Monday 31 October 2022

இந்தியர்-சீனராக இருக்கக் கூடாது!

 

நமது 'கல்வியாளர்கள்' என்று சொல்லப்படுகின்ற ஒரு சிலர் செய்கின்ற அழும்புகள் நமக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை.

கல்வியாளர்கள் மரியாதைக்குரியவர்களாக  நாம் பார்க்கிறோம். ஆனால் அவர்களோ தங்களது நடவடிக்கைகளின் மூலம் மரியாதைக்கு உரியவர்களாக இருக்க விரும்பவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் தனது 50-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடவிருக்கின்றது. அதற்கான ஏற்பாட்டில் பட்டதாரி மாணவர்கள் ஆடை அணிகலன்கள் அணிவது பற்றியான வழிகாட்டியையும் பல்கலைக்கழகம் வெளியிட்டியிருக்கிறது.

இந்த பட்டமளிப்பு விழாவில் வழக்கமான உடைகளிலிருந்த சில உடைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்திய-சீன பாரம்பரிய உடைகள் அணியக்கூடாது  என பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. அதாவது இந்தியர்கள் அணியும் சாரியும் சீனர்கள் அணியும் Cheongsam  போன்ற பாரம்பரிய உடைகளுக்கு தடை செய்திருக்கிறது ப'கழகம். அதாவது செருப்பு போடுவதை எப்படி தடை செய்திருக்கிறார்களோ அதே போல பாரம்பரிய உடைகள் அணிவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது!

ஒரு வேளை இது போன்ற பாரம்பரிய உடைகள் தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தடை என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். வருங்காலங்களில் இந்திய பட்டதாரிகள் இந்தியர்களைப் போல் இருக்கக் கூடாது அதே சமயத்தில் சீனப் பட்டாதாரிகள் சீனர்களைப் போல இருக்கக்கூடாது என்கிற புதிய புதிய அறிவிப்புகளும் வெளியாகலாம்! உங்கள் நிறத்தை மாற்றுங்கள் எனவும் சொல்லலாம்!கல்வியாளர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என சொல்வதற்கில்லை!

 நம்மை வைத்து நல்ல காமடி பண்ணுகிறார்கள் எனத் தெரிகிறது!

உடைகளையெல்லாம் மலாய் மயம் ஆக்க வேண்டும் என்று யூ.கே.எம். நினைத்தால் எல்லாவற்றிலும் அந்த மலாய் மயத்தைக் கொண்டு வரவேண்டும். வேலை வாய்ப்பிலும் அதனைக் கொண்டு வரவேண்டியது தானே?  இந்த உடைகளை வைத்து அப்படி என்ன பெரிய காரியத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்?

நமக்குத் தெரிந்ததெல்லாம் இவர்களுக்கு நல்ல புத்தியை, நல்ல கல்வியைக்  கொடு இறைவா என்று தான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது!


Sunday 30 October 2022

ஏற்றுக்கொள்ள முடியாத தவறு!

 

வரலாறுகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒரு நிபந்தனை. வரலாறு தெரிந்தவர்கள் தான் வரலாறு எழுத வேண்டும்.

வரலாறு சிறியவர்களுக்காக இருந்தாலும் சரி, பெரியவர்களுக்காக இருந்தாலும் சரி, அதுவும் குறிப்பாக பள்ளிப்பாடப் புத்தகங்களில், வரலாறுகள் நூறு விழுக்காடு சரியாக இருக்க வேண்டும்.

ஆனால் எங்கோ தவறு நடந்திருக்கிறது. சரித்திர ஆசிரியர்கள் டாகடர் மகாதிரின் வரலாற்றை  எப்படி மாற்றி எழுதினார்களோ அதிலிருந்தே தங்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றி எழுதுவது எங்களது உரிமை  என்று செயல்பட ஆரம்பித்துவிட்டார்களோ என்றே  நினைக்கத் தோன்றுகிறது! அதுவும் அம்னோ சரித்திரம் தான் மலேசிய சரித்திரம் என்று எண்ணவும் ஆரம்பித்துவிட்டார்கள்!

ஐந்தாம் ஆண்டு பள்ளிப்பாடப் புத்தகத்தில் துன் சம்பந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடும் போது   முதலில் அவரது பெயர் வெறும்  சம்பந்தன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் பெற்ற துன் விருது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று அவரது புகைப்படம் மாற்றப்பட்டிருக்கின்றது! அவரது புகைப்படைத்திற்குப் பதிலாக  மலேயாவின் முதல் கல்வி அமைச்சர்  டத்தோ சர் EEC துரைசிங்கம் அவர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கின்றது!

இதனைச் சுட்டிக்காட்டி துன் சம்பந்தன் அவர்களின் மகள் தேவகுஞ்சரி வருத்தப்பட்டிருக்கிறார். துன் சம்பந்தன் அவர்கள் மலேயாவின்  முதல் தொழிலாளர் அமைச்சராக இருந்தவர். நீண்டகாலம் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.  ம.இ.கா.வின் நீண்டகாலத் தலைவர். பல்வேறு பதவிகள் வகித்தவர்.

ம.இ.கா.வினர் இது பற்றி வாய் திறக்கவில்லை. தங்களது கட்சியின் முன்னாள் தலைவருக்கு நேர்ந்த அவமரியாதைப்பற்றி கவலைப்படவில்லை.    இதுபற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது.  அப்புறம் எதற்கு கல்விப்பிரிவு என்று ஒன்றை நிறுவி அதற்கு என்று ஒரு தலைவர்?

இது சமுதாயத்திற்குத் தலைகுனிவு  என்று ம.இ.கா.வினர் உணர்ந்து கொள்ளவில்லை. ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. அதனை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தான் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.  பதவியில் உள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இப்படித் தவறான புகைப்படத்தைப் போட்டவர்கள் வேறு என்னன்ன தவறான தகவல்களைக் கொடுத்திருப்பார்களோ தெரியவில்லை. சரித்திரம் அறியாதவர்கள் சரித்திரத்தை எழுதினால் நாட்டுக்குத் தான் தரித்திரம் பிடிக்கும்!

இது சாதாரணத் தவறு அல்ல! அசாதாரணத்தை விட அசாதாரணம்!

Saturday 29 October 2022

முதல் பட்டியல் வெளியிடு

 

                        பி.கே.ஆர்  தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

பி.கே.ஆர்.,   நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் தனது 72 வேட்பாளர்களின் பெயர்களை  வெளியிட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் புதியவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களைத்தான் களத்தில் இறக்குவார்கள் என்பது நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் விஷப்பரிட்சையில் இறங்கியிருக்கிறார் என்று தெரிகிறது. வெற்றிபெற்றால் வாழ்த்துகள். இல்லையேல் அனுதாபங்கள். வேறு நம்மால் எதையும் செய்தவிட முடியாது!

இந்த பட்டியலில் நம்ம 'ஆசாமிகள்' எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்பதைப் பார்ப்பது தானே நமது இயல்பு? வழக்கம் போல அப்படித்தானே! கொஞ்சம் தேடிப்பார்க்கையில்  ஆறு  இந்திய வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் நமது சமுதாயத்திற்கு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!

இதிலே ஒரே ஒரு தொகுதி மட்டும் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் தொகுதி என்பது காலங்காலமாக இந்தியர் போட்டியிடும் தொகுதி. அந்த தொகுதியைப்பற்றி நான் அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். பொதுவாக இது இந்திய வாக்காளர்கள் அதிகம் உள்ள ஒரு தொகுதி.  நாட்டில்  இந்தியர்கள் அதிகம் உள்ள தொகுதி. அந்தத் தொகுதியில் இன்றைய மாநில மந்திரி பெசார் போட்டியிடுவது சரியானதா என்பது எனக்குப் புரியவில்லை.

ஆனால் எனது கணக்குத் தவறாகக் கூட இருக்கலாம். இப்போது போர்ட்டிக்சன் தொகுதியோடு ரம்பாவ் தொகுதியும்  தனித்தனியாக பிரிக்கப்பட்டு விட்டதால்  இந்தியர்களின் வாக்குகள் குறைந்து போகக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.  'அதிக இந்தியர்கள்' என்பது குறைந்து போயிருக்கலாம். ஒரு வேளை அதனை உத்தேசித்தே அந்தத் தொகுதிக்கு மலாய்க்கார வேட்பாளரை நிறுத்தியிருக்கக் கூடும்.

இன்னொன்று மாநில மந்திரி பெசார் எந்த அளவில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றவர் என்பது புரியாத புதிர். அவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்பதும் தெரியவில்லை. அவர் அப்படி ஒன்றும் ஓடி ஆடி வேலை செய்பவர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மன்னிக்கவும்.  அவரைப்பற்றியான அரசியல் அறிவு எனக்குக் குறைவாக இருப்பதால் என்னுடைய கருத்தை சொல்லுவது சரியல்ல. அரசியலில் இருக்கும் உள்ளூர் இந்தியத் தலைவர்களுக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். 

எப்படியோ பி.கே.ஆர். பட்டியல் வேளியாகிவிட்டது.  ஆனால் மாற்றங்கள் கடைசி நேரத்தில் வரலாம். எதனையும் உறுதி சொல்லிவிட முடியாது. இது அரசியல். அப்படித்தான் இருக்கும். நமது வாழ்த்துகள்!

Friday 28 October 2022

குளிக்கும் பழக்கமில்லை!

 

                                             அமு ஹஜி, 94 வயதில் மரணமடைந்தார்

நீண்ட  ஆயுளை உடையவர்களை ஊடகவியலாளர்கள் பேட்டி எடுக்கும் போது ஒரு கேள்வி கேட்பதுண்டு.

உங்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் என்ன  என்று தவறாமல் ஒரு கேள்வியைக்  கேட்பார்கள். அதற்குப் பதில் பலவாறாக இருக்கும். "எனக்குப் புகையிலை பழக்கமில்லை. சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன். குறைவாகத்தான் சாப்பிடுகிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன்" இப்படி பல்வேறு பதில்கள்

ஆனால் மேற்கண்ட மனிதரை  அப்படியெல்லாம் அந்த வலையத்திற்குள் சிக்கவைக்க முடியாது. இது வேறு வகையான ஒரு சாதனை.

ஆமாம்! ஈரான் நாட்டைச் சேர்ந்த அமு ஹஜி உலகில் மிக அழுக்கான மனிதர்  அதாவது நமது மொழியில்  "அழுக்கு மூட்டை"  என்பார்களே அப்படிச்  சொல்லலாம். அதற்குக் காரணம் உண்டு. சுமார் 67 ஆண்டுகள் அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்! தனது 27-வது வயதில் அவர் குளிப்பதை நிறுத்திக் கொண்டார்!

அவர் ஏன் குளிப்பதை நிறுத்திக் கொண்டார் என்பது முழுமையாகத் தெரியாவிட்டாலும் அவருக்கும் யாரோ ஜோஸ்யம் சொல்லியிருப்பார்கள்  போல் தோன்றுகிறது!  'தண்ணீரில் உனக்குக்  கண்டம் உண்டு!  உன் மேல் தண்ணீர் பட்டால் நீ செத்துப் போவாய்!"  எனறு அவருக்குச் சொல்லப்பட்டதால் அத்தோடு அவ்ர் குளிப்பதை நிறுத்திக் கொண்டார்!

அவர் குளிக்காமல் அந்த 67 ஆண்டுகளையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்.  ஆனால் அவரது கிராமத்தினர்  என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அவர் படாத கஷ்டத்தை கிராமத்தினர் பட்டிருப்பார்கள்  போல் தோன்றுகிறது! அவர்கள் அவரைப் பிடித்து குளிப்பாட்டி விட்டிருக்கின்றனர்! அதோடு மனிதர் மனம் ஒடிந்து போனார். 

ஏற்கனவே,  தன் மேல் தண்ணீர் பட்டால் இறந்து போவோம் என்கிற மனநிலையில் 67 ஆண்டுகளாக இருந்தவர்,  தண்ணீர் பட்டதும் மிரண்டு போனார். அவரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்  தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நீண்ட நாள் அவரால் வாழ முடியவில்லை.  கடைசியில் அவர் நினைததபடி தண்ணீர் அவருக்கு எமனாக மாறிவிட்டது!

அவரது  கிராமத்தினர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.  இவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்கிற மனநிலைக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது! சும்மா அவரை விட்டிருந்தால் அவர் நூறு வயது வரை வாழ்ந்திருப்பார்! அவரை நாமும் அவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று கண்டு பிடித்திருப்போம்! அழுக்கு தான் காரணம் வேறு என்னவாக இருக்கும்?

ஆனால் இப்போது தீடீரென போய்ச் சேர்ந்துவிட்டார்! குளிக்க மாட்டேன் என்று சொன்னவரை இப்படி வலுக்கட்டாயமாக கொன்றுவிட்டார்களே! என்ன செய்ய? அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!


Thursday 27 October 2022

ஏமாற்றியது போதும்!

 

போதும்! போதும்! மக்களை ஏமாற்றியது போதும்! எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்?

அதற்கு ஒரு முடிவே இல்லையா? மக்களின் ஒரே ஆயுதம் என்றால் அது வாக்குச்சீட்டு மட்டும் தான். அது மிகவும் பலமான ஆயுதம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். இந்த முறை அது சீக்கிரமாகவே வந்துவிட்டது! அதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்தலில் தாங்கள் தோற்றால் கம்பி எண்ண வேண்டி வரும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்!  அதில் ஒன்றும் சந்தேகமே வேண்டாம்! அது நடக்கத்தான் செய்யும்! நீங்கள் தோற்கத்தான் போகிறீர்கள்!

காலாகாலத்திற்கும் மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டும் ஏமாற்றிக்கொண்டும் திரிபவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.  அடி முட்டாள்களை அதிதூதர்களாக நினைத்து மிக உயரத்துக்கு அவர்களை வளர்த்துவிட்டு விட்டோம்! இப்போது அவர்கள்  தூ! தூ!  என்று  நம்மைத் துப்பி எறிகிறார்கள்!

குறிப்பாக  இந்திய வாக்காளர்களுக்கு  நாம் சொல்ல வருவதெல்லாம் கொஞ்சம் யோசியுங்கள். எனக்கு வேண்டியவன், எனக்கு வேண்டாதவன்  என்று நினைத்துக் கொண்டு வாக்களிக்கப் போவாதீர்கள். இத்தனை ஆண்டு காலம் நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதைப் பின்நோக்கிப் பாருங்கள்.

எத்தனை  ஆண்டு காலம் பொருளாதார ரீதியில் நம்மை மொட்டை அடித்திருக்கிறார்கள்,  பாருங்கள். கொஞ்சமா நஞ்சமா?  அந்த திட்டம், இந்த திட்டம் - அடாடா! நம்மை அப்படியே  மேலே மேலே துக்கிக் கொண்டு போய் அப்படியே  'பொத்'தென்று கீழே தூக்கி வீசினார்களே, மறந்து விடாதீர்கள்.

இனிமேலும் நாம் அப்படியே இருக்கத்தான் வேண்டுமா? அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள். நாம் அப்படியே பார்த்துக்கொண்டும் தலையாட்டிக் கொண்டும் இருக்க வேண்டுமா?

நம் வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் நமக்குப் படிக்க இடம் கொடுக்க யோசிக்கிறார்கள்; கொடுப்பதும் இல்லை! அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் மக்காக இருந்தாலும் வெளிநாடுகளிலே படித்துக் கொண்டு இருக்கிறார்கள்! கல்வியில் சிறந்து விளங்கினால் கூட அதனை  மதிக்கத்தெரியாத அடிமுட்டாள் அரசியல்வாதிகள் இவர்கள்! மறந்து விடாதீர்கள்!

ஏன்? பட்டம் பெற்று வருகிறார்களே அவர்களுக்கு வேலை கொடுக்கும் திறன் இவர்களிடம் உண்டா?  சிங்கப்பூர் இல்லையென்றால் நமக்கு வேலை வாய்ப்பை யார் கொடுப்பார்? இப்படி நமது அரசியல்வாதிகளால் நமக்கு ஏகப்பட்ட குளறுபடிகள்.

போதும்! போதும்! போதும்! பொறுத்தது போதும்! பொங்கி எழும் காலம் வந்துவிட்டது! இனியும் வாய்மூடி மௌனியாக இருந்தால் நமக்குப் போதாத காலம்!

Wednesday 26 October 2022

இப்படி வியாபாரத்தைக் கெடுக்கலாமா?

 


தீபாவளி கொண்டாட்டங்கள் ஒரளவு முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்லலாம்.

இந்த நேரத்தில் ஒரு சில விஷயங்கள் நம் மனதை நோகடிக்கின்றன. பத்திரிக்கையில் வந்த செய்தி தான் என்றாலும் அது பொய்யாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஏதோ ஓரிரு செய்திகள் அப்படி இருக்கலாம் அதற்காக அனைத்தும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது.

தீபாவளி காலங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓர் எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது தான்.  அதுவும் கோவிட் 19  காலத்தில் நிறைய ஏமாற்றங்கள்,  பொருளாதார நட்டங்கள் - இப்படி கடந்து இரண்டு மூன்று ஆண்டுகளாக வியாபாரிகள் சந்தித்து வந்திருக்கின்றனர். இந்த ஆண்டு  அவர்களுக்கு  இலட்சிமிகரமாக  அமையும் என்கிற எதிர்ப்பார்ப்பு  அவர்களுக்கு உண்டு.

ஆனாலும் வேறு ஒரு வடிவத்தில் வியாபாரிகளுக்குத் தடங்கள் வரும் போது வழக்கம் போல அவர்கள் விரக்தி அடைந்து விடுகின்றனர். எல்லா காலங்களிலும்  அவர்களுக்கு இடையூறு வருகிறது என்றால் அது அரசாங்கத்தினரிடமிருந்து தான். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான். இந்தியர்களுக்கு மட்டும் தான் இப்படி ஒரு நிலை!

கிள்ளான், லிட்டல் இந்தியாவைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். யாருடைய குற்றம் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இங்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்,  வி.கணபதிராவ் மீது தான் குற்றம் சாட்டப்படுகிறது! இது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான்.  நாம் இதனை எதிர்ப்பார்க்கவில்லை.

ஒரு கலை நிகழ்ச்சிக்காக மூன்று நாட்களுக்குச் சாலைகளை அடைத்து, வியாபாரத்தைக் கெடுத்து, மக்களின் கோபத்திற்கு ஆளாகி - இதற்குக் காரணகர்த்தாவான  கணபதிராவின் நோக்கம் தான் என்ன?  நம்முடைய கேள்வி எல்லாம் நமது வியாபாரிகளின் நலன் முக்கியம் இல்லையா? கலை நிகழ்ச்சியை நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காகச் சாலைகளை இழுத்து மூடிவிட்டுத் தான் கலைநிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது அவசியம் இல்லையே? சாலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அல்லவா நிகழ்ச்சியை நடத்திருக்க வேண்டும்? அதுவும் மூன்று நாள்களுக்கு அடைப்பு என்றால் நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கலை நிகழ்ச்சியை வேறு ஒரு நாளுக்கு மாற்றலாமே. அதிலே என்ன பிரச்சனை? பார்க்க வேண்டுமென்று  நினைப்பவர்கள் நிச்சயமாக வரத்தான் செய்வார்கள். அவர்களை யார் தடுத்தார்?  தொழில் செய்பவர்களுக்கு ஏன் தொடர்ந்தாற் போல் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும்?

இதனை, என்ன காரணங்கள் சொன்னாலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. கலை நிகழ்ச்சியை நடத்துங்கள். ஆனால் வியாபாரிகளுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்!

Tuesday 25 October 2022

அன்பளிப்புகளா? யோசியுங்கள்!


திபாவளி காலங்களில் அன்பளிப்புகள் கொடுப்பது என்பது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல. அது எல்லாகாலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பொது இயக்கங்கள் இதனைச் செய்து கொண்டு தான் வருகின்றன.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி என்பது கொஞ்சம் விசேடம் வாய்ந்தது. தீபாவளியின் ஊடே பொதுத் தேர்தலும் வந்து விட்டது. அது தான் இன்னும் விசேடம்.

பொதுவாக  பெருநாள் கால அன்பளிப்புகள் என்றால் பெரும்பாலும் இயக்கங்களின் முதன்மையான ஒரே 'தொண்டு'  ஒவ்வொரு ஆண்டும் அது மட்டும் தான்! அதற்கு மேல் அவர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பார்கள்!  காரணம் அவர்களுக்குக் கிடைக்கும்  நிதி உதவி அவ்வளவு தான்!  யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அவர் கொடுக்கின்ற நிதி உதவியிலிருந்து  இது போன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.  

பாராட்டுவோம்! என்னவோ அவர்களால் செய்ய முடிந்த உதவிகளை அவர்கள் செய்கின்றார்கள்.

இந்த முறை அரசியல்  கட்சிகள்  களத்தில் இறங்குகின்றன! அவர்களுக்கு இது தான்  மக்களைப் பார்க்க, சந்திக்க, தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பம். இதனை அவர்கள் நழுவ விடமாட்டார்கள்!

அதனால் இந்த முறை அன்பளிப்புகள் அல்லது உணவுக் கூடைகள் அல்லது பெண்களுக்குப் புடவைகள் வழங்குவது போன்ற நிகழ்வுகள் தேர்தல் காலம்வரை நீடிக்கும். அதாவது அடுத்த மாதம்  வாக்களிப்பு  நாளன்று வரை நீடிக்கும் எனலாம்!

ஆனால் நமது தமிழ் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  அன்பளிப்பு வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஒரு நூறு வெள்ளி பெறுமானமுள்ளப் பொருளை அன்பளிப்பு என்று கொடுத்துவிட்டு உங்களுடைய பொன்னான வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அதனை மறக்க வேண்டாம்.  அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால்  அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்! அத்தோடு அவர்கள் பணி முடிவடைந்தது! அதன் பிறகு அவர்கள் 'எஜமான்' நீங்கள் 'அடிமை'! இது தான் உங்கள் நிலை!

இதைத்தான் கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறோம்! இப்போது இந்தத் தேர்தலில் மட்டும், அப்படியே வெற்றிபெற்றால்,  என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள் என்பது தான் நம் முன் உள்ள ஒரு கேள்வி!

இவ்வளவு நாள் புறக்கணித்த மக்களை இனி என்ன முன்னேற்றிவிடப் போகிறார்களா? இது நாள் செய்யாததை இப்போது மட்டும் செய்துவிட அப்படி என்ன புதிதாகக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள்?  அறுபது ஆண்டுகளாக இல்லாத சமுதாய நலன் இப்போது மட்டும் பீறீட்டுக் கொண்டு வந்திருக்கிறதா?

இவர்களைப் போன்ற போலி அரசியல்வாதிகளை நம்பியது போதும். மக்கள் மீது யார் உண்மையான அக்கறைக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். இதுவே நமது வேண்டுகோள்!


Monday 24 October 2022

தீபாவாளி வாழ்த்துகள்!

 



                                    அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது தீபாவளி 

                                    வாழ்த்துகள்!  நல்ல நாள் என்பதற்காக எதனையும் 

                                    வீணடிக்காதீர்கள். குறிப்பாக உணவுகள். உணவுகளை

                                    வீணடிப்பதில் நமக்கே முதலிடம்.

                                    தீபாவளி என்று சொல்லி காசை கரியாக்காதீர்கள்.

                                    பணத்தை  பார்த்துப் பார்த்து  செலவு செய்யுங்கள்.

                                    கொரோனா வந்த போது பணத்துக்காக, உணவுக்காக 

                                    அலைந்ததை கொஞ்சம் நினைவுப் படுத்திக்  

                                    கொள்ளுங்கள்.

                                    இந்த தீபாவளி நந்நாளில் மனம் கனிந்த வாழ்த்துகள்!                                                                   

                                 

Sunday 23 October 2022

கார்கள் ஜாக்கிரதை!

 

விடுமுறை காலம். சாலைகளில் வாகன நெரிசல்  கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் கார்களில் மக்கள் பயணம்.

நமக்கு இதெல்லாம் புதிதில்லை.  எப்போதும் உள்ள நடைமுறை தான். மலாய்,  சீன, இந்திய பெருநாள் காலங்களில் சாலைகளில்  கார்கள் நிரம்பி வழிவது என்பது நாம் அறிந்தது தான்.

இருந்தாலும் மனம் கேட்கவில்லை.  இது போன்ற சமயங்களில் கார் ஓட்டுபவர்கள்  கொஞ்சம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது மிக மிக அவசியம்.

கோபபட்டு  தாறுமாறாக கார் ஓட்டினால் ஆபத்து நமக்கு மட்டுமல்ல நியாயமாக கார் ஓட்டுபவர்களுக்கும் தான்.

விபத்துகளுக்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் என்று சொன்னால் அது மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞர்கள் தான்.  அவர்கள் யார் சொன்னாலும் எதனையும் கேட்காத ஜென்மங்கள்! அவர்களை நொந்து கொள்வதால் யாருக்கு என்ன பயன்? பொறுப்பற்ற முறையில் தான் அவர்கள் ஓட்டுகிறார்கள். அதற்கானத்  தண்டனைகளையும்  பெறுகிறார்கள்.  ஆனால் திருந்த மறுக்கிறார்கள், என்ன செய்ய?

எது எப்படி இருப்பினும் கார் நம்முடையது. நாம் காரில் பயணம் செய்கிறோம். நாமே காரை ஓட்டுகிறோம்.  காரில் நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பது நமது பொறுப்பு, நமது கடமை. முடிந்தவரை எந்தவொரு விபத்தும் இல்லாமல்  நமது பயணம் அமைய வேண்டும்.

நமது பயணங்கள் மகிழ்ச்சியாக அமைய வேண்டும். உற்றார் உறவினர்களோடு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும். காரணம் இது பெருநாள் காலம். பெரியவர்களோடு, பெற்றோர்களோடு, உறவுகளோடு, நண்பர்களோடு, அக்கம் பக்கம் உள்ளவர்களோடு  உரையாடி  மகிழ வேண்டும்.  மீண்டும் பார்ப்பது அடுத்த நீண்ட விடுமுறையின் போது தான். அதனால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இப்படி எல்லாமே மகிழ்ச்சியோடு அமைய வேண்டும். இந்த  விடுமுறை அந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை. 

அதுவும் கார்களில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.  நாம் அலட்சியமாக நடந்து கொண்டாலும் நமக்கு ஆபத்து. பிறர் அலட்சியமாக நடந்து கொண்டாலும் நமக்கும் ஆபத்து.

உங்கள் பயணம் சுகமாக அமைய வாழ்த்துகிறேன்!

Saturday 22 October 2022

இதுவே தகுந்த காலம்!

 

இதுவே தகுந்த காலம். ஆம்,  எதனையும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்த  அரசியல் அசகாய சூரர்களை மடக்குவதற்கு  இது தான் சரியான நேரம்.

கட்டடங்களைக் கட்டிவிட்டு பள்ளிகள் இயங்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லையா இது தான் சமயம். கழுத்தை நெரியுங்கள்! ஓடி வருவார்கள் உங்களுக்கு உதவிசெய்ய!  கல்வி அமைச்சைக் கதற வையுங்கள்! இது தான் சமயம்!  ஆனால்  வாக்களிக்கும் நாளுக்கு முன்பே  காரியத்தைச் சாதிக்க வேண்டும். அதன் பின்னர் என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகள்  காத்திருக்க வேண்டும்!

நிலங்களுக்கான பட்டா இன்னும் கிடைக்கவில்லையா? இது தான் சமயம்.  நெருக்குதலை ஏற்படுத்தினால் தான்  காரியம் கை கூடும். அவன் ஏதாவது பணமோ, பொருளோ கொடுக்க முயற்சித்தால் அதனை வாங்கிக் கொள்ளாதீர்கள். நிலப்பட்டாதான் வேண்டும் என்று அழுத்தம் கொடுங்கள். அவனிடம் பணம் வாங்கினால் ஆப்பு உங்களுக்குத்தான், மறந்துவிடாதீர்கள்!   ஒரு முறை பணத்தை வாங்கிக்கொண்டு  வாழ்நாள் நெடுகிலும் அவதிப்படாதீர்கள்!

சில்லறைத்தனமாக இந்த அரசியல்வாதிகள் எதையாவது கொடுத்துவிட்டு காரியம் சாதிக்கப்பார்ப்பார்கள். அவர்கள் எதைக் கொடுத்தாலும் தூக்கி எறியுங்கள்.  உங்களின், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

குடியுரிமைக்காக இருபது,  முப்பது ஆண்டுகளாகக் காத்துக் கிடக்கிறீர்களா இது நல்ல சமயம்.  உங்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லைதான் ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உரிமை இருக்கலாம்.   அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பியுங்கள்.  அது தான் அவர்களின் வேலை!

இப்போது நான் சொன்னவைகள் எல்லாம் நம்மை காலங்காலமாக ஆண்டு வரும் தேசிய முன்னணி கட்சியினரைப் பற்றித்தான்.  அவர்கள் தான் எல்லாகாலங்களிலும் இந்திய சமூகத்தை ஏமாற்றி வருபவர்கள். நம்மைப் போல் ஏமாந்தவர்கள் நாட்டில் இல்லை என்பதை அம்னோவினருக்கு நம்மைக் காட்டிக் கொடுத்தவர்கள் ம.இ.கா.வினர்.

இந்த முறை தேசிய முன்னணி எப்பாடுப்பட்டாவது வெற்றி அடைய வேண்டும் என்று விரதம் பூண்டிருக்கின்றனர்! அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கின்றனர். அதனால் இந்தியர்கள் இந்த முறை எல்லாவற்றையும் யோசிக்க வேண்டும். ஏதோ சில சில்லறைகளுக்காக உங்களை அடகு வைத்துவிடாதீர்கள்! உங்களையே கேவலப்படுத்திக் கொள்ளாதீர்கள்! கேவலப்பட்டுப் போகாதீர்கள்.

இது போன்ற நல்ல நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நமக்குக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இது போன்ற கெட்ட நேரம் அவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்.

நல்ல நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Friday 21 October 2022

மீண்டும் மேம்பாட்டுத் திட்டமா?

 

        இந்திய சமூகத்திற்கான  தொலைநோக்கு மேம்பாட்டுத் திட்டம்/

நமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக  எத்தனை மேம்பாட்டுத் திட்டங்கள்! எத்தனை  தொலை நோக்குத் திட்டங்கள்! நமது கண்களில் கண்ணீர் வழியும் அளவுக்குத் திட்டங்கள் வந்துவிட்டன!

போதாதற்கு மித்ரா என்று சொல்லி அது வேறு இந்தியர்களின் மேம்பாட்டினை மிதமிஞ்சி  மிதிமிதி என்று மேம்பாடடைய செய்துவிட்டது!

இப்போது தொலைநோக்குத் திட்டம் என்றாலே பயப்படுகின்ற அளவுக்கு தொலைதூரம் போய்விட்டது! ம.இ.கா. வின் தொலைநோக்குத் திட்டங்கள் ஒன்றா, இரண்டா அவைகள் எல்லாம் எங்கே போயின என்று கூட இப்போது தெரியவில்லை.

ஆனாலும் ம.இ.கா. அதனை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு ஆண்டு மாநாட்டிலும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு  இந்தியர்கள் முன்னேற்றம் அடைய திட்டங்களைக் கொடுத்துக்கொண்டே வருகிறது!  தலைவர்களும்  எந்தவொரு கூச்சநாச்சமில்லாமல் அதனை கைநீட்டி  வாங்கிக்கொண்டு வெளியே போனதும் அதனை அப்போதே மறந்துபோய் விடுவார்கள்! இது எப்போதும் உள்ள ஒரு பிரச்சனை தான்.

இந்தத் திட்டங்களினால்  இந்தியர்களுக்கு அறவே பயனில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.  ம.இ.கா. தலைவர்களை எடுத்துக் கொண்டால், முன்பும் பின்பும், தலைவர்கள் அனைவருமே செல்வமிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்! அப்படியெல்லாம் யாரும் ஏமாந்தவர்கள் இல்லை! ஏமாந்தவர்கள்  என்றால் அது சாதாரண மக்கள் தான். தொலைநோக்குத் திட்டங்களை வைத்து பயனடைந்தவர்கள் தலைவர்கள் தான்! மித்ரா என்றாலும் அவர்கள் தான் பயன் அடைந்தார்கள். அரசாங்கம் இந்தியர்களுக்கென்று எதையாவது ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தால் அதனால் பயனடைபவர்கள் தலைவர்கள் தான்.

இப்போது பக்காத்தான் ஹராப்பான் கட்சியைச் சேர்ந்தவர்களும்  தேர்தலுக்கு முன்பே தொலைநோக்குத் திட்டத்தை  பக்காத்தான் தலைவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நல்லெண்ணமாக இருக்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.  இதுவும் இந்தியர்களின் நலன் கருதி தான்! 

இவர்களும் புதிதாக எதையும் கேட்கப்போவதில்லை. ஏற்கனவே ம.இ.கா. என்ன கேட்டதோ  அதைத்தான் இவர்களும் கேட்கப் போகிறார்கள்.  எப்போதும் உள்ள இந்தியர்கள் தானே இருக்கிறார்கள்?  தலைவர்கள் வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம்.  மக்களில் எந்த மாற்றமும் இல்லை!

இருந்தாலும் நமக்குச் சகிப்புத்தன்மை அதிகம். எத்தனை அடி அடித்தாலும் தாங்கிக் கொள்வோம்!  எத்தனை திட்டங்களைக் கொடுத்தாலும்  பார்த்து, சிரித்தேப் பழக்கமாகிவிட்டது! அவர்கள் கொடுத்தார்கள் எதுவும் ஆகவில்லை. இவர்கள் கொடுக்கிறார்கள். ஏதோ ஒரு நம்பிக்கை. காரியங்கள் ஆகலாம் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண்போகாது என்கிற நம்பிக்கை.

பார்க்கலாம்! ஏதோ ஒரு பலன் இல்லாமலா போய்விடும்!

Thursday 20 October 2022

என்னால் தான் முடியும், நம்புங்கள்!

 

  


                      "இந்த நாட்டுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்கு என்னைத்தவிர வேறு யாராலும் முடியாது! நான் சொல்லுவதை நம்புங்கள்! மூன்றாவது முறையாக நான் பிரதமராக வர விரும்புகிறேன்!" என்று டாக்டர் மகாதிர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறார்!

நாமோ, அவருடைய வயதை வைத்து ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறோம். அட! 97  வயது  மனிதருக்கு இன்னும் அரசியல் ஆசையா? என்று! அவருக்கு ஆசை இருந்தால் தப்பு ஏதுமில்லை. அவருடைய வாழ்க்கையே அரசியலைச் சுற்றித் தானே வந்திருக்கிறது.  அதனால் அரசியலை அவ்வளவு எளிதில் அவரால் விட்டுவிட முடியாது.

ஆனால் அவர் பேசுகின்ற  அரசியல் கருத்துக்களைத் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தான் நம்மை கொஞ்சம் நெளிய வைக்கிறது!

இரண்டாவது முறை பிரதமராக வந்த போது அவர் அந்தப் பதவியைத் தொடர்ந்திருந்தால், அந்தப் பதவி காலத்தை நிறைவு செய்திருந்தால்,  அவரை நாம் பாராட்டலாம். "அன்வார் பிரதமரானால் நாட்டை அவரால் வழிநடத்த முடியாது!" என்று சொல்லிக் கொண்டு அவர் பதவியில் நீடித்திருக்கலாம்!  அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. முக்கல், முனகலோடு பக்காத்தான் அரசாங்கம் நீடித்திருக்கும். அவரும் நினைத்த காரியத்தைச் சாதித்திருக்கவும் முடியும். ஆனால் அத்தனையும் பாழடிக்கப்பட்டு விட்டது!

சரி, இன்னொரு பக்கம் அவர் சொல்லுகின்ற "என்னைத்தவிர"  என்பதற்கு  நாம் கேட்க வேண்டிய கேள்விகள் உண்டு. இந்த நாட்டின் நீண்ட நாள் பிரதமர் என்றால் அவர் டாக்டர் மகாதிர் மட்டும் தான். 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர். நாட்டையே தலைகீழாக மாற்றியவர். தன் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்  என்று அடம்பிடித்து பல அநீதிகளைச் செய்தவர்! கல்வி கொள்கையையே அவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல  மாற்றியமைத்தவர்!

இப்படி மலாய்க்காரர்களுக்கு ஏற்றாற் போல எல்லாவற்றையும் மாற்றி அமைத்தவரால் ஏன் ஒரு பிரதமரை உருவாக்க முடியவில்லை? டாக்டர்களை உருவாக்கினார், வழக்கறிஞர்களை உருவாக்கினார் - இப்படி எல்லாத் துறைகளில் நிபுணர்களை உருவாக்கியவர் ஏன்  அவரைப்போல அரசியல்வாதிகளை உருவாக்க முடியவில்லை? எங்கே தவறு நடந்தது?

ஓர் அரசியல்வாதியை, ஓரு பிரதமரை உருவாக்க முடியவில்லை என்றால் அவருடைய கல்விக் கொள்கை அனைத்தும் தவறு என்பதை அவரால் ஒப்புக்கொள்ள முடியுமா? அவர் தானே அதற்குப் பொறுப்பு?

அப்படியென்றால் நாட்டைத்  தவறான வழியில் நடத்திச் சென்றவர் மீண்டும் ஏன் பிரதமர் பதவிக்கு வர வேண்டும்?

நமக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஓர் அரசியல் தோல்வியாளர்! அரசியலுக்கு இலாயக்கற்றவர்!  இதைத்தான் நாம் சொல்ல முடியும்! மீண்டும் பிரதமராக வருவதற்கு அவருக்கு வாய்ப்பில்லை!


Wednesday 19 October 2022

அதென்ன டோஸ்?

 

மொழிபெயர்ப்பு என்பது மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு கலை. யார் வேண்டுமானாலும்  மொழி பெயர்ப்பு செய்ய முடியாது. அதற்கு மொழித்திறன், மொழி ஆற்றல் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளிலாவது மொழி ஆற்றல் இருக்க வேண்டும்.

தமிழில் ஒரு சொல்லை மொழிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் தமிழும், தேசிய மொழியும் அறிந்திருக்க வேண்டும். ஏதோ மேம்போக்காக ஒரு மொழியைத் தெரிந்து கொண்டு  'என்னால் முடியும்' என்று சவடால்  விடுவது மலேசியர்களின் இயல்பு! 

காரணம் நாம் பொதுவாகவே அலட்சியமானவர்கள்!  தகுதி என்பதைவிட  தகுதியற்றவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நமது அன்றாடப் பணியாகி விட்டது!

மேலே உள்ள ஒரு வார்த்தை மிகச்  சாதாரணமான ஒரு வார்த்தை. தோசை நமது இந்திய உணவுவகைகளில் ஒன்று. அதனைத்  தேசிய மொழியில் கொண்டு வரும்போது THOSAI  என்கிற சொற்களைப் பயன்படுத்தினாலே போதும். அனைவருக்கும் புரியும் மொழியில் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு  சொல். மலேசியர்கள் மட்டும் அல்ல வெளி நாட்டவர்கள் கூட அதனை மிக எளிதாக உச்சரிக்க முடியும்.

ஆனால் நமது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றம் செய்யும் அரசு நிறுவனமான  தேவான்  பஹாசா  டான் புஸ்தாக்கா யாரும் உச்சரிக்க முடியாத  ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்!  TOSE என்னும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி இது தான் சரியான வார்த்தை, இது தான் சரியான உச்சரிப்பு என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்! டோஸ் என்றால் என்ன பொருள் என்பது அதனை மொழிபெயர்த்தவருக்குத் தான் தெரியும். பொது மக்களுக்கு அந்த வார்த்தைச் சென்று சேருமா என்பதைப் பற்றியெல்லாம்  அவர்களுக்குக் கவலையில்லை!

பிழையைச் சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொண்டு அந்தப்பிழையை சரிசெய்ய முயலாமல் அது சரி என்று விதாண்டாவாதம் புரிவது அவரகளின் அறியாமையைத் தான் உலகத்திற்குப் பறைசாற்றும்! அதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர்!

ஒரு சாதாரண, சின்ன விஷயம். அதனைப் பூதாகாரமாக்கி,  ஏதோ தாங்கள் தான் மொழியைக் காக்க வந்த  காவலர்கள்  போன்று காட்டிக் கொள்வது இவர்களின் இயல்பு.

பிரச்சனையைக் கொண்டு போயாயிற்று. இனி அவர்களின் வேலை. அவமானப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் அவமானப்படட்டும். மக்களின் குரலை மதிப்பவர்கள் என்றால் மதிக்கட்டும். மதிக்கத் தெரியாவிட்டால் மிதிபட்டுத்தான் ஆக வேண்டும்!

Tuesday 18 October 2022

இளைஞர்கள் தவறாக....!

 

ஜொகூர், மூவார் அரசியல் பரப்புரை ஒன்றில்  குண்டர் கும்பலின் அட்டாகசத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

பக்காததான் ஹரப்பானும், மூடா கட்சியினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பரப்புரை நிகழ்வில்  'மாட் மோட்டோர்' என்னும் குண்டர் கும்பல் தேவையற்ற முறையில் அத்துமீறி நுழைந்து பரப்புரையின் போது இடையூறு செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் அதாவது அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு  மாநிலம். இந்த நிலையில் இப்படி ஒரு இடையூறு நடக்கும் போது, அதுவும் 'மாட் மோட்டோர்' போன்ற மலாய்க்கார இளைஞர் அதிகம்  கொண்ட குண்டர் கும்பல் இதனை நடத்தும் போது நிச்சயமாக அது அம்னோவின் தூண்டுதல் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. அந்த இளைஞர்களும் தங்களின் விருப்பத்திற்கு ஆடுபவர்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. எங்கிருந்தோ அவர்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. எந்த ஒரு பக்கபலமும் இல்லாமல் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடமட்டார்கள்.

அந்த இளைஞர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது  காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம். மேல் இடத்தின் ஆதரவு அவர்களுக்குப் பரிபூரணமாக உண்டு என்பது தெரிகிறது!

இந்த மாட் மோட்டார் கும்பல் இத்தோடு நிறுத்திக் கொள்வார்களா  அல்லது நாடெங்கிலும் தொடருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நிலையில் போட்டியிடுகிறது. அதை நாம் குறை சொல்ல வழியில்லை.  எல்லா கட்சிகளுமே வெற்றியை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அம்னோவுக்கு இது வாழ்வா சாவா பிரச்சனை.  தோல்வி அடைந்தால் அவர்களில் பலர் வழக்குகளைச் சந்தித்தாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கின்றனர்!

அதற்காக குண்டர் கும்பல்களை வைத்துக் கொண்டுதான்,    வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தவறு.  தேர்தல் நடக்கும் போது முழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற நினைப்பது  ஒரு படிக்காத சமுதாயத்தில் நடக்கலாம்.   ஆனால் நாம் ஒரு படித்த சமுதாயம். நமக்கென்று ஒரு பெருமை இருக்கின்றது. படித்தவர்கள் என்கிற பெருமை உண்டு. 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஆளும் தரப்பினர், அது எந்த மாநிலமாக இருந்தாலும் சரி,  குண்டர் கும்பல்களை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற எண்ணம் கொண்டிருக்க வேண்டாம்.  மக்களைக் குழப்ப நினைத்தால் நீங்கள் தான் குழம்பிப் போவீர்கள்!

ஜனநாயக உரிமைகளைப் பின்பற்றி வெற்றிபெறுவதே பெருமைக்குரியது!

Monday 17 October 2022

மித்ரா தடம் மாறுகிறதா?

 

இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும், இந்தியர்களின் தொழில் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட மித்ரா அமைப்பு இப்போது தடம் மாற்றப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

மித்ரா அமைப்பு இப்போது பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது  மகிழ்ச்சியான செய்தியே.  ஒற்றுமைத்துறை அமைச்சில் கீழ்  மித்ரா இருந்த போது பணம் எதற்குச் செலவு செய்தார்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் செய்து விட்டார்கள்! ஒற்றுமைத்துறை அமைச்சர் கடைசிவரை  வாய் திறக்கவே இல்லை! விளக்கம் கொடுக்கவே இல்லை! ஒரு வேளை அவருக்கு ஓய்வு பெறும் காலம் நெருங்கியிருக்கலாம்!

ஆனால் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர்களின் முதன் முதலாக செய்த காரியம் ஒரு தமிழ்ப்பள்ளிக்கு,  புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்பள்ளிக்கு,  மித்ராவின் உதவியால் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள் போன்ற பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. அது நமக்கு மகிழ்ச்சியே!

மேசை, நாற்காலிகள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.  மித்ராவால் பள்ளிக்கு வழங்கப்பட்ட  தொகை 3,13,000 வெள்ளி  என்று மித்ரா கூறுகிறது. வரவேற்கிறோம்.

ஒரு சில கேள்விகள் நம்மிடம் உண்டு.  கல்வி அமைச்சு செய்ய வேண்டிய வேலையை மித்ரா செய்திருக்கிறது. கல்விக்கு என கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கல்வி அமைச்சு ஏன் அதனைச் செய்யவில்லை?
மித்ரா ஏன் அதனைச் செய்கிறது?

ஒரு வேளை அவசரம் கருதி மித்ரா இந்த உதவியைச் செய்திருப்பதாகவே நாம் கருதுகிறோம். காரணம் இப்போது  நிரந்தர அரசாங்கம் இல்லாத நிலையில்   மித்ராவின் நிதி பயன்படுத்தப்படுவதாகவே நமக்குத் தோன்றுகிறது.  பின்னர்,  இப்போது பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதி, மித்ராவுக்குக் கல்வி அமைச்சு  திரும்ப ஒப்படைத்துவிடும் என நாம் நம்புகிறோம்.

இது அவசர உதவி என்பதில் ஐயமில்லை. தேர்தல் காலம் வேறு. சாதனை என்று சொல்லிக்கொள்ள இதுவும் உதவும். இங்கும் அரசியல் தான்!

எது எப்படி இருந்தாலும் மித்ரா தனது கடமையில் இருந்து தவறக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இடைக்காலத்தில் மித்ரா பாதை தவறிவிட்டது என்பது தான் நீண்ட நாளைய குற்றச்சாட்டு. அதற்குக் காரணமானவர்கள் ம.இ.கா.வினர் தான் என்பதும்  மக்களுக்குத் தெரியும். 

வருங்காலங்களில் மித்ரா செய்ய வேண்டிய முக்கிய பணி என்பது இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக இருக்க வேண்டும்.  இந்தியர்களை வியாபாரத்துறையில் வெற்றி பெற மித்ரா உதவ வேண்டும். இதுவரை மித்ரா உதவவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த உதவிகள் ம.இ.கா. சார்ந்த பெரும் புள்ளிகளுக்குத் தான் போய்ச் சேர்ந்தது என்பதும் உண்மை!

மித்ரா தடம் மாறக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்.  அவர்களது கடமையைச் செய்யவேண்டும் என்று தான் சொல்ல வருகிறோம்.  கட்சிக்காரர்கள் பேச்சைக் கேட்டு தனது பாதையை  மாற்றிக்கொள்ளக் கூடாது என்பது தான் நமது ஆலோசனை!

Sunday 16 October 2022

கருமை நிறமும் அழகு தான்!

                                     San Rachel, Puthucherry Girl in the Modelling Industry

கருமை நிறம் தான். "அதனால் என்ன வீட்டில் முடங்கிக் கிடக்க நான் தயாராக இல்லை"  என்கிறார்  இந்தியா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப்பெண், சான் ராச்சல்.

டாக்டருக்குப் படிக்கும் அவருக்கு மருத்துவத் துறையும்  மாடலிங் துறையும் இரு கண்கள் என்கிறார் ராச்சல்.. அவரது  வீட்டில் அவரைத்தவிர வேறு யாரும் தனது நிறத்தில் இல்லையாம்.  கவலையாகத்தானே இருக்கும்!

ஆனால் அவருக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை!  குழந்தை பருவத்தில், தனது வீட்டிலேயே,  தனது நிறம் பற்றியான சர்ச்சை ஆரம்பமாகி விட்டதாம்!  அதன் பின்னர் பள்ளியில் அப்புறம் கல்லூரியில் - இப்படி எல்லா இடங்களிலுமே "ச்சீ கருப்பு"  என்று சொல்லி அவரை ஒதுக்குவார்களாம்.

இது போன்ற ஒதுக்கல் கலாச்சாரத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்  "இந்த நிறத்தை வைத்து நான் சாதித்துக் காட்டுகிறேன், பார்!" என்கிற வைராக்கியம் தான் அதிகரித்ததாம்! 

எதை வைத்து சாதித்துக் காட்டுவது?  கருத்த நிறத்தை வைத்துக் கொண்டு பல பெண்கள்  பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். குறிப்பாகக் கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் சாதனைகளுக்குப் பஞ்சமில்லை. அதனால் மாடலிங் துறையைத் தேர்ந்தெடுப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். காரணம் கருப்பு நிறம் என்றால்  இந்தப் பக்கத்தில் யாரும் எட்டிபபார்ப்பதில்லை!  "நான் அதனச் செய்கிறேன்!" என்று சவாலோடு களம் இறங்கினார் ராச்சல்!

ஆமாம், மாடலிங், அழகிப்போட்டி என்றால் வெள்ளை நிறம் தான் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு நிற்கும். வெள்ளை நிறம் தான் பரிசுகளைக் குவிக்கும் என அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டார் ராச்சல்! கருப்பு நிறமும் சளைத்தது அல்ல என்று நிருபித்திருக்கிறார்.

2020-2021 ஆண்டு மிஸ் புதுவை,   2019-ல் மிஸ் டார்க் குவீன், தமிழ் நாடு, மிஸ் பெஸ்ட் எட்டிடியூட் - இப்படி பல விருதுகளைப் பெற்றிருந்தாலும்  மிஸ் புதுவை  தான் தனக்கு நெருக்கமானது என்கிறார் ராச்சல். காரணம் இங்கு தான் எனக்கு நிறைய குடைச்சலைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள், தனது நிறத்தை வைத்து ஒதுக்கியவர்கள் இருக்கிறார்கள்,  வயிறெறிந்தவர்கள் இருக்கிறார்கள், என்கிறார்!

பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட  சான் ராச்சலுக்கு  இப்போது தான் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. புதுச்சேரியில் உள்ள இளைய தலைமுறை அவரிடம் மாடலிங் பயிற்சி எடுத்து வருவதே அவருக்குக் கிடைத்த மாபெரும்  வெற்றி என்று சொல்லலாம்!

அது சரி  வருங்காலங்களில் அவர் என்ன இலட்சியத்தைக் கொண்டுள்ளார்?  மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்று  "மிஸ் இந்தியா" ஆக வேண்டும் என்பது தான் தனது இலட்சியம் என்கிறார். அவர் வெற்றி பெறுவார் என நம்பலாம்!

ஆமாம் கருமை நிறமும் அழகு தான்!  ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்!


Saturday 15 October 2022

பரவாயில்லை! தமாஷ்தான்!

 

ஒரு சில விடயங்களைத் தமாஷாக பேசுவதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொளவதை நாம் பார்த்திருக்கிறோம்!

அப்படித்தான் தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிட் தேவையில்லாமல் வாயைவிட்டுவிட்டு "எதிர்க்கட்சிகள் எனது உரையை திரித்துக் கூறுகின்றன" என்று அவர் பேசிய பேச்சுக்கு அவரே  மறுப்பும் தெரிவித்திருக்கிறார்!

அப்படி என்ன தான் சொன்னார்? அவர் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை போகாமல் ஏறக்குறைய இப்படித்தான் சொன்னார்: "எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால்  அம்னோ தலைவர்களை மட்டும் குறி வைப்பார்கள் என்று நினைக்காதீர்கள்! ம.இ.கா., ம.சீ.ச. தலைவர்களையும் குறி வைப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!"  என்பது தான் அவர் சொன்னதின் சுருக்கம்.  "குறி" என்றால் "ஊழல்"  என்பது  அதன் பொருள்!

இப்படிச் சொன்ன போது ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புன்னகைப்  பூத்தாராம்!  அப்போது தான் ஸாகிட் இப்படிக் கூறியதாகத் தெரிகிறது.

ஸாகிட் சொல்ல வருவதென்ன? 'அலட்சியமாக இருக்காதீர்கள்!  வெற்றி பெற கடுமையாக உழையுங்கள்' என்பதைத்தான் அவர் சொல்லுகிறார். தவறு ஏதும் இல்லை. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டால் துவம்சம் பண்ணி விடுவார்கள் என்று அவர் தேசிய முன்னணி கட்சிகளுக்கு  ஆலோசனைக் கூறுகிறார்.

அவர் சொல்லுவதில் நியாயமுண்டு.  இருபத்திரண்டு மாத பக்காத்தான் கட்சியின் ஆட்சியில் அகப்பட்டவர் தான் நஜிப் ரஸாக். என்ன நடந்தது என்பது தெரியும். இப்போது மீண்டும் தேசிய முன்னணியின் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது என்ன நடக்கிறது என்பதும் தெரியும்.  அதனால் தேசிய முன்னணி ஆட்சிக்கு வராவிட்டால் எங்கேயாவது ஓடி ஒளிய வேண்டிவரும் என்பது அவருக்குத் தெரியும்!

தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் ஸாகிட் ஹாமிட்  புனிதரோ புனிதராகி விடுவார்! அவர் சார்ந்த கூட்டணியில் உள்ளவர்கள்   புனிதம் பெற்று விடுவர்.

இதையெல்லாம் வைத்துத்தான் அம்னோ ஒரு  கணக்கைப் போட்டு வைத்திருக்கிறது. மழை வருகிறது, வெள்ளம் வருகிறது என்றால் அந்தச் சூழல் ஆளும் தரப்பினருக்குச் சாதகமாக அமையும் என்று நினைக்கிறார்கள். எப்படி?  வெள்ளம், மழை என்றால் மக்கள் வாக்குச்சாவடிகளுக்குப் போவதைத் தவிர்க்க விரும்புவார்கள். ஆனால் அம்னோ வாக்காளர்கள் நூறு விழுக்காடு வாக்களிப்பார்கள் என்று அம்னோ நம்புகிறது! அதுவே அவர்களுக்கு வெற்றியைத்தரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

பரவாயில்லை! சும்மா  ஒரு தமாஷ் எப்படியெல்லாம் நம்மை யோசிக்க வைக்கிறது, பார்த்தீர்களா!

Friday 14 October 2022

இது சாத்தியமா?

 

ஜனநாயகத்தில் மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள்.  இப்போதெல்லாம் அரசியலில் ஊழல்  வாய்ந்தவர்களின் குரல் தான் மகேசன் குரல் என்பதை நாம் பார்க்கிறோம்.

15-வது பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம் என்பது தான் மக்களின் குரல். ஆனால் அது எடுபடவில்லை.  வெள்ளத்திற்கும், மழைக்கும்  "பேப்பே!"  என்று ஊழல்வாதிகள் ஊதித்தள்ளி விட்டார்கள்!

அதனை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால்  கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இப்போது நீதிமன்ற நடவடிக்கையை எடுத்திருக்கின்றார். இது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், பரவாயில்லை, சட்ட  நடவடிக்கை எடுப்பது என்பது மக்களின் எதிர்ப்புக்குரலைக் காட்டுவதற்குத்தான்.

ஆனாலும் நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்பது பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. தேர்தல் வேலைகள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. நீதிமன்றம் அப்படி ஒன்றும் நாட்டையே  கவிழ்த்துப் போடும் அளவுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு நமக்கும் இல்லை,  அரசியல்வாதிகளுக்கும் இல்லை! சும்மா,  சார்லஸ் சந்தியாகோ தனது கடமையில் ஒன்றாகச் செய்கிறார். அதற்கு ஏதேனும் பலன் இருக்கிறதா என்பதை அவரைப்போலவே நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீதிமன்ற தீர்ப்பு வருவது வரட்டும். நல்லதோ கெட்டதோ நடக்கட்டும்.  காபந்து பிரதமர் நாடாளுமன்றம் கலைத்தாகிவிட்டது என்று அறிவித்துவிட்டார். பேரரசரும் பொதுத் தேர்தல் நடத்த அனுமதி கொடுத்துவிட்டார். இதனையெல்லாம் மீறியா நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையப் போகிறது?

இப்போது அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டன. குறிப்பாக மலாக்கா மாநிலம் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. வரும் ஓரிரு வாரங்களில் எல்லாக் கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துவிடும். பக்காத்தான் ஹரப்பான்  அடுத்த வாரம் தனது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடும் என்பதாக அறிவித்திருக்கிறது.

ஆக எல்லாருமே, எல்லாகட்சிகளுமே தயார் நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் நீதிமன்றம் என்னத்தைச் சொல்லப் போகிறது? சாத்தியமாகத் தோன்றவில்லை!

Thursday 13 October 2022

மீண்டும் உறுதி!

 

தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிடி.

நம்புகிறோம். நம்ப முடியாததற்கு எந்தக் காரணமும் இல்லை. தேசிய முன்னணி ஆட்சியில் தாய்மொழிப் பள்ளிகள்  நிலைத்திருக்கிறது என்பது உண்மை தான். ஏன்? இருபத்திரண்டு மாத கால ஆட்சியில் கூட பக்காத்தான் அரசு தக்க வைத்துக் கொண்டது  என்பதும் உண்மை தான்.

ஆனால் தாய்மொழிப் பள்ளிகள் தங்களது அடையாளத்தை இழந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிலும் உண்மை இருக்கிறது என்பதை அறிகிறோம். அத்தோடு அரபு மொழியும் தாய்மொழிப் பள்ளிகளில் திணிக்கப்படுகிறது என்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் தேசிய முன்னணி ஆட்சியில் தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் தேசிய முன்னணியின் தலைவர் அறிவார் என்பதும் நமக்குத் தெரியும்.

பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமான செய்திகளும் உண்டு.

புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன. கட்டி ஐந்தாறு ஆண்டுகள் பின்னரும் அந்தப் பள்ளிகளைப் பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதி கொடுப்பதில்லை!  அதற்கு ஏதேதோ காரணங்கள். அந்தக் காரணங்களுக்கெல்லாம் காரணம் கல்வி அமைச்சு தான். காரணம் கட்டடங்கள் கட்டுவதற்கு  அவர்கள் தானே பொறுப்பேற்கிறார்கள்? பொறுப்பேற்கிறவர்கள் தானே  அதற்கான பொறுப்பையும்  ஏற்க வேண்டும்?  இதவும் தேசிய முன்னணி ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது!

பள்ளிகளில் இடப்பற்றாக் குறையால்  இணைக்கட்டடம் கட்டுகிறார்கள். அதற்கும் அதே கதி தான். அனுமதி கொடுப்பதில்லை. கட்டடங்கள் கட்டியும் பிரமச்சாரியாக நிற்கின்றன! இதுவும் தேசிய முன்னணியின் ஆட்சியில் தான் நடக்கிறது!

ஆச்சரியமான செய்தி என்னவென்றால் கட்டடங்கள் தேவை என்பதை அறிந்து தான் கல்வி அமைச்சு அதற்கான அனுமதிகளைக் கொடுத்து கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கட்டப்பட்ட பின்னர், அதற்கான அனுமதியைக் கொடுக்காமல், அப்படியே ஏதோ காட்சிப் பொருளாக வைத்திருப்பதும் கல்வி அமைச்சு தான்! மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் தேசிய முன்னணி ஆட்சியில் வீணடிக்கப்படுகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது!  இதையும் தேசிய முன்னணியின் தலைவர் அறியாமலிருப்பாரோ?

தாய்மொழிப்பள்ளிகள் தொடரும் என்கிற தேசிய முன்னணியின் உறுதிமொழியை வரவேற்கிறோம்!

Wednesday 12 October 2022

இணைந்து பணியாற்ற....!

 

வருகின்ற 15-வது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பைக் காட்டினால் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்பது உண்மை தான்.

அதற்காக டாக்டர் மகாதிருடன் கூட்டணிவைத்துக் கொள்வது என்பதை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. காரணம் சென்ற தேர்தலில் அவர் கொடுத்த அடி யாராலும் மறக்க முடியாத ஓர் அடி! அது என்ன மறக்கக் கூடியதா? தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தையே கவிழ்த்து விட்டவராயிற்றே! அப்படி ஒரு நிகழ்வு மீண்டும் நடக்க வேண்டுமா?  அதனால் அவர் புறக்கணிக்க வேண்டிய ஒரு மனிதர் என்பது நாடறியும்!

இன்றைய எதிர்க்கட்சி என்றால் அது இன்னும் பக்காத்தான் ஹராப்பான் தான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  சென்ற முறை செய்த தவறுகளை இந்த முறையும் அவர்கள் செய்வார்கள் என்று எப்படி மகாதிர் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை! அவர் நம்பக் கூடிய மனிதராகவும் இல்லை!

அவரின் திறமை மீது நமக்கு எப்போதும் மரியாதையுண்டு. இந்த வயதிலும் அவர் உழைக்கிறாரே அதன் மீதும்  நமக்கு மரியாதை உண்டு. ஆனால் எல்லாவற்றையும்விட அவர் நம்பிக்கைக்குரிய மனிதராக இல்லையே அதனால் தான் அவர் மலேசியரிடையே மரியாதை இழந்துவிட்டார் என்று துணிந்து சொல்லலாம்.

அவர்  நிருபர்களிடையே பேசும் போது டத்தோஸ்ரீ அன்வார் தான் தன்னோடு இணைந்து பணியாற்ற மறுக்கிறார் என்று கூறுகிறார்!  அது உண்மை தான் என்றாலும் அப்படியே அன்வார், மகாதிருடன் இணைந்து பணியாற்றினாலும்   அத்தோடு அன்வாருடைய அரசியல் எதிர்காலமும் கேள்விக்குரியதாகி விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை! அதனை அன்வாரும் அறிவார். அதே சமயத்தில் டாக்டர் மகாதிரும் அறிவார். அதனால் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

டாக்டர் மகாதிர் மட்டும் அல்ல, குறுகியகால பிரதமராக இருந்த முகைதீன் யாசின் அவர்களுக்கும் அதே கதி தான். இவர்கள் மக்களை நம்பவில்லை. பதவியே முக்கியம்; மலாய்க்காரர்களே முக்கியம் என்று வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சை யாரும் நம்பத்தயாராக இல்லை.

துரோகிகள் வேண்டுமானால் ஒன்று சேரலாம். ஆனால் துரோகத்திற்கான பரிசு என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். துரோகிகளுக்கு எதிர்காலம் இல்லை. இனி அவர்களின் அரசியல் எட்டாக்கனி என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்!

Tuesday 11 October 2022

வெள்ள அபாயத்தை எதிர்கொள்வீர்!

 

மலேசியர்கள் கடுமையான பெருவெள்ள அபாயத்தை அடுத்த மாத வாக்கில்  எதிர்நோக்க வேண்டி வரும் என்று  கணிக்கப்பட்டிருப்பதை பேரரசர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  

அரசாங்க  அமைப்புகள், பொதுமக்கள் வெள்ள அபாயத்தை தவிர்க்க தகுந்த  முன்னேற்பாடுகளைச்  செய்து கொள்ளவும், நிவாரண உதவிகளைத்  தக்க சமயத்தில் கொண்டு சேர்க்கவும், துரிதமாக செயல்படவும் பேரரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த மாதம் இருக்கட்டும்.  இப்போதே கடும் மழையும், வெள்ளமும் நாட்டை அலைகழித்துக் கொண்டிருக்கின்றன  என்பதும் உண்மை. பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது.  வீட்டை விட்டு வெளியேறுவதற்கே யோசிக்க வேண்டியுள்ளது! எப்போது மழை பெய்யும் என்று யூகிக்க முடியவில்லை. தொடர்ந்தாற் போல் மழை; அப்புறம் கடும் வெயில்!  அப்புறம் மழை! இப்படித்தான் மழை மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது!  மழை எப்போது வரும் என்பதை யூகிக்க முடியவில்லை!

ஆனால் ஒரு சோகம்.  மலேசியர்கள் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் போது  நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்! மக்கள் இப்போது தேர்தல் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் நாலைந்து  பேர் கூடி எப்போது தேர்தல் வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்! மக்களின் குரல் எடுபடவில்லை; மகேசர்கள் குரல் தான் எடுபடுகிறது! இதைத்தான் மக்களாட்சி என்கிறோம்!

நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டு அறுபது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.   நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அதனைத் தொடர்ந்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும்  மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரே காரணம் தான்.  பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் காலம் இருப்பதால் அப்போது  சட்டமன்றத் தேர்தல் நடத்தினால் போதும் என்பது அவர்களது பார்வை.  முழுமையாகவே அவர்கள் ஐந்து ஆண்டுகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். அதிலும் தவறில்லை. அடுத்த தேர்தலில்  மாநில சட்டமன்றம் யார் கையில் போகும் என்பது யாருக்குத் தெரியும்?

எப்படியோ,  ஒரு பக்கம் வெள்ளம்; ஒரு பக்கம் தேர்தல்.  இந்த காலகட்டத்தில் பல அதிசயங்கள் நடக்கலாம். வேட்பாளர்கள் படகுகளில் போய்  மக்களைச் சந்திக்கலாம்!  மக்கள் படகுகளில் உட்கார்ந்துகொண்டே பிரச்சாரங்களைக் கேட்கலாம். எதற்கும் சாத்தியம் உண்டு.

தேர்தலும் நடக்க வேண்டும். வெள்ள  அபாயத்தையும் தவிர்க்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்கு முன் மக்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கும்  அந்த அனுபவமில்லை. அதனாலென்ன?  மக்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கட்டும்!

Monday 10 October 2022

பாரிய அளவில் போற்றப்படும் பரோட்டா!

 

ஒரு காலத்தில் தமிழர்களால் பரோட்டா என்று அழைக்கப்பட்டு - இப்போது மலேசியர்களால் விரும்பிச் சாப்பிடப்படும் உணவாக மாறியிருக்கும்  ரொட்டி சனாய் மலேசியத்  தெருவோரம் விற்கப்படும் உணவு வகைகளில் மிகச்சிறந்த உணவாக பயண வழிகாட்டி கையேடு ஒன்றின்  அறிவிப்பில் வெளிவந்திருக்கிறது.

உலக அளவில் தெருவோரங்களில் விற்கப்படும் ஐம்பது வகையான சிறப்பான உணவுகளில் ரொட்டி சானாய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது  என்பதாக அந்த ஏடு அறிவித்திருக்கிறது.

இப்போது நாம் கொஞ்சம் பின்நோக்கி நகர்வோம். நமது நாட்டில் அதன் பின்னணி  என்ன  என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். அதன் பின்னணி என்று பார்த்தால் இந்த பரோட்டா என்பது இந்தியாவிலிருந்து இங்குக் கொண்டு வரப்பட்டதாகத்தான் தோன்றுகிறது. 1955-களில் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்லலாம்.  அதுவும்  அந்தக் காலகட்டத்தில் நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்களின் உணவகங்களின் தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்னொன்றையும் சொல்லலாம்.  ஆரம்பகாலங்களில் நமது இந்திய உணவகங்கள் பரோட்டாவை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்பது ஆச்சரியமான விடயம்.  ஆனால் பிந்நாள்களில் அவர்கள் சரண் அடைந்துவிட்டனர்! பரோட்டா இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்பதை உணர்ந்துவிட்டனர்.

அந்த காலகட்டத்தில் நானும் எனது நண்பர்களும் மாணவர்களாக  இருந்த போது தினசரி பரோட்ட சாப்பிடும் பழக்கம் உண்டு. ஒரே காரணம் தான். வீடு போய் சேரும் வரை பசி எடுக்காது என்பது தான் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். அதன் விலை பத்து காசு அல்லது பதினைந்து காசாக இருக்க வேண்டும்.   மறந்து போனது!  ஒரு ரொட்டியும் ஒரு கிளாஸ் தண்ணியும் போதும். அதற்கு மேல் காசு இருக்காது!

இப்போது உலகளவிலும் தமிழர் உணவகங்களில் பரோட்டா ரொட்டி விற்கப்படுகின்றது என்பதையறிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! என்னன்னவோ பெயரில், என்னன்னவோ விதமாகத் தயாரிக்கின்றனர்.

ஆனால் இப்போது அதன் தரம், நமது நாட்டைப் பொறுத்தவரை,  பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ரொட்டியில் இனிப்பைக் கலக்கின்றனர். காலை நேரத்தில் கோழி இறைச்சியைப் பயன்படுத்துகின்றனர். அப்பப்பா! சொல்ல முடியவில்லை!  ஒரு சில உணவகங்கள் சாப்பிட முடியாத அளவிற்குத் தரத்தை தாழ்த்திவிட்டனர். சிக்கனம் கருதி தரத்தை கெடுத்துவிட்டனர்; ஆனால் விலையைக் கூட்டிவிட்டனர்!

ரொட்டி சனாய் உடம்புக்குக் கேடு என்று சொன்னாலும்  சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை. அது தொடர்கதை தான்! ஆனால் உணவகங்களில் சாப்பிடுவதை விட என் போன்றோர் வீட்டில் செய்து சாப்பிடுவதை விரும்புகிறோம். இது இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

பரோட்ட இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றே தோன்றுகிறது!

Sunday 9 October 2022

தேர்தலுக்கு முன்பா, பின்பா?

 

       நன்றி: வணக்கம் மலேசியா                  குனோங் ரப்பாட் தமிழப்பள்ளி

பொதுவாகவே நமது கல்வி அமைச்சுக்கு ஒரு வழக்கம் உண்டு. தமிழ்ப்பள்ளிகளைக் கட்டும் போதோ அல்லது ஏற்கனேவே உள்ள  பள்ளிகளுக்குப் புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டும் போதோ  அல்லது புதிய  கட்டடம் கட்டி முடியும் தருவாயிலிருக்கும் போதோ வழக்கம் போல ஒரு சில ஏற்பாடுகளைச் செய்து வைப்பார்கள்.

அதாவது கட்டப்பட்ட கட்டங்களைத் திறப்பதற்கு அனுமதிப்பதில்லை. ஏதோதோ காரணங்கள் சொல்லி ஆண்டுக் கணக்கில் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்த முடியாதபடி இழுத்தடிப்பார்கள்.

அதில் ஒன்று தான் குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி. பல ஆண்டுகளாக அதன் பெயர் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளி. அறுபது ஆண்டுகளாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பள்ளி. இடப்பற்றாக் குறையால் இட மாற்றம் செய்யப்பட்ட ஒரு பள்ளி.

இப்போது அதன் பிரச்சனை என்ன?  2016-ம் ஆண்டு  இப்பள்ளி கட்டப்பட்டது.  ஆனாலும் கட்டி முடிக்கப்படவில்லை. 95 விழுக்காடு கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஐந்து விழுக்காடு அப்படியே  காட்சிக்கு வைத்திருக்கிறது கல்வி அமைச்சு.   ஏன் முழுமையடையவில்லை என்று கேட்டால் கல்வி அமைச்சு நமக்குக் கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருக்காது. இந்த அதிமேதாவிகள் இதனையே தேசிய பள்ளிகளுக்குச் செய்தார்களானால் அவர்கள் சோத்துக்கே திண்டாட வேண்டி வரும்!  காரணம் அவர்களது வேலையை அவர்கள் இன்னதென்று தெரியாமல் செய்கின்றார்கள் என்பது தான் பொருள்!

95 விழுக்காடு முடிக்கப்பட்ட இந்த குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு  கல்வி அமைச்சு செய்த செலவு சுமார் 72 இலட்சம் வெள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்தத் தொகை 2016 ஆண்டு செலவு செய்யப்பட்ட  தொகை. அதன் பின் அந்தக் கட்டடம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இப்போது வந்த சமீபத்திய செய்தியின்படி  இந்தப் பள்ளியை அடுத்த ஆண்டு திறப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.   தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தொகுதி ம.இ.கா. தலைவரும்  அதனைப் பார்வையிட்டதாக சொல்லப்படுகின்றது.

ஒரு பள்ளி திறக்கப்பட வேண்டும் என்றால் ஒரு பொதுத்தேர்தல் தேவைப்படுகிறது! அது தான் தேசிய முன்னணியின் சிறப்பு அம்சம்! இன்னொன்று தேர்தல் சமயத்தில் தான் இவர்கள் போய் பார்வையிடுவார்களாம், ம.இ.கா. உட்பட! அதுவும் ஒரு சிறப்பு. இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 2016-ம் ஆண்டு 72 இலட்சம் செலவு. இப்போது 2022  ஆண்டும் இன்னொரு 72 இலட்சம் தேவைப்படும். கேட்டால் பொருள்கள் விலை ஏறிவிட்டன என்று பதில் வரும்!

மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அவனவன் அப்பன் வீட்டுப் பணம் என்றால் வயிறு எரிந்து சாவான். இது மக்கள் வரிப்பணம்.நாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வரும் வரிப்பணம். ஆளத்தெரியாதவன் ஆட்சி செய்தால் ஆடுகளும் நடனமாடும்!

இப்போது இன்னொரு கடைசிக் கேள்வி. இந்த ஐந்து விழுக்காடு வேலை தேர்தலுக்கு முன் நடந்தேறுமா அல்லது தேர்தலுக்குப் பின்பா? தேர்தலுக்குப் பின்பு என்றால்  இன்னொரு அரோகரா!

Saturday 8 October 2022

தாஜ்மகாலை மிஞ்சுகிறதா மாமல்லபுரம்?

 

                                                மாமல்லபுரம் , தமிழ் நாடு  

உலக அதிசயங்களில் ஒன்று  இந்தியா,  ஆக்ராவில் உள்ள  காதலின் சின்னமான தாஜ்மகால் என்பது பலருக்குத் தெரியும். இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி சுற்றுப்பயணிகளை மிகவும் கவர்ந்த இடம் என்றால் அது தாஜ்மகால் மட்டுமே.

ஆனால் இப்போது அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை  அறிய முடிகிறது. இந்தியாவின் சுற்றுலாத்துறை  இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

கொரோனா தொற்று  உலகளவில் சுற்றுலாத்துறையை மிகவும் பாதித்த ஒரு நோய்.  அந்த நோய் பல நாடுகளை முடக்கிவிட்டது.  இலஙகை அதற்குச் சரியான உதாரணம். முற்றிலும் சுற்றுலாத்துறையை நம்பி வாழ்ந்த ஒரு நாடு இலங்கை. அது இந்தியாவையும் பாதித்தது.  ஓரளவு நோயின் தாக்கம் குறைந்த பிறகு இப்போது இந்தியாவின் சுற்றுலாத்துறை  மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

சென்ற ஒராண்டு காலமாக,  2021/2022,  இந்திய சுற்றுலாத்தலங்களுக்கு  வருகின்ற  வெளிநாட்டவரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது என்பதாக சுற்றுலாத்துறை கூறுகிறது. அது நல்ல செய்தி.

இங்கே முக்கியமாகக்  கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றால் இந்தியாவில் வெளிநாட்டவரால் அதிகம் கவரப்பட்ட  சுற்றுலாத்தலம்,  தன் காதல் மனைவிக்காக  ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் தான். கட்டடம் முழுவதும் பளிங்குக்கற்கலால் ஆனவை. அதற்கு ஈடு இணை இல்லை என்பதுதான் பொதுவான கருத்து.  உலக ஏழு அதிசயங்களில் தாஜ்மகாலும் ஒன்று . சென்ற ஆண்டு தாஜ்மகாலின் வருகையாளர்கள் என்று பார்த்தால், சுற்றுலாத்துறையின் அறிவிப்பின்படி  38,922 பேர் வருகைத் தந்திருக்கின்றனர்.

ஆனால் பார்வையாளர்கள் என்று எடுத்துக் கொள்ளும் போது இந்த முறை தாஜ்மகால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள சிற்ப கலைக்குப் பெயர் போன மாமல்லபுரம் சுற்றுப்பயணிகளுக்கு முதல் இடமாக விளங்கியிருக்கிறது.  பல்லவ சிற்பக்கலைச் சின்னங்கள், குடைவரைக்கோயில்கள்,  இரதங்கள், சிற்பங்கள் அனைத்தும் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றன.  மாமல்லபுரம் உலகப் பாரம்பரிய, கலை, சுற்றுலா தலமாகவும்  விளங்குகிறது. மாமல்லபுரத்தின் சென்ற ஆண்டு வருகையாளர் எண்ணிக்கை 1,44,984 பேர்.

தாஜ்மகாலின் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே  காணப்படுவதற்கு ஏதேனும்  விசேட காரணங்கள் உண்டா என்பது தெரியவில்லை. ஒரு வேளை கொரோனா தொற்று என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தென் இந்திய மாநிலங்கள் போல, வட இந்திய மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் சாந்தேகமில்லை.

எப்படியோ மாமல்லபுரம் தொடர்ந்து தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Friday 7 October 2022

ஒருவரின் நிறத்தைக் கேலி செய்யாதே!


 ஒருவரின் நிறத்தைக் கேலி செய்வதும், தோற்றத்தைக் கேலி செய்வதும், அசிங்கம் என்று தூற்றுவதும்  எல்லா நேரங்களிலும்  சாதகமாக அமையும் என்று சொல்வதற்கில்லை.

நமக்கு அது கேலியாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர் அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர் உள்ளே புகைந்து கொண்டிருக்கிறார்  என்பது நமக்குத் தெரிவதில்லை. ஒருவரின் நிறத்தைக் கேலி செய்வது மிக மட்டமான ஒரு போக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அது கணவன் மனைவியாக இருந்தாலும் அது வன்மத்தைத் தான் ஏற்படுத்தும்.

அப்படி ஒரு வேண்டத்  தகாத சம்பவம் ஒன்று இந்தியாவின் வடபகுதியான சத்தீஸ்கர் மாநிலத்தில்,  துர்க் மாவட்டத்தில்  நடந்ததைக் கண்டு மக்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

இப்படி தொடர்ந்து கேலிக்கு இலக்கான ஒரு பெண் கடைசியில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார். இது கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த ஒரு போராட்டம்.  கணவர் ஆனந்த், வயது 40,  மனைவி சங்கீதா, வயது 30. கணவர் தனது மனைவியை தொடர்ந்தாற்போல "நீ கறுப்பி, அழகற்றவள், அசிங்கமானப் பிறவி"  என்று கேலி செய்துகொண்டும், மனைவியின் ஆத்திரத்தை தூண்டிக் கொண்டும் இருந்திருக்கிறார்.  இவர்கள் இருவருக்குமிடையே மனைவியின் கருத்த நிறத்துக்காக அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கமாக ஒன்றாக விட்டது.

கடைசியில் மனைவி பொறுமை இழந்தார்.  தன்னை இப்படி தொடர்ந்து அவமானப்படுத்துவதை  அவர் விரும்பவில்லை.  சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று வழக்கம் போல மனைவியைக் கேலி செய்திருக்கிறார். சீண்டியிருக்கிறார். மனைவி வீட்டில் அருகே கிடந்த கோடாரியைக் கொண்டு கணவனைப் போட்டுத் தள்ளியிருக்கிறார். போட்டுத் தள்ளியதில் கணவரின் உயிர் அத்தோடு முடிவுக்கு வந்தது. அத்தோடு அந்த மனைவிக்கு ஆத்திரம் தீரவில்லை. அவருடைய ஆண்குறியையும் வெட்டிப் போட்டிருக்கிறார்.

இது போன்ற சம்பவம் நிச்சயமாக நமக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்கவில்லை. மிகவும் துயரமான ஒரு சம்பவம்.

நிறத்தைக் கேலி செய்வது, உருவத்தைக் கேலி செய்வது, அழகற்றவர் என்று கேலி செய்வது, சிலரது ஊனத்தைக் கேலி செய்வது, திக்கித்திக்கிப் பேசுவதைக் கேலி செய்வது, கால் ஊனம் உள்ளவர்களைக் கேலி செய்வது - இப்படிக் கேலி பேசுவதை நாம் நிச்சயமாக ஆதரிக்கக் கூடாது. இப்படிக் கேலி செய்கின்ற பழக்கம் பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்தே வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மரியாதையுடன் ஊனமுற்றவர்களை நடத்தினால் நமது பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள்.  எல்லாவற்றுக்கும் பெற்றோர்களே காரணம்.

யாரும் யாருக்கும் குறைந்தவர்களல்ல. நாம் அனைவரும் சமம். அதுவே நமது பலம்!

Thursday 6 October 2022

பெண்களை அவமதிக்காதீர்கள்!

 

பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களைக் கேவலமாகப் பேசுவது என்பது ஒரு சில ஆண்களுக்கு அது இயற்கையாகவே வருவதுண்டு.

இது போன்ற செயல்கள் நம் இனத்தவரிடையே கொஞ்சம் அதிகம்.   பெண்கள் வெளியே போய் வேலை செய்வதைக்கூட  விரும்பாத ஒரு சமூகம் நாம்.  கல்வி பயில வெளி மாநிலங்களுக்குப் போவதைக் கூட  நம் பெற்றோர்கள்  விரும்பவதில்லை. அதனால் பல வாய்ப்புகளை நமது பெண்கள் இழந்திருக்கின்றனர். 

இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுருக்காமச் சொன்னால் பிள்ளைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதாகச் சொல்லி நாம் அவர்களுக்குப் பல தடைகளை விதித்திருக்கிறோம். ஆண்  பிள்ளைகளுக்கே  இத்தனை பிரச்சனை என்றால் பெண் பிள்ளைகளுக்கு இன்னும் எவ்வளவு கெடுபிடிகள் இருக்கும்?

ஆனால் இப்போது இந்தத் தடைகள்  எல்லாம் உடைக்கப்பட்டு விட்டன. மலாய்ப் பெண்கள், சீனப்பேண்கள் அந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றுவிட்டனர். நாமும் அவர்களைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழியில்ல.

ஆனாலும் நமது பெண்கள் பொதுவாழ்க்கையில் இறங்குவதை இன்றும் பல ஆண்கள் விரும்புவதில்லை. பெற்றோர்கள் விரும்பினாலும் கல்வி அறிவு அற்ற ஆண்கள் பலர் விரும்புவதில்லை. கல்வி கற்ற பெண்கள்,  அதுவும் குறிப்பாக,  அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்புவதில்லை. பெண்கள் அரசியலில் பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினார்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக வருவதை, குறிப்பிட்ட ஒர் சாரார், விரும்புவதில்லை.

காரணம் சொல்ல வேண்டுமானால் அவர்கள் வீட்டைச் சார்ந்த யாரையும் வெளியே போக அனுமதிப்பதில்லை. தங்களது மனைவிமார்களையோ, பெண்பிள்ளைகளையோ பொது வாழ்க்கையில் ஈடுபட அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அது அவர்களது விருப்பம் நம்மால் எதையும் செய்ய முடியாது.

ஆனால் மற்றவர்கள் வீட்டுப் பெண்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான்  நம்மால் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அப்படிப் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களை வசைபாடுவது அதைவிடக் கேவலம்.

அமைச்சராக ஒரு மலாய்ப் பெண்மணியோ அல்லது சீனப் பெண்மணியோ இருந்தால் அவர்கள் காலில் விழத் தயாராக இருக்கும் இந்த அறிவற்ற கும்பல்  இந்தியப் பெண்கள் என்றால் அவர்களின் ஆரம்பகாலத்திலேயே அவர்களை நசுக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

நாம் சொல்ல வருவதெல்லாம் நமது இந்தியப் பெண்கள் மீது புழுதிவாரித் தூற்றாதீர்கள். நமது சமுதாயப் பெண்களும் வெளி உலகிற்கு வரவேண்டும். இந்நாட்டு மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். பொது வாழ்க்கையில் அவர்களும் மின்ன வேண்டும். மலாய், சீன பெண்களைப் போல் இந்தியப் பெண்களும் அமைச்சர்களாக வரவேண்டும். நாட்டை ஆள வேண்டும்.

பெண்களை அவமானப்படுத்தாதீர்கள்.பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களைக் கண்டபடி பழித்துரைக்காதீர்கள். இன்று நாம் என்ன செய்கிறோமோ அதுவே மீண்டு நமக்கும் வரும் என்பதை மறந்து விடாதீர்கள். 

நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்!

Wednesday 5 October 2022

அறுபத்து நான்கு நமது பலமா?

 

மலேசிய நாட்டில் குறைவான எண்ணிக்கையில் தான் இந்தியர்கள்  உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் நமக்கு அரசியல் பலம் இல்லை என்கிற எண்ணம் எழுவது இயல்பு. அப்படித்தான் சராசரி மக்களாகிய நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அரசியல் ஆய்வாளர்கள் "அது அப்படியல்ல, இந்தியர்களின் பலம் அவர்களுக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்கள். ஆமாம்,  நாம் ஒன்றுபட்டால் அரசியலில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்த முடியும்  என்கிற உண்மை நமக்குத் தெரியவில்லை. யானையின் பலம் யானைக்குத் தெரியாததால் தான் அது பிச்சை எடுக்கிறது! நமது நிலைமையும் அது தான்!

ஆய்வுகளின்படி நமது நாட்டின்  222 நாடாளுமன்ற தொகுதிகளில் சுமார் 64 தொகுதிகளில் நமது பங்கு அதிகமாகவே இருக்கிறதாம்.  அப்படியென்றால் இந்த 64 தொலுதிகளில் இந்திய வாக்காளர்கள் அதிகம் என்று சொல்ல வரவில்லை.  இந்திய வாக்காளர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் நாம் யார் பக்கம் நமது ஆதரவைத் தருகிறோமோ அந்த வேட்பாளர் வெற்றி பெறும் தகுதியைப்  பெறுகிறார் என்று தான் அந்த ஆய்வு சொல்லுகிறது!

இப்படி ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வது தான் நமது புத்திசாலித்தனம். கொஞ்சம் கூட இந்தியர்களின் நலனின் மீது அக்கறையில்லாதவர்களை எல்லாம் காலங்காலமாக ஆதரித்து கடைசியில் அவர்கள் தான் கல்லா கட்டினார்களே தவிர நம்மை செல்லாக்காசாக்கி விட்டார்கள்!

ஆனால் நம்ம தலைவர்கள் ரொம்பக் கெட்டிக்காரர்கள்! 22 மாத கால ஆட்சியில் பக்காத்தான் அரசாங்கம்  இந்தியர்களுக்கு  என்ன செய்தது என்பதற்கு 'உங்களது  பட்டியலைக் காட்டுங்கள்' என்கிறார்கள்! இவர்களது 60 ஆண்டு கால ஆட்சியில் இவர்களால் எதையும் காட்ட முடியவில்லை!

ஆனால் இவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பார்த்தால் நமக்குப் பொறாமையாய் இருக்கிறது. அம்னோ கட்சி மலாய்க்காரர்களை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். சீனர்களைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்களின் பொருளாதார வளர்ச்சியே அதற்கு அடையாளம். அடுத்த பெரிய கட்சியான ம.இ.கா. இந்தியர்களுக்குச்  செய்த  சாதனை என்று எதனைச்  சொல்லலாம்? சிறையில் இந்தியர்கள் அதிகம். கஞ்சா வழக்குகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். வேலையில்லா பிரச்சனைகள் அதிகம். உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவு.  இப்படிப் பல பல குறைபாடுகள் இந்திய சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது! 

இந்த நிலையில் நாம் ம.இ.கா. வை நம்புவதில் என்ன பயன்?  இப்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக இவர்கள் தான் பதவிகளில் இருக்கின்றனர்.  இப்போதும்  ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு  எழவே இல்லை.  தமிழ்ப்பள்ளிகள்,     மெட் ரிகுலேஷன், மித்ரா   போன்ற எந்த ஒரு விடயத்திலும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் செனட்டர் பதவி, பட்டங்கள் அனைத்துக்கும் போட்டிப் போட்டுக்கொண்டு  முன்  நிற்கின்றனர்! இது மட்டும் தான் உரிமை மற்றவைகள் எல்லாம் உறி மையா?

இது நமக்கு நல்ல நேரம். நமது பலத்தைக்காட்ட வேண்டிய நேரம்.  அறுபத்து நான்கு தொகுதிகளின் வெற்றியை நம்மால் தீர்மானிக்க முடியும் என்றால் நமது பலத்தைக் காட்டுவோம்!

Tuesday 4 October 2022

குடிகார கொடூரன்

 

                                           தாயைக் காலால் மிதிக்கும் குடிகாரன்

இந்தியா, ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் நடந்த ஒரு துயரச் சம்பவம். 21-வயது மகன் தாயின் மீது தொடுத்த  கொடூரத் தாக்குதல்.

குடி எவ்வளவு கேடானது என்பது எல்லாருக்குமே தெரிந்தது தான். ஆனால் குடிக்க வேண்டாம் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்.  குடிப்பவனும் தொடர் குடிகாரனாக மாறுகிறான்.

வெங்கண்ணா என்கிற அந்த குடிகார வாலிபன் குடிக்க பணம் கொடுக்கச் சொல்லி, தாயார் இலட்சுமி (வயது 63) அம்மாளிடம் கேட்கிறான். ஏற்கனவே பணம் கேட்டும் பணம் கொடுக்காததால் அடிக்கடி அடித்து தாயைச் சித்திரவதையும்  செய்திருக்கிறான். மகன் இப்படிக் கெட்டுப் போகிறானே என்கிற ஆதங்கத்தில் பணம் கொடுக்க மறுத்து வந்திருக்கிறார். பணம் இல்லை என்று சொல்லியும்  வந்திருக்கிறார்.

ஆனால் சம்பவத்தன்று,  அரசு கொடுக்கும் நிதி உதவி தாயிடம் இருக்கும் என்பதைத்  தெரிந்து கொண்டு தான் குடிக்க அந்தப் பணத்தைக் கொடுக்கமாறு தாயை மிரட்டியிருக்கிறான் மகன்.  தாயார் வழக்கம் போலவே மறுத்திருக்கிறார். 

மகனுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை.  குடிகாரனுக்கு எந்தக் காலத்தில் பொறுமை இருந்தது? அதுவும் வயதான கிழவியால் என்ன செய்துவிட முடியும் என்கிற இளக்காரம் வேறு. திண்ணையில் படுத்திருந்த  தாயாரை  தரதரவென நடுத்தெருவுக்கு இழுத்து வந்தான். தாயாரை அவரது கழுத்திலும், வயிற்றிலும் சராமாரியாக காலில் மிதித்து கொடுமாராகத் தாக்கினான்.

அவனது தாயார் வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார். அருகே இருந்த யாரும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. எல்லாரும் வேடிக்கை தான் பார்த்தார்கள். அனைவருமே குடிகாரர்கள் என்கிற போது அவர்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள். வேறு என்ன செய்வார்கள்?

இப்போது மகன் சிறையில் விசாரணையில் இருக்கிறார். அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

நம் நாட்டிலும் இது போன்ற செய்திகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அங்கே அவன் சாராயத்தைக் குடிக்கிறான். இங்கே இவன் கஞ்சா குடிக்கிறான்.  விளைவுகள் எல்லாம் ஒன்று தான். பெயர் தான் வேறு. இங்கும் குத்துகிறான், வெட்டுகிறான், கொலை செய்கிறான். அதே விளைவுகள் தான்.

நமது சமுதாய இளைஞர்கள் எப்படி வளர்கிறார்கள் என்று பார்த்தால்  மனதிற்குக் கஷ்டமாகத்தான்  இருக்கிறது.  பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே அவர்கள் ஏதோ ஒன்று அவர்கள் கையில் கிடைத்துவிடுகிறது. போதைப் பொருள்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நாமும் குடிகாரக் கொடூரர்களை உருவாக்குகிறோம் என்றே தோன்றுகிறது!

Monday 3 October 2022

தகுதி அடிப்படை என்பது சரிவருமா?

 

கல்வித்துறையில் தகுதி அடிப்படையில் தான் உயர்கல்விக் கூடங்களில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றால் நம் நாட்டைப் பொறுத்தவரை இது சரியான முறைதானா, சரிப்பட்டு வருமா என்று பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படித்தான் இந்த மெரிடோகிரசி பற்றிப் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது.  ஆனால் எந்தப் பயனும் அளிக்கவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஆண்டில், தகுதி அடிப்படியில் பார்த்த போது, மலாய் மாணவர்களே முன்னணியில் இருந்தனர்! அப்போது நம்மால் எதுவும் பேச முடியவில்லை. 

ஆக, தகுதி அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் சரி இப்போது உள்ள கோட்ட குளறுபடி முறையில் எடுத்துக் கொண்டாலும் சரி மலாய் மாணவர்கள் தான் முன்னணியில் நிற்பர். அது உறுதி.

அதைவிட இந்த கோட்டா முறையே சரியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.  இன்று நமக்கு நிபுணத்துவ துறைகளில் இடங்கள் மறுக்கப்படுகின்றன என்பது தெரியும். இதையே பல ஆண்டுகளாக நாம் சொல்லி வருகிறோம், பேசி வருகிறோம்.

ஆனால் இந்தக் குறைபாடுகளைக் களைய நமது தலைவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது.

கல்வித்துறை என்பது மிகுந்த பரந்த கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சில வாய்ப்புகளை முற்றிலுமாக இழந்து கொண்டு வருகிறோம். குறிப்பாக மருத்துவம், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் நாம் புறக்கணிக்கப்படுகிறோம். இன்னும் கூட பல முக்கியம் வாய்ந்த துறைகள் இருக்கலாம். ஆனால் அத்துறைகள் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை.  எனக்குத் தெரிந்த,  நான் சந்தித்த மாணவர்கள் பலர்  (Human Resources) அனைவருமே மனித வளத்துறை மட்டுமே ஒதுக்கப்பாடிருந்தது! அது முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது எனக்குத்  தெரியவில்லை!  மாணவர்களில் பலர் தாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.  ஒரு சிலர் 'அதான் கிடைத்தது!' என்று மனநிறைவு அடைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் 'நான் கேட்டது கிடைக்கவில்லை! வேறு என்ன செய்ய? என்று கிடைத்ததை ஏற்றுக் கொள்கின்றனர். கையில் பணம் இல்லாத நிலை. எதையாவது ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை!

ஆக, ஏதாவது ஒரு துறையை இந்திய மாணவர்களுக்குக் கொடுத்தால் போதும் அவர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்பதாக நமது கல்வித்துறையினர் நினைக்கின்றனர்!

ஆனால் இந்திய மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற துறைகள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கின்றனர்! நமக்குத் தெரிந்ததெல்லாம்  அரசியல் தீர்வின் மூலமே இதற்கு ஒரு முடிவு  காண முடியும்.

இப்போது நாம் இந்தியர்களுக்கு, அனைத்துத் துறைகளிலும்,  ஏழு விழுக்காடு கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.  அதையே கல்வித்துறையிலும் கொண்டு வரவேண்டும். இதனைச் சட்டம் ஆக்காமல் நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது. இல்லாவிட்டால் நமது மாணவர்கள்  எல்லாக் காலத்திலும் புறக்கணிக்கப்படுவர் என்பது மட்டும் உறுதி.

பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு பகுதியினர் உயர்ந்து கொண்டே போவதும் இன்னொரு பகுதியினர் தாழ்ந்து கொண்டே போவதும் நாட்டிற்குப் பல சீர்கேடுகளைக் கொண்டுவரும். இது புதிதல்ல. நடப்பது இந்திய மாணவர்களை ஓரங்கட்டும் வேலை. ஏற்கனவே நமது தலைவர்கள் அலட்சியமாக இருந்ததால் வந்த வினை. இது தொடர்ந்தால் இன்னும் கேடுகள் வந்து சேரும்.

எந்த அடிப்படையாக இருந்தாலும் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை! கிடைக்கும்!