Friday 31 August 2018

210 கோடியா...? அடேங்கப்பா...!

விமான விபத்தில் இறந்த போன முன்னாள் அமைச்சரும் பின்னர் அமெரிக்க  தூதுவராக இருந்தவருமான  ஜமாலுடின் ஜர்ஜிஸ் ஸின் சொத்து விபரம் இப்போது தெரியவந்திருக்கிறது. அவரது 85 வயது தாயார், தெரிந்தோ தெரியாமலோ,  தனது மகனின் அருமை பெருமைகளை வெளியுலகிற்குக் கொண்டு வந்துவிட்டார்!  

அவரது தாயார், இந்த 85 வயதில், மகனின் சொத்தில் பங்குக் கேட்கிறார்! யாரோ பின்னால் இருந்து அவரை இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது!

ஜமாலுடின்,  டாக்டர் மகாதிர் காலத்தில் அமைச்சரானவர். அதன் பின்னர் பல பதவிகள் வகித்தவர். ஆனாலும் அவர் எல்லாக் காலங்களிலும் வேலை செய்து பிழைத்தவர். அவர் தொழில் அதிபர் அல்ல. அவர் சராசரியான ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.

ஒரு சிறிய கணக்கு. அமைச்சருக்கான சம்பளம் சுமார் RM20,000/- வெள்ளிக்குக் கீழே.  அவருடைய சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். அவர் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு காசு கூட செலவு செய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுவோம். அவர் குடும்பத்துக்குக்  கூட செலவு செய்யவில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். இப்படி அவர் ஆயுள் முழுக்க சம்பாதித்த அவருடைய சம்பாத்தியத்திலிருந்து ஒரு காசு கூட செலவு செய்திராவிட்டாலும் கூட இந்த அளவுக்கு அவரால் சொத்து சேர்த்திருக்க முடியுமா என்பது தான் இப்போது அனைவராலும் கேட்கப்படுகின்ற கேள்வி!

இது ஒர் எடுத்துக்காட்டு.  அவ்வளவு தான். இப்போது நமது முன்னாள் அம்னோ அமைச்சர்கள், ம.இ.கா., ம.சீ.ச. அமைச்சர்கள்  அனைவரும்  அவர்களின் சொத்துக் கணக்குகளை அறிவித்தால் எப்படி இருக்கும்? அதுவும் நமது தானைத் தலைவரின் சொத்துக்கள் .....? இந்தியர்களின் சொத்துக்களையே கபளீகரம் செய்தவர்! எப்படி இவர்களால் நாளிதழ்களை நடத்த முடிகிறதென்றால் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அவர்களிடம் இருப்பதால் தானே!

இத்தனை ஆண்டுகள் எப்படியெல்லாம் இவர்கள் நாட்டை வழி நடத்தியிருக்கிறார்கள்! திருடர்கள் நாட்டை வழி நடத்தி, திருடர்களை உருவாக்கி,  கடைசியில்  திருடுவதற்கு ஏதும் இல்லாமல் சீன நாட்டுக்கே நாட்டை எழுதி வைத்திருக்கிறார்களே!

ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். முன்னாள் அமைச்சர்கள் குறைந்தபட்சம் 200 கோடிவெள்ளி சொத்துக்களைத் தங்களது வாரிசுகளுக்கு விட்டுச் செல்வார்கள் என நம்பலாம்! அது நமது இந்திய அமைச்சர்கள் உட்பட! அடேங்கப்பா....!

அட! இப்படியும் ஒரு மனிதரா...!

வேட்டி கட்டுவது என்பது நமது பாரம்பரியம். அந்தப் பாரம்பரியத்தை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது விழாக்காலங்களிலும். திருமண நிகழ்வுகளிலும்  வேட்டி கட்டுவது என்பது தொடரத்தான் செய்கிறது.



ஆனாலும் அமெரிக்காவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் "நான் விமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்!"  என்று அடம்பிடித்து எல்லா நடைமுறைகளையும் தகர்த்தெறிந்து வேட்டியைக் கட்டிக்கொண்டு விமானம் ஓட்டிய அந்த இளைஞரைப் பற்றியான செய்தியைப் படித்த போது  "அந்தத் தமிழன் என்கின்ற திமிர்" நம் அனைவருக்கும் இருப்பது அவசியம் என்றே  நினைக்கிறேன்.  சாக்குப் போக்குச் சொல்ல வேண்டாம். நம்மால் முடியும்.

அந்த இளைஞரின் பெயர் ரவிகரன் ரணேந்திரன்.   பொறியியல் மாணவரான  இவர் பேசுகின்ற தமிழும் பிறமொழி கலவா தூய தமிழில் பேசுகிறாராம். வாழ்த்துகிறோம்!  மற்றவர்களுக்கு நாம் அறிவுரை சொல்லும் முன்னமே நாமே மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக  இருப்பது  அவசியம் தானே!


இவரைப் போன்று பல இளைஞர்கள் தமிழன் என்கிற தனித்த அடையாளத்தோடு நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்களை வாழ்த்துவோம்! வரவேற்போம்!

கேள்வி - பதில் (86)

கேள்வி

தி.மு.க. வின் நிரந்தர தலைவராக மு.க.ஸ்டாலின் ஆகிவிட்டார். இனி மு.க.அழகிரியின் நிலை என்னவாக இருக்கும்?

பதில்

மு.க.அழகிரியின் தலைவர் கனவு, கனவாகப் போய்விட்டது!  அவர் என்ன தான் பேசினாலும் அவர் தலைவராகும் நிலையிலும் இல்லை.  அவரின் உடல் நிலையும் சரியாக இல்லை என்றே தோன்றுகிறது.

கட்சியில் தொண்டர்கள் ஸ்டாலின் பக்கம் தான். காரணம் தொண்டர்கள் தலைவர் பக்கம் தான் இருப்பார்கள். தலைவர் வெறும் தலைவராக மட்டும் இல்லை தனவந்தராகவும் இருக்கிறார்! 

அழகரி முடிந்தால் வேறு ஒரு கட்சியில் இணையலாம். அப்படி இணைந்தாலும் அந்தக் கட்சிக்குப் பெரியதொரு பலமாக  அது அமையப்போவதில்லை. அவரால் தனியாக ஒரு கட்சியும் அமைக்க முடியாது. அந்த ஆற்றல் அவரிடம் இல்லை. தொண்டர்களும் தயாராக இல்லை. 

மதுரையையே ஆட்டிப்படைத்த அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நிலை  இப்படியா  ஆக வேண்டும்?

எப்படி  கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் தி.மு.க.வைத் தவிர வேறு போக்கிடம் அவருக்கு இல்லை. அப்படியே தி.மு.க.வின் உறவை அவர் துண்டித்தாலும் அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களை மறந்துவிட வேண்டிய நிலை வரும். அனைத்தையும் ஸ்டாலின் வாரிசுகளுக்கு எழுதி வைத்தது போல் ஆகிவிடும். அது எப்படி முடியும்?

அதனால் அவர் தி.மு.க. வோடு ஒட்டிக் கொண்டு தான் தனது மீதக் காலத்தை ஓட்ட வேண்டும். அப்போது தான் இவருடைய வாரிசுகளுக்கு ஏதாவது தி.மு.க. சொத்துக்களில்  பங்குக் கிடைக்கும்.

ஸ்டாலின் -  அழகிரி சண்டை என்பது திமு,க,வில் உள்ள சொத்து சண்டை தான்.  ஸ்டாலின் இப்போது தி.மு.க.வின் நிரந்தரத் தலைவர். இனி அந்தப் பதவி அவரின் பிள்ளைகளுக்குத் தான் போகும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் நிலை என்னவென்று பார்ப்போம்!

Thursday 30 August 2018

யார் தான் பொறுப்பு...?

நாடற்றவர்கள், குடியுரிமை பற்றியெல்லாம் பேசும் போது ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான புள்ளி விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. எது சரியென்று நமக்குத் தெரியவில்லை. இது அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே தெரிந்திருக்கிற ரகசியங்கள். ரகசியங்கள் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இந்த ரகசியங்களைப் பூட்டி கையில் சாவியை வைத்திருப்பவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள். அவர்கள் 99% விழுக்காடு மலாய்க்காரர்கள்.  அதுவும் முன்னாள் அரசாங்கத்தின் விசுவாசிகள். ஏற்கனவே அவர்களிடம் உள்ள அந்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை தொடர வேண்டும் என நினைப்பவர்கள். முதலில் இவர்களைக் களை  எடுக்க வேண்டும்.  அதன் பின்னர் தான் அரசு இயந்திரம் சரியாக இயங்க முடியும்.

ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. மற்றவர்கள்  எல்லாம் சொன்ன புள்ளிவிபரங்களைக் காணும் போது பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி சொன்னது மட்டும் தான் சரியானதாகத் தோன்றுகிறது. அவரே பல ஆண்டுகளாக அதனைப் பின் தொடர்ந்து வருபவர் என்பதும் புலனாகிறது.

அவர் சொன்ன ஒரு கருத்து: இந்த மக்களின் துயரத்தை தணிக்கவும் உரிய வழிமுறை குறித்து உள்துறை அமைச்சுடன் தமது அமைச்சு தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்பதாக அவர் கூறியிருக்கிறார். 

வரவேற்கிறோம். இந்த அடையாள அட்டை, குடியுரிமை யார்,  எந்த அமைச்சு அல்லது எந்த இந்திய அமைச்சர்  பொறுப்பேற்றிருக்கிறார் என்று தெரியாத நிலையில் இப்போது அமைச்சர் வேதமூர்த்தியே இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தனது அமைச்சின்  கீழ் வருவதாக அவரே அறிவித்துவிட்டார். 

இனி ஆள் ஆளுக்கு இது குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை. அவருடைய அமைச்சே அதனைக் கையாளட்டும். கேள்விகளுக்கு அவரே பதில் சொல்லட்டும். 

வேதமூர்த்தி அவர்களைப் பற்றி நாம் ஐயமுற ஒன்றுமில்லை. அவர் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்கும் மனிதர் அல்ல. ஹின்ராப் போராட்டம் நாம் அறிந்தது தான்.   இந்தச் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை  ஏற்படுத்திய  ஓர் இயக்கம். அவர் ஒரு போராளி. இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்யும் நோக்கம் உள்ளவர்.

நாடற்றவர்கள், குடியுரிமை இல்லாதவர்கள், அடையாள அட்டை கிடைக்காதவர்கள் - அது எதுவாக இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் வேதமூர்த்தியின் அமைச்சின் கீழ் வருவதில் நமக்கும் மகிழ்ச்சியே! 

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Wednesday 29 August 2018

எங்கோ உதைக்கிறது...?

உணவகங்களுக்கு ஆள் பற்றாக்குறை - அது நமக்குப் புரிகிறது. இப்போது மனிதவள அமைச்சர் அதற்காக பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். செய்யட்டும்.  உணவகர்களுக்குத் தேவை எல்லாம் மனித வளத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வர வேண்டும். அப்போது தான் அவர்களால் நிம்மதியாக ஆள் பற்றாக்குறைக்குத் தீர்வு காண முடியும்.

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆங்காங்கே புதிய, புதிய உணவகங்களைத் திறந்து கொண்டிருக்கிறார்கள்! யார் இவர்கள்? பெரும்பாலும் கேரள காக்காமார்கள்! இவர்களால் மட்டும் எப்படி ஆள் பற்றக்குறைப் பிரச்சனையைத் தீர்க்க முடிகிறது?  அவர்களிடம் ஆள் பற்றாக்குறை என்கிற பிரச்சனைக்கே இடமில்லையே!  இத்தனைக்கும் இவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. வேலை செய்பவர்கள் அனைத்தும் கேரள இனத்தவர்கள். உணவகத்தை நடத்துபவர்கள் அனைவரும் கேரள இனத்தவர்கள். அவர்களுக்கு உரிமம் என்பது ஒரு பிரச்சனை அல்ல. உணவகம் திறப்பது ஒன்றும் பிரச்சனை அல்ல. அவர்களின் தொழில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது! நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அங்கே சாப்பிட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம்.

அப்படியென்றால் அவர்கள் என்ன மாதிரியான "சிஸ்டம்" கையாளுகிறார்கள். இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. வெளியூர்காரர்கள். ஆனாலும் வெற்றிகரமான ஒரு திட்டத்தை வைத்து கொண்டு அவர்கள்  செயல்படுகிறார்கள்.

மனிதவள அமைச்சு இதனை ஆராய வேண்டும். உணவகங்களை இழுத்து மூடிவிட்டு அவர்கள் போவதில்லை. அதெல்லாம் உள்ளூர்வசிகள் செய்கின்ற வேலை!  அவர்களைப் பற்றி நாம் என்னன்னவோ  குறை சொல்லுகிறோம்.' பழையதை'  வைத்து கொண்டே காலத்தை வெற்றிகரமாக ஓட்டுபவர்கள்!  சுத்தம் என்பதெல்லாம் அபத்தம் என்னும் கொள்கையுடைவர்கள்! இன்னும் பல குறைகள். 

ஆனாலும் தொழில் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆள் பற்றாக்குறை இல்லை! சமயல்காரர்கள் பற்றாக்குறை இல்லை!  பற்றாக்குறை என்னும் பற்றாக்குறையே இல்லை!

ஏன் இந்த அளவு பீடிகை? இன்று தான் எனது அருகில் ஒர் உணவகத்தை இந்த  "கேரள மாமாக்கள்" திறந்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு மாமா கடைகள். இப்போது இன்னுமொன்று. அவர்கள் திறந்திருக்கும் வரிசையிலேயே இன்னும் இரண்டு உணவகங்கள். 

அவர்களுக்கு உள்ள துணிச்சலை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகள்!

இது நமது தவறோ...?

 இப்போது அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தில் நாம் ஏதோ தவறுகள் செய்திருக்கிறோம்.

இன்றைய மலேசியாவில் நம்முடைய மிகப் பெரிய பலவீனம் என்பது நாடற்றவர்கள் பிரச்சனையும், தமிழ்ப்பள்ளிகளின் அவல நிலையும் தான்.  இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே  நமக்குத் தனியே ஒரு பிரிவையே அமைத்திருக்க வேண்டும். அல்லது தனியே இந்தியர் பிரச்சனைகள் தீர ஓர்  அமைச்சு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு சிலர் சொல்லுவது போல நாம் அனைவரும் மலேசியர் அதனால் தனித் தனியே இன ரீதியில் எதுவும் தேவை இல்லை என்று சொல்லப்படும் கருத்து சரிதான் என்றாலும் அந்தக் கருத்து என்பது  இந்தியர்களும் சரிசமமாக  மற்ற இனத்தவரோடு போட்டி போடும்  நிலை வரும் போது மட்டுமே "நாம் அனைவரும் மலேசியர்" என்று சொல்ல முடியும். இப்போதைக்கு  இந்த வாதம் சரியானது அல்ல.

நமது பிரச்சனைகள் தீர என்ன தேவையோ அதனை நாம் கோட்டை விட்டு விட்டோம் என்பது உண்மை தான்.  ஆனால் அது நமது தவறல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியர் பிரச்சனைகள் வரும் போது  ம.இ.கா. வை நோக்கிக் கண்டனக் குரல் எழுப்புவோம். ஆனால் அது ஒரு சோத்து, சொத்துகளின்  கட்சி; எதனையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்!    இப்போது கண்டனக் குரல் யாரிடம் எழுப்பவது என்பது யாருக்கும் தெரியவில்லை! எல்லாருமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்! அதனால் நமது "நாடற்றவர்கள். தமிழ்ப்பள்ளிகள்" பிரச்சனைகளைப் பற்றிப் பேச ஒருவரையும் காணோம்!

அதனால்  நாடற்றவர்கள், தமிழ்ப்பள்ளிகள் பிரச்சனைகள் தீர நிச்சயம் நமக்கு ஒர் அமைச்சர் தேவை. அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு துணை அமைச்சர் தேவை.  கல்வி அமைச்சர் ஒரு மலாய்க்காரர் என்பதால் நமது கல்வியாளர்களை அவர் பார்க்கக் கூட விரும்பமாட்டார்.  அதனால் தான் சீனர்கள் அவர்களுக்கு ஒரு துணை அமைச்சரை ஏற்படுத்திக் கொண்டார்கள்.   அமைச்சரானதும் அடுத்த நாளே ஒரு முக்கிய வேலையை சொல்லாமல் கொள்ளாமல் ஆரம்பித்து விட்டார்.  UEC என்னும் சீனப் பள்ளிகளின் சான்றிதழை பலகலைக்கழகங்களின் ஏற்றுக்கொள்ளும்படியான வேலைகளை செய்து முடித்துவிட்டார்! அதற்கு எதிர்ப்பு இருக்கும் என்பதனால் அது அவசர, முதல் வேலையாக அதனைப் பார்த்துக் கொண்டார்! இப்போது திரை மறைவில் பல வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்! நாமோ இன்னும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது, எங்கே போவது என்று வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்!

தமிழ்ப்பள்ளிகளில் நமது வேலைகள்  எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை! நாடற்றவர்கள் பிரச்சனைத் தீரவில்லை! நூறு நாள்களில் கூட எதுவும் பெரிதாக நடந்து விடவில்லை! 

நாம் எங்கே தவறு செய்தோம்? புரியாத புதிர்! நமக்கென்று தலைவர் இல்லாதது குறையோ!                                                  

கலைஞரை மிஞ்சுவாரா..!

ஒரு திருமண நிகழ்வுக்குப்  போன போது அப்படியே மணமகனின் தாத்தாவையும் பார்த்து வைப்போமே என்று திட்டம் வைந்திருந்தேன்.  அவரைப் பார்த்து சுமார் நாற்பது ஆண்டுகள்  இருக்கும் அவருக்கும் வயதாகி விட்டது.  இன்னும் இருக்கிறாரா, இல்லையா என்று கூட முதலில் தெரியவில்லை. பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

இனி பார்ப்போமா, மாட்டோமா என்கிற எண்ணம் மனதில் ஏற்பட்டதும் "சரி! பார்ப்போம்!" என்று நினைத்து அவரைப் பார்க்கப் போனேன். திருமணத்திற்கு அவரால் வர முடியவில்லை. வரக் கூடிய நிலையில் அவர் இல்லை. அதனால் வீட்டிலேயே முடங்கி விட்டார்.  முதுமை எய்தி விட்டால் இதெல்லாம் சகஜம். நமக்குத் தெரிந்த செய்தி தான். வருத்தப்பட ஒன்றுமில்லை.

அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. எனக்கும் அவருக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கமில்லை. அவரது வீட்டாரப் பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. நான் தோட்டத்து  அலுவலகத்தில் பணிபுரிந்த காலம் அது.  அவர் அப்போது தோட்ட தொழிற்சங்கத்தில்  காரியதரிசி. அதனால் அவர் அவ்வப்போது ஏதாவது பேசுவதற்கு அலுவலகம் வருவார். அப்படித்தான் அவர் எனக்குப் பழக்கம்.

ஒரு முறை நான் தமிழ் நாட்டுக்குப் போக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தேன். அப்போது  தீடீரென ஒரு நாள்,  அவரது மகன் தமிழ் நாட்டில் போய் படிக்க விரும்புவதாகக் கூறினார், சரி படிக்கட்டும் என்றேன்.  அதனால் நீங்கள் அவனைக் கொண்டு போய் தமிழ் நாட்டில் சேர்த்து விடுங்கள் என்றார்.  அதனாலென்ன சேர்த்து விடுகிறேன் என்றேன். அப்படித்தான் அவருடனான எனது பழக்கம்.

இப்போது அவருக்கு வயதாகிவிட்டது, அந்தப் பழைய நினைவுகளச் சொல்லியும் அவரால் என்னை  அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லை. எனது பெயரைச் சொல்லி "அந்தக் கிராணி, இந்தக் கிராணி" என்றார்கள். ஊகும்! தெரியவில்லை! நான் சொன்னேன் "ஆபீஸ் கிராணி!" என்று சொல்லுங்கள் அவருக்குப் புரியும் என்றேன். அப்படி சொன்னதும் தான் அவருக்குப் புரிந்தது! பெரியதாகத் தலையை ஆட்டினார்!

கடந்த சில நாள்கள் வரை நன்றாகத்தான் இருந்தாராம். வெளியே போய் நடந்தெல்லாம் வருவாராம். தமிழ் நாட்டில் கலைஞர் இறந்து போனதைக் கேள்விப்பட்டதும் படுக்கையிலேயே முடங்கிப் போனாராம். அடாடா! கலைஞருடைய செல்வாக்கு எங்கெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது பாருங்கள்!

ஆமாம்! இவருடைய வயதை இன்னும் நான் சொல்லவில்லையே! இப்போது அவருடைய வயது தொண்ணுற்று மூன்று (93)! இப்போதும்  பத்திரிக்கைகள் படிக்கிறார்! .நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளுகிறார். இன்னும் தெளிவாகத்தான் இருக்கிறார்.

கலைஞரை மிஞ்சுவாரா பார்ப்போம். வாழ்க பல்லாண்டு! 


Monday 27 August 2018

குட்டையைக் குழப்புகிறார்கள்...!

இந்தியர்களின் அடையாள அட்டைப் பிரச்சனையில் குட்டையைக் குழப்புகின்ற ஒரு நிலைமையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் உண்மையைச் சொல்லுகிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை!

ஒரு காலக்கட்டத்தில் இந்தியர்கள் 300,000 இலட்சம் பேர் நாடற்றவர்கள் என்று சொன்ன எதிர்க்கட்சிகள் இன்று பதவியில் இருக்கும் போது வேறு மாதிரி சொல்லுகிறார்கள். அவர்களை நாம் குற்றம் சொல்லவில்லை. காரணம் எதிரணியில் இருக்கும் போது "அள்ளி" விடுவதெல்லாம் சாதாரணம்! ஆனாலும் அவர்களும் ஒரு கணக்கெடுப்பை எடுத்தார்கள். அவர்களுக்கும் சில தகவல்கள் கிடைத்திருக்கும்.  அவர்கள் எடுத்த கணக்கின்படி அது ஆயிரமா அல்லது இலட்சமா என்று நமக்குத் தெரியவில்லை! 

ம.இ.கா. காரர்களை நாம் என்றுமே நம்புவதில்லை!  இப்போதும்  அப்படித்தான்! ம.இ.கா.வினர் அப்போது சொன்னது சரிதான் என்றால் அவர்கள் ஏன் அப்போதே அந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை  என்னும் கேள்வி எழுகிறது. அவர்கள் அந்தப் பிரச்சனைக்கு அப்போது முடிவு கண்டிருந்தால் இந்த நாடற்றவர்கள் பிரச்சனையே எழுந்திருக்காதே! இப்போதும் கூட நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை! இன்றைய அரசாங்கமும் ஏதேனும் தில்லுமுள்ளுகள் புரிகின்றதா என்று சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்க வேண்டியுள்ளது!

இருந்தாலும் அரசாங்கம் கொடுத்த புள்ளி விபரங்களை நம்புகிறோம். இப்போது அரசாங்கம் கொடுத்த புள்ளிவிபரம் அரசாங்கத்திடம் 3853 விண்ணப்பங்கள் அவர்களின் கைவசம் இருக்கின்றன. ஏற்கனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோர் சுமார் 3407 பேர் வெகு விரைவில் அடையாள அட்டைகளைப் பெற விருக்கின்றனர்.  அது 100 நாள் சாதனை! வாழ்த்துகள்!  அநேகமாக அடுத்து நூறு நாள்களுக்குள் இந்த 3853 பேருடைய பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.

இந்தப் பிரச்சனையை ஆண்டு கணக்கில் இழுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம். அடையாள அட்டை, குடியுரிமை இல்லை, பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப முடியவில்லை போன்ற "இல்லை! இல்லை!" என்கிற பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  300,000 இலட்சம் என்னும் போது அது நீண்ட காலப் பிரச்சனை. ஆனால் இப்போதைய நிலையில் இது ஒரு சில மாதங்கள் பிரச்சனை.  

இப்போது கொடுக்கப்பட்ட புள்ளி விபரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 60 வயதுக்குக் கீழ்பட்டவர்கள்.  இவர்களில் பெரும்பாலும் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்கள். அதனால் உடனடியாக அரசாங்கம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மேலும் மேலும் நாள்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பது எந்த வகையிலும்  நாட்டுக்கு நல்லதல்ல.

குட்டையைக் குழப்ப வேண்டாம்! குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்க வேண்டாம்! அது தான் நமது வேண்டுகோள்!

Sunday 26 August 2018

கேள்வி - பதில் (85)

கேள்வி

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆகிறாரே!

பதில்

ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. அக்கட்சிக்கு ஒரே ஒரு தலைவர் தான் இருந்திருக்கிறார். அவர் தான் கலைஞர் கருணாநிதி. அந்தப் பதவியை அவரே உருவாக்கி அவர் இறக்கும் வரை தலைவராக இருந்தவர். சுமார் 50 ஆண்டுகள் அவர் தலைவர்.

இப்போது அவரது மகன் ஸ்டாலின் தலைவராகிறார்.  தி.மு.க. என்பது வெறும் கட்சியாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது.  கலைஞர் அவரது வாரிசுகளுக்கு விட்டுப்போன சொத்தாகப் பார்க்க வேண்டும். சொத்துகளுக்கு வாரிசுகள் சண்டை வரத்தான் செய்யும். 

கலைஞர் எப்படி ஐம்பது ஆண்டுகள் அந்தச் சொத்துக்களைக் கட்டி காத்தாரோ அதே போல அடுத்து வரும் தலைவரும் அதன் சொத்துக்களைக் கட்டிக்காத்து தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஸ்டாலின் தலைவராக வந்தால் அவரது வாரிசுகளுக்குத் தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும். மு.க.அழகிரி தலைவராக வந்தால் அவரது வாரிசுகள் தான் சொத்துக்களை அனுபவிக்க முடியும்.

அப்படியே வருங்காலங்களில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் பாதகம் ஒன்றுமில்லை.  அமைந்தால் நாட்டை ஆளலாம்! அமையாவிட்டால் கட்சியை ஆளலாம்!  எப்படியோ சொத்துக்கள் வெளியே போகாதவரை எல்லாம் நலமே! 

நாங்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லிக் கொண்டே கட்சியின் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப்  புதைத்தவர்கள் திமு.க. வினர்! ஜனநாயகத்திற்கும் அவர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

கலைஞர் எந்த வழியில் சென்றாரோ அதே வழியைத் தான் அவரது வாரிசுகளும் பின் பற்றுவார்கள்! அதை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு யாருக்கும் துணிவில்லை! காரணம் அவர்கள் மூதறிஞரின் பிள்ளைகள். அவரைத் தான் பின்பற்றுவார்கள்!

தலைவராக ஸ்டாலினோ, அழகிரியோ தமிழ் நாட்டுக்குப்  பெரிதாக ஆகப் போவது ஒன்றுமில்லை!  அவர்கள் சொத்துக்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள்! நாம் ரசிக்கலாம், அவ்வளவு தான்!

நம்மை பலவீனம் ஆக்கும்..!

நமது பிரதமர் ஒரு கருத்தைச் சொன்னார். "மக்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தால் அது அவர்களைப் பலவீனப்படுத்தும்."  முன்னாள் பிரதமர் நஜிப் 'பிரிம்' என்று ஒன்றை ஆரம்பித்து வைத்துவிட்டுப் போனார். அதற்கு அவர் சொல்லுகின்ற காரணம்: "பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு உதவினேன்" என்பதாக! இப்படிப் பறித்து அவர் ஏழைகளுக்கு உதவியதன் மூலம் சுமார் 72 இலட்சம் பேரை ஏழையாக்கி இருக்கிறார் முன்னாள் பிரதமர். ஆம், அந்த உதவி நிதி சுமார் 72 லட்சம் பேரைச் சென்று அடைந்திருக்கிறது!

72 லட்சம் பேர் என்பது  ஒரு பெரிய எண்ணிக்கை. ஏழைகளுக்கோ, முடியாதவர்களுக்கோ உதவுவது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அனைவரும் ஏழைகள் அல்ல. இதில் பலர் இளம் வயதினர். வேலை செய்யக் கூடிய நிலையில் உள்ளவர்கள். இன்னும் வசதியாக வாழ்பவர்கள். ஒரு சிலர் "பிரிம்" பணம் கிடைத்தவுடன் கொஞ்சம் நாளைக்கு வேலைக்குப் போவதையே நிறுத்தி விடுகின்றனர்!   அதுவும் நமது சமுதாயத்தினரைப்  பற்றி சொல்லவே வேண்டாம். குடித்து அழித்து விட்டுத்தான் வேலைக்கே செல்லுவார்கள்! 

நான் பார்த்தவரை நான் அறிந்தவரை இந்தப் பணம் கிடைக்கின்ற பலர் நல்ல நிலையில் உள்ளவர்கள்! அவர்களைக் கேட்டால் "இதென்னா அவன் அப்பன் வீட்டுப் பணமா? நம்மப் பணத்தைத்தானே திருப்பிக் கொடுக்குறான்!" என்று பலர் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்! 'பிரிம்'  உதவிக்குத் தகுதியானவர்கள் சிலர் மட்டுமே, பலர் அல்ல! இது வீண் விரயமே!

சீனப் பழமொழி ஒன்றைச் சொல்லுவார்கள்.  ஒருவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அந்தத் திறனை அவன் வாழ்நாள் முழுவதும் பயன் படுத்துவான். மீன் சாப்பிடக் கற்றுக் கொடுத்தால் முடிந்த கையோடு இன்னொரு இடத்தை நாடி ஓடுவான்! டாக்டர் மகாதிர் வாழ்வதற்கு உங்கள்  திறமையையும், திறனையும் பயன்படுத்துங்கள் என்கிறார். நஜிப், நான் திருடி உங்களை வாழ வைக்கிறேன் கவலை வேண்டாம் என்கிறார்!

பிறருடைய உழைப்பை நம்பி நாம் வாழ வேண்டாம். நம் கையே நமக்கு உதவி. நம் கைகளைத்தான் நாம் நம்ப வேண்டும். உதவிகள் நம்மைப் பலவீனமாக்கி விடும்.  பலவீனனாக நாம் வாழ வேண்டாம்!

நமது பிரதமர் இப்படி ஒரு வார்த்தைச் சொல்லி  நம்மை ஆக்ககரமாகச் சிந்திக்க வைக்கிறார். ஆனால் இரு பெரும் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் தமிழகத்தில் இப்படி சொல்ல ஒரு தலைவன் இல்லை! அதனால் பிச்சை  எடுக்கும் நிலை!

பலவீனம் நமது இனத்தில் அடையாளம் அல்ல!

Saturday 25 August 2018

லஞ்சத்தை ஒழிப்போம்...!

லஞ்சம், ஊழல், கையூட்டு என்று எப்படி சொன்னாலும் லஞ்சம் லஞ்சமாகத்தான் இருக்கும்! இது நாள் வரை நம்மால் லஞ்சத்தை மாற்ற முடியவில்லை! கொஞ்சம் நாம் ஏமந்தோம், அது நீக்கமற நிறைந்துவிட்டது.

நமது நாட்டில எப்போது லஞ்சம் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது? மேல் மட்டத்தில் உள்ள நம் தலைவர்கள் எப்போது ஊழல் புரிய ஆரம்பித்தார்களோ அன்றே லஞ்சத்தின் தொடக்க விழா ஆரம்பித்துவிட்டது! அதுவும் முன்னாள் பிரதமர் நஜிப் அவர் காலத்தில் செய்த பல தில்லுமுல்லுகள், மோசடிகள்  மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக போய்விட்டது என்பது தான் உண்மை!  அவருக்குக் கீழ் பணிபுரிந்த அரசாங்க அதிகாரிகள் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை -  லஞ்சம் என்பதே புண்ணியம் என்கிற ரீதியில்  தாராளாமாகப்  புழங்க ஆரம்பித்துவிட்டார்கள்!  அதுவும் லஞ்சம் வாங்குவதைப்  பெருமையாகவும்  நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்!  எல்லா மதங்களும் புண்ணியத்தைப் போதித்தாலும் லஞ்சம் வாங்குபவன்  மட்டும் "எங்களுக்குப் புண்ணியம் வேண்டாம் லஞ்சம் தான் வேண்டும்!"  என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்! பணத்தின் முன்னால் புண்ணியமாவது, புண்ணாக்காவது! புண்ணியம் உனக்கு, பணம் எனக்கு! அவ்வளவு தான்!

ஆமாம், வாங்குபவன் தரப்பிலிருந்து இவ்வளவு பேசி விட்டோம். கொடுப்பவன் தரப்பிலிருந்து கொஞ்சம் பார்ப்போம்.  நம் நாட்டில் இந்த "கொடுக்கும்" வேலையை ஆரம்பித்தவன் யாராக இருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது சீனராகத் தான் இருக்க முடியும்.  அவர்கள் தான் எல்லாவற்றிலும் அவசரம் காட்டுபவர்கள்.  எந்த வேலையாக இருந்தாலும் உடனே முடிய வேண்டும். காத்திருக்க நேரமில்லை. அதனால் கொஞ்சம் பணத்தைத் தள்ளினால் போதும், வேலை முடியும் என்கிற சித்தாந்தத்திற்குக் காரணமானவர்கள் சீனர்கள் தான்! லஞ்சமே வேண்டாம் என்பவனைக் கூட லஞ்சத்தை வாங்க வைக்கும் திறன் அவர்களிடம் உண்டு! அவர்களிடம் எல்லாமே அவசரம்! அவசரம்! அவசரம்! ஒரு தவறை செய்துவிட்டு அதனை மூடி மறைக்க அதற்கு லஞ்சம் கொடுப்பது என்பது அவர்களுக்குச் சர்வ சாதாரணம்! 

ஆனால் இன்றைய நிலையில் இந்தக் "கொடுக்கின்ற" பழக்கம் எல்லா இனத்தாரிடையேயும் ஒட்டிக் கொண்டுவிட்டது!  கொடுத்தால் தான் வேலை  நடக்கும் என்கிற நிலை நாட்டில் ஏற்பட்டுவிட்டது தான் காரணம்! அதுவும் வியாபாரம் செய்பவர்கள் நிலை இன்னும்  மோசம். 

இப்போது நமது புதிய அரசாங்கத்தில் "வாங்குபவர்கள்" கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்! "கொடுப்பவர்கள்" மாட்டிக் கொள்ளுவுமோ என்று சட்டைப் பாக்கெட்டை காலியாக வைத்திருக்கிறார்கள்! 

இது தொடர வேண்டும் என்பது தான் நமது ஆசை! ஒழிப்போம்! ஒழிப்போம்! லஞ்சத்தை ஒழிப்போம்!



Friday 24 August 2018

குவந்தானின் "சீனப் பெருஞ்சுவர்"..!

சீனாவின்  பெருஞ்சுவர் பற்றி கேள்விப்பட்டிருப்போம் அல்லது படித்திருப்போம்  அல்லது அந்த சுவரையாவது படங்களில் பார்த்திருப்போம். அது உலக அதிசயங்களில் ஒன்று என்பதால் நமது கவனத்தை ஈர்த்த ஒன்று.

ஆனால் இது நாள் வரை நாம் கேள்விப்படாத ஒன்று. நமது நாட்டிலும் சீனா ஒரு பெருஞ்சவரை எழுப்பியிருக்கிறது. அதுவும்  நமது முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் சொந்த மாநிலத்தில்,  அவரது கண்முன்னே!  நமது பத்திரிக்கைகளால் இந்தச் செய்திகளைக் கொடுக்கத் தடை என்பதால் அப்படி ஒரு செய்தியை நாம் கேள்விப்படவில்லை! இப்போது தான் பிரதமர் மகாதிரின் ஆட்சி காலத்தில் அந்த செய்தி  வெளியே வந்திருக்கிறது!

வெளி மாநிலத்தவருக்கு அந்தச் செய்தி புதிதாக இருந்தாலும்  குவாந்தான் வாசிகளுக்கு அது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அவர்கள் தினசரி பார்த்து அனுபவிக்கும் செய்தி தான்.


ஏதோ ஒரு சீன நிறுவனம் பெரியதொரு  தொழில் பேட்டையை அமைத்துக் கொண்டிருக்கிறது என்பதோடு சரி. மற்றபடி அது என்ன தொழில், என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது யாரும் அறியா ரகசியம். "மலேசிய - சீன  குவந்தான் தொழில் பேட்டை" என்னும் பெயர் கொண்ட அந்த நிறுவனம்  என்ன நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.  அந்தத் தொழில் பேட்டையில் இன்னும் பல சீன நாட்டு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அங்கு இயங்குகின்ற அந்த நிறுவனங்கள் யார் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன  என்பது கூடத் தெரியவில்லை! சீனாவின் கட்டுப்பாட்டிலா அல்லது மலேசியாவின் கட்டுப்பாட்டில என்பது கூட ரகசியம் தான்!  காரணம் மலேசியர் யாரும் உள்ளே நுழைய முடியாத கோட்டை அந்த சீனாவின் தொழில் பேட்டை! இங்குள்ள அதிகாரிகளுக்கும் உள்ளே நுழைய  அனுமதியில்லை!   வேலை செய்பவர்கள் கூட பெரும்பாலும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சம்பளம் எல்லாம் சீனாவில் தான் கொடுக்கப்படுகின்றது! உள்ளூர் வாசிகள் ஏதோ பெயருக்குச் சிலர் வேலை செய்கின்றனர்.  வெளியே காவலுக்கு நிற்கும் காவலர் கூட சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டவர். உள்ளூர் காவலர் ஓரிருவர் மொழிப் பிரச்சனைக்காக!

அதனால் தான் உள்ளூர் வாசிகள் இதனைச்  "சீனப் பெருஞ்சுவர்" என்கின்றனர்! இந்த பெருஞ்சுவர் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்றது. அதனுள்ளே ஆயிரம் ஏக்கருக்கு  மேல் உள்ள நிலத்தை இந்த சுவர் ஆக்கிரமித்துக்  கொண்டிருக்கிறது! 

சீனாவுக்கு எப்படி,  இப்படி ஒரு பெருஞ்சுவரை எழுப்பி அதனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது? இப்போது தான் வருகிறார் நமது முன்னாள் பிரதமர் நஜிப்!  ஏதோ தீர்க்கதரிசனத்தோடு செயலாற்றியதாக அவர் நினைக்கிறார்! 

இப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம்  குவந்தான் மட்டும் தான். மற்ற இடங்களிலும் இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை. பாரிசான் ஆட்சியில் இந்தச் செய்திகளுக்கெல்லாம் பெரிய தடை! அதனால் அனைத்தும் ரகசியம்!

இப்போது சீனா சென்று வந்த  பிரதமர் டாக்டர் மகாதிர் இந்த சீனப் பெருஞ்சுவர் இடிக்கப்படும் என்பதாகக் கூறியிருக்கிறார். நல்ல செய்தி. மலேசியா சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது. நமது நிலங்கள் நமது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.

இடிக்கப்படும் நாளை எதிர்பார்க்கிறோம்!

Thursday 23 August 2018

அன்பளிப்புக்கள் வேண்டாமே...!

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சரியான காரியம் செய்தார்.

ஒரு நிகழ்வில் தனக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதாக ஒரு செய்தி.

நல்ல உதாரணம். பக்காத்தான் அரசாங்கம் அமைந்த பின்னர் நூறு நாள்களுக்குள் யாரேனும் அன்பளிப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ என்னும் செய்தி வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் நானும் சில கருத்துக்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நமது இந்திய அமைச்சர்கள் - பிற இனத்தவராக இருந்தாலும் ம் சரி - நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற போது நாம் மாலை மரியாதைகளோடு வரவேற்கிறோம். அதில் ஏது தவறு இருப்பதாகத் தெரியவில்லை.  ஒரு சில நிகழ்ச்சிகளில் "அடேங்கப்பா!" என்று சொல்லுகிற மாதிரி ஆள் உயர மாலை, சுமக்க முடியாத அளவுக்கு கனத்து, பெருத்த மாலை! இன்னும் வித விதமான மாலை!   வெவ்வேறு ஊர்களிலிருந்து மாலை! வெளி நாடுகளிலிருந்து மாலை!  குறிப்பாக சென்னை மாநகரிலிருந்தும் மாலை!  இந்த சாதனைகள் எல்லாம் தானைத்தலைவரின் காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை! 

இங்கு நான் சொல்ல வருவதெல்லாம் மாலைகள் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. நமது ஊர்களிலேயே மாலைகள் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் சொல்லி மாலைகள் செய்யலாம்.  ஒரு தலைவருக்கு ஏற்ற ஒரு மாலை. அவ்வளவு தான்.  அது ஒரு மரியாதை. அதற்கு மேல் நாம் போனால் நாம் அடிமைகள்! நினவில் கொள்ளுங்கள்.

தலைவர்கள் தான் நமக்கு ஊழியர்கள். நாம் அவர்களுக்கு ஊழியர்கள் அல்ல. அமைச்சர்கள் நமக்கு ஊழியம் செய்ய வந்தவர்கள். அவர்களுக்கு ஊழியம் செய்வது நமது வேலை அல்ல. அதனால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுங்கள். அவர்களிடமிருந்து நமக்கு மரியாதை இல்லை என்றால் அவர்களைத் தூக்கி எறியுங்கள்! அவர்களை நம்பி நாம் வாழவில்லை!

மேலே அமைச்சர் அந்தோனி லோக் என்ன செய்தார்?  அவருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோனை வாங்கிக் கொள்ள மறுத்தார். அது தான் சரி. வாங்கினால் அது லஞ்சம் வாங்குவதற்குச் சமம். இன்று லஞ்சம் வாங்கினால் நாளை லஞ்சம் கொடுத்தவன் ஏதோ ஒரு காரியத்திற்காக வாசலில் நிற்பான்!

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். அரசாங்க அலுவலகங்கள் லஞ்ச மயமாகி விட்டன. இப்போது நேர்மையான அரசாங்கமே நமக்குத் தேவை.

அமைச்சர் அந்தோனி லோக் சரியாகச் செய்தார்!  வாழ்த்துகள்!

காலைப் பொழுதில் ஒரு மின்னல்!

காலைப் பொழுதில் என்ன வேண்டும்? வேலை செய்பவர்கள் அதிகரிகளுக்கோ, நண்பர்களுக்கோ ஒரு "காலை வணக்கம்!"  போடுவது இயல்பான ஒன்று.  அதிலே ஒரு மகிழ்ச்சி. புத்துணர்ச்சியை ஏற்படுவது காலை வணக்கம்!

இன்று காலை நான் காரை விட்டு இறங்கும் போதே ஒரு காலை வணக்கம் கிடைத்தது. அதிசயத்துப் போனேன்.  குப்பை லோரியில் குப்பை அள்ளும் பங்களாதேசி நண்பர் ஒருவர்: "அபாங்! கூட் மார்னிங்!"  என்று சொல்லி அசத்தி விட்டார்!  அவரை யார் என்று எனக்குத் தெரியாது!  நான் யார் என்று அவருக்குத் தெரியாது! இருந்தாலும் ஏனோ அந்த காலை நேரத்து "கூட் மார்னிங்"  மனதுக்கு  மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்தது!

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நான் எப்போதும் போலவே மகிழ்ச்சியானவன் தான். ஆனால் அந்தக் குப்பைகளை  அள்ளுகின்ற  அந்த வங்காள தேசியின் நிலை என்ன?  காலையிலேயே அந்தக் குப்பைகளை அள்ளிக் கொண்டு, அந்த நாற்றத்தோடு நாற்றமாக  நாற்றமாகிப் போய் இன்னும் சில மணி நேரங்கள் நாற்றோத்தோடு  நாற்றுமாய் வேலைக்ளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கப் போகும்  அவன் என்ன மகிழ்ச்சியைக் காணப் போகிறான்? இருந்தாலும் அவனைப் பாராட்டத்  தான் வேண்டும். அந்த நாற்றத்திலும் "நான் மகிழ்ச்சியாய் இருப்பேன்!" என்று சந்தோஷமாக தனது பணியைச் செய்யும் அவனை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!

ஆமாம், நாம் செய்கின்ற பணி,  அது நம்முடையது. சிறிதோ, பெரிதோ  ஒன்றுமில்லை. அவனவன் தகுதிக்கு ஏற்ப நமது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு என்று சில பொறுப்புக்கள் இருக்கின்றன.  நமது வயிற்றுப்  பிழைப்புக்கு ஏதாவது ஒரு பணியைச் செய்து தான் ஆக வேண்டும்.

அதுவும் அவன் வெளி நாட்டவன்.  அவனை நம்பி அவனது குடும்பம் அவனது நாட்டில் காத்துக் கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா, மனைவி பிள்ளைகள், அண்ணன் தம்பி எல்லாரும் அவனை நம்பி, அவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையைப் போக்க வேண்டும். அதனால் ஏதோ ஒரு வேலை அவனுக்குத் தேவை. கௌரவம் பார்க்க முடியாது. அதனால் செய்கின்ற வேலை எதுவாக இருந்தாலும் செய்கின்ற வேலையில் மகிழ்ச்சி அடைவோம்.

அந்த மனப்பான்மை தான் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் ஒழுங்காக செய்ய வேண்டும். வேலை செய்யும் போது மகிழ்ச்சியாக நாம் இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியைத் தான் அந்த வங்காளதேசி காலை நேரத்தில்  "காலை வணக்கம்" என்று சொல்லுவது மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்.

உங்கள் அனைவருக்கும் "காலை வணக்கம்!" வாழ்த்துகள்!

Wednesday 22 August 2018

அடுத்த பத்தாண்டுகளுக்கு 400 கோடி ........!

நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை! பிரதமர் துறையைச் சார்ந்த அமைச்சர் பி. வேதமூர்த்தி கொடுத்திருக்கின்ற அறிவிப்பைப் பார்த்து நாம் அதிர்ச்சி அடையவில்லை; வியப்படையவில்லை.

அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் சுமார் நானுறு கோடி வெள்ளியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர்கூறியிருக்கிறார்.

இது வழக்கம் போல ஒரு அறிவிப்புத் தானா என்று நாம் நினைக்க வாய்ப்புண்டு! தவறில்லையே! ஏற்கனவே இது போன்ற அறிவிப்புக்களைச் செய்து தானைத் தலைவர் துன் சாமிவேலு எங்களிடையே பிரபலம் ஆகி விட்டார்! அவர் ஏற்கனவே எங்களுக்குக் காது குத்தி, மூக்குத்திப் போட்டு, சடைப்பின்னி, கொண்டை போட்டு - எல்லாமே அவர் செய்து எங்களை  உயர்த்தி விட்டார்!  அதனால் தான் பத்து ஆண்டுகள் என்றாலே மனதிலே கிலி பிடித்துக் கொள்ளுகிறது!

இப்போது வேதமூர்த்தி இது போன்ற அறிவுப்புக்களைச் செய்வது புதிதாக ஒன்றும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை கூட்டணி மேல் எங்களுக்கு உள்ள நம்பிக்கையால்  அதனை நம்புகிறோம் சில கருத்து வேறுபாடுகளோடு.

நீங்கள் பத்து ஆண்டுகள் என்று போடுகின்ற  கணக்கு தவறு என்று சொல்ல வரவில்லை. பத்து ஆண்டுகள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் நாற்பது  கோடி பக்காத்தான் அரசாங்கம் இந்தியர்களின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்யத்  தயாராக இருக்கிறது என்று தான் பொருள்.  ஒரு வேளை தேவை ஏற்பட்டால் அதற்கு மேலும், கூடுதலாகவும் செலவு செய்யலாம். ஆனால் எங்களது தேவை எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் நாற்பது கோடிகளைச் செலவு செய்த பின்னர்   ஏற்பட்ட அடைவு நில என்ன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். வெறும் அறிவிப்புக்கள் எங்களை உயர்த்தி விடாது.   அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை இந்தச் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சமூகம் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது. கேள்விகள் கேட்டாலே குண்டர் கும்பல்களை வைத்து  அடித்து உதைக்கும் தலைவர்களைக் கொண்டிருந்த சமூகம் இது! இப்போதும் கூட எதுவும் கெட்டுவிடவில்லை. இப்போது உள்ளவர்களும் அந்த குண்டர் கும்பல் வேலைகளைச் செய்தாலும் ஒன்றும் தலைகீழ் மாற்றம் நடந்துவிடப் போவதில்லை. ஆனாலும் சமூகம் இப்போது விழித்துக் கொண்டது. கேள்விகள் கேட்கவும் தயார். அடித்தால் பதிலடி கொடுக்கவும் தயார் என்னும் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

அதனால் ஆளும் வர்க்கத்தினர் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  சும்மா அறிவிப்புக்களைச் செய்துவிட்டு சங்கு ஊதிக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுக்கு உங்களுடைய அறிக்கைகள் தேவை. மாதாந்திர அறிக்கையோ, ஆண்டு அறிக்கையோ மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

பத்து ஆண்டாக இருந்தாலும் சரி, அடுத்த பத்து மாதத்தில் உங்களுடைய பத்து  மாத அறிக்கை எங்களுக்குத் தேவை. நீங்கள் சேவை செய்ய வந்தவர்களா அல்லது சலாம் போட வந்தவர்களா என்பதை அறிய பத்து மாதங்கள் போதும்.

உங்களது அறிக்கைகளுக்காகக் காத்துக் கிடக்கிறோம்!

Tuesday 21 August 2018

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

முஸ்லிம் நண்பர்களுக்கு எனது இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

தமிழ் முஸ்லிம் நண்பர்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. தமிழரிடையே இரண்டு சமுகத்தினர் மீது அதிகம் பற்றும் பாசமும் உண்டு. அவர்கள் தான் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ் முஸ்லிம்களும், செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களும். இந்த இரண்டு சமூகத்தைச் சார்ந்த தமிழர்கள் தான் எல்லாக் காலங்களிலும் "நாங்கள் தொழிலதிபர்கள்" என்று நெஞ்சை  நிமிர்த்தி நிற்பவர்கள். 

என்னுடைய முஸ்லிம் நண்பர் ஒருவர் எத்தனையோ  வேலைகள் அவருக்காக காத்து நிற்க, அவரோ "நான் எவனிடமும் வேலை செய்ய மாட்டேன்!" என்று கிடைத்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு அஞ்சடியில் துணியை விரித்துப் போட்டு சிறு சிறு பொருட்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரே பிற்காலத்தில் ஒரு கடையைத் திறந்து வியாபாரம் செய்து பெரிய அளவில் வளர்ந்து விட்டார். அவருடைய துணிச்சலைப் பார்த்து வியந்ததுண்டு.

ஒரு சிறிய ஒட்டுக்கடையில் பத்திரிக்கைகள் விற்று வந்த நண்பர் ஒருவர். என் பள்ளி நாட்களில் அவரிடம் தான் "கல்கண்டு" வார இதழை வாங்குவேன்.  ரொம்பவும் பழக்கம். பிற்காலத்தில்  அவரே ஒரு உணவகத்தை நடத்தினார்.  அதனையே இரண்டு உணவகங்களாக மாற்றினார். அப்போதும் நான் அவருடைய வாடிக்கையாளர்!

நண்பர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய மூலதனங்களோடு அவர்கள் இந்தத் தொழில்களுக்குப் போகவில்லை. அப்போது நமது செட்டியார்கள் தான் இவர்களுக்கு வங்கிகளாக இருந்து உதவினார்கள்.

ஒரு முறை உணவகத்தில் வேலை செய்யும் நண்பரிடம் "எவ்வளவு காலத்திற்குத் தான் இப்படி டீ போடுகிற வேலை செய்யப் போகிறீர்கள்?  சொந்தமாக எப்போது கடைப் போடப் போகிறீர்கள்?"  என்று  தமாஷாக சொல்லி வைத்தேன். அவர் அதனை சீரியசாக எடுத்துக் கொண்டு கணவனும் மனைவியும் ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பித்து விட்டார்கள்!   பிறகு அதனையே பெரிய உணவகமாக மாற்றி விட்டார்கள். இப்போது அது அவர்களின் சொந்த உணவகமாக மாறி விட்டது!

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் அவர்களிடம் துணிச்சலுக்குக் குறைவில்லை. தொழில் என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறி விட்டது. கீழே விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுகின்ற அந்தப் போர்க்குணம் எனக்குப் பிடித்தமான ஒன்று! அந்தக் குணம் தான் நமக்கு வேண்டும்!

இந்தத் தியாகத் திருநாளில் எல்லா முஸ்லிம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  நீங்கள் இன்னும் பல சிறப்புக்களைப் பெற வேண்டும். வளமாக வாழ வேண்டும். இந்தத் தமிழினத்தின் புகழை பார் அறிய செய்ய வேண்டும்.

மீண்டும் வாழ்த்துகள்!
 

கேள்வி - பதில் (84)

கேள்வி

கேரளாவில் வெள்ளம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே?

பதில்

உண்மை தான்.  வரலாறு காணாத வெள்ளம். 87 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு பாதிப்பை இந்த வெள்ளம் கேரளாவை சின்னாபின்னாமாக்கி விட்டது.

இப்படி மழை பெய்யும் என எதிர்ப்பார்க்காததால் எந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்க முடியவில்லை. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் இந்த ஆண்டும் இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தது பிழையாய்ப் போனது.  

இது இயற்கையின் சீற்றம். யார் என்ன செய்ய முடியும்?  "கடவுளின் தேசம்" என்று விளம்பரப்படுத்துவதால் மட்டும் கடவுளின் சீற்றம் இல்லாமல் போய் விடுமா? அதனை வாழ்ந்து காட்ட வேண்டும். கடவுளின் தேசம் என்பது சாதாரண வாசகம் அல்ல. அதனைச்  சும்மா ஒரு விளம்பரத்திற்காக கடவுளின் தேசம் என்று கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது மிகவும் தவறு. 

அது சரி. கடவுளின் தேசம் என்பதற்கு கேரளா சரியான உதாரணமா? இல்லை!  வெறும் கோவில்கள் மட்டுமே கடவுளின் தேசம் ஆகிவிடாது. மனிதனும் கோவிலாக மாற வேண்டும். அதெல்லாம் கேரளாவில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. கேரளாவில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, பட்டதாரி ஆன  தமிழர் ஒருவர் சொல்லுகிறார்:  "அது ஏனோ தெரியவில்லை! மற்ற இனத்தவனை  பார்த்தாலே கதவை இழுத்து மூடுகிறான்!  அவனிடம் மனிதம் என்பதே இல்லை!" 

சரி,  அதை விடுவோம்.மாந்திரீகம் என்றால் மலையாள மாந்திரீகம் தானே! மலையாள மாந்திரீகம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலம்.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமை இந்த மாந்திரீகம் மலையாள தேசத்திற்கு மட்டும் உரியது அல்லவா!  மாந்திரீகம், வசியம், பில்லி சூன்யம் என்கிற வார்த்தைகள் உச்சரிக்கும் போது மலையாள தேசமும் சேர்ந்து தானே வருகிறது?  அதற்கு இன்னொரு பெயர் என்ன?   தீய சக்திகளின்  தேசம் என்று சொல்ல வேண்டும்! ஆனால் என்ன செய்வது வெறும் நீர் வளங்களை வைத்துக் கொண்டு  கட்வுள் தேசம் என்று சொல்லுவது  இறைவனை அவமதிப்பது  ஆகாதா! அது இறைவனை தூஷிப்பதற்குச் சமம் அல்லவா.

இருந்தாலும் அதனை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும். அவர்கள் அவர்களாகத்தான்  இருப்பார்கள். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இன்றைய நிலையில் அவர்களின் ஓலம் நமக்குக் கேட்கிறது. வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து எங்கெங்கும் அவர்களது குரல் ஒலிக்கிறது. வெள்ளம் கட்டவிழ்த்து ஓடுகிறது. குடிக்கத் தண்ணிர் இல்லை. குழைந்தைகளுக்குக் கொடுக்க பாலில்லை.

அனைத்தும் கட்டுக்கள் கொண்டு வர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும். அரசாங்கம் அவர்களுக்கு உதவுகிறது. மத்திய அரசாங்கம் அவர்களுக்கு உதவுகிறது. பக்கத்து மாநிலங்கள் அவர்களுக்கு உதவுகின்றன. நடிகர்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள். பொது மக்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனாலும் இது போதாது. உலக மக்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதாக திருத்தந்தை ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

கேரள மக்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்!

Monday 20 August 2018

நமது KING MUSANG டுரியான் என்ன ஆயிற்றூ?

ஆமாம், நமது டுரியான் பழங்கள் இப்போது என்ன நிலையில் இருக்கின்றன? அதுவும் KING MUSANG  என்று சொல்லப்படுகின்ற பழங்களின் அரசன் நிலை என்ன?

இன்றைய நிலையில் அனைத்தும் வர்த்தகம் என்று ஆன பிறகு எதுவும் அதனின் அசல்  சுவையை அனுபவிக்க முடிவதில்லை என்பதும்  உண்மை தான்.  டுரியானுக்கும் அந்த நிலைமை தான்.  வர்த்தகர்கள் எதனைப் பயிர் செய்தாலும் அவர்களின் நோக்கம் ஒன்று தான். சீக்கிரம்! சீக்கிரம்! சீக்கிரம்! சீக்கிரமாக அறுவடை செய்ய வேண்டும். பணம் பார்க்க வேண்டும். அது அவர்களின் இயல்பு என்றாலும் அந்தப் பழங்களின் இயற்கைத்  தன்மையை  முற்றிலுமாக அழித்து விடுகிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

அது தான் நமது டுரியானுக்கும் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் "கிங் மூசாங்" பழத்தைச் சாப்பிட்ட போது அதனை உணர முடிந்தது. டுரியான் பழங்களிலேயே மிகவும் சுவையானது கிங் மூசாங். ஆனால் என்ன ஒரு சோகம்.  அதன் சுவையையே மாற்றிவிட்டார்கள் நமது வியாபாரிகள்!

இது பற்றி ஒரு மலாய் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஓர் அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்து கொண்டார். சாதாரணமாக ஒரு டுரியான் மரம் அறுவடை ஆக சுமார் ஏழு, எட்டு ஆண்டுகள் பிடிக்கும். மிகவும் நீண்ட காலம். அதனால் சீன நண்பர்கள் அதன் அறுவடை காலத்தைக் குறைக்க பலவிதமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தி  அந்த நீண்ட காலத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். அந்த ரசாயன உரம் அந்த மரத்தின் வளர்ச்சிக்கு மட்டும் அல்ல அந்த மரத்தின் பழங்களுக்கும் சென்றடைகிறது என்பது தான் அதிர்ச்சி தகவல். அந்த ரசாயன பழங்களைத்தான் நாம் சாப்பிடுகிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் எல்லாம் அதில்  கலக்கின்றன என்பதாக அவர் கூறினார்.  அதனை நாம் எப்படி தெரிந்து கொள்ளுவது? இன்று நாம் சாப்பிட்டால் நாளை நமது நாக்கில் பிசுபிசுத் தன்மை ஏற்படும் என்பதாக அவர் கூறினார்! அதனால் தான் சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் நமது பழங்களை வாங்குவதில்லை என்பதையும் கூடுதலாகச்  சொல்லி  வைத்தார்.

சரி, டுரியான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்யலாம். ஒரே வழி. சாதாரண கம்பத்து டுரியான்களை வாங்கிச் சாப்பிடுங்கள். அவைகள் சற்றுக்  கரடு முரடாக இருக்கும். எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது. காலா காலமாக அந்தப் பழங்களைத்தானே சாப்பிட்டோம்? இப்போது சாப்பிட்டால் என்ன கெட்டு விடப்போகிறது! 

முடிந்தவரை ரசாயனம் கலந்த டுரியான்களுக்கு ஆதரவு கரம் நீட்டாதீர்கள்!  இனி அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம்!


வெற்றியா? தோல்வியா?

பக்காத்தான் தனது 14-வது பொதுத் தேர்தலின் போது  கொடுத்த நூறு நாள் தேர்தல் வாக்குறுதிகள்  என்னவாயிற்று?  

அந்த வாக்குறுதிகள் வெற்றியில் முடிந்ததா அல்லது தோல்வியில் முடிந்ததா என்பதான வாதங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இது தேர்தல் வாக்குறுதிகள். தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுவது சாதாரணமான ஒன்று தான். ஊழல் செய்பவனே ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லுவதெல்லாம் வாடிக்கை தான்.

ஆனாலும் பக்காத்தான் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியெல்லாம் பார்க்க முடியாது. மேலும் நமது  நாட்டில்  இந்தத் தேர்தலின்  போது  கொடுத்த வாக்குறுதிகளைப் போல  இதற்கு  முன்னர்  கொடுக்கப்படவில்லை. பெரிய, பெரிய  வாக்குறுதிகள் இல்லை. பொதுவாக, இந்தியர்களைப் பொறுத்தவரை,  இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி அங்கு ஒரு தமிழ்ப்பள்ளி, போன்ற வாக்குறுதிகள் தான் இருக்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கொடுத்த  வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள்.  இது தான்  கடந்த தேர்தல்களில் பாரிசான்  கொடுத்த வாக்குறுதிகள். அதனை  நாம் பெரிதுபடுத்தவில்லை. காரணம் அது நடக்காது என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இந்த முறை தேர்தல் என்பதே  வேறு கோணத்தில். உண்மையாகவே மலேசியர்கள் பாதிக்கப்பட்டார்கள். விலைவாசி ஏற்றம், பொருளாதாரச் சிக்கல்கள், இந்தியர்களைப் பொறுத்தவரை அடையாள அட்டை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியில் வேற்றுமை - இப்படிப் பிரச்சனைகள் ஏராளம்! ஏராளம்! அதனால் தான் எதிர்கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க வேண்டிய சூழலில் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அன்றைய நிலையில், அவர்களுக்குக் கிடைத்த தரவுகளை வைத்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள். முடியுமா, முடியாதா என்றெல்லாம் கணிக்க முடியாத  நிலை! ஆனால் எதிர்கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்று யாருமே  எதிர்பார்க்கவில்லை! 

எதிர்பாராத சூழலில் எதிர்கட்சியினர் வெற்றிபெற்றார்கள்! ஆக, அப்போது அவர்கள் கொடுத்த நூறு நாள் வாக்குறுதிகளை இப்போது அவர்களால் முழுமையாக நிறைவேற்ற  முடியவில்லை. ஏதோ ஒரு சில முடிந்ததை அவசரக் கோலத்தோடு செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதோடு சரி.  அத்தோடு நாமும் திருப்தி அடைய வேண்டியது தான்!

ஆனால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றுவார்கள் என்பது மட்டும் உறுதி. சில வருடங்கள் எடுக்கலாம். சில இழுத்துக் கொண்டும் போகலாம்! ஆனால் நிச்சயம் செய்வார்கள்!

வெற்றியா? தோல்வியா?  வெற்றி கிடைக்கும் என நம்புவோம்!

Sunday 19 August 2018

அறப்பணி வாரியம் தேவையா..?

இந்து அறப்பணி வாரியம் அமைப்பதற்கான வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 

இது தேவையா, தேவையில்லையா என்கிற விவாதமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் உள்ள பல இந்து கோவில்கள் பலவிதமான பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன என்பது உண்மை. அதில் முக்கியமாக தலைமைத்துவ பிரச்சனை. பல கோவில் நிர்வாகிகள் நீதிமன்றங்களைப் படை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!  ஒன்று அல்ல! இரண்டு அல்ல!  பல! பல!

இன்னொரு பக்கம் பார்ப்போம். நாட்டில் செட்டியார்கள் வழி நடத்தும்  கோவில்கள் பல இருக்கின்றன. அவர்கள் எல்லாம்  நீதிமன்ற வாசல்களை மிதிப்பது மிக மிகக் குறைவு. சரி, யாழ்ப்பாணத்  தமிழர்களின் கோவில்களைப் பார்ப்போம். அங்கும் எந்த ஆர்ப்பட்டமோ ஆரவாரமோ ஒன்றும் இல்லை. எல்லாமே சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது.

செட்டியார்கள், யாழ்ப்பாணத் தமிழர்களத் தவிர்த்து மற்ற கோவில்கள் மட்டுமே பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றன. ஏன்?  தமிழர்களை அதிகமாகக் கொண்ட இந்தக் கோவில்களின் தான் மலையாளிகள், தெலுங்கர்கள் அனைவரும் தமிழர்களாகி விடுகின்றனர்!  அது கூட குற்றமில்லை.  கோவில்களின் தலைமைத்துவம் இவர்கள் கையில். அது தான் பிரச்சனைகளின் ஆரம்பம். அவர்கள் மற்றவர்களுக்கு - தமிழர்களுக்கு - விட்டுக் கொடுப்பதில்லை. ஒருவர் போனால் அவருடைய வாரிசை உள்ளே நுழைத்து விடுகிறார்! அல்லது சொந்தங்களை நுழைய விடுகிறார்கள்!   இவைகள் எல்லாம் அளவுக்கு மீறிய சொத்துக்கள் உள்ள கோயில்களில் தான் பிரச்சனைகள் எழுகின்றன! பத்துமலை திருத்தலத்தின் தலைவரை யாராலும் அசைக்க முடியவில்லை அல்லவா!

அதனால் பிரச்சனைகளை எப்படிக் களைவது என்பதில் தான் இப்போது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒரே வழி. கோவில்களில் சொத்துக்களை அதிகரித்துக் கொண்டே போக வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் இருக்கின்ற பணத்தை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும். நமது குடும்பங்களில் கல்விக்காக எந்த அளவு பெற்றோர்கள்  சிரமப்படுகிறார்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. முடிந்தவரை கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவ ஒவ்வொரு கோவில் நிர்வாகமும் முயற்சி செய்ய வேண்டும். கேட்டால் தான் கொடுப்போம்  என்பதை விட கேட்காமலே கொடுக்கின்ற பழக்கத்தை நிர்வாகங்கள் கையில் எடுக்க வேண்டும். நம்மைச் சுற்றி உள்ள ஏழைப் பிள்ளைகளின் கல்வி அல்லது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு என்று கல்வி சம்பந்தமான எதனையாவது கையில் எடுத்து செயலில் இறங்க வேண்டும்.

கோவில் பணம் என்பது மக்களின் பணம். அதனை ஏன் சேர்த்து வைத்து அழகு பார்க்க வேண்டும்? யாருக்கும் உதவாமல் இப்படி சேர்த்து சேர்த்து  என்ன செய்யப் போகிறோம்?

இங்கு தான் அறப்பணி வாரியம் உள்ளே வருகிறது. அந்தப் பணம் ஏழை இந்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் உயரிய நோக்கம் கொண்டது. அதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. 

சரியான வழிமுறைகளைக் கொண்டு இந்த அறப்பணி வாரியம்  அமைக்கப்பட வேண்டும்.  வாரியம் தேவை தான்!

Wednesday 15 August 2018

ஏமாற்றமே...!

நூறு நாள்களுக்குள் இந்தியர்களுக்கு ஏதாவது கணக்கில் காட்ட வேண்டுமே  என்னும்  நோக்கத்தில்  வெளியாகியிருக்கிறது இந்த அறிவிப்பு.

பரவாயில்லை, இது ஆரம்பமாக இருக்கட்டும்.  அறுபது வயது மேற்பட்டவர்களுக்கு முதலில் நீல நிற அடையாள  அட்டை கொடுப்பதை வர வேற்கவே செய்கிறோம்.

ஆனாலும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. அறுபது வயது மேற்பட்டவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. குடும்பத்தைக் காப்பாற்றப் போவதில்லை.  ஏதோ ஓரிருவரைத் தவிர பெரும்பாலும் ஓய்வுப் பெற்றவர்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் அரசாங்கத்தின் உதவி மட்டுமே. கிடைக்கட்டும். வாழ்த்துகிறோம்.

நாம் சொல்ல வருவதெல்லாம் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைமையில் உள்ளவர்கள் நிலை என்ன என்பது மட்டும் தான்.  இந்த சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள்  ஏதோ அவர்கள், குறைந்த சம்பளத்தில்,  விரும்பாத  வேலைகளைச் செய்து கொண்டு, தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்னும் அக்கறையோடு அவர்களது கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இளம் வயதினர் பலர் இருக்கின்றனர்   அதனால்  அறுபது வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனடியாகக் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் உள்ளவர்களையே முதலில்  கவனிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள். வேலை செய்ய முடியாத நிலையில் பலர் இருக்கின்றார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் பலர் இருக்கின்றார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு நீல அடையாள அட்டை கிடைப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.

அறுபது வயதுக்கு  மேற்பட்ட சுமார் 3,407 பேருக்கு நீல நிற அடையாள அட்டை கிடைக்கப் பெற்றவர்களை வாழ்த்துகிறோம்.   அரசாங்கத்தில் பணிபுரிபவர்களின் திறனற்ற வேலைகளினால் பலர் பாதிக்கப்பட்டு விட்டனர். அவர்களில் இவர்களும் அடங்குவர்.  அதிலும் இந்தியர்கள் பலர் அடங்குவர்.

வருங்காலங்களில் திறமையற்ற அரசாங்க  ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.அல்லது பதவி இறக்கம் செய்ய வேண்டும். ஆகக்  கீழ்மட்ட வேலைகளுக்கு அவர்கள் அனுப்பப்பட வேண்டும். தவறுகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

இந்த முடிவு ஏமாற்றந்தான்!  ஒர் ஆரம்பம் தேவை. இங்கிருந்து ஆரம்பம். வரவேற்போம்!

Tuesday 14 August 2018

கேள்வி - பதில் (83)

கேள்வி

தி.மு.க. வில் அடுத்து பொறுப்பேற்பவர்களில் யார் யாராக இருக்கக் கூடும்?

பதில்

கலைஞரின் பாசத்துக்குரிய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் - இவர்களுடைய பெயர்கள் தான் அடிபடுகின்றன!

"எழுந்து வா, தலைவா!" என்று கதறி அழுதானே அவனெல்லாம் இதில் இல்லை. கலைஞரின் இறப்பு செய்தி கேட்டு இலட்சக் கணக்கில் கூடினார்கள் என்று பெருமைப் பட்டுக் கொண்டார்களே,  அந்த எருமைகளில் ஒருவர் கூட பெருமைப்படும்படியாக இந்தப் பொறுப்புக்களில் இல்லை!

இப்போது குடும்பத்தில் உள்ள குழப்பம் எல்லாம் யார் யாரை எங்கே வைப்பது என்பது தான்.அண்ணனை எங்கே வைப்பது, தம்பியை எங்கே வைப்பது, தங்கையை எங்கே வைப்பது, பேரனை எங்கே வைப்பது, பேரப்பிள்ளைகளை எங்கே வைப்பது போன்ற கட்சியில் உள்ள  ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றுவது என்பதற்காக தளபதி ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார்!

கட்சிப் பதவிகளுக்கு மட்டும் தான் இந்தக் குழப்பமா? கட்சியில் உள்ள சொத்துக்கள்? இவைகள் அனைத்துக்கும் வாரிசுகள் இவர்கள் தானே! தமிழகத்தை கட்டிக்காப்பவர்கள்  என்றால் அது கலைஞரின் வாரிசுகளால் தான் முடியும்  என்பதாகக்  கலைஞர்  என்றோ முடிவு  செய்துவிட்ட  ஒரு  விஷயம்.  அது  தான்  இப்போது  நடந்து  கொண்டிருக்கிறது.  கலைஞர்  என்ன  நினைத்தாரோ அதையே  தான்  ஸ்டாலினும்  நினைக்கிறார்!  கட்சியின்  தலைமைத்துவத்துக்கள், கட்சியின் சொத்துக்களுக்குள்  வெளியே  உள்ளவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதில் ஸ்டாலின்  கவனமாக இருக்கிறார்.

தமிழனை  ஆட்சி செய்ய  வேண்டுமே  தவிர கட்சிக்குள்  தமிழனின் ஆட்சி  வரக்கூடாது என்பது  தான்  கலைஞர் மகனுக்குச் செய்த உபதேசம்.  அந்த  அறிவுரையை  ஸ்டாலின் நிச்சயமாகக் கடைப்பிடிப்பார்!  நாளை கட்சி  காலாவதியானாலும் சொத்துக்களாவது மிஞ்சுமே  அதனை  இழக்க முடியாது அல்லவா! 

எது  எப்படி  இருந்தாலும்  கலைஞர் தனது  வாரிசுகளுக்கு  எந்தக் குறையும்  வைக்கவில்லை.  அவர் குடும்பத்தில்  ஒவ்வொரு  குழைந்தையும்  பிறக்கும்  போதே  கோடிகளோடு   தான்  பிறக்கின்றன. 

வீழ்வது விவசாயிகளாக இருந்தாலும்  வாழ்வது வாரிசுகளாக இருக்கட்டும்!

Monday 13 August 2018

ஆணாவது...பெண்ணாவது...!

ஒரு பாக்கிஸ்தானிய நண்பர். வாடகைக் கார் ஓட்டுனர். கார் அவருக்குச் சொந்தமானது. பெர்மிட் அனைத்தும் அவருக்குண்டு. நல்ல மனிதர்.  மிகவும் குறைந்த வயதினர். ஆனாலும் என்னன்னவோ பெயர் சொல்ல முடியாத வியாதிகள் எல்லாம் அவருக்குண்டு. கால்கள் ஆடும். கைகள் ஆடும். இன்னும் என்னன்னவோ!  ஒரு நாளைக்கு இருபதுக்கு  மேற்பட்ட மாத்திரகளைச் சாப்பிட்டாக வேண்டும், உயிர் வாழ!

இருந்தாலும் மனிதர் மகிழ்ச்சியாகவே இருப்பார். மனைவி வீட்டோடு சரி. குழந்தைகள் இடைநிலைப் பள்ளிகளில் படிக்கின்றார்கள்.  கடைசியாக எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது. அவரால் கார் ஓட்ட முடியவில்லை. அவருடைய வருமானம் என்பது அந்த வாடகைக் கார் தான்.

இருந்தாலும் அவர் மனைவி அசாதாரணப் பெண்மணி.  "உங்களால் முடியவில்லை என்றால் என்ன? நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்"  என்று அதிரடியாகக் கூறி விட்டார்! அப்படிச் சொல்லுவதற்கே மிகவும் துணிச்சல் வேண்டும். காரணம் பாக்கிஸ்தானியப் பெண்கள் என்றால் அது பழைய மாதிரியானப் பாக்கிஸ்தான்!. அதிகம் வீட்டை விட்டு வெளியே போவதில்லை! வேலைக்குப் போவதில்லை! வீட்டோடு சரி.

ஆனாலும் குடுமபத்தைக்  காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதே. அப்போது தான் அதிரடியாக முடிவெடுத்தார் அந்தப் பெண்மணி. அரசாங்க உதவி எல்லாம் ஏதோ ஒரு மாதம், இரு மாதங்கள் என்பதைத் தவிர எப்போதும்  தொடர முடியாது. அதுவும் இந்தப் பெண்கள் "பிச்சை" எடுப்பதை விரும்பாதவர்கள். டாக்சி ஓட்டும் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும் ஒரு சில தினங்களில் சுதாரித்துக் கொண்டார். இப்போது அவர் தான் குடும்பப் பொறுப்பை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டுள்ளார். பொருளாதாரத்தை மனைவி பார்த்துக் கொள்ள வீட்டை கணவர் பார்த்துக் கொள்ளுகிறார்.

இது போன்ற துணிச்சல் தான் நமது பெண்களுக்குத் தேவை. தேவை ஏற்படும் போது களத்தில் இறங்க வேண்டும்.  நமது கஷ்ட நேரத்தில் யாரும் நமக்கு உதவப் போவதில்லை. நமக்கு நாமே தான் உதவிக் கொள்ள வேண்டும். "அவர்கள் அப்படிச் சொல்லுவார்கள், இவர்கள் இப்படிச் சொல்லுவார்கள்"  என்று அனைத்தையும் காதில் போட்டுக் கொண்டிருந்தால் கடைசியில் நாம் தான் அவதிப்பட வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற யாரும் கை கொடுக்க மாட்டார்கள்.

நமது துணிச்சல் தான் நமக்குக் கை கொடுக்கும். துணிச்சல் இருந்தால் தான் நாம் பிழைக்க முடியும். துணிந்தவனுக்கு துக்கம் இல்லை ! அழுதவனுக்கு அகங்காரம் இல்லை!

ஆணாவது, பெண்ணாவது! துணிவே ஒன்னாவது!

பேராசிரியர் பேசுவது சரியா...?

பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர்  டாக்டர் ராமசமி திடீரென கட்சி மாறுவது சரியா என்று  கேட்கத் தோன்றுகிறது.

தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் அரசாங்கப்பள்ளிகளாக  மாற வேண்டும் என்னும் கோரிக்கை சமீபத்தில்  எழுப்பப்பட்டதல்ல. நீண்ட காலமாக எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக நடப்பில் உள்ள ஒரு கோரிக்கை.  எதிர் வரிசையில் இருக்கும் போது,  ம.இ.கா. வினரைத் தவிர  மற்ற  அனைவரும்  ஒரே குரலாக அந்தக் கோரிக்கையை ஆதரித்தனர். பேராசிரியரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏன் கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் அதுவும் முக்கிய அம்சமாக விளங்கியது.

ஆனாலும் பேராசிரியர்  இப்போது தனது கருத்தை   மாற்றிக் கொண்டார் என்றே தோன்றுகிறது. பகுதி உதவி பெறும் பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாறினால் தமிழ்ப்பள்ளிகள் தங்களது தனித்தன்மையை இழந்து விடும் என்பதாக அவர் கூறுகிறார்! 

ஏன் இத்தனை ஆண்டுகளாக ஏற்றுக்கொண்ட ஒன்றை இப்போது தங்களுடைய ஆட்சி அமைந்த பிறகு தடம் மாறுவதற்குக் காரணங்கள் என்ன என்பது நமக்கும் புரியாத புதிராக இருக்கிறது!

பேராசிரியர் ஏதேனும் நெருக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறாரா? அவர் சொல்லுகின்ற சில காரணங்களைப் பார்ப்போம். தமிழ்ப்பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாறினால்: தமிழ் மொழி தெரியாதவர்கள் தலைமையாசிரியர்களாக வரலாம். தமிழ் தெரியாதவர்கள் ஆசிரியர்களாக வரலாம். பதவி உயர்வு பெறத் தடையாக இருக்கலாம் என்பன போன்ற காரணங்கள்.

மேற் சொல்லப்பட்ட காரணங்கள்  பாரிசான் கட்சி  ஆட்சியில்  இருக்கும் போதே வந்துவிட்டவைகள் தான். ஒன்றும் புதிதல்ல. அதனை ஏன் பேராசிரியர் நமக்கு ஞாபகமூட்டுகிறார் என்று தெரியவில்லை. 

இவைகள் எல்லாம் களையப்பட வேண்டும் எனபதற்காகத்தான் நாம் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். அதன் எதிரொலி தான் இப்போதைய புதிய ஆட்சி. இப்போதும் ஏன் அதனையே காரணங்களாகக் கூற வேண்டும் என்பது தான் நமது கேள்வி

இந்த  ஆட்சியில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் களையப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் மீண்டும்" நாங்கள்  அங்கேயே தான் நிற்கிறோம்,  நாங்கள் மாறவில்லை" என்பது போல் இருக்கிறது பேராசிரியர் கூறுவது!

சீனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வேளையில் பேராசிரியர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லுவது  ஏற்புடையதல்ல. தமிழை சரியான பாதையில் கொண்டு செல்ல அவருடைய கருத்து நமக்குத் தேவை. 

பேராசிரியர் சொல்லுவது சரியா? சரியில்லை என்பதே நமது நிலை!

Friday 10 August 2018

"தகுதி சான்றிதழ்" இல்லையா...?

பினாங்கு சட்டமன்றத்தில் கல்விக்கூடங்கள் பற்றியான ஒரு விவாதத்தில் ஓர் அதிர்ச்சியான  செய்தி வெளியாகியிருக்கிறது! பாரிசான் ஆட்சியில் இந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுவார்கள் என்று நாம் யாரும் எதிர்ப்பார்க்க முடியாது.

பினாங்கில் 2002 ஆண்டிலிருந்து  கடைசியாக 2011 -ம் ஆண்டு வரைக் கட்டபட்ட சுமார் 31 பள்ளிகளுக்கு இது நாள் வரை அந்தப் பள்ளிகளைப் பயன்படுத்துவதற்கான :"தகுதி சான்றிதழ்" (Certificate of Fitness) கொடுக்கப்படவில்லை என்னும் அதிர்ச்சி செய்தி தான் அது!

இந்தப் பள்ளிகளில் இடைநிலைப்பள்ளிகள் 17-ம் ஆரம்பப் பள்ளிகள் 14 - ம் அடங்கும். ஏன் தகுதி சான்றிதழ் கொடுக்கப்பட வில்லை என்றால் கல்வி என்பது மத்திய அரசாங்கத்தின் கையில் என்பதால் பினாங்கு மாநிலம் எதனையும் செய்ய இயலாது! மத்திய அரசாங்கத்தை மாநில அரசாங்கம் கேள்வி எழுப்ப முடியாது! அவ்வளவு தான்!

மத்திய பாரிசான் அரசாங்கம் ஏன் தகுதி சான்றிதழ் வழங்கவில்லை?  நமக்கு மேம்போக்காக தெரிந்ததெல்லாம்  அந்தக் கட்டடங்கள் பயன்படுத்துவதற்கு எற்றதாக இல்லை. பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்றால் அதனை மீண்டும் கட்ட வேண்டும். இந்தக் கட்டடங்களைக் கட்டும் குத்தகையாளர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களை மீண்டும் கட்டுங்கள் என்று சொல்ல முடியாது. காரணம் அரசியல்வாதிகளும், கல்வி அதிகாரிகளும் -அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்திருக்கும்! அதனால் அவர்களும் வாய் திறக்க முடியாது! அதனால் யாரும் வாயையும் திறக்க வேண்டாம்! தகுதி சான்றிதழும் கொடுக்க வேண்டாம்! யார் கேள்வி கேட்க முடியும்?

இப்போது வெளியாகி இருக்கும் இந்த செய்தி பினாங்கு மாநிலத்தில் மட்டும் தான். அப்படி என்றால் மற்ற மாநிலத்துப்  பள்ளிகள் எந்த நிலையில் இருக்கின்றன? அங்கும் இப்படித்தான் இருக்க வேண்டும். காரணம் ஊழல், ஊழல். ஊழல்! ஒருவன் ஊழல் செய்தால் கண்டும் காணாமல் இருந்து விடலாம். அனைவருமே ஊழல் செய்தால் ....? அதுவும் கல்வி கற்கும் இடங்களிலா? பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடும் இடங்களிலா! ஜீரணிக்க முடியவில்லை!

இதற்கெல்லாம்  இப்போது பக்காத்தான் அரசு முடிவு காண வேண்டும். பாதுகாப்பற்ற கட்டடங்களில் பிள்ளைகள் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும். கட்டடங்களில் உள்ள பிரச்சனைகளைச் சீர் செய்ய வேண்டும்.

இப்போது தான் நமக்குப் புரிகிறது ஏன் பாரிசான் அரசாங்கத்தை மக்கள் வெறுத்தார்கள் என்று!

நஜிப் அம்னோவுக்கு "சுமை" ஆகிறார்!

நஜிப் அம்னோவுக்கு "சுமை"  ஆகிறார் என்பது இப்போது வெளிப்படையாகவெ தெரிய ஆரம்பித்திருக்கிறது!

இப்போது அம்னோ தலைவர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள். நஜிப் ஒரு சுமை,  அவரை நாம் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க முடியாது என்பதாக! 

உண்மையில் நஜிப் அம்னோவுக்குச் சிறிய சுமை அல்ல அவர் ஒரு பெரிய சுமை! இப்போது நஜிப்பை குறை சொல்லுபவர்கள் ஒன்றும் உத்தமபுத்திரர்கள் அல்ல. ஆராய்ந்து பார்த்தால் எல்லாருமே ஏதோ ஒரு வகையில்"புறங்கையை நக்கியவர்கள்" தான்! ஆனால் நஜிப் மட்டும் தேன் கூட்டையை நக்கியவர்! அது தான் பெரிய வித்தியாசம்!

பாருங்கள்! நஜிப் பதவியை இழந்து நூறு நாள்கள் ஆகவில்லை.  ஆரம்பத்தில் பக்காத்தான் அரசாங்கம் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அம்னோவில் உள்ள ஒரு சிறிய கூட்டம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டே இருந்தது. ஆர்ப்பாட்டம் அது, இது என்று சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.. சமீபத்தில் நடைப்பெற்ற  இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஆதரவு இருந்தும்,  அம்னோ தோல்வியைத் தழுவியதும் நிலைமைகள் மாறிவிட்டன! காரணம் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். நஜிப் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரங்களில் "நான் நிரபராதி!" என்று பேச ஆரம்பித்தது பெரிய தவறு என்பதை இப்போது தான்  அம்னோ தரப்பு புரிந்து கொண்டிருக்கிறது! 

தேன் எடுப்பவன் புறங்கையை நக்கினால் "போனால் போகட்டும்" என்று மக்கள் விட்டு விடுவார்கள். தேன் கூட்டையை கபளீகரம் பண்ணினால் அது என்ன அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக் கூடியதா? அம்னோவுக்கு இப்போது தான் உண்மை புரிகிறது.  இனி வரும் இடைத் தேர்தல்களில் நஜிப் வாய் திறந்தால் "இருப்பதும் போச்சுடா நொல்லக் கண்ணா! என்கிற நிலைமை தான் உருவாகும் என்று அம்னோவுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது! புரிந்து கொண்டால் சரி!

இப்போது அம்னோ தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச ஆரம்பித்து விட்டார்கள். "நஜிப் தனது சுமையைத் தானே சுமக்கட்டும் அம்னோ அதில் தலையிட வேண்டாம்"  என்கிற வாதம் சரியானது தான்!. 

நஜிப் சுமப்பது என்பது அசாதாரணமான சுமை! . நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இப்போது பாதி நாட்டை சீனா ஆக்கிரமித்திருக்கும்! அது தான் உண்மை. 

நஜிப் எந்த நாட்டுப்பற்றும் இல்லாத மனிதர்! நாட்டுப்பற்று, இனப்பற்று என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காத விஷயங்கள்! அவர் இருக்க வேண்டிய இடம் ...?  உள்ளே! அவரின் சுமையை அவர் தான் சுமக்க வேண்டும்! வேறு யாரும் பங்குப் போடப் போவதில்லை!

Thursday 9 August 2018

சிட்பா என்றால் என்ன தான் பொருள்?

இப்போது நமது  நாளிதழ்களில் "சிட்பா" செல்வரத்னம் என்னும் பெயர் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டிருக்கிறது.

அவர் தான் கடற்படை சட்ட விதிகளில், இன்றைய நிலையில், நம் நாட்டைப் பொறுத்தவரை, முதன்மையான நிலையில் இருக்கும் சிட்பா செல்வரத்னம். சட்டத்துறை தலைவர்  டோமி தாமஸ் அவர்கள் இவரைத்தான் சொகுசுக் கப்பல் விவகாரத்தில் அதன் வழக்கறிஞராக நியமித்திருக்கிறார்.

நான் சொல்ல வந்த பிரச்சனை அதுவல்ல. இந்த சிட்பா என்றால் என்ன பொருள்?  ஆங்கில ஊடகங்கள் சிட்பா என்று போட்டால் - எந்த முறையில் போட்டாலும் - அதற்கு நாம் அர்த்தம் தேட தேவை இல்லை. அதனை எப்படிப் போட்டாலும் நாம் ஒன்றும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆங்கிலத்தைப் பொறுத்த வரை சிட்பா என்றால் சிட்பா தான! அவ்வளவு தான்!

ஆனால் தமிழில் இப்படி சிட்பா என்றால் என்ன தான் பொருள்?  தமிழில் சிட்பா என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிட்பா என்றால் ,,,,அப்படி ஒரு வார்த்தை தமிழில் இருப்பதாகத் தோன்றவில்லை. அதற்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.  தமிழ் அகராதியும் ஒத்துழைக்க வில்லை. ஒரு வேளை தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒரு வார்த்தை இருந்தாலும் இருக்கும். எனக்குத் தெரியவில்லை!

எனது மனதில் "சிற்பா"  என்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. காரணம் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் இப்படிப் பெயரை வைப்பார்கள்.  சிற்றம்பலம், சிற்பகேசன் போன்ற பெயர்கள் அங்கிருந்து தான் வரும்.  என்றாலும்  நமது நாளிதழ்கள் சரியானப் பெயரைக் கொடுக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தேன்.

ஆனாலும் அங்கும் தோல்வி தான்!  நான் வாங்கும் நாளிதழ் "சிட்பா" என்றே போட்டிருந்தது! இதை விட என்ன கேவலம் இருக்கிறது! 

உடனே இணையத்தளத்திற்குள் புகுந்தேன். ஒன்று கண்ணில் பட்டது. தலைப்பு: முன்னொரு காலத்தில்...குமரிக் கண்டத்தில்.

 "வலது புறம் இருக்கையில் சிப்பி,  அழகி, முத்தழகி, சிற்பா, அமைச்சர் ஆதனின் மனைவி,  படைத்தளபதியின் மனைவி ஆம்பல்........."

இது போதும்!  இவைகள் எல்லாம் பெண்களின் பெயர்கள் அது போல 'சிற்பா" வும் பெண்ணின் பெயர் தான். நல்ல பெயர்,  யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் இது போன்ற பெயர்களை வைக்கிறார்கள். 

"சிற்பா" வே போதும்! "சிட்பா" வேண்டாம்! ஆண் என்கிற குழப்பம் வேண்டாம்!

Wednesday 8 August 2018

கல்வித் தோட்டம் ...காலியா....!

பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 2000  ஏக்கர் நிலம் ..... அடடா!.... இருக்கிறதா, இல்லையா என்று கூட தெரியவில்லை இப்போதைய நடப்பு அரசாங்கத்திற்கு!

அதென்னவோ ம.இ.கா. காரனுக்கு எதனைக் கொடுத்தாலும் ஒன்று: மறைத்து விடுவான்! அல்லது விழுங்கி விடுவான்!  இந்த 2000 ஏக்கர் நிலத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவும் இல்லை! புரியவும் இல்லை!

சீனர்களுக்கும் தான் நிலத்தைக் கொடுத்தார்கள். மலாய்க்கார்களுக்கும் தான் நிலத்தைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் பள்ளி வளர்ச்சிக்காகத் தான்  கொடுத்தார்கள். இவர்களுக்கும் கல்வி வளர்ச்சிக்காகத் தான் கொடுத்தார்கள்.  சீனப்பள்ளிகளுக்கு அந்த நிலங்கள் முக்கியம். மலாய்ப் பள்ளிகளுக்கும் அந்த நிலங்கள் முக்கியம். நிலம் எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதே - ஏன் அடுத்த நிமிடமே - சீனர்களும், மலாய்க்காரர்களும் நிலத்தை எடுத்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  இப்போது அங்கு செம்பனை நட்டு அறுவடையும் ஆரம்பித்து விட்டன. 

அந்தோ! நமது ம.இ.கா. சிங்கங்கள் என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியவில்லை! அந்த நிலத்தை கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்து விட்டார்களாம். இப்போது கூட்டுறவு சங்கம் அந்த நிலத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம். இதுவும் கூட கூட்டுறவு சங்கத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் அந்த ம.இ.கா. சிங்கங்கள் "கப்சிப்" என்று வாயைப் பொத்திக் கொண்டிருக்கின்றன! எந்த ஒரு செய்தியும் வெளியே வரமாட்டேன் என்கிறது. வாயைத் திறக்கவில்லை என்றால் ஏதோ பெரிதாக பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்பது தான் பொருள்! அது தான் தெரியவில்லை!

இன்னொன்றும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ம.இ.கா. காரன் எதனையும் தனித்து நின்று செய்வதில்லை. கூடவே அம்னோகாரனையும் சேர்த்துக் கொள்வது! காரணம் அம்னோ உள்ளிருந்தால் பிரச்சனைகளைத் திசை திருப்பலாம்! எந்த உண்மையும் வெளி வராது.  அம்னோவின் பேரைச் சொன்னால் ம.இ.கா. வுக்கு ஒரு பாதுகாப்பு! இவனும் திருடன் அவனும் திருடன்! ஒருவன் பெரிய திருடன்! இன்னொருவன் சிறிய திருடன்! சிறிய திருடனுக்குக் கோடிகள் கிடைத்தால் போதும்! அப்படி என்றால் பெரிய திருடனுக்கு....?

நமது இந்திய சமூகம் படிக்காதவனை எல்லாம் பதவியில் வைத்து நாறிப் போன சமூகம்! குண்டர் கும்பல்கள் பதவியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் நேரிடையாகவே அனுபவித்திருக்கிறோம்! இன்னும் அவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது!

இப்போதைக்கு கல்வித் தோட்டம் காலியா அல்லது தோல்வியா என்பதைக் கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்வோம்! அதுவரை பொறுமை காப்போம்! பக்காத்தான் அரசாங்கம் அவர்களை விடாது என்பது மட்டும் உறுதி!

கேள்வி - பதில் (82)

கேள்வி

கலைஞர் மறைவு பற்றி...........?

பதில்

எதிர்பார்த்தது தான்.   95 வயது வரை வாழ்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. கலைஞர் வாழ்ந்திருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக அவர் வாழவில்லை.  மருத்துவர்களின் உதவியால் ஏதோ நகர்த்தப்பட்டிருக்கிறார்.  அவர் எழுதவில்லை, படிக்கவில்லை, பேசவில்லை என்றால் அவைகள் எல்லாம் அவரது இயல்பு வாழ்க்கை அல்ல.

அவரைப் பற்றியான பழைய ஞாபங்கள் கிளர்ந்து எழுகின்றன.  பராசக்தி படம் வந்த நேரம்.  சிவாஜி பேசிய அந்த வசனங்கள் அந்தக் கால பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை அந்த வசனங்களைப் பேசிப் பேசி தங்களை சிவாஜி கணேசனாகவே நினைத்துக் கொண்டனர்!  அந்த வசனங்களைப் பேசியவர் முன்னணியில் நிற்கின்றாரா அல்லது எழுதியவர் முன்னணியில் நிற்கின்றாரா என்று பார்த்தால் கலைஞர் தான் முன்னணியில் நிற்கின்றார். காரணம் தொடர்ந்தாற் போல் வந்த அவருடைய படங்களான மனோகரா, திரும்பிப்பார், பணம் இன்னும் தொடர்ந்தாற் போல் வந்த குறிப்பாக இல்லற ஜோதியில் வந்த "அனார்கலி" நாடகம்,  "அசோக சக்கரவர்த்தி"  ஓரங்க நாடகம் மறக்க முடியாத இலக்கியங்கள்.  

சிவாஜி கணேசன் போய்க் கொண்டிருந்த வேகத்தில் கலைஞரும் திரைப்படம், அரசியல் என இரு வழிச் சாலையில் பயணம் செய்த கொண்டிருந்தார்! கலைஞர் வேகத்தில் குறையவில்லை. அந்த வேகம் கடைசிக் காலம் வரை அவரிடம் தொடர்ந்தது . அரசியலும், எழுத்தும் அவருடைய இரு கண்கள்! இரண்டுமே அவரிடமிருந்து பிரியவில்லை! கடந்த ஓராண்டைத் தவிர!

பராசக்தி திரைப்படத்தோடு அவருடனான எனது தொடர்பு விட்டுவிடவில்லை. அப்போது எனது நண்பர் சுகுமாறன் தமிழ் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அவர் கலைஞரின் புத்தகங்களை விரும்பி வாசிப்பவர். அதனால் நானும் அவருடைய புத்தகங்களை "ஓசியில்" படிக்கும் வழக்கமுண்டு. வாங்கிப் படிக்கின்ற அளவுக்கு வயசும் போதாது,  காசும் இல்லை! அப்போது நான் படித்த, இப்போது எனது  நினைவுக்கு வருவது கலைஞர் எழுதிய "நான்சன்ஸ்",  "நேருவே திரும்பிப்போ!" புத்தகங்கள் மட்டுமே!  அவர் வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா, திரும்பிப்பார்  போன்ற திரைவசனங்களைப் படித்ததாக ஞாபகம் உண்டு, இப்போது என்னிடம் உள்ள அவருடைய புத்தகம் "நெஞ்சுக்கு நீதி" மட்டுமே! இப்போது என்னுடைய ரசனை மாறிவிட்டது. அதனால் அவ்வப்போது நாளிதழ்களில் வரும் கட்டுரைகளோடு சரி!

கலைஞர் தனது தமிழால் தமிழர்களைக் கட்டிப் போட்டவர். அவரது பேச்சால் தமிழ் இளைஞர்களை மயங்க வைத்தவர். தமிழ் மொழி தான் அவரது ஆயுதம்.  தமிழை வைத்து தமிழர்களைத் தனது வசம் இழுத்தவர். இந்த அளவுக்குத் தமிழை வேறு யாரும் பயன் படுத்தியதில்லை. அதனால் தான் தமிழ் என்றால் கலைஞர் என்று நாம் சொல்லுகிறோம்.

இந்த நூற்றாண்டில் தமிழ் என்றால் கலைஞர் தான்! மறக்க முடியாத மனிதர். தமிழக சரித்திரத்தில் அவருக்கு நிரந்தர இடம் உண்டு, 

அவருடைய மறைவு அவருடைய குடும்பத்திற்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு.

அனுதாபம் என்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல?


 

Sunday 5 August 2018

சாமிவேலுவின் வழியில் நஜிப்...!

சாமிவேலு தனது  அரசியல் அஸ்தமன காலத்தில் ஒரு பேரிடரைச் சந்தித்தார். அவர் ம.இ.கா. கூட்டங்களுக்கோ அல்லது அரசியல் கூட்டங்களுக்கோ அல்லது தேர்தல் பரப்புரைகளுக்கோ கலந்து கொண்டால் அது தோல்வியில் முடியும் என்பதாக ஒரு கருத்து நிலவியது. அவர் எத்துணை வலிமையான பேச்சாளர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இருந்தாலும் அரசியலின் கடைசி காலத்தில் அவரால் பேர் போட முடியவில்லை. அவரை ஒரு கூட்டத்தில் பார்த்தாலே அது "விளங்காது" என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய செல்வாக்கு கரைந்து போனது! இப்போதெல்லாம் அவரை நாம் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை.

இப்போது நஜிப்பின் நிலமையும் அதே தான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இப்போது தான் ஆரம்பம். உடனடியாகத் தெரியாவிட்டாலும்  போகப் போக நாமே அதனைப் பேச ஆரம்பித்து விடுவோம். 

இப்போது நடைப்பெற்ற  சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில்  பாரிசான் நேசனல் தோல்வி கண்டது ஒன்றும் ஆச்சரியம்  அல்ல. இது எதிர்பார்த்தது தான். இன்னும் இரண்டு இடைத் தேர்தல்கள். இங்கும் பாரிசான் நேசனல் தோல்வியைத் தழுவும் என்று தான் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் நஜிப் பரப்புரை செய்ய வருவார். மீண்டும் மீண்டும் நான் குற்றவாளி அல்ல என்று தான் பேசுவார். மகாதிரை குற்றம் சொல்லியாக வேண்டும்.  நிதி அமைச்சரைக் குற்றம் சொல்லியாக வேண்டும். இப்போதைய ஆட்சி சரியல்ல என்று குற்றம் சொல்ல வேண்டும். ஆனால் பிரதமர் மகாதிரோ தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டே நல்ல பேயர் வாங்கிவிடுவார்!  மக்கள் யாரும் நஜிப்பை நம்பப் போவதில்லை.  அப்புறம் அம்னோ கட்சியினரே நஜிப்பை புறம் தள்ளி விடுவர். "நீங்கள் இனி பிரச்சாரத்திற்கு வந்து விட வேண்டாம்! நீங்கள் வந்தால் தோல்வி நிச்சயம்!" என்பதாக அவரை ராசி இல்லாத மனிதராக ஆக்கி விடுவர்!

இது நடக்கும்.  இருவருக்கும்   ஒரே ராசி தான்! அது தான் "ஊழல்" என்னும் ராசி!  இருவருமே முடி சூடா மன்னராக வாழ்ந்தவர்கள்; மக்களின் பொதுப் பணத்தில், தங்களின் பணத்தில் அல்ல! 

அரசியலில் ஊழல் செய்தவர்களின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்கள் இருவருமே போதும்!  வேறு சான்றுகள் வேண்டாம்!


குழந்தை திருமணங்கள்...

பால்ய  திருமணங்களுக்கான காரணங்கள் பல. பெரும்பாலும் அவை பொருளாதாரச் சம்பந்தப்பட்டவை.  

நமது நாட்டிலும் இந்தத் திருமணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்று அறியும் போது கேட்பதற்கு வேதனையைத் தருகிறது.

சமீபத்தில்  வெளி உலகிற்கு தெரிய வந்த திருமணம் என்றால் - 11 வயது சிறுமி  41 வயது ஆடவர்  -செய்த  ஒரு திருமணம். இதனைத் திருமணம் என்று சொல்லலாமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இது சில்மிஷம் அல்லவா?

இந்தியர்களிடையே  இது போன்ற திருமணங்கள் நடைபெறுவதில்லை. ஆனாலும் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவைகள் பெற்றோர்களால் பார்த்துச் செய்யப்படுகின்ற திருமணங்கள் அல்ல. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே "ஓடிப்போய்" நடக்கின்ற திருமணங்கள்!

இப்போது,  இது போன்ற பால்ய திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதாக ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியிருக்கின்றன.  ஆனாலும் பக்காத்தான் அரசாங்கம் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது! 

இதில் தடுமாற என்ன இருக்கிறது? பதினோரு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளுவது என்பது ஒரு பாலியல் கொடுமை. அது தொடர வேண்டுமா என்பது தான் கேள்வி.  அந்தச் சிறுமி படிக்க வேண்டிய வயதில் இருப்பவள்.  ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டிய வயது. சிரித்து, மகிழ்ந்து சிறுவர், சிறுமியரோடு விளையாடும் வயதினள். இந்த வயதில்  "திருமணம்" என்று சொல்லி அவளைக் கட்டிப் போடுவது மிகவும் கொடுமை.

அரசாங்கம் மௌனம் சாதிப்பதை விட்டுவிட்டு உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். சட்டம் இயற்ற வேண்டும்.  இது போன்ற திருமணங்களைத் தடை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மத சாயம் பூசுவது மிகத் தவறு.

எந்த நாட்டிலும் இல்லாத அதிசயங்கள் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. 

குழந்தை திருமணங்கள் வேண்டாம்! தடை செய்க!

நமது பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல...!

முதலில் இதனை - முக்கியமான ஒன்றை - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியப் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல. ஒரு சிலர் பணக்காரராக இருக்கலாம். ஒரு  சிலர்  - மேல்தட்டு நடுத்தர குடும்பங்களாக இருக்கலாம்.  இவர்களால் தனியார் கல்லூரிகளில், தனியார் பல்கலைக்கழகங்களில்  பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் அப்படி ஆற்றல் உள்ளவர்களாக இல்லை என்பது நிதர்சனம்.  

மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களை "தனியார் கல்லூரிகள்  தான்  படிப்பேன்" என்று அடம் பிடித்து அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை கல்வியின் பெயரால் காசைப் பாழாக்குவதை பரவலாக நாம் பார்க்கிறோம்.  இவர்கள் இப்படி அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் பள்ளி நண்பர்கள் எங்கு படிக்கிறார்களோ அங்கு தான் நானும் படிப்பேன் என்று ஏதோ ஒரு "ஆட்டு மந்தைப்" புத்தி இவர்களிடம் உள்ளது.

உயர் கல்வி என்பது மிகவும் நல்ல விஷயம்.  பள்ளி நண்பர்கள் என்னும் போது எல்லாமே ஏதோ ஒரு தமாஷான விஷயமாக மாறிவிடுகிறது! கல்வியில் கவனம் செலுத்தினால் பாராட்டலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை என்பது தான் வருத்தத்திற்கு உரியது. காரணம் இந்தத் தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இந்திய மாணவர்களாகவே இருக்கின்றனர். கல்வி ஏதோ "ஜாலி" என்கிற நிலைமைக்குப் போய்விடுகிறது.

அதுவே அரசாங்கக் கல்லூரியாக இருந்தால் பல இன மாணவர்கள்.  பல  ஆயிரம் மாணவர்கள். கல்வியும் தரமான கல்வியாக இருக்கும். கல்விக்கான செலவும் குறையும். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

அரசாங்கம் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு உதவிகள் செய்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி அரசாங்கம் கொடுப்பதில்லை என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

மாணவர்களே! உங்கள் பெற்றோர்களைப் பணத்திற்காக கசக்கிப் பிழியாதீர்கள். ஆம்! தனியார் கல்லுரிகள் என்றாலே பெற்றோர்களுக்குப் பாரம் தான்.  

அரசாங்கக் கல்லூரிகள் என்றாலே குறைவான செலவு. தரமானக் கல்வி. வாழ்த்துகள்!

Friday 3 August 2018

என்ன ஆனார்கள்...?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன சிலர் -  ஒரு வகையில் சமயத் தொடர்பு உடையவர்கள் என்று சொல்லலாம் - அவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரையில்  தெரியவில்லை!

உடனடியாக நமது கண் முன்னால் நிற்பது இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா திக்‌ஷா! அப்பனையும் காணோம்! மகளையும் காணோம்! காவல்துறையோ "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!" என்கிறார்கள்! காவல்துறை சொல்லுவதைத் பார்த்தால் இவர்கள் மலேசியாவில் தான் இருக்கிறார்களா என்கிற சந்தேகமே எழுகிறது!  பிரசன்னாவின் தந்தை பத்மநாபன் எங்கு இருக்கிறார் என்கிற விபரமே காவல் துறைக்குத் தெரியவில்லையாம்! அவர் எங்காவது பிச்சை எடுக்கட்டும் பரவாயில்லை. ஆனால் மகளைக் காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு இருக்க வேண்டுமே! மகளைப் பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பும் அவருக்க இருக்க வேண்டுமே! இது ஒரு சமய மாற்றம் என்பதால் காவல்துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது!

ரேமண்ட் கோ, ஒரு கிறிஸ்துவ சமயப்போதகர். அவர் எல்லா மதத்தினருக்கும் - அவர்கள் ஏழைகள் என்றால் - உதவுபவர் என்று பலராலும் பாராட்டப்பெற்றவர். ஆனாலும் அவர் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்கிறார் என்பதாகக் கூறி அவர் சார்ந்த அனைத்து இல்லங்களையும் சோதனை இட்டனர். அப்படி மாற்றம் செய்ததற்கான அடையாளங்கள் எதுவும்  இல்லை! அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டார்.  அதுவும்  இராணுவம் துணை கொண்டு அவர் கடத்தப்பட்டார் என்பதாக CCTV மூலம் நமக்குத் தெரியவருகிறது. அவரைப் பற்றியான தகவலும் இது வரை வந்தபாடில்லை. சமயம் சார்ந்த விஷயம் என்பதால் காவல்துறை இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறதாகவே நமக்குத் தோன்றுகிறது!

இதில்  அம்ரி சேமாட்  என்பவர்,பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்,  மாறுபட்ட இஸ்லாமிய போதனைகளைப் போதிப்பவர் என்பதாகக் கூறி அவர் காவல்துறையைச் சார்ந்தவர்களாலேயே கடத்தப்பட்டார் என்பதாகச் சொல்லப்படுகிறது! காவல்துறை இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது!

இதனிடையே ஜோஷுவா, ரூத் இருவரும் கணவர் மனைவியர், கிறிஸ்துவ சமயப்போதர்கள், திடீரென நவம்பர் மாதம் முப்பதாம் தேதி 2016  அன்று காணமற் போனார்கள். அதுவே அவர்களது கடைசி நாள்.  இருவரும் இஸ்லாமிய மதத்திலிருந்து கிறிஸ்துவ சமயத்தைத் தழுவியவ்ர்கள் என்று சொல்லப்படுகிறது. காவல்துறையின் தடுமாற்றம் நமக்குப் புரிகிறது!

இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். அதனால் தான் காவல்துறையின் தடுமாற்றம்! ஆனாலும் தவறு என்றால் தண்டனை தரலாம். கடத்திக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை.

இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்போம்! அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும்!