Saturday 30 April 2022

மகளிர் மேம்பாட்டுக்கு மட்டுமா?

 

                                            மித்ரா: இந்த ஆண்டு மகளிர் மட்டும்?

பொதுவாகவே நமக்கு ம.இ.கா. வின் மேல் ஒரு வெறுப்பு உண்டு. அவர்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள் என்கிற அபிப்பிராயம் அவர்கள் மீது நமக்குண்டு.

இதனை நாம் இப்போது தான் சொல்லுகிறோம் என்பதல்ல. அது அன்றைய தலைவர் சாமிவேலு காலத்திலேயே உருவாகிவிட்ட ஓர் அபிப்பிராயம்! ஆனால் அது இன்னும் தொடர்கிறதே என்பது தான் நமது குற்றச்சாட்டு!

ஆனாலும் இதையெல்லாம் அவர்கள் கண்டுக்கப் போவதில்லை. நல்ல காலத்திலேயே இல்லை.  தேர்தல் காலத்திலா கண்டுக்கப் போகிறார்கள்!

எது எப்படியோ சமீபத்தில் படித்த ஒரு செய்தி. இந்த ஆண்டு,  இந்தியர்கள்  வர்த்தகத்தில் உயர  உருவாக்கப்பட்ட மித்ரா,  பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போகிறதாம். நல்லது. இத்தனை ஆண்டுகள் செடிக், மித்ரா இரண்டு அமைப்புகளும் அள்ளி அள்ளிக் கொடுத்ததில் ஆண்கள் உயர்ந்து விட்டர்கள் என்பது அவர்களது புரிதலாக இருக்கலாம்.

நிதியைக் கொடுக்கிறவர்கள் குளிர்சாதனை அறைகளிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கும் நிலையில் உள்ளவன் மின்விசிறி அறையிலிலிருந்து சிந்திக்கிறான். இரண்டு பக்கமும் சிந்திக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் கொடுப்பவன் தான் வெற்றி பெறுகிறான். அவனிடம் தான் அதிகாரம் உண்டு. நாம் எல்லாகாலங்களிலும் வெறும் பூஜயம் தான். அவன் கொடுக்கப் போவதுமில்லை1  நாம் வாங்கப் போவதுமில்லை!

பெண்களுக்குக் கொடுப்பதில் ஒரு  சௌகரியம் உண்டு  என அவர்கள் நினைத்திருக்கலாம்.  காரணம் நம் பெண்கள் சிறுசிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்தால் போதும் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள்.  ஆண்கள் என்றால் அதிகமான நிதி கொடுக்க வேண்டி வரலாம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரத்தான் செய்கிறது. இந்த செடிக்காக இருந்தாலும் சரி  அல்லது மித்ராவாக இருந்தாலும் சரி , இந்த அமைப்புகளை உருவாக்க அரசாங்கம் என்னதான் நோக்கம் கொண்டிருந்தது? ம.இ.கா. தலைவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவா அல்லது இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவா?

மகளிர் முன்னேற்றத்திற்கென  அரசாங்கம் பல்வேறு அமைப்புகளை வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்கு அந்த வழிகாட்டல் இருந்தாலே போதும் மித்ராவிலிருந்து எந்த வழிகாட்டுதல்களும் தேவை இல்லை.  பாவம்! வலுக்கட்டாயமாக அவர்களை இதற்குள் இழுத்து வேடிக்கை காட்டுகிறார்கள்!

என்ன தான் நடக்கிறது பார்ப்போம்!

Friday 29 April 2022

சீன சமூகத்தைப் பாராட்டுவோம்!

 

           Compared to Malays and Indians, Chinese have the best Covid-19 health practices.  

யார் என்ன தான் சொல்லுங்கள்.  ஒரு சில விஷயங்களில்  சீனர்களின் கட்டுக்கோப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது!

கோவிட்-19 தொற்று சம்பந்தமாக அரசாங்கம் சொன்ன கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாக அதனை ஏற்றுகொண்டு செயல்படுத்தியவர்கள் என்றால் அது சீனர்கள் தான்.

சுகாதார அமைச்சின் ஆய்வுகள்  அதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. ஏன் இந்த ஆய்வுகள் வரும் முன்னரே நாம் கண்ணாரப் பார்த்திருக்கிறோம். பொது இடங்களில் நாம் பார்த்தால் அவர்கள் மட்டும் தான் எப்போதும் அரசாங்கம் சொல்லுகின்ற அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தனர். முகக்கவசம் அணிவது, தூர இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களில் அவர்களிடம் எந்த சமரசமும் இல்லை.  பெரும்பாலும் அதனை அவர்கள் மிகவும் கடுமையாகவே பின்பற்றினர். எந்த நிலையிலும் அவர்கள் அலட்சியம் காட்டியதில்லை!

இவர்களை அடுத்து இந்தியர்களும் பெரும்பாலும் கட்டுப்பாடுகளோடு தான் நடந்து கொண்டனர். தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் கொஞ்ச அலட்சியம் உண்டு. மற்றபடி கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தனர்.

மலாய்க்காரர் பிரச்சனையே வேறு. அவர்கள் கோவிட்-19 தொற்றையே வெறுத்தனர்! அந்த வெறுப்பை வெளியேயும் காட்டினர். மற்றவர்கள் முன் இருமிக்கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்தினர்! அவர்கள் முன் நின்று பேசுவதே பயப்பட வேண்டியதாயிற்று! மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டு எதிரே இருப்பவர்களை பயமுறுத்தினர். இவர்களில் பெரும்பாலானோர்  வயதானவர்கள். ஏதோ ஒரு விரக்தி. நடுத்தர வயதினர், படித்தவர்கள் - இவர்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டனர். பெண்கள் அனைவருமே கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். இளைஞர்களும் அலட்சியப்படுத்தவில்லை.

இதெல்லாம் நம் கண்முன்னே நடந்த நிகழ்வுகள் தான். நம்மைப் பொறுத்தவரை அரசாங்கம் சொல்வதைக் கேளுங்கள் என்பது தான். அலட்சியப்படுத்தாதீர்கள். இப்போதும் கூட நாம் கட்டுப்பாட்டோடு தான் இருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுவிட்டனர். அதற்காக நாம் இஷ்டத்திற்குச் சுற்றலாம் என்பதல்ல அரசாங்கத்தின் நோக்கம். இன்னும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்பது தான் அவர்களின் அறிவுரை.

கோபிட்-19 எப்போது நாட்டைவிட்டு அகலும் அல்லது உலகைவிட்டு அகலும் என்பதையெல்லாம் யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த வியாதியே சீனர்களின் ஏற்றுமதி என்று பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இப்போது சீனாவே ஆடிப்போயிருக்கிறது!  சீனாவின் ஷங்காய் நகரில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட்-19 தொற்று பரவி வருகிறது. அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். காரணம் சட்டத்தை மீறினால் அவர்கள் சுட்டுத்தள்ளவும் தயார்! நம்மால் இப்படியெல்லாம் செய்ய முடியாது!

மலேசிய சீனர்கள் எப்படி கட்டுப்பாடுகளோடு நடந்து கொள்கிறார்களோ  அப்படியே நாமும் செய்தால் போதும்! பாதிப்புகள் குறையும்! நாமும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

எல்லா உரிமங்களும் உண்டு!

            பாட்டி ராதாமணிக்கு எல்லா வகையான உரிமங்களும் உண்டு!

மண்ணில் பிறந்துவிட்டால் ஏதாவது அடையாளத்தை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று ஒருசிலர் நினைப்பர். ஒருசிலருக்கு அது இயல்பாகவே நடந்துவிடும்.

ஒரு காலத்தில் சைக்கள் ஓட்டும் பெண்களைப் பார்த்தாலே  அதிசயமாக இருந்தது. அதன் பின்னர் மோட்டார் சைக்கள் ஓட்டுவது அதிசயமாக இருந்தது. அப்புறம் கார் ஓட்டினார்கள். இப்போது பேரூந்தும் ஓட்டுகிறார்கள். அதற்கு மேல் நான் பார்த்ததில்லை! 

ஆனால் இந்தியா, கேரளாவைச் சேர்ந்த பாட்டி ராதாமணி  எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டார்.   இப்போது அவருக்கு வயது பெரிசா ஒன்றுமில்லை. 71. வயது தான்!  ஆனால் பாட்டி  சாலைகளில் என்னன்ன ஓடுகிறதோ அனைத்தையும் ஓட்டுகிறார்! ஓட்டும் எல்லா வாகனங்களுக்கும் உரிமம் வைத்திருக்கிறார்!  பதினோரு வகையான உரிமங்கள் அவரிடம் உண்டு!

கார், பஸ், லாரி,  Tractor, Excavator, Forklift, Crane, Road Roller, Container Trailer Truck  - வேறு தெரியவில்லை! மன்னிக்கவும்!

பாட்டி முதன் முதலாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது  அவருக்கு வயது முப்பது. அப்போது அவரது கணவர் கார் ஓட்டும் பயிற்சி பள்ளி நடத்திக் கொண்டு வந்தார். அப்போது கணவரின் வற்புறுத்தலால் கார் ஓட்டக் கற்றுக் கொண்டார். அதன் பிறகு வரிசையாக என்னன்ன வாகனங்கள் உள்ளனவோ அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிறந்துவிட்டது!

துரதிர்ஷ்டவசமாக அவரது கணவர் சாலை விபத்து  ஒன்றில் அகால மரணமடைந்தார். அவரது மகன்கள் அவருடைய பயிற்சி பள்ளியைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். அப்போது அவரது பிள்ளைகளுக்கு உதவியாக இருந்தார். பின்னர் பயிற்சி பெற வரும் மாணவர்களுக்காக அவர் அனைத்து வாகனங்களையும் கற்றுக்கொள்ளும் கட்டாயம்  அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது மாணவர்களுக்கு அனைத்துவகை வாகனங்களையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருக்கிறார்!

இப்போது அவர்களது பயிற்சி பள்ளி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பாட்டியும், அவரது இரண்டு மகன்களும்,  மருமகளும், பேரனுடனும் சேர்ந்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பதினோரு வகையான, வாகன உரிமங்கள் வைத்திருக்கும் பெண்மணி இந்தியாவில் இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இதனூடே இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இப்போது அவர் பாலிடெக்னிக் ஒன்றில் மெக்கனிக்கல் எஞ்சினியரிங் டிப்ளோமா படிப்பையும்  மேற்கொண்டு வருகிறாராம்!

ஒன்று புரிகிறது.மனிதன் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதிலே ஆணோ, பெண்ணோ வேறுபாடில்லை!

Thursday 28 April 2022

வேதனையிலும் வேதனை!

                                               
இரு தினங்களுக்கு முன்னர், கஞ்சா கடத்தலுக்காக, நாகேந்திரன்  தர்மலிங்கம் சிங்கப்பூரில் தூக்கலிடப்பட்டார். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எல்லா முயற்சிகளும் வீண் போயின. நமது மாமன்னர், நமது பிரதமர் என்று அனைத்துத் தரப்பினரும் செய்த முயற்சிகள் எதுவும் பலனிக்கவில்லை.

நாம் யாரையும் குறை சொல்லுவதற்கில்லை. எல்லா நாடுகளிலும் சட்டங்கள் உள்ளன.  அங்கு நாம் போகும்போது அந்த நாட்டு சட்டங்களை மீற முடியாது. சிங்கப்பூருக்குள் கஞ்சா கடத்தினால் மரணத் தண்டனை நிச்சயம். மலேசியாவுக்குள் கடத்தினாலும் அதே நிலை தான். இந்த இரு நாடுகளில் உள்ளவர்களுக்கு இது தெரிந்த விஷயம் தான். எந்தக் காரணங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆனால் அதிர்ச்சி தரும் விஷயம் வேறொன்றும் உண்டு. சிங்கப்பூரின் மனித உரிமை வழக்கறிஞர் திரு எம் ரவி அவர்கள் வருத்தம் தரும் செய்தியையும் வெளியிட்டார். சிங்கப்பூரில் கஞ்சா கடத்தலுக்காக தூக்குத்தண்டனையை எதிர்நோக்கும் வெளிநாட்டவர்களில் மலேசிய இந்தியர்களே அதிகம் என்னும் செய்தி நம்மை அதிர்ச்சிக்கு   உள்ளாக்குகிறது. இவர்களில் பெரும்பாலும் இளைய தலைமுறையினராகவே   இருக்க வேண்டும். வயதானவர்களிடம் கஞ்சா கடத்தும் "போஸ்ட்மேன்" வேலையைக் கொடுப்பது குறைவாகவே இருக்கும்.  ஆனாலும் எதனையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

திரு ரவி அதனை விளக்கும் போது ஏழ்மை நிலையில் உள்ளவர்களே இதில் ஈடுபடுகிறார்கள் என்கிற செய்தியையும் சொன்னார். கொரோனா காலத்திற்குப் பின்னர் என்றால் ஏழ்மையைச் சுட்டிக்காட்டலாம்.  மிக மோசமான ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அது நமது இனத்தின் மேல் நமக்கு உள்ள நம்பிக்கை. அவர்களை நாம் அப்படிப் பார்த்ததில்லை. ஆனால் களத்தில் உள்ளவர் ரவி அவரகள். அவர் சொல்லுவதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

நம் இனம் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே என்று நினைக்கும் போது மனம் தடுமாறுகிறது.  யாரைக் குற்றம் சொல்வது? வேலை வாய்ப்புக்கள் அவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம். அவர்கள் விரும்புகிற வேலை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

எத்தனை காரணங்களை நாம் சொன்னாலும்  கடைசியாக வளர்ப்புமுறை சரியில்லை என்று தான் போய் முடியும். அப்பா அம்மா சரியாக வளர்க்கவில்லை என்கிற பழி அவர்கள் மீது வந்து சேரும். 

இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்வது  என்பதை நமது தலைவர்கள் சிந்திக்க வேண்டும். நம்மிடையே ஏகப்பட்ட இயக்கங்கள், மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள் இருக்கின்றன. எல்லாமே இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இன்னும் அதிக முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

வேதனையிலும் வேதனை தான். என்ன செய்வது? நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

Wednesday 27 April 2022

முடிவுக்கு எப்போது வரும்?

 

இலங்கையை இப்போது துளைத்து எடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்கள் எப்போது ஒரு முடிவுக்கு வரும்?

இப்போது தான் ஆரம்பம். அதற்குள் முடிவு பற்றி சொல்ல இயலாது! ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் கூடிக்கொண்டே போகின்றன.. அது குறையும் என்கிற அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் ராஜபக்சே என்ன சொல்ல வருகிறார்/   கோரோனா தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றார். அதனால் தான் சுற்றுப்பயணிகளைக் கவர முடியவில்லை என்றார். அதனால் தேயிலை ஏற்றுமதி சாத்தியமில்லை என்கிற நிலை. ஆடை ஏற்றுமதி சரிந்து போனது என்பது இன்னொரு காரணம். 

ஆனால் இவர்கள் சொல்லுகின்ற காரணங்கள்  இலங்கைக்கு மட்டும் அல்ல. பல நாடுகளிலும் இதே  நிலை தான்.  இந்த நிலையிலும்  அனைத்து  நாடுகளும் ஏதோ கடவுள் புண்ணியத்தில் தப்பித்துக் கொண்டன. நூறு விழுக்காடு நிறைவு இல்லையென்றாலும்  ஐம்பது விழுக்காடு  பசி பட்டினி இல்லாமல் தப்பித்துக் கொண்டனர். அதில் நமது நாடும் ஒன்று.

இப்போது எதுவும் மக்களிடம் எடுபடவில்லை என்பதால் மீண்டும் விடுதலைப்புலிகள், தமிழர்கள் என்று பழைய புராணத்தைப் பேச  ஆரம்பித்துவிட்டார் ராஜபக்சே! புலிகளால் தான் இந்த நிலைமை என்கிறார். வெளிநாட்டுத் தமிழர்களால் தான் இந்த நிலைமை என்று பழி போடுகிறார்!

ஆனால் மக்கள் அவரைப் புரிந்து கொண்டனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த பதிமூன்று ஆண்டுகள் நாட்டின் நலனுக்கு நீங்கள் ஆற்றிய பங்கு என்ன என்று அவரைத் துளைத்து எடுக்க ஆரம்பித்துவிட்டனர்!

ஆனால் ராஜபக்சே,  தான் பதவியிலிருந்து விலகப் போவதில்லை  என்று பதவியை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.  நமக்குத் தெரிந்த காரணம்: பதவி விலகினால் அடுத்த கணம் அவர் கைதுசெய்யப்பட்டு, குடும்பத்தோடு சிறையில் தள்ளப்படுவார். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். நாட்டைவிட்டுத் தப்பிக்கலாம் என்றால் அவர் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தில் அவரை 'உண்டு இல்லை!' என்று ஆக்கி விடுவார்கள்! அதனால் அவர் என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கிடக்கிறார்!

அவருக்குள்ள பயத்தினால் தான் பதவியைவிட்டு விலக மறுக்கிறார்!நாட்டைவிட்டு ஓடவும் வழியில்லாத ஒரு நிலையில் "நான் விலகமாட்டேன்! நான் விலகமாட்டேன்!" என்று கதறிக் கொண்டிருக்கிறார்!

ஏமாற்று அரசியல் செய்பவர்களுக்கு இவர் ஒரு நல்ல பாடம்!

Tuesday 26 April 2022

சம்பளத்தில் வேறுபாடு என்பது புதிதா?

 

 மற்ற இனப்பெண்களைவிட சீனப்பெண்களே அதிக சம்பளம் வாங்குகின்றனர்!
இப்படி ஒரு பிரச்சனை சமீபத்தில் எழுப்பபட்டிருக்கின்றது. இது என்னவோ நமக்குத் தெரியாதது போலவும் இப்போது தான் புதிதாக முகிழ்த்து எழுந்தது போலவும் பேசப்படுவது தான் நமக்கு ஆச்சரியம்.

மலேசியாவில் சீன ஆண்களாக இருந்தாலும் சரி சீனப் பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் மலாய்க்காரர்களைவிட இந்தியர்களைவிட அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பது நாம் அறிந்தது தான். இவைகள் அனைத்தும் சீன தனியார் நிறுவனங்களில் தான்.

பெரும் பெரும் நிறுவனங்களில், அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களில், இந்த வேற்றுமை என்பது குறைவு தான். ஆனால் சீனர்கள் சீனர்களாகத்தான் இருப்பார்கள். பொருள்கள் வாங்கும் போதும் கூட சீனர்களுக்கு ஒரு விலை மற்ற இனத்தவர்களுக்கு ஒரு விலையில் தான் அவர்கள் தங்கள் பொருள்களை  விற்பார்கள்! அது ஒன்றும் சிதம்பர இரகசியம் அல்ல!

இப்போது ஒரு மலாய்ப் பெண்மணி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனக்கு 1000 வெள்ளி சம்பளமும் அதே வேலை செய்யும் சீனப்பெண்ணுக்கு 1400 வெள்ளி சம்பளமும் நிர்வாகம் கொடுப்பதாக புகார் கூறியிருக்கிறார்.

இந்தியப் பெண்கள் இது போன்ற பிரச்சனைகளில் குரல் எழுப்புவதில்லை. காரணம் அப்படி எழுப்பினால் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்! இப்படித்தான் இது எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டு வருகிறது! மலாய்ப் பெண்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினால் அவர்களுக்கு உதவ அம்னோ இளைஞர் அணி பொங்கி எழுவார்கள்! அதனாலேயே மலாய்ப் பெண்கள் விஷயத்தில் நிறுவனங்கள் அடக்கியே வாசிப்பார்கள்! இந்தியப் பெண்கள் விஷயத்தில் கேட்க ஆளில்லாத அனாதைகள் போன்றவர்கள். அதனால் கிடைப்பது  போதும் என்று ஒரு பக்கம் முனகிக்கொண்டே காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள்.

இவைகள் எல்லாம் எல்லாக் காலங்களிலும் நடக்கும் சம்பவங்கள் தான். அரசாங்கத்தில் ஆள்பல அமைச்சு இருக்கிறது. அவர்களின் பார்வையின் கீழ் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. அவர்களும் மலாய்ப் பெண்கள் விஷயத்தில்  தான் அக்கறை காட்டுவார்களே தவிர மற்றபடி இந்தியப்  பெண்களின் மேல் அவர்களது தெய்வீகப்பார்வை விழுவதில்லை!

கிடைத்தது போதும் என்கிற மனப்பக்குவம் எப்போதுமே நமக்குண்டு. காரணம் எதிர்த்துப் பேசினால் இருப்பதும் போய்விடும் என்கிற அச்சத்திலேயே நாம் வாழ்பவர்கள். இன்னொன்று  வீட்டிற்கு அருகிலேயே வேலை வேண்டும் என்கிற கொள்கையும் நமக்குண்டு. தூரமாகப் போய் வேலை செய்தால்  பிள்ளைகள் கெட்டுப் போவார்கள்  என்கிற பயம்!

ஆனால் இதற்கெல்லாம் முடிவு காண்பது என்பது அரசாங்கம் தான். வேலைகள் எல்லாம் ஒன்று தான். அப்புறம்  சம்பளத்தில் ஏன் வேறுபாடு? அப்படியென்றால் ஆள்பல அமைச்சில் உள்ள அதிகாரிகள் தங்களது கடமைகளை அரைகுறையாக செய்கிறார்கள் என்பது தான் பொருள்

இந்த விஷயத்தில் ஆள்பல அமைச்சின் பொறுப்பே அதிகம்! 

Monday 25 April 2022

இது என்ன நியாயம்?

 

இந்தோனேசிய பணிப்பெணகளைப் ப்ற்றி பேசும் போது நமக்கு ஏனோ மனம் வலிக்கிறது. 

அவர்களில் பெரும்பாலும் படிக்காதவர்கள். அவர்கள் பிழைக்க வழியில்லாமல் வேலை தேடி நமது நாட்டிற்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது.

இவர்களின் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்களே இவர்கள் என்ன பெரிய கோடிஸ்வரர்களா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  இவர்களில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் தான். கணவன்-மனைவி இருவரும் வேலை செய்பவர்கள். இவர்களுக்குத்தான் இந்தப் பணிப்பெண்கள் தேவைப்படுகின்றனர்.

இவர்கள் இல்லாமல் இன்னொரு தரப்பும் உண்டு.  இவர்கள் பணக்காரர்கள். பரம்பரை பணக்காரர்கள் அல்ல. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் தீடீர் பணக்காரர் ஆனவர்கள். அதாவது அரசியல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசியல்வாதியின் குடும்பத்தில் நடந்தது இந்த நிகழ்வு. அந்த அரசியல்வாதியின் மகன் இந்தோனேசிய பணிபெண்ணின் மீது இஸ்த்ரி பெட்டியை எடுத்து சூட்டோடு அவள் முதுகின் மீது தேய்த்து விட்டானாம். பின்னர் இந்த செய்தி காணாமல் போனது! 

இன்றைய நிலவரப்படி, கடந்த 16 மாதங்களில், இந்தோனேசிய தூதரகம் சுமார் 400  பணிப்பெண்களிடமிருந்து பலவேறு குற்றச்சாட்டுகளைப் பெற்றிருக்கிறது. அவர்களுக்கு முறையான சம்பளம் கொடுப்பதில்லை. அவர்கள் உடல் ரீதியான கொடுமைகளை அனுபவித்திருக்கின்றனர். இந்த  400 பணிப்பெண்களும்  இந்தோனேசிய தூதரகத்தில் அடைக்கலம் நாடி  வந்தவர்கள். இவர்கள் அனைவரும் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானவர்கள்.

ஒரு வகையில் பார்க்கும் போது மலேசியர்கள் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்த தகுதியில்லாதவர்கள்  என்றே தோன்றுகிறது. இந்தப் பெண்களுக்கு வேலை நேரம் என்பதெல்லாம் கிடையாது. ஒரு சில பெண்கள் 24 மணி நேரமும் வேலை தான். சில மணி நேரங்கள் கூட தூங்க முடியாத நிலை.

ஒன்றையும் சொல்லியாக வேண்டும். ஒரு சில நல்ல முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். . எனக்குத் தெரிந்த குடும்பத்தில் அவர்களிடம் வேலை செய்யும் இந்தோனேசிய  பணிப்பெண்  பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார், வீட்டுவேலைகளையும் செய்வார். குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவார். ஜாலியாக இருப்பார். ஏதோ குடும்பத்தில் ஒருவர் போல் தான் நடத்தப்படுகிறார். இப்படியும் சிலர் உண்டு.

பெரும்பாலும் நல்லவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் செய்கின்ற செயல்களால் நாட்டின் பெயரே கெட்டுப் போகிறது.

ஒரு சிலரின் நியாயமற்ற செயல்களால் இன்று மலேசியா,  இந்தோனேசிய பணிப்பெண்கள் விவாகாரத்தில் தலைகுனிந்து நிற்கிறது!

Sunday 24 April 2022

ஏன் நடவடிக்கை இல்லை?

 

                                        எம் ஏ சி சி ஆணையர் அசாம் பாக்கி

எதிர்க்கட்சித் தலைவர் லிம் குவான் எங் சரியான நேரத்தில் சரியான கேள்வியை  எழுப்பியுள்ளார்.

மேல் முறையீட்டு நீதிபதி நஸ்லாம் முகமட் கஸாலி மீது சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.  அவரது கணக்கில் ஒரு மில்லியன் ரிங்கிட் வரவு வைக்கப்பட்டிருந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அது பற்றி அவர் போலிஸ் புகாரும் செய்திருந்தார்.

இப்போது இலஞ்ச ஒழிப்பு ஆணையம் உடனடியாக, நீதிபதியை ஒரு குற்றவாளியாக எடுத்துக்கொண்டு அது பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதாவது யாரும் எதிர்பாராத வகையில் அதிவேகமாக  ஆணையம் இயங்க ஆரம்பித்துவிட்டது!

அது சரி என்று எடுத்துக் கொண்டாலும் அதற்கு முன்னரே இலஞ்ச ஒழிப்பு ஆணையர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.  கோடிக்கணக்கில் பங்குகளை கொள்முதல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. இது பற்றி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர்.  ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை! அது ஏன் என்பதற்கான எந்த விளக்கமும் இதுவரை  கொடுக்கப்படவில்லை!

நீதிபதி நஸ்லான் முகமட் கஸாலி யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இவர் தான்,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் பிரதமர் நஜிப் குற்றவாளி என SRC International Sdn.Bhd.  வழக்கில் தீர்ப்பளித்தவர். அதன் பின்னர் தான் நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

இப்போது அதற்கும் இதற்கும் கொஞ்சம் முடிச்சுப்போட்டால் கொஞ்சம் விளங்கும். நஜிப்பை மாட்டிவிட்டவர் என்பதனால் நீதிபதி மஸ்லான் மீது உடனடியாக விசாரணையை ஆரம்பித்துவிட்டனர். இலஞ்ச ஒழிப்பு ஆணையர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரது வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். அவர் மேல் மட்டத்தினருக்கு வேண்டியவர் என்பதனால் நடவடிக்கை இல்லை. நீதிபதி வேண்டாதவர் பட்டியலில் இருப்பதால் உடனடி நடவடிக்கை.

இங்கு யார் குற்றவாளி என்பது பற்றி நாம் விவாதிக்கவில்லை. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சி என்பது ஏறக்குறைய அம்னோவின் ஆட்சி தான். இன்று அது 'ஏறக்குறைய'  என்று சொல்லுகிறோம். நாளை,  தேர்தலுக்குப் பின்னர்,  நாடு அவர்களது கட்டுப்பாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? நஜிப் நிச்சயமாக சிறைக்குப் போக வாய்ப்பில்லை! ஆனால் நீதிபதி நஸ்லான் போக வாய்ப்புண்டு! இது தான் வித்தியாசம்!

வல்லவன் வகுத்ததே சட்டம்!  அரசியலில் ஆளுபவனே ஆசான்! இன்று  மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த பலர் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே சிறைக்கு உள்ளே கம்பி எண்ண வேண்டியவர்கள் எல்லாம் வெளியே சீமானாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!

நீதி நிலைநாட்டப்பட நல்லவர்களையே அரசியலுக்குக் கொண்டு வருவோம்! அப்போது தான் நீதி கிடைக்கும்! வாழ்க மலேசியா!

Saturday 23 April 2022

கடைசி நிமிட முயற்சி

 

                          நாகேந்திரனின் தாயாரின் கடைசி முயற்சி

நாகேந்திரனின் தாயார் தனது மகனுக்காக செய்த கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்ததாக செய்தியில் கூறுகின்றன.

நாளை (27.4.2022) காலை அவர் தூக்கிலிடப்படுவார் என்று கூறப்படுகின்றது.

நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்பிரமணியம் கடைசி முயற்சியாக அவர் செயத மேல்முறையீட்டு  நீதிமன்ற நீதிபதிகள்  தள்ளுபடி செய்தனர்.  

இனி தனது மகனின் மரணதண்டனையை நிறுத்த  அவருக்குச் சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை என்பதாகச் சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் பிரிட்டீஷ் கோடிஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் நாகேந்திரனின் மரணதண்டனையை நிறுத்தும்படி சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். அந்த அறிவுத்திறன் குறைபாடு உள்ள இளைஞனை மன்னித்துவிடும்படி சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரிச்சர்ட் பிரான்சன் எந்த நாடும் மரணதண்டனை கொடுக்கக் கூடாது என்று நீண்டகாலமாகப் போராடி வருபவர்.

ஆனாலும் சிங்கப்பூர் அரசாங்கம் எதனையும் காதுக்குள் போட்டுக் கொள்ளும் என்று தெரியவில்லை. அவர்கள் மரண தண்டனை உறுதி என்பதாகவே பேசி வருகின்றனர். அதிலேயே உறுதியாக நிற்கின்றனர்.

சிங்கப்பூர் தனது கொள்கையை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரு நாடு என்பதை உலகறியும். சிங்கப்பூருக்கு வருபவர்கள் அந்த நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் கூட அவர் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் செய்தது தவறு தான் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம். இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் குறைவான அறிவுத்திறன் உள்ளவர் என்பதாக சிங்கப்பூர் மருத்துவர்களே உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அதை கொஞ்சம் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆயுள் தண்டனையோடு இதனை முடித்திருக்கலாம்.

ஆனால் யார் சொல்லியும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு வழிகளும் இல்லை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன.

நாகேந்திரனின் குடும்பத்தார் அவரைச் சந்திக்க இன்று (26.4.2022) இரண்டு மணி நேரம் அவகாசம் நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

இன்னும் சிலமணி நேரங்களில் ஏதாவது புதுமைகள் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இசைமேதை இளையராஜா

 


இசைமேதை இளையராஜாவைப் பற்றியான விவாதங்கள் இப்போது தமிழ்நாட்டில்  காரசாரமாக நடந்து கொண்டிருக்கின்றன!

இளையராஜா  தமிழர்களால் போற்றப்படும் ஒரு மாமேதை. அதில் யாருக்கும் சந்தேகமில்லை.

என்ன ஆயிற்று? அவரிடம் ஒரு புத்தகத்திற்கு  முன்னுரை   எழுத  கொடுக்கப்பட்டது. அது தூண்டில் என அவர் அறியவில்லை. புத்தகத்தின் தலைப்பு:  அம்பேத்காரும் மோடியும். இந்தப் புத்தகம் "அம்பேத்கார் சொன்னார் மோடி செய்து காட்டினார்" என்பது போன்ற ஒரு ஒப்பீட்டுப் புத்தகம்.

இளையராஜா  "ஆமாம்! அம்பேத்கார் சொன்னதை மோடி செய்து காட்டியிருப்பது பெரிய சாதனையே!" என்று அந்த முன்னுரையில் இளையராஜா எழுதியிருக்கிறார்.

இது தான் இப்போதுள்ள பிரச்சனை. இளையராஜா எழுதியது சரியோ தவறோ அது அவரது கருத்து.   கருத்துச் சொல்ல அவருக்கும் உரிமை உண்டு.  அவரது கருத்தில் நமக்கு  உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனை விமர்சனம் செய்யலாம். அவரது கருத்தை வெட்டி ஒட்டி விமர்சனங்களை வைக்கலாம்.

ஆனால் நடந்ததோ வேறு. அதனை ஆளுங்கட்சியினரும் திராவிடர் கழகமும்  மடை மாற்றும் செய்து அதனை தமிழர் மீதான தாக்குதல்களாக மாற்றிவிட்டனர்! 

விமர்சனங்களை வையுங்கள். கருத்துப் பரிமாற்றம் செய்யுங்கள். அதனை அனைவரும் வரவேற்கிறோம்.  அது அனைவரின் உரிமையும்  கூட. 

ஆனால் இங்குப் பேசப்பட்டதோ இளையராஜாவின் பிறப்பைப் பற்றியும் அவர் சார்ந்த சமூகத்தையும் பற்றியும் இழிவாகப் பேசியதுதான்  இப்போது பிரச்சனை ஆனது. அவரிடம் பல குறைபாடுகள் இருக்கலாம். இருந்தால் என்ன? மேதைகள் பலர் வழுக்கி விழத்தான்  செய்கிறார்கள்.  அவர்கள் உலகமே வேறு. ஊரோடு அவர்களால் ஒத்துப்போக முடியாது!

விஞ்ஞானி ஒருவர் ஏதோ பயணத்தின் போது அவரின் பெயர் என்ன என்று கேட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லையாம்! பெயரை மறந்து போனாராம்! அப்படித்தான் இளையராஜாவும். அவர் ஓர் இசை மாமேதை. அவருக்கு அரசியல் தெரியாது. இசை மாமேதையிடம் அரசியலைக் கேட்டால் அவர் என்ன செய்வார்? அவருக்குத் தெரிந்ததை அவர் எழுதினார்..  இதற்கு ஏன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவரிடம் சண்டைக்குப் போகிறார்கள்?

சண்டைக்குப் போனாலும் பரவாயில்லை. ஏன் அவரது ஜாதி, மதம் எல்லாம் கூடே வருகிறது? அவரது ஜாதி எதுவாக இருந்தாலும் அவர் தமிழர். அவரது ஜாதியைச் சொல்லிக் கேவலப்படுத்தினால் அது தமிழர்களைக் கேவலப்படுத்துவதற்குச் சமம். எங்களைப் பொருத்தவரை தமிழர்களிடம் ஜாதி இல்லை. ஆனால் இப்படி அடிக்கடி சொல்லிச்சொல்லி இந்த திராவிடக் கட்சிகள் ஜாதியை வைத்தே வயிறு வளர்க்கின்றன என்பது தான் உண்மை.

ஓர் இசைமேதையை இப்படிக் கேவலப்படுத்துவதன் மூலம் உங்கள் திராவிடப் புத்தியைக் காட்டிவிட்டீர்கள். தமிழர்கள் என்றுமே உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

வாழ்க மாமேதை இளையராஜா! வாழ்க தமிழினம்!

Friday 22 April 2022

விபத்துகளைத் தவிர்ப்பீர்!

 

இது ரம்லான் மாதம். இன்னும் ஒரு வாரத்தில் பெருநாள் காலம். ஊர் திரும்புபவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு தான் ஊர் செல்ல வேண்டும்.

வெளியூர்களிலிருந்து ஊர் செல்லுவோர் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆண்டுக்கு ஒரு முறை ஊர் செல்லுகிறார்கள். அவர்களுக்கு இரயில், பஸ், விமானம் என்று இப்படி பல வகையான போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சபா, சரவாக் போகிறவர்கள் விமானத்தைத் தான் பயன்படுத்த வேண்டும். விமான நிறுவனங்கள் டிக்கெட் விலைகளையும் படுபயங்கரமாக ஏற்றிவிட்டார்கள். அவர்களின் போக்கு வரத்துக்கு வேறு வழியில்லை.

நாம் இங்கு நினைத்துப் பார்ப்பது கார் விபத்துகளைத்தான். கார், மோட்டார் சைக்கள் விபத்துகள் தவிர்க்கமுடியாது என்று சொல்லுவதற்கில்லை. பெருநாள் காலங்களில் ஊருக்குப் போவதில் அனைவருக்கும் ஆசையுண்டு. காரணம் பழைய நண்பர்களைச் சந்திப்பது, பெரியவர்களுடன் உரையாடுவது - இவைகள் எல்லாம் ஆண்டுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். அதனை நழுவவிட யாருக்கும் மனம் வருவதில்லை.

உண்மை தான். ஆனால் விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் சில வழிமுறைகளைக் கண்டுபிடித்தாக வேண்டும்.  ஒரு சில ஒரு சிலருக்குச் சரியாக இருக்கும்.  சான்றுக்கு ஆசிரியர்களுக்குப் பெரும்பாலும் ஒரு வார விடுமுறை இருக்கும். பெருநாளின் முதல் நாள் அடித்துப் பிடித்துப் போவதவிட அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ ஊருக்குப் போகும் போது சாலைகள் வெறிச்சோடி கிடக்கும்! நமக்குப் பயணமும் சாதகமாக இருக்கும். திரும்ப வரும்போது ஒரு நாளோ இரண்டு நாளோ கழித்து வீடு திரும்பலாம். பயணம் சுகமாக அமையும்.

பிரச்சனையெல்லாம் அனைவரும் ஒரே நாளில் போவதும் பின்னர் அனைவரும் ஒரே நாளில் திரும்புவதும் தான் இப்போதுள்ள பிரச்சனை. ஹரிராயாவுக்கு மட்டும் அல்ல இந்தப் பிரச்சனை. சீனப்புத்தாண்டு, தீபாவளி போன்ற பெருநாட் காலங்களிலும் இதே பிரச்சனை உண்டு. 

முன்பெல்லாம் அவரவர் பெருநாள் வரும்போது மட்டும் அவரவர்கள்  ஊருக்குத் திரும்புவார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்தப் பெருநாளாக இருந்தாலும் சரி "போவோம் ஊருக்கு!" என்கிற நிலைமைக்கு அனைவரும் வந்துவிட்டனர்!  அதுவும் இடையே சனி, ஞாயிறு வந்துவிட்டால்  போதும் அதுவே ஏதோ ஒரு பெருநாள் காலமாக மாறிவிடும்!

பெரும்பாலும் நாம் உழைக்கும் வர்க்கத்தினர். விடுமுறை வந்தால் அனைத்தையும் மறந்து ஊருக்குப் போய் வருவது  இன்று தேவையான ஒன்றாகி விட்டது!  அவசியம் ஓய்வு தேவை என்கிற நிலைமைக்கு வந்து விட்டோம்.

எதுவாக இருந்தாலும் நாம் அவசரகதியில் எதையும் செய்யக் கூடாது. நிதானித்து நமது காரியங்களைச் செய்வோம்.

பெருநாள் காலங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். துயரத்தைக் கொடுக்கக் கூடாது என்பதே நமது நோக்கம்.

முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்போம்! இதுவே நமது பெருநாள் செய்தி!

Thursday 21 April 2022

நல்ல யோசனையே!

        தடுப்புக்காவல் மையங்களிலிருந்து தப்பிக்கும் ரோஹிங்ய கைதிகள்

முன்னாள் பிரதமர் நஜிப் நல்லதொரு கருத்தைக் கூறியிருக்கிறார். அவர் காலத்தில் இந்த ரோஹிங்ய அகதிகளப் பற்றி பெரிதாக  அவர் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் இப்போதாவது அவருக்குக் கொஞ்சமாவது  வலி எடுத்திருக்கிறதே அது பற்றி பெருமைப்படலாம்.

இந்த மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது பற்றி நமக்கு ஆராய்ச்சி தேவையில்லை.  அவர்களின் தாய் நாடான மியன்மார் அவர்கள் தேவையில்லாதவர்கள்  என்று கூறி அவர்களை ஒதுக்கிவிட்டது.

அவர்கள் எப்படியோ தப்பித்தவறி நமது நாட்டிற்குள் புகுந்துவிட்டார்கள். இப்போது எந்த நாடும் அவர்களைப் பங்கு போடத்  தயாராகயில்லை. இந்த நிலையில் அவர்களை எத்தனை ஆண்டுகள் தான் ஓர் இடத்தில் அடைத்து வைத்து சோறு போட்டுக் கொண்டிருக்க முடியும்?  ஐக்கிய நாடுகள் சபை உதவுகிறது என்றாலும் இந்த அகதிகள் வேலை செய்யும் ஆற்றல் உள்ளவர்கள். சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பதைவிட இந்த அகதிகளை நமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதைத்தான் நஜிப் கூறியிருக்கிறார்.  அவர்கள் வேலை செய்கின்ற காலத்திலேயே ஒரு சிலர் வேறு நாடுகளுக்குப் போவதை நான் பார்த்திருக்கிறேன்.  முடிந்தவரை அவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட வாய்ப்புக் கிடைத்தால் அவர்களாகவே போகட்டும். யாரும் சுமை இல்லை. இங்கு அகதிகள் என்று கூறி அவர்களை அடைத்து வைத்திருப்பது மிகவும் பாவமான செயல்.

இன்னொன்றும் என் மனதில் உள்ளது. இந்த அகதிகள் தஞ்சம் புகும் நாடுகள் எல்லாம் ஏன் கிறிஸ்துவ நாடாகவே உள்ளன?  ரோஹிங்ய அகதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள் ஓர் இஸ்லாமிய நாடான மலேசியா போன்ற நாடுகளில் தான் வாழ விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனாலும் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.  அதற்கான காரணமும் நமக்குத் தெரியவில்லை.

எது எப்படியோ நஜிப் சொன்ன கருத்து என்பது சிந்திக்க வேண்டிய கருத்து தான்.  இன்று வங்காளதேசிகளை வலுக்கட்டாயமாக இறக்குமதி செய்வதாகத்தான் பொது மக்களிடையே உள்ள கருத்து. இங்கு வருபவர்கள் எத்தனை பேர் மீண்டும் தங்களது நாட்டுக்குத் திரும்புகின்றனர். இங்கே தங்குபவர்களின் புள்ளி விபரங்கள் ஏதேனும் உண்டா என்கிற கேள்விகள் எழுகின்றன.

நம்மைப் பொறுத்தவரை ரொஹிங்ய அகதிகளுக்கு இங்கு வேலை கொடுத்து அவர்களைக் கௌரவமாக வாழ வழி செய்வது நமது மலேசிய நாட்டிற்கும் அந்தப் பொறுப்பு உண்டு என்பது தான்.

நஜிப் சொன்ன கருத்தைக் கொஞ்சம் சிந்திக்கலாம்!

Wednesday 20 April 2022

ஆறு மில்லியன் என்ன ஆறு காசா?

 


இன்று ஒரு செய்தியைப் படித்த போது மனதைக் கொஞ்சம் பாதிக்கத்தான் செய்தது.

பணத்தைச் செலவு செய்வதில் எல்லாருக்கும் அக்கறை உண்டு. அரசாங்கத்திற்கு இன்னும் அதிக அக்கறை தேவை. அது யார் வீட்டுப் பணமோ அல்ல. மக்கள் கொடுக்கும் வரிப்பணம்.  அது சரியாகச் செலவு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று ஸ்ரீலங்காவில் என்ன நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது? பணத்தைப் பொறுப்பற்ற முறையில் செலவு செய்ததின் பலன் இன்று மக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். இங்கு நம் நாட்டில் அது நடைபெறாது என்று சொல்லுவதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? எந்தத் தகுதியும் இல்லை.

வீணடிப்பு செய்வதில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.  சிலாங்கூர் மாநிலத்தில் பிராவ்ன்ஸ்டன் என்கிற  தோட்டத்தில் ஒரு புதிய பள்ளியைக் கட்டியிருக்கிறார்கள். அந்தப் புதிய பள்ளி கட்டி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன! ஆனால் பள்ளி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இன்னும் ஆபத்தான சூழலில்  பழைய பள்ளியே இயங்கி வருகிறது!

இந்தப் புதிய பள்ளி சுமார் 6.1 மில்லியன் செலவில் கட்டப்பட்ட பள்ளி என்று சொல்லப்படுகிறது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதற்கான காரணங்கள் நமக்குத் தேவையில்லை. இனி மேலும் பயன்பாட்டிற்கு வருமா என்றும் தெரியவில்லை. 

இப்போது இந்தப் பள்ளி இந்த நிலைமையில் இருப்பதற்கு  யார் பொறுப்பு? யாரை நாம் குற்றம் சொல்லுவது? நம்மைப் பொறுத்தவரை கல்வித்துறையின் அலட்சியமானப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஆறு மில்லியன் வெள்ளியைச் செலவு செய்துவிட்டு  இப்போது வாய் மூடி மௌனியாக இருந்தால் தன் மீது குற்றம் இல்லை என்று கல்வி இலாகாவினர் சொல்ல முடியுமா? ஆறு மில்லியன் என்பது திருடர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம்.  நம் கல்வி இலாகா எப்படி சும்மா வாய்மூடிக் கொண்டிருக்க முடியும்? மக்கள் பணம் அல்லவா?

ஒரு சில அரசாங்க அதிகாரிகள் நினைப்பது போல பணம் எங்கிருந்தோ வந்து நாட்டிற்குள் கொட்டுவதில்லை!  மக்களின் உழைப்பு. மக்களின் வரிப்பணம். இதையெல்லாம் மறந்துவிட்டு ஆறு மில்லியனைச் செலவு செய்துவிட்டு  ஒன்றுமே தெரியாதது போல நடிப்பவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட  வேண்டும். 

இப்போது தவறு செய்பவர்களுக்கு விரைவாகத் தண்டனைகள் கிடைப்பதில்லை. ஆறு மில்லியனை எதற்காக செலவு செய்தார்கள்! பாடசாலைக் கட்ட. இப்போது அது முடியுமா முடியாதா என்கிற இழுபறி! கல்வி இலாகா தானே அதற்குப் பொறுப்பு. அந்தப் பொறுப்பை கல்வி இலாகா தட்டிக்கழிக்க நினைத்தால் அவர்கள் அந்தப் பள்ளியைக் கட்டியிருக்கவே கூடாது.  கட்டியபின் எதுபற்றியும் பின்வாங்கக் கூடாது.

எப்படிப் பார்த்தாலும் கடந்த ஆறு வருடங்களாக பொறுப்பற்ற கல்வி இலாகா கட்டிய அந்தப்பள்ளியை  இப்போது யாருக்கும் பொறுப்பில்லாமல் சும்மா கிடக்கிறது!

ஆறு மில்லியன் வெள்ளி என்பது கல்வி இலாகாவுக்கு  ஆறு காசு மாதிரி போல் இருக்கும் போல் தோன்றுகிறது!

நமக்கும் ஸ்ரீலங்காவுக்கும் அதிகம் வித்தியாசாமில்லை!

Tuesday 19 April 2022

ஆசிரியர்களின் பணிச் சுமையா?

 


ஆசிரியர்கள் முன்பு போல தங்களது பணி காலம் முடியும்வரை வேலையில் இருப்பதில்லை. சீக்கிரம் ஒயவு பெறவே விரும்புகின்றனர்.

இப்போது தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் இந்தக் கட்டாய ஓய்வு மிக  மோசமான நிலையை அடைந்திருப்பதாக ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

இப்படி ஒரு நிலை வருவதற்கான காரணங்கள் என்ன? எல்லா காலங்களிலும் சொல்லப்படுவது ஒரே காரணம் தான். பணிச் சுமை அதிகம். இந்த ஒரே காரணம் தான் நம் காதில் விழுவது! இன்னும் பல வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும் பணிச் சுமை தான் முக்கியமாகக் கூறப்படுவது. நம்மால் அதனை மறுக்க முடியாது என்பது உண்மை தான்.

ஆசிரியர் சங்கம் கொடுத்திருக்கின்ற  புள்ளிவிபரம் நம்மைத் திகைக்க வைக்கின்றது! ஆமாம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்தாயிரம் ஆசிரியர்கள் தங்களது வேலையிலிருந்து இடைப்பட்டக் காலத்திலேயே ஓய்வு பெற விண்ணப்பிக்கிறார்கள் என்பதாகக் கூறுகிறது. அதே சமயத்தில் வயதின் காரணமாக  ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்தாயிரம் ஆசிரியர்கள்  ஓய்வு பெறுகின்றார்கள் என்பதும் ஓர் அதிர்ச்சி செய்தி தான். இந்த நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஆசிரியர் தொழிலின் நிலை என்ன என்கிற கேள்வியும் எழுகிறது.

பணிச்சுமை மட்டும் தான் இதற்கான காரணமா அல்லது வேறு காரணங்கள் உண்டா? பத்து, பதினைந்து  ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்களின் ஆசிரியர் தொழில் பற்றியான கருத்து வேறு விதமாக இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை. இதனிடையே பல்வேறு அரசாங்க விடுமுறை. ஒவ்வொரு ஆண்டும்  நீண்ட பள்ளி விடுமுறைகள். இப்படியே விடுமுறை, விடுமுறை என்பது தான் மக்களுக்குத் தெரிந்தது! அதனால் இது போன்ற விடுமுறைகளுக்காகவே  ஆசிரியர் தொழில் அன்று இளையவர்களை ஈர்த்தது.

ஆனால் இப்போது விடுமுறை என்பதெல்லாம் இல்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். விடுமுறை என்றாலும் நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்கள்!

இப்போது கோவிட்-19  நோய் தொற்று பள்ளி ஆசிரியர்களை மிகவும் நொந்து போகச் செய்து விட்டது என்பதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புக்களினால் பல பிரச்சனைகள்.  எல்லா ஆசிரியர்களுக்கும் கணினி பயிற்சி உண்டு என்று சொல்ல முடியாது. அதுவும் இப்போது முக்கிய காரணமாகவும் அமந்து விட்டது. வேலைச் சுமையோடு இப்போது தொற்றும் ஆசிரியர்களை அலைக்கழிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கல்வித்துறைக்கு இப்போது எல்லோரும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்குச் சீக்கிரமாக முடிவு காணுங்கள்.  இல்லையேல் நமது கல்வி முறையே பாழாகிவிடும் என்பதாக எச்சரிக்கிறார்கள்!

ஆசிரியர்களின் பணிச்சுமை குறைய என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Monday 18 April 2022

வெற்றி நிச்சயம்!

 

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மகள்  நூருல் இஸா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.  ஏற்கனவே அரசியல்  பார்வையாளர்களால்  சொல்லப்பட்ட கருத்து தான்.

ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில்  பாரிசானின் அபிர்தமான வெற்றி யாரும் எதிர்பார்க்கவில்லை தான். ஒரு சில விஷயங்கள் பாரிசானுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மிக முக்கியமானது கோவிட்-19 தொற்று.  பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதில் ஏகப்பட்ட கெடுபிடிகள். எதிர்கட்சிகளால் கூட்டங்களை நடத்த முடியவில்லை. வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்திப்பதிலும் அவர்களால் முடியவில்லை.

பாரிசானுக்கும் இதே நிலை தானே என்று கேட்கலாம். ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் ஏற்கனவே மக்களிடையே வெகு ஆழமாக வேரூன்றிய ஒரு கட்சி. மாநிலம் முழுவதிலும் அவர்களுக்குக் கிளைகள்  உண்டு.  அந்த அந்தக் கிளைகளைச் சார்ந்தவர்களே பிரச்சாரம் செய்தாலே போதும்.  எதிர்கட்சிகள் அங்கு எந்த தொடர்புகளையும் ஏற்படுத்த முடியவில்லை. அதற்குத் தொற்று மிகவும் பிரதானத் தடை.

இப்போது நூருல் இஸா என்ன சொல்ல வருகிறார்?  மக்கள் திரண்டு வந்து  வாக்களித்தால்  ஒழிய பக்காத்தான் வெற்றி சந்தேகத்திற்குரியது தான் என்கிறார். அது தான் உண்மை.

இன்றைய நிலையில் கோவிட்-19 ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது உண்மை. அதனால் என்ன?  நமது அடுத்த பொதுத் தேர்தல் என்பது அடுத்த ஆண்டு தான் நடைபெற வேண்டும்.

ஆனால் அம்னோ தரப்பு இப்போதே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. காரணம் இப்போது நடந்தால் மக்கள், ஜொகூரில் நடந்தது போலவே, அவர்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறார்கள்! மக்கள் இன்னும் தொற்று நோயினால் வெளியே போவதில் ஆர்வம் காட்டவில்லை. இது அம்னோவுக்குச் சாதகமாக அமையும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அம்னோ நீண்ட காலமாக மலாய் மக்களிடையே வேரூன்றிப்போன  ஒரு கட்சி. சுமார் அறுபது எழுபது ஆண்டு கால வரலாறு அவர்களுக்கு உண்டு. பழைய தலைமுறையினர்  அவர்களுக்கு இன்னும் விசுவாசமாகவே இருக்கின்றனர். அதனால் அவர்களுக்குப் பெரிய பிரச்சாரங்கள் எல்லாம் தேவை இல்லை.

ஆனால் எதிர்கட்சிகளுக்குப் பலவாறான சிக்கல்கள் உண்டு.  இந்த கட்சிகள் இன்னும் மக்களிடையே சரியாகப் போய்ச் சேரவில்லை. ஜ.செ.க. ஓரளவு சீனர்களிடையே பிரபலமாக இருக்கின்ற கட்சி. பி.கே.ஆர். ஓரளவே பிரபலம்.  மற்ற கட்சிகளும் இன்னும் மக்களிடையே பிரபலமாகவில்லை! இந்த கட்சிகளுக்குத் தேர்தல் கூட்டத்தைப்போட்டுத் தான் வாக்குகள் பெற வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் அம்னோ எந்த அறிமுகமும் தேவையில்லை.   அதுவே அவர்களுக்குச் சாதகம்.

அடுத்த பொதுத் தேர்தல் என்பது 2023-ம் ஆண்டு ஜூன் ஜூலை வாக்கில் நடைபெற வேண்டும். அதனால் தான் எதிர்க்கட்சிகள்  இப்போது தேர்தல் வருவதை விரும்பவில்லை. இதுவே சாதகமான நேரம் என்பதால் அம்னோ இப்போது தேர்தல் வருவதை விரும்புகிறது.

நமக்குத் தெரிந்ததெல்லாம் நூருல் இஸா சொல்லுவது போல மக்கள் வாக்களிக்க திரண்டு வந்தால் வெற்றி நிச்சயம்! அதில் சந்தேகமில்லை!

Sunday 17 April 2022

சைக்கிளை மதியுங்கள்!

 

இளைய தலைமுறை அதுவும் பள்ளி மாணவர்கள் தங்களது சைக்கள்களின் மூலம் செய்கின்ற அட்டகாசங்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன!

இரவு நேரங்களில் பொது சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். பலமுறை விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. மரணமும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இவர்கள் பயன்படுத்தும் சைக்கிள் நமக்கு வினோதமாக இருக்கும். சைக்கிளில் உள்ள இருக்கை  கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சைக்கிளில் விளக்குகள் இருக்காது.  பிரேக்குகள் இல்லாமல் இருக்கும். தலைக்கவசம் அணிவதில்லை.  இவைகள் எல்லாம் இல்லாமல்  இருந்தால் தான் அவர்களுக்குச் சைக்கள் ஓட்டுவதில் ஒரு கிக் வரும்! இல்லாவிட்டால் அதனை அவர்கள் சைக்கிளாகக் கூட மதிக்க மாட்டார்கள்!

இவர்கள் எப்படி ஓட்டுவார்கள் என்பது கூட ஓரளவு நமக்குத் தெரியும். நின்றுக் கொண்டே ஓட்டுவார்கள். முன் பகுதி சக்கரத்தை  தூக்கிக் கொண்டே ஓட்டுவார்கள். படுத்துக் கொண்டே ஓட்டுவார்கள்.  ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே ஓட்டுவார்கள். இன்னும் பல வகைகளில் இருக்கலாம்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கினால் இப்போது இந்த பிரச்சனை மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. 

விபத்து நடந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். விபத்து ஏற்பட்ட நேரம் காலை மூன்று மணி அளவில். அப்போது இந்த இளசுகள் சாலையில் தங்களது வீரதீர சாகஸங்களைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்து தான் இது. அப்போது கார் ஓட்டி வந்தவர் ஒரு பெண்மணி. என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை. தூக்கக் கலக்கமோ என்னவோ தெரியவில்லை. அப்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவம் நடந்த இடத்திலேயே ஆறு பேர் இறந்து போயினர். இருவர் மருத்துவமனைக்குப் போகும் வழியில் மரணமுற்றனர்.

இது ஒரு துயரச் சம்பவம் என்பதில் ஐயமில்லை. சிறு வயது பையன்கள் இப்படி நடு ரோட்டில் தங்களது சாகஸங்களைச் செய்வது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஆனாலும் உண்மை என்னவென்பது நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் எட்டு பேர் இறந்து போயினர் என்பது தான் கண்ணுக்குப் பெரிதாகத் தெரிகிறது. தன் மீது குற்றம் இல்லை என்கிறார் ஒட்டுநர்.

வழக்கு இன்னும் தொடர்கிறது.

நமது அறிவுரை எல்லாம் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள் என்பது தான்.


Saturday 16 April 2022

பொது விவாதம் நடக்குமா?

 

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்றைய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்  இருவருக்கும் இடையேயான பொது விவாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன!

வருகின்ற மே மாதம் 12-ம் தேதி மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

விவாதப் பொருள்:     SAPURA ENERGY BERHAD     (GLC)

எல்லாம் சரிதான்.நமக்குள்ள கேள்வி என்னவெனில் நஜிப்  அப்படி ஒன்றும் வெளிப்படையாக பேசும் மனிதர் அல்லர்.  நேர்மை என்பது   கிஞ்சிற்றும் இல்லாதவர்! இன்றளவும் பொய் தான் அவரின் மூலதனம். இனி மேலும் அவர் அப்படித்தான் இருப்பார்!

விவாதத்திற்கு வரும் போதே விவாதத்தை எப்படி நிறுத்துவது என்பதற்கும் ஏதேனும் திட்டங்கள் வைத்திருப்பார்! இதெல்லாம் ஏற்கனவே நாம் கண்டவை தான்! இந்த விவாதங்கள் முழுமையாக நடைபெறும் சாத்தியமுமில்லை! 

விவாதத்திற்கு  வரும்போதே கூட்டத்தில் கலாட்டா செய்வதற்கென்றே ஒரு சில அரசியல்வாதிகளும்  வருவார்கள்! அதுவும் அம்னோவைப் பற்றி சொல்லவே வேண்டாம்!

ஆனால் இப்போது ஏற்பாடு செய்கின்றவர்கள் ரொம்பவும் நேர்மையாக  செயல்படுபவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்! சரி! சரியான முறையில் நடந்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்யப்போகிறோம்?

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக  நேரடியாக ஒளிபரப்பும் செய்யப் போகிறார்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவாதம் என்பது அரசாங்க சார்பு நிறுவனமான சாப்புரா எனெர்ஜி பெர்ஹட் டிற்குச் சென்ற ஆண்டு  ஏற்பட்ட நட்டத்தைப் பற்றியதாகும். சென்ற ஆண்டு  மட்டும் அதற்கு ஏற்பட்ட நட்டம் ரி.ம. 8.9 பில்லியன் என்று சொல்லப்படுகிறது. இதனைப் பற்றியான ஒரு விவாதமே வரப்போகின்ற இந்த நிகழ்ச்சி.

பொது விவாதம் நடக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. நடக்கட்டும் பார்க்கலாம்!

Friday 15 April 2022

நான்காவது தடுப்பூசியா?

 

கோவிட்-19 தொற்று இருக்கும்வரை தடுப்பூசி போடுவதிலும் அவ்வப்போது சில மாற்றங்கள்  வரத்தான் செய்யும்.

உலகளவில் என்னன்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவோ அந்த மாற்றங்கள் நம் நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கும். கோவிட்-19 உடனடியாக நம்மிடையே இருந்து போகும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இதனைடையே நான்காவது தடுப்பூசி போட வேண்டும் என்கிற ஆலோசனையைச் சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. இளைய சமுதாயத்தினர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நோய் தடுப்பு என்பதைத்தவிர பயப்பட ஒன்றுமில்லை.

நான்காவது தடுப்பூசி என்பது அறுபது வயது மேற்பட்டவர்களுக்குத்தான் என்பதாக சுகாதாரா அமைச்சு கூறுகிறது. அதுவும் அவர்கள் விரும்பினால் மட்டுமே!  எந்த வற்புறுத்தலும் இல்லை!

அறுபது வயதுக்கு மேற்பட்டோர் என்னும் போது உடல் திடகாத்திரமாக உள்ளவர்களுக்கு இது தேவையுமில்லை; சிபாரிசு செய்யப்படவும் இல்லை. ஆனால் இந்த வயதுக்கு மேற்பட்டோர் பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் இந்த நான்காவது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது  என்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மூன்றாவது தடுப்பூசி போட்டவர்களின்  இறப்பு விகிதம் குறைவு என்பதில் ஐயமில்லை.  குறைவான மரண எண்ணிக்கை என்றாலும் அவர்கள் பெரும்பாலும் கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்.   கோவிட்-19 தொற்று என்பது, கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அந்த மருந்தின் வீரியம் என்பது நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிப்பதில்லை. சீக்கிரமே அதன் வீரியம் குறைந்துவிடும். அதனால் நான்காவது தடுப்பூசி என்பது  ஒரு சிலருக்குத் தேவை என்பதாகிறது. குறிப்பாக  கொடிய நோய்களின் அதிகத்  தாக்குதலுக்கு உள்ளாகியவர்களுக்கு தேவையே.

பல நாடுகள் இப்போது நான்காவது தடுப்பூசியை அறுபது வயதினருக்கு மேற்பட்டோருக்குப் போட ஆரம்பித்துவிட்டன. ஆஸ்தரேலியா, சுவீடன், தென் கொரியா, இஸ்ரேல், டென்மார்க்  பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்களது மூத்த பிரஜைகளுக்குப் போட ஆரம்பித்துவிட்டன.

நமது நாடும் இப்போது இந்த வேலையில் இறங்கியிருக்கிறது. ஆனால் கட்டாயப்படுத்தவில்லை.  இன்றைய நிலையில் இனிப்பு நீர், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இல்லாதவர்கள் இல்லை என்கிற நிலையாகிவிட்டது.

நான்காவது பூஸ்டர் தடுப்பூசி அறுபது வயது மேற்பட்டோருக்குத் தேவையே என்பதே நமது கருத்து!

Thursday 14 April 2022

பொறுப்புணர்வு நமக்கும் வேண்டும்!

 

                                                          River Pollution!

நமது வீடுகளைச் சுற்றிருக்கும் ஆறுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

நான் வசிக்கும் பகுதியில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது. ஒரு காலத்தில் அந்த ஆறு ரப்பர் மரங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆறு. இப்போது வீடுகள் வந்து விட்டதால் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகானத் தோற்றத்தோடு முன்பு இருந்ததை விட  கொஞ்சம் பெரிதாகத் தோற்றமளிக்கிறது.

எல்லாம் சரிதான். ஆனால் இப்போது அந்த ஆற்றின் தூய்மை தான் கேள்விக்குறியதாகி விட்டது! ஆறுகள் குப்பைகள் கொட்டும் இடம் என்று யார் கண்டுபிடித்தார்களே, தெரியவில்லை!  மக்களிடம் பொறுப்புணர்ச்சி இல்லை. குப்பை இருந்தால் அதைக் கொண்டு ஆற்றில் கொட்டுங்கள் என்று வீட்டில் கற்றுக் கொடுத்த பாடத்தை பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள்!

அதைவிட அரசாங்கமும் நமக்கு  ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளைக் கொண்டு போய் ஆற்றில் கொட்டுகின்றன.  கழிவுநீர் என்றால் தொழிற்சாலையிலிருந்து நேராக ஆற்றுப்பக்கம் திருப்பிவிடுகின்றன.  இப்படி ஆறுகளை ஏதோ குப்பைக் கொட்டும் இடமாகவும் கழிவுநீர் செல்லும்  இடங்களாகவும் வழிகாட்டிவிட்டனர்! வழிகாட்டுகின்றனர்!

ஆனால் அவர்களை யார் கேட்பது? அரசாங்கம் தான் கேட்க வேண்டும். தண்டனைகளைக் கொடுக்க வேண்டும்.  யாரும் கேட்காததால் இது போன்றச் செயல்கள் நன்றாகச் செழித்து வளர்ந்துவிட்டன! அப்படியே தண்டனைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு ஒன்றும் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை! காரணம் தண்டனைக் கொடுப்பவர்கள் தானே முதலாளிகளாகவும் இருக்கின்றனர்!

பொறுப்புணர்வு என்பது எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரவேண்டும். அரசாங்கம் முதலில் அதனைச் செய்து காட்ட வேண்டும். அரசாங்கம் கடுமையாக இருந்தால் மக்களும் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்கிற அக்கறை இருக்கும். இப்போது  யாருக்குமே அக்கறை இல்லை என்கிற நிலைமை உருவாகிவிட்டது!

ஆனால் ஒன்றை நம்மால் செய்ய முடியும். நாம்  நமது குடும்பத்தினருக்கும் நமது பிள்ளைகளுக்கும் வழிகாட்டியாக இருந்தாலே அதுவே பெரிய சாதனை! அதுவும் கூட பார்க்கின்ற மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

நாம் நினைத்தால் தூய்மைக்கேட்டை ஒழித்துவிட முடியும். நாம்  நம்மளவில் சரியாக இருந்தால் மற்றவர்களும் சரியாக இருப்பார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக்கொள்வார்கள்.

ஆக,  அரசாங்கம்  என்ன செய்கிறது என்பதை மறந்துவிடுங்கள். அவர்கள் செய்வதை செய்யட்டும். நாம் செய்வதை செய்வோம். பொறுப்புணர்வு நம் அனைவருக்கும் பொதுவானது. அதைக் கடைப்பிடிப்போம்.

தூய்மைக்கேட்டிலிருந்து நமது ஆறுகளைப் பாதுகாப்போம்! சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம். நமது நலனைக் காப்போம்!

Wednesday 13 April 2022

ம.இ.கா. ஏன் மௌனம் சாதிக்கிறது?

 


இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மித்ரா  அமைப்புப் பற்றியான விவாதங்கள் இன்னும்  போய்க்கொண்டு தான் இருக்கின்றன!

அது தவறு என்று யாரும் சொல்லவும்  முடியாது. காரணம் அந்த அமைப்புப்பற்றி தொடர்ந்தாற் போல ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

மித்ரா என்று அமைக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை ம.இ.கா. வின் பெயர் தொடர்ந்து அடிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தான் இங்கு முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டியது. 

ஆரம்ப காலத்தில் ம.இ.கா,வின் கட்சியின் ஒரு பிரிவு போல அது செயல்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கும் ம.இ.கா. வின் பெயர் தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது!  ஆக, ம.இ.கா. வையும்  மித்ராவையும் ஏனோ பிரிக்க முடியவில்லை!

ம.இ.கா. குற்றவாளி என்று பேசப்பட்டாலும் இவைகள் அனைத்தும் வெறும் "இந்த காதில் வாங்கி அந்த காதில் விடும்!" செய்திகளாகவே இருக்கின்றன!. அவர்களின் மீதான குற்றத்தை எப்படி நிருபணம் செய்வது என்கிற கேள்வி வருகிறது. நீதிமன்றத்திற்குப் போனால் கூட இவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றே தோன்றுகிறது!

ஆனாலும் ம.இ.கா. வினருக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. நீதிமன்றத்தை நீங்கள் ஏமாற்றினாலும் மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏதோ சில குறிப்பிட்ட காலம்வரை சிலரை ஏமாற்றலாம். ஆனால் மக்களை எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது!

மக்களை ஏமாற்ற வேண்டும் என்று நீங்கள் அரசியலுக்கு வரவில்லை. நல்லெண்ணத்தோடு தான் வந்தீர்கள்.  ஒரு வேளை இடையிலே ஏதோ தவறுகள் நேர்ந்திருக்கலாம். உங்கள் பாதை மாறி இருக்கலாம்.   அதையே தொடர்வேன் என்று அடம் பிடிக்காமல் ஆரம்பக் காலத்தில் நீங்கள் நினைத்தபடி மக்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

எல்லா காலத்திலும் கெட்ட பெயரோடு தான் வாழ்வேன் என்று மக்களின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள்.

உங்கள் குறிக்கோள் என்பது இந்தியர்களின் முன்னேற்றம் தான். அந்த முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்காதீர்கள். இன்று எல்லாத் துறைகளிலும் நலிந்து கிடப்பது இந்திய சமுதாயம். குறிப்பாக சிறிய தொழிலைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அதற்கான முதலீடு அவர்களிடம் இல்லை. அதற்கான திறன் அவர்களிடம் இல்லை. உதவக் கூடியவர்கள் யாரும் இல்லை. இந்தக் கொரோனா காலத்தில் இந்தியர்களின் நிலை இன்னும் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இவ்வளவு தெரிந்தும் அவர்களின் முன்னேற்றத்திற்கு ம.இ.கா.வே  தடையாக இருக்கிறது என்றால் உங்களைப் பார்த்து நாங்கள் பெருமைப் படவா முடியும்?

அடுத்த பொதுத் தேர்தலின் போது நீங்கள் மக்களை நோக்கி வரத்தான் வேண்டிவரும். அதற்கு முன்னர் உங்கள் சாதனைகளைக் காட்டுங்கள்!

Tuesday 12 April 2022

இதையும் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்!

 


விஜய் இரசிகர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்! பீஸ்ட் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அது எப்படியிருந்தாலும் நீங்கள் அதனை இரசிக்கக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது எப்போதும் உள்ளதுதான். அது பழக்க தோஷம்! அது நல்லா இருக்கோ, நல்லாயில்லையோ அது தளபதி படம்! அவ்வளவு தான்!

உங்களைப் போல ஒரு குறிப்பிட்ட நடிகரின் இரசிகன் அல்ல நான். பொதுவாக சினிமாப் படங்கள் எனக்குப் பிடிக்கும். ரஜினி, கமல்ஹாசன் படங்கள் பிடிக்கும். மற்ற நடிகர்கள் மேல் எனக்கு எந்த வெறுப்புணர்ச்சியும்  இல்லை. காரணம் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள். என் வேலையை நான் பார்க்கிறேன். அதில் என்ன காழ்ப்புணர்ச்சி?

நான் இங்குச்  சொல்ல வருவது எல்லாம் எப்படியோ நாம் ஒரு குறிப்பிட்ட நடிகரின் நடிப்பில் சிக்கிக் கொண்டோம்! அது தவறில்லை. ஆனால் அவர்மீது சும்மா வெறும் அபிமானம் மட்டும் போதாது! அவர் மிக உயரத்தில் இருக்கிறார். நாம் நமது துறையில் அவரைப் போன்று உயரத்தில் இருக்க வேண்டும் என்பது தான் நான் சொல்ல வருவது.

விஜய், அஜீத் போன்றவர்கள் வெறும் நடிப்பில் மட்டும் அல்ல அவர்கள் பொருளாதார ரீதியிலும் மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.  நடிப்பில் உயர நம்மால் முடியாது. ஆனால் பொருளாதார ரீதியில் அவர்கள் அளவிற்கு உயர முடியும்.

நடிகர்கள் எவ்வளவு தான் உயர உயரப் பறந்தாலும் ஒரு தொழிலதிபரோடு போட்டிப்போட முடியாது என்பதை மறக்க வேண்டாம். நமக்கும் ஒரு தொழில் அதிபராகக் கூடிய அனைத்துத் தகுதிகளும் உண்டு. அவர்களின் ஈடாக நம்மால் முடியாது என்றால் பரவாயில்லை. நம்மளவில் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்.

மிக உயரிய நிலையில் உள்ள ஒரு தொழிலதிபர் என்ன சொல்லுகிறார் பாருங்கள். "முதலில் நீங்கள் ஒரு இலட்சத்தைச் சம்பாதித்து விடுங்கள். அதன் பின்னர் அடுத்த இலட்சத்தை எப்படி சம்பாதிப்பது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்"  என்கிறார்.

இங்கு நான் சொல்ல வருவதெல்லாம் நீங்கள் ஓரு நடிகரின் இரசிகன். அவரைப் பார்க்க வேண்டும், போட்டோ எடுக்க வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருக்கும். அவரைப் பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு கம்பீரம் வர வேண்டும். நாமும் அவரைப்போல உயர்ந்து நிற்கிறோம் என்கிற அந்த எண்ணம் சும்மா வராது.  நாமும் அந்த நடிகரைப் போல கடுமையாக உழைக்க வேண்டும்.  அவரின் உழைப்பை அவர் நிருபித்துக் காட்டியிருக்கிறார்.  அதனால் தான் நாம் அவரைக்  கொண்டாடுகிறோம். நாமும் நமது உழைப்பை  நிருபித்துக் காட்ட வேண்டும். அது தான் அவருக்கும் பெருமை.

தளபதி உயர்ந்து நிற்கிறார். அதனால் என்ன? நாம் தாழ்ந்தா போக முடியும்? அவரின்  கால்வாசியாவது  நாம் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!

Monday 11 April 2022

இது தான் நாடாளுமன்றம்!

 

சிலாங்கூர் சுல்தான் மிகவும் நகைச்சுவை  மிக்க ஓர் ஆட்சியாளர் என்பதில்  ஐயமில்லை!

சமீபத்தில் அவர் வாங்கியிருக்கும் ஓர் ஓவியம் அனைவராலும் பாராட்டப்படுகிறது!

நாடாளுமன்றத்தில் இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த ஓவியம்.  அங்கே மக்களின் நலனுக்காக போராட வேண்டிய நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய - அவர்களுடைய பிள்ளைகளுடைய- அவர்களின் பதவிக்காக - அவர்கள் அமைச்சராவதற்காக - அவர்களுடைய வாழ்வாதாரத்தை  உயர்த்திக் கொள்வதற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

இவர்கள் தங்களின் நலனின் போராட்டத்திற்காக  அவர்கள் செய்கின்ற காரியங்கள்  என்ன? சமீப காலங்களில் நாம் நிறைய தவளைகளைப் பார்க்கிறோம். இங்கே இருந்து அங்கே மாறுவது, அங்கே இருந்து இங்கே மாறுவது, அறிவே இல்லாதவனுக்கு தீடிரென்று ஏதோ ஓரு அமைச்சர் பதவி, பெரிய நிறுவனத்தில் உயர் பதவி - இப்படி கோமாளித்தனமான துக்ளக் வேலையெல்லாம் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சராசரி மனிதனுக்குக் கூட கோபம் வரத்தான் செய்யும்.

சிலாங்கூர் ஆட்சியாளரான சுல்தானுக்கு அது எவ்வளவு வேதனையைத் தரும் என்பது நமக்குப் புரிகிறது. நாட்டில் நல்ல ஆட்சி நடக்க வேண்டும் என்பதைதான் ஒவ்வொரு ஆட்சியாளரும் விரும்புவர். நல்ல ஆட்சி என்றால் நிலையான ஆட்சி. ஊழலற்ற ஆட்சி.

இன்றைய அரசாங்கம் கூட நிலைத்து நிற்கிறது என்றால் அது மாமன்னர் தலையீட்டினால் தான் என்பது நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் இந்நேரம் அடித்துக் கொண்டும், சண்டைப் போட்டுக் கொண்டும் நாட்டையே நாறடித்திருப்பார்கள்! அரசியல்வாதிகளுக்கு அறிவு என்பது குறைவு! வெட்கம், ரோஷம் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி விட்டுத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்!

இப்படி ஓர் ஓவியத்தை சுல்தான் அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்  என்றால் அவர் ஏதோ ஜாலிக்காக வாங்கவில்லை.  அவரின் வேதனையை அது வெளிப்படுத்துகிறது.

நாட்டில் என்று நல்லாட்சி நடக்குமோ அன்று தான் அவர் அந்த ஓவியத்தை விற்பனைக்குக் கொண்டு வருவார் என நம்பலாம். அது வரையில் அந்த ஓவியம் அவர் அலுவலகத்தில் தொங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அடுத்த பொதுத்தேர்தல் வரும் போது நாம் தேர்ந்தெடுப்பது குரங்குகளாக இருக்கக் கூடாது! தவளைகளாக இருக்கக் கூடாது! மனிதர்கள் தான் நமக்குத் தேவை. அதுவும் மனித நேயம் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம் நாட்டுக்காக! நட்டுக் கழன்றவர்களுக்காக அல்ல!

Sunday 10 April 2022

கட்சித் தாவல் தடுப்பு சட்டம் ஒத்திவைப்பு!

 


கட்சித் தாவலை தடுக்கும் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை!

இந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்தும்  ஒன்றுமில்லையென்றாகி விட்டது! மீண்டும் பூஜ்யம் என்கிற நிலைக்கே சென்றுவிட்டது!

இப்போது பிரதமர் கூறுகின்ற காரணங்கள் என்ன? இந்த தடைச்சட்டம் பற்றி இன்னும் முழுமையான  ஆய்வுகள் வேண்டுமாம். அறிஞர் பெருமக்களின் இன்னும் ஆழமான கருத்துக்கள் வேண்டுமாம். இது தவறு என்று சொல்லுகின்ற நிலைமையில் நாம் இல்லை.  காரணம் இது சட்ட திருத்தம் சம்பந்தப்பட்டது. 

ஆனால் இப்பொழுதே ஒரு சிலர் இந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதனால் பயனில்லை என்கிறார்கள்! அப்படியென்றால்  சட்டத்தில் ஓட்டை இருக்கும் என்று சொல்ல வருகிறார்கள் என்பது தான் அர்த்தம்! எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும்  சட்டத்தை மீற நினைப்பவர்களுக்குச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைத்தான் முதலில் பார்ப்பார்கள்!  என்ன செய்தால் தப்பிக்க முடியும். தப்ப முடியும். இதைத்தான் முதலில் ஆராய்ச்சி செய்வார்கள்!

அதனால் சரியான முறையில் சட்டம் அமலாககப்பட வேண்டும் என்பதில் நமக்கும் அக்கறை உண்டு. நாமும் அக்கறை இல்லாமல் எதையாவது எழுதுவதோ பேசுவதோ சரியான அணுகுமுறை இல்லை என்பதும் புரிகிறது!

பிரதமர் இப்போது  அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில், ஜூலை மாதம் நடைபெறும் என்கிற அறிவிப்போடு இந்த கட்சித் தாவலை தடுக்கும் சட்டம்  நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்பதாக கூறியிருக்கிறார். நாமும் அதனை நம்புகிறோம்.

இன்னொன்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. அம்னோ கட்சியினர் பொதுத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் நமக்குத் தெரிகிறது.  ஆக, ஜுலை மாதத்திற்கு முன்னரே அதாவது நாடாளுமன்ற கூட்டம் கூடும் முன்னரே 15-வது பொதுத் தேர்தல் நடக்கக் கூடிய சாத்தியமும் உண்டு! பிரதமரும் அவர்களோடு கைகோர்த்துக் கொள்வார் என்பதையும் மறுப்புதற்கில்லை!

இது அரசியல். எந்த சாத்தியமும் உண்டு. அரசியலர்கள் புனிதர்கள் அல்ல. எல்லா அற்பத்தனங்களும் அவர்களிடம் உண்டு.

பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்!

Saturday 9 April 2022

கார் பூட் ஆன்லைன் வகுப்பாக மாறியது!

 

                                 Online Class in her car boot!  Student, Anis Arina Aqilah Roslee 

சபா மாநிலத்தைச் சேர்ந்த  பல்கலை மாணவி, அனிஸ் அரினா,  23 வயது,  தனது கார் பின்னால் உள்ள கார் 'பூட்' டில் அமர்ந்து கொண்டு  தனது ஆன்லைன் மூலம்  படிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டிருக்கிறார்!

அனிஸ் வசிக்கும் கிராமத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் தீ விபத்தில் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் இணையச் சேவை முற்றிலுமாகத்  துண்டிக்கப்பட்டது.  ஆனால் கல்வியை விட்டுவிட முடியாதே. 

அதனால் இணையச் சேவை கிடைக்க அவர் சுமார் பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவு தனது காரில் பயணம் செய்து இணையச் சேவையைப் பயன்படுத்துகிறார். தொலைவு தான் என்றாலும் வேறு வழியில்லை. கல்வியின் முக்கியத்துவம் அறிந்த மாணவி. பாராட்டுவோம்!

தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் என்னவானது?  கிராமத்தார் அதிகாரிகளிடம் அது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு கூறிவிட்டனர். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை. பின்னர் இந்த மாணவியின் செய்தி வெளியான பின்னர் தான் நடவடிக்கை எடுப்பதில் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்!

இது தான் அரசாங்க ஊழியர்களின் இயல்பு! அவர்கள் எதனையும் கண்டு கொள்ளமாட்டார்கள்.  அதுவும் கிராமம் என்றால் இன்னும் மோசம்! கிராமம் என்றால் அவர்களுக்குச் சம்பளம் கிடைக்காதோ? புரியவில்லை! கொடுக்கின்ற சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்கிற பழக்கம் எல்லாம் அவர்களிடம் இல்லை!

இந்த மாணவியின் செய்தி மட்டும் வெளியாகாமலிருந்தால் அந்த கிராமத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்காது!

வேலை செய்யாமலே சம்பளம் வாங்கும் ஒரு ஜாதி என்றால் இந்த அரசாங்க ஊழியர்கள் தான்! அதுவும் ஒரு சில இடங்களில் இலஞ்சம் கொடுத்தால் தான்  காரியம் ஆகும் என்கிறார்கள்!

அநேகமாக இந்நேரம் அந்த கிராமத்து மக்கள் இணைய வசதியைப் பெற்றிருப்பார்கள் என நம்புவோம். 

இப்போதெல்லாம் கல்வி கற்பது என்பது முன்பு போல் அல்ல. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் தான்  நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தீ சேதமாக  இருந்தாலும் சரி அல்லது வேறு  ஏதாவது பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதனைச் சரிசெய்ய வேண்டியவர்கள் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும்.  அதனை  இழுத்துக் கொண்டு போனால் அதனால் நிறைய பாதிப்புகள், குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்படும், என்பதை  இந்த நேரத்தில் நினைவுறுத்துவது நமது கடமை.

தனது கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து தன்னால் முடிந்த அளவு பத்து பதினைந்து மைல்களுக்கு அப்பால் சென்று தனது கடமையை நிறைவேற்றும் அந்த மாணவிக்கு நமது வாழ்த்துகள். அது மட்டும் அல்ல தனது கல்வியை முடித்து நல்லதொரு பட்டதாரியாக அவர் திகழ வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம்!

Friday 8 April 2022

Malu Apa Bossku

 


மேலே உள்ள மலாய் சொற்றொடர்  முன்னாள் பிரதமர் நஜிப் ஆதரவாளர்களிடையே மிகவும் பிரசித்தம்!

நல்ல காரணத்துக்காக அப்படி ஒர் சொற்றொடரை பயன்படுத்திவந்தால் யாரும்  அதனைக் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் அதன் நோக்கம் என்பது தவறானது! எப்படிப் பார்த்தாலும் தவறு கண்டிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பில் அது பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. மக்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறது.  வளரும் தலைமுறைக்குத் தவறான பாடத்தைப் போதிக்கிறது

அதனை எப்படி வேண்டுமானாலும் நாம் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

சில மாதிரிகள்:
பாஸ்! நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்!
பாஸ்! எதனால் நாம் வெட்கப்பட வேண்டும்!
பாஸ்! கொள்ளையடிப்பது நமது உரிமை! வெட்கப்பட ஒன்றுமில்லை!.
பாஸ்!  நாம் கொள்ளையடிக்கலாம்! யார் கேள்வி கேட்பது?
பாஸ்! இது நமது சொத்து! யாரும் கேள்வி கேட்க முடியாது!
பாஸ்! இது நமது உரிமை! நாம் கொள்ளையடிக்கலாம்!

இப்படி பலவாறாக அதன் அர்த்தத்தை, நமது வசதிக்கேற்ப, அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்!

பொதுவாக முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஆதரவாளர்கள் சொல்ல வருவதெல்லாம்: பாஸ்! நாம் திருடலாம்! நாம் திருடுவது நமது சொத்து! எவனும் கேள்வி கேட்க முடியாது!

ஆக அவர்கள் சொல்லுவதெல்லாம் எங்கள் பாஸ் திருடியது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்பது தான்!

ஆனால் இங்கு நடப்பது என்னவெனில் மக்களிடையே  அவர்கள் விஷத்தை விதைக்கிறார்கள்! இளம் பிராயத்தினரிடையே திருடுவது குற்றமில்லை என்கிற எண்ணத்தை வளர்க்கிறார்கள்! ஏற்கனவே நாட்டில் இலஞ்சம், ஊழல் என்று மக்கள் முணகிக் கொண்டிருக்கிருக்கும் இந்த நேரத்தில் இலஞ்சம் வாங்குவது குற்றமில்லை என்றால் எப்படி?

ஒருவர் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை அது கொள்ளையடிக்கப்படவில்லை அது எனக்கு சேர வேண்டிய பணம் தான் என்று நியாயப்படுத்தினால் எப்படி? நஜிப்பின் ஆதரவாளர்கள் அதனை நியாயப்படுத்துகிறார்கள்! ஒருவர் குற்றவாளி என்பது போய் நீங்கள் அனைவருமே குற்றம் செய்யலாம்  அது தப்பில்லை ஏன்கிறார்கள்! இதன் எதிரொலி எப்படியிருக்கும்? அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் இனி பயப்பட ஒன்றுமில்லை என்று  தான் நினைப்பார்கள்!

கடவுள் இருக்கிறார் என்கிற பயம் எல்லாம் போய்விட்டது! நஜிப் வெற்றிபெற்றால் அவர் கடவுள் நிலைக்கு உயர்ந்து விடுவார்!
                                 

Thursday 7 April 2022

ஒரு இலட்சத்திற்கு அதிகமான சம்மன்கள்!


 இப்படியும் சொல்லலாம்:  சிங்கப்பூரர்கள் தவறு செய்வார்களாம்! மலேசிய காவல்துறை அதைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிப்பார்களாம்!

அதனால் தான் சிங்கப்பூர், மலேசியர்களை ஏமாளிகளாகவே அளந்து வைத்திருக்கின்றனர்! இதுவரை சிங்கப்பூர் தங்களது உரிமைகளை சிறியளவில் கூட மலேசியாவிற்கு விட்டுக் கொடுத்ததில்லை. அதில் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களது கடமையை அவர்கள் செய்கின்றனர். அதனை நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும்?

நாம் நமது கடமைகளைச் செய்யாததற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. இப்போது நம்மிடையே உள்ள கேள்வி ஏன் இவர்கள் மீது இத்தனை ஆண்டுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான். குற்றச் செயல்கள் எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது ஒரு இலட்சத்திற்கு மேலான குற்றப்பதிவுகள் தேங்கிக்கிடைக்க வேண்டிய அவசியமில்லையே!

2016-ம் ஆண்டிலிருந்து இதுவரை 143,427  சம்மன்கள்  சிங்கப்பூரர்களுக்குக் கொடுக்கப்பட்டதில் இதுவரை 34,636 சம்மன்களே செலுத்தப்பட்டிருக்கின்றன.  இன்னும் 74 விழுக்காட்டினர் சம்மன்களைக் கட்டவில்லை! சிங்கப்பூரில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியர்களை சும்மா விட்டிருப்பாளர்களா? நாமும் அவர்களைப்போல கறாராக இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை!

சிங்கப்பூரர்களுக்கு மலேசியாவிடமிருந்து இப்போது பல சலுகைகள் கிடைக்கின்றன. தங்களது கார்களுக்குக் குறைவான விலையில் பெட் ரோல் ஊற்றிக் கொள்கின்றனர். குறைவான விலையில் வீடுகளுக்கு வாடகைக் கொடுக்கின்றனர்.அதே வீடு சிங்கப்பூரில் கிடைப்பதும் இல்லை அந்த வாடகையில் வீடுகளும் இல்லை. இந்நாட்டில் குறைவான விலையில் சொத்துக்கள் வாங்குகின்றனர்.மலேசியர்களின் சொத்துக்களைக் குறைவான விலையில் சிங்கப்பூரர்கள் வாங்குவதால் மலேசியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  மலேசியா தனது தண்ணீரை மலிவான விலையில்  அவர்களிடம் விற்று பின்னர் சுத்திகரித்த நீரை அதிக விலையில் மலேசிய வாங்குகிறது.

இப்படியெல்லாம் அவர்களுக்குச் சலுகைகளைக் கொடுத்து அவர்களை மலேசிய வளர்த்துக் கொண்டு வருவதால் மலேசியர்களுக்குப் பயனில்லை. சிங்கப்பூரர்கள் பல வழிகளில் பயன் அடைகிறார்கள்.  ஆனாலும் மலேசியா,  சிங்கப்பூரர்கள் செய்கின்ற போக்குவரத்துக் குற்றங்களைக் கூட கண்டு கொள்ளாமல் அவர்களை விட்டு வைத்திருக்கிறது என்பது தான் ஆச்சரியம்!

2016-ம்  ஆண்டிலிருந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. அது தான் அரசாங்கத்தின் கொள்கை என்றால் யார் என்ன செய்ய முடியும்? ஆனால் சிங்கப்பூர் என்னும் போது அவர்கள் சுயநலவாதிகள் என்பதை மலேசியா மறந்து விடக் கூடாது என்பதில் மட்டும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!

இப்போது சம்மன்களைக் கட்டாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்கிற அறிவிப்பு கொஞ்சம் ஆறுதலளிக்கிறது! இதே கடுமை தொடர வேண்டும்!

Wednesday 6 April 2022

எதிர்காலம் இனி இல்லை!

 

                                                    Ex PM Tan Sri Muhyiddin Yassin

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அவரது கட்சியான பெரிக்காத்தான் நேஷனல்  கடந்த ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை!

ஜொகூர் மாநில  அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்தவர் முகைதீன். அது ஒரு காலம் என்று சொல்கின்ற நிலைமைக்கு  இன்று வந்து விட்டார் அவர்.

எல்லாம் அவர் செய்த தவறுகள். செய்த தவறுகள் இப்போது அவரைப் பழிவாங்குகின்றன!  பக்காத்தான் அரசாங்கத்தை அவர் நிம்மதியாக தனது கடமைகளைச் செய்ய விடவில்லை. தான் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக  அந்த அரசாங்கத்தை பின்வாசல் வழியாக கவிழ்த்தவர்! இது அனைவருக்கும் தெரிந்த கதை தான்.

ஏன் அவர் பக்காத்தான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது கூட தனது துரோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியர்களை அவர் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.  இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையில் அவர் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாக முகைதீன் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்திரமாகக் கூட இருக்கலாம்.

சென்ற 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கட்சி  ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைத் தீர்க்கப்படும் என்பதாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். முகைதீன் தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்ல முடியாது. அதை அவர் அறிந்தவர் தான். ஆனால் அவர் அதனை மறந்து போனார். பதவிக்கு வந்த பிறகு இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையைத் தீர்க்கும் அதிகாரம்  அவருக்கு இருந்தும் அவர் அதனைச் செய்யவில்லை. சட்டை செய்யவில்லை. இந்தியர்களை ஒரு பொருட்டாக அவர் மதிக்கவில்லை.

அரசியலில்  இனி அவருக்கு இறங்கு முகம் என்பதில் ஐயமில்லை. புதிய கட்சியைத் தொடங்குவது எளிது. ஆனால் தொண்டர்களுக்கு எங்கே போவது?  பதவியில் இருக்கும் போது பத்தாயிரம் பேர் கூட வேலை செய்யத் தயாராய் இருப்பான்! பதவியில் இல்லாத போது பத்து பேர் கூட உதவிக்கு வரமாட்டான்! மேலும் அவருக்கு உடல் நலமும் சரியில்லாத நிலையில் இனி அவரிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் தொண்டன் அறிவான்! தலைவனைப் போலத்தானே தொண்டனும்!

அரசியலுக்கு முழுக்குப் போட வேண்டிய நிலைமைக்கு முகைதீன் வந்துவிட்டார். வருகிற பொதுத் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெறும் என்பதெல்லாம் வெறும் பகற்கனவு என்பது தான் உண்மை! இன்றைய நிலையில் அவருக்கு ஓய்வு தேவை. நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்பதெல்லாம் இனி எடுபடாது! இனி உங்களை வரவேற்பார் யாருமில்லை!

உழைத்தது போதும்! ஓய்வு எடுங்கள் டான்ஸ்ரீ என்பதே நமது அறிவுரை

Tuesday 5 April 2022

எது முதலில்?

                கட்சி தாவலைத் தடுக்க பக்காத்தான் தலைவர்கள் ஆதரவு

கட்சி தாவலைத் தடுக்கும் மசோதா வருகிற திங்கள் கிழமை, 11-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படும் என்று மலேசியர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிட்டது!

பக்காத்தான் கட்சியினர், தாவலைத் தடுக்கும் மசோதாவுக்கு, தங்களது முழு ஆதரவை பிரதமர் இஸ்மாயிலிடம் உறுதி அளித்த நிலையில் இப்போது அது திசை திருப்பப்பட்டு விட்டது!

பக்காத்தான் கட்சியினர் முழு ஆதரவைத் தந்துவிட்டனர். ஆனால் எதிர்பார்த்தபடி  கட்சி தாவலின் கதாநாயகர்களான அம்னோவும் (பாரிசான் நேஷனல்),  பெரிக்காத்தான் நேஷனலும் வழக்கம் போல பின்கதவு வழியாக வெளியேறிவிட்டனர்!

இப்போது கதை மாறுகிறது!  சிறப்பு நாடாளுமன்றம திங்கள் கிழமை  கூடும் என்று  பிரதமர் உறுதி அளித்தபடி  அதில் எந்த  மாற்றமுமில்லை. ஆனால் எதற்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்? அது தான் கதாநாயகர்கள் ஓடி ஒளிகிறார்களே!

கட்சி தாவல் சட்ட  மசோதாவுக்கு அமைச்சரவை இன்னும் இணக்கம் காணவில்லை என்பதால்  இந்த மசோதா இப்போது ஒத்தி வைக்கப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்!

நாம் வெளியே இருந்து பார்க்கும் போது இது ஒன்றும் மலையைப் பெயர்த்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தக்கூடிய வேலையில்லை என்று நமக்குத் தெரிகிறது. அப்படி என்ன பெரிய பிரச்சனை? தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அவர்கள் எந்தக் கட்சியில் வெற்றி பெற்றார்களோ அந்தக் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு மாறக் கூடாது! மாற வேண்டுமானால் தேர்தலுக்குப் பின்னர் மாறலாம்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் எந்தக் கட்சியிலிருந்து ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அவர் பதவியில் இருக்கும் காலத்தில் வேறு கட்சிக்கு மாறக்கூடாது, அவ்வளவு தான். 

இதில் என்ன சிக்கல்? இதில் என்ன ஆயிரம் ஆய்வுகள் செய்ய வேண்டும்? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கட்சித் தாவலை ஆரம்பித்த வைத்தவர்கள் அம்னோ கட்சியினர் தான்! இப்படி மாறுவதற்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தனர்! அதனால் பக்காத்தான் அரசாங்கம் முழுமையாக ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவர்கள் செய்ய நினைத்த வேலைகள் அனைத்தும் தடைபட்டு விட்டன. 

இப்போது இது போன்ற கட்சித் தாவல் சட்டம் வந்தால் தாங்கள் தொடர்ந்து அரசியலில் இருக்க முடியாதே என்று அஞ்சுகின்றனர்!

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமா என்பதே சந்தேகம் தான். அதனால் தான் அடுத்த பொதுத் தேர்தலை சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அம்னோ கட்சியினர் நெருக்குதல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது நம் முன்னே உள்ள கேள்வி: கட்சித் தாவலை தடுக்கும் மசோதா முதலில் வருமா அல்லது 15-வது பொதுத் தேர்தல் முதலில் வருமா என்பது தான்! காரணம் அம்னோ பொதுத் தேர்தலைத் தான் விரும்புகிறது! அவர்கள் பக்கம் தான் காற்றும் வீசுகிறது!

Monday 4 April 2022

""பீஸ்ட்" அடி விழுமா?

 

    

ஒவ்வொரு விஜயின் படமும் வெளியாகும் போது கொஞ்சம் அமர்க்களமாக வெளியாவது வழக்கம்!

ஏதோ ஒரு காரணத்தைக் கூறி "அது தடை! இது தடை! தடை செய்யுங்கள்! படத்தை ஓட விடமாட்டோம்!" போன்ற கோஷங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆர்ப்பரிப்புகள் என்று வந்து போவது வழக்கமான ஒன்று!  இது ஒரு வகையான "இலவச விளம்பரம்"  படத்திற்குக் கிடைக்கிறது! அந்த இலவச விளம்பரத்தை விஜய் விரும்புகிறார்! என்ன தான் தளபதி விஜய் என்றாலும் தளபதிக்கு இந்த இலவச விளம்பரம் இல்லாமல்  படத்தை ஓட்ட முடியாது என்கிற பயமும் உண்டு!

இந்த யுக்தியை விஜய் தனது ஒவ்வொரு படத்துக்கும் கடைப்பிடித்து வருகிறார் என்பது நமக்குத் தெரியும்.

இப்போது இந்த படம் குவைத்தில் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் நாட்டிலும் "தடை செய்!" என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. மற்ற இஸ்லாமிய நாடுகளும் அதனைப் பின்பற்றும் என நம்பலாம்.

நம்மிடம் உள்ள ஒரு கேள்வி. முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பது விஜய்க்குத் தெரியாதா? அல்லது படத்தை இயக்கிய இயக்குநருக்குத் தெரியதா?  தெரிந்தும் ஏன் அவர் அப்படி செய்ய வேண்டும்? ஒரே காரணம் தான். முதலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்த வேண்டும்! பின்னர் "அதை மாற்றிவிட்டோம், இதை மாற்றிவிட்டோம்" என்று சொல்லி படத்தை வெற்றிகரமாக வெளியிட வேண்டும். இப்படித்தான் அவர்  தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்!

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இதிலும் ஓரு அரசியல் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆமாம்!  முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினால் இந்திய நாட்டை ஆளும் தரப்பினரின்  உள்ளம் குளிர்ந்து போகும்! அவர்கள் இந்தப் படத்தை வரவேற்பார்கள்!

இப்படி ஆளுங்கட்சியான பா.ஜ.க. வுக்கு  விஜய் தனது  ஆதரவைக் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்தப் படத்தின் மூலம் சொல்ல வருகிறாரா? அதற்கான வாய்ப்பும் உண்டு. எதையும் சொல்வதற்கில்லை!

தமிழ்  நாட்டை ஆள வேண்டும் என்கிற வேட்கை நடிகர்களுக்கு உண்டு. இப்போதைக்கு அது விஜய்க்குக்  கொஞ்சம் அதிகமாகவே உண்டு.  நடிகர் ரஜினி "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!" என்று ஒதுங்கிக் கொண்டார்! நடிகர் விஜய்க்கும் அதே நிலைமை தான் வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தங்கள் சுயநலத்திற்காக இனங்களுக்கிடையே மோதலை உருவாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது, மிருகங்கள் அதனைச் செய்வதில்லை. மனிதன் தான் மிருகத்தனமாக அதனைச் செய்கிறான்.

"பீஸ்ட்" படத்தைப் பற்றியான எந்த விமர்சனமும் நமக்குக் கிடைக்காத  நிலையில் நாம் அதைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியவில்லை. குவைத் நாடு சொல்லுகின்ற காரணம் சரிதான் என்று தெரியவந்தால்  விஜய் தனது கணிசமான ரசிகர்களை இழக்க வேண்டி வரும்.

"பீஸ்ட்" படத்திற்கு அடி விழுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!