு செய்தியை நாம் எதிர்பார்க்கவில்லை!

காலங்காலமாக பல மோசடிகளைச் செய்து வந்த ம.இ.கா. காரன் கூட இப்படி அகப்பட்டுக் கொள்ளவில்லையே! அது அவர்களது அனுபவத்தைக் காட்டுகிறது! அனுபவமற்ற உங்கள் பணியாளர்கள் இப்படி கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்களே!

யாராக இருந்தாலும் ஊழல்களை நம்மால் ஆதரிக்க முடியாது. அதைத்தான் பிரதமர் அன்வார் தனது அரசாங்கத்தில் ஊழல்களுக்கு வாய்ப்பில்லை  என்று கூறி வருகிறார். இருந்தும், அது தெரிந்தும், இப்படி நடந்திருக்கிறதே என்று அறியும் போது, சராசரி மலேசியன் என்னும் வகையில் மனம் கனக்கத்தான் செய்கிறது.

எடுத்த எடுப்பில், மனிதவள அமைச்சில் இப்படி ஒரு நிலையா என்று மனம் வேதலையுறுகிறது.  இப்போதைக்கு நாம் யாரையும் குற்றம் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது.  விசாரணைக்குப் பின்னர் தான் முழுவிபரங்களும் தெரியவரும். அமைச்சர் மீது எந்தக் குற்றச்சாட்டும் எழவில்லை.  அவரது பணியாளர்கள் மீது தான் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.  அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கின்றார்கள். சட்டம் தனது கடமையைச் செய்யும். செய்யத்தான் வேண்டும்.

ஆனாலும் பழி பாவம் என்னவோ அமைச்சர் மீது விழுவதைத் தடுக்க முடியவில்லை. அது அவர் சார்ந்த அமைச்சு.  செய்திகளில் அமைச்சர் தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்! அது மனதுக்குக்  கஷ்டமாகத்தான் இருக்கிறது. நல்ல சேவையாளர் என்று பெயர் எடுத்தவர். இப்படி ஒரு நிலையா அவருக்கு  என்று எண்ணமால் இருக்க முடியவில்லை. அவருடைய பணியாளர்கள் செய்த தவறினால் இன்று அவர் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர் மட்டுமா? இந்திய சமூகமே தலைகுனிய வேண்டிய நிலைமை தான்.

இந்தியர்கள் சார்பில் அமைச்சரவையில்  பங்கு பெரும் இந்திய அமைச்சர்கள் நமது இனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவது அவர்களின் கடமை. முன்பிருந்த கட்சி "நமக்கு என்னடா கௌரவம்!"  என்று அலட்சியம் காட்டியது போல இப்போதும் தொடர்வதை நாம் விரும்பவில்லை.  நாம் விரும்பமாட்டோம்.

நாம் என்ன தான் எழுதினாலும் பேசினாலும் ஊழல் என்று வரும்போது  அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராக இருந்துவிட்டுப் போகட்டும். நம்மால் அதனை ஆதரிக்க முடியாது. நம் இனத்தவன் என்பதற்காக நாம்  ஊழலை ஆதரித்துவிட முடியாது.

எது எப்படியிருந்தாலும் அமைச்சர் சிவகுமாரின் இந்த ஊழல் செய்திகளினால் அவரின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. இந்திய சமூகத்தில் யாரையும் நம்ப முடியவில்லையே என்கிற நிலை மீண்டும் ஏற்பட்டதாகவே நினைக்கிறோம்.

ஆரம்பமே தலைசுற்றுகிறதே தலைவா! என்ன செய்ய?

Saturday 8 April 2023

பட்டாசுகள் ஜாக்கிரதை!

 

பட்டாசுகள் மூலம் ஏற்படுகின்ற விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது வருத்தத்திற்குரியது என்பதில் சந்தேகமில்லை. 

இது எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது ஒரு விடயம் தான் என்று அலட்சியமாகவும் இருந்துவிட முடியாது.  ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும்  இந்த விபத்துகள்  நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாட்டில் பட்டாசு விற்க தடை உள்ளது என்று  சொல்லப்படுகிறதே தவிர நமக்கு அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை. அதுதான் பெருநாள் காலம் என்றாலே வெடிகள் வெடிக்கின்றனவே! அதுவும் சாதாரண வெடிகள் அல்லவே!  பூமியே அதிரும் அளவுக்கு வெடிகள் வெடிக்கப்படுகின்றனவே! யார் கண்டு கொண்டார்கள்? தடை என்று சொல்லிவிட்டு தடைகள் இல்லாமல் பட்டாசுகள் தாராளமாக பயன்படுத்தும் நாடு என்றால் அது நமது நாடு தான்! 

பெருநாள் காலங்களில் பட்டாசுகள் வெடிப்பது  என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.  அதற்காக பட்டாசு வெடித்து ஒரு குழைந்தைக்கு உடல் முழுவதும் காயம் என்றால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

சரி, பெருநாள் காலம் என்றால் பட்டாசு வெடிப்பது நமக்கு ஒரு பழக்கமாகி விட்டது.  அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் நமது வியாபாரிகள். தடை என்று சொன்ன அரசாங்கம்  பின்னர் பின்வாங்கிவிட்டது.  இப்போது முன்பிருந்த பழைய நிலைமைக்கே திரும்பிவிட்டோம். 

இப்போது என்ன செய்யலாம்?  நமக்குத் தெரிந்த ஒரே வழி சிங்கப்பூரைப் போன்று முழுமையாக தடை செய்துவிட வேண்டியது தான். பாவம்! சீனா ஏமாந்து போய்விடும்! அதனால் ஒன்று செய்யலாம். வெடி பட்டாசுகளைத் தடை செய்துவிட்டு சிறு குழந்தைகள், பெரியவர்கள்  - யாரையும் அதிகம் பாதிக்காத - மிக எளிமையான பட்டாசுகளை பயன்படுத்தலாம். பூ போன்ற பட்டாசுகள் உள்ளன. குழந்தைகள் கூட அதிக பாதிப்புகள் இல்லாமல் விளையாடலாம்.

தீ காயங்கள் ஏற்பட்டு குழந்தைகள் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு தீ சம்பவங்களைக் குறைக்கலாம். 

அரசாங்கம் நினைத்தால் எதனையும் செய்யக்கூடிய ஆற்றல் அவர்களிடம் உள்ளது. வியாபாரிகள் பணம் சம்பாதிப்பது தான் முக்கியம், கமிஷன் தான் முக்கியம் என்று நினைத்தால் யாரும் ஒன்றையும் கிழித்துவிட முடியாது!

பட்டாசுகள் ஆபத்தானவை! அதன் மூலம் ஏற்படுகின்ற ஆபத்துகளைக் குறைக்க வேண்டும்!  இதுவே நமது வேண்டுகோள்!

Friday 7 April 2023

நேர்காணலில் வெற்றி பெற....!

 

வேலை தேடிப்  போகும் இளைஞர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்.  புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே நீங்கள் அறிந்தது தான்.

மற்ற இன இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும் போது நமது இளைஞர்களுக்கு மட்டும் கதவுகள் ஏன் அடைக்கப்படுகின்றன? நமக்குத் திறமைகள் இருந்தும் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம். நம்மிடம் என்ன தான் திறமைகள் இருந்தாலும் எங்கோ நாம் தவறுகள் செய்கின்றோம்! அந்த தவறுகள் என்ன என்பதை நாம் கொஞ்சம் கவனிப்போம். 

பொதுவாக நமது  இளைஞர்கள் காதுகளில் கடுக்கன் போடுகின்ற பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். அதிலும் ஒருசிலர் கொண்டையும் வைத்துக் கொள்கின்றனர்!   நமக்கும் கூட அதைப் பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. கடுக்கன் ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கொண்டை என்பது பெண்களுக்கு உரியது.  அதனை மற்ற இனத்தவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

ஒரு சிலர் உடல் பூராவும் பச்சை குத்திக் கொள்கின்றனர்.  அது அவர்களது விருப்பம் தான். நம்மால் ஒன்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முடிந்த வரை, நீங்கள் நேர்காணலுக்குச் செல்லும் போது, பச்சை குத்தியிருக்கும் இடங்களை மறைத்துக் கொள்வதற்கு  ஏதுவாக பச்சை குத்திக் கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் காலங்களில்  ஒரு வேளை அதற்கு யாரும் முக்கியத்துவம்  கொடுப்பதில்லை.  ஆனால் நீங்கள் வேலைக்குப் போகும் காலத்தில் அது மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும்!

நம்முடைய பிரச்சனையே நமது வெளித் தோற்றம் தான். உங்களைப் பார்த்து  மற்றவர்களுக்குப் பயம் ஏற்படுகிறது என்றால்  நேர்கானல் செய்பவர் நிலை என்ன? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் நமது தோற்றம் நம்மை வேறு மாதிரியாகக் காட்டுகிறதே!

நேர்காணலுக்குப் போகிறவர்கள் நிச்சயமாக நல்ல தோற்றத்தோடு போக வேண்டும். நல்ல முறையில் உடை உடுத்தி இருக்க வேண்டும்.  கழுத்துப்பட்டை  அணியலாம். அது உங்கள் கல்விக்கு ஏற்ப தேவையா, தேவையில்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உயர் பதவிக்காக நேர்காணலுக்குப் போகிறவர்கள் நிச்சயமாக  கழுத்துப்பட்டை அணியலாம். தாடி வைத்திருந்தால் கூட அது பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும்.

நிச்சயமாக வேலை கிடைத்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் கடுக்கன், கொண்டை, பச்சை குத்தியிருப்பது போன்றவற்றை தவிர்த்துவிட்டால் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லது! வேலைக்கு எடுக்கும் நிர்வாகங்கள் வருபவர்கள் நல்ல தோற்றம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது  இயல்பு. அடிபுடி சண்டைக்கா ஆள் எடுக்கிறார்கள்?

என்ன தான் படித்திருந்தாலும் குறைந்தபட்சம் நல்ல,  இயல்பான தோற்றம் உடையவர்களாக நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன. நம்முடைய தோற்றத்தைப்பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை. எப்போதும் போல இயல்பாகவே இருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை! 

வெற்றி பெற வாழ்த்துகள்!

Thursday 6 April 2023

ஓகே பாஸ்!

 

ஒரு சில சமயங்களில் சில அதிசயங்கள் நடப்பது உண்டு. அதில் இதுவும் ஒன்று. அதுவும் நமது நாடான மலேசியாவில்! எப்படியோ நல்லது நடந்தால் பாராட்டுவோம். அவர்களை ஊக்குவிப்போம்! அதுவே நமது கடமை.

கிளந்தான் மாநிலத்தில்  இரு கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தை  நடத்திவரும் கைருள் அமிங் அந்த பாராட்டுக்குரியவர். அவருடைய நிறுவனத்தின் பெயர் "சம்பல் நியாட் பெராப்பி" ஆகும்.  அவருக்கு வயது 30.  சம்பல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறார்! நாம் தினசரி உணவில் சாப்பிடும் சம்பல் தான் அவரது முதலீடு. அவரிடம் சுமார் அறுபது பேர் வேலை செய்கின்றனர். 

தங்களது தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் வடிகட்டிய கஞ்சர்கள் என்று பேசப்படும் முதலாளிகளுக்கிடையே இப்படி ஓர் அபூர்வ முதலாளி இருக்கிறார் என்றால் யாருக்குத்தான் ஆச்சர்யம் வராமல் இருக்க முடியும்?

அந்த முதலாளி அப்படி என்ன தான் செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.  ஒவ்வொரு தொழிலாளிக்கும் புத்தம் புதிய ஐம்பது ரிங்கிட் நோட்டுகளை அப்படியே  ஒரு கவர் கூட்டில் வைத்து தானே ஒவ்வொரிடமும் கொடுத்திருக்கிறார்! ஒவ்வொரு கவர் கூட்டிலும் சுமார் 3,000 ரிங்கிட் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  ஒவ்வொரு தொழிலாளியும் தள்ளாடித்தான் போயினர்!   முதலாளி இப்படி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவார்  என்று யாரும்  எதிர்பார்க்கவில்லை!

அத்தோடு அவர் நிறுத்திவிடவில்லை.  பெருநாளைக் கொண்டாட துணிமணிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அன்று அவர்களோடு நோன்பும் துறந்திருக்கிறார்! அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். 

இது போன்று இவர் செய்வது இது முதல் முறையல்ல. சென்ற ஆண்டும் அவர் செய்திருக்கிறார். அது ஒரு வகையில் உல்லாச பயணமாக அமைந்திருந்தது.

முதலாளிகள் இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்ததில்லை.  ஆனால் இருக்கிறார்கள்.  நல்ல செய்தி. முதலாளிகள் எப்போதும்  தங்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனுக்கும் அக்கறை காட்ட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இப்படியும் ஒரு மாமனிதர்! கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாராக!

Wednesday 5 April 2023

அதிகாரத்தைக் காட்ட வேண்டாம்!

 


கம்போடியா:  புத்த ஆலயங்கள் 5,000 என கணிக்கப்படுகின்றது.

உலகம் எங்கிலும்  புத்த ஆலயங்கள், புத்தரை வழிபடும் மக்கள் பல கோடிகள் இருக்கின்றனர். நம நாட்டிலும் பெரும்பாலும் சீனர்கள் புத்த மதத்தினரே.

ஆனால் கம்போடியாவில் மொத்த மக்கள் தொகையில் புத்தரை வழிபடுபவர்கள் சுமார் தொண்ணூறு  விழுக்காட்டினர்   என்பதாகவும், மீதம் பத்து விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்பதாகவும்  சமீபத்தில்  நடந்த ஒரு நிகழ்ச்சியில்    பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார். 

அவர் ஏன் அதனைக் கூறினார் என்பது தான் முக்கியம். தொண்ணூறு விழுக்காடு புத்த சமயத்தினர்  வாழ்கின்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை.  அவர்கள் நாட்டின் எல்லாத்  துறைகளிலும் பணிபுரிகின்றனர். அரசாங்கத்துறைகள், தனியார் துறைகள்,  தொழில் துறைகள்  - இப்படி அனைத்து துறைகளிலும் அவர்கள் கம்போடியர் என்னும் வகையில் எந்தவித பாகுபாடுமின்றி பணிபுரிந்து வருகின்றனர். புத்த மதத்தினர் அவர்கள் மீது  எந்த காழ்ப்புணர்ச்சியும் கொண்டிருக்கவில்லை. தங்களது எண்ணிக்கையை வைத்து அந்த மக்கள் மீது  தங்களது அதிகாரத்தைக் காட்டவில்லை. இது கம்போடியாவில். 

அதே சமயம் மலேசியாவில் என்ன நடக்கிறது என்பதைத்தான் பிரதமர் சுட்டிக்காட்டினார். இங்கு சிறுபான்மை மக்கள் மீது, சிறுபான்மை மதத்தினர் மீது  பல வழிகளில் அவர்கள் நசுக்கப்படுகின்றனர் இன்னும் ஒடுக்கப்படுகின்றனர். அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதைத்தான் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதுவும் குறிப்பாக இந்தியர் சிறுபான்மையினர். சுமார் ஏழு விழுக்காட்டினார்.  அவர்கள் பல வழிகளில் அதிகார வர்க்கத்தினரால் பழி வாங்கப்படுகின்றனர்.  இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பதற்கு யார் காரணம்? குடியுரிமை இல்லாததற்கு யார் காரணம்? நீல அடையாளக்கார்டு இல்லாததற்கு யார் காரணம்? அரசாங்க வேலைகள்  மறுக்கப்படுவதற்கு யார் காரணம்? உயர்கல்வி மறுக்கப்படுவதற்கு யார் காரணம்? அவர்களது எண்ணிக்கை தானே காரணம்! அவர்களது அதிகாரம் தானே காரணம்!

பிரதமர் சரியான நேரத்தில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நாம் அனைவரும் மலேசியர் என்கிற எண்ணம் நம்மிடம் இல்லை. அதுவும் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் உடையவர்களிடம் இல்லை. ஒரு நாட்டின் முன்னேற்றம் அனைவரின் கையிலும்  இருக்கிறது. தனியாக முன்னேற்றிவிட முடியாது! விதண்டாவாதம் பேசலாம்!  ஆனால் வீழ்ந்து போகும்!

அதிகாரம் வலிமையானது. அதனை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என்பது அறிந்து, புரிந்து பயன்படுத்துவோரே புண்ணியம் அடைகிறார்கள்!


Tuesday 4 April 2023

வேலை செய்யாம எப்படி இருக்கிறது?

 

                                    "சும்மா இருந்துபாரு தெரியும் கஷ்டம்!"

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார்: "சும்மா இருந்து பாருங்கடா! அப்பத்தான்டா அந்தக் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்!"

உண்மையாகவே மேலே படத்தில் உள்ள பெண்மணிக்கு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. வசதிகள் இருக்கின்றன. பெட்டியில் பணம் இருக்கின்றது.  கார் இருக்கின்றது. ஆனால் அதற்காக வீட்டில் சும்மா முடங்கிக் கிடக்க வேண்டுமா என்ன?   வேலை செய்யாமல் எப்படி சும்மா இருக்கிறது என்கிற கேள்விக்கு  அவருக்குத் தெரிந்த ஒரே பதில்:  போய் உன்  வேலையைச்  செய்! என்பது மட்டும் தான்.

அதைத்தான் செய்தார் சீனா, சிசூவான் மாநிலத்தின் செங்டு நகரத்தில் உள்ள பெண்மணி ஒருவர்.  அவருக்குத் தெரிந்த வேலை என்பது உணவகங்களில்  உணவுத்தட்டுகளைக் கழுவுகிற வேலை தான். உணவுத்தட்டுகள் மட்டும் அல்ல இன்னும் உணவகத்தைச் சுத்தம் செய்வது, கழிவறைகளைக் கழுவுவது போன்ற வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது அவரது வாடிக்கை. அதிலே அவருக்கு ஒரு திருப்தி. "என்னால் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவாமல் இருக்க முடியாது. அது எனது தினசரி வேலையாக பழகிப் போய் விட்டது" என்கிறார் அவர்.

அவர் இப்படியொரு வேலை செய்வது எப்படி வெளிச்சத்திற்கு வந்தது? காலையில் வேலைக்கு வரும் போது தினசரி   அவர் Bentley காரில் வந்திறங்குவதை பத்திரிக்கை நிருபர்  ஒருவர் கவனித்துவிட்டார்  அப்படி வந்து இறங்கும் போது பத்து பாத்திரங்கள் கழுவும் உடையோடும்  கால்களில் கறுப்பு நிற  தடித்த பூட்ஸ்களோடு  வந்து இறங்குவதைப் பார்த்து  அதை செய்தியாக்கிவிட்டார்! பின்னர் அது உலக செய்தியாக மாறிவிட்டது!

இந்தப் பெண்மணியின் மகள் என்ன சொல்லுகிறார்?  "என் தாயாரால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அவர் வேலைக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் விரும்பியதைச் செய்யட்டும் என்று நான் விட்டுவிட்டேன். இப்போது ஓர் உணவகத்தில் அவர் வேலை செய்கிறார். நான் தான் அவரை எனது Bentley காரில் காலையில் உணவகத்திற்குக் கொண்டு செல்வதும் திரும்பவும் மாலை நேரத்திலும்  கொண்டு  வருவதுமாக இருக்கிறேன்.  அவர் என்ன விரும்புகிறாரோ  அதை செய்யட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை!" என்கிறார்.

சீனர்கள் பொதுவாகவே சும்மா இருக்க விரும்புவதில்லை. நம் நாட்டில் கூட அதனை நாம் பார்க்கிறோம். தங்களால் முடியும்வரை வேலை செய்கிறவர்கள் அவர்கள். வயதாகி விட்டது. ஓய்வு எடுக்கலாம் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.  ஓய்வு எடுக்கும் கலாச்சாரம் அவர்களிடம் இல்லை.

வழக்கமாக சொல்லுவதைப் போல சீனர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது  நிறையவே உள்ளன! கற்றுக்கொள்ள முயற்சி  செய்வோம்!

Monday 3 April 2023

மாணவர்கள் புகைபிடிக்கிறார்களா?

 

புகைபிடிப்பதறகும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அப்படி ஒரு சம்பந்தம் இருப்பதாக நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், படித்துக் கொண்டும் வருகிறோம்.

இப்போது நமது நிலை என்னவென்றால் சிகிரெட் என்றால் புற்றுநோய், புற்றுநோய்  என்றால் சிகிரெட். இது தான் நமது புரிந்துணர்வு. அதில் தவறில்லை என்பதும் நிதர்சனம்!

இப்படி ஒரு நிலையில் சிகிரெட் பிடிப்பது அவசியமா என்று கேள்விகள் எல்லாம் அனாவசியம்.  தந்தை பிடிப்பதை மகன் பார்க்கிறான். டாக்டர் சிகிரெட் பிடிப்பதை ஒரு  நோயாளி பார்க்கிறான். பெரிய மனிதர்கள், மிக மிகப் பெரிய மனிதர்கள் சிகிரெட் பிடிப்பதை இந்த உலகமே பார்க்கிறது.

இப்படியெல்லாம் சிகிரெட்டுக்கு நல்ல விளம்பரம் கொடுத்துவிட்டு  "பிள்ளைகளே நீங்கள் சிகிரெட் பிடிக்காதீர்கள்" என்று சொன்னால் நாமே தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஆமாம் நமது நாட்டு இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சுமார் 43,000 பள்ளி மாணவர்கள் சிகிரெட் பிடிக்கிறார்களாம்! இதனை ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அந்த புள்ளிவிபரத்தை நான் நம்பவில்லை.  இன்னும் அதிகமான மாணவர்கள் இருக்க வேண்டும் என்பது தான் எனது கணிப்பு. 

இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க வேண்டும்?  மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்  சிகிரெட்டுகள் நாடு முழுவதும் பெரிய, சிறிய அஞ்சடி கடைகள்வரை மிக மிகத் தாராளமாகக் கிடைக்கும் என்பது தான்! எத்தனையோ சாமான்கள் நாம் தேடித்தேடி பார்த்தாலும் கிடைப்பதில்லை. ஆனால் சிகிரெட்டுகளுக்கு அத்தகைய துன்பங்கள் ஏற்படுவதில்லை! எல்லாகடைகளிலும் கிடைக்கும். நாடு முழுமையும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் அது சிகிரெட் தான்! இது ஒன்றே போதும் நமது மாணவர்கள் சிகிரெட்டுகளின் அடிமைகள் ஆவதற்கு.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் உதாரணமாக இருக்க வேண்டும்.  அதெல்லாம் நடக்கிற காரியமாக இல்லை.  பள்ளி அசிரியர்கள் தான் மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டியவர்கள்.  இன்றைய நிலையில்  அவர்கள் அப்படி இருக்கிறார்களா என்பது கேள்விக் குறியே. அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை. "எங்களுக்கென்ன!"  என்கிற அலட்சியம்  அதிகம்!

சரி அவர்களை விடுங்கள்.  வீட்டில் இருக்கும் பெரியவர்களாவது ஓர் உதாரணமாக நடந்து கொள்கிறார்களா என்றால்  அதுவுமில்லை.  அவர்களே பிள்ளைகளிடம் சிகிரெட் வாங்கி வரச்சொல்லி கடைகளுக்கு அனுப்புவதும் குழந்தைகளுக்கு முன்னால் சிகிரெட் பிடிப்பதும்  எல்லாமே தலைகீழாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது.  தந்தை என்ன செய்கிறாரோ அவரைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள். சொல்லுபவற்றை அல்ல செய்பவற்றுக்குத்தான்  பிள்ளைகள்  முதலிடம் கொடுப்பார்கள்!

என்ன தான் சொன்னாலும் எழுதினாலும் யாரும் புகைபிடிப்பதை யாரும்  நிறுத்தப் போவதில்லை. பெற்றோரும்  நிறுத்தப் போவதில்லை! ஆசிரியர்களும் நிறுத்தப் போவதில்லை! உடலுக்குக் கேடு என்று சொல்லும் டாக்டர்களும் நிறுத்தப் போவதில்லை!

மாணவர்கள் மட்டும் நிறுத்திவிடப் போகிறார்களா?

Sunday 2 April 2023

எல்லாமே அளவு தான்!

 

உணவுகளை வீணடிக்க வேண்டாம்! என்பது தான் நமது செய்தி. எல்லாவற்றுக்கும் அளவு உண்டு.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது நம்மிடையே உள்ள பழமொழி.

ஆனால் நமது நாட்டில் ஓர் அதிசயம் நிகழ்வதுண்டு. எப்போதும் இல்லாத உணவு குப்பைகள் மற்ற மாதங்களைவிட இந்த புனித ரமலான் மாதத்தில் தான் அதிகம். மிக மிக அதிகம்.

ரம்லான் சந்தைகளில் உணவுப் பொருள்களை வாங்குபவர்கள்  வீட்டிலுள்ள பெரியவர்கள் தான். பெரியவர்களுக்கு வீட்டிலுள்ள மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பது தெரியும். ஆக தேவையான அளவு வாங்கினால் போதும். இதற்கு அப்படி ஒன்றும் பெரிய பெரிய  கல்வி அறிவு தேவை இல்லை.  நமக்கே தெரியும். யார் சாப்பிடுவார், யார் சாப்பிட மாட்டார், எந்த அளவு சாப்பிடுவார், கூட சாப்பிடுவாரா, குறையாக சாப்பிடுவாரா  போன்ற விபரங்கள் எல்லாம் வீட்டுத்தலைவிக்கு  தெரிந்து தான் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றாற் போலத்தான் நாம் நமது உணவுகளை வாங்க வேண்டும்.  எதையும் தெரிந்து கொள்ளாமல் ஏதோ கையில் பணம் இருக்கிறதே என்பதற்காக  சும்மா உணவுகளை வாங்கிக் குவிப்பதும், சாப்பிடமுடியாத போது, அவைகளைக் குப்பையில் எறிவதும்  மிக மிக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

யார் வீட்டுப் பணமாக இருந்தால் என்ன? ஒரு சாரார் உணவுகளை வீணடிப்பதும் அதே சமயத்தில் இன்னொரு சாரார் உணவுக்காக ஏங்குவதும் - இவைகளையெல்லாம் நாம் தெரியாமலா இருக்கிறோம்? தெரியாவிட்டாலும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  யாரையும் அலட்சியப் படுத்தி விடக் கூடாது  அல்லவா?

இன்று நாம் யூடியூப், விடியோ இப்படி எதனைத் திறந்தாலும் அழுகுரல்கள் கெட்கின்றனவே! யாருடைய குரல் அவை? உணவுக்காக அலையும் மக்கள் குரல் தானே?

உணவுகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அப்படியே உணவுகள் மிஞ்சினால் கூட அவைகளைக் கொண்டு போய் நாய்களுக்குப் போடுங்கள். அவைகளாவது திருப்திகரமாகச் சாப்பிடும்.  நாய்கள் என்னும் போது அதைக் கேவலமாக நினைக்க வேண்டாம். அதுவும் ஓர் உயிர் தான். உணவுகளைக் குப்பையில் போடுவதைவிட அதை நாய்களாவது சாப்பிடட்டுமே! யாரும் தாழ்ந்துவிடப் போவதில்லையே!

உணவுகளை அளவாக வாங்குங்கள். அல்லது அளவாக சமையுங்கள். வீணடிக்காதீர்கள்.  குப்பையில் வீசாதீர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.  உணவு நஞ்சாகாது! மனம் நஞ்சாகும்!

Saturday 1 April 2023

இனி தடையில்லை!

 

பொதுவாக அரசியல்வாதிகள் பள்ளிகளுக்கு உதவி செய்வது என்பது எல்லாகாலங்களிலும் நடந்து கொண்டு வரும் ஒரு செயல் தான்.

அப்போதெல்லாம் ஒரே அரசாங்கம் மட்டும் தான். அதனால் அப்போது தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி என்றால் அது ம.இ.கா. வினர் மட்டும் தான். வேறு  யாரும் பள்ளிகளுக்குள் புகுந்துவிட முடியாது. தலைமை ஆசிரியர்களும் அனுமதி கொடுக்கமாட்டார்கள். அது இயல்பு தான்.  காரணம் அவர்களில் பலர் ம.இ.கா.வில் ஏதோ ஒரு பதவியில் இருப்பவர்கள்.  அதனை நாமும் புரிந்து கொள்கிறோம்.

பின்னர் பக்காத்தான் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் உதவி செய்ய முடியவில்லை!  தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.  இது ஒரு தொடர்கதை தான்.

ஆனால் நிலைமை இப்போது மாறியிருக்கிறது. மத்திய அரசாங்கம் அல்லது ஒற்றுமை அரசாங்கத்தில்,   நம்பிக்கை கூட்டணியின்   பக்காத்தான் தான் முன்னணி கட்சியாக விளங்குகிறது. பக்காத்தான் கட்சியே ஆளுங்கட்சியாக விளங்குகிறது.

இப்போது  பள்ளிக்கூட நிர்வாகம் கொஞ்ச அடக்கி வாசிக்கிறது என்பது நமக்கும் புரிகிறது. இனி பழைய நிலைமை திரும்புமா என்பது இப்போது சொல்வதற்கில்லை. முன்பெல்லாம்  "உங்கள் உதவி எங்களுக்குத் தேவை இல்லை!" என்று முகத்தடித்தால் போல பேசியவர்கள்  இப்போது அப்படி பேசுவதற்கான வாய்ப்பில்லை!

ஆனால் அவர்களையும் குற்றம் சொல்லுவதில் புண்ணியமில்லை. மாநில கல்வித்துறை சொல்லுவதைத்தான் அவர்கள் கேட்பார்கள். இப்போது மத்திய கல்வித்துறை பக்காத்தான் கையில் இருப்பலதால்  இப்போது யாருக்கும் யாரும் தடையில்லை.  யார் செய்தால் என்ன? நமக்குத் தேவை பள்ளிக்கூடம் பயன் அடைய வேண்டும். அதை யார் செய்கிறார்களோ அவர்களை நாம் பாராட்டுவோம். அவ்வளவு தான். இங்கு அரசியலைப் புகுத்துவது சரியானது அல்ல என்பது தான் நமது நோக்கம்.

இப்போது ஒற்றுமை அரசாங்கம்  எதிர்கட்சிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.  எந்த விதிமுறையும் மீறக்கூடாது. முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் போன்ற ஒரு சில கட்டுப்பாடுகள் உண்டு. அது எப்போதும் உள்ளது தான். புதிது ஒன்றுமில்லை.

தடையில்லை  என்பதற்காக விதிமுறைகளை மீறினால் அதனால் வரும் ஆபத்துகளையும்  எதிர்க்கட்சிகள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். காரணம் ஒரு சில கட்சிகள் எந்த  விதிமுறைகளையும் மீறுவோம்  என்கிற  நோக்கம் உடையவை.

எப்படியோ நல்லது நடக்க வேண்டும்.  பள்ளிகள் சிறப்பாக இயங்க வேண்டும். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!