Saturday 31 July 2021

மீண்டும் மீன் நழுவுமா!

 பிரதமர் முகைதீன் யாசினைப்  பற்றி பேசும் போது ஒரு விஷயம் ஞாபத்திற்கு வருகிறது. "கழுவுற மீன்ல நழுவற மீன்"  தான் நமது பிரதமர்!

அவர் எப்போது ஆட்சி பொறுப்பேற்றாரோ அன்றிலிருந்து அவரது  நடவடிக்கைகளை விமர்சிக்கும் போது மேலே சொன்ன பழமொழி தான் முன் நிற்கிறது!

நெருக்கடி வந்த பொழுதெல்லாம் அவர் எத்தனையோ தந்திரோபாயுங்கள் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன. இந்த முறை மட்டும் என்ன அவர் புறமுதுகு காட்டியா ஓடப்பொகிறார்? அது நடக்கும் காரியம் அல்ல!

ஆக, கடைசியாக நடந்தது என்ன? அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு மாமன்னருக்கு  அதாவது நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாகவே அறிவுரை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அரண்மனையோ அது நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டு,  வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்பது தான் மாமன்னரின் விருப்பமாக இருப்பதாக அறிவிக்கிறது.. அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை செய்து விட்டோம் என்பது தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு.

அடுத்து என்ன நடக்கும்? மாமன்னர் தனது கட்டளையை முகைதீன் அரசாங்கம் ஏற்காதது அவருக்குச் சினத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முகைதீனோ இதற்கெல்லாம் அசராத மனிதர்!  அவர் பிரதமராக எப்போது பின் கதுவு வழியாக வந்தாரோ அன்றிலிருந்து இந்நாள் வரை அவர் யாரையும் மதித்தாகத் தெரியவில்லை! இனி மேலும் அவர் மதிப்பார் என்றும் சொல்லுவதற்கில்லை! சினம் என்ன மாமன்னருக்கு மட்டும் தானா பொது மக்கள் அனைவரின் சினமும் முகைதீன் மேல் இருக்கிறது!

திங்கள் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகமும் இப்போது எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கோவிட்-19 ஏற்பட்டிருப்பதைக் காரணம் காட்டி கூட்டம் இரத்து செய்யப்படலாம்! எதுவும் நடக்கலாம்! அல்லது பிரதமர் முகைதீன் தன் மேல் எந்தக் குற்றமுமில்லை என்று சொல்லி  இதற்கெல்லாம் காரணம் சட்டத்துறை அமைச்சர் தாக்யூடீன் ஹாசன் தான் என்று அவர் மீது பழிபோட்டுத்  தப்பிக்கப் பார்க்கலாம்! எதுவும் சாத்தியம்! இதுவும் சாத்தியம்!

முகைதீன் யாசின் பிரதமர் பதவியை விட்டு விலகுவார் என்கிற பேச்சுக்கே இடமில்லை! பொறுத்திருந்து பார்ப்போம்!

மீன் நழுவும்!

Friday 30 July 2021

பெருந்தொற்று மேலும் பெருக வேண்டாம்!

 பெருந்தொற்று  இன்னும் பரவலாகப் பெருக நாம் காரணமாக இருக்க வேண்டாம்! அதற்கு நமது முதல் கடமை தடுப்பூசி போட்டுக் கொள்வது தான்.

சுகாதார தலைமை இயக்குனர்,  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனை பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். விரைந்து போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார். சமீபத்திய கணக்கின் படி கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 92 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் என்கிறார் டாக்டர் நூர்.

ஆக  பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள். இன்னும் தயங்கிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், பயந்து கொண்டும் இருக்க வேண்டாம். கோவிட்-19 தொற்று நம்மைத் தாக்கக் கூடாது என்கிற பயம் இருந்தால் உடனடியாகத் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்.

இப்போது நாம் நிறையவே செய்திகளைப் படிக்கிறோம். மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை என்று செய்திகள் வருகின்றன. உங்களுக்குத் தொற்று வந்த பின்னர் மருத்துவமனைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதன் பின்னர் திரும்பி வருவீர்களா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!  வந்தால் வாழ்த்துகள்!  வராவிட்டால் அனுதாபங்கள்! 

ஆனால் இதை விட தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது அல்லவா. இரண்டு முறை தடுப்பூசியைப் போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டதும் உங்களுக்கு நூறு விழுக்காடு பாதுகாப்பு என்று யாரும் சொல்ல வரவில்லை.  உங்களுக்கு ஆபத்துக் குறைவு என்பது தான் அதன் பொருள்.

இப்போதைக்கு இந்த தடுப்பூசி தான் ஒரே வழி. மலேசியாவில் மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்தும்  இதே வழியைத்தான் கையாள்கின்றன.. ஏதோ நம் நாடு மட்டும் தான் இதை வலியுறுத்துகிறது என்று பொருள் கொள்ள வேண்டாம். தொற்று நோயைத் தடுப்பதற்கு வேறு வழி இல்லை என்பதால் தான் வற்புறுத்தப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

இப்போதே மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை. இன்னும் இழுத்துக் கொண்டே போனால் என்ன என்ன பற்றாக்குறை வரும் என்பதை ஊகிக்க முடியவில்லை! எதுவும் நடக்கலாம். ஊசி போட்டுக் கொள்ளமுடியாத நிலை கூட ஏற்படலாம்! எல்லாமே சாத்தியம்!

நண்பர்களே! கோவிட்-19 எந்த விதத்திலும் குறைவதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் புதிய புதிய மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொற்றும்  வெவ்வேறு வடிவத்தில் வந்து கொண்டிருக்கிறது.

நம்மால் நோய் பரவ வேண்டாம்! அதற்குத் தடுப்பூசி ஒன்றே சாத்தியம்!

Thursday 29 July 2021

கதவுகள் திறந்தன!


ஓடிக்கொண்டிருந்த LRT தொடர் வண்டியில்  தானாகவே கதவுகள்  திறந்து கொண்டது  எப்படி என்பது  புரியாத புதிர்!

 எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது ஒரே ஆறுதல்.

ஏழு பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த அந்த இரயில் பெட்டியில் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது ஆனால் நடந்துவிட்டது! நடந்துவிட்டதை நடந்துவிட்டதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு என்ன செய்ய? நடந்து விட்டதை  நடக்கவில்லை என்று சொல்லவா முடியும்!

ஆனால் இந்த சம்பவத்தை இலேசாக எடுத்துக் கொள்ள முடியாது. பேருந்துகளில் கூட இப்படி நடந்தால் நமக்கு அச்சத்தை தரும். அப்படியிருக்க தொடர்வண்டி என்றால்?

இப்போதெல்லாம் மலேசியர்கள் பயணம் செய்கின்ற ரயில் பிரயாணங்கள், குறிப்பாக LRT பயணங்கள், எல்லாம் பாதுகாப்பற்றவை என்கிற எண்ணத்தை இது போன்ற செயல்கள்  நமக்கு  ஏற்படுத்துகின்றன.  ஏற்கனவே, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக,  இரண்டு LRT இரயில்கள்  நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளுதைப் பார்க்கும் போது இனி  இது தொடருமா என்கிற சந்தேகம் எழத்தான் செய்கின்றது.

இந்த இரயில் போக்குவரத்தை நடத்தும் நிறுவனம் எந்த அளவுக்கு இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தது என்பது தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற போதெல்லாம் "இனி இது போன்று சம்பவங்கள் நடக்காது!" என்று உறுதியைப் பொது மக்களுக்கு அள்ளி அள்ளி வீசுகின்றனர்! ஆனால் நடந்து கொண்டு தான் இருக்கிறது! என்ன செய்ய?

இனி மலேசியர்கள் எந்த ஒரு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும் நூறு விழுக்காடு பாதுகாப்பு என்பதை நம்ப வேண்டாம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது! ஆபத்துக்களோடும், விபத்துக்களோடும் வாழ வேண்டியது  நமக்கு இயல்பான ஒன்றாகிவிட்டது!

இப்படி ஓடுகின்ற இரயிலில் கதவுகள் திறந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது தான்.  ஆனால் இரயிலில் கூட்டம் இல்லை அதனால் பிரச்சனைகளும் எழவில்லை என்று பார்க்கும் போது நாமே திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான்!

கதுவுகள் திறந்தால் என்ன? நாமே போய் மூடாமல் இருந்தால் சரி!
 

Wednesday 28 July 2021

அம்மாமார்களே! இது நியாயமில்லையே!

 "இப்போது நேரமே சரியில்லை!" என்று பலர் புலம்புகின்ற காலக்கட்டம்.

ஆனால் இப்போதும் கூட நாம் பாடம் படிக்கவில்லை. இன்னும் நாம் வயிறை முழுமையாகப் பட்டினி போடுகிற நிலைமைக்கு வரவில்லை. ஆனால் உணமையாகவே வறுமையில் வாடுகின்ற குடும்பங்கள் பல உண்டு. வயிற்றைப் பட்டினி போடுகின்ற குடும்பங்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

முகநூலில் டத்தோ ஒருவர் பேசிய காணொளியைக் காண நேர்ந்தது. நான் ஆச்சரியப்பட்டுப்  போனேன்! இன்னுமா இப்படி! எங்கே போய் முட்டிக் கொள்வது? 

பலர் பல வழிகளில் உதவிகள் செய்கின்றனர். பண உதவி யாராலும் செய்ய முடியாது. முடிந்த வரை உணவுகள் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்குப் பால் பவுடர் போன்ற உதவிகளையும் செய்கின்றனர். பால் பவுடர் என்பது சாதாரண விஷயமல்ல.  அதுவும் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்க முடியாது.  அதை இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு அதன் விலை கட்டுப்படியாகாது. ஆனாலும் அதையும் கூட ஒரு சிலர்,  குழந்தைகளின் நலனை முன்னிட்டு, வாங்கிக் கொடுக்கின்றனர்.

ஆனால் டத்தோ அவர்கள் சொன்னது பல தாய்மார்கள், கவனியுங்கள், பலர்,  பேம்பெர்ஸ் கிடைக்குமா என்று கேட்பதாக அவர் கூறினார்! நானே அதை எதிர்பார்க்கவில்லை.

மிகவும் சிரமமான ஒரு காலக் கட்டத்தில் எது நமக்கு முக்கியம்! சாப்பாடு  இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. அதனால் உணவுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தான் கொடுப்பவர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஆனால் பெம்பெர்ஸ் கேட்பதில் என்ன நியாயம்? அது அவர்களுக்கே அநியாயமாகத்  தோன்றவில்லை என்பது தான்  அதிசயம்! அதுவும் அந்த டத்தோ சொல்லும் போது கேட்பவர்கள் பல தாய்மார்கள் என்கிறார்! நாம் என்ன நினக்க வேண்டியுள்ளது?  இவர்களுக்கு உணவு மித மிஞ்சி கிடைக்கிறது அதனால் தான் கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமல் பேம்பெர்ஸ் கிடைக்குமா என்று கேட்கின்றனர் என்று தானே நமக்குத் தோன்றும்?

தாய்மார்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இவர்களுடைய தாய்மார்கள் எந்த பேம்பெர்ஸ்ஸை பாவித்தார்கள்? அதற்குள்ளேயே அனைத்தையும், உங்கள் வாழ்க்கை முறை அனைத்தையும், மறந்து போனீர்களே அம்மா! என்னவென்று சொல்லுவது! பழசை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கலாமா!

நீங்கள் பேம்பெர்ஸ் பாவிக்கக் கூடாது என்பதல்ல! நீங்கள் எப்போது பழைய நிலைக்குத் திரும்ப முடியுமோ அப்போது நீங்கள் மீண்டும் பாவிக்கலாம்.  யார் அடிக்கப்போகிறார்? மேலும் இன்னொரு கேள்வியும் எழுகிறது. வேலை இல்லை. சும்மாதான் வீட்டில் இருக்கிறீர்கள்.  இந்த நேரத்தில், குறைந்த பட்சம் சிக்கனம் கருதி,  பேம்பெர்ஸ் தவிர்த்து, வேறு பழைய துணிகளைப் பயன்படுத்தலாமே! வேலை இல்லாமல் வீட்டில் சும்மா தானே இருக்கிறீர்கள்? என்ன கெட்டுப் போய்விட்டது?

அம்மாமார்களே! தயவு செய்து யோசியுங்கள். நீங்கள் பட்டினியாய் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் உணவு பொருள்கள் கொண்டு வந்து உங்களின் சிரமத்தைக் குறைக்கின்றனர். அதற்கு மேல் எதிர்ப்பார்க்காதீர்கள்.

நியாயமானதைக் கேட்டுப்  பெறுங்கள்!  அதற்கு மேல்......வேண்டாமே!


Tuesday 27 July 2021

உதவி செய்வதிலும் அயோக்கியத்தனமா?

 இந்த கோவிட்-19 காலக் கட்டத்தில் மக்கள் பலவாறான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அதனால் தான் ஏதோ ஒரு சிலர் தங்களால் இயன்றதை சிறிய அளவிலோ  பெரிய அளவிலோ  உதவி செய்து வருகின்றனர். அவர்களுடைய விசாலமான - பெருந்தன்மையான மனதிற்கு மனதார பாராட்டுகிறோம்.

ஆனால் உதவி செய்வதிலும் "இவர்களுக்குத்தான் இந்த உதவி! இந்த இனத்திற்கு மட்டும் தான் இந்த உதவி! இந்த இனத்தினர் எந்தப் பொருளையும் தொட வேண்டாம்!" என்று எழுதிப் போட்டு உதவியிலும் அவர்களின் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறார்களே இதைப் படிக்கும் போது நமக்கே வியப்பாய் இருக்கிறது.

இன்றைய நிலையில் பலர் - இந்த இனத்தவர் தான் - என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் கஷ்டத்தில் உள்ளனர். சீனர்கள் பணக்காரர்கள் என்று சொன்னாலும் அவர்களிலும் பலர் சிரமத்தில் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோல மலாய்க்காரர்கள் அனைவருமே அரசாங்க ஊழியர்கள் அல்ல. அதனால் அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. இதில் இந்தியர்களின் நிலை இன்னும் கொஞ்சம் மோசமான சூழ்நிலை என்பது தெரிந்ததே.

இந்த நேரத்தில் உதவி செய்ய நினைப்பவர்கள்  நிபந்தனைகளை விதிப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. ஒரு சிலருக்கு வித்தியாசமான மனோபாவம் உண்டு.  தாங்கள் சார்ந்த மதத்தினருக்கு உதவி போய் சேர்ந்தால் மட்டுமே தங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் உண்டு.

இப்படி பேசுவது முட்டாள் தனம் என்று தெரிந்தாலும் அவர்களுடைய நம்பிக்கையை நாம் ஏன் சிதைக்க வேண்டும்? ஆனால் அவர்கள் ஒன்று செய்யலாம். அவர்களுடைய வழிப்பாட்டுத்தலங்களில் அவர்கள் உதவிகளைச் செய்தால் அங்கு மாற்று மதத்தினர் யாரும் போக மாட்டார்கள். இது ஒரு வழி அவ்வளவு தான்.

இது போன்ற நபர்களை ஜோகூர் சுல்தான் வனமையாகக் கண்டித்திருக்கிறார். உதவிகள் இனப்பாகுபாடு இன்றி எல்லா இனத்தவருக்கும் போய்ச் சேர வேண்டுமே தவிர அங்கு எந்த பாகுபாட்டையும் காட்ட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அதுவும்  ஒரு மளிகைக்கடையில் இது போன்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு மளிகைக்கடை என்றால் வாடிக்கையாளர்களில் எல்லா இனத்தவர்களும்  உண்டு. ஒரு குறிப்பிட்ட இனத்தவர் வேண்டாம் என்று அவர்களால் ஒதுக்கிவிட முடியுமா?

இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்தவர் ஒரு மளிகைக்கடைக்காரர். எந்த இனத்தவர் என்று தெரியவில்லை. இந்த குறிப்பிட்ட இனத்தவர்கள் வேண்டாம் என்று சொல்லப்பட்டவர்கள் யார்?இந்தியர்கள்!

மிகவும் இக்கட்டான காலக் கட்டத்தில் இந்தியர்களுக்கு உணவு பொருட்கள் கூட கொடுக்கக் கூடாது  என்று மற்ற இனத்தவர்கள் நினைக்கும் அளவுக்கு நமது தரம் உயர்ந்திருக்கிறதா? 

எது எப்படியிருப்பனும் நாம் அவர்களைப் போல இல்லாது அனைவருக்கும் நல்லதே செய்வோம்! அவர்கள்  ஏழையோ இல்லையோ அதுவே நமது தாரக மந்திரமாக இருக்கட்டும்! 

Monday 26 July 2021

புரிந்து தான் பேசுகிறாரா?

 அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு இதோ இன்னொரு சான்று!

அம்னோவின்  உதவித் தலைவரான முகமத் காலிட் நோர்டின் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதாவது  "தடுப்பூசி போட விரும்பாதவர்கள்,  போட முடியாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம். அவர்களது நமபிக்கை அல்லது அவர்களது விரூப்பத்திற்கே விட்டு விடுங்கள்!"  என்கிறார் அவர்.

இந்தக்  கருத்து சரிதானா என்று கேட்பதைவிட இப்படி ஒரு கருத்தை அவர் ஊடகங்களில் வெளியிடலாமா என்பது தான் முக்கியம்.

இந்த அரசியல்வாதிகளில் யாராவது மக்கள் நலனை யோசிக்கிறார்களா என்றால் அது தான் இல்லை.  ஒவ்வொரு நாளும் டாக்டர்கள் மக்களைப் பார்த்து "தயவு செய்து ஊசி போடுங்கள்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். ஏன்? எல்லாருக்கும் தெரிந்த காரணம் தான்.

கோவிட்-19 முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்றால்  தடுப்பூசி போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அது தான் ஒரே வழி வேறு  வழியில்லை.  இந்த நேரத்தில் "போட்டால் போடுங்கள் போடாவிட்டால் பரவாயில்லை!"  என்கிற பாணியில் பேசுவது சரியான கருத்து இல்லை.

அவர் இப்படிக் கூறுவதற்கான நோக்கம் புனிதமாக இருக்கலாம். ஆனால் நாடு எதிர்நோக்கும் நெருக்கடியைக் குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைய கணக்கின் படி நாட்டின் மொத்த பாதிப்புகள் ஒரே நாளில் 17,000-த்துக்கும் மேல் எகிரிவிட்டன!

உண்மையைச் சொன்னால் அரசாங்கம் இப்போது தான் பெருந்தொற்றின் அபாயத்தைப் புரிந்து கொண்டு தனது நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது. எப்போதோ செய்ய வேண்டியதை இப்போதாவது செயல்படுத்துகின்றதே என்று நாமும் திருப்தி அடைய வேண்டியது தான்!

இன்றைய நிலையில் வேண்டுமா, வேண்டாமா என்கிற கேள்விக்கு இடமில்லை. ஊசி போட்டே ஆக வேண்டும் என்கிற ஒரே நியதி தான் உண்டு. போடவேண்டாமென்று  நினைத்தால் அவர்கள் தனித்து இருக்கு வேண்டும்.  தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். பொது வெளிக்கு வருவதை தடை செய்து கொள்ள வேண்டும். 

ஆனால் அது போன்று யாரும் செய்வதில்லை. அதனால் தான் பிரச்சனைகள் எழுகின்றன. எங்கேயாவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற நிலை தான் எங்கும் நிலவுகிறது. ஏன்? அரசியல்வாதிகளையே   எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வர முடியவில்லையே!

அதனால் தான் நமக்கு உள்ளதெல்லாம் ஒரே வழி ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்று டாக்டர் சொல்லுவதைக் கேட்போம்.

அரசியல்வாதிகள் சொல்லுவதைத் தவிர்ப்போம்!

Sunday 25 July 2021

இந்நேரத்தில் இது தேவையா?

 

இந்த இக்காட்டான நாள்களில் மக்களுக்கான தேவை என்ன என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஜென்மங்கள் இருந்தும் என்ன பயன்?

தடுப்பூசிகளில் கவனம் செலுத்துங்கள் என்றால் மக்கள் என்ன ஆடை அணிந்து கொண்டு வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தும் நபர்களை எப்படித் தண்டிப்பது? இவர்களையெல்லாம் வேலைக்கு வைத்திருப்பது எதற்காக? 

ஊசி போட வருபவர்கள் எதற்காக வருகிறார்கள் என்கிற ஞானம் கூட இல்லாதவர்கள் இந்த பொறுப்பற்றக் கூட்டம்!

இந்தப் பொறுப்பை ஊசி போடுவதில் காட்டினால் பாராட்டலாம்.  வெறும் "கோச டப்பா" ஊசியை வைத்துக் கொண்டு ஊசி போடுகிறார்களே அவர்களை இவர்கள் கண்டுப் பிடித்தால் பாராட்டலாம்.

ஒருவர் "எனக்கு ஊசி போட்டதாகவே தெரியவில்லை! ஒரு வலியும் இல்லையே!" என்கிறார்! இன்னொருவர் "ஒரு மருந்தும் இல்லாத கோச ஊசியை எனக்குப் போட்டார்கள்!" என்று வலிய வந்து குறை சொல்லுகிறார்!

இப்போதே பல குறைபாடுகள் கூறப்படுகின்றன.  இங்கு போடுகின்ற மருந்துகளைக் குறைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?  ஆடைகளைப் பற்றி குறைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே இந்தக் கூட்டம் தான் இது போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

எது முக்கியம் என்பதையெல்லாம் மறந்து உப்புச்சப்பற்ற பிரச்சனைகளைக் கிளப்பி, தங்களது திருட்டுத் தனங்களை மறைக்க,  நல்ல பேர் வாங்குவது தான் இவர்களது நோக்கம்!

ஊசி போட வருபவர்கள் என்ன நிலையில் வருகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவர்களுடைய வேலை நேரத்தில் அவர்கள் வருகிறார்கள். ஊசி போட வருபவர்கள் அனைவரும் சீவி சிங்காரித்து வருபவர்கள் அல்ல. பலர் ஏதோ வேலையில் இருப்பவர்கள். அதனால் வேக வேகமாக வந்து ஊசி போட வருகிறார்கள். அவர்களைப் புறக்கணித்து திருப்பி அனுப்பி உடைகளை மாற்றிக் கொண்டு வா என்று கட்டளையிடுவது கண்டிக்கத்தக்கது. 

"கோவிட்-19 ஊசி போட்டுக் கொள்ளுங்கள்"  என்று அரசாங்கம் வருந்தி அழைக்கிறது. ஆனால் இந்தக் கூட்டமோ கொஞ்சம் கூட அக்கறை இன்றி அவர்களைத் திருப்பி அனுப்புகிறது!

எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத காட்டுக் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டி வருகிறது!

இந்த நேரத்தில் இந்த உடை கட்டுப்பாடு தேவையா என்றால் தேவை இல்லை என்பது தான் பதில். அந்த நேரத்தில் இன்னொரு பத்து பேருக்காவது தடுப்பூசி போட்டிருக்கலாம்!

வேலைகளை விட்டுவிட்டு வெட்டி வேலையில் ஈடுபடும் இது போன்ற நபர்களை வைத்துக் கொண்டு எந்தக் காலத்தில் நாம் கொரோனாவை  வெற்றிக் கொள்ளப் போகிறோம்?

Saturday 24 July 2021

இதற்குத் தண்டனை உண்டா?

 கிறிஸ்துவம் பற்றி பேசும்போது மகாத்மா காந்தி சொன்னதாக ஒரு தகவல் உண்டு. "கிறிஸ்துவம் நல்ல சமயம் தான் ஆனால் கிறிஸ்துவர்கள் அப்படியல்ல!"  என்று அவர் சொன்னதாகச் சொல்லுவார்கள்.

உண்மை தான். எல்லா சமயங்களும், எந்த ஒரு சமயமும்,  தவறான சமயம் என்பதாக ஒன்றுமில்லை. எல்லாமே அன்பைப்  போதிக்கின்றன. சமாதானத்தைப் போதிக்கின்றன.

ஆனால் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சமயம் சொல்லுகின்ற எதையுமே பின்பற்றுவதில்லை! அதைத்தான் எல்லாக் காலக் கட்டங்களிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

சமயம் சொல்லுகின்ற எதையுமே பின்பற்றாமல் அதற்காக சண்டை போடத் தயாராக இருக்கிறோம்! அன்பு வேண்டாம்! சமாதானம் வேண்டாம்! ஆனால் சண்டை போடத்  தயார்! அதிகாரத்தை மீறத்  தயார்! சட்டத்தை உடைக்கத் தயார்!

எதன் பெயரால்? எல்லாமே மதத்தின் பெயரால்! 

மதத்தின் பெயரால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யத் தயாராக இல்லை. ஏழைக்கு உதவத் தயாராக இல்லை. பள்ளிகளைக் கட்டி கல்வியைக் கொடுக்கத் தயாராக இல்லை. சொந்தப் பணத்தில் எந்த ஓர் உதவியையும் செய்யத் தயாராக இல்லை.

ஆனால் மதத்தின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கத் தயார். ஏமாற்றத் தயார். எல்லா மாபாதகங்களையும் செய்யத் தயார்.

இன்னொரு பக்கம் இப்படி எல்லாத் தீயச் செயல்களையும் கடவுள் அனுமதிக்கிறார் என்று பேசவும் தயார்!  ஆமாம், அவர் அனுமதிக்கிறார்! கடவுள் அவருடைய பக்தன் ஏழையாக இருப்பதை விரும்புவதில்லை. அதனால் கொள்ளையடிப்பதை அவர் எதிர்க்கவில்லை. எல்லாப் பக்தர்களும் அதைத் தான் செய்கிறார்கள்! தவறு என்றால் அவர்கள் செய்யமாட்டார்கள்!

கொள்ளையடிப்பது யார் வீட்டுப் பணம்? நாங்கள் ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கவில்லையே! எங்களுடைய வரிப்பணம் தானே! கொள்ளை என்று ஏன் சொல்கிறீர்கள். அது எங்கள் உரிமைப் பணம்! கொள்ளையல்ல! அப்படியே நாங்கள் கொள்ளையடித்தாலும், இறைவனே! நாங்கள் என்றாவது உம்மை மறந்திருக்கிறோமா? அப்படியே நாங்கள் அதிகாரத்தை எதிர்த்தாலும்  உமக்காகத்தானே செய்கிறோம்! உமது புகழ் மங்கி விடக்கூடாது என்று தானே செய்கிறோம்!

இப்படித்தான் மேலே அதிகாரத்தில்  உள்ளவன் நினைக்கிறான்! சட்டத்தை மீறுபவன் நினைக்கிறான்!

இவர்களுக்கெல்லாம் தண்டனை உண்டா? கடவுள் கொடுக்கமாட்டர்! அவர் நல்லவர்! ஆனால் நீதிமன்றம் கொடுக்கும்!

Friday 23 July 2021

இறைவனின் தண்டனையா?

கோவிட்-19 என்னும் தொற்று நோய் உலக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நமது நாடும் அந்தத்  தொற்று  நோயோடு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறதே தவிர கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.

மக்களில் பலர் இந்த நோய் மனித குலத்திற்கான இறைவனின் தண்டனை என்பதாகப் பேசி வருகின்றனர்.  மக்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

இருக்கட்டும். ஆனால் அதையே,  அதாவது இறைவனின் தண்டனை என்று ஒர் அரசியல்வாதி சொல்லுவாரானால் அது அவருடைய இயலாமை அல்லது கையாலாகத்தனம் என்று தான்  சொல்ல வேண்டி வரும்! இறைவனின் தண்டனையா?  இருக்க முடியாது!

இந்தப் பெருந்தொற்று இறைவனின் தண்டனை என்று ஓர் அரசியல்வாதி சொல்லுவாரானால் அவருக்கு ஏதோ மனக்கோளாறு என்று தான் சொல்ல வேண்டி வரும். அதாவது அந்த அரசியல்வாதி இறைவனும் தன்னைப் போன்று தான் என்று அந்த அரசியல்வாதி நினைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டி வரும்!

இறைவனும் அரசியல்வாதியும் ஒன்றா?  இதைத் தான் நாம் அயோகியத்தனம் என்கிறோம்! அது சரி இறைவன் நல்லவரா, கெட்டவரா? எந்த ஒரு மதத்தினரும்  தாங்கள் வழிபடும் தெய்வம் கெட்டவர் என்று சொன்னதாக சரித்திரம் இல்லை!  கடவுள் என்றால் நல்லவர், அவ்வளவு தான்!

அப்படிப்பட்ட அந்த நல்ல கடவுள் ஏன் கெட்டவராக மாறி ஒரு பெரும் தொற்றை உலகுக்குக் கொண்டு வர வேண்டும்? அது சாத்தியமில்லை. கடவுள் மனிதருக்குக் கெடுதல் நினைப்பவர் அல்ல.  நல்லதை செய்பவர் தான் கடவுளே தவிர கெட்டதை செய்பவர் அல்ல.  அன்பைப் போதிப்பவர் கடவுள். மற்றவர்களையும் நேசி என்பவர் கடவுள். அப்படியிருக்க தீடிரென ஏன் கடவுள் கெட்டவராக மாற வேண்டும்.

இப்போது நடந்தது என்னவோ சீன நட்டின் அயோகியத்தனம் என்பதாகத்தான் உலகெங்கும் பேசப்படுகிறது. மனிதனுக்கு மனிதனே வைக்கின்ற ஆப்பு என்று இதைத்தான் சொல்லுகின்றனர்.  மனிதன் தனக்குத் தானே வைக்கின்ற வேட்டு என்று தான் பார்க்கப்படுகின்றது. சொல்லப்போனால் அரசியல் ரீதியான தாக்குதல் தான் இது.  அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனம், மனித குலத்தின் மீதான இழிச்செயல் தான் இந்த பெருந்தொற்று. 

கடவுளுக்கும் உலகை அழிக்கும் இந்த நாச செயலுக்கும் முடிச்சுப்  போடாதீர்கள்.  அரசியல்வாதிகளின் ஆணவம் தான் இந்தப் பெருந்தொற்று.

இறைவனின் தண்டனை அல்ல இந்த கோவிட்-19.  மனிதனின் ஆணவத்தால் விளைந்த தீய சக்தி இந்தத்  தொற்று.  அரசியல்வாதிகளின் அராஜகம்! பேராசைப் பேய்களின் பேயாட்டம்!

இறைவன் நல்லவர். போற்றத்தக்கவர். பேரன்புக்குரியவர். அவரைப் பழிசொல்ல யாருக்கும் தகுதி இல்லை!

இது இறைவனின் தண்டனை அல்ல! அராஜகம் பண்ணும் அரசியல்வாதிகள் அப்பாவி மக்களுக்குக் கொடுத்த தண்டனை!

Thursday 22 July 2021

இந்தியர்களின் பிரச்சனை என்ன?

 இத்தனை ஆண்டுகள் ஆகியும் மலேசிய இந்தியர்களின் முன்னேற்றம் என்பது அப்படி ஒன்றும் பெருமைப்படத் தக்கதாக இல்லை!

தன் கையே தனக்கு உதவி என்கிற தத்துவம் இந்தியர்களிடையே இன்னும் ஆழமாகப் பதியவில்லை என்றும் சொல்லலாம்.

அரசாங்கம் செய்ய வேண்டிய சில கடமைகளை செய்யாமல் அது பின்வாங்கிவிட்டது. செய்யவில்லை என்றால் அதைக் கேட்க ஆளில்லை என்கிற நிலை தான் இன்னும் நிலவுகிறது.

நாம் அதைப் பற்றி அதிகம் பேச வேண்டாம்  அரசாங்கம் செய்ய வேண்டியது  என்ன என்பது பற்றி மட்டும் பேசுவோம்.

நாட்டின் மலாய், சீன சமுகத்திற்கு அடுத்த நிலையில் நாம் உள்ளோம். அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்ட மூன்றவது பெரிய இனம். இப்போது நமது தேவைகள் என்ன?  அரசாங்க வேலைகளில் பத்து விழுக்காடு நாம் பணியாற்ற வேண்டும். அதே போல தனியார் துறைகளிலும் அதே விழுக்காடு தான். கல்வித்துறை மிக முக்கியமானது நாம் கேட்பது பத்து விழுக்காடு தான். அந்த பத்து விழுக்காட்டை அடிப்படையாக வைத்து அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தினால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் எழப்போவதில்லை. இந்நாட்டில் பெருமைக்குரிய  இனமாக நம்மாலும் வாழ முடியும். ஆனால் நம்மை சிறுமை படுத்துகிற வேலை தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அதற்கு நம் ஆளே துணை போகிறான்!  

 நம்மை எந்த ஒரு கொம்பானலும் குறைத்து மதிப்பிட முடியாது.  எல்லாத் துறைகளிலும் நமது பங்களிப்பு என்பது அதிகம். பல துறைகளில் நாம் நிபுணத்துவம் பெற்றவர்கள். பிறர் தங்களை உயர்த்திக் கொள்வதற்கு நமது இனம் ஏணியாக  பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என்பது  ஊரறிந்த உண்மை.

நமக்கு வேண்டியது நமது உரிமை பத்து விழுக்காடு என்பது தான்.இதனை ஏன் அரசாங்கம் செய்ய மறுக்கிறது என்பது  நம் கேள்வி.

நமது உரிமைகளைப் பிடுங்கி இன்னொரு இனத்திற்கு இலவசமாகக் கொடுப்பது என்பது  காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது!  தங்களது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ள செய்கின்ற ஏற்பாடு தான்  இது! அதாவது ஒரு இனத்தைக் கீழே தள்ளி இன்னொரு இனத்தை அதன் மேல் ஏறி தங்களின் காரியத்தைச் சாதிப்பது! அது மட்டும் அல்ல தொடர்ந்தாற் போல கீழே தள்ளப்பட்ட அந்த இனம் தலை தூக்காதபடி செய்து அவர்களை கீழேயே வைத்திருப்பது! அதாவது நமது உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டு, கீழே தள்ளிய பிறகும், நாம் முன்னேறிய சமூகம் என்று கிண்டலடிப்பது!

இதிலிருந்து மீள வழியில்லையா? உண்டு. அது நமது பொருளாதாரத்தை  வளப்படுத்துவது. அரசாங்கம் கொடுக்கின்ற உதவி எதுவும் நமக்கு வந்து சேர்வதில்லை. அது இடையிலேயே காணாமல் போகிறது! கல்வியில் நமது தரத்தை உயர்த்துவது. சுறுக்கமாக சொன்னால்  தன் கையே தனக்கு உதவி என்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.

நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் தலைவனும் நமக்கு உதவப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

அரசாங்கம் உதவினால் நல்லது. நமது முன்னேற்றம் துரிதமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் நாமே நமக்கு உதவி நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டியது தான்!

நாம் முன்னேறலாம்! நம்மால் முன்னேற முடியும்! 

Wednesday 21 July 2021

சொன்னா கேளுங்க சார்!

 கோவிட்-19 ஒழிந்து நாடு மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டுமென்றால் மக்களின் பங்கு தான் மிக மிக முக்கியம்!

அதைத்தான்  அரசாங்கம் சொல்லி வருகிறது. மக்கள் நலன்  மீது அக்கறை உள்ளவர்கள் அதையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

ஒவ்வொருவரும் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். இன்றைய நிலையில் தடுப்பூசி ஒன்றே வழி.  எவ்வளவு தான் சிந்தித்துப் பார்த்தாலும் வேறு வழி தோன்றவில்லை. வேறு வழி இல்லை. அது தான் உண்மை.

இதைத்தான் உலகில் உள்ள அத்தனை அரசுகளும் செய்து வருகின்றன.  நாமும் அதைத்தான் செய்ய வேண்டும்.

ஊசி போட பயம்! உண்மை தான். சின்ன வயதில் பயமுறுத்தி பயமுறுத்தி போடப்பட்ட ஊசி கடைசி காலம் வரை நம்மோடு வந்து கொண்டு தான் இருக்கும்! அதனையெல்லாம் மறந்துவிட்டு இப்போது குறைந்தபட்சம் பொது மக்கள் நலன் கருதி நாம் போடத்தான் வேண்டும்.

"நான் ஒருவன் ஊசி போடாவிட்டால் குடியா முழுகிப் போய்விடும்!" ஆமாம்! குடி முழுகித்தான் போய்விடும்! அதில் சந்தேகம் வேண்டாம். உங்கள் ஒருவரால் கோவிட்-19 மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உண்டு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. உங்களால் எதுவும் நடக்கலாம். உங்கள்  ஒருவரால் இந்த உலகத்துக்கே பரப்பிவிட முடியும்!

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஊசி போட போக்குவரத்து பிரச்சனைகள் இருந்தால் அதனை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தால்  அதனையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு சிலர் நடமாட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கும்  அரசாங்கம் உதவி செய்யக் காத்திருக்கின்றது.

ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்று நாட்டில் இருக்கும் வரை நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது. தொழிற்சாலைகள் திறக்க முடியாது. பள்ளிகள் திறக்க முடியாது. மீண்டும் நாம் வேலைக்குத் திரும்ப முடியாது. நமது மாதாந்திர தவனைகளைக் கட்ட முடியாது.  நமது குடும்பத்திற்குச் சோறு போட முடியாது. அத்தனையும் நின்று விடும்!

இப்படி ஒரு நிலைமையை யார் விரும்புவார்?  யாரும் விரும்ப மாட்டார். நாடு நல்ல நிலையில் இருந்தால் தான் நாமும் நல்ல நிலையில் இருக்க முடியும்.

அதனால் மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்.   வாய்ப்பைத் தவற விடாதீர்கள். ஊசி போடுவது இலவசம்.  உங்கள் பணத்தைக் கொடுக்க வேண்டாம். நீங்கள் போடும் ஊசிக்கு அரசாங்கம் பணம் போடுகிறது.

தனியார் மருத்துவமனைகளோ,  கிளினிக்குகளோ சொந்தமாக ஊசி போட அனுமதியில்லை. அரசாங்கம் மட்டுமே அந்த வேலையைச் செய்கிறது.

தடுப்பூசி போடுங்கள்! போட்டால் தான் அடுத்தக் கட்டத்துக்கு நகர் முடியும்!

Tuesday 20 July 2021

தடுப்பூசியா? கடுப்பூசியா?

 கோவிட்-19 - க்கான ஊசி போடும் வரை மக்களை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். போட்டப் பிறகோ ஃபசர் ஊசியா அல்லது  சினொவாக் ஊசியா என்று கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள்!

ஏதோ ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஊசிகளுக்கு ஏற்பாடு செய்தது அரசாங்கம். பொது மக்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. ஊசி போட்ட பிறகு இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது! எது சரியான ஊசி என்று இப்போது பேசிக் கொண்டிருப்பதில் யாருக்கு என்ன பயன்?

ஃபைசர் உசத்தியா சினோவாக் உசத்தியா என்று விவாதத்தை இப்போது நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. அரசாங்கம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

கிளந்தான் மாநிலம் சினோவாக் ஊசியை இனி பயன்படுத்தப் போவதில்லை என்கிற ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. வருகிற செய்திகள் அனைத்தும்  சினோவாக் மருந்துக்கு எதிராகவே வருகின்றன.

 எந்த ஒரு தடுப்பு மருந்துக்கும் எதிராக கருத்து சொல்லுகின்ற அளவுக்கு நமக்கு அந்தத் துறையைப் பற்றி போதுமான அறிவு இல்லை. ஆனால் அந்த மருந்துகளைப் பற்றிய செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளுகிற அறிவு இருக்கிறது. ஆனாலும் அந்த செய்திகளிலும் அது சரியா தவறா என்று பிரித்துப் பார்க்கின்ற அறிவு இல்லை.

அதனால் எல்லாரையும் போல நமக்கும் தடுமாற்றங்கள் ஏற்படுவது என்பது இயற்கையே. எந்த ஊசி போட வேண்டும் என்பது நம் கையில் இல்லை.  அதை அரசாங்கம் தேர்ந்தெடுக்கிறது. ஒருவருக்கு ஃபசர் ஊசி என்றால் இன்னொருவருக்கு சினோவாக் - இப்படி ஊசி போடும் வரை நமக்கு என்ன ஊசி போடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. தெரிந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

அரசாங்கத்திற்கே எது சரி, எது தவறு என்று இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும் மக்களைக் குழப்ப வேண்டாம் என்பது தான் நமது வேண்டுகோள்.

சினோவாக் தடுப்பூசி தரமற்றது என்று யாரும் சொல்லவில்லை.  அதன் தடுப்பாற்றல் ஃபசரை விட குறைவு என்று தான் சொல்லப்படுகிறது. இதனையும் சரிசெய்து விடலாம் என்கிறார் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம். மூன்றாவது ஊசியைப் போட்டு விட்டால்  எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் அவர். அதன் ஆற்றல் ஃபைசர் ஊசிக்கு சமமாகி விடும். அது சரி என்றால் பிரச்சனை ஒன்றுமில்லை. விஞ்ஞான உலகம் அதனை ஏற்றுக் கொள்கிறது என்பது தான் பொருள்.

மக்களைக் குழப்புவதை விட சினோவாக் ஊசி போட்டு முடித்தவர்களுக்கு இன்னொரு ஊசி போடப்படும் என்றால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். அதுவரை இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இத்தனையும் சொல்லிவிட்ட பிறகு இதனையும் சொல்லி விடுகிறேன். இப்போதைக்கு, சினோவாக் ஊசி போட்டவர்களுக்கு, ஒரு பாதுகாப்பு உண்டு  என்பதைத் தெரிந்து கொண்டால் போதும். பயப்பட ஒன்றுமில்லை.

கடுப்பானாலும் ஏதோ ஒர் ஊசியைப் போட்டுத்தான் ஆக வேண்டும்! அது எந்த ஊசியாய் இருந்தால் என்ன!

Monday 19 July 2021

முடியும் என்றால் முடியும்!

 

                                             ZOYO THOMAS LOBO - PHOTO JOURNALIST

பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டாம். முடியும் என்றால் முடியும். அவ்வளவு தான்.

எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வாழ்க்கையில் எத்தனையோ பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் இந்த ஸொயோ. வாய்ப்புக் கிடைத்தால் அல்லது வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் எல்லாரும் சரித்திரம் படைக்கத் தயார் ஆனால் கிடைப்பதில்லையே!

அவரிடம் அப்படி என்ன விசேஷம்? முதலில் ஸொயோ ஒரு திருநங்கை. அது தான் முதல் விசேஷம்!  அதுவும் மிகவும் வறுமை வாட்டி எடுக்கும் குடும்பத்தில் பிறந்தவர். அடுத்து அவர் ஒரு புகைப்பட கலைஞர்.

ஸொயோ இந்தியா, மும்பாயைச் சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.  தனது தந்தையை இளம் வயதிலேயே இழந்துவிட்டார். தாயுடனும், சகோதரியுடனும் வாழ்ந்து வந்தார்.  தனது மகள் ஒரு திருநங்கை என்று தெரியவர அந்தக்  கவலையில் தாய்  மதுபோதைக்கு அடிமையானார். ஸொயோ பல சிறு சிறு வேலைகள் செய்து வந்தாலும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. தங்குவதற்கு ஓர் இடமில்லை.

அவர் ஒரே இடத்தில் நீண்ட நாள் 'வேலை' செய்தார் என்றால் அது ஓடும் தொடர் வண்டியில் மட்டும் தான்.  சுமார் பத்து ஆண்டுகள் அவர் தொடர் வண்டிகளில் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். ஆமாம் பிச்சை எடுப்பது தான் திருநங்கைகளின் பொதுவான தொழில். அவரும் அதைத்தான் செய்திருக்கிறார்.

அங்கு அவர் 'சம்பாதித்த' பணம் தான் அவருக்குப் பிற்காலத்தில் உதவியிருக்கிறது.  புகைப்படக்கலை எப்படியோ அவரை, அந்த தொடர் வண்டிகளின் பயணத்தில் போது ஈர்த்திருக்கிறது.  கேமராவின் விலையோ அவர் வாங்கும்  விலையில்  இல்லை. ஆனாலும் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை சரியான வழியில் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  பழைய கேமரா ஒன்றை சுமார் 30,000 ரூபாய்க்கு வாங்கினார். அவரே படம் பிடிக்கும் கலையைச் சொந்தமாகக்  கற்றுக் கொண்டார்.

ஆமாம் எங்கே தொழிலைத் தொடங்குவது? இருக்கவே இருக்கிறது தொடர் வண்டி. அங்குச்  சம்பாதித்த பணத்தை அங்கேயே முதலீடு செய்தார்! நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது.

தொடர்வண்டி நிலையத்திற்கு வெளியே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தை படம் எடுத்தவர் அவர் மட்டும் தான். அவர் பிடித்த படங்கள் தான் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியாயின. அன்று முதல் அவர் பத்திரிக்கைத் துறையில் புகைப்பட கலைஞராக மாறினார்! 

அதன்  பின்னர் அவருடைய வாழ்க்கைப் பாதை மாறிவிட்டது. புகைப்பட கலைஞர் என்பது மட்டும் அல்லாமல்  யுடியூப் தொடரில் நடித்து ஒரு நடிகையாகவும் மாறிவிட்டார்!

ஒருவர் என்ன நிலையில் இருந்தாலும் தான் அந்நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பிறந்துவிட்டாலே அடுத்த கட்டத்துக்கான முதல்படியைக் கடந்துவிட்டார் என்பது உறுதி.

முடியும் என்றால் முடியும்! அவ்வளவு தான்! யாசகம் செய்தால் கூட வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது தான் பாடம்!

Sunday 18 July 2021

பள்ளிகள் திறக்கப்படுகின்றனவா?

 பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்பது நல்ல செய்தி தான்.  தவறு  இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இன்னும் நமக்குத் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்,  இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பார்கள் என்பது கட்டாயம்.

பெற்றோர்களும் ஓரளவு விரக்தி அடைந்து விட்டார்கள் எனக் கூறலாம். காரணம் எத்தனை நாளைக்குத்தான் பிள்ளைகளை வீட்டில் அடைத்து வைக்க முடியும்?  ஏதொ ஒரு மாதம், இரண்டு மாதம் என்றால் சமாளிக்கலாம். இது தொடர்ந்தாற் போல பல மாதங்கள்!

இயங்கலை  வகுப்புக்கள் என்பது ஒரு புதிய பரிணாமம். இது எந்த அளவுக்குப் பிள்ளைகளுக்கு பயன் தருகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னொன்று எல்லோருக்கும் இணயதள வசதிகள் இல்லை. ஒரு சில இடங்களில் இணயதளங்களைப் பயன்படுத்த முடியவில்லை என்பதாகவும் சொல்லப்படுகின்றது.

பள்ளிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சி தான் என்றாலும் அதே சமயத்தில் பிள்ளைகளுக்கு ஆபத்து வருமோ என்கிற பயமும்  பெற்றோர்களிடையே உண்டு. யாரைத்தான் குறை சொல்ல முடியும்? பள்ளிகளுக்குப் போனாலும் ஆபத்து! வீட்டிலிருந்தாலும் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை!  இதற்கு ஒரு விடிவு  காலம் இல்லையா என்பது தான் பெற்றோர்களின் கேள்வி.

அராசங்கமும் நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் திறப்போம் என்று ஒட்டு மொத்தமாகக் கூறவில்லை. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் தான் ஆங்காங்கு உள்ள நிலவரப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலைத்தைப் பொறுத்தவரை பெருந்தொற்றின் பாதிப்பு அதிகம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது. அதனால் ஏதோ ஒரு சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்படலாம். மற்றபடி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படாது என நம்பலாம்.

பள்ளிகள் திறக்கப்படும் என்பது ஒரு புறம் இருக்க அதனோடு சேர்ந்து வரும் பள்ளிப்பேருந்து கட்டணம் வேறு சில பல செலவுகள் அனைத்தும் பெற்றோர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. வேலை இல்லாத நேரத்தில் பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கவே செய்யும்.

அரசாங்கத்தின் பொருளாதார உதவி இல்லாமல் இனி பெற்றோர்களால் எதுவும் செய்ய இயலாது!

பள்ளிகள் திறந்தால்  அரசாங்கத்தின் சுமையும் அதிகரிக்கவே செய்யும்!

Saturday 17 July 2021

நம்பிக்கைத் தீர்மானம்!

 முன்னதாகவே மணியோசை வந்துவிட்டது!

வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் முகைதீன் யாசினுக்கு  எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாது என்பதாக அறிவிப்பு வெளியாகிவிட்டது!

பிரதமருக்கு வயிற்றைக் கலக்குகிற  ஒரே பிரச்சனை என்றால் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தான்! மருத்துவமனைக்குப் போகிற அளவுக்கு வயிற்றை கலக்குமா என்றால் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை! அன்றைய நிலையை இன்றே கணிக்க முடியாது! காரணம் இது அரசியல்!

ஒரு விஷயம் என் வயிற்றைக் கலக்குகிறது! அம்னோ கட்சியினர் ஏன் இப்படி நாடகம் ஆடி மக்களின் வெறுப்புக்கு ஆளாகின்றனர் என்பது தான் புரியவில்லை.

தொடர்ந்தாற் போல பிரதமர் முகைதீனின் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பவர்கள் என்றால் அது அம்னோ கட்சியினர் தான். அது நாடகம் என்பது நமக்குப் புரிகிறது. ஒவ்வொரு நாளும் இவர்கள் வாயில் வருவதெல்லாம் "ஆதரவை விலக்கிக் கொள்வோம்! விலக்கிக் கொள்வோம்! விலகுவோம்!" இப்படித்தான் இருக்கிறதே தவிர பிரதமருக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுப்பதில்லை.

இதன் பின்னணியில் என்னவோ நடக்குது என்பது நமக்குத் தெரியும். ஆனால் நன்றாகவே நடிக்கிறார்கள் என்பதும் நமக்குப் புரிகிறது.

இந்த பயமுறுத்தல் நாடகம் தேவையற்றது.   பிரதமர் முகைதீன் யாசினை இந்த அளவுக்கு நெருக்கடி கொடுப்பதும் தேவை இல்லாதது.

அவருடைய பிரச்சனையே அம்னோவால் உருவாக்கப்படுகிறது.  நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்கிற ஒரு பிரச்சனை இல்லையென்றால் காரியங்கள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். அரசியல் தெரியாதவர் அல்ல அவர். நாட்டை வழி நடத்த முடியாதவர் அல்ல. அவர் அரசியல் வாழ்க்கை என்பது மிக நீண்ட ஆண்டுகள் கொண்டவை.  அவருடைய ஒரே பிரச்சனை அவருக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாமை தான். அதனால் குரல் கொடுப்பவர்களுக்கெல்லாம் இவரும் ஒத்துப் போகிறார்! ஆட்சி எந்நேரத்திலும் கவிழுமோ என்கிற பயத்தோடேயே அவர் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்.

இப்போது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரமுடியாது என்பதால் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என நாம் நம்பினாலும் கோவிட்-19 போகிற வேகத்தைப் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் ஏதேனும் மாற்றம் வருமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானமா? நம்பிக்கைத் தீர்மானமா? பார்ப்போம்!

இந்த முறையாவது சாத்தியமா?

 நாடாளுமன்றம் இந்த மாதக் கடைசியில் அதாவது 26 ஜூலை அன்று, சுபயோக சுபதினத்தில்,  நாடாளுமன்றம் கூடும் என்பதாக அறிவிப்பு  வெளியாயிருக்கிறது!

நாடாளுமன்றம் கூடாது என்று நினைத்த நேரத்தில் இப்போது நாடாளுமன்றம் கூடும் என்பதாக வந்த அறிவிப்பு அப்படி எந்த ஒரு மனக் கிளர்ச்சியையும் நமக்கு ஏற்படுத்தவில்லை! இதற்காக எத்தனையோ மாதங்கள் ஏங்கிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த போது இருந்த ஆர்வமோ அக்களிப்போ இப்போது இல்லை!

இந்த அறிவிப்பும்  தானாக வந்துவிடவில்லை.  ஏறக்குறைய மாமன்னரின் கண்டிப்பான கட்டளையாக வந்த பின்னர் தான் இப்போது இந்த சுபதினத்தை  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!

ஆனால் என்ன செய்வது? இப்போது நமக்கு நாடாளுமன்றம் கூடினால் என்ன, கூடாவிட்டால் என்ன என்கிற நிலைமைக்கு வந்து விட்டோம்!

மக்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது. வேலை வெட்டி எதுவும் இல்லாமல் படுகிற கஷ்டம் தெரிகிறது. கையில் பணம் இல்லாத இந்த நேரத்தில் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது!

நாடாளுமன்றம் கூடினால் கோவிட்-19 நம்மைவிட்டு ஓடிவிடவா போகிறது? எந்த மண்ணும் ஆகப்போவதில்லை! இதில் வேறு "ஃபைசர் போட்டியா!  சைனோவேக் போட்டியா!" என்கிற கேள்வி வேறு! அப்புறம் அது சரியில்லை! இது சரியில்லை!  மாங்காய்கள் அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு மாம்பழமா கிடைக்கும்? வெறு மண் புழு தான் கிடைக்கும்!

நேற்றைய (16.7.21) புள்ளிவிபரத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் கோவிட்-19 சம்பவங்கள் கூடிக் கொண்டு தான் போகின்றன. குறைந்தபாடில்லை! நேற்றைய புள்ளிவிபரப்படி: 12,541 சம்பவங்கள் ஒரே நாளில்! இதை வைத்துப் பார்க்கும் போது நாடாளுமன்றம் கூடும் தினத்தில் நிச்சயமாக அது 20,000 த்தை எட்டிவிடும்!

அந்த நேரத்தில் என்ன மாதிரி அறிவிப்பு வரும் என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நமது பிரதமருக்கு நாடாளுமன்றத்தை தள்ளி போடுவது  என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல! அதைத்தான் அவர் தொடர்ந்து பல மாதங்களாக செய்து வருகிறார்! கோவிட்-19 சம்பவங்கள் கூடும் போது நாடாளுமன்றம் கூடுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா என்று சந்தேகம் எழத்தான் செய்கிறது!

கூடுகிறதோ கூடவில்லையோ மக்களின் மனநிலை மாறிவிட்டது. அங்கே என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களின் இன்றைய பசிக்கு என்ன செய்வது! இப்படியே வேலை இல்லாமல் போனால் என்ன ஆகும் என்கிற கவலை அவர்களை வாட்டி வதைக்கிறது!

நமக்குத் தேவை எல்லாம் நாடாளுமன்றம் அல்ல! மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எப்போது நாங்கள் வேலைக்குப் போவது! எங்கள் பிள்ளைக்குட்டிகளை யார் காப்பாற்றப் போகிறார்? கொவிட்-19 தொற்று தாக்கத்தினால் நாளை நான் இருப்பேனா,  யாருக்குத் தெரியும்? அரசாங்கம் என்ன செய்கிறது? என்ன செய்யப் போகிறது?

இந்த நிலையில் சாத்தியமா, இல்லையா என்று கேட்டால் பயனற்ற கேள்வி! ஏதோ கூடுவார்கள்! ஏதோ பேசுவார்கள்! நமது தட்டுக்கு  சாப்பாடு தானாக வரப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்!

Friday 16 July 2021

இனி அரசியல் இல்லை!

 சுப்பர் ஸ்டார் ரஜினிக்கு  அரசியல் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்!

அரசியலுக்கு வராமலேயே அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் எனக் கூறலாம்!

"வருவேன்! வருவேன்!" என்று பயமுறுத்திக் கொண்டிருந்தவர் கடைசியில் "போதும்! போதும்!" என்கிற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும்!

நான் வருவேன் என்று சொன்ன போது அவர் கூறிய சில அரசியல் கருத்துகள் தமிழ் மக்களால் வரவேற்கப்படவில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

அவரைப் பற்றி கூறும் போது அவர் தமிழ் மக்களால் வளர்க்கப்பட்டவர். என்னை வளர்த்தது தமிழ் பால் என்றார். தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா! என்றார். அவரின்  சொல்லுக்கு தங்க காசு கொடுத்தவர்கள் தமிழர்கள் என்றார். தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டாலும் இதுவரை அவரால் தமிழனாகப் பேர் போட முடியவில்லை! இது தான் உண்மை.

 ரஜினி அரசியல் பேசுகிறேன் என்று கருத்து சொல்லும் போது அது தமிழர்களுக்கு எதிரான கருத்தாகவே இருந்தன!  அவரின் கருத்துகள் அனைத்தும் தமிழர்களுக்கு நன்மை பயக்கவில்லை!  காரணம் அந்த அளவுக்கு அவரிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சொல்லப்பட்டது. அவரை யாரோ பின்னணியிலிருந்து இயக்கப்படுவதாக கிசுகிசுகப்பட்டது!

மற்றபடி ரஜினி ஒரு கெட்ட மனிதராக தமிழ்ச் சமுதாயம் அவரைப் பார்க்கவில்லை. நல்ல மனிதர் என்று தான் பெயர் எடுத்தார். அரசியலில் அவரால் பெயர் போட முடியாது என்பது தான் பெரும்பாலான ரசிகர்கள் எண்ணமாக இருந்தது. அவரது தீவிர ரசிகர்களைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அரசியல் என்பது அவரது கோட்டையல்ல! என்பது தான் பெரும்பாலானோர் கருத்து.

எப்படியோ போகட்டும். இப்போது பகிரங்கமாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். தனது  பெயரில் உள்ள  மக்கள் மன்றத்தை கலைத்ததின் மூலம் அவர் தமிழக மக்களுக்கு அவரின் முக்கிய செய்தியை அறிவித்து விட்டார். தமிழக மக்கள் என்பதை விட அவரை மிகவும் அரசியலுக்கு எதிர்பார்த்த பாரதீய ஜனதா கட்சிக்கு  என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சொல்லி விட்டார்! காரணம் அவர்கள் தான் அவரை  அரசியல் வலையில் சிக்க வைக்க பகீரத முயற்சி எடுத்தவர்கள். இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்து விட்டார்!

தனது மக்கள் மன்றத்தை கலைப்பது என்பது அவர் எடுத்த முடிவு. இங்கு வேறு யாரின் தலையீடும் இல்லை என நம்பலாம்.

இதனை நல்ல முடிவாகத் தான் நாம் பார்க்கிறோம்.  இனி அவருக்கு அரசியல் இல்லை! சினிமாவே போதும்! தமிழன் வாழ வைப்பான்!

அவர் நல்ல நடிகர்! இன்னும் பேரும் புகழும் பெறட்டும்!

Thursday 15 July 2021

என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை!

 கோவிட்-19 நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது பற்றி எண்ணும் போது "இது எப்படி சாத்தியம்?" என்று தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது!  

கோவிட்-19 கூடுவதற்கும் நாடாளுமன்றம் கூடுவதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்ய வேண்டி உள்ளது! அது என்ன? நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று சொன்னாலே கோவிட்-19 வும் கூடி விடுகிறது! ஏதோ கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கிறதோ?

இந்த மாதம் நாடாளுமன்றம் கூடும் என்கிற அறிவிப்பு வந்ததுமே கோவிட்-19-ம்  கூடிவிட்டது! முற்றுப்புள்ளி இல்லை தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

இன்றைய நிலையில், கடந்து 24 மணி நேரத்தில், 13,215 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும் நாடாளுமன்றம் கூடுகின்ற நேரத்தில் அது 20,000 பேராக மாறி விடும்  என்று தான் தோன்றுகிறது!

அப்படிப் பார்த்தால்  இந்த முறையும் நாடாளுமன்றம் கூடுவது சாத்தியமில்லை என்று தான் ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது!

நாடாளுமன்றம் பற்றி பேசாவிட்டாலே கோவிட்-19 கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

ஆனால் இன்றைய நிலையில் மலேசியர்கள் "கட்டுப்பாட்டில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஆகப்போவது ஒன்றுமில்லை!" என்கிற விரக்தியில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்! காரணம் அந்த அளவுக்கு நம்பிக்கையில்லாத் தன்மை மக்களிடையே ஏற்பட்டுவிட்டது!

வேலையில்லாததினால் மக்களிடம் கையில் காசில்லாமல் மக்கள் தினம் தினம் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். எப்படி வாழப் போகிறோம், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று ஒன்றும் புரியாமலே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்படியே எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் வங்கிகள் என்ன வெடிகுண்டுகள்  வைத்திருக்கிறார்களோ என்பது பின்னரே தெரியவரும்! அவர்கள் செய்யும் விஷமத்தனங்களை எதிர்க்க அரசாங்கத்திற்கே துப்பில்லை  அப்படி இருக்க பலவீனப்பட்டுப் போயிருக்கும் மனிதனால் என்ன செய்ய முடியும்?

இப்படி ஒரு நிலையை இந்த உலகம் எக்காலத்திலும் எதிர்நோக்கியதில்லை. இதுவே முதல் தடவை. வருங்காலங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் வரலாம். இது ஒரு படிப்பினையாக அமைந்துவிட்டது.

இது போன்ற காலத்தில், நாம் என்ன கற்றுக் கொண்டோம்? பணம் என்பது எப்போது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பணம் இருந்தால் தான் நெருக்கடி காலத்தில் நம்முடைய பிரச்சனைகளை நாமே தீர்க்க முடியும் என்பது தான் பாடம்.

சரி இப்போது நாடாளுமன்றம் கூடுமா அல்லது கொவிட்-19 கூடுமா என்று கேட்டால் தொற்று நோய் கூடுவதற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம்!

மரங்களை வெட்டாதீர்!

நம் நாட்டில் மரங்களை வெட்டுவது என்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது!

இப்போதெல்லாம் வீடுகளின் முன் எந்த ஒரு மரத்தையும் காண முடிவதில்லை. ஏன்?  சிறிய செடிகளைக்  கூட காண்பது குதிரைக் கொம்பாகி விட்டது.  இப்போது அதற்கான இடங்கள் கூட இருப்பதில்லை.

ஏதாவது  சில சிறிய செடிகளைக் கூட நட்டு வைக்க இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது  வீட்டின் முன்பாகவோ பின்பாகவோ சிறிய இடம் கூட கொடுக்காமல் முற்றிலும்  சமையல் கூடங்களாகவும், கார்கள் நிறுத்தும் இடமாகவும்  ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. என்ன செய்வது?

இந்தியர்களைப் பொறுத்தவரை வேப்பமரம், கருவேப்பிலை செடிகள், முருங்கை மரங்கள் இவைகள் எல்லாம் நிச்சயம் தேவை என்கிற பட்டியலில் உள்ளவை.  வேப்ப இலை தேவை எங்கே ஓடுவது? எங்கெங்கோ ஓட வேண்டியுள்ளது! கருவேப்பிலை வாங்க இப்போது மார்கெட்டுக்குப் போக வேண்டியுள்ளது! அட! ஒரு முருங்கைக்காய் முருங்க இலை - எல்லாமே பக்கத்தில் கிடைப்பதில்லை.  எல்லாமே "ஓடு! மார்கெட்டுக்கு!" என்கிற நிலை தான் இப்போது!

இப்படி சிறிய சிறிய செடிகளைக் கூட வளர்க்க முடியாத ஒரு சூழலில் மரங்களை எப்படி வளர்ப்பது? அதற்கும் காரணங்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! மரத்தின் வேர்கள் வீட்டின் அடித்தளத்தை அசைத்து விடுமாம்!  மரத்தின் இலைகள்  வீட்டின் முன்னால் கொட்டுமாம். அதை யார் கூட்டுவது? நேரமில்லையே!

தாமான் பகுதிகளில் வாழ்வது எவ்வளவு இக்கட்டானது என்பது புரிகிறது. அதனுள் எப்படி வாழ முடியுமோ அப்படித்தான் வாழ முடியும். அதை மீறினால் சண்டை, சச்சரவுக்குக் குறைவு இருக்காது!

இப்போது இந்தக்  கட்டுரை எழுதுவதின்  நோக்கம் என்ன?  பகாங் மாநிலத்தில்  படித்த ஒரு செய்தி மனதைக் கொஞ்சம் பிழிகிறது. ரவுப் வட்டாரத்தில் டுரியான் மரங்கள்,  சுமார் 15,000 மரங்களைச் சரியாக  ஒன்பது நாள்களில்  அரசாங்கம் வெட்டித் தள்ளியிருக்கின்றது. எல்லாமே பழம் உள்ள மரங்கள்.

நினைத்துப் பாருங்கள்.  டுரியான் பழ பருவத்தில் இப்படி வெட்டித் தள்ளினால் யாருக்கென்ன  இலாபம்? அந்தப் பழங்கள் விற்பனை ஆகும் வரை பொறுத்திருக்கலாம். அந்த மரங்கள் எத்தனை ஆண்டு கால மக்களின் உழைப்பு அத்தனையும் பாழ். அவர்கள் விற்பனை மூலம் கிடைக்க வேண்டிய கொஞ்ச நஞ்ச பண வரவும் அத்தனையும் வீண்.

என்ன செய்ய?  அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு இது உதாரணம். பகாங் மாநிலம் மனிதாபமற்ற செயல்களுக்குப் பேர் போன மாநிலம். ஏற்கனவே கேமரன் மலையில் இந்தியர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக புகுந்து நாசமாக்கியவர்கள். இவர்கள் செய்ய மாட்டார்கள் மற்றவர்களும் செய்யக் கூடாது என்பது தான் அவர்களின் தாரக மந்திரம்!

எப்படியோ முடிந்தவரை மரங்களை வெட்டாதீர்கள்.  உங்கள் வீட்டு முன் மரங்கள் இருந்தால், செடிகள் இருந்தால் அவைகள் மூலம் நல்ல சுத்தமான காற்று கிடைக்கும். இப்போது நமக்குக் காற்று எல்லாம் கார்களின் மூலம் வெளியாகும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை - இப்படி அனைத்தும் சேர்ந்து இந்த பூமியை நரகமாக்கி விட்டன! மனிதன் வாழவே தரமாற்றதாகி விட்டது பூமி!

மனிதர்களிடம் வன்மம் இருக்கும் வரை மரங்களுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்யும்! மரங்களை வெட்டுவது என்பது வன்மம் மிகுந்த செயல்.

"மரங்களை வெட்டாதீர்கள்!" என்று சொல்லத்தான் முடியும்! அதற்கு மேல் உங்கள் பாடு!

Wednesday 14 July 2021

பேரு பெத்த பேரு!

 "பேரு பெத்த பேரு!" என்று சொல்லுவார்களே அது நடிகர் விஜய்-யுக்குத் தான்  சரியாகப் பொருந்தும்!

அவர் வாங்கியது இங்கிலாந்தின் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார். அது போன்ற கார்களை சராசரி நிலையிலுள்ள யாராலும் வாங்க முடியாது. சராசரி பணக்காரர்களும் வாங்க முடியாது. பெரும்பாலும் முதல் வரிசை பணக்காரர்கள் மட்டுமே வாங்கக் கூடிய ஒரு கார்.

ஏன்?  சினிமா துறையில் பலராலும் வாங்க முடியாத ஒரு கார். ஓரிரு முன்னணி நடிகர்களால் மட்டுமே வாங்க முடியும். அதை வாங்கி பராமரிப்பது என்பது எல்லாராலும் முடியாது. அதே நடிகர் பின்னணிக்குப் போய்விட்டால் அவர் தொடர்ந்து அந்தக் காரை வைத்திருப்பாரா என்பது வேறு விஷயம்.

அந்த வரிசையில் பார்க்கும் போது  நடிகர் விஜய்யுக்கு அந்தக் காரை வாங்கக் கூடிய தகுதி இருக்கிறது. முதல் வரிசை பணக்காரர். இன்றைய முன்னணி நடிகர்களில் அதிகம் பணம் வாங்குபவர்களில் அவரும் ஒருவர். நமக்கும் அதில் மகிழ்ச்சியே!

ஆனால் ஒரு சில பணக்காரர்களின் வாழ்க்கை முறையை நாம் பார்த்திருக்கிறோம். மிகக் கேவலமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஐந்து, பத்து காசுகளைக் கூட எண்ணி எண்ணி கொடுப்பார்கள்! நன்கொடை பற்றியெல்லாம் இவர்களிடம் வாய் திறக்க முடியாது!

இந்த பிச்சைக்கார பணக்காரர் வரிசையில் தான் விஜய்யை நாம் பார்க்க முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் போன்ற ஒரு காரை வாங்குவதற்கு  சில கோடிகளாவது செலவு செய்ய வேண்டி வரும். அவர் முன்றரை கோடி செலவு செய்திருக்கிறார்.. அதை இந்திய நாட்டிற்குள் கொண்டு  வர வேண்டும்  என்றால்  ஒரு கோடி  வரியாகக் கட்டியாக வேண்டும். அதுவும் அவருக்குத் தெரியும். இவ்வளவும் அவருக்குத் தெரிந்தும் காருக்கான வரியைக் கட்ட மறுத்து வருகிறார்! அதற்காக அவர் வரி விலக்கு வேண்டும் என்று சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார்!

ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. வரி என்பது அனைத்துக் குடிமக்களுக்கும் உரியது. வரியில்லாமல் அரசாங்கத்தை நடத்த வழியில்லை. வரியைக் கொடுக்க முடியாது என்று ஏன் இவர் பிடிவாதம் பிடிக்கிறார்? இவருடைய காரை  நாட்டின் நலனுக்காக  பயன்படுத்தப் போகிறேன் என்று இவரால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்காக ஓரளவு சலுகைகள் கிடைக்கலாம். ஒன்றுமே இல்லை. அவருடைய சொந்த நலனுக்காக பயன்படுத்தப் போகிறார். அதற்கு ஏன் வரி விலக்கு? என்று நாமும் தான் கேட்கிறோம்.

இந்தியாவில் இருந்து கொண்டு இங்கிலாந்து வாழ்க்கையை வாழ நினைக்கிறார். யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. எல்லாப் பணக்காரர்களும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவரும் வாழட்டுமே, நமக்கென்ன?

ஆனால் விஜய் சார்! இனி உங்கள் படங்களில் ரசிகர்களுக்குப் புத்தி சொல்கின்ற வேலை வேண்டாம். புத்தி சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் அப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்!   ஏழை எளியவர்கள் கூட அரசாங்கத்திற்கு வரி கட்டத்தான் செய்கிறார்கள். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு குடிமகனும் அவர்களுக்கு ஏற்றவாறு வரி கட்டத்தான் செய்கிறார்கள். அவருடைய படங்களைப் பார்க்கின்ற ரசிகன் கூட ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் வரி கட்டுகிறான். கோடிக்கணக்கில் சம்பாதித்தால் வரி கோடிக்கணக்கில் தான் வரும். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தால் ஆயிரக்கணக்கில் வரும். அவ்வளவு தான் வித்தியாசம்.

விஜய் நடிக்கட்டும், சம்பாதிக்கட்டும்! அவர் குடும்பத்தோடு குதூகலமாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஊர்வலம் வரட்டும். ஆனால் மக்களின் தலைவனாக வர முயற்சி செய்ய வேண்டாம்.

கடைசியாக, முடிந்தால் நாலு பேருக்குக் கல்வி கொடுக்கட்டும்!

Tuesday 13 July 2021

அரசாங்கத்தின் நல்ல உதாரணங்கள்!

 நடப்பு அரசாங்கத்தில் அதாவது பிரதமர் முகைதீன் யாசின் தலைமை தாங்கும் இன்றைய  அரசாங்கத்தில் பங்கு பெற்றிருக்கும் அமைச்சர்கள் மக்களுக்கு எந்த வகையில் முன்னுதாரணமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஓர் சிறிய அலசல்!

நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு யாருக்கு என்று பார்த்தால் பொது மக்களுக்கு மட்டும் தான் என்று தாராளமாகச் சொல்லலாம்.

இன்றைய நிலையில், தொடர்ந்தாற் போல விதிகளை மீறுவதில் அமைச்சர்கள் பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்! வீதிகளை மீறினால் அவர்களுக்கும் அபராதம்  உண்டு என்று இருந்தாலும் அந்தத் தொகை என்பது அவர்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்குச் செய்கின்ற செலவுகளை விட குறைவு தான்! அதனால் அவர்கள் பணத்தைச் சும்மா வீசி எறிந்து விட்டுப் போய் விடுவர்!

ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு. அவர்களின் செயல்  மக்களிடையே ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசாங்கத்தின் கொள்கைகளை மீறுபவர்கள் எப்படி பொறுப்புள்ள அமைச்சர்களாக இருக்க முடியும்  என்று மக்கள் நினைக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்கும் அது தெரியும். இருந்தும் அவர்கள் செய்கிறார்கள் என்றால் மக்களை அவர்கள் மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை என்பது தானே உண்மை!

சமீபத்தில் அமைச்சர் அஸ்மின் அலி துருக்கி நாட்டிற்கு  அலுவல் நிமித்தமாக சென்றிருந்தார். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அவர் குடும்பமும்  அவரோடு சேர்ந்து போனது.  அதனால் இணையதளவாசிகளின் சீற்றத்திற்கு ஆளானார்! இன்று நாட்டில் நடப்பதென்ன? குடும்பமே பிரிந்து ஆளுக்கொரு பக்கம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் ஓர் அமைச்சரால்  குடும்பத்தோடு வெளிநாட்டிலும் கும்மாளம் அடிக்க முடிகிறது!

இன்னொரு அமைச்சர் அனுவார் மூசா இதுவரை இரண்டு முறை அபராதம் கட்டியிருக்கிறார்! இன்னும் இருபது முறை அவர் சட்டத்தை மீறினாலும் அவரால் அபராதத்தைக்  கட்ட முடியும்! இன்னொரு முன்னாள் அமைச்சரோ எனது பையனை பள்ளியில் சேர்க்க வெளிநாடு போகிறேன் என்கிறார்! உணவகத்தில் உட்கார்ந்து உணவு உண்ணுகிறார் ஓர் அமைச்சர்! எல்லாருமே எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றனர்!

இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பாடம் என்ன? அரசியலில் இருந்தால், அமைச்சராக இருந்தால், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் சட்டத்தை மீறலாம் என்கிற ஒரு பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்!

இவர்கள் செய்கின்ற செயல்களைப் பார்க்கின்ற போது இப்படி சட்டத்தை மீறுபவர்கள் நடப்பு பிரதமர் மேல் எந்த ஒரு மரியாதையும் வைத்திருக்கவில்லை என்பது தெரிகிறது! இவர்கள் யாரும் பிரதமரின் கட்டுப்பாடில் இல்லை என்பதும் தெரிகிறது! அதனால் தான் இப்படி அவிழ்த்துவிட்ட  காளைகள் போல் சுற்றித் திரிகின்றனர்!

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே இப்படி சட்டத்தை மீறுபவர்களாக இருக்கின்றனர்!  சட்டத்தை மீறுவதில் சுகம் காண்கின்றனர்! இவர்கள் பல வேளைகளில் இப்படித்தான் சட்டத்தை மீறுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஏதோ ஓரிருமுறை அகப்படுகின்றனர்!

நல்ல உதாரணங்கள் நமக்குத் தேவை!  நாசகார உதாரணங்கள் அல்ல!

Monday 12 July 2021

வேற்றுக்கிரக வாசியோ?

 பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி  அவாங் எந்த கிரகத்திலிருந்து வந்திருக்கிறார் என்று நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

நாட்டின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஆட்சியில் உள்ள பாஸ் கட்சியினருக்கு மட்டும் இது தெரியவில்லை. அவர் ஏதோ ஒன்றுமே நடக்காதது போல் பேசிக் கொண்டிருக்கிறார்!

கோவிட்-19 எந்த அளவுக்கு மலேசியர்களைப் பாதித்திருக்கிறது என்பது ஆட்சியிலிருக்கும் பாஸ் கட்சியினர் எப்போது புரிந்து கொள்வார்களோ,  தெரியவில்லை. 

அவர்களின் கட்சி  அரசாங்கமே மலேசியாவில் நாள் ஒன்றுக்கு மூன்று தற்கொலைகள் நடைபெறுவதாக அவர்களது சுகாதார அமைச்சே அறிவித்திருக்கின்றது. இது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு அல்ல.  இது  அரசாங்கத்தின் அறிவிப்பு! 

இந்த அறிவிப்பைக் கூட பாஸ் கட்சியின் தலைவர் மறுத்தாலும் மறுப்பார். அவர் சொல்லுவது போல எந்த ஒரு நாடும் கொவிட்-19 தொற்றை முற்றிலுமாக நாட்டிலிருந்து அகற்ற  முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் பல நாடுகள் தொற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அதனால் என்ன பலன் என்றால் அவர்கள் வாழ்க்கை முறை ஓரளவு பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பியிருக்கிறது என்பது தான் இங்கே நாம் கவனிக்கத்தக்கது.

நமது நிலை என்ன என்பதை ஹாடி அவாங் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். வேலை இல்லை என்பதே நமக்குப் பெரிய பிரச்சனை. இன்றை நிலையில் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் மாதத் தவணை என்கிற இரும்புப்பிடியில் சிக்கியிருக்கின்றனர். கார், வீடு, மோட்டார் சைக்கிள் தவணைகள், வீட்டு வாடைகை இப்படிப்  பல.   இன்றைய வேலை இல்லாத குடும்பங்களின் நிலை என்னவாவது? எப்படி அவர்கள் இந்த மாதத் தவணைகளைக் கட்டப் போகிறார்கள் என்பது தான் ஒவ்வொரு குடும்பத்தின் முன் உள்ள கேள்வி.

மாதம் அதிகச் சம்பளம் வாங்கினாலும்,  குறைவான சம்பளம் வாங்கினாலும் பிரச்சனை என்னவோ அதே பிரச்சனை தான். ஒன்று மாதத்தவணை இன்னொன்று வாடகை. இது தான் எல்லாரும் எதிர் நோக்கும் பிரச்சனை.

 ஒவ்வொரு மலேசியரும் இன்று இந்த நிலையில் தான் உள்ளனர். இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? முழு சம்பளம் இல்லையென்றாலும் பாதி சம்பளம் கிடைத்தால் கூட அவர்கள் சமாளிப்பார்கள்.  ஆனால் ஒன்றுமே இல்லையென்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்?

இன்று இந்த நிலையில் தான் மலேசியர்கள் உள்ளனர். வருமானம் இல்லை. தவணைகளைக் கட்ட முடியாத சூழல். அரசாங்கத்தின் குரல் வங்கிகளுக்குத் தான் ஆதரவாக இருக்கின்றது. பொது மக்களுக்காகப் பேச ஆளில்லை என்பது மிகப் பெரிய குறை.

ஒரு காலத்தில் மக்களின் காலில் விழுந்து விழுந்து கும்பிட்டவர்கள் இன்று அந்த மக்களின் மேல் சீறி சீறிப்  பாய்கின்றனர்! காரணம் இது தான் நேரம் என்று  'கறந்து' கொண்டிருப்பவர்களால் மக்களின் பிரச்சனைகளைக்  களைய முடியவில்லை! கேள்வி எழுப்பினால் கோபம் வருகிறது!

ஹாடி அவாங் மக்களின் பிரச்சனைகளை அறிய கீழே இறங்கி வர வேண்டும். கிளந்தான் மாநிலைத்தை மட்டும் மனதிற் வைத்துக் கொண்டு பேசுவது கூடாது! பதவியில் இருப்பது கிளந்தான் மாநிலம் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களும் தான்.

Sunday 11 July 2021

சிங்கப்பூர் உணவகங்கள் வரவேற்கின்றன!

 

நமக்கு இன்னும் கிடைக்காத  நல்ல செய்தியை நமது அண்டை நாடான சிங்கப்பூர் உணவகங்களுக்குக்  கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சி தான் இதனை எழுதவதற்குக் காரணம்.

இன்றைய நிலையில் நமது உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்குப்  பொட்டலைங்களைக் கட்டி அனுப்புவதோடு சரி. இப்போது பலர் வீட்டிற்கே உணவுகளை அனுப்ப சொல்லுவதால் இப்போது அந்த வியாபாரம் தான் ஓரளவு வெற்றிகரமாக நடக்கிறது. நூறு விழுக்காடு வியாபாரத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் ஏதோ ஐம்பது விழுக்காடாவது நடக்கிறதே என்கிறதே என்பதில் கொஞ்சம் திருப்தி.

ஆனால் எது எப்படி இருந்தாலும் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடும் போது தான் உணவகங்கள் காசு பார்க்க முடியும். அதைத் தான் வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர், உணவகங்களும் விரும்புகின்றன. 

ஆனால் நமது நாட்டில் கோவிட்-19  எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் உணவகங்கள் எப்போது திறக்கப்படும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருந்து கொண்டிருக்கிறது! தொற்றின் தாக்கம் குறையுமா இன்னும் அதிகரிக்குமா என்று அனுமானிக்க முடியவில்லை. இன்றைய சூழலில் இன்னும் கூடும் என்று தான் தோன்றுகிறது.

சிங்கப்பூரில் ஓரளவு கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது.  இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றாலும் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இதன்  பின்னணியில் பல காரணங்கள் உண்டு. கடுமையான கட்டுப்பாடுகள் என்பது தான் முதல் காரணம். இதற்கும் சான்றுகள் உண்டு. சிங்கப்புரில் வேலை செய்யும் மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி இல்லை.  அப்படி திரும்ப வேண்டுமென்றால் மீண்டும் சிங்கப்பூர் செல்ல அனுமதியில்லை! இது ஒன்றே போதும் அவர்கள் எந்த அளவுக்கு முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று.

ஏன் நம்மால் முடியவில்லை? பொதுவாகவே இங்குள்ள ஆளும் அரசியல்வாதிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். இந்தத் தொற்று நாட்டுக்கு ஏற்பட்ட கடவுளின் சாபம்  என்று நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் கடவுளால் தான் இதனைத் தீர்த்து வைக்க முடியும் என்று  நம்புகிறார்கள். நமக்கு அதில் ஆட்சேபம் எதுவும் இல்லை!

ஆனால் அதற்காக சிகிச்சை தேவையில்லை என்று நினைத்தது தான் பிரச்சனையாகி விட்டது. அப்போது ஏற்பட்ட அந்த தாமதம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

உண்மையைச் சொன்னால் இப்போது தான் தடுப்பூசி போடும் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.  சிங்கப்பூர் தடுப்பூசி போடுவதில் நம்மை முந்திக் கொண்டது. தீவிரமாக செயல்பட்டும்  கொண்டிருக்கிறது.

அதனால் தான் அவர்களால் படிப்படியாக தளர்வுகளைக்  கொண்டு வரமுடிகிறது. உணவகங்களில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக அமர்ந்து சாப்பிடலாம் என்பதே பெரிய முன்னேற்றம் எனலாம்.

அங்கு குறைந்து வருகிறது  நமது நாட்டில் கூடி வருகிறது!  அவர்களுக்கு எப்படி சாத்தியமாகியது இங்கு ஏன் சாத்தியமாகவில்லை! என்று கேட்க விரும்பினாலும் அதற்கான பதிலை யாரும் கொடுக்கப் போவதில்லை.

சிங்கப்பூரை வாழ்த்துவோம்! நம்மை கடவுள் காப்பாற்றுவார் என நம்புவோம்! 

Saturday 10 July 2021

இரக்கமற்ற அரக்கர்கள்!

 மனிதர்களை விட விலங்குகள் எத்தனையோ மடங்கு உயர்வானவை, போற்றத்தக்கவை!

அதுவும் நாய்கள் என்றால் அன்பைத் தவிர வேறொன்றும் அறியாதவை. அந்த அன்பைக் காட்டும் அந்த  நாய்களிடம்  மனிதன் எப்படி நடந்து கொள்கிறான்?

நகராண்மைக் கழகங்களில் பணிபுவர்களுக்கு ஏனோ மனிதாபிமானமே இருப்பதில்லை.  தெரு நாய்கள் தான் என்றாலும் அவைகளைப் பிடிப்பதற்கோ,  கொல்லுவதற்கோ  வேறு பல வழிமுறைகள் இருக்கின்றன. நாய்கள் மட்டும் அல்ல, பூனை, குரங்கு போன்ற எந்த  விலங்காக  இருந்தாலும் அவைகளும் ஓர் உயிர் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

ஒரு காலக் கட்டத்தில் நான் தோட்டப்புறத்தில்   வேலை செய்யும் போது  அப்போதும் சுற்றித்திரியும் இந்த நாய்களை அடித்துக் கொல்லுவதில்லை. சுட்டுத் தள்ளுவார்கள்.  புதைத்து விட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு தான். அப்படி செய்யும் போது ஒரு சில நிமிடங்களில் பிரச்சனை முடிந்தது. அவர்களும் அரசாங்க ஊழியர்கள் தான்.

இவர்கள் நாய்களைப் பிடிக்கத்தான் வருகிறார்கள்.  ஆனால் இவர்களுக்கும் நாய்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதவர்கள். தெரு நாய்கள்,  வீட்டில் வளர்க்கும் நாய்கள்  போன்ற எந்த ஒரு வித்தியாசமும் தெரியாதவர்கள்! நாய்களைப் பார்த்திருப்பார்களே தவிர அவைகளோடு பழகாதவர்கள்.  நாய்களைப் பற்றியான எந்த ஒரு புரிதலும் இல்லாதவர்கள். அவர்களைப் போய் நாய் பிடிக்கிற வேலையைச் செய்யச் சொன்னால் என்ன ஆகுமோ அது தான் ஆகியிருக்கிறது சமீபத்திய நிகழ்வு!

அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி! நாய்களைக் கொடூரமாக  கொன்றிருக்கிறார்கள்.  அது அவர்களுக்கு எந்த வித மன பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை! அப்படி ஒரு சூழலில் அவர்கள் வளரவில்லை!

ஆனால் நமக்கோ அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு குற்றம் என்பது  தான் நாம் வளர்ந்த விதம்.  அந்த செய்தியைப் படிக்கும் போதே நமக்கு எங்கோ வலிக்கிறது.  மனத்தைப் பாதிக்கிறது.

இப்போது நடந்தது ஒன்றும் முதல் சம்பவம் அல்ல. ஏற்கனவே நடந்த சம்பவங்களின் நீட்சி தான். இது இனியும் தொடரும். அவர்கள் செய்வதும் நாம் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பதும் இப்படித்தான் அது போய்க் கொண்டிருக்கும்!

காவல்துறை ஏதோ ஒரு சட்டத்தின் கீழ் அதனை விசாரிக்கும். சொல்லுவார்கள் அதனைச் செய்வார்களா அதுவும்  தெரியாது! நகராண்மை ஊழியர்களைக் குறை சொல்லுவதில் பயனில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்கின்ற வழி சரியான வழி இல்லை என்றால் அதற்கான மாற்று வழி என்ன என்பதை அவர்களுடைய உயர் அதிகாரிகள் சொல்ல வேண்டும்.

இதுவும் இல்லை! அதுவும் இல்லை! எதுவும் இல்லை! சும்மா பேசிவிட்டுப் போக வேண்டியது தான்!

Friday 9 July 2021

சமூகநல உதவி உயர்த்தப்பட வேண்டும்!

 ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தக்க நேரத்தில் தக்கதொரு வேண்டுகோளை அரசாங்கத்திற்கு விடுத்திருக்கிறார்.

சமூகநல உதவி பெறுவோருக்கு நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான வேண்டுகோள் என்பதாகவே நாம் கருதுகிறோம். இங்கே இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

ஒரு சாரார் வேலை எதையும் செய்யாமல்,  அரசாங்க ஊழியர்கள் என்கிற ஒரே காரணத்தினால், தங்களது மாத வருமானத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தான் இன்று பேரங்காடிகளின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதே சமயம் தொற்று நோயைப் பரப்புவர்களாகவும் வலம் வருகின்றனர்!

காரணம் மாதாமாதம் பண வரவு இருப்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை! வாடகையோ, மாதத் தவணையோ அனைத்தும் அவர்களால் கட்ட முடிகிறது.

ஆனால் சமூகநலன் உதவி பெறுபவர்களின்  நிலைமை பற்றி  சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. மாதாமாதம் கிடைப்பதோ ஒரு சிறிய தொகை. ஒரு சிலருக்கு அதுவே நிரந்தர வருமானம்!  வேறு வருமானம் இல்லை. அந்தப் பணத்தை வைத்தே காலத்தைக் கடத்த வேண்டும்.

இப்போதோ நிலைமையே மாறிப் போய்விட்டது. விலைவாசிகள் ஏறிவிட்டன. யாருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.  வியாபாரிகள்  இப்போது பண்டிகை காலம் என்கிற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!  காய்கறிகள் என்று போனாலும் அப்படி ஒன்றும் குறைந்த விலையில் எதுவும் கிடைப்பதில்லை. சராசரி வருமானம் உள்ளவர்களே விலையைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர்.

இப்படி ஒரு காலக்கட்டத்தில் அரசாங்கம் இன்னும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. அனைத்துப் பொருட்களும் விலைகள் ஏறிவிட்டன.  இதுவே தக்க தருணம். சமூகநல உதவித் தொகை வெள்ளி ஆயிரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

சமூகநல உதவி பெறுபவர்களை ஏதோ தீண்டத் தகாதவர்கள் போல அரசாங்கம் பார்க்கக் கூடாது. அவர்களும் இந்த நாட்டிற்காக தங்களது உழைப்பைக் கொட்டியவர்கள். உழைத்து  ஒடாய்த் தேயந்தவர்கள். என்ன செய்வது? இப்போது அப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்களைப் பரிவோடு பார்க்க வேண்டுமே தவிர பரிதாபத்தோடு அல்ல.

சமூகநல உதவி அவர்களுக்கு உயர்த்தப்பட வேண்டும். அவர்களும் தங்களது  இறுதிக் காலம் வரை கௌரவமாக வாழ வேண்டும். பாதி பிச்சை பாதி உதவி என்பது சரியானது அல்ல.

அரசாங்கம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோளும் கூட!

Thursday 8 July 2021

அநாகரிகம் தான்! என்ன செய்யலாம்?

 வங்கியில் கொள்ளை அடித்தால் அது கொள்ளை. அவர்கள் குற்றவாளிகள்! சட்டத்தை சந்தித்தாக வேண்டும்.

ஆனால் இந்த கொள்ளையோ அந்த வகையைச் சார்ந்தது அல்ல. இதுவோ உணவு வங்கி!  பசிக்கும் ஏழை மக்களுக்காக பசியைப்  போக்க நினைக்கும் ஒரு சிலரின் சிறிய முயற்சி.

ஆனாலும் அதிலும் அத்து மீறல். அங்கிருந்த அத்துணை பொருட்களையும்  சில நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்று விட்டனர், நான்கு பேர் சேர்ந்த ஒரு கும்பல்! காரில் வந்தார்கள்! அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்!  அவர்களைப் பார்க்கும் போது, இவர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் மூன்று பேர் சாப்பாட்டை சாப்பிடுபவர்கள் என்பது தான் அதன் சிறப்பு அம்சம்!

அவர்கள் அகோரப் பசி உடையவர்களாக இருக்க வேண்டும்!  இல்லாவிட்டால் இந்த அளவுக்கு அவர்கள் செயல்பட்டிருக்க மாட்டார்கள்! 

என்றாலும் அவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். அவர்களைப் போலவே நாட்டில் பலர் பட்டினியோடும் பசியோடும் இருக்கின்றனர்.  அப்படியாப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்.

அவர்களுடைய நிலை நமக்கும் புரிகிறது. அவர்களும் பலரைப் போல வேலை இல்லாமல் இருக்கலாம். பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் இருக்கலாம். வேலை இல்லை என்றால் இயல்பாகவே சாப்பிடுவதற்குப் பொருட்களை வாங்க வழியில்லை.  அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கும். அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் பசியோடு இருப்பார்கள்.

வேலை இல்லாத ஒரு குடும்பத் தலைவனுக்கு உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் அவர்களுக்கும் உண்டு. இப்போது, இன்றைய நிலையில், அவர்கள் உணவு வங்கியின் மேல் கை வைத்திருக்கிறார்கள்.  இது ஆரம்பம். 

அரசாங்கம் வேலை இல்லாதோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு போனால் இது எப்படிப்பட்ட  ஒரு நிலையை நாட்டில் உருவாக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அரசாங்கம் இப்போதே, நாளை அல்ல நாளை மறுநாள் அல்ல,  துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

கோவிட்-19 குறைவதற்கான அல்லது ஒழிப்பதற்கான வழிவகைகளைக் காண வேண்டும். தடுப்பூசி ஒன்றே வழி என்றால் அதனை துரிதப்படுத்த வேண்டும். இனி பொறுத்துப் பயன் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால்  அதனைச் சோதித்துப் பார்க்கின்ற வேலையில் அரசாங்கம் இறங்கி விடக் கூடாது.

மக்கள் பொறுமையோடு இருக்கிறார்கள். அதுவே மலேசியர்களின் பண்பு. அதனை அரசாங்கம் சீண்டி பார்க்கின்ற  வேலை வேண்டாம். வன்முறை என்பது நமது கலாச்சாரம் அல்ல.  நாம் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

ஆனால் மக்களைப் பட்டினி போடுவது எங்கே கொண்டு செல்லும் என்பதை மற்ற நாடுகளிலிருந்து அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காலங்களிலும் மக்கள் பொறுமை காத்திருக்கிறார்கள். மக்களுக்குச் சம்பாதிக்கும் வழிகள் இருந்தால் அவர்கள் தொடர்ந்து பொறுமையோடு தான் இருப்பார்கள். சம்பாதிக்கும் வழிகளை அடைத்தால் அவர்களும் தடம் மாற வேண்டிய சூழல் ஏற்படும்.

மேலே சொல்லப்பட்ட அந்த சம்பவம் கேலிக்குறியதாக இருக்கலாம். ஆனால் அது அபாயச் சங்கை ஊதுகிறது என்பது கேலிக்குறியது அல்ல!

Wednesday 7 July 2021

இது எண்ணிக்கையை குறைக்குமா?

 மக்கள் சொல்லுவது வேறு! அரசாங்கம் செய்வது வேறூ!

அமைச்சரைவையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால் கோவிட்-19 எண்ணிக்கை குறைந்து விடுமா, என்ன?

நமக்கு வேண்டியது கோவிட்-19 குறைய வேண்டும் என்பது அல்ல அந்தத் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான். அதைத் தவிர மலேசியர்களுக்கு இன்றைய நிலையில் வேறொன்றுமில்லை!

இந்த மாற்றத்தினால் மக்களுக்கு என்ன நன்மை என்பது தான் இன்றைய கேள்வி.  ஆமாம், ஒருவர் துணைப் பிரதமர் ஆகி விட்டார், இன்னொருவர் மூத்த அமைச்சராக ஆக்கப்பட்டு விட்டார்.  இதனால் இந்நாட்டு மக்களுக்கு எந்த விதத்தில் இலாபம்? இதனால் கோவிட்-19 குறைந்து விடுமா, மக்கள் மீண்டும் தங்களது வேலைகளுக்குத் திரும்ப முடியுமா, வியாபார நிலையங்கள் திறக்கப்படுமா, மக்களின் பசியைப் போக்கிவிட முடியமா - எதுவுமே இல்லை என்கிற போது இந்த மாற்றத்தினால் என்ன நேர்ந்து விடப் போகிறது என்பது நமக்குப் புரியவில்லை!

ஒரு வேளை சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு அது இலாபம் தரலாம்.   சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் சம்பளம் ஏறலாம். அவர்களுக்குச் சம்பளம் ஏறுவதால் அது அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இலாபமே தவிர மக்களுக்கு அதனால் என்ன இலாபம்,  அது தான் கேள்வி.

மக்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் நேரத்தில் அரசாங்கம் அரசியல் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்க முடியாது. இது எரிகிற நெருப்பில் எண்ணைய் வார்த்துக் கொண்டிருப்பதற்குச் சமம்! ரோம் சாம்ராஜ்யம் எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின்  செயலுக்குச் சமம்!

இப்போது மக்களின் தேவை எல்லாம் கோவிட்-19 தொற்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஊரடங்கு அகற்றப்பட வேண்டும். நாடு, எப்போதும் போல, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். வேலைக்கு மக்கள் மீண்டும் போக வேண்டும். குழந்தைகள் மீண்டும் தெருக்களில் ஓடி ஆடி விளையாட வேண்டும். உணவகங்களுக்குச் செல்ல வேண்டும்.

அதை விட்டு, குழந்தைகளிடம் கைப்பேசிகளைக் கொடுத்து, அவர்களை அமைதிப்படுத்த, 24 மணி நேரமும் விளையாட அனுமதிப்பது என்பது அவர்களை நிரந்தர நோயாளிகளாக்கும் செயல் என்பதும் பெற்றோர்களுக்குப் புரிகிறது. ஆனால் வேறு வழி இல்லையே!  குழந்தைகளின் அமளி துமளிகளைச் சமாளிக்க வேறு வழி தான் என்ன?

நம்முடைய வேண்டுகோள் என்பது இது தான்: கோவிட்-19 வேண்டாம்! ஊரடங்கு வேண்டாம்! தொழிற்சாலைகளை மூட வேண்டாம்! வியாபார நிலையங்களை அடைக்க  வேண்டாம்!

தேவை எல்லாம்: வேலை வேண்டும். பணம் வேண்டும். பசியை விரட்ட வேண்டும். குழந்தைகள்  பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

இந்த அமைச்சர்களின் மாற்றம் என்பது தேவையற்ற ஒன்று!

Tuesday 6 July 2021

சோர்ந்து போக வேண்டாம்!

 மிகவும் சோர்ந்து போன ஒரு காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வேலை இல்லை. கையில் காசு இல்லை. சாப்பிட ஒன்றுமில்லை. வருங்காலம் என்று ஒன்று இருக்குமா, இருக்காதா என்று ஒன்றும் புரியவில்லை! நமக்கு மட்டும் தானா  இந்த நிலைமை? இல்லை! உலகமே இப்படி ஒரு நம்பிக்கை இழந்த நிலையில் தான் தள்ளாடிக் கொண்டிருக்கிறது!

நாம் மட்டும் தனி ஆளில்லை! நம்மைப் போல இன்னும் பலர் நம்மைப் போலவே தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்! 

ஆனால் இந்த நிலையிலும் ஒரு சிலரைப் பார்க்கும் போது நம்பிக்கைத் துளிர் விடுகிறது.  அவர்கள் எந்த சூழலிலும் நம்பிக்கையை இழப்பதில்லை. இது போனால் என்ன, இன்னொன்று என்று சர்வ சாதாரணமாக தங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லுகின்றனர்.

ஒரு முக்கியமான விஷயத்தை இந்தக் கோவிட்-19  காலக் கட்டத்தில் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சீனர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஒரே காரணம் தான். நாம் சொல்லுவது எல்லாம் அவர்கள் பணக்காரர்கள் என்பதால் அவர்கள் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது தான்.

இப்போது  பல வியாபாரங்கள் முடங்கிப் போய் கிடக்கின்றன. கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.  வியாபாரம் இல்லை அப்புறம் எப்படி அவர்கள் பணக்காரர்கள் என்கிறோம்?  அவர்களிடம் சேமிப்பு இருக்கின்றது. அதைத்தான்  இப்போது அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வேறு இரகசியம் ஒன்றும் இல்லை. அவர்கள் சேமிப்பு உள்ள சமுதாயம் அதை  வைத்துத் தான் அவர்களைப் பணக்காரர்கள் என்கிறோம். 

சேமிப்பு இல்லாத சமுதாயம் தான் இன்று உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சேமிப்பு உள்ளவர்கள் தங்களது சேமிப்பை இந்த மிகவும் கடினமான காலக் கட்டத்தில் பயன்படுத்துகின்றனர்.

சேமிப்பதில் அக்கறை காட்டுபவர்கள் எல்லா சமுதாயத்திலும் இருக்கின்றனர். அவர்கள் யாருடைய உதவிகளையும் எதிர்பார்ப்பதில்லை. அதைத்தான் தன் கையே தனக்கு உதவி என்று நமக்குப் பரம்பரையாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பவர்கள் நம்மிடையே பலர் உண்டு.

அதனால் தான் நமக்குக்  கோவிட்-19 பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது என்று சொல்ல வருகிறேன்.  சேமிப்பு என்கிற பாடத்தை அது கற்றுக்  கொடுத்திருக்கிறது.

இப்போதும் கூட அப்படி ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இந்தக் கடினமான காலக் கட்டத்தில் நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்.  நமக்குப் பல உதவிகள் பல தரப்பினரிடமிருந்து கிடைக்கின்றன. அரசாங்கம் மானியங்கள் கொடுத்து உதவுகின்றது.  பொது மக்கள், நிறுவனங்கள் மக்களின் பசியைப் போக்க பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். 

கோவிட்-19 சீக்கிரம் நாட்டை விட்டு ஒழியும். நாமும் பழைய நிலைக்குத் திரும்புவோம்.

மனம் தளராதீர்கள்! சோர்ந்து போகாதீர்கள்! துணிந்து நில்லுங்கள்! இதுவும் கடந்து போகும்!

Monday 5 July 2021

அரசாங்கத்திற்கும் நல்ல மனசு தேவை!

 கோவிட்-19 இன்று நமது நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது என்று நமக்குத் தெரியும். நமது நாடு மட்டும் அல்ல உலகில் பல நாடுகள் அந்தத் தொற்றை எதிர்த்துப்  போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஒரு வித்தியாசம். நமது நாடு தொற்றை எதிர்த்துப் போராடவில்லை.  ஆட்சி செய்கின்றவர்கள் பதவி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

பதவி போராட்டம் நடக்கும் வரை கோவிட்-19 பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை! ஒரு வகையில் கோவிட்-19 இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியமாக இருக்க வேண்டும்!

ஏனெனில் ஊரடங்கு போட்டுவிட்டு அதனை மீறுபவர்கள் அதிகாரிகள், அமைச்சர்களாகவே இருக்கின்றனர்!  மீறியதற்காக அவர்கள் தண்டத்தைக்  கட்ட தயாராகவே இருக்கின்றனர்! அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல! அப்படியென்றால்  அவர்களது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொண்டால் சரி!

கோவிட்-19 முதல் அலை வந்த போது அப்போது அது ஒரு பெரிய பிரச்சனையாக நமக்குத் தோன்றவில்லை.  அப்போதும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானர்கள் என்பது உண்மை தான்.  ஆனாலும் அதற்கான முடிவும் சீக்கிரம் வந்துவிட்டது என்பதால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் இப்போதைய நிலைமையோ முற்றிலும் வேறாகி விட்டது. தொடர்ச்சியான ஊரடங்கு என்பது எதிர்பாராத ஒன்று. வேலை இல்லை. கையில் பணம் இல்லை. சாப்பாட்டுக்கும் வழியில்லை.

எப்படியோ மக்களுக்குப் பல வழிகளில் உதவிகள் வருகின்றன. எல்லாக் காலங்களிலும் பசி என்பது கொடூரமானது. அதனை இப்போது, இந்த கோவிட்-19 காலக்கட்டத்தில் உணர்கிறோம். நமது கவலையெல்லாம் குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் என்ன பாடுபடும் என்பது தான்.

கிடைக்கின்ற உதவிகள் அனைத்தும் மனிதாபிமான உதவிகள். பலர் பல வழிகளில் உதவுகின்றனர்.  உதவிகள் மனிதர்களுக்கு மட்டும்  அல்ல. எல்லா உயிர்களுக்கும் தான். கொடுப்பவர்கள் நாய், பூனைகளுக்கும் கொடுக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வளவு கிடைத்தும் ஒரே ஒரு பெரிய குறை. அரசாங்கம் செயலற்றுக் கிடக்கின்றதே என்கிற குறை தான். உண்மையில் இப்போது கிடைக்கின்ற உதவிகள் அனைத்தும் அரசாங்கத்தின் மூலம் வர வேண்டும். அரசாங்கம் இது ஏதோ மக்களுடைய கடமை என்பதாக நினைப்பதாகத் தோன்றுகிறது.

அரசாங்கம் தனது கடமையைச் செய்யவில்லை. நாட்டில் உள்ள மக்களுக்கு வர வேண்டிய அனைத்து உதவிகளும் அரசாங்கம் மூலம் தான் வர வேண்டும். உதவி செய்ய முடியவில்லை என்றாலும் சவடால்தனங்களுக்கு  எந்தக் குறைச்சலும் இல்லை.

இப்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு  சராசரியாக எண்பது பேர் தொற்றினால் மரணம் அடைகின்றனர். இது ஒன்றும்  சிறிய  எண்ணிக்கை  அல்ல. அதே போல  தற்கொலைகளும்  நாள் ஒன்றுக்கு மூன்று என்பதாகச் சொல்லப்படுகின்றது.

இப்போது புதிது புதிதாக கோவிட்-19 மாற்றம் கண்டு கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

நேற்று ஓர் அதிர்ச்சி செய்தி. நண்பர் ஒருவர் மரணமடைந்தார். வயது 52  தான் ஆகிறது. காலையில் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, மூச்சுத்திணறல்,  உடனே மருத்துவமனை. போகும் வழியிலேயே மரணமடைந்தார். கோவிட்-19 என்பதாக மருத்துவமனை சொல்லுகிறது.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அரசாங்கம் இப்படி மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது  நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு பலவீனமான அரசாங்கம் எப்படி செயல்படும் என்பதைத்தான் இப்போது பார்க்கிறோம்.

நல்லதோ, கெட்டதோ அரசாங்கம் செயல்பட வேண்டும்.  நல்லது நடக்க வேண்டும்.  நல்லதே நடக்கட்டும்!

Sunday 4 July 2021

நடவடிக்கைகள் தேவை!

 மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் நாடு இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஆறு மாதங்களில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று தற்கொலைகள் நாட்டில் நடந்தேறியிருக்கின்றன! கேட்பதற்கே மனம் வேதனைப்படுகிறது.

அது மட்டுமா?  ஒரு பெண் தனது மாமாவினால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.  ஒருவர் தனக்குத் தூக்கம்  வரவில்லையென்று  தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்  கொண்டிருக்கிறார்.

ஏதோ நமக்குக் கிடைத்த ஓரிரு செய்திகள் இவை, நமக்குக் கிடைக்காத செய்திகள் பல இருக்கலாம். நாம் அறியாத செய்திகள் இன்னும் பல இருக்கலாம்.

சாப்பாட்டுக்குச் சிரமப்படும் மக்கள் தங்களது வீடுகளுக்கு முன் வெள்ளைக்  கொடியை ஏற்றி வையுங்கள், உதவுகிறோம் என்று  அறிவித்த ஒருசில அமைப்பினரின் உதவியால்   பலர் பயன் அடைகின்றனர்.   

இன்று பல உணவகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இலவச உணவுகளை வழங்குகின்றன. எனக்குத் தெரிந்த ஓர் உணவகம் மாலை ஆறிலிருந்து ஏழுக்குள் நூறு உணவு பொட்டலங்களை மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.   தனிப்பட்ட  மனிதர்களும் பல வழிகளில் பலருக்கு உதவியாக இருக்கின்றனர்.

இப்படிப்  பலர் பல வகைகளில் மக்களின் பசியைப் போக்க உதவுகின்றனர். அவர்களுக்குத் தலை வணங்குகிறோம்.

அரசாங்கம் பண உதவி செய்வதாகவும் கூறுகின்றனர். நல்லது. ஆனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அது கிடைக்காது என்பது வருத்தத்திற்குரியதே!

இந்த நேரத்தில் பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். இது இறைவனின் சோதனை. இதனை சமாளிக்க இஸ்லாமிய அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என்பதாகக் கூறியிருக்கிறார். நமது நாட்டைப் பொறுத்தவரை இது எல்லாக் காலங்களிலும் இஸ்லாமிய நாடு தான்.  ஆனாலும் இந்த அரசாங்கத்தால் இந்தத் தொற்றை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்பது தான் உண்மை!

நமது அரசியல்வாதிகள் ஆன்மீகம் பேசுவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சரியான நடவடிக்கை இல்லை என்பது தான் நமது குற்றச்சாட்டு.

நல்லது நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்!                                                   

Friday 2 July 2021

இந்த முறையாவது நடக்குமா!

 நாடாளுமன்றம் இந்த மாதம் கூடும் என்று சொல்லப்படுகின்றது.

நல்லது!  நடந்தால் சரி!

ஆனால் ஒரு குழப்பம். நாடாளுமன்றம் கூடும் என்றாலே கொவிட்19 எண்ணிக்கையும் கூடி விடுகிறது! அந்த அளவுக்குத் தொற்றுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஏதோ ஒரு பகை இருப்பதாகத் தோன்றுகிறது! ஆமாம், தொற்று இப்போது 7000 த்தை நெருங்குகிறது!

நாடாளுமன்ற அவைத் தலைவரும், மேலவைத் தலைவரும் நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி, மாமன்னரின்  கட்டளைக்கிணங்க,  பிரதமரை அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையே எதிர்கட்சி கூட்டணியின் தலைவர், அன்வார் இப்ராகிம்,  பிரதமரிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லையென்றால்  "நாங்கள் ஜூலை 19 அன்று நாடாளுமன்றத்திற்கு  முன்  கூடுவோம்!"  என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்! ஆக, பிரதமரின் அறிவிப்பு ஜூலை 5-ம் தேதிக்குள் வர வேண்டும். வரவில்லையென்றால் ....? வேறு ஏதாவது வர வேண்டும்!

அதுவும் வந்துவிட்டது!   பிரதமராக இருப்பதால் வயிற்றுப் போக்கு என்ன வராமலா போகும்?  அதுவும் வந்துவிட்டது! ஆனால் அறிவிப்பு வராது என்றே தோன்றுகிறது! மற்றவர்களுக்கு வயிற்றுப்போக்கு என்றால் எப்படியோ! பிரதமருக்கு வயிற்றுப்போக்கு என்றால் ஜூலை 19 வரையில் கூட நீடிக்கலாம்! எதனையும் கணிக்க முடியவில்லை.

எது எப்படி இருப்பினும்  பிரதமர் இப்போது  ஒரு நோயாளி. அவர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் ஓய்வு எடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு என்றால் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதனால் அவருக்கு நல்ல ஓய்வு தேவை. அவர் அரசியலை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும்.  இன்றைய நிலையில் அவர் மருத்துவமனையின் கட்டுப்பாட்டில்.

நமக்குத் தெரிந்தவரை நாடாளுமன்றம் இந்த மாதம் கூடும் என்பது ஐயத்திற்கு உரியது தான்! பிரதமரின் நலன் தான் முக்கியமே தவிர இந்த நேரத்தில் அவரைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருப்பது  ஏற்கத்தக்கது அல்ல!

எது நடந்தாலும் "எல்லாம் நன்மைக்கே!" என்கிற ஒரு வாசகம் உண்டு. இதனையும் நன்மையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டிய அந்த நன்மை எங்கோ ஒளிந்து கொண்டு இருக்க வேண்டும். அது வெளிப்படும் போது அது  வெளிப்படும் என்று மனதைத் தேற்றிக் கொள்ளுவோம்! தீய சக்திகளை வெற்றி கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல!

ஆக, இதுவும் கடந்து போகும்!

Thursday 1 July 2021

ஏன் என்னாயிற்று?

 மலேசியர்களுக்கு என்ன ஆயிற்று?  என்று கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது!

இவ்வாண்டு முதல் மூன்று மதங்களில் ஒவ்வொரு நாளும் நான்கு தற்கொலைகள் நடந்துள்ளனவாம்! நம்பத்தான் வேண்டியுள்ளது. காரணம் இந்தப்  புள்ளி விபரத்தை கொடுப்பது சுகாதார அமைச்சு.

நமக்குள்ள ஒரே வருத்தம் இப்படி ஒரு நிலைமை நாட்டில் ஏற்படுவதற்கு யார் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது தான்.

நமக்கும் புரிகிறது. தற்கொலை என்பது தனிப்பட்ட மனிதரின் முடிவு. அதற்காக யாரும் பொறுப்பு ஏற்கப்போவதில்லை. ஆனால் அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுப்பதற்கான காரணங்கள் என்ன?

இத்தனை ஆண்டுகள் இல்லாத ஒரு சம்பவம் இப்போது ஏன் நடக்கிறது என்பது தான் கேள்வி. தற்கொலைகள் நடப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? இத்தனை ஆண்டுகள் தற்கொலையைப் பற்றி சிந்திக்காதவர்கள் இப்போது ஏன் அப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்?

கோவிட்-19 தொற்று என்பது ஓர் ஆபத்தான வியாதி தான். அதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்தத் தொற்றினால் ஏற்படுகின்ற பாதகங்களைப் பற்றி  அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை என்பதும் உண்மை.

இப்படிச் தற்கொலை செய்து கொள்ளுபவர்களில் எந்த பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகம்? பொதுவாக B40 என்பது அனைவரும் அறிந்ததே! காரணம் இவர்கள் தான் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாக இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்கின்றனர். குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர். பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். வேலையில் தடங்கள் ஏற்பட்டால்  மேலே சொன்ன அனைத்தும் பாதிக்கும்.  அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டும் அல்ல அவர்கள் தான் மக்கள் தொகையில் அதிகமாகவும் இருக்கின்றனர்.

அரசு பணிகளில் உள்ளவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. மாத முடிந்தால் சம்பளம் அவர்களுக்குத் தயாராக இருக்கிறது.  அவர்கள் தான் இன்று பெரும் பெரும் அங்காடிகளைச் சுற்றி வருபவர்கள்! அரசியல்வாதிகள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.  எந்நேரமும் அவர்கள் கையில் பணம் இருக்கிறது. இன்றைய இக்கட்டான நிலையில் கூட அவர்களால் பிள்ளைகளை வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு அனுப்ப முடிகிறது!

நமக்குத் தெரிய வருவது ஒரே விஷயம் தான். பணம் இருந்தால் B40 மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரப் போவதில்லை! இப்போது அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு உதவி தான். பி40 மக்களுக்குக் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவருக்காவது பண உதவி செய்ய வேண்டும்.  அதன் மூலம் முழு பட்டினி இல்லையென்றாலும் அரை வயிற்றுக்காவது சாப்பாடு கிடைக்கும். 

இப்போது பி40 மக்கள் இரு வகையான எதிரிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. ஒன்று பொருளாதாரத்தை  முற்றிலுமாக இழந்துவிட்டார்கள். இன்னொன்று பொருள்களின் விலை கிடு கிடு என்று ஏறிவிட்டது.

இந்த இன்றைய சூழலில் பலர் என்ன செய்வது என்று அறியாதவர்களாக இருக்கின்றனர். தற்கொலை செய்வதற்கு யாரும் தடை விதிக்கப் போவதில்லை. பிரச்சனைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வேறு வழி தெரியவில்லை! இது தான் வழி!

"இது தான் வழி!" என்கிற ஒரு முடிவு தான் இந்த ஒரு நாளைக்கு நான்கு மரணங்கள்!